16. அமிழ்தினும் இனியவள் அவள்

0
507
Amizhthinum Iniyaval Aval

அத்தியாயம் 16

நட்பின் உயர்வை அறிந்ததுண்டு

உந்தன் காதலின் வலிமை மட்டும்.

இன்றுவரை

அறியாதிருந்தேன்.

காதல் ஈர்ப்பை உணர்ந்ததில்லை

உந்தன் காதலின் உயிர்ப்பை

இன்றே நானும்

அறிந்து கொண்டேன்.

ஏனென்றே தெரியவில்லை?


உன்னை எதிர்ப்பதாய்

எண்ணிக் கொண்டிருந்த

என்னையும் ஈர்த்துவிட்டது.

உந்தன் கண்ணிய காதல்தன்னைச் சுற்றி நிகழுகின்ற அனைத்தையும் மௌன சாட்சியாகக் கவனித்துக் கொண்டிருப்பதாகத் தற்போது உணர்ந்து கொண்டிருக்கின்றான் ஜீவன். அனிக்கா அவனோடு ரூபனின் தொழிற்சாலையில் பணிக்கு அமர்ந்து சில மாதங்களாகி விட்டிருந்தன.

தீபன் திருமணத்தன்று ஜீவனுக்கும் ரூபனுக்குமாய் நிகழ்ந்திருந்த உரையாடல், அவனுடைய காதல் குறித்த அலசல், நட்புக்கு கொடி தூக்கியவனாய் தம்பி போர் முரசுக் கொட்ட, காதலில் தவித்தவனாய் அண்ணன் அவனிடம் இறைஞ்ச, உணர்வுப் பூர்வமான அந்த நாளுக்குப் பின்னர் இருவருக்குமே மறுபடியும் அது குறித்துப் பேச வாய்ப்பு கிடைத்து இருக்கவில்லை.

தன்னுடைய 2 வருட அயல்நாட்டு வேலையை முடித்துத் தாயகம் திரும்பிய அன்றிலிருந்து ரூபனுக்கு மூச்சு விடவும் நேரமிருந்ததா? என்பதே இவனுடைய கேள்வியாக இருக்க, அவனின் காதல் குறித்துப் பேச எங்கே நேரம் இருந்தது?

வெறித்தனமான அவனுடைய உழைப்பைப் பார்த்து இவனே கதிகலங்கி இருந்தான். தன்னுடைய படிப்பின் இடைவெளியில் அவ்வப்போது அண்ணனின் தொழிற்சாலைக்குப் போய்ப் பார்வையிடும் போதே ஒவ்வொரு முறையும் ரூபனின் வளர்ச்சி விகிதம் குறித்து ஆச்சரியப்படுவான். டாக்டர் ராஜேஷை வொர்க்கர்ஸ் மாதாந்திர செக் அப்புaக்காக நியமித்தது குறித்து அப்போதே அவனுக்கு முரண்பாடாகத் தோன்றிற்று.

ஏனென்றால் ராஜேஷ் கிறிஸ்ஸுனுடைய நண்பர் குழுவில் உள்ளவன். தீபனுக்கோ, ரூபனுக்கோ அவ்வளவாக அவனோடு நெருக்கம் இருந்தது இல்லை. இவன் எப்படியாக ராஜேஷோடு தொடர்பு கொண்டான்? என்பதே அவனுக்குக் கேள்விக் குறியாக இருந்தது.

அன்று அனிக்காவுடன் ராஜேஷ் பேசிய விதத்தில் தான் இவையெல்லாம் அனிக்காவிற்காக அவன் செய்து கொண்டிருக்கின்றான் என்பது அவனுக்குப் புரிய வருகின்றது. அது மட்டுமன்று, அனிக்கா அறியாமல் அவளை ரூபன் பார்க்கும் பார்வை, அதில் ஜீவனுக்குச் சற்றும் அசூயை காண முடியவில்லை. அதிலும் கடந்த வாரம் நடந்த நிகழ்வு அவனை அசைத்துப் பார்த்துவிட்டது.

அன்று, மூவருமே ஸ்டாக் எல்லாம வைத்திருக்கும் ஸ்டோர் ரூமை பார்வையிட சென்றிருந்தனர். எதிர்பாராத விதமாகத் தடாலென ஒரு இரும்புக் கம்பி மேலிருந்து தவறி விழ, அந்நேரம் ரூபனுக்கு எப்படித்தான் உடனே புரிந்ததோ தெரியவில்லை சட்டென்று தன் முன் நின்ற அனிக்காவை பின்னுக்கு இழுத்திருந்தான்.

“அனிம்மா  என்னும் அவன் கூவலும், அவன் கைகளின் நடுக்கமும், சட்டென்று சிவப்பேறிய விழிகளும், நரம்புகள் புடைக்க உக்கிரமாய்க் கவனக் குறைவாகச் செயல்பட்ட தன்னுடைய தொழிலாளியை அவன் பார்த்த பார்வையும், “அச்சச்சோ நம் தலையில் விழுந்திருக்கும்  என்று மிரண்ட அனிக்கா கூட அந்நிகழ்விலிருந்து விரைவில் வெளி வந்து விட்டாள். ஆனால், ரூபனை சமாதானப் படுத்த தான் வெகு நேரமாயிற்று.

இப்பொழுதெல்லாம் ஒரே அறையை இருவரும் பகிர்ந்துக் கொள்வதால் அவன் வெடுக்கென்று எழுந்து இரவு முழுவதும் தூங்காமல் அதையே சிந்தித்துக் கொண்டிருப்பதை அன்று பார்த்துக் கொண்டிருந்தான். அனிக்காவைப் பற்றிப் பேசினால் தம்பிக்கு பிடிக்காதோ? என்ற எண்ணத்தில் மனதில் இருப்பதை அவனோடு பகிர்ந்து கொள்ள இயலாமல் நடு இரவில் ரூபன் அறையில் நடைப் பயின்றுக் கொண்டிருந்தான். மனது கேட்காமல் இவனாகத் தான் கேட்க வேண்டியதாயிற்று.

என்னாச்சுண்ணா?

என்னவோ மனசுக்கு பயமா இருக்குடா? எதுவும் தப்பா நடக்கப் போகிற மாதிரி மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு? இன்னிக்கு பார்த்தில்ல அந்த ராடு அவ தலையில விழுந்திருந்தா என்ன ஆகியிருக்கும். சிந்திக்கவே பிடிக்காதவனாகக் கண்ணை இறுக்க மூடினான். அவளுக்கு எதுவும்னா என்னால தாங்க முடியாதுடா… இன்னிக்கு காலையிலருந்தே எனக்கு மனசுக்கு ஏதோ தோணிட்டு இருந்துச்சு, பார்த்தா இப்படிப் பயந்தமாதிரியே ஆகிடுச்சு. சரி மனசுக்கு கஷடமா இருந்தது இதுக்காகத் தான் போல எப்படியோ அவளுக்கு ஆபத்தில்லாம காப்பாத்திட்டோமேன்னு மனசை தேத்திக்க முடியலை, இன்னும் எதுவோ பெரிசா ஆகப் போகுதுன்னு உள்ளுக்குள்ள ஒரே கலக்கமா இருக்குடா…

இன்னும் என்னென்னவோ புலம்பினான். காதல் இப்படித்தான் படுத்தும் போல? என எண்ணிக் கொண்ட ஜீவனுக்கு ரூபனை அன்றிரவு சமாதானப் படுத்தித் தூங்க வைப்பதற்க்குள்ளாக போதும் போதுமென்றாயிற்று.

அனிக்காவை அவன் காதலிக்ககூடாது என்கிறதற்காக தன்னிடம் இருக்கும் காரணங்கள் நாளாக நாளாக வலுவிழந்து பிசு பிசுத்துப் போனதாக அவனுக்குத் தோன்றிக் கொண்டிருக்கின்றது. அவளை இவ்வளவு அன்பு செய்கின்ற ஒருவன் தன் தோழிக்கு கணவனாக வர தகுதியானவன் தான் என்று அவன் மனம் ஒப்புக் கொள்ள ஆரம்பித்து விட்டிருந்தது. ஆனால், எந்த விதத்திலும் அவளைச் சம்மதிக்க வைக்க அவன் வலியுறுத்தக் கூடாது என்கிற எண்ணம் மட்டும் தற்போது அவனிடம் உண்டு. அவளாகத் தன் அண்ணனை விரும்பினால் பார்க்கலாம்.

அனிக்கா அவர்களோடு கூட ஒன்றாகச் சேர்ந்து பணி புரிவதாக இருந்த நாள் முதலாக ஜீவனுடைய அதிகப் படியான கவனம் இருந்தும், ரூபனைக் குறித்து அவன் தவறாக எண்ணும் படி ஒன்றுமே நிகழவில்லை. அனிக்கா ஆஃபீஸிற்கு வந்து கொண்டிருக்கும் இந்த ஆறேழு மாதங்களில் ரூபன் அனாவசியமாக அவளிடம் எதையும் பேசியதாகவோ, அவள் மீதான வக்கிரப் பார்வையையோ, வலுக்கட்டாயமான தொடுகையையோ அவன் காணவில்லை.

மதியம் ஒன்றாகச் சேர்ந்து சாப்பிடும் பொழுது மட்டும் அவர்களிடையே விளையாட்டுப் பேச்சுக்கள் கலகலக்கும். பெரும்பாலும் ஜீவன், அனிக்கா சண்டையில் அவன் மூக்கை நுழைக்காமல் அமைதியாகப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருப்பான். அவனை நோக்கி வீசும் கமெண்டுகளுக்கு மட்டும் சளைக்காமல் அனாயாசமாய்ப் பதிலளிப்பான். ரூபனின் பதில்கள் பேசத் தெரியாதவன் போல் இருப்பவன் இவன் தானா? என மற்ற இருவர்கள் வாயடைக்கும் படி இருக்கும்.

 அய்யோடா நீங்க இவ்வளவு பேசுவீங்களா அத்தான்?” என்று ஒவ்வொரு முறையும் அனிக்கா விழிவிரிக்கும் போது ரசனையாய் அவள் முகத்தை வருடி சிரிக்கும் அவன் கண்கள். ஒருவரை ஒருவர் வாரிக் கொண்டு சிரித்துச் சிரித்துக் கடக்கும் அந்த மதிய சாப்பாட்டு நேரம் மூவருக்கும் மிகவும் விருப்பமானது.

ஷைனி புதிய தொழிற்சாலை ஆரம்பித்த முதலிரண்டு மூன்று மாதங்களுக்குத் தொடர்ந்து வந்து அடிக்கடி ரூபனை வேலையில் தொந்தரவு செய்து கொண்டிருக்க, அவனோ அதனைக் கண்டு கொள்ளாமல் இருந்தான். அதைப் பார்த்து ஜீவனும் அனிக்காவுமே மிகவும் கடுப்பாகினர்.

ஓரிரு முறை ஷைனி ரூபனுடன் தனியாகப் பேசிக் கொண்டிருந்தாள். தொழிற்சாலையில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் எண்ணுகின்ற ரூபன் அது ஜீவனோ, இல்லை அனிக்காவோ யாரகவும் இருக்கட்டும் வொர்க்கர்ஸ் கவனம் ஈர்க்கும் விதமாகப் பர்சனலான விஷயங்கள் எப்போதுமே பேசிக் கொள்வது இல்லை… ஆனால், ஷைனியின் தொல்லை மட்டும் அவனளவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தது.

ரூபனுடன் அடிக்கடி ஃபோனிலும் பேசிக் கொண்டிருந்தாள் போலும், போனில் பேசுவது, நேரில் வருவது என்றிருந்த நேரம் ஒரு நாள் தொழிற்சாலைக்கு அவள் வந்தவுடன் ஜீவனிடம் வேலையை ஒப்படைத்தவனாக ஷைனியை காரில் அழைத்துக் கொண்டு எங்கோ சென்றான். பார்த்துக் கொண்டிருந்த இவ்விருவருக்கும் அதன் காரணம் தான் புரியவில்லை.

அப்படி என்னதான் பேசுவாளோ? இப்போது எதுக்கு அவளோடு ரூபன் அத்தான் வெளியே போகணும்? என்று உள்ளூர அனிக்காவிற்குப் பொருமல் எழுந்தது. என்னதான் நடந்து கொண்டிருக்கிறது? என்று தெரிந்து கொள்ள வேண்டுமே என்கிற ஆவல் மனதை அரித்தாலும் அதை அறிந்து கொள்ள வாய்ப்பில்லாது போயிற்று.

வேலை வேலையென்று ஓடுபவனிடம் நீ ஷைனியோடு எங்கே போனாய்? என்ன பேசிக் கொள்ளுவீர்கள்? என்று கேட்பது அபத்தமாக இருக்குமோ என்று தயங்கினாள். அன்று இருவரும் வெளியே சென்றவர்கள் தான் அதற்குப் பின்னே ஷைனி ரூபனை சந்திக்க வரவும் இல்லை. அவள் முன்பு போல ரூபனுக்கு ஃபோன் செய்வது போலத் தோன்றவுமில்லை.

அவளுக்கு அப்படி என்னதான் ஆயிற்று? என்று எண்ணியவளுக்குப் பதில் ஓரிரு மாதங்களுக்குப் பின்னர்க் கிடைத்தது. வழக்கமான மதியச் சாப்பாட்டு அரட்டை நேரம்…

 அண்ணா, நேற்று ஷைனி மேரேஜ் இன்விடேஷன் வந்துச்சு பார்த்தியா?”

 இல்லியே பார்க்கலை, அப்படியா நல்ல விஷயம் தானே  அவன் சொன்ன அதே நேரம்,

 அப்படியா? அதெப்படி  …? ஆச்சரியமாய்க் கேட்டாள் அனிக்கா 

 ஏன் அதில் உனக்கு எதுக்கு இவ்வளவு ஆச்சரியம்?’ கேட்டது ரூபன்.

 உங்க மேல அவங்களுக்கு இன்ரெஸ்ட் இருந்துச்சில்ல…” மனதில் இருந்தது அனிக்காவின் வாயிலிருந்து வந்தே விட்டிருந்தது.

ஜீவனுக்கு அனிக்கா இப்படிக் கேட்டதில் ஆச்சரியமே பிறர் சொந்த விஷயங்களில் அவ்வளவாய் ஆர்வம் காட்டாதவள் ரூபன் விஷயத்தை இவ்வளவாய் கவனித்திருக்கிறாளே? என்கிற ஆச்சரியம்.

பள்ளியில் மற்றவர்கள் குறித்து வம்பு பேசுகிற பெண்களிடம் அளவளாவாமல் அவள் ஒதுங்கி நிற்பதை அவன் கவனித்திருக்கின்றான். எப்போதிருந்து இவள் இப்படி மாறினாள்? நாம் தான் சில நாட்களாக அவளைக் கவனிக்காமல் இருந்து விட்டோமோ?

அவள் கேட்பதற்காகவே காத்திருந்தவன் போல ரூபனும் கடகடவென ஒப்பிக்க ஆரம்பித்தான்.

ஷைனி தானே…எப்பவும் தேவையே இல்லாம என் கிட்டே எதையாவது பேசிட்டு இருப்பா, என்னதான் அண்ணியோட தங்கைனாலும் மற்றவங்க பார்க்க என்கிட்ட நெருக்கமா பேசுறது எனக்கு அவ்வளவா பிடிக்க வில்லை. அமைதியா எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன் கேட்கவில்லை.

….

ஜெண்ட்ஸா இருந்தா எப்படியும் கடுமையா பேசி புரிய வைக்கலாம், லேடீஸ் கிட்ட அப்படிப் பேச முடியுமா? அதுவும் நான் எதையாவது சொல்லி அண்ணிக்கு வருத்தமாகிட்டா பாவம் தீபன் அண்ணனுக்குப் பிரச்சினை ஆகும். அதான் என்ன செய்யறது?ன்னு யோசிச்சிட்டு இருந்தேன்.

கடைசில தீபன் அண்ணாகிட்ட அட்வைஸ் வாங்கித்தான் அன்னிக்கு ஷைனியை வெளியே அழைச்சுக்கிட்டுப் போனேன். எதுக்கு அடிக்கடி ஃபோன் பேசறீங்க? என் கிட்டே எதையோ சொல்ல வர்ற மாதிரி இருக்கு, ஆனா என்னன்னு புரியவில்லைன்னு நேரடியாகவே கேட்டேன்.

….

நான் உங்களை விரும்பறேன், உங்களைத்தான் மேரேஜ் செஞ்சுக்க ஆசைப்படறேன்னு அவச் சொன்னா?

ஜீவனும் அனிக்காவும் இவ்வளவு நடந்திருக்கிறதா? எனும் எண்ணத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

நான் அவளை விரும்பலை அப்படின்னு அமைதியா விளக்கிட்டு இருந்தேன். அப்படியும் அவ நான் சொல்றதை காது கொடுத்துக் கேட்க தயாரில்லை,

அதுக்கென்ன நமக்குக் கல்யாணம் செஞ்சுக்கிற முறை இருக்கு, வீட்டில யாரும் ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. எங்க வீட்டுல எல்லோருக்கும் சம்மதம் தான்னு சொன்னதையே சொல்லிட்டு இருந்தா…

அப்புறம் என்னாச்சு? கேட்ட தம்பி மற்றும் அவனையே கவனித்துக் கொண்டிருந்த அனிக்காவின் கண்களில் தெரிந்த ஆர்வத்தைப் பார்த்து புன்முறுவலோடு தொடர்ந்தான்.

நான் ஏற்கெனவே ஒரு பொண்ணைக் காதலிக்கிறேன். அவளைத் தான் கட்டிக்கப் போறேன்னு சொன்னதும் தான் அந்தப் பேச்சையே விட்டாள் என்று முடித்தான்.

ஜீவனின் பார்வை தன் தோழியை நோக்கி இருந்தது. அவள் எப்படி உணர்கிறாள் என்று பார்த்துக் கொண்டிருந்தான். அவனே எதிர்பாராத வண்ணம் ரூபனின் பேச்சைக் கேட்டு சட்டென்று திகைத்தாள் அனிக்கா.

ரூபன் யாரைக் காதலிக்கிறானாம்? கேட்டு விடலாமா என எண்ணியவளை ரூபனுக்கு வந்த தொலைபேசி அழைப்புத் தடைச் செய்தது. ஏற்கெனவே சாப்பிட்டு முடித்து இருந்ததால் போனில் பேசியவாறே ரூபன் எழுந்து சென்றிருந்தான்.

இவையெல்லாம் மனதிற்குள்ளாக ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்த ஜீவனுக்கு அனிக்காவிற்கும் ரூபனை பிடித்திருக்குமோ? என்கின்ற எண்ணம் சில நாட்களாக எழுந்து வருகின்றது. ஒருவேளை ரூபனை அனிக்கா விரும்பினாலும், அது அவளுக்கே புரிந்திருக்கின்றதா? இல்லையா? என்பது தான் இவனுடைய தற்போதைய சந்தேகம்.

அப்படி இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினால், தானும் தன் அண்ணனுக்கு எல்லா விதத்திலும் அவன் காதல் வெற்றிப் பெற உதவ வேண்டும் என்று மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டான்.

ரூபனுடைய புதிய தொழிற்சாலை ஆரம்பித்ததன் பின்னர் ஒரு வருடம் கழித்துத்தான் ராஜ் லீவிற்குத் தாயகம் வந்திருந்தார், இந்த முறை லீவு கிடைப்பது அவருக்குத் தாமதமாகி விட்டிருந்தது. மகனுடைய வளர்ச்சிகளைப் போட்டோவிலும், வீடியோவிலும் பார்த்துக் கொண்டிருந்தவர் நேரில் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

அதிலும் ஜீவனும் அனிக்காவும் அவனுக்குத் துணை நிற்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

சாரா இன்னும் தான் சொன்ன விஷயத்தைத் தாமஸ் காதில் போடவேயில்லை என்று அறியாதவராக இந்திரா இருந்தாலும், ரூபனும் அடுத்த வருடம் தான் திருமணம் செய்துக் கொள்வதாக கூறி இருந்ததால் அதுதான் காலம் இருக்கின்றதே என சாராவை அவர் மீண்டும் வலியுறுத்தவில்லை.

அதற்கு ‘என் மகனுக்கு அவர் மகளைக் கொடுக்காமலா இருந்து விடப் போகிறார்’ என்கிற அதீத நம்பிக்கை ஒரு காரணம். மகனின் கண் வழியே விருப்பம் அறிந்து அவனுக்கு விருப்பமான பெண்ணின் தாயிடம் நேரில் பேசி வந்தவர் இன்னமும் மகனிடமும் அவன் மனதிலுள்ளவற்றை உட்கார்ந்து பேசியிருந்திருக்கவில்லையே?

வாழ்க்கை என்பதைப் பலரும் ஓட்டப் பந்தயமாக எண்ணுவதே பல பிரச்சினைகளுக்குக் காரணம். மனம் விட்டுப் பேசுவது பல குடும்பங்களில் காணப்படுவதே இல்லை. அப்புறம் பார்த்துக்கலாம் என்கிற மனநிலையில் பற்பல நேரங்களில் உறவுகளும், பலர் உணர்வுகளும் காயப்பட்டுப் போகின்றன.

இந்திராவிற்கு தன்னுடன் இன்னும் தன்னுடைய மற்ற பிள்ளைகளைப் போல மனம் விட்டு பேசியறியாத மகனை உட்கார வைத்து பேசுவது பெரியதொரு விஷயம் தான். தீபன் மூலமாகவே அவனிடமிருந்து பதிலை வாங்குவது வழக்கமாயிற்று. இன்னும் ஒரு வருடம் கழித்துத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று அவன் கூறியதை தீபன் தான் தாயிடம் வந்து சொல்லி இருந்தான்.

என்னதான் மகனிடம் அவனுடைய திருமணம், விருப்பம் குறித்து நேரடியாக இந்திரா பேசியிராவிட்டாலும் கணவரிடம் தங்கள் மகனுடைய விருப்பத்தைச் சுட்டிக் காட்ட அவர் மறக்கவில்லை.

மனைவி மூலமாக அனிக்காவை ரூபன் விரும்புவதை அறிந்து கொண்ட ராஜ், தன்னுடைய தங்கை மகள் தன் வீட்டிற்கு மருமகளாக வரப் போவது குறித்து எண்ணி மிகவும் மகிழ்ந்தார். மனைவி கூறியதைப் போல மகன் அவனாக வந்து தன்னுடைய விருப்பத்தைக் கூறும் வரை காத்திருப்போம் என்று எண்ணினார்.

அன்றைய ஞாயிறு அண்ணன் வருகையை ஒட்டி சாரா தன் குடும்பத்தோடு ராஜ் வீட்டிற்கு வந்திருந்தார். வழக்கம் போல மதிய விருந்திற்குப் பிறகு ஹாலில் அனைவரும் ஒன்று கூட, அங்கே பேச்சுக் களைக் கட்டியது. கலகலப்பான உரையாடலில் சாப்பாட்டிற்குப் பின்னர் வேலை இருப்பதாகச் சொல்லி கழன்று கொண்ட தாமஸ், கிறிஸ்ஸை தவிர அனைவரும் இருந்தனர்.

மற்றெல்லோரும் நாற்காலிகளிலும் சோஃபாவிலும் அமர்ந்திருக்க வீட்டின் 3 சின்னவர்கள் மட்டும் தரையில் வெகு மும்முரமாய் விளையாட்டு சாமான்களோடு இருந்தனர். அது வேறு யாருமில்லை. அனிக்காவும், தீபன் மகன் ராபினும், கிறிஸ் மகள் ஹனியும் தான்.

தன் கால் மேல் சாய்ந்து கொண்டு கதைப் பேசிக்கொண்டு அதே நேரம் விளையாடிக் கொண்டு இருந்த அனிக்காவின் தலையை வருடிய ராஜ் ஏதோ ஞாபகம் வந்தவராக,

 இந்திரா பாப்பாக்குச் சாக்லேட் பாக்ஸ் இன்னும் கொடுக்கலைப் பாரு, கொண்டு வர்றியா?” என்றார்.

இந்திராக் கையிலிருந்த சாக்லேட் பாக்ஸைப் பார்த்த அனிக்கா உட்கார்ந்த இடத்திலேயே உற்சாகமாய்க் குதித்தாள்.

நாம இதைச் சாப்பிடுவோமா? என்று சின்னவர்களிடம் கேட்டவள் சாக்லேட் பாக்ஸை திறப்பதில் கவனமாயிருக்கப் பெரியவர்கள் பேச்சு நாட்டு நிலவரம் நோக்கி பழையபடி திரும்பியது.

ராபின் தன்னை நோக்கி வருவதைப் பார்த்து அவனுக்குச் சாக்லேட் கொடுக்க வேண்டி இன்னும் மும்முரமாகப் பாக்ஸை திறப்பதில் அவள் கவனத்தைப் பதிக்க, அவளருகில் வந்தவனோ அவள் மடியில் ஏறி அவளுடைய கன்னத்தைப் பலமாய்க் கடித்து வைத்தான். தனக்குச் சாக்லேட் தராமல் அவன் அப்பம்மா அனிக்காவிற்குச் சாக்லேட் கொடுத்த கடுப்பில் இருந்தான் போலும். அனிக்காவின் அலறலைக் கேட்டு ஸ்தம்பித்தவர்கள் என்ன சொல்வது எனத் திகைக்க, ஜீவன் ராபினைத் தூக்கிக் கொண்டு முத்தம் வைத்தான்.

அண்ணன் மகனின் செயலில், “இப்படித்தான் கடிக்கணும் குட் பாய்  அனிக்காவை சீண்டும் விதமாக ஹா ஹாவென அவன் சிரித்து வைக்க மற்றவர்களும் அவன் சிரிப்பில் இணைந்துக் கொண்டனர்.

போடா ஜீவா என அவனை முறைத்தவள்,

 இங்கே பாரு ஹனி குட்டி அத்தைய ராபின் இப்படிக் கடிச்சு வச்சிருக்கான் பாரு  என்று அண்ணன் மகளிடம் புலம்ப அவளோ ஏற்கெனவே அனிக்கா மடியிலிருந்த சாக்லேட் பாக்ஸை எடுத்துக் கொண்டு போய்ப் பிரபாவிடம் கொடுத்து அம்மா மடியில் நல்ல பிள்ளையாக அமர்ந்திருந்தாள். அதைப் பார்த்து மறுபடியும் அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

 ஒரு சாக்லேட் பாக்ஸுக்காக என்னை ரெண்டு பேரும் சீட் பண்ணிட்டீங்கள்ள? உங்க கூட இனிமே விளையாட மாட்டேன் போங்க என்றவளை விடாமல் ஜீவன் சீண்டிக் கொண்டிருந்தான். தன்னைக் காமெடி பீஸாக்கிய பொடிசுகளை வெகு நேரம் அவள் முறைத்தாள்.

அவள் முகபாவங்களை வெகுவாக ரசித்துக் கொண்டிருந்தான் ரூபன், சின்னப் பிள்ளைங்க கூட உஷாராகிடுச்சுங்க, ஆனா இவ தான் இப்படி இருக்கிறாளே? என்று எண்ணினான்…

என்னதான் சித்தப்பா கொஞ்சினாலும் சிறிது நேரத்தில் ராபின் அனிக்காவிடம் வந்து சேர கூடவே ஹனியும் சேர்ந்து கொள்ள ஒன்றுமே நிகழாதது போல அவர்கள் மறுபடியும் விளையாட ஆரம்பித்தார்கள். அவர்களது அன்றைய நாள் மிக இனிமையாக நிறைவு பெற்றது.

கிறிஸ்மஸ்ஸிற்கான தயாரிப்புக்கள் நவம்பரிலேயே ஆரம்பித்து விட்டிருந்தன. ராஜ் ஏற்கெனவே லீவு முடிந்து திரும்பச் சென்றிருந்தார், இனிமேல் பணி ஓய்வு எடுத்துவிட்டே திரும்ப விரைவில் வருவதாகக் கூறியிருந்தார். இந்திரா கணவனின் அந்நாளைக்காகக் காத்திருந்தார்.

தொழிற்சாலை ஊழியர்களுக்குக் கிறிஸ்மஸ்ஸில் பரிசுகள் கொடுத்தாலென்ன? இன்னும் என்னவெல்லாம் புதுமையாகச் செய்யலாம் என்று அனிக்கா பல்வேறு கருத்துக்கள் சொல்ல, அதுவரை தன் ஊழியர்களுக்கு லீவு மட்டுமே கொடுத்து வந்த ரூபனும் அவள் கருத்தை ஏற்றுக் கொண்டான்.

ஏற்றுமதியாளர்களுக்கான சந்திப்பு ஒன்று அவர்கள் பகுதியிலேயே ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. பல்வேறு பகுதிகளிலுமிருந்து எக்ஸ்போர்ட் செய்யும் தொழிற்சாலை உரிமையாளர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வாக அது இருந்தது. வருடா வருடம் தவறாமல் அதில் கலந்து கொள்ளும் ரூபன், அங்குச் சென்றால் பல விஷயங்களை கற்றுக் கொள்ளலாம் என்று தன்னுடன் வரும்படி ஜீவனை அழைத்து இருந்தான்.

ஆனால், அன்று தொழிற்சாலையில் முக்கியமான ஆர்டர் ஒன்றின் வேலை நடைப் பெற்றுக் கொண்டிருக்க ஜீவன் அவனோடு வர மறுத்து விட்டான். அவனுக்குப் பதிலாக அனிக்கா அவனுடன் வந்திருந்தாள். அவளுக்கு அந்தத் துறை மிகவும் சுவாரசியமாகத் தோன்றியது. மேலும் ஏற்றுமதியாளர்களின் சந்திக்கப் போகும் நிகழ்வு தமக்குப் பற்பல விஷயங்கள் அறிந்து கொள்ள உதவும் வாய்ப்பாக அமையும் என்று எண்ணினாள். தவறாமல் வீட்டில் போன் செய்து அன்னையிடம் அனுமதி கேட்கவும் அவள் மறக்கவில்லை.

முதன்முறையாகத் தன் மனம் கவர்ந்தவளுடன் தனியே வெளியே செல்லும் உணர்வில் ரூபனின் உணர்வுகள் தித்தித்திருந்தன. வழி நெடுக வளவளவெண்றுப் பேசிக் கொண்டிருந்தவளை ரசித்துக் கொண்டே வந்தான். அதிலும் கூடுதல் போனஸாக…

“நாம் செல்லும் இந்த மீட்டிங்க் முடிந்ததும் தனக்கு ஷாப்பிங்க் செல்ல வேண்டியிருக்கிறது, என்னை அழைத்துச் செல்வீர்களா அத்தான்? என்று அவள் கேட்டதும் வானில் பறக்காத குறைதான். அவன் முகத்தில் பளீரென ஒரு வெளிச்சம் அன்றைக்கு முழுவதிலுமே பரவி இருந்தது.

அவனுடைய அதீத முகமலர்ச்சி காரணமாக இரண்டு கண்கள் அவன் மீது கவனம் செலுத்த வைத்ததையும், வன்மமாய் முறைத்ததையும் அவன் அறிந்திருக்கவில்லை.

வேண்டா வெறுப்பாக அன்றைய மீட்டிங்க்கில் வந்திருந்த அவனுடைய பார்வை ரூபனைத் தொட்டு தொடர, ரூபனின் பார்வையோ அடிக்கடி பட்டும் படாமல் தன் அருகில் இருந்த அனிக்காவைத் தொட்டு தொட்டுச் சென்றதை கவனித்தான். இப்போது அனிக்காவும் முழுவதுமாய் அவன் பார்வையில் வந்து விழுந்தாள்.

ஓஹோ இவள்தான் இவன் மகிழ்ச்சிக்கு காரணமா? என்னைப் பொறுத்த வரையில் இவன் வாழ்க்கையில் சந்தோஷமாய் இருக்கக் கூடாதே? அதை என்னால் பொறுக்க இயலாதே? என்றெண்ணியவன் அவர்களை முழுமையாகக் கவனிக்க ஆரம்பித்தான். நிகழ்ச்சிகள் நிறைவுற்று அவர்கள் ஷாப்பிங்கிற்காக மாலிற்குப் பயணிக்க அவர்கள் செல்லுமிடமெல்லாம் அவனுடைய விலையுயர்ந்த கார் அவர்களைப் பின்தொடர்ந்தது.

மாலில் இருந்து சிரித்துக் கொண்டே திரும்பி காரில் ஏறி பயணித்த இருவரின் முகமலர்ச்சியைப் பார்த்து இவன் பற்களை நறு நறுவெனக் கடிக்க மேல் நாடியின் அவனின் நான்கு போலிப் பற்களும் சட்டென்று வெளிப்பட்டதாலோ என்னமோ அவனுடைய முகம் வெகு விகாரமாய் தோன்றலாயிற்று.

உன்னருகே நானிருந்தால்

என் பொழுதுகள் அழகாகும்…

உன் மொழி எப்போதும் கேட்டிருந்தால்

என் உள்ளமெல்லாம் உவகைப் பெறும்…

நீ எந்தன் அருகில் வந்து

இதழ் விரிய புன்னகைத்தால்

கண்கள் கொள்ளா அவ்வழகோ – என் மனதில்

படக் காட்சியெனப் பதிந்து விடும்…

காலமெல்லாம் அருகிருக்க

மாலையிட்டுச் சொந்தம் கொள்ள

சம்மதமாய் உன் வருகையை

எதிர்பார்த்திருப்பேன்.

நீ எந்தன் வாழ்வில் வரும்

அந்நன்னாளுக்காய்க் காத்திருப்பேன்.தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here