18. அமிழ்தினும் இனியவள் அவள்

0
592
Amizhthinum Iniyaval Aval

**அத்தியாயம் 18**

அந்த அதிகாலை 4 மணிக்கே பிக்னிக் செல்லும் பஸ் கலகலவென்றிருந்தது. அனைவரும் ஆண் பெண் பேதமில்லாமல் அருகருகே அமர்ந்து வளவளவெனப் பேசிக் கொண்டிருந்தனர். பள்ளியில் படிக்கும் போது செய்த சின்னச் சின்னக் குறும்புகள் எல்லாம் வெடிச்சிரிப்புகளாக அங்கே அரங்கேறின. அப்போது மிகப் பெரிய பிரச்சனைகளாகத் தாம் எடுத்துக் கொண்டவை எல்லாம் இப்போது பொருளற்றதாக, அபத்தமாக, நகைச்சுவையாகத் தோன்றிற்று.

அக்கூட்டத்தில் ரூபனுக்குத் தெரிந்தவர்கள் மிகச் சிலரே. ரூபனின் ஒரே நெருங்கிய நன்பனான அசோக்கிற்குச் சமீபத்தில் திருமணம் முடிந்திருந்ததால் தேனிலவுக்குச் சென்று அவன் திரும்பி இருக்கவில்லை. அதனால் ரூபனுக்கு நெருங்கியவர்கள் அக்கூட்டத்தில் குறைவாகவே இருந்தனர். என்னதான் தன்னுடைய வேலையில் பல சிறப்புகளை எட்டியவனாக இருந்தாலும் எல்லோரிடமும் ஒரு சில வார்த்தைகள் பேசுவது தவிர அவனால் கலகலவென்று அக்கூட்டத்தில் ஒன்ற முடியவில்லை.

அதிலும் அங்கிருந்தது ஜீவன், அனிக்கா வகுப்பிற்க்கு முந்திய பிந்திய வகுப்புக்களின் கலவையான கூட்டம். ஜீவன் ஏற்கெனவே தன்னுடைய கூட்டத்தோடு ஒன்ற ஆரம்பித்து விட்டான். அதிகாலை சூர்யோதயம் கடற்கரையில் சென்று பார்க்க போவது அவர்களுக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. தம்பி தன் நண்பர்களோடு உரையாடட்டும், தான் தனியாக எங்கேயாவது போய் அமரலாமா? என்றெண்ணும் போதே கூட அனிக்கா எங்கே இருக்கிறாள் என்று அவன் கண்கள் அவளைத் தேடின.

ஜீவன் இருக்கும் இடத்தில் தான் அவளும் இருப்பாள் என்கின்ற அவனுடைய கணக்கு தப்பவில்லை. பஸ்ஸில் இருவர் அமரும் சீட்டில் ஜன்னல் பக்கத்தைப் பிடித்துக் கொண்டு அவள் அமர்ந்திருந்தாள். இந்த அதிகாலையிலும் பிக்னிக் என்றதும் கேசுவலில் ஜீன்ஸ் டி ஷர்ட்டில் மிக அழகாய் புறப்பட்டு ஃப்ரெஷ் ஆக அவள் வந்திருப்பதைப் பார்த்து அவனுக்குப் புன்னகை மலர்ந்தது. பக்கத்தில் இருந்த பெண்ணிடம் அவள் மூச்சு விடாமல் பேசி அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள்.

பஸ் அங்கிருந்து புறப்படப் போகிறது என்றதும், அருகே வந்த ஜீவன் “இங்கே வாண்ணா, உக்காரு என்று அவனை அனிக்கா இருந்த சீட்டின் எதிர்புறம் இருந்த 3 இருக்கைகள் நடுவில் அமரவைத்தான். ஏற்கெனவே ஜன்னல் சீட்டை ஆக்கிரமித்து இருந்த ஒருவன் தான் இருந்த வாக்கில் அப்படியே பின்னே திரும்பி பின் சீட்டில் இருந்தவர்களோடு கதையளந்து கொண்டிருந்தான்.

பஸ் புறப்பட்டுச் சற்று நேரமாகியும் ஜீவனுக்கு ரூபன் உட்கார்ந்திருந்த விதம் சரியாகப் படவில்லை. ஏதோ முள்ளின் மேலிருந்தது போல உட்கார்ந்திருந்தான். ஏனென்று காரணம் தெரிந்து கொள்ளப் பிறர் கேட்கா வண்ணம் அமைதியாகக் கேட்டான்.

 என்னாச்சு?”

கேட்ட விதத்தில் என்னவோ அவன் தான் ரூபனுக்கு அண்ணன் போல இருந்தது. வெகு நேரம் தயங்கியவன் கூறியே விட்டான்.

 எனக்கு அனி பக்கத்தில உட்காரணும்டா 

எதுக்கு? மிரட்டலாக வந்தது குரல்…

 எதுக்குன்னா? அவக்கிட்ட இன்னிக்கு பேசணும் 

 பேசணுமா? அது தான் தினம் அலுவலகத்தில் தான் பேசுகிறோம் இல்லை, இப்ப எதுக்குத் தனியா?”

 எனக்கு அவளை ப்ரபோஸ் பண்ணனும், அதான் இப்ப ஹெல்ப் செய்யப் போறியா? இல்லியா?” காட்டமாகவே விழுந்தன ரூபனின் வார்த்தைகள்.

சட்டென்று சிரித்து விட்டான் ஜீவன்.

 பரவால்லியே கடைசில ப்ரபோஸ் செய்யிற வரைக்கும் எங்கண்ணனுக்குத் தைரியம் வந்திடுச்சா? சூப்பர் சூப்பர்  அவன் சிரித்த விதத்தில் தம்பியின் முகத்திலேயே குத்து விடுகிறவன் போல முஷ்டியை மடக்கி மூக்கிற்கு நேராக வேகமாய்க் கொண்டு போய்ச் சட்டென்று நிறுத்தினான்.

 சொல்லுவடா, இதுவும் சொல்லுவ, இதுக்கு மேலயும் சொல்லுவ நான் எப்பவே சொல்லியிருப்பேன். எல்லாம் உன்னாலதான். அந்தப் பிரச்சினை வந்திடும், இந்தப் பிரச்சினை வந்திடும்னு ஊர்ல இல்லாத பிரச்சினையெல்லாம் சொன்னது நீதானே…இனிமேலும் என்னால சொல்லாம இருக்க முடியாது. மனசில இருக்கிறதைச் சொல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு, அவ பக்கத்தில இருந்தாலும் சரியா பாக்க முடியலை. ரொம்பக் கண்ட்ரோல்ல இருக்க வேண்டியிருக்கு. எப்படியும் இன்னிக்கு நான் சொல்லத்தான் போறேன். தீர்மானமாய் ஒலித்தது அவன் குரல்.

சரி அவக்கிட்ட போய் மனசில இருக்கிறதை சொல்லு…  என்ற தம்பியின் முகத்தை நம்பாமல் பார்த்துக் கொண்டிருந்தான் ரூபன்.

ஆனால் அவ மாட்டேன்னு சொல்லிட்டா அவளைப் பழி வாங்கப் போறேன், இல்ல மிரட்டி காதலிக்க வைக்கப் போறேன்னு மட்டும் எதையாவது செஞ்சன்னா… நீ செய்ய மாட்டண்ணா ஆனாலும் நீ செஞ்சன்னா நான் தான் உனக்கு முதல் எதிரி பாத்துக்க…

என்றவனை ஒரு விதமாய்ப் பார்த்தான் ரூபன்.

 என்ன? கெத்துக் குறையவில்லை தம்பியின் குரலில்,

 ம்ஹீம்…”

என்னங்கிறேன்ல ஏ அண்ணா சொல்லு…

என்னடா ஜீவா பிக்னிக் வந்தும் கூட எங்க கூடப் பேச மாட்டியா? பஸ்ஸில வந்த நேரத்திலருந்து அண்ணாகிட்டயே பேசிட்டு இருக்க… பின் சீட்டுக்கு வாடா…என்ற நண்பனை “இதோ வரேன் ரெண்டு நிமிஷம் என்று அனுமதி வாங்கி விட்டு…

சொல்லுண்ணா…

இல்ல அவ அண்ணனை எப்படிச் சமாளிக்கணும்னு அடிக்கடி யோசிப்பேன், முதல்ல எனக்கு உள்வீட்டுல இருக்கிற எதிரிங்களை எப்படிச் சமாளிக்கறதுன்னு பிளான் செய்யணும் போலிருக்கு அதான் யோசிச்சேன் என்றான் தம்பியை முறைத்தபடியே 

என்ன இருந்தாலும் உனக்கு என் ஹெல்ப் தான் வேணும் மறந்துடாத என்றவனாய் 

அனிக்காவுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்த அவள் ஃபிரண்ட் திவ்யாவிடம், ‘ஏய் டெமோன் இன்னா இங்கே வந்து உக்காரு’ என்றான்.

என்னடா அந்தப் பிள்ளயைப் பார்த்து டெமோன்ங்கிற?

அதெல்லாம் நான் சொல்ல வேண்டாம், இப்ப பாரு அவளே சொல்லுவா 

ஏ திவ்யா பாப்பா இங்கே வா 

என்னது நான் பாப்பாவா, இங்கே இருக்கிற யார்கிட்டயும் கேட்டுப் பாரு நான் தான் டெமோன் னு சொல்வாங்க  வேணும்னா எங்க வீட்டுல வந்து கேளு இல்லன்னா என் அலுவலகத்தில் வந்து கேளு.என்று வீரமாக எழுந்து ஜீவனிடம் மல்லுக் கட்டினாள் திவ்யா 

ஜீவன் ரூபனுக்குக் கண்ணசைவில் அனிக்கா அருகில் உட்காரச் சொல்லியவனாக இங்கே திவ்யாவிடம் வம்பு வளர்த்தான். சற்று நேரத்தில் அந்தக் கீச்சுக் குரலில் அவள் விடாமல் பேசியதைக் கேட்டு கேட்டு அவன் காது ஜவ்வு ங்கொய்ய்ய்ய்  என வீரிடவே 

இவ சாப்பிடறது எல்லாம் இவ பேசறதுக்கே காணாது போல அதான் இவ்வளவு ஒல்லியா இருக்கா  என்னச் செய்யலாம்? பேசாம பின் சீட்டுக்கு ஓடிப் போயிரலாமென்று முடிவெடுத்து அதைச் செயல் படுத்தினான். இப்போது ஜீவன் இருந்த சீட்டில் திவ்யா அமர, அவளுக்கு அடுத்து வேறு பெண் அமர, திவ்யா தொடர்ந்து பேச இனிதே மறுபடி ஆரம்பித்தது ஸ்கூல் கலாட்டா குறித்த கலகலப்பு பேச்சுகள்.

ஜன்னல் வழியே அதிகாலை நேரக் காற்றின் சுகத்தை உணர்ந்து கொண்டு பொழுது புலர்ந்திராத அந்த நேரத்தில் முனுக் முனுக்கென்று மின்னும் நட்சத்திரங்களை ரசித்தவாறு இருந்த அனிக்கா, சட்டென்று திரும்பியவள் …

அந்த நட்சத்திரங்களைப் பார்த்தியா திவி  என்றவள் திவ்யாவின் இடத்தில் ரூபனைப் பார்த்து ஆச்சரியப் பட்டாள்.

நீங்களா அத்தான்? இந்த திவ்யா எங்கே போனா? இங்கே பாருங்க அந்த ஸ்டார்ஸ  எவ்வளவோ அழகா இருக்குல்ல, என ஒவ்வொன்றாய் பேசிக் கொண்டே வந்தாள். ரூபனுக்குத் தான் இருப்பது பூலோகமா? சொர்க்கமா? என்றிருந்தது. அவளுடைய ஒவ்வொரு பேச்சுக்கும் தலையாட்டிக் கொண்டே வந்தான். அவளுடைய போக்கில் அவளை விட்டு விட்டான். இடையே பேசி காதலைச் சொல்ல இது தகுந்த தருணமாக அவனுக்குத் தோன்றவில்லை.

இரவெல்லாம் பிக்னிக் செல்லும் உற்சாகத்தில் விழித்து இருந்ததன் காரணமாகச் சற்று நேரத்தில் அவளுக்குத் தூக்கம் வந்து விட்டது போலும்? எந்தத் தயக்கமுமில்லாமல் அவன் தோளில் தலைச் சாய்த்து தூங்க ஆரம்பித்தாள்.

பக்கத்தில் யாரும் அவர்களைத் தவறாய் பார்த்து விடக் கூடாதே என எண்ணி அக்கம் பக்கம் பார்க்க அங்கும் ஒரு சிலர் மிக உற்சாகமாய்ப் பாட்டுகள் படித்து ஆரவாரித்துக் கொண்டிருக்க மற்றவர்கள் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். திரைப் படப் பாடலொன்றைப் பாடியவாறே அவர்கள் மேல் கண் வைத்திருந்த ஜீவனை ரூபன் கண்டான்.

சகோதரர் இருவரும் கண்களாலேயே பேசிக் கொள்ள ஆரம்பித்தனர். இருவர் புருவமும் ஏறி இறங்கி ஒருவரை ஒருவர் விசாரித்துக் கொண்டது.

சீண்டிக் கொண்டே இருந்த ஜீவன் சும்மா நடத்து நடத்து என்று சட்டென்று கண்ணடித்துச் சமிக்ஜை செய்தான். பார்த்துக் கொண்டிருந்த ரூபனுக்கு உற்சாகம் கூடியது.

தன்னுடைய இடது பக்கத் தோளில் தலை சாய்த்து தூங்கிக் கொண்டிருந்தவள் பஸ்ஸின் வேகத்தில் மறு பக்கம் ஜன்னலில் முட்டிக் கொள்வாளோ? என்கின்ற பயத்தில் தன் வலது கையால் அவள் தூக்கம் கலைந்து விடாமல் அவன் தலையைத் தன் மேல் நன்றாகச் சாய்த்துக் கொண்டான். சற்றுச்சாய்வாக அவளுக்கு ஏற்ற விதமாக அமர்ந்துக் கொண்டவனாய், மனதில் எதையோ வென்று விட்டவன் உணர, பஸ் சீட்டில் தலை சாய்த்துக் கண் மூடினான்.

ஹே பீச் வந்துட்டு இறங்குங்க  என்ற ஆரவாரத்தில் தான் கண் விழித்தான். கடற்கரையோரம் காற்று முகத்தில் அறைந்து புத்துணர்ச்சி தந்து சென்றது. அனிக்காவிற்க்கு வழி விட்டு இவன் எழும்பிச் செல்லாவிடில் அவனை அவள் தாண்டிச் செல்லும் அபாயம் இருந்ததால் அவசரமாக எழுந்ததில் உயரம் காரணமாக மேலிருந்த ஸ்டாண்டில் முட்டிக் கொண்டான் அவன்.

அச்சச்சோ உக்காருங்க அத்தான் என்றவளாய் அவன் தலையை வேகமாகத் தடவி விட ஆரம்பித்தாள். இன்னிக்கு ரொம்ப நல்ல நாள் போலவே? என்று எண்ணியவன் தன் தலை தட்டியதால் எழுந்த வலி மறந்து அவளுடைய தனிப்பட்ட கவனிப்பில் மனம் மகிழ்ந்தான்.

அவர்களை இடையூறு செய்யாமல் ஜீவன் கடந்து போக 

ஏ ஜீவா, ஏ ஜீவா என உதவிக்காக அவனைக் கூப்பிட்டாள்.

இப்ப என்ன அனி  என்றான்

அத்தானுக்குத் தலைல பட்டுட்டு 

அதெல்லாம் அவனுக்கு ஒண்ணும் ஆவாது சும்மா நீ வா என்று வலிந்து அலட்சியப் படுத்தியவனாய் அவன் இறங்கினான், அதைக் கண்டவளுக்கு அவன் மீது மிகுந்த கோபம் வரவே ஜீவனுக்கு எக்கச் சக்கமாய்த் திட்டும் ரூபனுக்கு அதே அளவு கவனிப்பும் நடந்தது.

மற்றெல்லோரும் ஏற்கெனவே முன்னால் சென்று தங்களுக்கென்று ஏற்கெனவே ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிற அறைக்குச் சென்று தங்கள் பைகளை வைத்துவிட்டு சூரிய உதயம் காண வருவதாகத் திட்டம். அவளும் தன் பையைப் பெண்களுக்கான அறைக்குள் வைத்து விட்டுக் கூட்டத்தைப் பின் தொடர்ந்து கடற்கரைக்கு மறுபடி வந்தாள்.

ரூபன் கையில் பையொன்றுமில்லை. தான் கடலில் குளிப்பதாக இல்லை என்று எண்ணியிருந்ததால் மாற்றுடையும் இல்லை. பை எதுவும் தேவைப்பட்டிருக்கவில்லை. இன்றைய தினம் எப்படியாவது அனிக்காவிடம் தன் மனதில் இருப்பதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். என்னை அவளுக்குப் பிடிக்குமா? சரியென்று சொல்வாளா? நான் எதையாவது சொல்லி அவள் என்னை வெறுத்து விடுவாளோ? இந்தக் கூட்டத்தில் எப்படி அவளிடம் தனியாகப் பேசுவது? எப்படி அவளிடம் தன் காதலைச் சொல்வது? என்கின்ற யோசனையில் நடந்து கொண்டே அவன் தன்னுடைய குழுவை விட்டு வெகு தொலைவு வந்திருந்தான்.

சூரியன் உதிக்கும் முன்பே மெலிதான இளம் காலை கதிர்கள் இன்பமாய் உடலை வருட ஆரம்பித்தன. அந்தக் காலைப் பொழுது மிக ரம்யமாய் இருந்தது. அனிக்கா தூரத்தில் ரூபன் செல்வதைப் பார்த்தவளாக அவனைப் பின் தொடர்ந்தாள்.

அத்தான் எங்க போறீங்க ? எல்லோரும் அந்தப் பக்கம் இருக்கிறாங்க? என்றவளாய் அவனை அழைத்தவாறு பின்னே செல்ல சிந்தனை வயப்பட்டவனுக்கு அவள் குரல் காதில் ஒலிக்கவில்லை.

சற்றே வேகமாய்ச் சென்றவள் வெகு நிதானமாய் நடந்து கொண்டிருந்த அவன் அருகே வந்திருந்தாள். வழக்கம் போல் அனிக்காவின் வருகையை உள்ளுணர்வு எடுத்துச் சொல்ல சட்டென்று திரும்பினான் அவன்.

அங்கு அந்நேரம் சூரியன் புலர்ந்தது… தூரத்தே இருக்கும் நண்பர்கள் உற்சாகக் குரல்கள் இவர்கள் இருவரின் காதில் மெலிதாய் கேட்டது. இவர்களைச் சுற்றி ஒருவரும் இல்லை. அனிக்கா ரூபனைப் பின் தொடர்ந்த காரணம் மறந்து இயற்கையில் மூழ்கி, மெய் மறந்தவளாய் சூரியன் வருகையைப் பார்க்க, ரூபன் சூரிய ஒளியில் தகத் தகக்கும் பொன் மேனிக் கொண்ட தன் காதலியின் முகத்திலேயே பார்வையை நிறுத்தினான்.

எல்லோரும் கிழக்கைப் பார்க்க இவன் மேற்கைப் பார்க்கிறானே என்றெண்ணியவளாய் அவள் அவன் கரம் பற்றி அந்த இயற்கை காட்சியின் புறம் அவனைத் திருப்ப முயல அவள் கரத்தப் பற்றியவனாய் இது வரை தன்னைத் தடுத்த அத்துணைத் தயக்கங்களையும் புறம் தள்ளி, அவள் மற்றோர் கரத்தையும் தன் கையில் எடுத்து தன் பக்கமாய் அமைதியாய் இழுத்தான்.

இப்படி ஒன்று நடக்குமென்றே புரியாமல் திகைத்த அனிக்கா வேகமாய் இல்லாவிடினும் மென்மையாய் அவன் மேல் மோதி நின்றாள். அவள் இடையில் தன்னுடைய கரத்தைக் கோர்த்தவன் தன் தலைஅருகே சற்றே குனிந்த விதம் திகைத்தவளாய் பார்த்துக் கொண்டிருப்பவளிடம் பேசினான்.

 அனிம்மா எனக்கு உன்னை ரொம்ம்ப்ப பிடிக்கும். ரொம்பன்னா எவ்வளவுன்னு சொல்ல தெரியலை. ஆனா நீ தான் என் லைஃப், நீ இல்லன்னா என் லைஃப்ல ஒண்ணுமே இல்லை… நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா? உனக்கு என்னைப் பிடிக்குமா? நான் இன்னும் அம்மாக்கிட்ட சொல்லல, முதல்ல உன்கிட்ட தான் பேசணும்னு காத்திட்டு இருந்தேன். நான் நம்ம கல்யாணம் விஷயமா வீட்டில பேசட்டுமா? நீ என்னைக் கட்டிப்பியா?”

அவர்கள் இருவரையும் அந்த அதிகாலையில் ஓவியன் பார்த்திருந்தால் கவிதைப் போலச் சூரிய ஒளி சுற்றி தன் தணிந்த ஒளிக்கதிரைப் பரப்பி நிற்க, கடலலைகள் இருவர் பாதம் வந்து வருடி வருடிச் செல்ல, கடலின் இதமான இனிய காற்றில் காதல் பரவிட இருவரும் மெய்மறந்து நிற்க்கும் விதமாய் அவர்களை அந்த நிலையில் ஓவியமாய்ப் பதித்திருப்பான்.

ஒரு வழியாக ரூபன் மனதில் இருப்பதைக் கொட்டிய பின்னும் அனிக்கா இன்னும் தன்னுடைய திகைப்பிலிருந்து மீளவில்லை. மீண்ட போது ரூபனின் கைகள் தன் இடுபை தழுவி இருப்பதைப் பார்த்து அரண்டாள்.

ஸாரி, ஸாரிடா ஏதோ எமோஷனலாயிட்டேன். சட்டென்று தன் கரங்களை அவள் இருப்பினின்று விடுவித்தவன் வெட்கமாய்த் தன் பின்னந்தலையை வலக் கரத்தால் கோதியவனாய் அவளைப் பார்த்துச் சங்கடமாய்ப் புன்னகைத்தான். அனிக்கா ஏதாவது பதில் சொல்வாளா? என அவன் எதிர்பார்க்க அவள் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க ரெடியாக இருந்தாள். ரூபன் அந்தச் சந்தர்ப்பத்தை நழுவ விடுவதாய் இல்லை. சட்டென்று அவள் கரத்தைப் பற்றியிருந்தான்.

ஹேய் அனி, பதில் சொல்லு கனிவும் காதலும் கொட்டிக் கிடந்தது அவன் குரலில்,

அவனுக்கு முகம் மறைத்து எதிர்புறமாய் இருந்தாலும் சட்டென்று அனிக்காவின் முகம் வெட்கத்தில் சிவப்பேறியது.

மூச்சுவிடத் திணறுவது போலச் சற்று நேரம் அவள் திணறினாள் 

நான்…

ம்ம்ம் 

நான் 

ம்ம்ம்  ஏதோ அவளிடம் கடன் வசூலிப்பவன் போல வெகு தீவிரமாய்ப் பதிலை யாசித்துக் கொண்டிருந்தான் அவன். அவள் முகத்தைப் பார்க்க முடியாத தவிப்பும் அவனுள் கூடியது.

நான் …யோசிச்சு சொல்றேனே…என்றவளின் பதில் கேட்டு, அவன் சற்றே தன் கரத்தை தளரவிட அங்கிருந்து ஓடியே சென்று விட்டாள் அவள்.

மிகப் பெரிய பாரத்தை இற்க்கி வைத்தவன் போல மனம் இலகுவாகி விட அமைதியாகக் கடற்கரையில் அமர்ந்தான் அவன். அனிக்காவுடனான ஒவ்வொரு காட்சியும் அவன் கண்முன் நிழலாடின. ஒவ்வொரு முறையும் அவன் முகத்தில் அத்தருணம் குறித்த மகிழ்ச்சி வந்து வந்து சென்று கொண்டிருந்தது.

நேரம் கடந்திருந்தது. பக்கத்தில் யாரோ வந்து அமர யாரென்று பார்க்க ஜீவன் கண்சிமிட்டிச் சிரித்தான்.

என்ன அண்ணா சொல்லிட்ட போல? 

வெட்கமாய் ரூபன் சிரிக்க,

அப்பப்பா என்ன பிரகாசம்? …என்ன பிரகாசம்? … 1000 வாட்ஸ் பிரைட்னெஸ் உன் முகத்தில இருக்கு என்று கிண்டலடித்துக் கொண்டிருந்தான்.

ஜீவன் நான் பார்த்துக் கிட்டு தான் இருந்தேன் என்றதும் ரூபன் திடுக்கிட்டான். எதுக்குண்ணா பயப்படுற? அந்த நேரம் இங்கே வேற யாருமே இல்ல எனவும் அமைதியானான்.

என்னதான் மனதளவில் அவனுக்கு அவள் நெருக்கமானாலும் கூடத் தான் அவளைத் தொட்டு இடுப்பை அணைத்துப் பேசியதை யாராவது கவனித்திருந்தால் ஒரு தவறும் செய்யாத அவனவளான அனிக்காவிற்குத் தானே அவமானம் என்று விதிர்த்தான்.

என்ன சொன்னா? என்ற ஜீவனின் கேள்வியில் சிந்தைக் கலைந்தான்.

அவ யோசிச்சுச் சொல்வாளாம் என்றான் கண்களில் காதல் மின்ன 

யோசிச்சு சொல்றேன்னு சொன்னதுக்கா இவ்ளோ ப்ரைட்னெஸ்.அப்ப சரின்னு சொல்லிருந்தா அவ்ளோதான் எனச் சற்று நேரம் அவனைக் கிண்டலடித்தான்.

வா ப்ரேக் ஃபஸ்ட் டைமாச்சு. எல்லாரும் சாப்பிட்டுட்டு கடலுக்குக் குளிக்கவும் போகப் போறாங்க நீ என்னன்னா மணிக் கணக்கா இங்கே உட்கார்ந்திருக்க என்று அவனைக் கடிந்து அழைத்துச் சென்றான்.

அங்குக் கூட்ட கூட்டமாய்க் காலை உணவோடு அரட்டை நடந்து கொண்டிருந்தது. பிக்னிக் வ்ந்தது மொத்தம் 3 பஸ்களாக இருக்க அனைத்து ஏற்பாடுகளும் மிகுந்த ஒழுங்கு முறையோடு நடந்து கொண்டிருந்தது.

ரூபன் அனிக்காவை தேடிக் கொண்டிருந்தான். ஆனால், அவனால் அவளைக் காண முடியவில்லை. அதோ அங்கே யார்? இவனைக் கண்டவுடன் தோழியின் பின்னால் ஒளிந்துக் கொள்கின்ற அவளைப் பார்த்தான்.

புதுவித பரவசமாய் இருந்தது. டீனேஜ் பையன் போல வெகு உற்சாகமாக உணர்ந்தான். அரை மணி நேரமாக அனிக்கா அவன் கண் முன் வராமல் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தாள். அவள் தன்னுடைய தோழிகளுடன் உடை மாற்றிக் கடலுக்குக் குளிக்கச் செல்லவும் கடற்கரைப் பக்கம் போய் அமர்ந்து கொண்டான் அவன்.

குளிக்கின்ற பெண்களைப் பார்ப்பது போலாகி விடும் என்று தயங்கினாலும் தன்னைப் போலக் கடற்கரையிலிருந்து கொண்டு கதைப் பேசும் மற்ற ஆண்களோடு அமர்ந்தவனாய் அவ்வப்போது கடல் பக்கம் தன் பார்வையைச் செலுத்தியவனாய் அமர்ந்திருந்தான்.

ஜீவன் ரூபனின் சந்தோஷமான முகத்தைக் கண்டு மகிழ்ந்தவனாகத் தன் நண்பர்களோடு புட்பால் விளையாடிக் கொண்டு இருந்தான். சட்டென்று திரும்பிப் பார்க்கையில் என்னவாயிற்று என் அண்னனுக்கு என்று திகைக்கும்படி இருந்தது ரூபனின் செய்கை.

அவசரமாய் எழுந்து கடலின் சற்று உள்ளே சென்றிருந்த பெண்கள் கூட்டம் நோக்கி கடல் நீரில் பாய்ந்தான் அவன், ஜீவன் பெண்கள் கூட்டத்தைக் கவனித்தான் அக்கூட்டத்தின் அனிக்கா இல்லை. இல்லவே இல்லை.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here