10. அமிழ்தினும் இனியவள் அவள்

0
482
Amizhthinum Iniyaval Aval

**அத்தியாயம் 10**

அனிக்காவைப் பொறுத்தவரை அன்றைய நாள் ஒரு மறக்க முடியாத, அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தரும் நாளாக மாறிவிடும் என்று அவள் நினைத்திருக்கவில்லை. எத்தனை எத்தனை திருப்பங்கள் கொண்டதாக இன்றைய நாள் அமைந்து விட்டது. ஒவ்வொரு மணித்துளிகளையும் கழிப்பது மிகவும் சிரமமாகி விட்டதே.

மாலை நேர தீபன் திருமண விழா நிகழ்வுகளில் பெயரளவிற்குப் பங்கேற்று விட்டு அவள் சீக்கிரமே வீட்டிற்கு வந்து விட்டிருந்தாள். மகளுக்குத் தலைவலி என்றதும் மனைவியைத் திருமண வீட்டில் இருந்து எல்லா நிகழ்வுகளிலும் பங்கேற்று வரச் சொல்லி விட்டு தாமஸ் அவளைக் கையோடு அழைத்து வந்து விட்டார். அவருக்கு அவள் எப்போதும் எல்லோரையும் விட முக்கியமானவள், எப்படித்தான் பெண்குழந்தைகள் தந்தையர் மனதில் விசேஷமான இடத்தைப் பெற்று விடுகிறார்களோ? என்று எவருக்கும் தெரியாத அந்த ரகசியம் அந்த வீட்டிலும் கோலோச்சி கொண்டிருந்தது என்றால் அது மிகையல்ல.

பெண் குழந்தைகள் வாழும் வீடு இயல்பாகவே கலகலப்பும், மலர்ச்சியும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக அமைந்து விடுகின்றது. அதற்கு அந்த இல்லமும் விதிவிலக்கு அல்லவே. என்றாவது ஒரே ஒரு நாள் கூட மகள் அமைதியாக இருந்தாலே அவர்கள் இல்லம் வெறிச்சோடி போகும். அதன் காரணமாகவே அவளது குறும்புகளை யாரும் கண்டிப்பது கிடையாது.

“என்னம்மா செய்யுது?”

” டாக்டர் கிட்ட போகலாமா?”

” ஏதாவது மாத்திரை வேணுமா?”

எனப் பல்வேறு கேள்வி கேட்டு மகளைத் துளைத்தெடுத்தவர், அவள் நெற்றியை, தலையை வெகு நேரம் வருடி விட்டு அவள் தூங்கி விடுவாள் என்று எண்ணிய பின்னரே அவ்விடம் விட்டு அகன்றார்.

அன்றைக்கு தூக்கம் என்னவோ அவளுக்குப் போக்குக் காட்டிக் கொண்டிருந்தது. ஷைனி சொன்ன விஷயங்கள் எல்லாம் எப்போதோ மனதை விட்டு அகன்று விட்டதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. அது எதனால் என்று யோசித்துப் பார்த்தாள்.

ஒட்டுக் கெட்கிற பழக்கம் ரொம்பத் தப்பு தெரியுமா? இது எப்போதோ ஏதோ ஒருவர் பற்றிப் பேசும் போது அவள் அம்மா அவளிடம் சொன்னது. பொதுவாக சாராவின் அணுகுமுறை அப்படியாகத்தான் இருக்கும். கசப்பு மருந்தை தேனில் கலப்பது போலப் பேச்சு பேச்சாக, கதைச் சொல்லுகிற பாவனையில் பிள்ளைகளுக்கு ஒரு சில கருத்துக்களையும் ஊட்டி விடுவார்.

ஆனால், அவள் இன்று கேட்க நேர்ந்த 2 உரையாடல்களுமே அவள் திட்டமிடாமலேயே அறிய நேர்ந்த ஒன்றல்லவா? அந்த உரையாடல்களின் போது அவள் அங்கிருக்க வேண்டிய சூழல் அமைந்து விட்டதே.

ஷைனி சொன்னவை அனைத்தும் அவளுக்கும் ஜீவனுக்கும் இடையேயான நட்பை களங்கப் படுத்தி இருந்தது. ஆனால், அதன் பின் அவள் கண்டதும், கேட்டதும் என்ன?

பொதுவாக யாராவது இருவர் பேசிக் கொண்டிருப்பது அறிந்தால் அவர்களுக்கிடையே நுழைந்து, ஒரு அவசர மன்னிப்பைக் கேட்டு தான் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டுப் படப்படவென நகர்ந்து விடுவது அவள் வழக்கம். அன்றும் அவள் அப்படித்தான் ரூபனின் அறைப் பக்கம் சென்றது. ஆனால், எப்போதும் போல அவர்கள் பேச்சில் இடையே நுழைய விடாதபடிக்கு அவளைச் சோர்வு ஆட்கொண்டிருந்தது.

ஏற்கெனவே ஷைனியின் பேச்சால் மனம் உணர்ந்து கொண்டிருந்த சோர்வோடு கூட, முதன் முறை அணிந்த சேலை, அணிமணிகள், பொன் நகைகள் எல்லாமும் கூட அவற்றைக் களைந்து வழக்கமான உடையில் மாறிய பின்னும் என்னவோ மலையைத் தூக்கி சுமந்த மாதிரியான ஒரு வகைச் சோர்வு. இதை முதன் முறை சேலை அணியும் போது பெண்கள் அனைவருமே உனர்ந்திருப்பார்கள். இந்தச் சோர்வு காரணமாகவே அவள் ஜீவனைச் சந்திக்க அங்குச் சென்ற பின்னரும் அவன் பேச்சில் இடையூறு செய்யாமல் சற்று நேரம் அமைதியாக நின்றிருந்தாள்.

அந்நேரம் அண்ணன் தம்பி உரையாடலில் முதலில் அவள் கவனம் ஈர்த்தது ஜீவனின் பேச்சுத் தொனி தான். அந்த அறையில் பக்கவாட்டில் இருந்த கண்ணாடியில் அவளால் வெளியில் இருந்தே அவனின் முகபாவம் முதலாக எல்லாவற்றையும் பார்க்க முடிந்திருந்ததே.

ஜீவனாவது அவன் அண்ணனிடம் இவ்வளவு கடுகடுவென்று கடுமையாகப் பேசுவதாவது ? என்ற வியப்பில் தான் முதலில் அவள் தாமதித்தது. அதன் பின் தெரிய வந்த விஷயங்கள். ஜீவன் தனக்காகப் பேசிய அனைத்தையும் அவள் கேட்டுக் கொண்டு தானே இருந்தாள்.

முதலில் தெரிய வந்தது அந்தப் புகைப்படம் குறித்ததான தகவல். தன்னோடு நின்று ரூபன் எப்போது புகைப் படம் எடுத்துக் கொண்டான்? என்று அவளுக்கு நினைவு வரவில்லை. அதுகுறித்து அவளுடைய கவனம் இல்லாமல் இருந்தது பற்றி அவளுக்குக் கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது.

“நீ இன்னும் சின்னப் பாப்பா இல்லை, கவனமா இருக்கணும் என்ன?”

என்று அவ்வப்போது தாயும் , சகோதரனும் சொல்லும் அறிவுரைகள் அவள் காதில் வந்து ஒலித்துக் கொண்டிருந்தது . ஷைனி சொன்ன மாதிரி நாம இன்னும் அரை வேக்காடுதானோ? நமக்கு யாரிடம் எப்படி இருக்க வேண்டும் என்றே தெரியவில்லையோ? என்று தன் மேலேயே சுயபச்சாதாபமும், அவமானமுமாக உணர்ந்தாள். தனக்குத் தெரியாமல் தன்னுடன் நின்று புகைப்படம் எடுத்த ரூபன் மேல் கட்டுக் கடங்காமல் கோபம் வந்தது.

அடுத்து தெரிய வந்தது ரூபனின் காதல்.

“ரூபன் அத்தான் என்னைக் காதலிக்கிறாராமா?”

நூறாவது தடவையாகத் தனக்குள் கேட்டுக் கொண்டாள் அவள். அதற்கு எந்த மாதிரி தான் உணர வேண்டும்? என்றே புரியவில்லை அவளுக்கு. அவள் இருந்த மன நிலையில் ரூபனைப் பற்றிப் பெரிதாக எதையும் யோசிக்கத் தோன்றவில்லை. ஆனால், தன்னிடம் அவ்வளவாகப் பேசியிராத ரூபன் அத்தானுக்குத் தன் மேல் காதல் என்பது விசித்திரமாக இருந்தது.

தன்னை ஒரு போதும் தவறான சொல் அல்லது செயலால் தீண்டியிராத அவன் குணமும், ஜீவனுடன் பேசும் போது அவனையே உருக வைக்கும் வகையில் தன்னுடைய தனிமைத் துயரையும், தான் அவளை நேசிப்பதற்கான காரணம் சொல்லும் போது இவளும் உருகிப் போனாள் தான். அது ஒரு வகையான பரிதாப உணர்வு தானே அன்றி அவன் மேல் அதனால் எல்லாம் காதல் வராது என்று எண்ணினாள்.

அதற்கடுத்ததாகத் தான் அறிந்து கொண்டது தன்னுடைய தந்தையைக் குறித்த ஜீவனின் பேச்சுக்கள். தனக்காகத் தன் அண்ணனிடம் கோபப்படும் நண்பனை பிடித்திருந்த அளவுக்குத் தன் தந்தையை விமர்சிக்கும் நண்பனை பிடிக்கவில்லை. என் அப்பா இவன் சொல்கின்ற அளவிற்குப் பணப்பித்துப் பிடித்தவரல்ல என்று எண்ணிக் கொண்டாள். அதே நேரம் ரூபனின் காதல் விபரம் அவளது அப்பாவிற்குத் தெரிய வந்தால் இரு குடும்பங்களுக்கும் இடையேயான உறவு இழை அறுந்து விடும் என்பதை முற்றுமாய்ச் சரியென மனதிற்குள்ளாக ஏற்றுக் கொண்டாள். அதனால் தான் தெரிந்து கொண்ட இந்த உண்மையை வெளியே சொல்லப் போவதில்லை என மனதிற்குள்ளாக தீர்மானித்துக் கொண்டாள்.

அதிலும் ரூபன் பேசியதைப் பார்க்கையில் அவன் திருமணம் குறித்துப் பேசினானே ஒழிய தற்போது எந்தவிதத்திலும் அவனால் அவளுக்குப் பிரச்சினை இல்லை எனும் போது எதற்காக இந்த விஷயத்தைப் பெரிது படுத்த வேண்டும்? என்று தோன்றியது. காதல் என்ற ஒன்றைக் குறித்து அவள் அறியாதவள் அல்ல, பள்ளியிலும், கல்லூரியிலும் அவளைச் சுற்றி நடப்பவைகளை அவள் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாள்.

அவளுக்குக் காதலைக் குறித்த அனுமானம் ஒன்று இருந்தது. வீட்டில் அன்பு கிடைக்கப் பெறாதவர்கள் தான் காதலில் விழுந்து விடுகிறார்கள் என்று ஒரு அரிய பெரிய விஷயத்தைக் கண்டுபிடித்து இருந்தாள்.

அவள் தோழி மலர்விழி வீட்டில் ஏகப்பட்ட பிரச்சினைகள். அவளுடைய பெற்றோருக்குப் பிள்ளைகளிடம் அன்பு காட்டவே நேரமில்லை. அவள் தன்னுடைய காதலனிடம் தான் தான் மனம் விட்டுப் பேச முடிகிறது என்றெல்லாம் சொல்லி இருக்கிறாள். அப்போது கண்டுபிடித்த விஷயம் தான் அது.

நமக்கு அன்பு பாராட்ட, தலையிலேயே தூக்கி வைத்து கொண்டாட அப்பா இருக்கிறார். கண்டித்தாலும் கேட்பதற்கு முன்பே குறிப்பறிந்து வேண்டிய அனைத்தையும் கொண்டு வந்து கொட்டும் அண்ணன் இருக்கிறான். அதட்டி பேசி அறியாத அம்மா இருக்கிறார் நமக்கெல்லாம் காதல் என்ற ஒன்று வரவே வராது என்ற நம்பிக்கை அவளுக்கு ஏற்கெனவே வந்து விட்டிருந்தது. காதல் என்னும் ஒன்று அவளுக்குத் தேவையில்லாதது என்ற எண்ணமும் கூட ஏற்கெனவே இருந்ததே.

ஆனாலும் ஷைனியின் பேச்சுக்கள் தந்த அதிர்வும், ரூபன் புகைப்படம் எடுத்த நிகழ்வும் என்னைச் சுற்றி என்ன நடக்கின்றது எனப் புரியாமல் நான் இருந்து கொண்டு இருக்கின்றேன். நான் முட்டாள், எனக்கு அறிவில்லை என்பதான எதிர்மறை எண்ணங்கள் அன்றைய நாள் தந்த உடல் மன அலுப்பு, பல்வேறு நிகழ்ச்சிகளின் தாக்கம் இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து அவளை இரண்டு மூன்று நாட்களுக்குக் கடும் காய்ச்சலில் தள்ளி விட்டது.

திருமணத்திற்கு அடுத்த நாளில் பெண் வீட்டிற்கு மறு வீடு சென்று விட்டு வந்த பின்னர்த் தன்னுடைய வெளிநாட்டு பயணத்திற்காகப் புறப்பட்டுக் கொண்டிருந்த ரூபன் மனதிற்கு நிம்மதியே இல்லாமல் போயிற்று. திருமணத்தன்று மதியம் அந்தப் போட்டோ எடுத்த கொஞ்ச நேரம் வரை தான் தான் அவளைப் பார்த்தது. அவன் ஆசையாய் எடுத்த அந்தப் போட்டோவும் இப்போது அவனிடத்தில் இல்லை. அவளையும் இரண்டு நாட்களாகப் பார்க்க முடியவில்லை. அவளுக்குக் கடுமையான காய்ச்சல் என்று தகவல் தான் வந்தது.

அவள் உடல் நலம் அறியச் சென்று சந்திக்கவும் விடாமல் அவனை வேலைப் பளு அழுத்தியது. தன்னுடைய பயணத்திற்குத் தேவையான பல்வேறு தயாரிப்புக்களைச் செய்யவே அவனுக்கு நேரம் சரியாக இருந்தது. முன் தினம் அவளைச் சந்தித்து விட்டு வந்த ஜீவனின் முகத்திலும் களையில்லை. அம்மாவிடம் ஏதோ கோபத்தில் சொல்லிக் கொண்டு இருந்தது புரிந்தது. ஏதோ நடந்திருக்கிறது? அது என்னவென்று தான் தெரியவில்லை. முன்பு போல இருந்தாலும் ஜீவன் அவனிடம் பகிர்ந்து கொண்டு இருந்திருப்பான்.

தமையன் காதல் தெரிந்ததிலிருந்து ஜீவன் கொஞ்சம் முறுக்கிக் கொண்டு தான் இருக்கிறான். அவன் எப்போது சொல்கிறானோ அப்போது சொல்லிக் கொள்ளட்டும் என்று எண்ணிக் கொண்டான் ரூபன்.

இரவு ஃப்ளைட் அதற்கு முன்னால் சென்று விடைப் பெறுவதற்காக அத்தை வீடு செல்ல வேண்டி புறப்பட்டான். இன்னும் இரண்டு வருடங்கள் எல்லோரையும் பிரிந்து இருக்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தான். எல்லோரையும் விட அனியை பார்க்க முடியாமல் இருக்கப் போவது தான் அவனை மிகவும் வருத்தப் போகிறது என்று அவனுக்குத் தோன்றியது. நல்ல வேளை ஜீவன் என் பெட்டியை சோதனைப் போடவில்லை. அவளுடைய கர்ச்சீப், துப்பட்டா முதலியன பத்திரமாக இருக்கிறது என்று அவனுக்கு ஒரு அல்ப சந்தோஷம் உண்டானது.

சாரா ரூபனை மகிழ்ச்சியாக வரவேற்றார், அவனுடைய பயணம் வேலைக் குறித்து மிகவும் அக்கறையாகப் பேசிக் கொண்டிருந்தார். பிரபாவும் உரையாடலில் கலந்துக் கொண்டாள். தாமஸை அவன் தேட அவர் அனியின் அறையில் இருப்பதாகச் சொல்லவும் அவன் அவரைச் சந்திக்க எழுந்தான். அனி தன்னுடைய அறையில் படுக்கையில் தலையணை முதுகிற்குக் கொடுத்து சோர்வாக அமர்ந்து இருந்தாள். ஜீவன் ஏற்கெனவே அங்கு அவள் கட்டிலின் ஓரம் அவளைப் பார்த்து பேச வசதியாக எதிரில் உட்கார்ந்து கொண்டு இருந்தான்.

ம்ஹீம்… கொடுத்து வைத்தவன் என்று ரூபன் மனதில் தம்பியுடனான அவளின் நட்பைக் குறித்து ஒரு சின்னப் பொறாமையுணர்வும், ஏக்கமும் வந்து சென்றது.மகளின் தலையை மெதுவாக வருடி விட்டுக கொண்டிருந்தார் தாமஸ்.ரூபனைக் கண்டதும் மிகவும் மகிழ்ச்சியாக வரவேற்றார்.

ஹாஸ்டல் விஷயத்தில் அவன் மேல், அதுவும் குறிப்பாக அவனை மன்னிப்புக் கேட்க விடாத இந்திரா மீது கோபம் இருந்தது உண்மைதான். ஏனென்றால், அவனை மன்னிப்பு கேட்க வைக்கிறேன் என்று அங்கு வாக்கு கொடுத்து விட்டு வந்து விட்டு பின்னர் அதைச் செய்ய இயலாமல் போனது ஒரு வகையில் அவருக்கு அப்போது ஒரு கௌரவப் பிரச்சினையாகவே ஆகி விட்டிருந்தது.

அதனாலேயே அதன் பின் அவர்களோடு முன் போல் நெருக்கமாகப் பழகுவதை அவர் தவிர்த்து வந்தார். ஆனால், கடந்த சில நாட்களாக ராஜ் அவரிடம் ரூபனின் திட்டங்களைக் குறித்துப் பகிர்ந்து கொண்ட விதத்தில் அவன் மீது அவருக்கு நல்லதொரு அபிமானம் வந்துவிட்டிருந்தது. எனவே அவனை உட்காரச் சொல்லி பேசிக் கொண்டிருந்தார். பேச்சினூடே அனியின் உடல் நலம் விசாரித்தான் ரூபன், அவளும் அமைதியாகவே பதில் கூறினாள்.

ரூபனின் பார்வையோ சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிறர் பார்க்கா வண்ணம் அனியையே சுற்றி சுற்றி வந்தது. அவளது சோர்ந்த தோற்றம் அவனுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அருகே சென்று அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொள்ளலாமாவென உள்ளம் பரபரத்தது.

ஜீவன் எல்லாவற்றையும் கவனித்தும், கவனிக்காதபடி அமர்ந்திருந்தான். அனிக்கா அவனிடம் முன் தினமே ஷைனி தன்னையும் ஜீவனையும் குறித்துச் சொன்னதைப் பற்றி (மட்டுமே) பகிர்ந்துக் கொண்டிருந்தாள். முன்பே தீர்மானித்தபடி தான் அவர்கள் இருவரின் பேச்சை தற்செயலாகக் கேட்க நேர்ந்தது குறித்து அவள் தன் உற்ற நண்பனிடம் கூடத் தெரிவிக்க விரும்பவில்லை. அது தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தலாமென எண்ணியதால் தவிர்த்து விட்டாள்.

அனிக்கா ஷைனி பற்றிக் கூறிய நேரம் முதலாய் ஜீவன் இந்திராவிடம் புலம்பித் தள்ளி விட்டான். தங்கள் இருவரின் நட்பைக் கொச்சையாகப் பேசிய ஷைனியை வீட்டுக்கு வர விடக் கூடாது என்று தன் அன்னையிடம் பிடிவாதமாகச் சொல்லிக் கொண்டு இருந்தான்.

புதிதாக உறவாகி இருக்கும் குடும்பம், அதில் தன் மூத்த மருமகளின் தங்கையை வீட்டுக்கு வராதே என்று எப்படிச் சொல்ல முடியும்? என்று இந்திரா எண்ணினாலும், அதை அப்படியே கூறினால் மகனை சமாதானப் படுத்த இயலாது என்பதால் தான் அந்த விஷயத்தைப் பார்த்துக் கொள்ளுவதாகக் கூறி ஜீவனை அமைதிப் படுத்தினார். கணவரிடமும் இதைக் குறித்துப் பகிர்ந்து கொண்டார். அவர்கள் இருவரும் குடும்பத்தில் அமைதி நிலவும் பொருட்டு இந்த விஷயத்தைப் பெரிது படுத்தாமல் புறக்கணிக்கவே முடிவெடுத்தார்கள்.

தாமஸுடன் பேசி விட்டு ரூபன் விடைப் பெறும் தருணம் அறைக்குள் கிறிஸ் வந்தான். ரூபனைக் கண்டவன் அவனோடு நின்றவாறே உற்சாகமாக உரையாடிக் கொண்டு இருந்தான்.

அனிக்கா தான் அமர்ந்து இருந்த வாக்கிலேயே முதன் முறையாக ரூபனைப் பார்த்தாள். ஆம் அவன் தன்னைக் காதலிப்பதாக அறிந்து கொண்ட பின்னர் அவள் அவனைப் பார்க்கும் முதல் பார்வையல்லவா?

பெண்ணுக்கே உரித்தான ஆராய்ச்சிப் பார்வை அது.

“என்னைக் காதலிக்கிறானாமா?”

இன்னொரு முறை தன்னையே கேட்டுக் கொண்டாள் அவள். அவனுடைய தலை முதல் கால் வரை அவள் பார்வை படிந்தது.

“அழகன்”தான் மனதிற்குள் சொல்லிக் கொண்டாள் அவள் அதற்குமேல் ஏனோ அவனைப் பற்றிய எந்த அபிப்ராயமும் அவளுக்குத் தோன்றவில்லை.

அனிக்காவை பிரியவே மனதில்லாமல் அங்கிருந்து விடைப்பெற்றுச் சென்றான் ரூபன். எதிர்கொள்ள வேண்டிய வேலைகள் அடைய வேண்டிய இலக்கு மீதே அவன் கவனம் இருந்தாலும் தன்னவளைப் பாராமல் கழிக்கும் 2 வருடங்கள் குறித்து அவன் மனதில் ஏராளம் துயரம் மண்டியது.

யாரோ சொன்னார்கள்.

பிரிவு அன்பை வளர்க்குமாம்

அவள் அன்பு

என்பால் வளர்ந்தால்,

அவளைப் பிரிவது

உயிர் வலி என்றாலும்

நான் சகிப்பேனே…

என்றவன் உள்ளத்தில்

கேள்வி எழுந்தது

புது

துன்பம் கொணர்ந்தது

இப்பிரிவு அன்பை வளர்க்க

மறந்தாலும் சகித்திடுவேன்

ஆனால், ஒருவேளை

அவள்

என் முகம்

மறந்து விட்டால்

நான் சகியேனே…

கண்ணே என்னை நினைப்பாயா?

பிரிந்தாலும் என்னை மறவாயா?

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here