15. அமிழ்தினும் இனியவள் அவள்

0
499
Amizhthinum Iniyaval Aval

**அத்தியாயம் 15**

ரூபன் அதிர்ந்து நின்றது சில நொடிகள் தான் உடனே சுதாரித்தவனாக “தான் சில நிமிடங்களில் மறுபடி போன் செய்வதாக  அமெரிக்க ஆக்ஸெண்டில் (accent) தனிவாய் உரைத்து ஃபோன் காலை துண்டித்தவன் அனிக்காவிற்க்கு எதிராக அமர்ந்து கணிணியைத் தன் பக்கமாய்த் திருப்பித் தான் தேடி வந்த விபரத்தை நிதானமாகத் தேடத் துவங்கினான்.

பார்த்துக் கொண்டிருந்த அனிக்காவிற்க்கு “ஐயையோ நாம் என்ன காரியம் செய்தோம்?  என்னும் பரிதவிப்பு உண்டாயிற்று. அவன் ப்ளூடூத்தில் பேசிக் கொண்டே முக்கியமான விஷயமாகக் கேபினுக்குள்ளே வந்திருக்க வேண்டும். நான் ஒன்றையுமே புரிந்துக் கொள்ளாதவளாக, மடத்தனமாகப் பேசி விட்டேனே? ஒருவேளை அவன் நான் கேட்டதைக் கவனித்து இருக்க மாட்டான், நல்லதாகப் போயிற்று என்று எண்ணும் முன்னர்,

ரூபன் கணிணியை விட்டுக் கண்ணை அகற்றாமலேயே  என்னாச்சு அனி? ஷைனி உன்னை எதுவும் சொல்லி விட்டாளோ? உனக்கு ஏன் அவ மேல இவ்வளவு கோபம்? என்றான்.

‘அடச் சே’… அத்தான் காதில நான் சொன்னது சரியா விழுந்திடுச்சுப் போலயே? இப்ப நான் என்ன பதிலைச் சொல்லுறது? என் ஸ்வீட்டை முழுசும் விழுங்கி வச்சுட்டா அதனாலதான் எனக்குக் கோபம்னா சொல்ல முடியும்?

ஆடு திருடிய கள்ளன் கூட அப்படி முழிச்சிருக்க மாட்டான் அப்படித் தன்னுடைய முட்டை விழிகளை வைத்து முழித்துக் கொண்டிருந்தாள் அனிக்கா. பதில் வராததும் அவளைப் பார்த்த ரூபனுக்கு அவளைப் பார்த்து சிரிப்பாக இருந்தது. என்ன இப்படி முழிக்குறா? என்றவன் கண்ணில் டேபிளில் இருந்த பார்சல் கண்ணில் பட்டது.

என்னதிது?

ப்யூன் கொண்டு வந்து வச்சுட்டு போனாங்க அத்தான்.

கொண்டு வச்சா என்ன ஏதுன்னு எடுத்துப் பார்க்க மாட்டியா?

உங்களுக்கு எதுவும் வச்சிருப்பாங்கன்னு நான் பார்க்கலை….

இனிமே யார் வந்து எனக்குன்னு எதுவும் வச்சிட்டு போனாலும் கூட நீ பார்க்கிற … சரியா? என்றவன் குரலில் கண்டிப்பு இல்லாமல் கனிவே இருந்தது.

ஆனா இது உனக்காகத் தான் வாங்க சொல்லி விட்டேன். ப்யூன் சொல்லலியா?

ம்ஹீம்… என்றவளாகத் தலையசைக்க.

பையைத் திறந்து உள்ளிருந்த பாக்ஸை எடுத்தான். அதிலிருந்தன சில குலோப் ஜாமூன்கள்.

 சாப்பிடு” … என்று அவள் முன்னே வைத்து விட்டு மறுபடியும் தன் வேலையில் மூழ்கினான்.

வந்த நேரத்திலிருந்து ஒரு இடத்தில் அமைதியாகத் தொடர்ந்தார் போல 10 நிமிடம் கூட அவன் நிற்பதை அவள் பார்க்கவில்லை. இதில் எப்போது அவன் அவளுக்காகக் குலோப் ஜாமூன் ஆர்டர் செய்தான்? என்று அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. அமைதியாக ஒன்றை எடுத்து அவள் உண்பதற்க்குள் அவன் மறுபடியும் ஃபோன் கால் செய்து தான் முன்பு பேசிக் கொண்டிருந்த நபருக்கு விபரம் தெரிவித்துப் பேச ஆரம்பித்து விட்டான்.

பேசி முடிந்ததும் கணிணியை அவளுக்கு முன்பாக முன்போலவே திருப்பி வைத்தவன்.

 ஹாங்க்… ம்ம்ம்… அப்புறம்… என்னாச்சுனு நீ சொல்லவே இல்லைல? என்னாச்சு? எதுக்கு நான் ஷைனி கிட்ட பேசக் கூடாது?  என்றுஆரம்பித்த இடத்திலேயே மறுபடி நின்றான்.

 சொல்லாவிட்டால் விடமாட்டான் போலவே??” என எண்ணியவள் தன்னுடைய எரிச்சலின் காரணத்தை மெதுவாகச் சொல்ல ஆரம்பித்தாள்.

இல்லத்தான் இந்த அக்கா முன்னே ஒரு நாள் உங்கள ரொம்ப மட்டமா பேசிட்டு இருந்தாங்க … இப்போ என்னடான்னா? உங்க கிட்ட ரொம்ப க்ளோஸா, பாசமா பேசறாங்க அப்படின்னா நடிக்கத்தான செய்றாங்கன்னு தோணிச்சு… அதான் சொன்னேன்  என்று தன்னுடைய மனதில் எழுந்த உரிமை உணர்வை தன்னையுமறியாமல் மறைத்து பேசினாள்.

……

அதுவுமில்லாம அத்தான் நம்ம வீட்டுலயே நான் தான உங்கள அத்தான்னு கூப்பிடுவேன். இப்ப என்ன அவங்க உங்களை அத்தான்னு கூப்பிடறாங்க அதான் எனக்குப் பிடிக்கலை. என்று முகச் சுளிப்போடு கூறியவளைப் பார்த்து ரூபனின் மனம் இறகாய் மாற, காதல் வானில் இலகுவாய்ப் பறந்தது.

என்னிடம் உனக்கு உரிமையுணர்வு தோன்றுகிறதா பெண்ணே? என்று மனதிற்க்குள் எழுந்த மகிழ்ச்சியை மறைத்தவனாய் ஷைனி தன்னைப் பற்றி என்ன கூறினாள் என்று கேட்டுக் கொண்டான்.

 ஓ… வெனச் சற்றுச் சிந்தனையில் ஆழ்ந்தவன்… நீ ஏன் அதையெல்லாம் மனசுக்குள்ள போட்டுக்கிற அனிம்மா? … எப்பவுமே நம்மைக் குறைச்சு சொல்றவங்க இருக்கத்தான் செய்வாங்க. அப்படியும் ஷைனி பொய் எதுவும் சொல்லலியே அப்போ நான் குறைவான சம்பளத்துல தான வேலைப் பார்த்துட்டு இருந்தேன். நம்ம சொசைட்டில மனுஷனுக்கு மதிப்பு கொடுக்கிறாங்களோ இல்லையோ பணத்துக்குத் தான் மதிப்பு கொடுப்பாங்க. அவங்க நடிச்சா நடிச்சுட்டுப் போகட்டும், நம்ம ஆஃபீஸிக்கு வந்த விருந்தாளியை நாம நல்ல உபசரிக்கணும். அதை நாம சரியா செஞ்சாச்சு . நாம என்ன அவங்களை அடிக்கடி பார்க்கப் போறோமா? இல்லை அவங்க தான் இங்கே அடிக்கடி வரப் போறாங்களா? என்று கூறினான் ஷைனியின் எண்ணங்கள் அறியாதவனாய்.

…………………… .

பதில் பேசாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பவளைப் பார்த்து  என்னாச்சு? என்றான்…

 பேசிட்டு இருக்கிறது நீங்கதானா? ன்னு பார்த்தேன் அத்தான்  என்று கலகலத்துச் சிரித்தாள்.

 பிறகென்ன என் டூப்பா?” என அவனும் சிரிக்க  

 வீட்ல பேசவே மாட்டீங்க, ஒரு நாளைக்கு இத்தன வார்த்தை தான் பேசணும்னு என்கிற மாதிரி அளந்து அளந்து தான் பேசுவீங்க  எனவும்,

 நானா பேசமாட்டேன்? நீதான் என்கிட்ட பேச மாட்ட, இப்ப நான் பேசலைன்னு சொல்லுற  என்றான் தன் ஏக்கம் கொண்ட மனதை மறைக்காதவனாய்.

அமைதியா இருப்பீங்களா… அதான் பேச மாட்டீங்களோன்னு நினைச்சுக்கிட்டேன் அத்தான் இனி பேசறேன் சரியா?

என்றவளுக்குப் புன்னகையைப் பதிலாக்கியவன் இண்டர்காம் ஒலிக்க எடுத்துப் பேசினான்.

 ஹே அனி இப்போ யார் வந்திருக்கா தெரியுமா? உன் அண்ணன்.” என்றவனாய் வந்தவனை வரவேற்க கேபினை விட்டு வெளியேறினான்.

 அண்ணாவா, அவன் இன்று காலையே வெளியூர் அல்லவா சென்றிருக்கிறான் என்று எண்ணியவள்

 என்ன ரூபன் நீ சின்னச் சின்னப் பாப்பாவை எல்லாம் ஆஃபீஸுக்கு கூட்டிட்டு வந்திருக்க? …  என ஆர்ப்பாட்டமாய் உள்ளே நுழைந்து கேலி செய்த ராஜேஷை முறைத்தாள்.

 பார்த்தியாடா நீ கூப்பிட்டவுடனே எப்படி நான் உன் தொழிற்சாலைக்கு டக்குன்னு வந்துட்டேன் 

 இன்விடேஷன் கொடுத்தது திறப்பு விழாவுக்கு, நீங்க வந்திருக்கிறது இன்னிக்கு… இதான் உன் டக்கா அண்ணா… என அனிக்கா அவனை மடக்கினாள்.

 நாமெல்லாம் லேட்டஸ்டா வருவோம்ல, இதே நான் நேத்தே வந்திருந்தா எனக்கு இப்படி வரவேற்பெல்லாம் கிடைச்சிருக்குமா?” எனத் தன் கெத்தை விட்டு விடாமல் பேச…

இருவரும் வாயடிப்பதை சுவாரஸ்யமாய்ப் பார்த்திருந்தான் ரூபன்.

சரி சரி உட்காருங்க டாக்டர் சர்… என விளையாட்டாய் பேசி ராஜேஷை அமர்த்தினான்.

அனி டாக்டர் சர் ஹாஸ்பிடல் நம்ம தொழிற்சாலைலருந்து பக்கம் தான் தெரியுமா? என விளக்கம் கொடுத்தான்.

 ம்ம் தெரியும் அத்தான்  என்றவள் அண்ணி எப்படி இருக்காங்க? குட்டீஸ் எப்படி இருக்காங்க என்று ராஜேஷிடம் விசாரிக்க ஆரம்பித்து விட்டாள்.

 நீங்க இவ்ளோ தூரம் வந்து ஹாஸ்பிடல் வச்சதினால தான் இப்போலாம் வர முடியலைன்னு வீட்டுல சொல்லிட்டு இருப்பாங்க… தெரியுமாண்ணா? 

 ஒரே ஓசி பேஷண்டா வந்திட்டு இருந்தா எனக்குக் கட்டுப் படியாகுமா? அதான் இடத்தை மாத்திட்டேன் என அவளைக் கிண்டல் செய்தான்.

“போங்கண்ணா நான் உங்க கிட்ட இனி பேசமாட்டேன் “ என்று சொல்பவளை ராஜேஷ் சமாதானம் செய்ய… ராஜேஷின் ஓசி பேஷண்ட் என்னும் அடைமொழியில் தன்னை மறந்து சில வினாடிகளுள் அவன் பழைய நினைவுகளில் சென்று திரும்பி வந்தான்.

தொழிற்சாலையில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்த நேரம் அது அன்று ஏதோ ஒரு லீவு என்று வீட்டில் இருந்தான். தன்னுடைய பொருட்களைச் சரிப்படுத்திக் கொண்டிருந்த போது டிராயரைத் திறந்தவன், கவனக்குறைவாய் வேகமாய் மூட அவனுடைய விரல் ஒன்று நசுங்கி ரத்தம் வர ஆரம்பித்தது. தாங்க முடியாத வலி, அடுத்து என்ன செய்வது எனறே புரியாமல் நின்றபோது தான் வீட்டிலும் யாரும் இல்லை என்ற ஞாபகம் வந்தது.

எதேச்சையாக அங்கு வந்த அனிக்கா படப் படவென அவன் கையைக் கவனித்து ஒரு கர்ச்சீஃபை தேடி வந்து கட்டுப் போட்டவள் அவசர அவசரமாக ரிக்ஷா அழைத்து வந்து அவனை ஏறச் சொல்லி வீட்டைப் பூட்டி அருகாமையிலிருந்த ராஜேஷின் கிளினிக்கிற்குக் கூட்டிச் சென்றிருந்தாள். ரிக்ஷாவில் ஏறிய பின்னரே அவனுக்குத் தான் வாலட்டை மறந்து விட்டோம் என்று ஞாபகம் வந்தது.

ஒன்றும் கேட்காமல் தன்னை அவளிஷ்டம் போல அழைத்துச் செல்கின்றவளைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பேண்ட் பையில் தேடுவதைப் பார்த்திருந்தவள்.

 அத்தான் என் கிட்ட ரூபா இருக்கு என்று குட்டிப் பொம்மை வடிவிலான அவள் பர்ஸைக் காட்டி கூறிக் கொண்டாள்.

 இத்தனூண்டு பர்ஸில அப்படி எவ்வளவு ரூபாய் வைத்திருப்பாள்? என்று எண்ணியவனை, அவனுடைய விரல் வலி அதிகம் சிந்திக்க வைக்க விடவில்லை. ரிக்ஷாவிற்கு ரூபாய் கொடுத்து அனுப்பியவள்,

 இது எங்க ராஜேஷ் அண்ணா கிளினிக்தான் என்று வரிசையில் நிற்காமல் உள்ளே நேரடியாக அவனை அழைத்துச் சென்றாள்.

 ராஜேஷ் இவனைப் பார்த்து அடையாளம் கண்டு மகிழ்ந்து விசாரித்தான். ஒரு வழியாக விரலில் கட்டைப் போட்டு விட்டதும், மாத்திரைகளை வாங்கிக் கொண்டு, எப்படிச் சாப்பிட வேண்டும்? என்று விசாரித்த பின்னர் இருவரும் கிளம்பினார்கள். அனிக்காவோவென்றால் ட்ரீட்மெண்டுக்கு பணமே கொடுக்கவில்லை.

 அனி ஃபீஸ் கொடு, நான் வீட்டுக்கு வந்து தாரேன்” என்று கிசுகிசுப்பாகச் சொல்ல,

 அதெல்லாம் ஃபீஸ் கொடுத்தா அண்ணன் கோவிச்சுக்குவாங்க  என்றவளாய் அவனைக் கூட்டிக் கொண்டு திரும்ப வந்து விட்டிருந்தாள்.

 எங்கப் போனாலும் இவ வால்தனத்தைக் காட்டிடுறாளே? நான் வேற அவசரத்தில வாலட்டை மறந்து வந்திட்டேனே  எனச் சங்கடமாக ரூபன் திரும்பிப் பார்க்க ராஜேஷ் இது வழமையான ஒன்று தான் என்பது போலத் தலையசைத்து வழியனுப்பினான்.

அதைத்தான் இப்போதும் அவன் விளையாட்டாகச் சொல்லிக் கொண்டிருந்தான். இப்போது அங்கு ரூபன் என்கிற ஒருவன் இல்லாதது போலவே இருவரும் பேச்சில் ஒன்றிப் போய் இருந்தார்கள்.

அவனுக்குக் கையில் அடிப்பட்டிருந்த அன்றைய தினம், மருத்துவமனையினின்று வீடு திரும்பியது முதல் அவனை இந்திரா வரும் வரை ரூபனை கவனித்தது அனிக்காவிற்கு வேண்டுமென்றால் இயல்பான ஒன்றாக இருந்திருக்கலாம். ஆனால், அவனுக்குத் தான் அவை மறக்க முடியாத சம்பவங்களாயின. அதன் காரணமாகவோ என்னவோ தன்னுடைய தொழிற்சாலை ஊழியர்களுக்கான மாதாந்திர ஹெல்த் செக் அப்பிற்காக ராஜேஷையே பேசி சம்மதிக்க வைத்திருந்தான்.

கடந்த வருடங்களில் எல்லாம் மாதா மாதம் ராஜேஷ் ரூபனின் தொழிற்சாலைக்கு வருகை தரும் போதெல்லாம் கூடவே அவளின் நினைவுகளும் வரும். ராஜேஷீம் அனிக்கா குறித்து எதையாவது பேசாமல் அங்கிருந்து சென்றது கிடையாது.

சற்று முன்னர் வந்த போன் காலில் பேசிக் கொண்டே அண்ணன் கதவை திறந்து ஆஃபீஸ் பக்கம் சென்றவன் இன்னும் திரும்பவில்லையே? என்று ஜீவன் யோசித்தான். அண்ணனிடமிருந்து தன் தோழியைப் பாதுகாக்கும் பணியையும் செய்ய வேண்டி இருப்பதால் அப்படி என்னதான் செய்து கொண்டிருக்கிறான்? என அறிந்து கொள்ளவே அவனும் அங்கே வந்து நின்றான்.

அங்கேயோ ராஜேஷும் அனிக்காவும் பேசிக் கொண்டிருக்க, அவளுடைய நயன பாஷைகளை மொழிப் பெயர்க்கின்றவன் போலத் தன்னை மறந்து அனிக்காவின் முகத்தைக் காதல் வழிய பார்த்தவாறு நின்று கொண்டிருந்தான் ரூபன்.ஒரு சில நொடிகள்

அருளுரைக் கேட்க சலிக்கும் செவிகள்.

உன்னைப் பற்றிக் கேட்க மட்டும்

ஒரு பொழுதும் சலிப்பது இல்லை.

நொடிகள் தவறாமல்

இமைக்கும் இமைகள்
**உனைப் பார்க்கும் போது மட்டும்**

இமைக்கத் துணிவது இல்லை.

லப் டப்பெனச் சீராக லயத்தில்

ஒலிக்கும் எந்தன் இதயத் துடிப்போ

உன் அருகாமை கண்டதும்

லயத்தைத் தொடர்வது இல்லை

என் முடி முதல் அடி வரை

உன் கட்டிற்க்குள் வைத்தாய்.

உன் இதயத்தை

எனக்கெப்போது தருவாய்?

என் வாழ்வினில்

எப்போது வருவாய்?

என் கனவே

எந்தன் கண்மணியே…தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here