2. அமிழ்தினும் இனியவள் அவள்

0
704
Amizhthinum Iniyaval Aval

அத்தியாயம் 2

“கிறிஸ் சீக்கிரம் வா நேரமாகுது?” கிரிக்கெட் மட்டைகள், கிரிக்கெட் பந்து சகிதம் சிறுவர் பட்டாளம் வாயிலில் வந்து நின்றது.

 என்னடா, எல்லோரும் விளையாட புறப்பட்டாச்சா?”

 ஆமாம் அத்தே ”… தீபன் பதில் கூறினான்.

 லீவு விட்டதும் எல்லோரும் வெயிலில அலைய ஆரம்பிச்சிட்டீங்களா? உள்ளே வாங்களேண்டா எல்லோருக்கும் ஜூஸ் போட்டுத் தாரேன்  .

 வேண்டாம்மா எங்களுக்கு நேரமாகிடுச்சி  அவசரமாகப் புறப்பட்டான் கிறிஸ்.

 என்னதான் அவசரமோ?” சொல்லித் திரும்பியவள் அவசர அவசரமாக இடது கால் செருப்பை வலது காலிலும், வலது கால் செருப்பை இடது காலிலும் போட்டு அண்ணன் பின்னால் சென்ற இரண்டரை வயது வாண்டைப் பார்த்து,

 அனிக்கா (Anikka) குட்டி எங்கடா போற? எனக் கேட்க, விறு விறுவெனச் சென்றவள்

 கித் அண்ணா கிக்கெட், கிக்கெட்  என்று அவன் காலைக் கட்டிக் கொண்டு நின்றாள்.

கையில் ஸ்டம்ப்களோடு நின்றுக் கொண்டிருந்தவனுக்குத் தங்கையின் செயல் சிடு சிடுப்பாக இருந்தது. ஆனால்,அவளைப் பார்த்த அவன் நண்பர் குழாமுக்கோ உற்சாகம் கூடிற்று, சும்மாவா சிரிக்கும் போது அழகாய் விரியும் அந்தக் குண்டுக் கண்களையும், கொழு கொழு கன்னங்களையும் பிடிக்காதோர் யாருண்டு. கிக்கிக் எனச் சிரித்து அக்கம் பக்கத்திலுள்ள அனைவரின் மனதையும் கொள்ளைக் கொண்டிருந்தாள். ஆர்வமாய். “அனிக் குட்டி  என அவளை முத்தமிடக் குனிந்த கிறிஸ்ஸின் நண்பன் ராஜேஷிடம்,

 ராஜேஷ் இப்படில்லாம் பாப்பாவ கிஸ் பண்ணக் கூடாது, இன்ஃபெக்ஷன் ஆகிடுமாம் டாக்டர் சொல்லியிருக்காங்க, பாப்பாக்கும் யாரும் கிஸ் செய்தா பிடிக்காது. ரொம்ப அழுவா. இங்கே பாரு இப்படிக் கிஸ் செய்தா அழ மாட்டா  . அவள் கன்னத்தைத் தன் விரல்களால் தொட்டு தன் விரல்களை முத்தமிட்டுச் சொல்லலானான் கிறிஸ்.

பார்த்துக் கொண்டிருந்த சாராவுக்கு உள்ளுக்குள் சிரிப்பு குமிழிட்டது . அண்ணன் தங்கைக்குமிடையே 10 வருட வித்தியாசம் அதனாலோ என்னவோ அவளை அவ்வளவாகப் பாதுகாக்கும் குணம் அவனுக்கு . இது வரை தன் தங்கையை அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் , நண்பர்கள் யாரும் முத்தமிட அவன் அனுமதித்தது இல்லை , ஏதாவது ஒரு காரணம் சொல்லி தவிர்த்து விடுவான் . ஒருவழியாக அவன் நண்பர் குழாம் அனியைக் கொஞ்சி முடித்துப் புறப்படுகையில் கால்களை உதைத்துக் கொண்டு தானும் வருவதாக அடம் பிடிக்க ஆரம்பித்தாள் அவள் .

 அம்மா பாப்பாவை தூக்கிக்கோங்களேன் ப்ளீஸ்  எரிச்சலோடு பேசியவனிடம் ,

 ப்ளேகிரவுண்ட் பக்கத்திலதானடா இருக்கு கூட்டிட்டு போய் ஐஞ்சு நிமிஷம் கழித்துத் திருப்பிக் கொண்டு விடுங்கடா , எதுக்குப் பிள்ளையை அழ விட்டுகிட்டு  என்ற தாயை முறைத்துக் கொண்டு ,

 அம்மா என்னம்மா ? இப்போ யார் இவளைத் தூக்கி கிட்டு வருவா ?” கையில் இருக்கும் ஸ்டம்ப்கள் இருந்த பையைக் காட்டி விளையாடப் போகும் அவசரத்தில் சலித்துக் கொண்டான் அவன் .

ஒவ்வொருவர் கையிலும் கிரிக்கெட் விளையாடத் தேவையான ஒவ்வொரு பொருள் இருக்க , யார் அவளைத் தூக்குவது என்ற பிரச்சினைக்குச் சுலபமாகத் தீர்வு சொன்னான் தீபன்

 ரூபன் உன் கைல தான் எதுவும் இல்லல்ல பாப்பாவ தூக்கிக்கிறியா நீ ? என்ற தீபனிடம் ,“ சரிண்ணா  என முன் வந்தவன்  வா பாப்பா  எனத் தூக்கிக் கொண்டான் . ஒரு வழியாகச் சிறுவர் பட்டாளம் கிரவுண்ட் நோக்கி செல்ல ஆரம்பித்தனர் .

தங்கையை நிழலில் உட்கார வைத்து விட்டு ரூபனையும் துணைக்கு இருக்கச் சென்ற கிறிஸ்ஸிற்கு முதல் பேட்டிங் கிடைத்தும் மனம் கேட்காமல் 2 முறை தங்கையை வந்து பார்த்துச் சென்றான் . மறுபடியும் ரெண்டே நிமிடத்தில் திரும்பி வந்து நின்றான் .

 ரூபன் ரொம்ப வெயில் அடிக்குது பாரு , அதுமட்டுமில்ல யாராவது சிக்ஸர் அடிக்கும் போது பாப்பா மேல பட்டுட்டா  பேசாம இவளை வீட்டில விட்டுட்டு வந்திடுறியா ?, நீ வந்ததும் உடனே உனக்குப் பேட்டிங்க் தரேன்  என்று டீல் பேசி நின்றான் .

அவனுக்கும் அந்த டீலிங்க் பிடித்திருக்க  பாப்பா வீட்டுக்குப் போலாமா  என்றதும் அதுவரை வேடிக்கைப் பார்த்தது சலித்ததோ என்னமோ  சரி  என்று தலையாட்டியவளை தூக்கிக் கொண்டு ரூபன் திரும்பி வீட்டில் விடச் சென்றான் .

 புரிந்தும் புரியாமலும் ஏதேதோ மழலையில் மிழற்றிக் கொண்டு கன்னம் குழிய சிரித்துக் கொண்டு , அவன் முகத்தில் தன் கைகளால் தொட்டுப் பேசிக் கொண்டு வந்தவளைப் பார்த்து ரூபனுக்கு உற்சாகமாக இருந்தது . அவள் வயதில் அவனுக்கும் வீட்டில் தம்பி இருக்கின்றான்தான் . ஆனால் , அம்மாவிடம் எந்த நேரமும் ஒட்டிக் கொண்டே திரியும் , கிட்டே போனாலே சிடு சிடுத்து அழத்துவங்கும் அவனை இவன் அவ்வளவாகத் தூக்கியது கிடையாது .

 பேசாம நம்ம அம்மாவும் , அத்த வாங்கின மாதிரி பாப்பா வாங்கியிருக்கலாம் தம்பி பாப்பா உவ்வே  என்று நினைத்துக் கொண்டான் . மற்ற வாண்டுகளைப் போலவே அவனுக்கும் அவளுக்கு முத்தம் கொடுக்கத் தோன்றிற்று , கிறிஸ்ஸின் பார்வையிலிருந்து தூரம் வந்ததை நிச்சயப் படுத்திக் கொண்டு  செல்லக் குட்டிப் பாப்பா  வெனச் சொல்லிக் கொஞ்சியவனாய் அவள் கன்னத்தில் முத்தமிட்டான் . முத்தமிட்ட பின் தான் அவள் அண்ணன் சொன்னது ஞாபகத்திற்கு வர , எங்கே தான் முத்தமிட்டதால் அழுது விடுவாளோ என அவன் கலவரமாக அவளைப் பார்க்க , அனிக்காவோ கைக் கொட்டிச் சிரித்துக் கொண்டிருந்தாள் .

காட்சி சட்டென்று மாறியது ….

 பதில் சொல்லுங்கறேன்ல  ஏறத்தாழ உறுமினான் அவன்.

எதிரில் நின்றவளுடைய வார்த்தைகள் ஏற்கெனவே அவனது கோபத்தைத் தூண்டி விட்டிருக்க ஆத்திரத்தில் அவள் கழுத்தை நெறித்து விடுவோமோ? என்னும் அச்சத்தில் தன் கைகளை வெகு பிரயத்தனப் பட்டு இறுக்கிக் கொண்டிருந்தான் அவன்.

கண்களில் கலக்கமும், கண்ணீரும் வழிந்து நின்ற அவளின் தோற்றம் அன்று அவனை அசைக்கவே இல்லை.

அதன்பின் அவள் எப்போது பதில் சொன்னாள், அவன் வலக்கரம் எப்போது அவள் கன்னத்தில் வேகமாய் இறங்கியது என்று நினைவில்லை. அவனுடைய ஆக்ரோஷமான அறையில் அதிர்ந்து கண்கள் இருள, அவள் மயங்கிச் சரியவும் தான் அவனுக்குத் தன்னுணர்வு வந்தது.

 ஐயோ! ஆத்திரத்தில் அறிவிழந்து என்ன செய்து விட்டேன் நான்  . மனதிற்குள் பதறியவன்

 அனிக்காமா, ஸாரிடா  …அலறியவனாய் அவள் கீழே விழும் முன் அவளைத் தாங்கிக் கொண்டான்.

விதிர் விதிர்த்து தூக்கத்தினின்று எழுந்து அமர்ந்தான் ரூபன்.மனதில் பதிந்துப் போன விஷயங்கள் தான் அடிக்கடி கனவுகளாய் வெளிப்படுமாம். அன்றைய கனவு அது உண்மைதான் என்று அவனுக்கு மெய்ப்பிப்பது போலத் தோன்றியது. பெருமூச்சை வெளியேற்றியவனாகக் கனவின் தாக்கத்தில் வியர்த்து வழிய உட்கார்ந்திருந்தவனை அருகில் இருந்தவன் கவனித்துக் கொண்டிருந்தான். அவன் கைகள் ரூபனின் முதுகை ஆதூரமாய் வருடி விட்டன.

 தூங்குண்ணா , சும்மா அதையே நினைச்சுகிட்டு இருக்காதே எல்லாம் சரியாகிடும்  அவனை மறுபடி படுக்க வைக்க முயன்றான் ஜீவன் . தம்பியை திரும்பிப் பார்த்தவன் அவனுடைய சொல்லுக்காகப் படுத்துக் கொண்டாலும் அவனால் அப்போது தூங்க இயலவில்லை எனவே விட்டத்தை வெறிக்க ஆரம்பித்தான் .

ரூபன் யோசித்துக் கொண்டு இருக்கும் பொழுதே கதையின் மற்ற கதா பாத்திரங்களை அறிந்துக் கொள்வோம் வாருங்கள்.

முதலில் கதையின் நாயகன் ரூபன் குடும்பத்தினர் . ரூபனின் பெற்றோர் ராஜ் & இந்திரா தம்பதிக்கு ஜாக்குலின் , தீபன் , ரூபன் & ஜீவன் என்று நான்கு குழந்தைகள் , ராஜின் தங்கைதான் சாரா .

ராஜ் & சாராவின் குடும்பம் கிராமத்தில் செல்வ வளம் மிக்கவர்கள் . தங்கள் பிள்ளைகளுடைய எதிர்காலம் , நல்ல படிப்பை முன்னிட்டுத் தங்கள் நிலபுலன்களைக் குத்தகைக்கு விட்டு விட்டு அவர்கள் குடும்பம் நகரத்திற்குக் குடியேறினர் . அவர்கள் தந்தை அடிக்கடி ஊருக்குச் சென்று அனைத்தையும் மேற்பார்வையிட்டு வந்தார் . எதிர்பாராத விதமாக ராஜின் பள்ளியிறுதியின் போது அவர் இறந்து விட்டார் .

குடும்பத் தலைவரை இழந்த துன்பம் அவர்கள் குடும்பத்தின் மகிழ்வைக் குறைத்த போதும் அவர்களது குடும்பம் வளமையில் குறையற்று இருந்ததால் இருவரின் படிப்பும் தடைப் பெறாமல் நடந்தது , படிப்பை முடித்து ராஜ் ஒரு பன்னாட்டு அலுவலகத்தில் பணி புரிய ஆரம்பித்தார் . சாராவின் படிப்பு முடிய சில வருடங்கள் இருந்ததால் தங்கையின் திருமணத்திற்காகக் காத்திருக்க வேண்டாம் உடனே திருமணம் செய்து கொள் என்ற அவரது தாயின் ஆலோசனைக்கேற்ப இந்திராவுடனான அவரது திருமணம் நடைப் பெற்றது .

அவர்கள் குடும்பம் மிகவும் அன்பான குடும்பம் ஆதலால் இந்திரா தன் மாமியார், நாத்தனாரிடம் முரண்பாடாக நடக்கும் விதமான சூழ்நிலை எப்போதும் ஏற்படவில்லை. அதிலும், சாரா அண்ணிக்கு உதவியாக இருப்பதும் அண்ணன் மகள் ஜாக்குலினை மிகவும் கண்ணும் கருத்துமாகக் கவனிப்பதுமாக இருக்க, தனக்கு உதவி தேவைப் படும் போது தன் படிப்பையும் கூட ஒதுக்கி வைத்து விட்டு உதவுவதையும் பார்த்து இந்திரா நெகிழ்ந்துதான் போயிருந்தாள்.அண்ணி நாத்தனார் என்ற நிலையோடு கூட அவர்களுக்கிடயே அழகான நட்புறவு தோன்றியிருந்தது.

ஓரிரு வருடங்களில் சாராவின் படிப்பும் நிறைவு பெற அவளுக்கு ஏற்ற விதமான மணமகன் தேட ஆரம்பித்தார்கள். அவர்கள் எதிர்பார்ப்பிற்கேற்ற மணமகனாக அரசாங்க வேலையில் இருக்கும் தாமஸ் அமைந்து விட வெகு விமரிசையாக அவர்களுக்குத் திருமணம் நடைப் பெற்றது. அதிலும் தங்கையின் வீடு ஐந்து நிமிடத் தொலைவிலேயே அமைந்து விட்டது குறித்து அவருக்கு மிகவும் நிறைவாக இருந்தது. சாராவுக்குக் கிறிஸ் பிறந்த ஓரிரு வருடங்களிலேயே அவரது தாயும் மறைந்தார்.

கிறிஸ்ஸிற்கும் தீபனுக்கும் ஏறத்தாழ ஒரே வயது, ஒரே வகுப்பு. இரண்டு குடும்பங்களும் அருகருகே இருந்ததால் அவர்களுக்கிடையே உறவை விட நட்பே அதிகமாகக் காணப் பட்டது. இரண்டு குடும்பத்தினரும் அவர்களை உறவு முறைகளைச் சொல்லியே அழைக்கப் பழக்கியிருந்தார்கள். ஆனால், அவர்களுக்கிடையே எந்த வித விகல்பமான எண்ணமும் ஒரு போதும் அவர்கள் வர விட்டதில்லை.அத்தான் என்னும் அழைப்பிற்கும் அண்ணன் என்னும் அழைப்பிற்கும் அது ஒரு உறவு முறையைக் குறிக்கும் சொல் எனச் சொல்வதைத் தவிர வேறு எந்த அர்த்தமும் கற்பிக்கப் படவில்லை.

ஜீவன் பிறந்த ஐந்தாறு மாதங்களுக்குப் பிறகு ராஜிற்கு அவர்களது அலுவலகத்திலிருந்து வெளி நாட்டுக் கிளை ஒன்றில் பணி புரியும் வாய்ப்பு வந்தது, ஆரம்பத்தில் தற்காலிகமாக ஒரு சில மாதங்களுக்காகச் சென்ற அவருக்கு அங்கேயே தங்கி பணி புரிய வாய்ப்புக் கிட்டியது. அவர் தன் மனைவி, குழந்தைகளை அங்கே கூட்டிச் செல்லும் வாய்ப்பு இல்லாததனால் முதலில் தயங்கினாலும் தான் அனைத்தையும் சமாளித்துக் கொள்வதாக மனைவி கொடுத்த தைரியத்தினாலும், தங்கையின் கணவர் தாமஸ் சாராவும், தாமும் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாகவும் கூறியதன் காரணத்தினாலும், கூடவே தமது குடும்பத்திற்கான வருவாயைப் பெருக்கும் நல்லதொரு வழியாகத் தோன்றியதால் அந்த வாய்ப்பை விடாது பற்றிக் கொண்டார்.

தம் குடும்பத்தின் நன்மைக்காகக் குடும்பத்தைப் பிரியும் தியாகம் நம் நாட்டில் பலபேரும் செய்யும் தியாகமல்லவா ?. கணவனைப் பிரிந்து வீட்டை நிர்வகிக்கும் பெண்ணின் தியாகமும் அதற்கு இணையானதே .

கணவன் நின்று செய்ய வேண்டிய பல செயல்களை அது வீடு கட்டுவதானாலும் , பிள்ளைப் படிப்பிற்காக அலைவதானாலும் தான் ஒருவளாகச் சமாளிக்க வேண்டும் . “ உனக்கென்னம்மா வெளி நாட்டுச் சம்பாத்தியம்  என்று பொருமும் சுற்றத்திற்குத் தெரியுமா ? அவள் ஒவ்வொன்றையும் யோசித்து யோசித்துச் செய்ய வேண்டிய சூழ்நிலை .

வெளி நாட்டிலிருந்து திரும்பும் போது கட்டாயமாகக் குடும்பத்தினர் , தெரிந்தவர்களுக்காக வாங்கி வர வேண்டிய வாசனை திரவியம் , வாட்ச் , இத்தியாதி இத்தியாதி இன்னபிற பொருட்களில் அவர்கள் சேமிப்புக் கரைவதை பிறர் அறிவார்களா ?

ஆண் பாலினர் யாருடனாவது பேசினால் , சிரித்தால் இல்லை யாராவது வீட்டிற்கு வந்து சென்றால் கணவன் இல்லாத நேரத்தில் என்ன செய்கிறாள் பார்த்தாயா ? எனக் கதைக் கட்டி விடும் சுற்றத்திற்குப் பயப் பட வேண்டும்  இப்படி எத்தனை எத்தனையோ ?

அருகாமையில் கணவனின் தங்கை குடும்பம் இருந்த காரணத்தால் மிகவும் மோசமான எந்தச் சம்பவமும் ஏற்படா விட்டாலும் , எதிர் பாராத புதிய பிரச்சினையை அந்தக் குடும்பம் சந்தித்தது . அது ரூபனின் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது . தாம் தம் மகனின் நன்மைக்காகச் செய்வதாக நினைத்துச் செய்த அந்தச் செயல் , மகனின் மனதில் காயத்தையும் , வருத்தங்களையும் ஏற்படுத்தியதை அவர் உணரவில்லை . அது என்னவென்று சற்று இடைவெளிக்குப் பின்பு பார்க்கலாம் .

ரூபன் அறையில் கொஞ்சம் எட்டிப் பார்ப்போமா ?

ரூபன் சற்றே புரண்டுப் படுத்தான் , தன்னைத் தூங்கச் சொல்லிவிட்டு உடனே கண்ணயர்ந்து விட்ட தன் தம்பியை பார்க்கையில் தன்னை வருத்திய துன்பம் மறந்து அவனுக்குப் புன்முறுவல் தோன்றிற்று .

ஹாஸ்டலில் தனிமையான ஒன்பது வருடங்களைக் கழித்து , முகம் தெரியாத எதிரியை சம்பாதித்து , ஒவ்வொரு வருடம் சிறந்த மாணவன் பரிசைப் பெற்றவன் மிகக் கேவலமாகப் பட்டப் படிப்பின் ஒரு வருடம் மீதி இருக்கையில் வெளியேற்றப் பட்டு , நொந்து நூலாகி வந்தவனுக்கு ஆறுதலாக இருந்தது ஜீவனின் நட்பல்லவா ? ஆம் நட்பேதான் சகோதரனை நண்பனாகப் பெற்றவர்கள் பாக்கியவான்கள் என்றால் ரூபன் அந்த வரிசையில் முதல் பத்திற்குள்ளாவது வருவான் என்பதில் சந்தேகமேயில்லை .

அப்போது ரூபன் ஹாஸ்டலிலிருந்து வீடு திரும்பி ஒரிரு வாரங்கள் ஆகியிருந்தன. ஸ்கூலிலிருந்து வந்த ஜீவன் கூண்டில் அடைக்கப் பட்டப் புலி போல நடமாடிக் கொண்டிருந்தான். இந்தச் சின்னப் பையனுக்கு என்ன கவலை இருக்க முடியும்? என்று அவனுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

“அண்ணே நீ மட்டும் அவ கூடப் பேசக் கூடாது சொல்லிட்டேன்” என்றவனின் கூற்றுப் புரியாமல் “ அவன்னா யாரது , யார் கூட நான் பேசக் கூடாது?” எனப் புரியாமல் விழித்தான் ரூபன்.

“அவளுக்கு உடம்பெல்லாம் கொழுப்பு, இன்னைக்கு டீச்சர் காட்டின ரெண்டு பேப்பர்லயும் நல்ல மார்க் வாங்கிட்டான்னு அவ்வளவு பெருமை… எங்க உன் பேப்பர் காட்டுன்னு வந்து நிக்கிறா…

…???

நாளைக்கு உனக்கு இருக்கு மகளே.

…???

உனக்குத் தான் மேத்ஸ் வராதே . உன் மார்க் தெரிஞ்சி கிட்டு உன் அம்மாக்கிட்ட மட்டும் நான் வத்தி வைக்கல…

…???

ம்ஹீம்… வத்தி வச்சிட்டாலும்…செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்காங்க…ஒரு வார்த்தை சொல்ல மாட்டாங்களே…

நகத்தைக் கடித்துத் துப்பியவாறு சட்டென்று தன் அண்ணன் முன் திரும்பி…

இங்க பாருண்ணா அவ எப்பவேணா இங்க வரலாம்… நீ எப்பவும் என் கட்சிதான் புரியுதா…

கேள்விக் கேட்டவனிடம் தலையைப் பிய்த்துக் கொண்டு ” நீ சொன்னது ஒரு வார்த்தை தவறாம எல்லாம் புரிஞ்சிடுச்சிடா”வெனச் சொல்லத் தோன்றியது ரூபனுக்கு.

அவ ரொம்பப் பொல்லாதவ …அவ யாரு வீட்டுக்கு போனாலும் அந்த வீட்டுக்காரங்களே ஒருவேளை இது நம்ம வீடு இல்லையோ … இது அவ வீடு தானோன்னு நினைக்க வச்சிடுவா…ராட்சசி… முண்டக் கண்ணி…

அவன் கை விரல்களில் நகம் தீர்ந்து விரல்களையும் கடித்துத் துப்பி விடுவானோ என்று பயமாக இருந்தது ரூபனுக்கு…

அதே நேரம் “ஹாய் அத்தை” என்றபடி வாயிலில் ஸ்கூல் யூனிபார்மில், மடித்து விட்ட இரட்டை பின்னல்களோடு, தனது அகன்ற கண்களை விரித்து வாய் ஓயாமல் பேசிக் கொண்டு குறும்பு மிளிர தன் அம்மாவின் கழுத்தில் கை கோர்த்துச் செல்லமாய்த் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். தன் தம்பி கொடுத்த களேபரமான அறிமுகத்தில் அது யார் என்று அருகே சென்று பார்த்தே ஆக வேண்டும் என்று அவனுக்குத் தோன்றி விட்டிருந்தது.

சட்டை அணிந்து தனது அறையிலிருந்து வெளி வர அவன் எடுத்துக் கொண்ட ஓரிரு நிமிடங்களில் அவர்கள் இருவருக்கும் இடையே மூன்றாம் உலகப் போர் ஆரம்பித்து இருந்தது. அவளுடைய கழுத்து ஒரு பக்கமாய்ச் சாய்ந்திருக்க ஒரு சடைப் பின்னல் அவனின் கையில் இருக்க “விடுடா விடுடா” என அவள் அதைப் பிடுங்கிக் கொண்டிருந்தாள்.

ரூபனுக்கு இது என்ன திடீரென்று? என்று புரியாமல் அம்மாவைத் திரும்பிப் பார்த்தால் சலனமே இல்லாமல் அவர் தன்னுடைய வேலையைச் செய்து கொண்டிருக்க, அவருக்கு இது ஒரு தினசரி நிகழ்வு எனப் புரிந்தது. கண்முன் நடக்கும்சண்டையை எப்படித் தீர்க்க எனப் புரியாமல் ரூபன் ஜீவனிடம்

“ஜீவா என்னடாச் செய்யுற , அவ முடியை விடுடா” எனத் தன்மையாகப் பேசச் சென்றான்.

அவர்கள் சண்டையில் இடையிட்ட அவன் குரலில் சட்டென்று திரும்பியவள் அவனுக்குத் தன் கண்ணால் ஏதோ சொல்ல முயன்றாள். அவனுக்கு அந்தச் சமிக்ஜைகள் ஏனோ புரியவில்லை. முகபாவங்களால் அவள் சொல்ல முயன்றவைகளை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.எனவே, அவள் தன்னுடைய கடைசி முயற்சியாகத் தலையை வேண்டாம் என அசைத்தவளாக அவனைப் பார்த்துக் கண்ணடித்தாள்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here