17. அமிழ்தினும் இனியவள் அவள்

0
522
Amizhthinum Iniyaval Aval

அத்தியாயம் 17

ரூபனையும், அனிக்காவையும் பின்தொடர்ந்தவன் உடனே அவர்களுடைய தகவல்களைச் சேகரிக்க எண்ணியவனாகத் தான் எடுத்த அவர்களின் புகைப்படங்களையும், ரூபனின் கார் நம்பரையும் தான் பிரத்யேகமாக அணுகும் டிடெக்டிவ் ஏஜென்சிக்கு அனுப்பி வைத்தான்.

டிடெக்டிவ் ஏஜென்சியிலிருந்து ரூபனைக் குறித்த முழுமையான தகவல்கள் வந்து சேர நான்கைந்து நாட்களாவது ஆகக் கூடும். அது வரையிலும் கூட அவர்களைப் பின்தொடராமல் அவனால் இருக்க முடியவில்லை. தான் முற்றிலும் அழித்து விட்டதாக எண்ணிய ஒருவன், இனிமேல் தலை நிமிரவே முடியாது என்று எண்ணுகிறபடிக்கு முழுமையாய் மனதை ஒடித்துப் போட்ட ஒருவன் எப்படி இவ்வளவு மேலெழுந்திருக்க முடியும்? தீவிரமாய் யோசிக்க, யோசிக்க மறுபடியும் ஆத்திரத்தில் நெறிந்தன அவன் பற்கள். ரூபனால் சிதைக்கப்பட்ட நான்கு பற்களின் மாற்றுகளும் அவற்றுள் அடக்கம்.

அவன் பெயர் ஆதித்யன், ஆதித்யன் க்ரூப் ஒஃப் கம்பெனீஸின் இளைய தலைமுறை வாரிசுகளில் ஒன்றாகிய விக்ரமாதித்யன். தலைமுறை தலைமுறையாக இருக்கும் பணக்காரக் குடும்பத்தின் வாரிசுகளில் ஒருவன். பணப்பற்றாக்குறையோ, வறுமை தட்டுப்பாடு என்றோ வாழ்வில் ஒருபோதும் அணுவளவும் அறிந்திராதவன்.

எண்ணிக்கையிலடங்கா தொழில்கள் குடும்பத்தின் கைவசம் இருக்க அதைத் திறம்படச் செய்து பணத்தைப் பெருக்கும் அவனை விடப் பெரியவர்களும் இருப்பதனால் உழைக்க வேண்டும், திட்டமிட்டு செயல்பட்டே ஆக வேண்டும் என்கிற வரையறைகளுக்கு ஒருபோதும் உட்படாதவன் அவன். உழைத்தாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லாததால் செலவழிப்பதற்கு எத்தனை ஆகுமோ அத்தனை வழிகளையும் அறிந்திருப்பதுவும், அவற்றைச் செயல்படுத்துவதுவும் தான் அவனுடைய தற்போதைய உழைப்பு என்றே கூறலாம்.

தன்னுடைய அண்ணன் கலந்து கொள்ள வேண்டிய ஏற்றுமதியாளர் சந்திப்பிற்கு அவனுக்கு வேறு வேலை வந்து விடவே விக்ரமை அனுப்பி வைத்திருந்தனர். வேண்டா வெறுப்பாக அவனும் வந்து பார்வையை இங்கும் அங்குமாகச் சுழற்றிக் கொண்டு அமர்ந்திருக்க அப்போதுதான் அவன் கண்ணில் பட்டான் முன் வரிசையில் அமர்ந்திருந்த ரூபன்.

தன் பகையைப் பாதியில் விடாதாம் பாம்பு, அது போல ரூபனைக் கண்டதிலிருந்து விக்ரம் மறுபடியும் சீற்றம் காட்டிக் கொண்டு இருந்தான். தான் கலந்துக் கொள்ளுகின்ற அதே மீட்டிங்க்கில் அவனும் சமதையாய் கலந்துக் கொள்ளுகின்றானென்றால்… மறுபடியும் நறு நறுவெனக் கடிப்பட்டன அவன் பற்கள்.

அவன் எனக்குச் சமதையா? பி …………… ர நாய். வக்கிரமாய் மொழிந்தது அவன் குரல். இதற்காகத் தானே அவனை நான் ஓட ஓட விரட்டினேன். அவனிடம் வேறு யாரையும் நட்பு கொள்ளாமல் விலக்கி வைத்தேன். முறிய முறிய மீண்டும் வளர விடாமல் அவன் சிறகுகளை ஒடித்து வைத்தேன். அப்படியிருந்தும் அவன் எழுந்து விட்டானா?

அவனது 6ம் வகுப்பு நிகழ்வு கண்முன் நிழலாடியது. வருடாந்திர சிறந்த மாணாக்கருக்கான பரிசுகள் வழங்கும் விழா. ஏற்கெனவே ரூபனை தன்னுடைய பணக்காரத் திமிரில் தீண்டத்தகாதவன் போல அவன் ஒதுக்கியே வைத்திருந்தாலும் அன்றைய தினத்திலின்று ரூபன் மேலுமாய் விக்ரமின் கண்ணில் தூசியாய், உறுத்தலாய் ரூபன் மாறியிருந்தான்.

வழக்கம் போல அந்த வருடமும் விக்ரம் ஒவ்வொரு பாடத்திலும் பார்டரில் பாஸாகியிருந்தான். அப்படி இருந்த போதிலும் அவனை விட்டுக் கொடுக்காத அன்பான தாயும் தகப்பனும் கிடைத்திருக்க அவன் பெரும் பேறு பெற்றவன் தான்.

ஆனுவல் டே வரிசையாகப் பரிசுகள் அறிவிக்கப் பட மெரும்பாலானவைகளில் ரூபன் முதன்மை நிலையில் இருந்தான். அரங்கமே கைதட்டல்களால் ஆரவாரித்தது. பரிசுகள் பெற்றவன் முகத்திலோ சலனமே இல்லை. வீட்டிலிருந்து தான் பரிசுகள் பெறுவதைக் காண, தன்னைத் தட்டிக் கொடுத்துப் பாராட்ட ஒருவரும் வராமலிருக்க எங்கிருந்து தான் வருமாம் அவன் முகத்தில் மகிழ்ச்சி?!

அதுவரையிலும் கூட விக்ரமின் உள்ளத்தில் அவன் குறித்த துவேஷமில்லை. தன்னுடைய அப்பா அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தது அந்தக் கரகோஷத்திற்கிடையிலும் அவன் காதில் விழுந்தது தான் விஷமாய்ப் போயிற்று.

 பார்த்தியா மீனு இந்தப் பையன் இங்கே சேர்ந்த ஒரு வருஷம் தான் ஆகுது. அதுக்குள்ள எவ்வளவு நல்லா படிக்கிறான். நாமளும் தான் ஆசைப் படறோம்… ம்ஹீம்… என்னும் இருவரின் பெருமூச்சு இவனை நெருப்பு தனலாய் சுட்டது. அவ்வளவு சிறியவனின் உள்ளத்தில் இத்தனை வன்மம் இருக்கும் என்பதை அவன் பெற்றோரே அறிவார்களோ என்னவோ? அதன் பின் அவன் ரூபனை வருத்த வேண்டுமென்றே செய்த செயல்கள் எண்ணிலடங்காதவை.

தானாக அவன் முன் எதிரியாக ஒருபோதும் நில்லாமல், பிறரை தூண்டிவிட்டு அவர்கள் மூலமாக அவன் தன்மானத்தைக் குதறிக் கொண்டு இருந்தான். ஒவ்வொரு முறையும் எதிர்க்கவும் இயலாமல், கேட்ட வார்த்தைகள் அனைத்து வன்மையாய் மனதைக் குதறிப் போட செயலறியாமல் திகைக்கும் அவன் சுருங்கிப் போன முகத்தைப் பார்ப்பதே விக்ரமுக்கு தனி இன்பம் கொடுக்கும்.

யாருமற்றவனாய், நிராயுதபாணியாக அவனைப் பார்த்து பார்த்து மகிழ்ந்திருக்க, அவனைக் கடைசி முறையாகக் கல்லூரி இரண்டாம் வருட பரீட்சை எழுதுவதற்காக வந்தபோது இன்னுமாய் அவனைப் பேசி கூனி குறுகச் செய்து இருக்க அவன் இத்தனை வருடங்களில் மனநிலை பிறழ்ந்தவனாகவோ? இல்லை வேலை வெட்டி செய்யாமல் வாழ்வை வீணடித்தவனாகவோ பார்த்திருந்தால் அவன் ஒருவேளை மகிழ்ந்திருப்பானோ? என்னமோ? ஆனால், தன்னுடைய 4 பற்களை உடைத்தவன், தன் முக அழகை சீர்குலைத்து பிறர் முன் கேலிப் பொருளாக மாற்றியவன் மகிழ்வாக இருப்பதா? அதனால் தான் கண்ட அவமானங்கள் எத்தனை எத்தனை?

அன்றைய எதிர்பாராத நிகழ்வில் தன்னுடைய பற்களை இழந்திருக்க, என் மேல் கை தூக்கும் அளவிற்கு அவனுக்குத் தைரியமா? என்று உள்ளம் ஒரு புறம் பொருமினாலும் அவன் தன்னிடம் வந்து மன்னிப்பு கேட்க போகிறான். அதைக் குறித்து மேலும் பேசி பேசி அவனை அணு அணுவாய் நோகடிக்கலாமென்று இறுமாந்திருந்தான். அதற்கு வழிவைக்காமல் அவனை ஹாஸ்டலிலிருந்து நீக்கி விட்டதாகத் தகவல் வர அவன் மிகவும் ஏமாந்து போயிருந்தான்.

தன்னுடைய பணத்திற்காகத் தன் முன்னே கூழைக் கும்பிடு போடும் நண்பர்களும் கூட அவன் முதுகிற்குப் பின்னால் அவன் பல் இழந்தக் கதையை நக்கலாகப் பேசி வருவது அவனுக்குத் தெரியாததா என்ன? ஏற்கெனவே விஷமான மனது இன்னுமாய் விஷமேறிப் போயிற்று.

விக்ரம் என்னும் விக்ரமாதித்தனைக் குறித்து மேலும் அறிந்து கொள்ள வேண்டுமென்றால், மனிதனின் அழகை உருவத்தின் நிறத்தாலும், தோற்றத்தாலும் அளவிடுவதாக இருந்தால் அவனோ பேரழகன் வரிசையில் முதலிரண்டு எண்களுக்குள்ளாவது வந்து விடுவான். அதே நேரம் ஆணவத்தில், அகம்பாவத்தில், தன்னகங்காரத்தில் மிகுந்தவன். ஒரு காரியம் ஆக வேண்டுமென்றால் அதுவரைக்கும் யாரிடம் எப்படி நுணுக்கமாக நடந்து கொள்ள வேண்டும் என்கிற சூட்சுமம் அறிந்தவன். நேரத்திற்கேற்ப மாறுவதில் பச்சோந்தியையும், இனிமையாகப் பேசிக் கவிழ்ப்பதில் சகுனியையும் மிஞ்சிடும் வல்லமை படைத்தவன்.

பள்ளிக் காலம் முதல் தான் பட்ட துன்பத்திற்க்கு யார் காரணம்? தன்னுடைய உண்மையான எதிரி யாரென்றே அறிந்திராத ரூபன் இவனிடம் மறுபடி அகப்பட்டு வீழ்வானா? இல்லை அவனை வெல்வானா? என்பதைப் பார்ப்போமா.


சின்னஞ்சிறியவர்கள் பிக்னிக் புறப்படும் போது இருக்கும் குதூகலம் தான் அங்கே இருந்தது. ஸ்கூல் ரீயூனியன் என்று வருடா வருடம் நடக்கும் சந்திப்புக்கள் தான் அந்த வருடம் பிக்னிக்காக மாறி இருந்தது. தீபன் தான் இந்த வருடம் வர முடியாது என்று கூறியிருந்தான். சந்திப்புக்கள் என்றால் பரவாயில்லை, லீவு நாளன்றுமாய் மனைவி பிள்ளையுடன் நேரம் செலவழிக்காமல் முழு நாளைக்கான பிக்னிக் என்னும் போது அவனுக்கு வர விருப்பமில்லை. அவன் மட்டுமல்லாமல் கிறிஸ் மற்றும் அவர்களது வயதினர் பெரும்பாலும் பிக்னிகில் கலந்து கொள்ள விரும்பவில்லை.

வழக்கமாகப் பள்ளி தோழமைகளோடான அந்தச் சந்திப்புக்களைத் தவற விடாத ஜீவன், அனிக்காவோடு இம்முறை ரூபனும் பிக்னிக்கிற்கு செல்லவிருந்தான். தனக்கு அந்தக் குழுவில் அதிக நண்பர்கள் கிடையாது என்பதனால் தான் வர முடியாது என்று எப்போதும் வரமறுக்கும் ரூபனை அனிக்கா அதட்டி மிரட்டி ஒரு வழியாக வர சம்மதிக்க வைத்திருந்தாள்.

“இப்படியே வேலை வேலைன்னு இருந்தீங்கன்னா ஒரு நாளில்லை ஒரு நாள் நீங்க ரோபோட்டா மாறிடுவீங்க அத்தான்” என்று முறைத்தே அவனைச் சரிக்கட்டினாள்.

தற்போது ஜீவனுடன் தான் மனம் விட்டுப் பேச ஆரம்பித்திருக்க, அவனும் தன்னுடைய காதல் விஷயத்தில் முன்பு போல முந்திரிக் கொட்டைத் தனமாக இடக்கு மடக்காகப் பதில் பேசாமல் செவி கொடுத்து கேட்க ஆரம்பித்ததிலிருந்து ரூபனுக்கு மனது இலேசான உணர்வு.

பல மாதங்களாகத் தான் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கும் லவ் ப்ரபோசலை தொழிற்சாலை சத்தத்தின் பிண்ணனியில் இல்லாமல் இந்தப் பிக்னிக்கிலேயே கடற்கரை பின்னணியில், கடலலைகள் காவியமாய்க் கவி பாட, சூரியனின் மென்மையான கிரகணங்களின் ஒளிச் சிதறலின் முன் நின்று, ஒளி மிக்க அவள் கண்களோடு தன்னுடைய கண்களைச் சேர்த்து தான் ஆண்டுகள் பலவாகச் சேர்த்திருக்கும் அவள் மீதான காதலை அவள் உள்ளம் உணரும் படி உரைக்க வேண்டுமென்கிற மகா மெகா ஆவலோடு கனவினில் மிதந்துக் கொண்டிருந்தவனை….

 வா அண்ணா பஸ் வந்திடுச்சாம்  என்று உலுக்கிய ஜீவனின் கரங்களும் குரலும் கலைத்தது.

அட இரவு கடந்து அதிகாலை வரும் வரைக்கும் நான் கற்பனையிலேயே ஆழ்ந்து விட்டேன் போலும்? வெட்கமாய்த் தலைக் கோதி பிக்னிக் பேகைச் சுமந்தவனாய் வீட்டின் வாயிலைக் கடந்தான் ரூபன்.

எத்தனை கற்பனைகள் – என்னுள்ளத்தில்

எத்தனை கற்பனைகள்

அத்தனையிலும் நீ – கண்ணம்மா

ஆருயிராய் நீ

எந்தன்

தோள் சாய்ந்தவளாய்

சில நேரம்

என் மார்பில்

முகம் புதைத்தவளாய்

சில நேரம்.

செல்லக் கோபம்

கொண்டவளாய்

சில நேரம்

என் உள்ளம் உவந்திட – என்னைச்

செல்லம் கொஞ்சுபவளாய்

பற்பல நேரம்

கற்பனைகள் நனவாகிடக் கண்டேன்.

நன்மைகளும் எனைச் சேரக் கண்டேன்

செல்வம், புகழ் தரும் போதை

சுகம் எனக்கேனென்பேன்
**என் நலனே உனைச் சார்ந்தது தானே**

கண்ணம்மா…

நீ என்னோடிருப்பதை விட

நலனேதென்பேன்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here