13. அமிழ்தினும் இனியவள் அவள்

0
475
Amizhthinum Iniyaval Aval

**அத்தியாயம் 13**

ஒரு மோட்டர் வெஹிகளோட (Motor Vehicle) ஸ்பேர் பார்ட்ஸ்களை (spare parts) 5 வகையா பிரிக்கலாம். முதலில வெஹிகலோட பாடி & மெயின் பார்ட்ஸ் அதாவது டோர்ஸ், விண்டோஸ் முதலியன…,

ரெண்டாவது எலெக்ட்ரிகல் & எலெக்ட்ரோனிக்ஸ் அதாவது ஆடியோ வீடியோ, சார்ஜிங்க் சிஸ்டம்ஸ் இப்படிபட்ட எல்லா விதமான பார்ட்ஸ்,

மூணாவது மோட்டார் வெஹிகலோட இண்டீரியர் அதாவது சீட், சீட் கவர்…இதெல்லாம்,

நாலாவது ப்ரேகிங்க் சிஸ்டம், எஞ்சின் ஆயில், ஃபூயல் (Fuel) சப்ளை சிஸ்டம் … இவைப் போன்ற பார்ட்ஸ் இத பொதுவா Powertrain Chassics னு வகைப் படுத்துவாங்க.

அஞ்சாவது மிஸலேனியஸ் ஆட்டோ பார்ட்ஸ் அதாவது ஏசி க்ளட்ச், கம்ப்ரஸ்ஸர் இத மாதிரி பார்ட்ஸ்.

இதில நம்ம ஃதொழிற்சாலைல என்ன எல்லாம் தயாரிக்கிறோம்னா என… மிக விளக்கமாக ஒவ்வொன்றாக விளக்கியவன். முதலில அந்தப் பெரிய தொழிற்சாலைக்கு அதான் நான் வேலைச் செஞ்சிட்டு இருந்தேனே அவங்க ஆர்டர்ஸ் செஞ்சுக் கொடுத்துக் கொண்டிருந்தாலும், பெரிய அளவில வளரணும்னா நம்முடைய எல்லைகளைப் பெரிசாக்கணும் இல்லையா? அதான் நான் பொருட்களைத் தயாரித்து ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புக்களைத் தேடினேன்.

இரண்டு வருடமாக நான் வெளி நாட்டில் பணிபுரிந்த போது ஏற்பட்ட அறிமுகம் காரணமாக என் மேல் நம்பிக்கை வைத்து எனக்கு ஒரு சில சின்னச் சின்ன ஆர்டர்கள் தந்து கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் அவர்கள் எதிர்பார்ப்பிற்க்கு ஏற்ப வேலை செய்வதில் கொஞ்சம்…என்ன நிறையவே சிரமங்கள் இருந்தாலும், இப்போ நம்ம தயாரிப்புக்களின் தரம் பார்த்து நமக்கு இன்னும் நிறையப் புது ஆர்டர்ஸ்லாம் கிடைச்சுருக்கு. இந்த அதிகமான வேலைகளை முன்பிருந்த இடத்தில செய்ய முடியாது அதே நேரம் அந்த இடத்தை விரிவு படுத்தவும் வாய்ப்பில்லை என்கிற காரணத்தால் தான் நான் இப்போ இந்த இடத்துக்கு தொழிற்சாலையை மாற்ற வேண்டியதாயிற்று. இந்த இடம் நம்ம வீட்டுக்குக் கொஞ்சம் தூரம் என்றாலும் வேலைக்கு ஏற்ற இடமா இருக்கிறது வசதியா இருக்கு. இப்போதைக்கு நம்ம தொழிற்சாலையில் 40 பேரும் அலுவலகல 6 பேரும் வேலைக்கு இருக்காங்க.

தன்னுடைய கேபினில் நின்றவாறு விபரங்களைத் தெரிவித்துக் கொண்டிருந்தான் ரூபன். எதிரில் மிகவும் அக்கறையாக அவனுடைய பேச்சை ஜீவனும், அனிக்காவும் செவிமடுத்துக் கொண்டிருந்தனர். விளக்கங்கள், அவர்கள் கேள்விகளுக்கேற்ற பதில்கள் என்று தொடர்ந்து கொண்டிருந்த ரூபனுக்குத் திடீரெனெ என்ன தோன்றியதோ தெரியவில்லை. தனக்குள்ளாக யோசித்தவாறு புன்னகைத்தவனது மெலிதான புன்முறுவல் விரிந்து முகம் முழுவதும் பரவச் சட்டென்று சிரிக்க ஆரம்பித்து விட்டான்.

இவனுக்குத் திடீரென்று என்னவாயிற்று? என்று எண்ணியவர்கள் இருக்கையை விட்டெழுந்து அவன் அருகே வந்து நின்றனர். ஜீவன் கொஞ்சம் கலவர முகத்தோடு,

 என்ன ஆச்சுண்ணா? என்றான்

 அத்தான் என்னாச்சு? இப்போது கேள்வி கேட்பது அனிக்காவின் முறையானது.

சிரிப்பை ஒருவாறாகக் கட்டுப் படுத்தியவன், மறுபடி இருவர் முகத்தைப் பார்த்து இன்னும் அதிகமாகச் சிரிக்க ஆரம்பித்து விட்டான். நண்பர்கள் இருவருக்கும் ரூபன் தங்களைக் குறித்தே சிரிக்கிறான் என்று உறுதி ஆகிவிட்டது. இப்போது வலப்புறமும் இடப்புறமுமாகக் கோபத்தோடு இருவரும் வந்து நிற்க ரூபன் சிரித்து முடித்துவிட்டு இருவரையும் நிமிர்ந்துப் பார்த்தான்.

 இல்லடா நீங்க ரெண்டு பேரும் எதிர்ல உக்கார்ந்திருக்க உங்களுக்கு நான் எக்ஸ்ப்ளைன் செய்யிறதை நினைச்சதும், எனக்கு உங்க 10த் மேத்ஸ் க்ளாஸ் ஞாபகம் வந்திடுச்சி.”

ஜீவனின் முறைப்பை பொருட்படுத்தாமல் தொடர்ந்தான்.

 அதில தான் 100% எடுப்பேன்னு சொல்லிட்டு 50%, 60% எடுத்தீங்க இங்கே அப்படி எதுவும் செஞ்சு வைக்காதீங்கடா  எனச் சொல்லி மறுபடிச் சிரிக்க,

 அத்தான்…”

அனிக்கா ரூபனை அழைத்த அந்த அத்தான் அழைப்பில் அவள் பற்கள் ஏற்கெனவே அரைப்பட்டுக் கொண்டு இருந்தன. தன்னைத்தான் அவன் சொல்கிறான் என்று புரிந்துக் கொண்டதால் அனிக்கா தன் கையிலிருந்த டைரியால் அவன் முதுகில் மொத்தினாள்.

 அத்தான்,பொத்தான், செத்தான்  சின்ன வயதில் எப்பவோ அம்மா விளையாட்டாகச் சொல்லிக் கொடுத்ததைப் பற்கள் அரைபடச் சொல்லிக் கொண்டு இடுப்பில் கை வைத்துக் கொண்டு முறைத்தாள். அந்த நீண்ட ஸ்கர்ட், டி ஷர்ட், டெனிம் ஜாக்கெட்டில் இன்னும் அவள் அவன் கண்ணுக்கு குழந்தையாகவே தெரிந்தாள்.

என்னண்ணா வில்லன் ஸ்டைல்ல ரைமிங்கா திட்டுறா? ஜீவனும் அண்ணனோடு சேர்ந்து சிரிக்க,

 ஐயய்யோ, ஆண்களைக் காப்பாத்துறதுக்கு இந்த நாட்டுல சட்டம் எதுவுமில்லையா?”

மேலும் அடிவாங்குவதற்குள் தன் முதுகைத் தடவியவாறே அவர்கள் இருவரையும் கேபினிலிருந்து வெளியே அழைத்து வந்தான் ரூபன். அனிக்கா அவனை இன்னும் முறைத்துக் கொண்டிருந்தாள். ஒருவாறாக அவளைச் சமாதானப் படுத்தி இருவரும் சிரிக்க வைத்தனர்.

 இன்னிக்கு உங்களுக்கு ஸ்வீட் கிடையாது அத்தான்  என்று அன்று அவர்கள் அனைவருக்குமாகச் சாப்பாடு கொண்டு வந்திருந்த அனிக்கா முறுக்கிக் கொண்டாள்.

 நீ தராட்டு போ, எனக்கு என் தம்பி தருவான்  என ரூபன் விளையாட்டாகக் கூற,

 அதெல்லாம் தரமுடியாதுண்ணா… நீ இன்னிக்கு எங்க ரெண்டு பேர் மேத்ஸ் கிளாஸையும் கிண்டல் பண்ணிட்ட, அதனால உனக்கு ஸ்வீட் கிடையாது. எங்கே தேடினாலும் எங்களை மாதிரி சின்சியர் ஸ்டூடண்ட்ஸ் உனக்குக் கிடைக்கச் சான்ஸே இல்ல, எங்க மதிப்பே உனக்குத் தெரியலை அப்படித்தானே என்ன அனி?” ரூபனைப் பார்த்து கண்சிமிட்டியவாறு அனிக்காவிடம் கேட்க,

 நீ சேம்சைட் கோல் போடறியா? உனக்கும் ஸ்வீட் கட் தான்  என்று சொல்லி கொஞ்ச நேரம் வளவளத்துக் கொண்டிருந்தவர்களைக் கையோடு தொழிற்சாலையின் உள்ளே கூட்டிச் சென்றவன் ஒரு சில விசயங்களை விளக்கினான்.

இன்னிக்கு உங்க ரெண்டு பேருக்கும் வேலைக்கு முதல் நாள் இல்லையா? அதான் நான் உங்க ரெண்டு பேரையும் சீக்கிரம் வரச் சொன்னேன். இப்போ கொஞ்ச நேரத்தில ஷிஃப்ட் ஆரம்பிச்சிடும். நாளையிலிருந்து நீங்க ரெண்டு பேரும் வேணும்னா கொஞ்ச நேரம் கழிச்சும் வரலாம்  என்றான் புன்னகை முகமாகவே,

 நீங்க எந்த டைம் வருவீங்க அத்தான்?” என

 நான் எப்பவும் சீக்கிரம் வந்திடுவேன், லேபர்ஸ் எல்லோரும் நல்ல ஆட்கள். மேனேஜரும் ரொம்பப் பொறுப்பானவர்தான். ஆனால், நான் இருந்தா அவங்களுக்கு வேலைச் செய்யுறப்போ, இயந்திரங்களில் இல்ல வேற எதுவும் எதிர்பாராத பிரச்சினைகள் வந்தா சட்டுன்னு எதுவும் தேவையான முடிவுகள் எடுக்க நல்லாயிருக்கும் அதனாலத்தான்.”

ஜீவனுக்குத் தன்னுடைய படிப்புக்கேற்ற விஷயம் என்பதால் பல்வேறு நுணுக்கமான விஷயங்களை ரூபனுடன் சுவாரசியமாகப் பேசியவாறு சென்று கொண்டிருந்தான். அனிக்கா அவர்கள் பேச்சில் இடையூறு செய்யாமல் நின்று விட்டிருந்தாள். நின்ற இடத்தினின்று தொழிற்சாலையை சுற்றி அவள் கண்கள் சுழன்றன, பார்வையிட்டன. அவளுக்கு ரூபனின் இந்தக் கோணம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. சில வருடங்களிலேயே அவன் அடைந்துள்ள உயரம் பிரமிக்கத் தக்கது என்று நினைத்துக் கொண்டாள். அதற்கு அவனுடைய ஈடுபாடும், ஆர்வமும் தான் காரணமாக இருக்கும் என்று இங்கு வந்த ஓரிரு மணித் துளிகளிலேயே உணர்ந்தாள்.

தன்னுடைய வேலையைக் குறித்துப் பேசும்போதெல்லாம் அவன் கண்களில் தெரித்த அந்த ஒளி, அவன் கம்பீரம், சாதனையாளர்களுக்கே உரித்தான பெருமித உணர்வு தன்னுடைய துறையைச் சுவாசமாய் நேசிப்பவர்களுக்கு எந்த உயரமும் சாத்தியம் தான் என்று அவளுக்குத் தோன்றிற்று.இடையிடையே ஏதோ அவள் எண்ணத்தில் இடறிற்று… யாரோ அவள் மனக் கண்ணில் தோன்றிய உணர்வு.

தந்தை மற்றும் அண்ணனின் அலுவலம் அவள் சென்றிருக்கின்றாள் தான் பளிங்கும் கண்ணாடியுமாய் உயர்தரமாய் இருக்கும் அந்த அலுவலகத்தையும், சற்றே பழைய கட்டிடத்தில் அமைந்திருந்த இந்த தொழிற்சாலையையும் ஏனோ மனம் ஒப்பிட்டுப் பார்த்தது. அந்நேரம் தம்பியோடு உரையாடியவாறு அந்தப் பெரிய, விஸ்தாரமான இடத்தில் அமைந்திருந்த பல்வேறு பெரிய இயந்திரங்களையும் அவற்றைக் குறித்த விபரங்களைச் சொல்லியவாறு திரும்பி வந்து கொண்டிருந்த ரூபனின் அமைதியான புன்னகையில் தன்னையும் அறியாமல் அவள் கண்கள் நிலைத்தது.

அவனைப் பார்க்கும் போதெல்லாம் மறுபடியும் நினைவில் ஏதோ நிரடியது?.. யாரையோ ஞாபகப் படுத்தியது… யாரென்று வெகு நேரம் யோசித்துக் கொண்டிருந்தாள் அவளுக்கு நினைவிற்கு வரவில்லை. மறுபடி அந்த இடத்தைப் பார்வையிட்டாள். மிகப் பெரிய விஸ்தாரமான இடம்தான். பெரிய பெரிய இயந்திரங்கள் இருந்தன. பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஆண்களும்,பெண்களுமாகப் தொழிற்சாலை ஊழியர்கள் ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தனர். ரூபனைப் பார்த்ததும் மரியாதையான ஒரு தலையசைப்பு, அல்லது வணக்கம் தெரிவித்தனர். மகிழ்ச்சியாகவே அவன் பதிலுக்குத் தலையசைத்துக் கொண்டான்.

யாரும் யாருக்கு உத்தரவு பிறப்பிக்காமலே தானாக வேலையை ஆரம்பித்தனர். இயந்திரகதி என்பது இதுதானோ? எனத் தோன்ற ஆரம்பித்தது. சீரான இயந்திரங்களின் சப்தத்தில் தொடர்ந்து வேலை ஆரம்பித்தது. ஒவ்வொரு இடமும் மறுபடி போய்ச் சிறிது நேரம் ஒவ்வொருவரிடமும் நின்று பேசிக்கொண்டு நகர்ந்தான். ஜீவனை அறிமுகப் படுத்தினான் போலும் அனைவரும் ஜீவனுக்கு மரியாதையான வகையில் புன்னகை செலுத்தி பேசிக் கொண்டனர்.

தன்னை அறிமுகப் படுத்தவில்லையே என்று நினைக்கும் போதே ஜீவன் அங்கேயே வேலை மும்முரத்தில் நின்று விட இவளை நோக்கி வந்து கொண்டிருந்தான். யாரோ அவனை அழைக்கத் திரும்பி நின்று பேசியவனைக் கவனித்தாள். மறுபடி நினைவில் ஏதோ நிரடியது, கவனித்தாள் அவளுக்கு ஏதோ நினைவு வந்தார் போல இருந்தது.

வீட்டில் அப்பாவும் அண்ணனும் செய்வது ஒரே வேலைதான் என்றாலும் அப்பா காண்பித்த வழித்தடத்தில் நடந்து வந்தவன்தான் கிறிஸ். அவன் நிறைய நேரங்களில் தந்தையிடம் அறிவுரை கேட்பதையும், ஒரு சில முடிவுகள் எடுப்பதில் திணறுவதையும் கண்கூடாகப் பார்த்திருக்கிறாள்.அதே நேரம் அப்பாவோடு அலுவலகம் செல்கையில் அவர் வீட்டில் எவ்வளவு தான் எளிமையாகக் குடும்பத்தோடு அன்பில் குழைந்தவராகக் காணப் பட்டாலும், தன்னுடைய அலுவலகம் வந்து சேர்ந்ததும், அங்கே ஆளே மாறிப் போனவராகக் காணப் படுவார். அவருடைய ஆளுமைத் தன்மையும், சிரிப்பும், தோரணையும் அவளை வெகுவாக வசீகரிக்கும். தான் நிலை நிறுத்திய சாம்ராஜ்யம் இது என்னும் பெருமிதம் அவர் கண்களில் தெரிக்கும்.

வீட்டில் இருக்கும் இடமே தெரியாமல் அமைதியாக இருக்கும் ரூபன், தன்னிடம் மட்டுமில்லாது யாரிடமும் அனாவசியமாக எதுவும் பேசிப் பார்த்திராத ரூபன், தன்னுடைய தொழிற்சாலைக்கு வந்து சேர்ந்தது முதல் முழுக்க மாறிப் போனவனாக, தன் தந்தையிடம் கண்டு வியந்த அதே ஆளுமைத் திறன், அதே தோரணை, அதே பெருமிதத்தின் உருவமாக இருப்பதை இப்போது அவள் உணர்ந்துக் கொண்டாள். மனதில் நிரடிய எண்ணங்கள் தற்போது அவளில் முழுமைப் பெற்றன.

 என்ன அனி பிடிச்சிருக்கா?”

அதற்குள்ளாக அருகாமையில் வந்து நின்றிருந்த ரூபன் எங்கோ பார்த்தவளாகச் சிந்தனையில் அமிழ்ந்து இருந்தவளை தொழிற்சாலையை தான் பார்வையிடுகின்றாளோ என்று எண்ணியவனாகக் கேட்டான். அவன் குரலில் இருந்த துள்ளலில் தன்னிடம் இருக்கும் பொம்மையைக் காட்டி பெருமிதம் கொள்ளும் சிறுவனைப் போல அவன் அவளுக்குத் தோன்றினான்.

அவன் கேட்ட விதத்தில் அனிக்கா மட்டும் பிடிக்கவில்லை என்று ஒரு வார்த்தைச் சொல்லிவிட்டால், முழுவதுமாக அவளுக்குப் பிடித்த விதத்தில் அத்தனையையும் மாற்றி விடும் தீவிரம் அதில் தெரிந்தது. அவனைத் திரும்பி நோக்கியவள்,

 ரொம்ப நல்லா இருக்கு அத்தான்  என்று பதிலிறுத்தாள்.

ஏதோ ஆஸ்கர் அவார்ட் வாங்கிய உணர்வில் அவன் அவளைப் பார்க்கலானான்.

 நீ என் கூட வா வா இங்கே உனக்குச் சத்தம் ரொம்ப டிஸ்டர்பன்ஸா இருக்கும் 

என்றவனாக அவளை அழைத்துச் சென்றான். அவர்கள் வந்த இடத்திற்கே திரும்பினார்கள், கனத்த கதவொன்று அந்த தொழிற்சாலைக்கும் ஆஃபீஸிற்கும் இடையில் சரியாகப் பொருந்த, இயந்திரங்கள் எழுப்பிக் கொண்டிருந்த சப்தங்கள் மறைய அந்த இடத்தில் முற்றிலும் அமைதி நிலவியது. உள்ளே ஆபீசில் பணியமர்த்தியிருந்த 4 பேர்கள் இருந்தனர். அவர்களது குட்மார்னிங்கை வாங்கிப் பதிலுக்குத் தலையசைத்தவனாகத் தன் கேபினுக்கு உள்ளே அவளை அழைத்துச் சென்றான்.

“கான்பிரன்ஸ் கால் எல்லாம் இந்தக் கேபினில இருந்து தான் செய்யணும், சத்தம் டிஸ்டர்ப் ஆகக் கூடாதில்லை, அதான் ரெண்டு இடமும் உள்ளே வர்றதுக்கும், போறதுக்கும் வேற வேற கதவுகள். ஏதாவது வேலைனா இண்டர்காம்ல கூப்பிட்டா போதும் பார்த்தியா?

தன்னுடைய அலுவலக அமைப்பு அவளுக்குப் பிடித்திருக்கிறதா? என்று அறிய அவள் விளக்கம் சொல்லி முடித்தவனாக அவளைப் பார்த்தான்.

“நீங்க என்னை அவங்க கூட இண்ட்ரோ செஞ்சு வைக்கல அத்தான்?” எனத் தன் மனதில் இருந்ததைக் கூற,

“இப்பவும் ஜீவனை வெகு சிலருக்கு தான் அறிமுகம் செஞ்சு வச்சிருக்கேன், உங்க ரெண்டு பேரையும் முறைப்படி அறிமுகம் செய்ய இன்னிக்கு மதிய சாப்பாட்டு வேலைக்கு அப்புறமா ஒரு மீட்டிங்க் வச்சிருக்கேன்.

மதியம் செகண்ட்ஷிப்ட்ல இருக்கிறவங்களும் வந்த பிறகு அறிமுகத்தை வைக்கிறதா இருந்தா ஒரே மீட்டிங்க்ல ஆயிடும் பார்த்தியா? ஜீவனுக்கு ப்ரொடக்ஷன் மேனேஜ் செய்யுற பொறுப்பைக் கொடுக்கப் போறேன். ஏன்னா அவனுக்கு டெக்னிக்கல் விஷயம் என்னை விடவும் நல்லாவே தெரியும், நீ அங்கே இருந்தா உனக்குப் போரடிக்குமேன்னு நினைச்சேன். நான் பெரும்பாலும் தொழிற்சாலையில் தான் இருப்பேன். இங்கே அப்பப்ப வந்து எட்டிப் பார்ப்பேன்.

என்னோட லேப்டாப் என்கூடவே இருக்கும், வேலையை மானிடர் செய்றதோட கூடவே சைட்ல என் வேலையும் ஆயிடும் பார்த்தியா? என்று புன்னகைத்தான்,உழைப்பாளிதான் என்று மனதிற்குள் வியந்துக் கொண்டாள்.

“அப்ப நான் என்ன செய்யிறது அத்தான்? என்றவளுக்கு அங்கிருந்த டெஸ்க்டாப்பின் யூசர் ஐடி, பாஸ்வர்ட் எல்லாம் கொடுத்து,

“நிறைய இம்பார்டண்ட் டாகுமெண்ட்ஸ், அக்கவுண்ட்ஸ் டீடெயில் எல்லாம் இதில தான் இருக்கு என்றவன். இதெல்லாம் பாரு, உனக்கு ஏதாவது சஜஷன் இருக்கான்னு பார்த்துச் சொல்லு. உன் படிப்புக்கேத்த வேலை இதுதான்னு தோணுச்சு? நான் செஞ்சது சரியா? இல்லை உனக்கு வேற எதாவது கத்துக்கணுமா? எல்லாம் உன் இஷ்டம் தான் என்றான்.

சரியாகத் தான் யோசித்து இருக்கிறான் என்று எண்ணிக் கொண்டவளாக இன்முகமாகத் தலையசைத்ததோடு மனதை உறுத்திக் கொண்டிருந்த கேள்வியைக்கேட்டு விட்டாள்…

“ஏன் அத்தான் இவ்வளவு முக்கியமான வேலையை எனக்குத் தந்திருக்கீங்க?, எனக்குக் கொஞ்சம் பயமா இருக்கு” ,

“அதெல்லாம் ஒண்ணுமில்ல. நான் கொஞ்சம் சரியாதான் இதுவரை மெயிண்டெயின் செஞ்சு வச்சிருக்கிறேன். நீ சும்மா மேலோட்டமா பார்த்து வை, எதுவும் புரியாவிட்டால் எனக்குக் கால் பண்ணு சரியா? நான் கொஞ்சம் சூபர்விஷன் பண்ணிட்டு வரேன். நான் சொன்னேன்கிறதுக்காக இதையெல்லாம் ரொம்ப அவசரமா இப்பவே செஞ்சு வைக்கணும்னு ஒண்னுமில்லை. அதே போல முழு நேரமும் கேபினுக்கு உள்ளேயே இருக்கணும்னு அவசியமில்லை.

அலுவலக ஸ்டாப் வேலையைக் கவனிக்கணுமா? இல்லைதொழிற்சாலைக்கு வந்து எல்லாம் பார்க்கணுமா? எல்லாம் உன் இஷடம் தான் ஃபீல் ஃப்ரீ அனிக்கா” என்று சொல்லிப் புறப்பட்டான்.

அவள் தன் டெஸ்க்டாப்பில் ஆழ்ந்திருக்கக் கேபினை விட்டு வெளியேறியவனுக்கு மனதிற்குள் உற்சாகம் பொங்கித் தழும்பிக் கொண்டிருந்தது. இவ்வளவு நாளாக அவளோடு பேச மனதிற்குள் வெகுவாக ஆசை இருந்தாலும், என்ன பேசுவது? அனாவசியமாக ஏதாவது பேசி தன்னைத் தவறாக நினைத்துக் கொள்வாளோ? என்று எண்ணம் ஓடிக் கொண்டிருக்கும், இப்போதோ அவளிடம் மனசு விட்டு பேச அவனுக்கு ஏராளம் ஏராளம் வாய்ப்புக்கள்.

தன்னுடைய முந்தைய சிந்தனையின் படி அம்மா, அப்பாவிடம் பேசி அரேஞ்ச்ட் மேரேஜாகத் தன்னுடைய திருமணம் நடத்திக் கொள்ள வேண்டுமென்பதுதான் அவனுடைய அவாவாக இருந்தது. இப்போதோ ஒரு பக்கம் அவளோடு பேசி அவளுடைய விருப்பத்தையும் அறிந்தால் தான் என்ன? என்று ஒரு எண்ணம் மொட்டு விட்டிருந்தது.

பெண்ணிடம் தாறுமாறாகப் பேசுவது, தன்னைக் காதலிக்க வேண்டுமென்று வற்புறுத்துவது, ஏன் அவளை அவளின் தன்மானத்தைச் சீண்டும் விதமாக அநாகரிகமாகத் தொட்டு அணைத்து என்று எந்த வன்முறையும் செய்வது அவனுக்கு எப்போதுமே விருப்பமாக இல்லை. அவளுக்குத் தன் மீது காதல் என்னும் உணர்வு இல்லை என்று அவனுக்கும் தெரியும் தானே? தன் மீது மட்டுமா? இன்னும் வரை வேறு யார் மீதும் கூட அந்த எண்ணம் இல்லை என்பது தான்அவனுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயம்.

தன்னைக் கல்லூரியில் பின்தொடர்ந்து வந்தவனால் தன் படிப்பிற்குத் தடை வந்து விடுமோவென அவள் பதறியதை அவன் கண்கூடாகப் பார்த்திருந்தானே? அதே பதற்றத்தை தானும் அவளுக்குத் தர அவனுக்கு விருப்பமில்லை.

அவளுக்காக உலகம் அனைத்தும் முன்பாகப் போராட அவன் எப்போதுமேஆயத்தமானவனாகத் தான் இருக்கின்றான். ஆனால், அவனுடைய செயல் அவளை எந்த விதத்திலும் காயப் படுத்துமானால், அப்படிப்பட்ட ஒரு செயலுக்காக அவன் துணிவதாக இல்லவே இல்லை. அதற்குப் பதிலாக உலகமே அவனைக் கோழை என்று தூற்றினாலும் அவனுக்கு அதில் சம்மதமே.

இப்போதெல்லாம் அவனுடைய நோக்கம் ஒன்றே தான் தன்னுடைய தொழிலை அரும்பாடு பட்டு நிலை நிறுத்தி இருக்கின்றான். இதில் இன்னும் முன்னேற வேண்டுமானால் அவனுக்கு இன்னும் ஒருசில வருடங்கள் கால அவகாசம் தேவை. ஏற்கெனவே பேசிக் கொண்டிருக்கும் ஓரிரு ஒப்பந்தங்கள் கையெழுத்தானால், அவனுடைய நிலை இன்னும் உச்சத்தில் அமைந்து விடும். அதன் பின்னர் அவனுக்குத் தன்னுடைய அத்தை மகளைக் கரம் பிடிக்க எந்தத் தடையும் இராது. அவள் தற்போது படித்துக் கொண்டிருப்பது தான் அவனுக்கு ஒரே ஆறுதல். எப்படியும் அவளுக்குப் படிப்பு முடியும் வரை திருமணம் செய்துவைக்கும் பேச்சு நடைபெறாது, அதற்குள்ளாகத் தனக்குத் தேவையான கால அவகாசத்தை அவன் எடுத்துக் கொள்ளலாம் என்பது அவன் எண்ணம்.

எல்லாம் அவன் எண்ணுகின்றபடியே நிகழ்ந்து விடுமா? அவன் அவளைக் கரம் பிடிக்க வேண்டி எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் என்ன? எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் எப்படிப்பட்டவை என்பதை அறியாதவனாக அவன் அந்த நாள் தந்த பூரிப்பில் தன் வேலையில் மகிழ்வாய் ஈடுபட்டான்.

இந்த விஷயங்களில் சம்பந்தப்படாத ஒருவள் தேவையே இல்லாமல் கோபத்தில் கனன்றுக் கொண்டிருந்தாள், அவள் வேறு யாருமல்ல ஷைனிதான், படிப்பு ஏற்கெனவே முடிந்து விட்ட நிலையில், மேற்கொண்டு தானாக என்ன செய்ய வேண்டும் என்று எந்த முடிவையும் எடுக்காமல் குழம்பியதோடு மட்டுமல்லாமல், அப்படியென்றால் திருமணம் செய்து வைக்கலாம் என்று பெற்றோர்கள் ஏற்பாடு செய்ய முயல, பெற்றோர் தனக்காகப் பார்க்கும் அத்தனை மாப்பிள்ளைகளையும் ஏதேனும் குறை சொல்லி புறக்கணித்தாள்.

அவள் செயல்களால் பெற்றோருக்கு என்ன செய்வது என்று தெரியாத சூழ்நிலை. தனக்கு என்ன தேவையென்று அவளுக்கே தெரியாமலிருக்கப் பாவம் அவளது பெற்றோர்களுக்கு மட்டும் என்ன தெரிந்து விடப் போகின்றது?

தான் எதிர்பார்க்கும் வாழ்க்கை துணைக்கு ஒரு குறைவும் இல்லாமல் பணம், அழகு, அந்தஸ்து எல்லாம் வேண்டும் என்பவளுக்கு ஒன்று இருந்தால் மற்றொன்று இல்லாத நிலைக் கண்டு பொறுக்க முடியவில்லை. பெற்றவர்களோ அவளே பார்த்துச் சொல்லட்டும் அது வரை நாம் கொஞ்ச நாள் சும்மா இருப்போம் என்ற நிலைக்கு வந்து விட்டனர். அப்போது தான் ரூபன் பற்றி அரசல் புரசலாக அவளுக்குத் தெரிய வந்தது.

அது நாள் வரை அக்கா வீட்டுக்கு அடிக்கடி செல்லாதவள் அவ்வப்போது செல்ல ஆரம்பித்தாள். ப்ரீதா மிகவும் கலகல டைப் இல்லையென்றாலும் வீட்டினருக்கேற்ற அமைதியான மருமகள் தான், எல்லாவற்றிலும் அதிகமாகக் கலந்து கொள்ளாவிட்டாலும் இணக்கமாகவே நடந்து கொள்வாள்.தன்னுடைய மகன் பிறந்த போது கூடப் பாசத்தோடு அடிக்கடி வராத தன் தங்கை இப்பொழுது ஏன் அடிக்கடி ஓடி வருகிறாள் என அவளுக்குப் புரிய வந்த போது…

தன் தங்கை தன் கொழுந்தனையே மணம் முடித்துத் தனது புகுந்த வீட்டிலேயே மருமகளாக வர விரும்புவது அவளுக்குத் தவறாகவொன்றும் தோன்றவில்லை. ரூபன் குறித்து அவளுக்கும் நல்ல அபிப்ராயம் தான், அதனால் தன் தங்கை விரும்பியபடி நடந்தால் நடக்கட்டுமே? என்று அவளுக்கும் தோன்றியது. ஆனால், எந்த விதத்திலும் அவளுக்குப் போய்ப் பரிந்து பேசி, தன்னுடைய இல்லறத்தை கெடுத்துக் கொள்ளும் எண்ணம் அவளுக்கு இல்லை. தனக்கு மிஞ்சி தான் தான தருமம் என்று அவள் அறிந்து வைத்திருந்தது ஒரு காரணம் என்றால், தங்கையின் நிலையற்ற குணமும் அவளுக்குத் தெரிந்தது அல்லவா?

அதனால் தான் ஷைனி தன் அக்காவிடம் தான் ரூபனின் தொழிற்சாலையில் பணி புரிய விரும்புவதாகத் தெரிவித்ததைத் தன் மாமியார் காதில் போட்டதோடு நிம்மதியாக இருந்து கொண்டாள்.

மருமகள் சொன்ன விஷயத்தைக் கேட்ட இந்திராவுக்கோ தர்ம சங்கடமான நிலை. ஏனென்றால், ரூபனின் தொழிற்சாலையில் பணிபுரியும் சிலர் வீட்டினரின் பரிந்துரையால் சேர்க்கப் பட்டவர்கள் தான். அவன் தன் அம்மா சொன்னால் தட்டாமல் செய்கின்றவன்.

ஆனால், ஏற்கெனவே அனிக்காவைப் பற்றி அபாண்டமாகப் பேசியதிலிருந்து ஜீவனுக்கு ஷைனி தங்கள் வீட்டிற்கு வருவது பிடிக்காமல் இருந்ததே. இந்நிலையில், ஷைனி ஜீவன் இருக்கும் தொழிற்சாலையில் தினம் பணிபுரியச் சென்றால், புதிதான பிரச்சனகள் எதுவும் ஏற்பட்டால் என்ன செய்வது? என்றெண்ணியவராக மருமகள் தன்னிடம் கேட்ட விஷயத்தை மகன்களிடம் சொல்லாமல் தானாகவே தீர்வு கண்டார்.

மருமகளிடம் உண்மை சொன்னாலும் அவளது தங்கையைக் குறைத்துச் சொன்னது போலாகிவிடும் என்பதால் தான் ரூபனிடம் தான் இது விஷயமாகக் கேட்டதாகவும், அவன் பெண்பிள்ளைகள் இத்தனை தூரம் வேலைக்குப் பயணிப்பது சரிவராது என்று அபிப்ராயப் பட்டதாகவும் சொல்லி, வேண்டும் என்றால் பக்கத்தில் எங்காவது வேலை பார்த்து தரச் சொல்லட்டுமா? எனக் கேட்டார்.

ப்ரீதாவிற்கும் அவர் சொல்வது சரியாகவே பட்டது. இப்போதைய தொழிற்சாலை கொஞ்சம் தூரமாகத் தான் அமைந்து இருந்தது. ஓரளவு அருகாமையிலிருந்த முந்தைய தொழிற்சாலையிலிருக்கும் போதே ரூபனை பல நாட்கள் அவள் வீட்டில் பார்த்தது இல்லை. இரவு லேட்டாக வந்திருப்பானோ? இல்லை அங்கேயே தூங்கிவிட்டானோ என்கின்ற வழக்கமான ஐயம் அவளுக்கு எழும். இப்போது இருக்கும் பேக்டரி அதை விடவும் தூரம். எனவே, தன் தங்கையிடம் தன் அத்தைச் சொன்னதை அப்படியே சொல்லி வைத்தாள்.

ஷைனியும் முதலில் அதைக் கேட்டுச் சமாதானம் ஆனாலும், வேறு சந்தர்ப்பத்திற்காகக் காத்துக் கொண்டு இருந்தாள். இன்னும் அக்காவின் வீட்டிற்கு முழு மேக் அப்போடு வருவதை நிறுத்தி இருக்கவில்லை. அப்போது தான் அனிக்கா அங்கே வேலைக்குச் செல்லப் போகும் விஷயம் அவளுக்குத் தெரிய வந்தது.அதனால் அவளது உள்ளும் புறமும் மனம் எரிந்தது.

முதலாகவே அவளுக்கு அனிக்கா மீது எக்கச் சக்க பொறாமை உணர்வு உண்டு. அவளுடைய குடும்பப் பின்புலம், அவளுக்கு அவர்கள் குடும்பம் கொடுக்கும் முக்கியத்துவம் எல்லாம் எப்போதோ அவளுக்குப் பொறாமையைத் தூண்டி விட்டிருந்தன.

 எனக்கு அந்த தொழிற்சாலையில் வேலை செய்வது தூரமாக இருக்கும் என்றால் அவளுக்குத் தூரமாக இருக்காதா? நான் பொட்டப் பிள்ளைனா அவ மட்டும் என்ன ஆம்பிள பிள்ளையா? இதென்ன ஓரவஞ்சனை? பணக்காரங்களுக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா ? என்று மனதிற்குள் வெகுண்டாள். அதன் காரணமாகவே அழைப்பு இருந்தும் கூட அவள் தொழிற்சாலை திறப்பு விழாவிற்கு கோபத்தில் செல்லவில்லை. ஆனால், பிறகு யோசித்த போது ரூபனை சந்திக்க வீணாக வீட்டிற்கு அலைவதை விட, அவனைப்பார்க்க அவன் அலுவலகத்திற்குச் செல்வது நல்லதல்லவா? என்று தோன்றியது.

அனிக்காவை அங்கிருந்து விரட்டி விட்டால், தான் அவள் இடத்தில் வேலையைச் செய்வதாகச் சொல்லி சேர்ந்துக் கொள்ளலாமே? அப்படியே அவன் மனதிலும் இடம் பெற்று விட்டால் நல்லதாக இருக்கும் என்றும் தோன்றிற்று. ஒருவர் மனதில் இடம் பெறுவது அத்தனை சுலபமில்லை என்பது அவளுக்கு யார் புரிய வைப்பது. அவள் செய்யும் செயல்களால் அனிக்கா பாதிக்கப் படுவாளா என்று பார்ப்போம்?

தாமஸ் மகளைப் பார்ப்பதற்காகவே மதியம் ஒரு முறை வீட்டிற்கு வருவது வழக்கம் இன்று மகள் வீட்டிலிருக்க மாட்டாளே? என்று நினைவுத் தோன்ற, நேரடியாகவே ரூபனின் தொழிற்சாலைக்கு தன்னுடைய காரைக் கொண்டு செல்ல சொன்னார். அந்த டிரைவர் ஏற்கெனவே வீட்டுப் பெண்களை தொழிற்சாலைக்கு அழைத்து வந்திருந்த காரணத்தால் அவ்விடம் நோக்கி மேலும் விசாரிக்காமல் அழைத்துச் சென்றார்.

தாமஸிக்கு இப்போதெல்லாம் தனக்கு நிகரானவர்களிடம் மட்டும் தான் உறவு பாராட்டத் தோன்றுகிறது. அன்றைக்கு ரூபனின் தொழிற்சாலை திறப்புவிழாவிற்கு வருவதாகச் சொன்ன கிறிஸ்ஸிற்கு வேறு வேலைக் கொடுத்து அனுப்பி விட்டு தானும் சென்றிருக்கவில்லை. இந்தத் திறப்பு விழாவிற்கு ஏன் நான் போக வேண்டும்? இதெல்லாம் ஒரு பிசினஸ்ஸா ,தான் பார்க்காத பிஸினஸ்மேன்களா? என்று உள்ளுக்குள் ஒரு எண்ணம்.

உறவுகள் சொந்தங்கள் என்று எல்லாம் தன் மனைவிக்காகப் பார்க்க வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் எப்போதோ தான் இருக்கும் வீட்டிலிருந்து பணக்காரர்கள் இருக்கும் பகுதிக்கு மாறி இருந்திருப்பார். வேறு வழியில்லாததால் அதே வீட்டை இன்னும் பிரமாண்டமாகக் கட்டி தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொண்டார்.

காரிலிருந்து இறங்கியவருக்கு அந்தப் பழைய கட்டிடம் அதன் மேலிருந்த “ரூபன் ஃபேக்டரீஸ்” என்னும் பெயர் பார்த்துக் கொஞ்சம் பிரமிப்பாகத் தான் இருந்தது. அவன் வயதிற்கு அவன் அடைந்திருக்கும் உயரம் அதிகம் தான் என்று எண்ணிக் கொண்டார். அவருடைய பிரமிப்பைக் கண்டு கொண்டன இரண்டு கண்கள்,

“இது சரியில்லையே?” என்று எண்ணியவளாக அவர் அருகில் வந்திருந்தாள் ஷைனி.

 குட் ஆப்டர்னூன் அங்கிள், நீங்க தி ஃபேமஸ் பில்டர்ஸ் “T & S constructions” ஓனர்தானே? எனக்கு உங்களைப் பார்த்து ரொம்பச் சந்தோஷமா இருக்கு அங்கிள் ‘என்று அவள் அவரைப் பார்த்துக் காட்டிய அதீத மதிப்பையும், அபிமானத்தையும் கண்டவருக்கு மறுபடியும் அதே போர்ட் கண்ணில் பட “ரூபன் ஃபேக்டரீஸ்” ஹ்ம் இவன் எல்லாம் என்ன? என்னளவுக்கு இவனால முன்ன வரமுடியுமா? என்னும் இறுமாப்பு மனதில் எழ சற்றே ஏளனப் பார்வை வீசியவராக அங்கிருந்து முன்னே நகர்ந்தார்.

என்னடா பதிலே பேசாம போறாரே என்று எண்ணியவள் அவர் வேகத்திற்கு ஈடுகொடுத்தவளாக நடந்து,

 நீங்க எங்க இந்தப் பக்கம் அங்கிள்,?” என்று விசாரித்தாள்.

 என் மக இங்கே தான் வேலைக்குச் சேர்ந்திருக்கா?” என்றார்.

 ஆனாலும் நீங்க எவ்வளோ டவுன் டு எர்த் அங்கிள். உங்க பிசினஸே எவ்வளவு பெரிசு, நீங்க எல்லோரும் பெரிய ஆளுங்க அங்கிள் உங்க மக இந்தச் சின்னதொழிற்சாலையில் வேலைக்கு வர்றதெல்லாம் உங்க ஸ்டேடஸுக்கு எப்படி ஒத்து வரும். அதைக் கூடப் பார்க்காம அனுப்பி வச்சிருக்கீங்க பாருங்க எனக்கே புல்லரிக்குது அங்கிள்.

இவள் யாரென்று அவளை ஒரு முறை நிமிர்ந்துப் பார்த்தார் அவர், அதற்குள்ளாக அவள் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாள்.

“என்ன இருந்தாலும் நம்ம அக்காவைக் கட்டி கொடுத்திருக்கிற இடம், அவங்க வீட்டு விசேஷத்துக்கு நாம கலந்துக் கொள்ளணும். எங்களுக்குத் தான் வயசானகாலத்துல அலைய முடியலை நீயாவது போயிட்டு வாம்மா என்று சொன்னதாகச் சாண், முழம் பாராமல் அளந்து விட்டுக் கோண்டு இருந்தாள். அவர் விழாவிற்கு வரவில்லை என்பதை விழாவில் கலந்து கொண்டிருந்த தன்னுடைய பெற்றோர் சொல்லக் கேட்டிருந்ததால் தன் பெற்றோர் விழாவிற்கு வரவேயில்லையெனப் பயமே இல்லாமல் பொய் சொன்னவளாக அவள் கதை தொடர்ந்தது.

அவருக்கு அதையெல்லாம் கருத்தாய் கேட்க நேரமில்லை, மகளை ஒரு முறைப் பார்த்து விட்டு சென்று மீதி வேலைகளை முடிக்க வேண்டும் எனவே விரைந்தார்.

 ஏன் அங்கிள் ரெண்டுப் பசங்களோட உங்க பொண்ணு இங்கே வரதும் போறதுமா இருந்தா யாரும் தப்பா பேசமாட்டாங்களே?” என்று அவர் மனதைக் குழப்பும் வேலையில் சரியாக ஈடுபட்டாள்.

ஏற்கெனவே அவளது கேள்வியால் மனதில் சஞ்சலம் சூழ்ந்திருந்தது, அவளோ மேலும் மேலும் கேள்விகள் கேட்டு அவரைச் சோதித்த விதத்தில் மகளை வேலையிலிருந்து நிறுத்தி விடலாம் என்னும் எண்ணம் அவருக்கு வந்து விட்டிருந்தது. ஆஃபீஸின் வாசலைத் திறந்து உள்ளே வந்தவருக்குப் பேசிக்கொண்டே வேலையில் ஈடுபட்டிருந்த ஓரிருவர் தெரிந்தனர். அவர்கள் இப்போது தான் மதிய உணவுக்குச் சென்று வந்திருப்பார்கள் போலும், பையில் டிஃபன்களை வைத்துக் கொண்டிருந்தார்கள். நேற்று திறப்பு விழா நடந்து முடிந்ததினின்று பல்வேறு நபர்கள் வருவதும் சந்திப்பதுமாக இருக்கவே இவரும் தங்கள் பாஸின் உறவினர் போலும் என்று நினைத்துக் கொண்டனர்.

“ரூபன் கேபின் எது?” என்றார் அவசரமாக, உடனே அவருக்குக் கேபினைக் கைக் காட்டினர்.

“அனிக்கா எங்கே இருக்கிறாள் எனத் தெரியுமா?” எனக் கேட்க புதிதாக வந்திருக்கும் பெண்ணைப் பற்றித்தான் என்று அனுமானித்தவறாக ஒரு நபர் ,

“மேடம் கேபின்ல தான் இருக்காங்க சர்” என்றார்.

ஷைனி அவசரமாக, “சொந்தக் காரங்களாகவே இருந்தாலும் உங்க பொண்ணு கூட அந்தப் பையன் இவங்க ரெண்டு பேரும் ஒரே கேபின்ல இப்படி இருந்தாயாரும் தப்பா நினைக்க மாட்டாங்களா சர்?” என்று அவருக்கு மட்டுமே கேட்கும் விதமாக மறுபடி போட்டுக் கொடுக்க,

மனக்கிலேசத்தோடே இருந்த அவர் முறையாகக் கேபினைத் தட்டி விட்டு திறக்க எண்ணாமல், எதையோ அறிந்துக் கொள்ளும் விதமாகவோ, தன்னுடன் வளவளத்துக் கொண்டு இருப்பவளுக்குப் பதில் சொல்லும் விதமாகவோ சட்டென்று கதவை உள்ளே தள்ளி முழுவதுமாகத் திறந்தார்.

உள்ளே வேறு யாரையும் காணவில்லை. அனிக்கா பாஸின் நாற்காலியில் அமர்ந்து டெஸ்க்டாப்பைக் கூர்மையாக ஆராய்ந்தவளாக அமர்ந்திருந்தாள். சட்டென்று தன்னுடைய கவனம் சிதற கதவை நோக்கிப் பார்த்தவள்,

“அப்பா” வென்று ஓடி வந்து அவரை அணைத்துக் கொண்டாள்.

இன்னும் ஷைனிக்கான கேள்விகளுக்கான பதில்கள் நிறைவு பெறாததால் “ரூபன், ஜீவன் ரெண்டு பேரும் எங்கேம்மா? எனக் கேட்டார்,

“ஜீவனும் அத்தானும் தொழிற்சாலையில் தான் பா இருப்பாங்க, இருங்க பார்ப்போம் என்றவளாக ஆஃபீஸையும் தொழிற்சாலையையும் பிரித்த அந்தக் கதவின் கண்ணாடிப்பகுதியில் பார்த்து அதோ? எனத் தகப்பனுக்குக் காட்டினாள். அங்கே ஜீவன் அருகிலிருக்க, ரூபன் ஏதோ ஒரு மெஷினின் அருகே குனிந்து எதையோ சரிபார்த்தவாறு நின்று கொண்டிருந்தான்.நான் உன்னைக்

காதலிப்பதால்

நீ எனக்கு

குறைவானவள் அல்ல

உன் மரியாதை எனக்கு முக்கியம்.

நான் உன்னையே

நினைத்து மறுகுவதால்

உன்னை வற்புறுத்தும்

அதிகாரம் எனக்கு இல்லை.

உன் விருப்பம் எனக்கு முக்கியம்

நான் உன்னையே

எக்காலமும் நினைப்பதால்

நீயும் என்னைதான் நினைக்க வேண்டும்

என்று கட்டுப் படுத்தும்

அகங்காரம் எனக்கு இல்லை

உன் மகிழ்ச்சி எனக்கு மிக முக்கியம்.

நான் உனக்காக

இரா தூக்கம் தொலைப்பதால்

நீயும் துன்பத்தில்

உழல வேண்டும் என்பதல்ல

உன் சுதந்திரம் எனக்கு மிகவே முக்கியம்

நான் என்னாளும்

இரவு பகல் உனையே சிந்திப்பதால்

உன் சிந்தனையில்

வலுகட்டாயமாக நான் திணிக்கப் பட

எனக்கு ஆசையில்லை

நீ நீயாகவே சுயத்தோடு இருப்பதே

எனக்கு மிக முக்கியம்.தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here