22. அமிழ்தினும் இனியவள் அவள்

0
456
Amizhthinum Iniyaval Aval

அத்தியாயம் 22

வழக்கமான மதிய உணவு நேரம் நண்பர்கள் இருவரும் சாப்பிட்டுக் கொண்டே கதை பேசிக் கொண்டிருக்க ரூபன் அவளையே தன் விழியின் ஓரப் பார்வையில் பதித்துக் கொண்டிருந்தான். இன்னும் 10 நாளைக்கு இவளை பார்க்கவியலாது எனும் ஏக்கப் பார்வை அது. வழக்கமாக ஒவ்வொரு பரீட்சையின் பொழுதும் அவள் எடுக்கும் 10 நாட்கள் லீவுகள் தான் அவை, ஒவ்வொரு முறையுமே அவளைப் பார்க்கவியலாமல் அவ்வளவாகத் தவித்துப் போவான். ஆனால், இன்றைய ஏக்கமும் தவிப்பும் வழக்கத்தை விட அதிகமாகவும், காலையிலிருந்து அவனை வேலையில் கவனம் செலுத்த முடியாத அளவு பாதிப்பதாகவும் இருந்தது.

ஜீவனிடம் அனிக்கா ஏதோ வம்பு பேசி சிரித்துக் கொண்டிருந்தாள். அந்த மையிட்ட பெரிய கண்கள் சிரிக்க, அச்சிரிப்பால் அவள் கண்ணோரம் சுருங்கி, கன்னங்கள் உயர்ந்து கண்ணைத் தொட எழும்ப, முத்துப் பற்கள் மினுங்க, சிரிப்பில் மலர்ந்த அவளின் மெல்லிய அதரங்கள் அவனைச் சுண்டி இழுத்தன. உதடுகளின் மென்மையை விரல் கொண்டாவது ஸ்பரிசித்துப் பரீட்சித்துப் பார்க்க அவன் உள்ளம் தூண்ட அவளது முகத்தின் அத்தனை பாவனையையும் தன்னுடைய 576 மெகா பிக்சல்ஸ் கொண்ட கண்களுக்குள் நொடிக்கொரு ஷாட் எடுத்தவனாய் பதித்துக் கொண்டிருந்தான்.

“அண்ணா முதல்ல இவ லீவை கான்சல் பண்ணு? என்ற ஜீவனின் பேச்சில் ரூபனை நோக்கி பார்வையைத் திருப்பிய அனிக்கா அவன் கண்களின் வீச்சை சமாளிக்க இயலாமல், கண்ணோடு கண் பார்க்கவியலாமல் தடுமாறியவளாய் நின்றாள்.

‘எனக்கும் இவ லீவை கான்சல் பண்ண ஆசைதான்’ மனதிற்குள் சொல்லிக் கொண்டவன்.

 டேய் அவ படிக்கிறதுக்குத் தான் விடுப்பு எடுக்கிறா, பரீட்சை ஒழுங்கா எழுதிட்டு வரட்டும், உனக்கென்ன இப்போ?” என்று அவளுக்காகக் கடிந்தவனை,

 அடிக்கடி விடுப்பு எடுத்தா அவ வேலையை யாரு பார்க்கிறது? , உனக்கு இப்படி ஒரு வேலையாள் தேவையா?’

அவனுக்குப் பதில் சொல்லும் விதமாய் அனிக்கா  அதான் அப்பா நான் அலுவலகம் சேரும் போதே நான் படிப்பிற்காக விடுப்பு எடுப்பேன்னு சொல்லியிருந்தாங்கள்ல” என்றுச் சொல்லி ஜீவனை முறைத்தாள்.

 சரி சரி அழாதம்மா குட்டி பாப்பா, விடுப்பு எடுத்துக்கோ ஆனா படிச்சு பாஸாகி என் மானத்தைக் காப்பாத்திடு  என அவளைக் கிண்டல் பண்ணி அடி வாங்கினான்.

“உனக்கு அவ கிட்ட அடி வாங்குறதை தவிர வேற வேலையே இல்லியாடா?” எனச் சிரித்துக் கொண்டிருந்த ரூபனுக்குப் பதில் சொல்ல விடாமல் ஜீவனை அவன் மொபைல் அழைத்தது.

 ஓகே திவ்யா  இன்னும் ஒன் ஹவர்ல நான் அங்கே இருப்பேன்  எனப் போன் வைத்தவனை அவள் வருவது பிக்னிக் அன்றைய தினம் அவள் சம்மதித்திருந்த ஸ்கெட்ச் வரைவதற்கான வேலைக்காக என அறிந்திராத அனிக்கா திவ்யா பெயரைச் சொல்லி அவனைக் கிண்டலடிக்கத் தொடங்கினாள். அனிக்காவிற்கு அவளைச் சுற்றி போட பட்டுள்ள பாதுகாப்பு வேலி குறித்தோ, அன்றைய சம்பவம் குறித்து இன்றுவரை துப்பறியப்படும் விபரம் குறித்தோ தெரியபடுத்த வேண்டாம் என ரூபனும் ஜீவனும் முடிவெடுத்திருந்ததால் அனிக்காவிற்க்கு விளையாட்டாகவே ஒரு பதிலைச் சொல்லி ஜீவன் அங்கிருந்து கிளம்பினான்.

ரூபனும் அனிக்காவும் தனித்திருக்க, சாப்பிட்டு முடித்துக் காலியான டிபனை ஒவ்வொன்றாக அவள் பைக்குள் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் . சாப்பாட்டு டேபிளை சுத்தம் செய்ய ஆள் வரவே எழுந்து கொண்ட ரூபன், “அனி உன்னை வீட்டுக்கு விட டிரைவரை சொல்லட்டுமா?  என்றவனிடம்

“இல்லத்தான் அண்ணா கார் அனுப்பி வைச்சிருக்காங்க, போன் பண்ணிக் கேட்டேன் இப்ப வர்றதா டிரைவர் சொன்னாங்க நான் போய்க்குவேன்” என்றாள் புன்னகையோடு

“சரி” என்றவன் அவளிடம் விடைப் பெற்று தன் வேலைக்குத் திரும்பினான்.

ரூபனும், ஜீவனும் தாங்கள் வீட்டு உபயோகத்திற்க்கு வைத்திருக்கும் காரில் தங்களில் யாராவது டிரைவ் செய்து வருவார்களே தவிர ஃபாக்டரியின் காரை, டிரைவரை வேலை சார்ந்தவற்றுக்காக மட்டுமே உபயோகப் படுத்திக் கொள்வார்கள்.

தொழிற்சாலையின் கார் வழக்கமான பொருட்களைக் கொண்டு செல்ல வரப் போக, மற்றும் தொழிற்சாலையில் யாருக்காவது எப்போதாவது காயம் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவோ மட்டுமே உபயோகப் படுத்துவார்கள். அதனால் ரூபன் உட்பட யாரும் சொந்த தேவைக்கு அதை உபயோகப் படுத்துவது இல்லை.

இன்னும் ஐந்து நிமிடங்களில் வருவதாக டிரைவரின் தகவலைத் தொடர்ந்து அனிக்கா அலுவலக வாசலில் நின்று கொண்டு செக்யூரிடியிடம் பேசிக் கொண்டு நின்றிருந்தாள். தன்னருகில் நிற்கும் செக்யூரிடி அவரது கண்பார்வைக்கு உட்பட்ட சற்று தொலைவிலான தொழிற்சாலையின் இரண்டாவது கேட்டில் டிரைவர் காரைக் கொண்டு நிறுத்துவதை கண்டார்.

அது வழக்கமாக பொருட்களை கொண்டு வருவதற்கான தொழிற்சாலை வேலைக்கான நேரமில்லையென அறிந்திருந்ததால் யாருக்கோ அடிப் பட்டிருக்க வேண்டும் என்று அனுமானித்தவறாக “யாருக்கு அடிப் பட்டிருக்கோ?” எனத் தன்னையறியாமல் கூற அனிக்காவும் அவரது யூகம் சரியாகத் தான் இருக்கும் என்று அனுமானித்தவளாகச் செக்யூரிடியை போலவே வருத்தத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.

தொழிற்சாலை வாயிலில் வண்டியை நிறுத்திய டிரைவர் அடுத்தப் பக்கம் வந்து கதவை திறக்க ரூபன் தன் வலது கையை ஏதோ பெரிய துணியில் பொதிந்தவனாக முகத்தில் சின்னச் சுளிப்போடு காரில் ஏறுவதை அனிக்கா பார்த்துக் கொண்டிருந்தாள்…

 அவனுக்கா அடிப்பட்டிருக்கின்றது?  சட்டென்று அவள் கண்கள் கலங்க ஆரம்பிக்கவே அதே நேரம் அவளை அழைத்துப் போக வந்திருந்த தன்னுடைய காரில் ஏறினாள்.

டிரைவர் அண்ணா, நம்ம ராஜேஷ் அண்ணா ஹாஸ்பிடல் தெரியுமில்ல, அங்கே போங்க  எனக் கூற அவரும் புறப்பட்டார். கார் நகர தொழிற்சாலை வாயிலின் அருகே சொட்டியிருந்த துளி ரத்தங்களில் அவள் கண்கள் நிலைப் பெற்றிருக்க வேகமெடுத்து அதனைக் கடந்து சென்றது கார்.

ஓரளவு மத்திய தரமான ஹாஸ்பிடல் தான் அது, உள்ளே வந்தவள் வழக்கமாக வந்துச் செல்வதன் காரணமாகச் சிகிச்சை பெற வந்த ரூபன் எங்கிருப்பான் என யூகித்தவளாக ராஜேஷின் அறைக்குள் நுழைய முயற்சிக்கப் பக்கத்து அறையில் அவனுடைய காயத்திற்கு தையல் இடுவதற்கான ஆயத்ததில் இருந்தார் டாக்டர் ராஜேஷ்.

 அதெப்படிடா சரியா நான் சாப்பிட போற நேரமா வர்றீங்க?  எனப் பொய்யாய் சலித்துக் கொண்டு, என்ன இயந்திரத்திற்குள்ளே போய்க் கையை விட்டியாக்கும்  என ராஜேஷின் குரல் கேட்க திறந்திருந்த அந்த அறையின் வாயிலில் வந்து நின்றாள் அனிக்கா.

தையல் இடுவதற்காக சுத்தம் செய்து திறந்து வைத்திருந்த ரூபனின் வலது உள்ளங்கையில் அழுத்தமான வெட்டுக்காயம். அதனை இவளால் கண்கொண்டு பார்க்க இயலவில்லை. அனுமதி கேளாமலேயே கண்கள் அருவியாகப் பொழிய ஆரம்பித்தது. சட்டென்று அங்கிருந்து நகர்ந்தவள் வெளியில் சற்று நேரம் இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள்.

நாலு தையல் போடணும் என்று ஆராய்ந்து கூறிய ராஜேஷ் தன்னுடைய வேலையைச் செய்து முடிக்க,

நர்ஸ் அங்கிருந்து நகர்ந்தவுடன் ரூபனிடம்,

என் தங்கச்சி அழுது நான் பார்த்ததே இல்லை தெரியுமா? எனச் சம்பந்தமே இல்லாமல் கேட்க,

அவன் தங்கச்சி எனக் குறிப்பிடுவது அனிக்காவைத் தான் என அவனுக்குத் தெரிந்தும் இப்போது ஏன் அப்படிச் சொல்கிறான்? என்பது போல அவனைப் பார்க்க,

இத்தனை வருஷத்தில இன்னிக்கு தான் அவளை அழுது நான் பார்த்திருக்கேன்  ஏன் ரூபன் நீ அனியை உண்மையாவே லவ் பண்ணுறதானே? என அதிரடியாகக் கேட்க

பகிரப் படாத ஒன்றை எதிர்கொண்ட அதிர்ச்சியில் உண்மையை ஒத்துக் கொள்ளும் விதமாகத் தலையை ஆட்டி வைத்தான் ரூபன்.

கிறிஸ் என்ன சொல்லுவானோ தெரியலை. ஆனா, அவ உன்னை இவ்வளவு லவ் பண்றப்போ அவனும் தான் என்ன சொல்ல போறான்? நீ மட்டும் என் தங்கச்சிக்கு ஏதாவது கஷ்டம் கொடுத்தியோ மகனே அவளுக்கு நாங்க ரெண்டு அண்ணா இருக்கிறோம். உன் எலும்பை எண்ணிடுவோம். எனச் செல்லமாய் மிரட்டியவன் தனக்கு எதிராக இருந்த கண்ணாடியில் தெரிந்து கொண்டிருந்த அனிக்காவின் உருவத்தை ரூபனுக்குக் காட்டினான்.

அதுவரைக்கும் அவள் தனக்குப் பின்னோடு வந்திருப்பதை அறிந்திராத ரூபன், கண்ணாடியின் பிம்பத்தில் சற்றுத் தள்ளி நின்றுக் கொண்டிருப்பவள் கண்ணில் பெருகி வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டு நிற்பதைப் பார்த்து பேச்சற்று நின்றான்.

ம்ம்… என ரூபனின் கவனத்தை ஈர்த்தான் ராஜேஷ்.

“மேடம் நான் க்ளீன் பண்ணிட்டு இருக்கப்ப, உன் கையை எட்டிப் பார்த்துட்டு தான் வாட்டர் ஃபால்ஸை திறந்து விட்டுட்டு இருக்காங்க. நீ போய் வலிக்குன்னு காட்டி கிட்ட இன்னும் அழுவா  வலிக்காத மாதிரி காட்டணும் புரியுதா? என்று மிரட்டியவனைப் பார்த்து ஏதோ ஆஸ்கர் அவார்ட் கொடுத்த பாவனையில் புன்னகை மன்னனாக இளித்துச் சிரித்து வைத்தான்.

போடா டேய், போய் மெடிசின்ஸ் வாங்கிட்டு போ, என்னை நேரத்துக்குச் சாப்பிட விடுங்கப்பா  டேய் மரியாதையா ரிசப்ஷன்ல ஃபீஸ் கட்டிடு. என் தங்கச்சிக்கு மட்டும் தான் ஃப்ரீ சர்வீஸ் புரியுதா?

என அரட்டியவனைப் பாசமாய்ப் பார்த்து ஆமோதித்தான்.

அதற்க்குள் ராஜேஷிடம் வந்து அவனுடைய மருந்துத் தாளை வாங்கிய அனிக்கா மெடிக்கல் போய் மாத்திரைகள் வாங்கி வந்து உடனே சாப்பிட வேண்டியவைகளை அவனுக்கு எடுத்துக் கொடுத்தாள். அடிப்பட்டதன் வலி அவள் கண்ணீரைப் பார்த்த நொடிமுதல் மறைந்திருக்க அவளின் அன்பான கவனிப்பில் ரூபன் மனம் நிறைந்து கொண்டிருந்தான்.

அவள் எத்தனையோ சொல்லியும் கேளாமல் வேலை அதிகமாக இருப்பதாகச் சொல்லி ஹாஸ்பிடலிலிருந்து வீட்டிற்க்கு திரும்பச் சென்று ஓய்வெடுக்காமல் தொழிற்சாலைக்கே மறுபடி திரும்பினான். அவள் மனமே இல்லாமல் வீட்டிற்க்கு திரும்பச் சென்றாள். பரீட்சைக்கு வேறு படிக்க வேண்டி இருக்கின்றதே?

இரவு வரை படிப்பில் மூழ்கியவள் அத்தை வீட்டுக்கு போயிட்டு வாரேம்மா எனப் புறப்படக் கிரிஸ் இவ்வளவு லேட்டா எதுக்கு? என அதட்ட, பிரபா இவ்வளவு நேரம் படிச்சு ஸ்ட்ரெஸ் ஆயிருக்கும் போயிட்டு வரட்டுமே என ஆதரவு குரல் கொடுக்க, சரி சரி துணைக்கு நான் வரேன் என அண்ணனவன் புறப்பட்டான்.

அண்ணா நான் என்ன சின்னப் பாப்பாவா? என அடம்பிடித்து அவளோ தனியே சென்றாள். அங்கே ஜீவன் ரூபனை உடல் நிலைக் காரணம் காட்டி சீக்கிரமே வீட்டிற்க்கு அனுப்பி வைத்து விட்டு தான் இன்னும் வீடு திரும்பி இருக்கவில்லை.

ரூபனின் அறையில் கட்டிலில் முதுகைச் சாய்த்து தலையைப் பின்னோக்கி சாய்ந்து அமர்ந்திருந்தவன் முகத்தில் ஏகத்திற்க்கு களைப்புத் தெரிந்தது. பக்கத்திலிருந்த மாத்திரை அட்டைகளை அவள் எடுத்துப் பார்க்க மதியம் சாப்பிட்டதற்குப் பின்னர்ச் சாப்பிட்டதான அடையாளமே இல்லை.

உடனேயே மருத்துவ ஃபைலில் குறிப்பிட்ட படி இரவுக்கான மாத்திரைகளை எடுத்து அவனருகில் செல்ல,

முதல்ல சாப்பிட்டு மாத்திரைச் சாப்பிடு ரூபன் என்று இந்திரா பின்னோடு வந்து நின்றார்.

ஏற்கெனவே டேபிளில் இருந்த சாப்பாட்டை அவன் களைப்பில் எட்டிப் பார்க்கவும் இல்லை. அனிக்காவிடம் மாத்திரைக்காக இடது கையை நீட்டினான். “சாப்பிடாம மாத்திரை போடாதப்பா” எனத் தாய் கூறுவதைக் கேட்கும் நிலையில் அவன் இல்லை. வலி தெறித்துக் கொண்டிருந்தது.

வலக்கையைத் தூக்கவும் இயலாமல் இருந்ததைப் பார்த்தவள் ஸ்பூன் போட்டு வைத்திருந்த சாப்பாட்டைக் கையிலெடுத்து ஸ்பூனில் கொஞ்ச கொஞ்சமாய் எடுத்து அவனுக்குப் புகட்டி கட்டாயமாய்ச் சாப்பிட வைத்தாள். முதலில் மறுத்தவன். இரண்டு வாய் சாப்பிடவும் தெம்பாக உணர மறுக்காமல் அவள் தந்ததைச் சாப்பிட ஆரம்பித்தான்.

இந்திரா மகன் சாப்பிடுவதைக் கண்டவுடனே அங்கிருந்து நகர்ந்திருக்க, ராபின் தன் சித்தப்பாவோடு சாப்பாட்டில் இணைந்திருந்தான். மாறி மாறி இருவருக்கும் ஊட்டிய பின்னர் அதன் பின் மாத்திரைகளை ரூபனை சாப்பிட வைத்த பின்னரே அனிக்கா அங்கிருந்து நகர்ந்தாள். ரூபனின் கண்கள் அவளைப் பார்த்தவாறே இருந்தன.

சில நாட்கள் கழிந்தன ரூபனின் உள்ளங்கை காயம் ஓரளவிற்க்கு ஆறிப் போயிருந்தது. அன்றிரவு அப்பா மற்றும் அக்காவிடம் ஏற்கெனவே பேசி வைத்திருந்தபடி கான்பிரன்ஸ் காலில் அவர்களை அழைக்கவிருந்தான். எனவே தீபன் ஃப்ரீதா, அம்மா , ஜீவனோடு தன்னுடைய ரூமில் அனைவரையும் வரச் சொல்லி கூட்டி இருந்தான்.

முதலில் வந்த தீபன் ஜீவன் அருகில் வந்து அமர எதிரில் இருந்த சோபாவில் இந்திராவும் ப்ரீதாவும் அமர்ந்தனர். ராபின் இன்னும் தூங்காமலிருந்ததால் உள்ளும் வெளியுமாக நடைப் பயின்று கொண்டு இருந்தான். மழலை பேசிக் கொண்டு ஒவ்வொருவரிடமும் தாவுவதும் திரும்பப் போவதுமாக இருந்தான்.

அனைவரும் வந்த பின்னரே ரூபன் அறைக்குள் நுழைய, என்ன? என்று தீபன் ஜீவனிடம் வினவினான். இன்னிக்கு எல்லோரும் பேசலாமா? என்று ரூபன் சொன்னானே தவிர எதற்காக? என்ன பேசப் போகிறான்? என்று காரணம் சொல்லியிருக்கவில்லை. தன்னுடைய இரண்டு தம்பிகளும் சேர்ந்தே இருப்பதால் சின்னவனுக்குக் காரணம் தெரியும் என்கிற யூகம் அவனுக்கு அதனால் தான் அவனிடம் கேட்டு வைத்தான்.

ஒன்றுமே தெரியாத அப்பாவி போல ஜீவன் தோள்களைக் குலுக்கி எனக்குத் தெரியாது எனப் பதில் கூறினான். அவனுக்கும் உள்ளுக்குள் அனுமானம் இருந்ததேயன்றி நிச்சயமாகக் காரணம் தெரியாது அல்லவா?

உள்ளே வந்த ரூபன் எந்நாளும் இல்லாத திருநாளாய் தன் அண்ணன் தம்பியுடன் அமராமல் அம்மா உட்கார்ந்திருந்த சோபாவின் கீழ் அம்மா காலடியில் அமர்ந்தான். அம்மாவோ ரொம்ப நாள் கழித்து மகன் காட்டிய நெருக்கத்தில் மகிழ்ச்சியோடு அவன் தலையைத் தடவினார்.

அதைப் பார்த்த ஜீவனின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. இவன் என்னமோ திட்டம் போட்டிருக்கிறான் எனச் சிரிக்கத் துடித்த உதடுகளைப் பக்கத்தில் இருந்த தீபனுக்குத் தெரியாமல் அடக்கினான்.

ரூபன் தரையில் அமர்ந்ததும் ராபின் அவன் மடியேறி காதில் ஏதோ சொல்ல இருவரும் ஏதோ பேசி சிரிக்க, ரூபன் ராபினுக்கு முத்தம் வைத்தான், பதிலுக்குச் சித்தப்பாவிற்கு முத்தம் வைத்து விட்டு ராபினும் மறுபடி தன் பொம்மைகளைக் கொண்டு வர அறையை விட்டு வெளியே சென்று விட்டான்.

முதலில் அக்காவிற்க்கு போனைப் போட்ட ரூபன் அக்கா அத்தானிடம் நலம் விசாரிக்க, அவனைத் தொடர்ந்து மற்றவர்களும் பேசி முடிய அப்பாவிற்க்கு கால் செய்து கான்பிரன்ஸ் செய்தான். அவரும் மகன் கூறியதால் ஏதோ முக்கிய விஷயமென அந்தக் காலுக்காகக் காத்திருந்தவர் லைனில் வர மறுபடி ஒரு நலம் விசாரிப்பு ஆரம்பித்துப் பொதுவான பேச்சுக்கள் முடிந்து அனைவரும் அமைதி ஆகினர்.

தான் பேச வேண்டிய நேரம் வந்ததை உணர்ந்தவனாக, அப்பா எனப் போனில் அழைத்து அம்மாவெனப் பக்கத்திலிருந்தவரைப் பார்த்து அக்கம் பக்கம் எல்லோரையும் ஒரு முறைப் பார்த்தவன், என் கல்யாண விஷயமா பேசறதுக்குத் தான் கூப்பிட்டேன்.

ஹேய் என ஜாக்குலின் போனில் உற்சாகக்குரல் எழுப்ப அவள் கணவன் ,முதல்ல ‘உன் தம்பி என்ன சொல்லுறான்னு கேளு’ என அவளை அடக்கினார். அனைவரும் அவன் சொல்வதற்காகக் காத்திருக்க, எனக்கு அனிக்காவை ரொம்பப் பிடிக்கும். எனக்காக அத்தை மாமாகிட்ட பேசுங்களேன்  என்று சுருக்கமாகக் கூறி முடித்தான்.

நம்பவியலாமல் ஆச்சரியமாக தீபன் அவனைப் பார்த்துக் கொண்டிருக்க, ப்ரீதா தன் தங்கை சொன்னதை நினைவில் கொண்டு வந்து ‘ஓ அப்படியென்றால் அது அனிக்காவோ?’ என யோசிக்க, இந்திராவும் ராஜீம் ஒருவழியாக மகன் சொல்லி விட்டான், இனி மேற்கொண்டு விஷயங்கள் பேச வேண்டியது தான் என எண்ணத்திலிருந்தனர்.

ஜீவன் ‘நீ நல்லா வருவேடா’ என்கிற எஃபெக்டோடு ரூபனை நோக்க யாரும் பதில் பேசாத அந்த ஒரு நிமிட இடைவெளி நிறைவுறும் நேரம் யாராலும் அதுவரை கவனிக்கப் படாமலிருந்த அந்த இரண்டரை வயது வாண்டு ராபின்,

“சித்…த…ப்பா எனக்கும் அனி சித்தியை ரொம்பப் பிடிக்கும் 

என்று சொல்ல ரூபனின் அறை மகிழ்ச்சி சிரிப்பில் ஆரவாரித்தது. மகிழ்ச்சியோடு அண்ணன் மகனை மடியில் அள்ளிக் கொண்டான் ரூபன்.

இனிய கனாக் காலம்

என் வாழ்வின்

இனிய கனாக் காலம்.

கனவில் நீயும் நானும்

கைக் கோர்த்து

கண்கள் நான்கும்

ஒன்றையொன்று ஈர்த்து

காலம் தோறும்

தோள் சேர்ந்து கடக்கும்

இனிய கனாக் காலம்

என் வாழ்வின்

இனிய கனாக் காலம்.

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here