1. அமிழ்தினும் இனியவள் அவள்

0
1169
Amizhthinum Iniyaval Aval

அத்தியாயம் 1

சூரிய வெம்மைக் குறைந்து காற்று தன் மென் தழுவலை பரப்பிக் கொண்டிருந்த மாலை நேரம். ரூபன் வீட்டின் வாயிலைத் திறந்து உள்ளே வந்து கொண்டிருந்ததைக் கவனித்துக் கொண்டிருந்தார் இந்திரா.வழக்கமாகத் தன்னிடம் அதிகமாகப் பேசும் வழக்கம் இல்லாத தன்னுடைய மகன் இந்தச் சில நாட்களாகத் தன்னை அதிகமாகத் தேடுவதை உணர்ந்தே இருந்தார். எனவே

“என்ன ரூபன் இன்றைக்கு ரொம்ப அலைச்சலா?”

என்றவருக்குத் தயக்கமான புன்முறுவலைக் கொடுத்தவன்.

“ஆமாம் அம்மா” என்று சுருக்கமாகப் பதிலிறுத்தான்.

“வா, முதல்ல காபி சாப்பிட்டுக்கோ” என்றதும் கை கால் சுத்தம் செய்து டைனிங் டேபிளில் அமர்ந்தான்.

விஸ்தாரணமான தங்கள் வீட்டை எண்ணியவராக “நிச்சயத்தை வீட்டிலேயே செய்துக்கலாமேடா , எதுக்காக ஹால்? என்றவரிடம்,“இருக்கட்டும்மா, நிறையப் பேர் வருவாங்க , ஹால் தான் வசதியா இருக்கும்” என்று தன் பேச்சை வழக்கம் போலச் சுருக்கமாக முடித்துக் கொண்டான்.

“நிச்சயத்தைக் கொஞ்ச நாள்ல வச்சிக்கிட்டு மாப்பிள்ளை நீ எதுக்குப்பா இப்படி அலையுற, தம்பிகிட்ட மீதி வேலையையும் சொல்ல வேண்டியது தானே அவன் பார்த்துக்குவான்” என்றவரிடம் சரியென்னும் விதமாகத் தலையசைத்தாலும் மனதில் இருந்த எச்சரிக்கை உணர்வு எங்கே அவனை யாரிடமும் வேலையைப் பகிர்ந்து கொள்ள விடப் போகின்றது. தான் என்ன சொன்னாலும் இவன் கேட்கப் போவதில்லை என்று புரிந்தாலும் அவனது மன நிலை மாற்றும் விதமாக,

” அது தான் பையனுங்களுக்கெல்லாம் பார்லர் இருக்காமே, நீயும் கொஞ்சம் போயிட்டு வாயேண்டா நல்லா ரெடி ஆக வேண்டாமா? “என்றவருக்குப் பதில் கூறாமல் அமர்ந்திருந்தவன்.

“அம்மா அவ என்ன செய்யிறா?” என்று தன் மனைவியாகப் போகிறவளைப் பற்றி விசாரித்தான்.

“இவ்வளவு நேரம் முழிச்சுத் தான் இருந்தா சாயங்காலம் மாத்திரை சாப்பிட்டவுடனே தூக்கம் வந்திடுச்சு போல, இப்பதான் தூங்குறா, முன்ன மாதிரி இன்னும் கலகலப்பா ஆகலைன்னாலும் முந்தைக்கு இப்போ உடம்புக்கு பரவாயில்லை ரொம்ப நல்லா இருக்கா, நீ கவலைப் படாத, நிச்சயத்துக்கு முன்னால முன்ன மாதிரி ஆயிடுவா”

என்றவரை அடிப்பட்ட பார்வையோடு அவன் பார்த்துக் கொண்டிருந்தான். அவருக்கும் மனம் உருகியது

” தான் கொஞ்சம் முன்னதாகச் செயல் பட்டிருக்க வேண்டுமோ?, எப்போதும் தன் உள்ளம் குற்றம் சாட்டுவது போலத் தன் நான்கு பிள்ளைகளில் இவன் விஷயத்தில் மட்டும் எப்போதும் நாம் அலட்சியமாய் இருக்கின்றோமோ?”

என்று மனம் அழுந்த அவனைத் தனிமையில் விட்டு விட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

டைனிங் டேபிளில் இருந்து எழும்பியவன் பெரிது பெரிதான மூன்று அறைகள் கொண்ட அந்த வீட்டின் மூன்றாவது அறைப் பக்கமாகச் சென்றான் . அந்த அறை அவனுடையது , இப்போது சில நாட்களாக அவனுடைய பட்டாம் பூச்சியின் இருப்பிடமாகி விட்டிருந்தது . அறைக்குள் செல்லாமல் அதை அடுத்து அமைந்திருக்கும் சோபாவில் அமர்ந்தான் .

அந்த அறையிலிருந்து ஹாலில் நடப்பவை எல்லாம் மிக நன்றாகத் தெரியும் . அவள் அவன் வீட்டின் ஹாலில் வந்து துள்ளித் திரியும் போதெல்லாம் எத்தனையோ நாட்கள் தன் அறைக்குள்ளேயே அமர்ந்து அவளைப் பார்த்து ரசித்து இருக்கிறான் . முந்தைய நினைவுகள் மேலெழ பெருமூச்சை வெளியேற்றியவனாகத் தன்னையறியாமல் அறைக்குள் தூங்கிக் கொண்டிருப்பவளை அங்கிருந்து பார்க்க முயன்றான் . முழுக்கப் போர்வையால் மூடிக்கொண்டு மருந்தின் தாக்கத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் அவனுடைய தேவதையின் பாதங்கள் மட்டும் அவனுக்குத் தெரிந்தது .

அத்த பாப்பா , பாப்பா என்றவனாய் கட்டிலில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டு தன் மடியில் குழந்தையை வைக்கச் சொன்ன தன் செல்ல மருமகனை மனம் வருத்த எண்ணாமல் துணிகளில் பொதிந்த தன் மகளை அந்த ஆறு வயது குட்டிப் பையன் மடியில் வைத்தாள் சாரா . அந்த நேரம் கைகளை அசைத்து , கால்களை உதைத்துக் கொண்டிருந்த அந்தப் பாப்பா அவனுக்கு உலக அதிசயமாகத் தோன்றியது . அவளின் குட்டி ரோஸ் நிறக் கைகளும் , கால்களும் பஞ்சு போல மென்மையாக இருப்பதைப் பார்த்துத் தடவிக் கொடுத்தான் .

அந்த பாதங்களை முதல் முறையாகப் பார்த்த சிந்தனையினின்று வெளி வந்தவன் தன்னையறியாமல் புன்னகைத்தான் . எழுந்து அவளைப் பார்க்க அறையினுள்ளே சென்றான் . மருத்துவமனையிலிருந்து அவளை அழைத்து வந்து ஒரிரு நாட்களாகினாலும் ஏனோ அவள் முழித்திருக்கும் போது அவளிடம் செல்லவோ , அவளைப் பார்த்து பேசவோ அவனால் முடியவில்லை . மிக வெறுப்போடு தன் வலதுக் கையை ஒரு முறைப் பார்த்துக் கொண்டான் . அவளைப் பார்க்காமலெல்லாம் என்னால் இருக்க முடியாது . இப்போது தூங்கும் போதே பார்த்து விட்டுச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான் .

அருகே சென்று அவனுக்கு மிகவும் பிடித்தமான அந்த முகத்தை ஆசைத் தீரப் பார்த்துக் கொண்டிருந்தான் . கழுத்தை ஒட்டிய விதமாக அவன் கட்டியிருந்த தாலி அவனைப் பார்த்துக் கண் சிமிட்டியது .

எப்படித்தான் நீங்கல்லாம் தினமும் இவ்வளவு பெரிய தாலிச் செயின் போடுறீங்களோ? … எனக்கெல்லாம் செயின் மெல்லிசாதான் இருக்கணும். ஏதாவது பங்க்ஷனுக்குனா மட்டும் தான் நான்லாம் உங்களை மாதிரி பெரிய செயின் போடுவேன்.

என்று பெரிய மனுஷியாகத் தன் அண்ணியிடம் பேசிக் கொண்டிருந்தவளின் ஆசையைக் கேட்க நேர்ந்ததால் அவளுக்காகச் செய்த தாலி அது. அதை எப்படி அவளுக்கு அணிவிக்க வேண்டுமென்று தான் பற்பல கற்பனைகள் செய்திருக்க அவள் சுய நினைவே இல்லாதவளாக இருந்த நேரத்தில் தான் அதைக் கட்டியது குறித்து மறுபடி ஒருமுறை தன்னை நொந்து கொண்டான்.

இப்போது அவள் தூக்கத்தில் புரண்டுப் படுக்க அவளது இடது கன்னம் அவனது பார்வைக்கு வந்தது. அந்தக் கொடிய நாளின் நினைவாக அவனது ஆக்ரோஷமான அறையைத் தாங்கியிருந்த அந்தக் கன்னத்தில் அவனின் வலது கையின் அச்சு மங்கியிருந்தாலும் இன்னும் மறையாமல் இருந்தது.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here