11. அமிழ்தினும் இனியவள் அவள்

0
622
Amizhthinum Iniyaval Aval

அத்தியாயம் 11

அனிக்காவை இதற்கு முன்பாக இவ்வளவு கோபமாகச் சிடுசிடுப்பாக அவள் வீட்டினர் யாருமே யாருமே பார்த்திருக்க வாய்ப்பில்லை. அந்த அளவிற்கு அவள் கோபத்தில் பொரிந்து கொண்டு இருந்தாள். அவள் மனம் நிகழ்ந்த எல்லாவற்றிற்கும் ரூபனையே குற்றம் சாட்டிக் கொண்டிருந்தது.

அவளது கோபத்திற்கு காரணம் வேறொன்றுமில்லை, அவர்களது 12 வகுப்புத் தேர்வு முடிவுகள் வந்தப் பின்னர், கல்லூரி அட்மிஷன் குறித்த வேலைகள் நடைப் பெற்றுக் கொண்டிருந்தன. அவள் தன்னுடைய பள்ளியின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கல்லூரியிலேயே படிப்பைத் தொடரவிருந்தாள், அவள் உயிர் நண்பன் அல்லது, அவளால் உயிரை எடுக்கப் படும் நண்பன் என்று சொல்லப் படத் தகுந்த ஜீவன் தன் அண்ணன் ஆரம்பிக்கவிருக்கும் தொழிற் சம்பந்தமான “ஆட்டோ மொபைல் இஞ்சினியரிங்க்” படிக்கப் போவதாகச் சொல்லி அதற்கான அட்மிஷனில் மும்முரமாக இருந்தான்.

அவன் என்ட்ரன்ஸில் தேர்வாகி விடுவான் எனும் நம்பிக்கை இருந்தது. அவன் முயன்று எடுத்த 12 வது வகுப்பின் நல்ல மார்க்குகள் காரணமாக எளிதாக அட்மிஷன் கிடைத்து விடவும் வாய்ப்புக்கள் இருந்தன.

ஜீவனுக்கு ரூபனிடம் விபரங்கள் கேட்டுக் கேட்டு, அவன் வேலைப் பார்க்கும் இடம் முன்பு ஓரிரு முறைச் சென்று வந்ததில் ஏற்கெனவே அந்த துறைக் குறித்ததான ஈர்ப்பு வந்து விட்டிருந்தது. தன்னுடைய அண்ணன் போலவே ஆர்வம் தோன்றியிருந்ததால் தான் அதற்க்குரிய நுணுக்கங்களைக் கற்றுத்தேர்வது சிறப்பாக இருக்கும். மேலும், தன்னுடைய அண்ணன் சொந்தமாகத் தொழிற்சாலை அமைக்கும் நேரத்தில், தன் படிப்பு அவனுக்கும் உதவியாக இருக்கும் என்றெண்ணினான். அதே துறையில் தானும் பெரியாளாக வேண்டும் எனும் ஆஎவம் முகிழ்த்து இருந்தது.

ஜீவன் தன்னோடு சேர்ந்து தொடர்ந்து படிக்கப் போவது இல்லை என்கின்ற விஷயம் அனிக்காவிற்கு அவ்வளவு உவப்பானதாக இல்லை. அவன் ப்ரீ கேஜி முதலாக அவளுடன் கூடவே கற்றுத் தேர்ந்ததனால், இப்போது அவர்களுக்கிடையே சட்டென்று வந்திருக்கும் இந்தப் பிரிவு மிகவும் கடினமானதாக இருந்தது.

சின்னச் சின்ன விஷயம் முதலாக அவளை அவன் அவ்வளவு பார்த்து பார்த்துக் கவனித்துக் கொள்ளுவான். வீட்டில் அவனைத் தொல்லைச் செய்கின்ற அவளுடைய பழக்கத்தைப் பல நேரம் சகித்துப் பொறுமையாக இருப்பவன், வெளியே பலர் முன்பு எதுவும் சேட்டைச் செய்தால் முறைப்பான்.

“என் மானத்தை வாங்காதே” என்று அவன் முறைக்கிற முறைப்பில் அவள் சேட்டை இருக்கிற இடம் விட்டு காணாமலேயே போய்விடும். எப்படிச் சண்டைப் போட்டாலும் இவளைப் பத்திரமாகப் பாதுகாக்காமல் அவனும், அவனுக்குத் தன்னிடம் இருப்பதை முதலில் கொடுத்து சாப்பிட வைக்காமல் அவளும் இருந்தது இல்லை. அப்படிப்பட்ட அவர்களுடைய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நட்பை பிரித்ததற்கு யார் காரணம்? அந்த ரூபன் தானே? என்று மனம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

ரூபன் தாய் நாட்டை விட்டுப் பிரிந்துச் சென்று ஓரிரு மாதங்கள் ஆகியிருந்தன. தன்னுடைய வீட்டிற்கு அழைப்பதைப் போல இல்லாவிட்டாலும் மாதத்திற்கு ஒரு முறையாவது அத்தையின் நம்பருக்கு அழைத்து விடுவான் அவன். அது சாராவின் மொபைல் போன் என்று தான் பெயர், ஆனால் ஒரு வகையில் அந்த வீட்டின் லேண்ட் லைன் போலத்தான். பல நேரம் எங்கேயாவது ஹாலில் இருக்கிற போனை அட்டெண்ட் செய்வது வேறு யாராவதாகத் தான் இருக்கும். அப்படி என்றைக்காவது தப்பித்தவறி அனிக்கா போனை எடுத்துப் பேசினால் என்னும் அவனுடைய நப்பாசை நிறைவேறும் நாள் அன்று வந்தது.

ஏற்கெனவே கோபத்தில் இருந்தவளுக்குப் பக்கத்திலிருந்த அம்மா போன் அடித்ததும் அது யாரென்று பார்த்தாள். அதில் ரூபனுடைய பெயர் தெரியவும் இவளுடைய பல்ஸ் எகிறியது.

“ஹலோ” என்றான் அவன்.

“போங்க அத்தான் நான் உங்க மேல கோபமா இருக்கேன்” என்று ஆரம்பித்த இவள் குரலைக் கேட்டு ஆனந்தப் படுவதா? இல்லை என் மேல் என்ன கோபம்? என்று கவலைப் படுவதா எனப் புரியவில்லை அவனுக்கு.

“நானும் ஜீவனும் எப்படித் தெரியுமா? எங்க ஃப்ரண்ட்ஷிப் எப்படித் தெரியுமா…” என்று ஆரம்பித்து “மூழ்காத ஷிப்பே ஃப்ரெண்ட்ஷிப் தான்” என்று பிஜிஎம் ஒலிக்காத குறையாக முழுதாக ஒரு மூச்சு அவள் ஆதங்கத்தைக் கொட்டிவிட்டு, அவர்களுடைய நட்புக் கூட்டைக் கலைத்தது அவன் தான் எனச் சராமரியாகக் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தாள்.

ரூபனோ ஹி. ஹி… யென அவள் பேச்சை வெகு நாள் கழித்துக் கேட்ட ஆனந்த அதிர்ச்சியில் முகம் ஜ்வலிக்கப் போனைக் காதில் வைத்துக் கேட்டுக் கொண்டிருந்தான். திடீரென எதிர்முனையில் குரல் மாறியது, இதென்ன அனி திடீரென ஆண் குரலில் பேசுகிறாளே? என அவன் சுயவுணர்வுக்கு வர சில நொடிகள் செலவானது.

“ரூபன் எப்படியிருக்க?” என்று எதிர்முனையில் கேட்டது கிறிஸ் தான். கனவுலகிலிருந்து கீழிறங்கி தரையில் கால் பதித்தவன்

“நல்லாயிருக்கேன் அத்தான், நீங்க அக்கா, மாமா, அத்தை எல்லாரும் நல்லா இருக்கீங்களா?” எனப் பதிலுக்கு விசாரித்தான்.

“எல்லாரும் நல்லாயிருக்கோம், இந்த வாலு பேசினதைக் கண்டுக்கொள்ளாத  … ஏற்கெனவே வீட்டுல புலம்பிக் கிட்டே இருந்தா, அதே நேரம் நீ போன் செஞ்சு மாட்டிக்கிட்டே” சங்கடமாகச் சொன்னாலும் அவனுக்குத் தங்கையை நினைத்துச் சிரிப்பே வந்தது.எதிர் தரப்பிலும் ரூபனால் புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை.

“சரி விடுங்க அத்தான், ஏதோ என்னைத் திட்டினதுல அவக் கோபம் தீர்ந்தாச் சரி, ஜீவன் என்ன பேச்சு வங்குறானோ தெரியலையே?” எனத் தன் தம்பியை நினைத்து பேசியவனுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. கிறிஸ்ஸும் சேர்ந்து சிரித்தான். தொடர்ந்து நிலவிய உரையாடலில் ரூபனுடைய வேலை விபரங்கள், வசதிகள், தங்குமிடம், சாப்பாடு என விசாரித்துக் கேட்டுக் கொண்டான்.

அனிக்கா முதலில் ஜீவன் இல்லாமல் தனியாகக் கல்லூரிச் செல்ல சலித்துக் கொண்டாலும் பின்னர்ப் படிப்பில் அவளும் ஒன்றி விட்டாள். ஜீவனை முன்போல அடிக்கடிப் பார்க்க முடியாவிட்டாலும், அவன் கிடைக்கும் நேரமெல்லாம் சேர்த்து வைத்து தொல்லைச் செய்வாள். ஜீவன் முன்போலச் சரிக்குச் சரியாக நின்று அவளிடம் சண்டைப் போடுவதைக் குறைத்து விட்டிருந்தான். ஆண்களுக்குச் சொந்த சகோதரிகளிடமே கொஞ்சம் ஒதுக்கம் காட்டுகின்ற அளவிலான மனமுதிர்ச்சி வரும் பருவம் அது. ஆதலால், அவனிடம் அந்த மாற்றம் வந்திருந்தது.

கத்தி கத்திப் பார்த்துத் தொண்டை வற்றிப் போனவளாக அவள் திரும்பச் செல்வதைப் பார்த்து அவனுக்கு வெகுவாகச் சிரிப்பு வரும். கோபத்தில் “போடா டேய் ஜீவா” என்று சொல்லி விட்டுப் போய் விடுவாள்.

கொஞ்ச நாளைக்குப் பின் அவளுக்கு அத்தை என்னும் பிரமோஷன் கிடைத்ததும் அவள் அடித்த லூட்டிக்கு அளவில்லை. தன் வீட்டில் தன்னை விடச் சின்ன ஒரு குட்டியான செல்லமான அண்ணன் மகளைத் தூக்கிக் கொண்டு கொஞ்சவே அவளுக்கு நேரம் போதவில்லை என்று சொல்ல வேண்டும். ஒருவழியாக இந்தக் காரணத்தினாலாவது தன்னுடன் வம்பிழுக்காமல், இருக்கிறாளே என்று அந்த விஷயத்தில் ஜீவனுக்கு மகிழ்ச்சியே.

அன்றைய ரூபனுடைய பேச்சு அனிக்காவின் மனதில் இருந்தாலும் , அவளுக்கு அதற்கு எந்த விதமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்று இன்னும் கூடப் புரியவில்லை. அவளிடம் வழிகின்ற, காதல் காதல் என்று பிதற்றுகின்ற ஆண்களின் பேச்சையும் அவள் கேட்டிருக்கிறாளே.

“நீ இல்லைனா நான் செத்துடுவேன் அனிக்கா”

“நீதான் என்னோட லைஃப்”

“எனக்கு எல்லாமே நீதான், நீமட்டும் இல்லைனா என் வாழ்க்கையே இருட்டா ஆயிடும்”

இப்படிப் பலவாறான வசனங்கள் கேட்டிருக்கிறாள். அதைக் குறித்து ஒரு போதும் ஈர்க்கப் படாவிட்டாலும் ஜீவனிடம் இது போன்றவைகளைப் பகிர்ந்து கொண்டால் அவன் அடி தடியென்று இறங்கி விடும் ஆபத்து இருப்பதால், தன்னுடைய நெருக்கமான பெண் தோழியருடன் மட்டுமே “எந்தப் படத்திலிருந்து இந்த டயலாக்கை காப்பியடிச்சாங்களோ” என்று கிண்டலடித்துச் சிரித்துக் கொள்ளுவாள்.

அது போலவே ரூபனுடைய வார்த்தைகளை எடுத்துக் கொள்ளவும் அவளால் முடியவில்லை. அதனை யாரிடமும் சொல்லவும் இயலவில்லை. சொன்னால் வீட்டினுள் பிரளயமே வரும் என அவளுக்குத் தெரியாதது அல்லவே? ஆக அவள் மனதினுள் அவன் வார்த்தைகள் செயலற்றுக் கிடந்தன… பத்திரமாய், மிகப் பத்திரமாய். அவ்வார்த்தைகளில் ஆழமாய்ப் பொதிந்து இருந்த அவனின் காதலையும், அதன் ஆழத்தையும் என்றேனும் அவள் அறிந்து கொள்ள வாய்ப்பு வருமா? இதைக் காலமே அறியும்.

ரூபனின் முயற்சியில் அவன் குடும்பமே ஒன்று கூடி அவனோடு நிற்க , அவன் இரண்டு வருட காலம் வேலை முடிந்து வரும் முன் அவனுடைய தொழிலுக்குத் தேவையான பல அடிப்படை ஏற்பாடுகளைப் பார்த்து வைத்திருந்தான் தீபன். வந்ததும் வராததுமாகத் தன்னுடைய வேலைகளில் முழு மூச்சாய் இறங்கினான் ரூபன்.

பல்வேறு இடர்பாடுகள் எதிர்வந்தன தான், ஆனால் அவனுடைய வெறித்தனமான உழைப்பினால், புத்திக் கூர்மையால், நிர்வாகத் திறனால், திட்டமிடுதலால் தொடர்ந்த இரண்டு வருடங்களுக்குள்ளாக ஒரு விதமான சம நிலைக்கு வந்து சேர்ந்து இருந்தான். அவனுடைய வளர்ச்சி அனைவருக்கும் மலைப்பூட்டுவதாகவே இருந்தது. அவனை உள்ளிருந்து இயக்கும் காதலோ இது போதாது, இது போதாது இன்னும் இன்னும் என்று மேலும் உயரங்களை அவன் தொடச் சொல்லி இயக்கிக் கொண்டு இருந்தது.

அவனுடைய வளர்ச்சி, செல்வ நிலை, அடைத்த அத்தனை கடன்கள், வீட்டிற்குத் தேவையானவை சில நிறைவேற்றியது, புதிதாக வாங்கிய லேட்டஸ்ட் மாடல் கார், எல்லாம் அவனை இகழ்வாகப் பேசிய நபர்கள் அவனை நெருங்கி வரச் செய்ததும், அவனுக்கு வேண்டாத பிரச்சினைகள் பல வர விருந்ததையும் அவன் அறிந்து இருக்கவில்லை.

அவன் அறிந்தது எல்லாம் ஒன்றே அவனுடைய அத்தனை களைப்பையும், சோர்வையும் அவனை விட்டு விலக்கும் ஒரே தாரக மந்திரம் அவனுடைய உயிருக்குள் உறைந்து விட்டவளான அவனுடைய அனிக்கா தான் என்று, வார நாட்களில் அவளைப் பார்க்க முடியாமல் தவிப்பவன் ஞாயிற்றுக்கிழமை வந்து விட்டால் போதும் ஆர்வமாகி விடுவான். காலைத் திருப்பலிக் கண்டு விட்டு ஆலயத்திற்கு வெளியே வருபவளை பிறர் அறியாமல் எப்படி எல்லாம் பார்க்கலாம் என்று ஆயிரம் உத்திகள் அவனிடம் இருந்தன.

நண்பர்களுடன் பேசிக்கொண்டு செல்லும் அவள் தன் கண் பார்வையிலிருந்து மறையும் வரை பார்ப்பான். மதியம் தன் அண்ணன் மகள் ஹனியை கூப்பிட்டுக் கொண்டு தன் இல்லம் வருபவள், சில மாதங்களேயான தீபனின் மகன் “ராபினுடன்” விளையாடுவாள். அவள் தற்போது இளநிலை படித்து விட்டு மேலாண்மைப் படிப்பை ஆரம்பித்து இருந்தாள். அவளுக்கும் படிப்பு தவிர நேரம் எடுப்பதே மிகவும் சிரமமாக இருந்தது.சற்று நேரம் குழந்தைகளோடு விளையாடுவது அவளுக்கு மிகவும் பிடித்தமானது.

குட்டி ராபினை அவள் வீட்டிற்குக் கொண்டு செல்லும் வாரங்களைத் தவிர, மற்ற வாரங்களில் இங்கே தான் அவள் விளையாட்டு இருக்கும்.அவள் ரூபனுடன் வீட்டில் உள்ள மற்றவர்களிடம் பேசுவதைப் போலவே சாதாரணமாகப் பேசுவாள் தான், ஆனால் அவர்களுக்கிடையே பொதுவாகப் பேசக் கூடிய விஷயங்கள் மிகக் குறைவு. அதனால் அவர்கள் உரையாடல்கள் மிகச் சுருக்கமாக நின்று விடும்.

அதை நிவர்த்திச் செய்வதற்காகவே அவள் வரும் போதெல்லாம் தன்னுடைய அறையிலிருந்த வண்ணம் அவளுடைய பேச்சை, விளையாட்டை, சிரிப்பை ரசிப்பான். அவன் உள்ளே இருந்து பார்ப்பது தெரியாத வண்ணம் அவனுடைய அறை அமைந்து இருந்தது அவனுக்கு மிகவும் சாதகமாகிப் போயிற்று.

அனிக்காவின் செயல்களைக் கவனிக்கும் ரூபனுக்கு அவள் இன்னும் குழந்தைப் போலவே இருக்கிறாளே என்று தோன்றினாலும், அவள் மாறி இருந்தாள் தான். வயதுக்கு ஏற்ப வனப்புக் கூடியிருந்த தன் அழகில், தன்னுடைய சட்டு சட்டென்று மாறுகின்ற கோபத்தைக் கட்டுப் படுத்தி இருக்கும் தெளிவில், வாய்க்கு வந்தபடி பேசாமல் யோசித்துப் பேசும் நிதானத்தில், ஜீவனுடன் அடி தடியென்று இறங்குகின்ற அடாவடித் தனத்தினின்று அவனைச் சீண்டி வம்பிழுக்கும் குறும்பில் என மாறித்தான் போயிருந்தாள் அவள்.

நீ எப்படி இருந்தாலும் என்னவளே

தலைமுடி கூடப் படியாமல்,

ஏனோ தானோவென்றே இருந்தாலும்

கண்ணைக் கவரும்

ஆடை அணிகள் அணிந்தாலும்,

கோபத்தில் என்னைத்

திட்டித் தீர்த்தாலும்

நிதானத்தில் என்னுடன்

பண்பாய் பேசினாலும்

சண்டையிடும்

கோழியாய்ச் சிலிர்த்தாலும்

சமாதானப் புறாவாய்

பேசிச் சிரித்தாலும்

நியாயமின்றி

என்னை வதைத்தாலும்,

குறும்பில் குளித்தவளாய்

சின்னஞ் சிறாருடன்

வெட்டி நியாயம் பேசினாலும்

நீ எப்படி இருந்தாலும் என்னவளே

என்றும் என்னவளே…தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here