19. அமிழ்தினும் இனியவள் அவள்

0
449
Amizhthinum Iniyaval Aval

அத்தியாயம் 19

வாழ்வில்

எதை இழந்தாலும்


தாங்கும் வலிமை எனக்குண்டு.

உனை இழப்பதை மட்டும்

தாங்கிட இயலாதே

விழித்திடு

என் தாமரையே 

அடுத்தடுத்த நிமிடங்கள் பரபரவெனக் கழிந்தன. அகண்ட விரிந்த அந்தக் கடலில் பைத்தியக்காரனைப் போல தன் காதலியை அவன் சல்லடைப் போட்டுத் தேடினான். அவளோடு இருந்த மற்ற பெண்களுக்கும் தங்களோடு இருந்த அனிக்காவை தற்போது காணவில்லை எனும் உண்மை உறைக்கச் சற்று நேரமாயிற்று.

எங்களோடு கூடத் தானே அவள் இருந்தாள். பெரிதான அலை எதுவும் வரவில்லையே? நீச்சல் தெரியாமல் மூழ்குபவள் என்றாலும் கூட, ஒரு முறைக் கூடச் சுவாசத்தை மீட்கவாவது தண்ணீரை விட்டு தலை வெளியேயும் வரவில்லையே? என ஆயிரம் சந்தேகங்கள். பதற்றம், புலம்பல்கள் அந்த இடத்தை உல்லாசமான மன நிலையிலிருந்து கடும் குழப்பமான நிலைமைக்குத் தள்ளியது.

நிமிடத்தில் பேயாய் கடலுக்குள் தேடியவன் கண்களில் அரை மயக்கத்தில் கடல் நீரின் ஓட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த அனிக்கா தென்பட்டாள். கடலினின்று ஆவேசமாய் அவளைப் பிரித்து அள்ளிக் கொண்டு வந்தவன் கரையின் ஓரம் அவளைக் கிடத்தி அவளது சுவாசத்தை ஆராய்ந்தான். காதுகளை அவள் வாய்க்கும், மூக்குக்கும் அருகே கொண்டு செல்ல அவளது சுவாசத்தின் இழை இவனது சுவாசத்தை மீட்டெடுத்தது.

தான் கற்றுத் தேர்ந்த மீட்புக் கலை தன்னவளுக்கே உதவியாய் இருப்பதை என்னே சொல்வது என்று எண்ணியவனாய் மூச்சுக்கு திணறும் அவளைக் குப்புறப் படுக்க வைத்து, அவள் மூழ்கும் போது அவசரமாய் அவள் நுரையீரலுக்குள் புகுந்து கொண்ட தண்ணீரை வெளியேற்றினான்.

இப்போது அவளது சுவாசம் சற்றே சீரானது போலத் தோன்ற கூட்டத்திலிருந்த மருத்துவர் கையில் அவளை ஒப்படைத்துவிட்டுத் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றே புரியாதவன் போல் ஒரு மரத்த நிலையில் நின்று கொண்டிருந்தான்.

கடலில் மூழ்க ஆரம்பித்திருந்த அனிக்கா அப்போது இத்தோடு நம் வாழ்வு முடிந்தது என்கிற எண்ணத்திற்க்கு வந்திருந்தாள். கடலின் ஓட்டத்தில் இழுத்துச் செல்லப் பட்டு, உலகத்துக்கும் தனக்குமான தொடர்பு முடித்துக் கொள்ளப் போகிறோம். என்று எண்ணும் போது தான் அவன் வந்தான் .முடியை பிடித்து ஏன் இழுக்கிறான்?. அனிம்மா ஹேய் நான் இருக்கேன் பயப்படாதே  ஆவேசமாய்த் தொடர்ந்து அவளோடு பேசினான். உனக்கெதும் ஆச்சு அப்புறம் நானும் இருக்க மாட்டேன் புலம்பினான்.

உனக்கெதுவும் ஆகாது கண்ணம்மா  இப்போது என் உடல் முழுக்க அவன் கரங்களில்… ம் ஹீம் … பயமில்லை இனிமேல் அவன் பார்த்துக் கொள்வான்  முழுமையான மயக்கத்திற்க்குள் சிறிது சிறிதாய் ஆழ்ந்திருந்தாள் அவள்.

அவளின் மயக்கம் தெளியும் போது அருகில் அவனில்லை சற்றுத் தொலைவில் நிற்கும் அவனது முதுகு மட்டும் அவளுக்குத் தெரிகின்றது. உப்புத்தண்ணீரில் இருந்ததன் காரணமாகக் கண்கள் வெயிலின் நேர்பார்வையில் எரிகின்றது. தொடர்ந்து இருமி இருமி கடல் நீரை வெளியேற்றியதில் இன்னமுமாய்ச் சோர்ந்து போய் விட்டிருந்தாள். ஏற்கெனவே, அவளைச் சுற்றி கூட்டத்தைச் சேர்க்க வேண்டாம் என்றதும் குறைந்த நபர்களே அங்கு இருந்தனர்.

அவளுக்கு ஆபத்து எதுவுமில்லை என்றதும் முன் போலச் சிலர் விளையாடவும், கடலுக்கும் சென்றுவிட்டிருந்தனர். முதல்முறையாக ஜீவனை கண்கள் கலங்கியவனாய் பார்க்கின்றாள். என்னோடு எப்போதும் குறும்பு பேசும் நண்பனா இவன்? அவளுக்கு அதிசயமாய் இருக்கின்றது

அனிக்காவுக்கு பயத்தில் மயக்கம் வந்திருக்கணும், அதிகமா ஒண்ணும் பிரச்சினை இல்ல. கொஞ்சம் அவளை ஈரமாயிருக்கிற டிரெஸ்ஸ சேஞ்ச் பண்ணிட்டு ரெஸ்ட் எடுக்க வைச்சா சரியாகிடும். யாராவது ரூம்க்கு கூட்டிட்டுப் போங்க  என்று மருத்துவர் சொன்னதும் முதுகு காட்டி நின்றிருந்த ரூபன் வந்து அவளைத் தூக்கிக் கொண்டான்.

ஜீவனும் அவனது பின்னே செல்ல என்னதான் இருந்தாலும் அவர்கள் எல்லை பெண்கள் அறை வரைக்கும் தானே? உதவிக்குப் பெண்கள் வந்தால் நன்றாயிருக்குமே என்று நினைக்கும் போதே, “அனிக்காவை நான் பார்த்துக்கிறேன்  என்றவளாய் திவ்யா பின்னோடு வந்திருந்தாள்.

ரூபன் முன்னெப்போதும் பார்த்திராத அளவு இறுகிப் போயிருந்தான். பெண்கள் அறையில் யோசிக்கவே இல்லாமல் அவளையும் தூக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தான். ஓரிருவரே உள்ளிருக்க அவர்களுக்கும் அவள் அறைக்குள் வருகின்ற விஷயம் முன்பே தெரிந்திருக்க வழி விட்டனர்.

கட்டிலில் இறக்கும் போது தான் அவனையே கவனித்துக் கொண்டிருந்த அனிக்கா கீழே விடுங்க அத்தான், நானா மேனேஜ்  சொல்ல யத்தனித்தவளை

இவ்வளவு நேரம் என் கையில் இருந்தவளுக்கு இப்போ மட்டும் என்ன வந்துச்சு? என்கிற பாவனையில் ரூபனின் முறைப்பு நிறுத்தியது.

 இல்ல நான் ஈரமா இருக்கேன். இந்த மெத்தை எல்லாம் பாழாகிடும் …“ மிகச் சன்னமாய்ப் பலவீனமாய் ஒலித்த அவளது குரலில் கோபம் தணிந்தான்.

 அண்ணா அவ சேஞ்ச் பண்ணிட்டு படுத்துப்பா, நான் பார்த்துக்கிறேன்  என்ற திவ்யாவை என் அண்ணன் இவளுக்கும் அண்ணனா? என ஒரு பார்வை பார்த்து வைத்தான் ஜீவன்.

ஆண்கள் அகன்றதும் அறை உள்ளுக்குள் தாழிடப்பட்டது. தன்னுடைய ஈர உடையோடு கடற்கரையோரம் கைகளைக் கால்களில் கோர்த்தவனாய் அமர்ந்தவன் மிகவும் தன்னந்தனியனாய் உணர்ந்தான்.

அண்ணே என் டிரெஸ் இருக்கு மாத்திக்கிறியா? அந்த டி ஷர்ட் கொஞ்சம் பெரிசு தான்  சைஸ் உனக்குச் சரி வரும் 

ம்ப்ச்ச் 

அது தான் அனியை காப்பாத்திட்டில்ல  அப்புறம் எதுக்கு இப்படிக் கவலையா இருக்க?  அவளுக்கு ஒன்னும் ஆகாதுன்னா 

பதிலே வராமல் இருக்க ரூபனின் இறுகிய முகத்தினின்று எதையுமே அவனால் கண்டு கொள்ளவியலவில்லை.

மணித்துளிகள் கடந்தன, அண்ணனும் தம்பியும் அமைதியாய் அமர்ந்திருந்தனர். காற்றில் சிலு சிலுப்பில் வெயிலில் ரூபனின் உடைகள் ஓரளவு காய்ந்திருந்தது. அமைதியைக் கலைத்துச் சட்டெனச் சொன்னான் 

அது யாராயிருக்கும்டா?  யாரா இருந்தாலும் விடவே மாட்டேன்? நான் விடவே மாட்டேன்.

ஹேய் அண்ணா என்ன சொல்லுற நீ?

ம்ம்  அங்கே அவ தானா மூழ்கியிருக்க வாய்ப்பே இல்லடா… யாரோ அவளை மூழ்கடிச்சிருக்கணும். இப்ப நான் என்ன செய்யணும்னு எனக்குப் புரியலை. அவ அண்ணன் மட்டும் இங்கே இருந்திருந்தா போலீஸைக் கூட்டிருப்பான்? தலையைக் கைகளால் தாங்கிக் கொண்டான். ஏதோ தப்பா நடக்குது? என்னன்னு புரியலை. இது வேற நம்ம ஸ்கூல் காலேஜ் க்ரூப். என்ன செஞ்சாலும் அது தப்பாயிடும். என்ன செய்யட்டும்?..

காலையிலிருந்து தன்னிடம் கண்ணாமூச்சி ஆடுபவளை நினைவில் கொண்டு வந்தவன்… என்ன ஆச்சுன்னு நான் கேட்டா சொல்லுவாளோ என்னவோ? நீ கேட்டுச் சொல்றியா? தவிப்பாய் வெளிவந்தன அவன் வார்த்தைகள்.

அது ஏன் நீ கேட்டா அவச் சொல்ல மாட்டா? அதெல்லாம் சொல்லுவா?

ம்ம்  குனிந்து மணலில் விரலால் வரைந்துக் கொண்டிருந்தவன் சொன்னான்.

அவ இன்னும் அஞ்சு நிமிஷம் மட்டும் என் கண்ணில படாம இருந்திருந்தா நானும் கடலோடயே போயிருந்திருப்பேன்.

விலுக்கென நிமிர்ந்த ஜீவன் அவன் தோளில் கைப் போட்டு அவனை இறுக அணைத்துக் கொண்டான்.

லூசா அண்ணா நீ  இன்னிக்கு நீ அவக்கிட்ட உன் மனச சொல்லிட்ட சீக்கிரம் அம்மா கிட்டச் சொல்லி உனக்கும் அனிக்காக்கும் மேரேஜ் விஷயம் பேசணும். உடனே உங்க கல்யாணத்தை முடிக்கணும். அப்புறம் உன் கல்யாணம் முடிஞ்சா தானே என் ரூட் க்ளியராகும்  விளையாட்டாய் பேச முனைய அதற்கு அவன் குரல் ஒத்துழைக்காமல் கமறியது.

ஆண்கள் அழக்கூடாதாம்? எந்த மடையன் சொல்லியிருப்பானோ தெரியவில்லை. இருவர் கண்களிலும் அடக்க அடக்க இயலாமல் கண்ணீர் ஊற்றாய்ப் பெருகியது. சீக்கிரம் தன்னைக் கட்டுப் படுத்தியவர்களாய் எழுந்தனர்.

நான் கொஞ்சம் வரேன், நீ அவளைப் பார்த்துக்க?

அண்ணா நம்ம க்ரூப்பில யாரும் அப்படிக் கிடையாது. எல்லோருக்கும் ஒரு உதவின்னா அவ தான் முன்னால போயி நிப்பா. வீட்டுல அவளுக்கு ஒரு அண்ணன்தான் ஸ்கூலில நிறைய  கூடப் படிக்கிற எல்லாருக்கும் அவ பெட்  யாரும் அவள ஒண்ணும் செஞ்சிருக்க நினைக்கக் கூட மாட்டாங்க  நா அவக்கிட்ட விபரம் கேக்குறேன். நீ கவலைப் படாதே…

நான் கொஞ்சம் வாக் போயிட்டு வரேண்டா என்றவனாய் அகன்றான். காலையில் இருந்த உற்சாகம் துள்ளல் மறைந்தவனாய் முன்பு போலத் தன் கூட்டுக்குள் சுருங்கிக் கொண்ட அண்ணனைப் பார்த்து ஜீவனுக்கு மனம் கனத்துப் போனது.

சுவாசக் காற்றின்

அவசியத்தை

என் சுவாசமாய் இருந்து

உணர்த்தியவளே

நீயின்றிப் போனால்

நின்று விடும்

என் சுவாசமும்.


தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here