14. அமிழ்தினும் இனியவள் அவள்

0
519
Amizhthinum Iniyaval Aval

**அத்தியாயம் 14**

வந்ததும் வராததுமாகத் தன்னையும் தன்னுடைய முதல் நாள் வேலை அனுபவத்தையும் விசாரிக்காமல் அப்பா எதற்காக ரூபனையும், ஜீவனையும் தேடுகிறார்? என்று அனிக்காவிற்குப் புரியாவிட்டாலும், அதைப் பெரிதாகக் கருத்தில் கொள்ளாமல் அப்பாவுடன் பேசியபடியே நகர்ந்து மறுபடியும் கேபினுக்கு அருகே அழைத்து வந்திருந்தாள்.

இந்தக் களேபரத்தில் நாரதர் வேலைப் பார்க்க முயற்சி செய்த ஷைனியை அவளுடைய கேள்விகளுக்குத் தாம் பதில் அளித்து விட்டதாக எண்ணிய நேரம் முதல் தாமஸ் திரும்பி பார்க்கவில்லையென்றால், அப்பாவைப் பார்த்த குஷியில் சற்று பின்னே நின்றிருந்த ஷைனியை அனிக்காவும் கவனிக்கத் தவறினாள்.

 ரொம்பத்தான் பாசத்தைப் பொழியறாங்க, அப்பாவுக்கும் மகளுக்கும் இங்கே ஒருத்தி நிக்கிறது கண்ணுக்கு தெரியலையாக்கும்  என்று ஷைனி தன் மனதிற்குள் பொருமிக் கொண்டிருந்தாள்.

அதே நேரம் அலுவலக செக்யூரிட்டி குறிப்பேட்டில் பெயர் பதியாமல் சடாரென்று ஒரு பெரியவரும் பெண்ணும் உள்ளே நுழைந்திருக்க, ஓரிரு நாட்களுக்கு அப்படி யாராகிலும் வந்தால் அனுமதித்து விட்டுத் தனக்குத் தகவல் தெரிவிக்க ரூபன் கூறியிருந்தவாறு செக்யூரிட்டி தகவல் தெரிவித்தார். வந்திருப்பது யார்? என அறிந்து கொள்ள, ரூபனும் ,ஜீவனும் ஃபாக்டரி பகுதியிலிருந்து ஆஃபீஸை நோக்கி விரைந்தனர்.

அவர்கள் கதவைத் திறந்து, உள்ளே வரும் போது மகளுடன் பேசிக்கொண்டு நிற்கும் தாமஸை ரூபன் கவனித்தானென்றால், ஜீவன் கண்ணில் முதலில் பட்டதென்னவோ ஷைனிதான்.

 வாங்க மாமா 

மிக உற்சாகமாக வரவேற்றான் ரூபன். அவன் மிகவும் மதிப்பு வைத்திருக்கும் நபருள் ஒருவர் அவரல்லவா? திறப்பு விழா அன்று வரவில்லையே? … இன்று தன் மகளைத்தான் பார்க்க வந்திருக்கிறார் என்று புரிந்தபோதும் அவனுக்குத் தன்னுடைய ஃபாக்டரிக்கு அவர் வருகை தந்ததே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

அண்ணன் பின்னே வந்த ஜீவன்தான் முதலில் ஷைனியை கவனித்தான்.“இவள் இப்போது இங்கே ஏன் வந்திருக்கிறாள்?” என்று உள்ளத்தில் ஒரு கசப்புணர்வு எழுந்தாலும், விருந்தோம்பலில் குறைவு வைத்தல் சரிவராதே? எனவே ஒரு அரைப் புன்னகையைக் கொடுத்தவனாக,

 வாங்க ஷைனி எப்படி இருக்கீங்க?” என விசாரித்தான்.

அதுவரை அவளைக் கவனித்திராத ரூபனும் தம்பியின் குரல் கேட்டு கவனித்தவனாக அவளை வரவேற்றான். அனிக்காவும் அவளைக் கண்டாள் ஷைனி எப்போதோ பேசியிருந்த பேச்சுக்கள் தற்போது வலுவிழந்தவைகளாக இருந்தாலும், அவை ஏற்படுத்தி இருந்த நெருடல் உணர்வு இன்னும் மறையாதிருக்க வலிந்து புன்னகைத்து வரவேற்றாள் அனிக்கா.

 வாங்க ஷைனிக்கா.”

இவளுக்கு நான் அக்காவா? தான் சின்னவன்னு சொல்லிக் காண்பிக்கிறாள் போல… ம்ஹீம் மூஞ்சப் பாரு  . என்று மனதிற்குள் பொறுமிக் கொண்டாலும் போலியாகப் புன்னகைத்து வைத்தாள் ஷைனி.

கேபினுக்குள்ளாக அனைவரையும் வரவழைத்த ரூபன் பழச்சாறுகளைக் கொண்டு வர ப்யூனுக்குப் பணித்தான். சற்று நேரம் அளவளாவிய பின் தாமஸ் விடைப் பெற்றார். ஷைனியோ வீட்டிற்குத் திரும்பப் போகிற மாதிரியே தெரியவில்லை. பேச்சுக்கு பேச்சு “ரூபன் அத்தான், “ அத்தான்  என்று அவள் பேசிய விதம் மற்ற இருவருக்குமே பிடிக்கவில்லை.

ரூபன் சாதாரணமாகவே அவளுடைய பேச்சுக்களுக்குப் பதில் அளித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அவள் ஒரு விருந்தாளி அவ்வளவே. மறுபடி அண்ணனும் தம்பியும் தொழிற்சாலை நோக்கி திரும்பச் செல்ல எழும்பவும், அதுவரை ஷைனி எப்போது போவாள் என்று காத்துக் கொண்டிருந்த அனிக்கா, அப்படி ஒன்று நிகழ போகின்ற மாதிரி தோன்றாததால்,

“இருங்க சாபிட்டுட்டுப் போகலாம்  என்று இருவரையும் அமர்த்தினாள்.

 ஓ நீங்க இன்னும் சாப்பிடலியா? எனக்கும் பசிக்க ஆரம்பிச்சிடுச்சி  என்று முதல் பந்தியில் இடம் பிடித்தது வேறு யார் ஷைனியே தான்.

அனிக்கா அவளையும் கூடச் சாப்பிடச் சொல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தாள் தான். ஒருவேளை மறுப்பாளோ? என எண்ணியிருக்க , அவள் கேட்ட விதத்தில் திகைத்தவாறு ஜீவனைப் பார்த்தாள். அவனும் அவளை அதே மாதிரிப் பார்த்துக் கொண்டிருந்தான்.

தொடர்ந்து சாப்பாட்டு வேளையில் பல்வேறு திகைப்புகள் காத்திருந்தன. எந்தப் பொன்னான நேரத்தில் ஸ்வீட் தர மாட்டேன் என அனிக்கா சொன்னாளோ தெரியவில்லை, டிஃபனை ஒவ்வொன்றாக எடுத்து வைக்க, முதலில் எடுத்து வைத்த இரண்டு டிஃபன்களிலுமிருந்த ஸ்வீட்களை யாருக்குமே மிச்சம் வைக்காமல் மொக்கினாள் ஷைனி. பருப்பு பாயாசமும், குலோப் ஜாமூனும் இருந்த இடம் தெரியாமல் போயிற்று.

அதன் பின்னர்,

 அச்சச்சோ ஆளுக்கொரு டிஃபன்ல ஸ்வீட் இருக்கும்னு நினைச்சு சாப்பிட்டுடேன். உங்களுக்கு ஸ்வீட் இல்லாம போச்சா? என ஒரு அப்பாவி லுக் வேறு.”

அதைக் கூட அனிக்காவால் தாங்கிக் கொள்ள முடிந்தது. ஆனால், ஏதோ அவளே சமைத்துக் கொண்டு வந்த மாதிரி,

 இதைக் கொஞ்சம் போட்டுக்குங்க அத்தான் நல்லாயிருக்கு, இந்த அவியல் ரொம்ப டேஸ்ட் இல்ல  என்று ரூபனிடம் விடாமல் நூறு அத்தான் போட்டது தான் அவளால் பொறுக்க முடியவில்லை.

எப்படியோ அவர்களின் பொறுமையை வெகு நேரம் சோதித்தவள் ஒருவழியாகச் சாப்பாடு முடிந்து எல்லோரும் அவரவர் வேலைக்குத் திரும்ப விடைப் பெற்றுக் கொண்டாள். ரூபன் சாப்பிடும் போதே ஒன்றன் பின்றாக ஒன்று ஃபோன் கால்கள் வந்து கொண்டிருக்க அவனுக்கு ஷைனியின் செயல்கள் கவனத்தை அதிகமாகக் கவரவில்லை. சாப்பாட்டு வேளைக்குப் பின்னர் ஷைனி விடைப் பெற்றாள்.

நண்பர்கள் இருவரும் தான் ஒருவருக்கொருவர் பார்வை பரிமாறிக் கொண்டு தலைவிதியே என்று அமர்ந்து இருந்தனர். அங்கிருந்த மூன்று பேரில் அவள் குறிப்பாக ரூபனிடம் மட்டும் பேசியது இருவருக்குமே ஏகத்துக்குக் கோபத்தை ஏற்றிவிட்டிருந்தது. ஆனால், உட்கார்ந்து இது குறித்துப் பேசுவதற்கு அவர்களுக்கு அப்போது நேரமில்லை.மதியம் சாப்பாட்டிற்குப் பிறகு நிகழ்ந்த மீட்டிங்கில் இருவரையும் அறிமுகப் படுத்தினான்.

அவர்கள் இருவரும் தன் குடும்பத்தினர் என்று அவன் எங்குமே குறிப்பிடவில்லை. தொழிற்சாலை நிர்வாகம் இனி ஜீவன் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் அலுவலக குறித்த வேலைகளை மேற்பார்வையிடப் போவது அனிக்கா என்றும் அறிவித்தான். அவ்ர்களுக்கு எப்போது எந்த உதவி, ஆலோசனை தேவையென்றாலும் அவர்களை முதலில் அணுகக் கேட்டுக் கொண்டான். சிறிய அறிமுகமும், உரையாடல்களும் நடைப் பெற்றன. இருவருக்கும் பலத்த வரவேற்பு அளிக்கப் பட்டது.

ஆஃபீஸில் புதிதாகச் சேர்ந்திருந்த இரண்டு பெண்களும் முதல் நாளின் பாதியில் தொழிற்சாலை வேலைகள் குறித்த அடிப்படை அறிமுகம் பெறுவதற்காகச் சென்றிருந்தனர். மீட்டிங்கிற்குப் பின்னர் ஆஃபீஸிற்கு வருகை தந்தனர். மற்ற நால்வரும் இன்னும் வந்திருக்கவில்லை. பொதுவாக வம்பளந்து கொண்டிருந்தார்கள். அனிக்கா வரவும் அவர்கள் அவளைக் கண்டு கொள்ளவில்லை. தங்களைப் போலப் பணிப்புரிகின்றவள் தானே என்கின்ற அலட்சியமாக இருக்கலாம்.

அனிக்கா அங்கிருந்த வாட்டர் கூலரில் தண்ணீர் எடுத்து அருந்திக் கொண்டிருந்தாள். குசு குசுவென அவர்கள் பேசிக் கொண்டிருந்தது அதிகத் தொலைவில்லாததால் இவள் காதிலும் விழுந்து வைத்தது.

 சின்னவர் விஷால் மாதிரி இல்ல… வெரி ஹாண்ட்சம் மேன்.”

கேட்டுக் கொண்டிருந்தவளுக்குச் சிரிப்பாக இருந்தது. ஜீவா உனக்கு நிறைய ஃபேன்ஸ் இருக்காங்கடான்னு சொல்லணும் என்று எண்ணிக் கொண்டாள்.இருவருள் மற்றவளோ,

ஹேய் பெரிய சார் தான் ரொம்ப ஹாண்ட்சம், அவரு மஸ்சல்ஸ பார்த்தியாடி? … ஒருவேளை சிக்ஸ் பேக் ஆ வச்சிருப்பாரோ?” …வாவ் …….

கேட்டும் கேளாதது போலக் கேபினிற்குள் நுழைந்தாள். மனமெல்லாம் திகு திகுவென எரிந்தது. இவளுங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா? என மனதிற்குள் பொரிந்தவள், சற்று நேரத்தில் ஏதேச்சையாக ஏதோ ஒரு விபரம் தேடி கேபினுக்குள் நுழைந்தவனிடம் அவசரமாகச் சொன்னாள்.

 அத்தான் நீங்க அந்த ஷைனிக் கிட்ட எல்லாம் பேசாதீங்க, சொல்லிட்டேன்” …

தன்னவள் தன்னிடம் சொன்னது ஆணையா? இல்லை அறிவுரையா? எனப் புரியாமல் வந்த வேலையை மறந்து அவளையே பார்த்தவாறு நின்றான் ரூபன்.நீ சொன்னால்

மலையும் எனக்கு மடுவாகும்.

நீ சொன்னால்

மலரும் எனக்கு முள்ளாகும்.

நீ சொன்னால்

முரண்கள் யாவும் சீராகும்.

நீ சொன்னால்

வலிகள் கூட வரமாகும்.

நீ சொன்னால்

வாழ்க்கை என்றும் வரமாகும்.

நீ சொன்னால் மட்டும் போதும்

கண்ணே சொல்வாயா?

என் காதல் என்றும் வாழ

வழியைச் சொல்வாயா?தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here