12. அமிழ்தினும் இனியவள் அவள்

0
504
Amizhthinum Iniyaval Aval

**அத்தியாயம் 12**

ரூபன் அனிக்காவின் வீட்டிற்கு வந்திருந்தான், அவனுடன் கூடவே ஜீவனும் அவர்கள் வீட்டின் வரவேற்பறையில் காத்திருக்கத் தாமஸ் வந்து சேர்ந்தார். தான் சந்திக்க வந்த காரணத்தை மிகவும் மகிழ்ச்சியோடு ரூபன் கூற ஆரம்பித்தான்.

. தற்போது கைவந்துள்ள கூடுதலான வேலைகளைக் குறித்தும், அவைகளைத் திறம்படச் செய்து முடிக்கத் தான் தன்னுடைய தொழிற்சாலையை விரிவு படுத்த வேண்டியதாக இருக்கும் சூழலையும், அதற்கேற்ப தற்போது அவனுடைய தொழிற்சாலை இயங்கிக் கொண்டிருந்த இடத்தினின்று சற்றுத் தள்ளி பெரியதொரு இடத்தில் விரைவில் தான் கூடுதலான இயந்திரங்களோடு வேலை ஆரம்பிக்க இருப்பதான தன்னுடைய முயற்சியையும் குறித்து விளக்கிக் கொண்டு இருந்தான்.

புதிய தொழிற்சாலையின் ஆரம்ப விழாவின் வரவேற்பிற்கு அத்தை மாமாவை குடும்பச் சகிதம் அழைப்பதற்காகவே இருவரும் வருகை தந்திருந்தனர். நெருங்கிய சொந்தங்கள், நண்பர்கள், மற்றும் தொழில்முறை நண்பர்கள் மட்டும் அழைக்கப் பட்டிருந்த விழா அது.

“இடம் சொந்தமா வாங்கிட்டியா ரூபன்?”

“இல்ல மாமா? இப்போ வாடகைக்குத் தான்…சொந்தமா வாங்க பேசிட்டு இருக்கிறேன். ஒரு வருஷமாவது ஆகும்னு நினைக்கிறேன்.”

“ம் ம் நல்லது, நல்லது.”

“பாக்டரில நிறையப் பேர் இருக்காங்கன்னு அன்னிக்குப் பார்த்தேன், கூடவே அலுவலக வேலைக்கு ஆள் வச்சிருக்கியா?”

“ஆமா மாமா, ஏற்கெனவே நாலு பேர் இருக்காங்க ,இப்போ நிறைய ஆர்டர்ஸ், வேலைக் கூடி இருக்கிறதால புதுசா ரெண்டு லேடீஸ் ஜாயின் செய்யறதா இருக்கிறாங்க. அக்கவுண்ட்ஸ், சேல்ஸ் டீடெய்ல்ஸ் எல்லாம் மேனேஜ் செய்யறதுக்கு , டெண்டர்ஸ் தயாரிக்கிறதுன்னு நல்ல எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவங்க”…என

அப்போது சாரா கொண்டு வந்த காஃபியில் ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு ஜீவன் அருகில் வந்து உட்கார்ந்தாள் அனிக்கா.

“அப்பா, இப்போ ஜீவனும் எஞ்சினியரிங்க் முடிச்சிட்டான். ரூபன் அத்தானோட சேர்ந்து ஃபாக்டரி வேலையை மேனேஜ் செய்யப் போறானாம்.” என்று அறிக்கையிட்டவளிடம் சாரா,

“ஏய் வாலு, காஃபி வேணும்னா கிச்சன்ல போய் எடுத்துக்க , அதுக்கு எதுக்கு ட்ரேல இருந்து எடுத்த நீ?” எனக் கேட்க,

சுற்றும் முற்றும் பார்த்தவள் ஹாலில் இருக்கும் அப்பா, ஜீவன் கையில் காஃபி இருக்க, வெறும் கையாக இருந்த ரூபன் கையில் தான் எடுத்த காஃபிக் கோப்பையைக் கொடுத்து விட்டு,

“நான் காஃபி எடுத்தது அத்தானுக்குக் கொடுக்கறதுக்குத் தாம்மா” எனச் சமாளித்தாள்.

அவனோ இதுவரை காஃபியையே கண்டிராதவன் போல அவள் தந்த காபியை அவசரமாய் வாயில் பொருத்தினான்.அம்மாவை ஏமாற்றி விட்டோம் என்ற களிப்பில் குறும்பு மிக ஜீவன் பக்கம் பார்த்துச் சிரித்தவள் அதே கோணத்தில் திரும்பி கண்சிமிட்டவும் ஜீவனைத் தாண்டி அது ரூபன் பார்வைக்குப் போய்ச் சேர்ந்து விட்டது.

காஃபியை ஒரு மிடறுக் குடித்து நிமிர்ந்தவனுக்கு அவள் செய்கையில் சட்டென்று புரையேறியது.அருகே இருந்த தாமஸ் “பார்த்துப்பா  எனக் கூற ,

அனிக்கா நாம் செய்தது தவறோவெனத் திருதிருவென விழித்தாள்.

சற்று நேரத்தில் சகஜமாகச் சூழல் மாற அவர்களுக்கிடையே பேச்சு மாறியது. தாமஸ் அனிக்காவிடம்,

“அனிம்மா, நீ அலுவலக வந்து நிர்வாகம் கத்துக்கிறேன்னு கேட்டுட்டு இருந்தல்ல, ரூபன் அலுவலக போய் வேலை பழகிக்கொள்ளலாமே, என்ன போறியா?” என்றார்.

சட்டென அங்கே மௌனம் நிலவியது.

ரூபன் தன் மனதில், ‘என்னடா நம்ம காட்டில இன்னிக்கு அடைமழையாக் கொட்டுது? முதல்ல அவ கையால காஃபி கிடைச்சது, இப்போ என்னடான்னா நம்ம கூட அலுவலக வரப் போறாளா? ” என்று இருக்க, ஜீவனோ இதற்கு எப்படியாக உணர்வை பிரதிபலிப்பது என்று புரியாமல் அமைதியாக இருந்தான்.

ஏற்கெனவே அனிக்கா தாமஸிடம் தன்னுடைய மேலாண்மைப் படிப்பிற்கேற்ப தான் எங்காவது பணி புரிவது செயல்முறைக்கு உதவும் என்று தந்தையிடம் கேட்டுக் கொண்டு இருந்தாள். அவரைப் பொறுத்தவரையில் அவரது குடும்பம் அவருக்கு மிகவும் முக்கியம், தன்னவர்களைப் பொத்தி பாதுகாக்கின்ற குணம் அவரில் இருந்து தான் கிறிஸ்ஸிற்கு வந்திருக்க வேண்டும். தனது பணியிடத்தில் தேவையில்லாமல் தன் வீட்டினரை அவர் அழைத்துச் சென்றதில்லை. எல்லோர் கண்கள் முன்பாகவும் மகளைக் காண்பிக்க அவருக்கு விருப்பமில்லாததால் தன் அலுவலகத்தில் மகளை வேலைக்கு அமர்த்துவது அவருக்கு அவ்வளவு உவப்பாக இல்லை.அதே நேரம் வேறு ஏதாவது அலுவலகம் என்றால் அவள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டி வரலாம் அவரது மகளுக்கு அப்படியொன்றும் கஷ்டப் பட்டு உழைக்க வேண்டிய அவசியம் இல்லையே? என்பதும் கூட அவரது எண்ணம்.

ஒரு வருடத்திற்குள்ளாக மகளுக்குத் திருமணம் செய்து வைத்து விட வேண்டுமென்று திட்டமிட்டு இருந்தார் . அதுவரையில் அவள் விருப்பப் படுகிற மாதிரி பணி புரியட்டுமே? என்கின்ற சிந்தனையில் தான் அவ்வாறு கேட்டது. அவரைப் பொறுத்த வரையில் ரூபனின் அலுவலகத்தில் அதிகப் படியான வேலைகள் இருக்காது. பெயரளவுக்கு அவளும் வேலைக்குப் போய் வரலாம். அதே நேரம் அவள் கேட்ட ஒன்றைத் தான் மறுக்கவில்லை என்ற திருப்தியும் இருக்குமே.

மகள் மௌனமாக இருக்க அவர் ரூபனிடம் பேசினார், “அனிக்காவும் வந்து அங்கே நிர்வாகம் எல்லாம் கத்துக்கட்டும் ரூபன். அவளுக்குச் சம்பளமெல்லாம் எதுவும் கொடுக்க வேண்டாம், ஆனால், எல்லா நாளும் முழு நேரமும் அவளால வர முடியாது அவளுக்குப் படிப்புக்கு வசதியா இருக்க நேரம் மட்டும் வருவா?. உனக்கொன்னும் பிரச்சினையில்லையே? என்னப்பா…

“அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினை இல்லை மாமா” என அமைதியாகப் பதில் கொடுத்தவன் மனம் இனிமே அவளை அடிக்கடிப் பார்க்கக் கிடைக்குமே என்ற எண்ணத்தில் “டண்டனக்கா” வெனத் துள்ளாட்டம் போட, இது எங்குக் கொண்டு போய் விடுமோ என தன் மௌனத்தை நீட்டித்தான் ஜீவன்.

“அப்புறம் புது அலுவலக ஸ்டார்ட் ஆனபின்னே போ சரியா அனிம்மா, உன் ஃபிரண்ட் வேற கூட இருக்கான்” எனச் சொல்லி மகளைப் பள்ளிக்கு அனுப்பி வைப்பதைப் போல எண்ணி ஜீவனைக் கைக் காட்டி மகிழ்ச்சிதானாவென அவள் முகத்தை ஆர்வமாகப் பார்த்தார் அவர். மகள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்து விட்டு அதில் பெருமிதம் கொள்ளும் உணர்வை அவர் முகம் பிரதிபலித்தது.

அனிக்காவிற்கு அங்கே வேலைக்குச் செல்ல எவ்வித தயக்கமும் இல்லைதான். ரூபனின் சொற்களை மறக்கவில்லை ஆயினும், அவன் ஒரு போதும் இவளிடம் தேவைக்கு அதிகமாக வழிந்து பேசியதாகவோ, உடல் கூச உறுத்து விழித்ததாகவோ, கண்ணியமற்றுக் காமுகப் பார்வைப் பார்த்ததாகவோ அவளுக்கு நியாபகமில்லை. ஒரு சில நேரம் அவன் அது குறித்து மறந்து விட்டிருப்பான் போலும் என்று கூட இவள் எண்ணியிருக்கிறாள். அந்தச் சம்பவம் நிகழ்ந்தும் வருடம் நான்காகின்றதே?

தன்னுடைய மகிழ்ச்சியான பதிலைக் கேட்கக் காத்திருக்கும் அப்பாவை ஏமாற்றம் அடையும் படிச் செய்யக் கூடாதெனெ எண்ணியவளாய் உடனே

“சரிப்பா, நீங்க சொன்ன மாதிரி போறேன், தாங்க்யூப்பா” என்றவளாய் மிக மகிழ்வாய் தலையசைத்தாள்.

“அதெல்லாம் நான் அவளைப் பார்த்துப்பேன் மாமா” என்றான் ஜீவன். தம்பியின் பேச்சிலும் குரலிலும் வெளிப்பட்ட வித்தியாசமான தொனியில், “அப்படி என்ன பார்க்கப் போறானாம் இவன்?” என்று தம்பியை ஒரு அர்த்தப் பார்வைப் பார்த்து வைத்தான் ரூபன்.

அத்தனையையும் தூர நின்றுப் பார்த்துக் கொண்டிருந்த சாரா மனதில் சில மாதங்களுக்கு முன்பாக நிகழ்ந்த உரையாடல் ஒன்று ஞாபகத்திற்கு வந்தது.

இந்திரா அன்று சாராவின் வீட்டிற்கு வந்திருந்தார், கிறிஸ் தன் குடும்பத்தோடு விடுமுறை கொண்டாடப் போயிருந்த நாட்கள் அவை. தாமஸ் அலுவலுக்கும், அனி கல்லூரிக்கும் புறப்பட்டுச் சென்றிருந்ததால் அந்தத் தனிமையில் இந்திராவைப் பார்த்து, மகிழ்ச்சியாக வரவேற்றார் சாரா.

“வாங்க அண்ணி, நானே வேலையை முடிச்சிட்டு அங்கே வரலாமான்னு இருந்தேன்” என்று பொதுவாகப் பேசத் தொடங்கினர். அவர் தன்னிடம் ஏதோ பேச வருவதை, அதற்காகத் தயங்கி நிற்பதை உணர்ந்த சாரா, என்னாச்சுங்க அண்ணி? என்னவோ பேச வந்திருக்கீங்க? என்கிட்ட என்ன தயக்கம் என,

“ஆமா சாரா, ரொம்ப நாளா இதப் பத்திக் கேட்கணும்னே இருந்தேன் …”

“என்ன அண்ணி…’

“அது வந்து நம்ம ரூபன்…”

“நம்ம ரூபனுக்கு அனிக்குட்டியை ரொம்பப் பிடிச்சிருக்கும் போல இருக்கு, நான் தீபன் கல்யாணத்தன்னிக்குத்தான் கவனிச்சேன். இதைப் பத்தி இன்னும் உன் அண்ணனுக்குக் கூடச் சொல்லலைப் பார்த்துக்க…”

உன்னைப் பத்தி எனக்குத் தெரியும், ஆனா எப்படியும் தாமஸ் அண்ணன் அவளுக்கு நல்ல வசதியான வரனை எதிர்பார்ப்பாங்க.

இவன் வேலையும் இப்ப நல்லா போயிட்டு இருக்குக் கூடிய சீக்கிரம் நல்லா வருவான்…

அவனுக்குக் கெட்டப் பழக்கம் எதுவும் கிடையாது, அந்தப் பிரச்சினை நடந்த அன்னிக்கு தான் முத தடவைக் குடிச்சேன்னு தீபன் கிட்டச் சொல்லியிருக்கான்.

அவன் என் மத்தப் பிள்ளைங்க மாதிரி கிடையாது. மனசு விட்டுச் சொல்ல மாட்டான். அதான் நான் முதல்லயே உன் கிட்ட ஒரு வார்த்தைக் கேட்டு வைக்கணும்னு நினைச்சேன். நீ கொஞ்சம் அண்ணன் கிட்ட சொல்லி வச்சேன்னா… நான் உன் அண்ணாகிட்டச் சொல்லி அவர் அடுத்த லீவில வர்றப்போ, பொண்ணுக் கேட்க வரலான்னு நினைச்சேன்.

எனக்கு இந்த விஷயம் முன்னமே தெரியும் அண்ணி எனச் சொல்லி சாரா இந்திராவை அதிர வைத்தார்.

ஆமா, நீங்க சொன்ன மாதிரி நானும் நம்ம தீபன் மேரேஜ் அன்னிக்கு தான் நானும் ரூபனைக் கவனிச்சேன். நீங்க ரூபனைப் பத்தி எனக்குச் சொல்லித்தான் நான் தெரிஞ்சுக்கணுமா, அவன் தான் தங்கமான பிள்ளையாச்சே…ஆனா…

… அந்த ஆனால் வார்த்தையின் அர்த்ததை அறிந்து கொள்ள என்னென்று பார்த்த இந்திராவிடம்

எங்க வீட்டுக்காரருக்கும், கிறிஸ்ஸுக்கும் அவன்னா உயிரு, ஏற்கெனவே, நிறைய இடத்தில இருந்து சம்பந்தம் வந்திட்டு இருக்கு.ஆனால், அது இவங்க ரெண்டு பேரைத் தாண்டி இது வரை வரவே இல்லை. ரெண்டு பேருமே அதை அத்தனை அலசி ஆராயிறதில ஒருத்தருக்கொருத்தர் மோதிக்குவாங்க. ஒரு சம்பந்தம் இவருக்குப் பிடிச்சிருக்குன்னா அவன் அதெல்லாம் என் தங்கச்சி அழகுக்குக் காணதுன்னு ரிஜெக்ட் பண்னிடுவான். இல்ல அவனுக்குப் பிடிச்சதுன்னா இவன் வசதி காணாதுடான்னு அவரு ரிஜெக்ட் பண்ணிடுவாரு.

இவங்க இத்தனையா பார்த்து தேடும் போது எனக்கே கொஞ்சம் அதில போய் எதும் சொல்ல கொஞ்சம் தயக்கமா தான் இருக்கு. ரெண்டு பேருல என் பேச்சை யாரும் கேட்பாங்க மாதிரியே தோண மாட்டேங்குதே. எனக்கும் நம்ம ரூபனுக்குக் கொடுத்தா நல்லாயிருக்கும்னு தான் தோணுது.

தப்பா நினைச்சுக்காதீங்க அண்ணி ஆனால், நான் இதை நான் சொல்லப் போனா அதை வச்சி இவங்க ரெண்டு பேரும் உங்க அண்ணா குடும்பம்னு தான நீ பேசுற, அதெல்லாம் சரி வராது அப்படின்னு எதையாவது நம்ம குடும்பத்தைக் குறைச்சு பேசிடுவாங்களோன்னு மனசுக்கு பயமா இருக்கு. ஒரு பக்கம் இந்தக் கல்யாணப் பேச்சு எடுத்துப் பிரச்சினை எதுவும் வரதுக்குப் பதிலா இப்போ இருக்கிற மாதிரி நம்ம ரெண்டு குடும்பமும் ஒற்றுமையா இருந்துட்டு போயிடலான்னு தோணுது.

ஏற்கெனவே இப்படியெல்லாம் யோசிச்சு நான் குழம்பிட்டு தான் இருக்கேன் அண்ணி. அவரு அனி விஷயத்துல என் பேச்சைக் கேட்பாரா இல்லையான்னு தெரியலை. ஆனாலும் நான் அவர் கிட்ட பேசிப் பார்க்கிறேன் அண்ணி”

அதன் பின் அவர்கள் பேசிய விஷயத்தைக் குறித்து எவரிடமும் அவர்கள் பேசவுமில்லை. அதைக் குறித்துக் கணவரிடம் பேச இன்று வரை வாய்ப்பும் அமையவில்லை.

இப்போது அனிக்கா அவன் அலுவலகத்தில் பணி புரிய தன் கணவரே ஏற்பாடு செய்து தந்ததையும், அதனால் மலர்ந்த ரூபனின் முகத்தையும் கண்டவர்க்கு என்ன சொல்வது எனப் புரியவில்லை.பின்னொரு நாள் அவன் என் மகளை விரும்புகிறான் என உனக்குத் தெரிந்து இருந்தும் நீ ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று கணவர் தன்னிடம் கேட்பாரோ என அவருக்கு உள்ளூர பயம் சூழ்ந்தது.

தனக்குத் தெரிந்த விஷயத்தை, தான் இந்திராவுடன் உரையாடியதை தன் மனதிற்குள்ளேயே வைத்து மறைக்க அவர் முடிவு செய்தார்.

ஏற்கெனவே எளிமையாக நடத்த முடிவு செய்திருந்த விழாதான். ஆனாலும், அன்று ரூபனுக்கு அன்று எல்லாமே மிகவும் விசேஷமாகத் தோன்றியது. தன்னுடைய வீட்டினர் , அத்தை வீட்டிலிருந்து வீட்டிலிருந்து தாமஸ் மற்றும் கிறிஸ் பின்னர் வருவதாகச் சொல்லி பெண்கள் மட்டும் வந்திருக்க, அம்மா அத்தையுடன் தன் மனம் கவர்ந்தவளும் கூட நின்றுக் கொண்டிருப்பதை அடிக்கடி மகிழ்ச்சி தாளாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

“அடக்கி வாசி”

அவனருகே வந்து ஏதோ குனிந்து நிற்பது போல நின்ற ஜீவன் தான் அண்னனை அடக்கிக் கொண்டிருந்தான். “போடா” என்றவனாக இவனும் கஷ்டப் பட்டு பார்வையை வேறு பக்கம் திருப்பினான்.

தொழிற்சாலையின் திறப்பு விழா சிறப்பாக நடைப் பெற்றது. அவனோடு பணிபுரிய தினமும் அவன் அலுவலகத்திற்கு வந்து தினம் தினம் தரிசனம் தரவிருக்கும் தன்னுடையவளை நினைத்துக் கொண்டே கனவில் மிதந்தான் அவன். இந்தச் சந்திப்புக்கள் அவன் காதலில் ஏதேனும் மாற்றம் ஏற்படுத்துமா?

உன்னைக் காணத் தவித்த

நாட்கள் முடிவுற,

ஏதோ தவம் செய்திருந்தேன் போலும்

உன்னைத் தினம்

காணும் நாட்கள் அருகில் வர

ஏதோ தவம் செய்திருந்தேன் போலும்

உந்தன் முகத்தை,

முகபாவத்தை,

உந்தன் குறும்பை,

செல்லப் பேச்சுக்களை,

உந்தன் கோபம்,

செல்லச் சீண்டல்களை,

அத்தனையும்

கண் குளிர

தினம் காண

கிடைத்திருக்கும்

இத்தருணம் குறித்தே என்னுள்ளம்

உரக்கச் சொல்லுதே

எதோ தவம் செய்திருந்தேன் போலும்

என்றோ தபம் செய்திருந்தேன் போலும்

என்னோடு

நீ மட்டும் இருந்தால் போதும்

எப்போதும், எப்போதும், எப்போதும்தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here