23. அமிழ்தினும் இனியவள் அவள்

0
488
Amizhthinum Iniyaval Aval

அத்தியாயம் 23

என் காதலியே,

காதல் என்னைச் செய்யும் கொடுமை பாரேன்.
v

சின்னஞ்ச்சிறு சிண்டுகளும் எனை கலாய்க்க,

என்ன செய்வதென்று புரியாமல் நானும் விழிக்க,

உன் மீது நான் கொண்டுள்ள

தீராக்காதல் செய்யும் கொடுமை பாரேன்.

எனை மீட்கும் வழியாக முழுமனச் சம்மதம் சொல்லி

முற்றிலுமாய்

இக்கொடுமைத் தீரேன்…

தன்னெதிரே அமர்ந்து கடந்த பத்து நிமிடமாகச் சிரித்துச் சிரித்து வெறுப்பேற்றிக் கொண்டிருக்கும் தன்னுடைய தம்பி ஜீவனை முறைப்பதா? , திட்டுவதா? என்று புரியாமல் உட்கார்ந்திருந்தான் ரூபன்.

அவனும் என்னதான் செய்வான்? குடும்பத்தைக் கூட்டி திருமணத்திற்கான தன்னுடைய விருப்பத்தை மட்டும் சொல்லுவதோடு நில்லாமல் ஏதோ தன்னுடைய தொழிற்சாலைக்கான திட்டம் போல எண்ணி தான் மே போட்டு வைத்திருந்த திட்டமனைத்தையும் விரிவாய் தன்னுடைய குடும்பத்தினர் முன் விளக்கி வைத்தான். உடனே அவனுக்கும் அனிக்காவுக்குமான நிச்சயத்தை வைத்துக் கொண்டு, அனிக்காவின் படிப்பு முடிந்த பின் திருமணம் வைத்தால் போதும் என்று பெருந்தன்மையாகக் கூறவும் செய்திருந்தானே?

இதில் தன்னுடைய முடிவு மட்டுமே முடிவும் இறுதியுமானது அல்ல, பெண் வீட்டாரும் சிந்திக்க வேண்டிய ஒன்று என்பதை வசதியாக மறந்து விட்டான் போலும். அவன் தான் மணப் பெண்ணின் விருப்பம் கூட அறிந்து கொள்ளாமல் திருமணப் பேச்சு பேசியவனாயிற்றே? அவனுக்கு மற்றது எல்லாம் எங்கே ஞாபகம் இருக்கப் போகிறது?

முன் தினம் அப்பாவின் ஃபோன் வந்ததிலிருந்து ‘தான் என்னதான் யோசித்துச் செய்தாலும் எங்கேயாவது சறுக்கி விடுகின்றோமோ?’ என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தான்.

நடந்தது வேறு ஒன்றுமில்லை, ரூபன் ஆசைப் பட்டிருந்தாலும் கூட அவனை முன் நிறுத்தாமல் தானும் இந்திராவும் அனிக்கா தங்கள் மருமகளாக வர வேண்டுமென்று விரும்புவதாக ராஜ் தாமஸோடு தொலைபேசியில் உரையாடி இருந்தார். அனிக்காவை ரூபனுக்கு தர சம்மதமென்றால் தான் தன் வீட்டினரை சம்பிரதாயமாகப் பெண் பார்க்க வரச் சொல்லட்டுமா? எனவும் கேட்டிருந்தார்.

ஆனால், அது யாராக இருந்த போதும் பெண் கேட்டவுடனேயே பெண்ணைப் பெற்றவர் உடனே சரியென்று சொல்ல முடியுமா? சொல்லத்தான் செய்வார்களா? எனவே தாமஸ் ராஜிடம் தான் இது குறித்து வீட்டில் பேசி யோசித்து முடிவெடுப்பதாகச் சொல்லி விட்டார் அதைத் தான் ஜீவன் இப்போது ரூபனிடம் சொல்லி கிண்டலடித்துக் கொண்டிருந்தான்.

ரூபனுக்குச் சற்றே சிடு சிடுப்பு வந்ததோ என்னவோ தன் மனதிற்க்குள் தாமஸையும் அனிக்காவையும் வறுத்தெடுத்தான். அப்பாவும் பொண்ணும் ஒரே மாதிரி பேசறாங்க “யோசிச்சுச் சொல்றாங்களாம்  என இருவரும் ஒரே மாதிரி பேசியது குறித்துக் குமைந்தான். என்னவோ கடற்கரையில் ரூபன் அனிக்காவிடம் காதல் சொன்ன போது, தாமஸ் அனிக்கா அருகில் நின்று “யோசிச்சு சொல்றேன்னு சொல்லும்மா” என்று கூறியதால் தான் அவள் கூறியதைப் போலக் குறைப்பட்டுக் கொண்டிருந்தான்.

இந்தத் தாமஸ் மாமாதான் அப்படிச் சொன்னார்னா அதையே பிடிச்சிட்டு இவனும் என்னைக் கிண்டலடிக்கிறானே?

டேய் நான் உன்னை விடப் பெரியவண்டா  கொஞ்சம் மரியாதை குடு …”

 ஹா ஹா  

‘ஏய் ஜீவா… வர வர என் லவ் ஸ்டோரில உனக்கு என்ன கேரக்டர்னே புரியலடா வில்லனா? காமெடியனா? இல்ல சப்போர்டிங்க் ரோலா இல்ல நிறைய நேரம் நீயே தான் ஹீரோவா நான் சைட் ஹீரோவான்னு குழப்பமா இருக்கு. என்னைக் கடுப்பேத்துற வேலையைப் பார்க்காம செய்ய வேண்டிய வேலையைப் பாரு சொல்லிட்டேன்’ கடுப்பில் ரூபன் சொல்ல,

நக்கலாகப் பார்த்தவாறு ஜீவன் நின்றான்.

ஒரு விரலை நீட்டி தம்பியை எச்சரித்தவன், ‘அவர் ஒண்ணும் நெகட்டிவா சொல்லல, வீட்ல பேசிட்டு சொல்லறேன்னு தான் சொல்லிருக்கார். சீக்கிரம் பதில் சொல்வார் .எங்க மேரேஜ் நடக்கத்தான் போகுது, அப்புறம் உன்னை என்ன செய்றேன்னு பாரு  

ஆமாமாம் அனி அன்னிக்கு உன் கிட்ட யோசிச்சு சொல்றென்னு சொன்னப்ப கூட நீ இப்படிச் சொன்னதா தான் நியாபகம் … எனக் கிண்டலடித்தவன் தன்னை அடிக்கத் துரத்திய அண்ணன் கையில் மாட்டாமல் ஓட்டம் பிடித்தான்.

அனிக்காவோ ஒரு விசித்திரமான மன நிலையில் இருந்தாள், ஒருபக்கம் கோபமாகவும், இன்னொரு பக்கம் ஆறுதலாகவும் இன்னும் அவளுக்கு என்னென்னவோ வித்தியாசமாகத் தோன்றிக் கொண்டிருந்தது. அவளது பரீட்சைகள் முடிந்து விட்டிருந்தன.

‘கிறிஸ்மஸ் முடிந்தபின் அலுவலகம் போகலாம்’ என்று சொல்லி விட்டதால், வீட்டை கிறிஸ்மஸ்ஸிற்காக அலங்கரிப்பதிலும், ஷாப்பிங்கிலும் அவளது நேரம் பறந்து கொண்டிருந்தது. கூடவே அண்ணன் மகள் ஹனிக்கு ப்ரீ கேஜி கிறிஸ்மஸ் காரனமாய் லீவு விட்டிருக்க அவளோடு கொட்டம் அடிப்பதற்கே அவளுக்கு நேரம் சரியாக இருந்தது.

பொதுவாகவே ஜீவனோடு நேரில் பேசுவதோடு சரி, அடிக்கடி தொலைபேசியில் பேசுவது அவர்களுக்கிடையே பழக்கமில்லை என்பதாலும், தற்போது தொழிற்சாலையில் சற்று அதிகமான வேலை இருக்கும் என்பதால் ஜீவனை இவள் தொந்தரவு செய்வதாகத் தோன்றும் என்பதாலும் அவனுடன் அவள் அதிகமாய் பேச நேரிடவில்லை.

அதே நேரம் அத்தை வீட்டிற்க்கு அவள் செல்ல முயலும் போதெல்லாம் அம்மா அவளுக்கு வேறு ஏதாவது வேலை கொடுத்துக் கொண்டிருக்க அங்குப் போகவே முடியாமல் ஆயிற்று.

அவர்கள் வீட்டின் அலுவலக அறை போலப் பயன்படுத்தப்படும் அந்தச் சிறிய அறையில் அண்ணனும் , அப்பாவும் பேசிக் கொண்டிருக்கும் குரல் அங்கிருந்து கடந்து சென்றவளுக்குக் கேட்க, அந்த அறையை ஒட்டி இருக்கும் பகுதியில் நிற்கும் தன் அன்னையின் முகவாட்டம் அவளைத் தடுத்து நிறுத்தியது.

‘நான் ஒரு பேச்சுக்கு தான் சம்பளம் கொடுக்க வேணான்னு சொன்னேன்டா அவன் என்னன்னா இது தான் சாக்குன்னு இத்தனை மாசமா நம்ம பிள்ளையை ஒத்த ரூவா கூடக் கொடுக்காம வேலை வாங்கி இருக்கான் பாரேன்  

என அப்பா அண்ணனிடம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தவள், விஷயம் புரிபடவும் சட்டெனத் தன் அறை நோக்கி விரைந்தாள்.

தன் முன்னே விரிந்து கிடந்த வங்கி பாஸ் புக், ஏடி எம் கார்ட், காலாண்டு வங்கி ஸ்டேட்மெண்ட்கள் அனைத்தையும் பதிலற்றவராகப் பார்த்துக் கொண்டிருந்தார் தாமஸ்.

‘ஏன்பா இப்படி எல்லாம் பேசறீங்க? அவங்களும் நம்ம ஃபேமிலிதானே? இப்படிப் பேசினா அம்மாக்கு கஷ்டமா இருக்காதா? என் கிட்ட விஷயம் கேட்டிருந்தா நான் முன்னேயே சொல்லி இருப்பேன். எனக்கு முதல் மாசத்தில இருந்தே மற்ற எம்ப்ளாயீஸ் மாதிரி அத்தான் சம்பளம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. நீங்க வேண்டான்னு சொல்லியும் அவங்க கொடுத்தா தப்பா நினைச்சுக்குவீங்கன்னு உங்க கிட்ட சொல்ல வேண்டான்னு சொல்லிட்டாங்க. எனக்குத் தான் செலவே இல்லையே அதான் நான் இந்த ரூபாய இது வரை உபயோகப் படுத்தவே இல்லை’

என்றவளின் கூற்றின் படி அந்தச் சமீபத்திய ஸ்டேட்மெண்ட். அவளது வங்கிக் கணக்கின் பேலன்ஸாகச் சில லட்சங்களைக் காட்டிக் கொண்டிருந்தது.

அதுவரை தந்தையிடம் பேசியவள் அன்னையின் அருகில் சென்று கரத்தைப் பிடித்து அவரது தோளில் செல்லமாகச் சாய்ந்து கொண்டு அவரது முகபாவனையை ஆராய்ந்தாள். தன்னுடைய கணவன் அனாவசியமாகப் பேசிக் கொண்டிருந்த ஒரு விஷயம் இல்லையென்றானதில் சாராவுக்கு ஒரு விதத்தில் தலை நிமிர்வுதான் என்றாலும் இன்னமும் அவர் உள்ளத்தின் கலக்கம் மறையவில்லை. அனிக்காவை பெண் கேட்டு தன் அண்ணனுடைய போன் கால் வந்த நேரம் முதலாகக் கணவனுடைய நடவடிக்கை அவருக்குச் சரியாகத் தோன்றவில்லை.

ஏதோ தான் பரம்பரை பணக்காரர் போலும் தன் அண்ணன் வீட்டினர் தகுதியற்ற பிரஜைகள் போலும் நடந்து கொள்வது அவருக்குப் பொறுக்க முடியவில்லை. விருப்பமில்லை என்று சொல்லி ஒரே பேச்சாக இதை முடித்து விட்டிருந்தாலாவது நன்றாக இருக்கும். அதை விட்டு விட்டு கடந்த சில நாட்களாகக் கிறிஸ்ஸிடம் தன் அண்ணனை அவர் குடும்பத்தைக் குறித்து விவாதிப்பது அவருக்கு மனதிற்குக் கொஞ்சமும் உவகை அளிக்கவில்லை.

என்னதான் கிறிஸ் தன்னுடைய தலை மூத்த மகனாக இருந்தாலும், ஒரு தாயாக அவன் அவருக்குச் சின்னப் பையன்தானே. மனைவியின் பிறந்த வீட்டினர் என்றும் பாராமல் அவனை வைத்துக் கொண்டு கணவர் விமரிசிப்பது அவருக்கு மனச் சங்கடத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில் கிறிஸ் தந்தையின் பேச்சை செவி கொடுத்து கேட்டானே தவிர அவரோடு இணைந்து அதற்கேற்ப பேசி பேச்சை வளர்க்கவில்லை. தாயின் மனதை நோகடித்து விடக் கூடாது என்கிற விதத்தில் தன்னுடைய இரண்டு பிள்ளைகளின் அணுகுமுறைகள் குறித்தும் அவருக்குப் பெருமிதம் தோன்றிற்று.

தன்னுடைய மகளுக்கான வரன் தன் அண்ணன் மகனென்றால் அவருக்கு மகிழ்ச்சிதான். ஆனால், மனைவி விருப்பத்தை எப்போதும் அறிந்து நடப்பவர் மகள் திருமண விஷயத்தில் மட்டும் தன்னை ஒதுக்கியே வைத்திருப்பது மனதை கஷ்டப் படுத்தினாலும், கணவருடைய பிடிவாதம் அறிந்தவராக அவராக என்ன முடிவெடுத்தாலும் சரி தான் உயிராக எண்ணும் மகளுக்குச் சரியாகத் தான் அவர் தெரிவு செய்வார் என்று எண்ணிக் கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்தார்.

தூங்கி விட்ட தன் மகளைத் தூக்கிப் போக அனிக்கா அறைக்கு வந்த பிரபாவை, அனிக்கா (ஹனி விழித்து விடக் கூடாதென்பதற்காக) தன் வாயில் விரல் வைத்து சமிக்ஜை காட்டியவளாகத் தன்னுடைய அறையின் டெரஸிற்க்கு கூட்டிச் சென்றாள்.

என்னாச்சு அனி?

உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கணும் அண்ணி?

தன்னை எப்போதும் ஒற்று வேலை செய்ய வைக்கும் தன் செல்ல நாத்தனாரின் தலையில் செல்லமாய் முட்டி இப்ப என்ன டவுட்டுங்க மேடம், தினமும் நான் வர்றப்போ அத்தையும் பொண்ணும் வாயில போற கொசு தெரியாம தூங்கிட்டு இருப்பீங்க. இன்னிக்கு நீ கொட்டு கொட்டுன்னு முழிச்சு இருக்கியேன்னு பார்த்தேன் எனச் சிரித்தாள் பிரபா.

வீட்ல ஏதோ படம் ஓடிட்டு இருக்கு ஆனா என்னன்னு தான் எனக்குப் புரிய மாட்டேங்குது? என்னைச் சின்னப் பிள்ள சின்னப் பிள்ளன்னே எல்லாரும் ஒதுக்கி வைக்கிறாங்க அண்ணி  … செல்லமாய்க் கொஞ்சம் வருத்தமாய் உதட்டை பிதுக்கியவள். எனக்கு இப்போ 23 வயசு ஆகப் போகுது நான் என்ன சின்னப் பிள்ளையா அண்ணி? அம்மா ஏதோ டென்ஷன்ல இருக்கிறா மாதிரி , அப்பாவும் ஏதோ வித்தியாசமா பேசறாங்க  உங்களுக்கு ஏதாவது தெரியுமா?

முதலில் கொஞ்சம் யோசித்தாலும் தானும் சொல்லாமல் விட்டால் இன்னும் வருத்த படுவாளோ? என்றெண்ணியவளாக,

 அதெல்லாம் ஒண்ணுமில்லடா  உனக்கு ஒரு அலையன்ஸ் வந்திருக்கா, அதான் அவங்க டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தாங்க.

அது ஏன் அண்ணி எனக்கு எதுவும் அலையன்ஸ் வந்தா என் கிட்ட கேட்க மாட்டேங்கிறாங்க?

ஏன்னா, முதல்ல நல்லா யோசிச்சிட்டுச் சரிவந்தா தான் உனக்குச் சொல்லணும்னு. அதுக்கப்புறம் உன் விருப்பம் கேட்பாங்களா இருக்கும் என்றாள் தணிவாகவே, அனிக்காவுடைய விருப்பம் இல்லாமலேயே எத்தனையோ முடிவுகள் எடுக்கப் படப் போகின்றன என்பது பிரபாவிற்கு எங்கே தெரிந்திருக்கப் போகிறது?.

சரி டவுட் க்ளியராச்சா குட்டி  நான் போறேன் என்ன?

அண்ணி நான் குட்டி இல்ல  சிணுங்கியவள்.  .சரி சரி சீக்கிரம் போங்க இல்லன்னா அண்ணன் கீழ இருந்து கத்துவாங்க, அனிம்மா உன் அண்ணி அங்கே வந்தாளான்னு  கண்ணடித்துச் சிரித்து வைக்க, கிறிஸ்ஸின் குரல் கேட்டது.

அனிம்மா உன் அண்ணி அங்கே வந்தாளா  ?

இதோ இங்கேதான் இருக்கேன் வரேன் என்று கணவனுக்குப் பதில் கொடுத்ததோடு செல்லமாய் அனிக்காவிற்குக் கொட்டு வைத்து விட்டு மகளைத் தோளில் போட்டுக் கொண்டு புறப்பட்டவள் ஸ்ஸ்  அண்ணி என்ற கிசு கிசுப்பான குரலுக்குத் திரும்பினாள்.

கண்ணாலேயே என்னவென்று கேட்டவளிடம் 

சரி அந்த அலையன்ஸ் யாருன்னு சொல்லவேயில்லியே? என அதே தொனியில் கேட்க, அதற்க்குள் கதவின் அருகே சென்று விட்டிருந்தவள் திரும்பி மெல்லமாய்,

 ரூபன்  என்று சொல்லி சென்று விட்டாள்.

என்னது ரூபனா? நின்றவிடத்திலேயே சிலையாய் சில நிமிடங்கள் சமைந்தவளின் தூக்கம் அன்று கெட்டது. தன்னுடைய அப்பாவின் தற்போதைய மாறுபாடான செய்கை , அம்மாவின் முகவாட்டம் அவள் எண்ணத்தினின்று விலகிப் போக, ரூபன் எப்போது தன்னை மணக்க கேட்டிருப்பான்? என்று எண்ணியவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

தன்னுடைய வீட்டினர் தான் தன்னைச் சின்னப் பிள்ளை போலப் பாவிக்கிறார்கள் என்றால் இவனுமா? எனக் கண்ணில் நீர் கோர்த்தது.

அனிம்மா எனக்கு உன்னை ரொம்ம்ப்ப பிடிக்கும். ரொம்பன்னா எவ்வளவுன்னு சொல்ல தெரியலை. ஆனா நீ தான் என் லைஃப், நீ இல்லன்னா என் லைஃப்ல ஒண்ணுமே இல்லை… நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா? உனக்கு என்னைப் பிடிக்குமா? நான் இன்னும் அம்மாக்கிட்ட சொல்லல, முதல்ல உன்கிட்ட தான் பேசணும்னு காத்திட்டு இருந்தேன். நான் நம்ம கல்யாணம் விஷயமா வீட்டில பேசட்டுமா? நீ என்னைக் கட்டிப்பியா?”

ரூபனின் குரல் காதினருகே கேட்ட உணர்வு அவளுக்கு, அவன் என்னிடம் கேட்டான் தானே? மனம் அவனுக்காகச் சப்பைக்கட்டுக் கட்ட, அதுக்கு நான் தான் யோசிச்சு சொல்றேன்னு சொல்லியிருந்தேன்ல  தனக்குள்ளாக முரண்டியது.

ரூபன் செய்தது சரியா தவறாவெனத் தனக்குள் வாதிட்டு வாதிட்டு சோர்ந்து தூங்கிப் போனாள். காலையில் எழுந்ததும் கூட அந்த நெருடல் அவளைச் சற்று அரித்துக் கொண்டே இருந்தது. வழக்கம் போலத் தன்னுடைய கிறிஸ்மஸ் தயாரிப்பில் மூழ்கிப் போனாள். அதில் சில நாட்களாகத் தன்னை அம்மா, இந்திரா அத்தை வீட்டிற்க்கு போக அனுமதிக்காமலிருப்பது அவளுக்கு ஞாபகத்திற்கு வரவே இல்லை.

என்னதான் ரூபன் தன்னைக் கேட்காமல் இப்படி ஒரு செயல் செய்தது அவளுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அவளுக்கு அவனுடைய அணுகுமுறை ஒரு வகையில் மிகவும் பிடித்தமானதாக இருந்தது. எவ்வளவு தான் காலம் மாறிவிட்டதாகக் கூறினாலும் தன்னுடைய பிள்ளைகள் தங்களுடைய விருப்பத்திற்கேற்ப திருமணம் செய்வதையே எல்லோரும் விரும்புவர். இப்படி இருக்கத் தனக்குத் தர்ம சங்கடம் தராமல் தன்னுடைய பெயரையே வெளியே எடுக்காமல் ரூபன் தானாகத் திருமணப் பேச்சை ஆரம்பித்து இருப்பது கௌரவமான ஒன்றாகவே தோன்றியது.

அப்படியே அனிக்கா ரூபனிடம் யோசித்துப் பதில் சொல்லியிருந்தாலும் வீட்டில் வந்து பேசச் சொல்லுவதாகத் தான் இருந்தாள். இப்போ நடக்கிற மாதிரி நடக்கட்டும். இந்த ரூபன் அத்தான் நேரில் வந்து பேசும் போது அவங்களுக்கு வைக்கிறேன் ஆப்பு என்று தன் கோபத்தைத் தீர்க்க திட்டங்கள் தீட்டலானாள்.

ரூபனின் நிலைமையோ நாளுக்கு நாள் குழப்பத்தை அடைந்து கொண்டு இருந்தது. தான் திருமண விஷயம் பேசியது முதலாக அனிக்காவை பார்க்கவே முடியாமல் ஆயிற்று. பரீட்சை முடிந்த பின்னர் ஆஃபீஸில் பார்க்கலாமென்றால் அத்தை ஃபோன் செய்து அவள் கிறிஸ்மஸ் முடிந்த பின் வேலைக்கு வருவதாகக் கூறி வைத்து விட்டார்.

அவளை நேரில் போய்ப் பார்க்கவும் வழி வகையில்லை, காரணம் எதுவும் கூட இல்லையே? திருமண விஷயம் வேறு பேசி இருக்கிற நேரம் அதிகபிரசங்கித் தனமாக எதையாவது செய்து அவள் வீட்டினரிடம் தனக்கு இருக்கின்ற இமேஜை டேமேஜ் செய்ய அவனுக்கு விருப்பமில்லை.

இப்போது அவளைத் தனிமையில் சந்திக்க அவனுக்கு இருந்தது ஒரே ஒரு வாய்ப்பு அது கிறிஸ்மஸ் அன்றைய தினத்தின் வாய்ப்பு. வழக்கமாக டிசம்பர் 24 அன்றைய இரவின் கிறிஸ்மஸ் திருப்பலி (Mass) முடிந்ததும் சர்ச்சிலிருக்கும் ஒருவர் விடாமல் கைக் குலுக்கி வாழ்த்துச் சொல்லி விட்டு தான் அனைவரும் திரும்பி வருவர். மற்றவர்கள் மறந்து சென்று விட்டாலும் இளையோர் உற்சாகமாக அனைவருக்கும் வாழ்த்துச் சொல்லாமல் இருந்ததில்லை.

அனிக்காவும் அப்படியே, வழக்கமாக அவளிடம் கூட்டத்தோடு கூட்டமாக வாழ்த்து வாங்க விருப்பமின்றி அவள் கண்பார்வையில் படாமலேயே சீக்கிரமாக வீடு திரும்பி விடுவான் அவன்.

அவனைப் போன்று விடுபட்டவர்கள் தவிர மற்ற எல்லோருக்கும் வாழ்த்துக் கூறியிருக்க, யாரெல்லாம் விடுபட்டார்களோ அவர்களுக்கு வாழ்த்துச் சொல்ல அவள் கிறிஸ்மஸ் அன்று கட்டாயமாக வீட்டில் ஆஜராவாள்.

வருடாவருடம் அவளிடம் அப்படியே வாழ்த்துப் பெற்றுக் கொண்டிருந்தவன் இந்த வருடமும் அதையே பின்பற்ற முடிவுச் செய்தான். அவளிடம் திருமணத்திற்க்கு விருப்பமா? என்றும் கையோடு கையாக (ஹேண்ட் ஷேக் செய்யும் போது விடாம பிடித்துக் கேட்டு விட வேண்டியது தான் ஹி ஹி) என்றும் எண்ணினான்.

அவளிடம் கேட்காமலேயே அவள் வீட்டில் திருமண விஷயம் பேசிய பின்னால் அவளிடம் போய் உனக்கு இதில் விருப்பமா? என்று கேட்டால் தவறாக எண்ணுவாளோ? என்று அப்போது முதன் முறையாகச் சரியாக யோசித்தான். (உனக்குத் துடைப்பக் கட்டை ரெடியா இருக்கு மேன்)

இப்படிப் பல பேருடைய எதிர்பார்ப்புக்களைச் சுமந்து வண்ணமயமான கிறிஸ்துமஸ் விழாவும் வந்தது. டிசம்பர் 24 அன்று இரவு வீடுகளும் ஆலயமும் ஜொலி ஜொலித்தன. கிறிஸ்துமஸ் தாத்தாக்களாக வேடமிட்டிருந்தவர்களைக் குழந்தைகள் மொய்த்தனர். ஒவ்வொரு வீட்டிலும் கிறிஸ்மஸ் குடிலும், கிறிஸ்மஸ் ட்ரீயும் அலங்கரிக்கப் பட்டு மினுக் மினுகென ஒளியை உமிழ்ந்தன. ஆலயத்தில் கிறிஸ்து ஏசு பிறப்பைக் கொண்டாடும் கேரல் பாடல்கள் இனிமையாய் ஒலித்தன. ஒவ்வொருவராகத் தங்களுடைய புத்தம் புது உடைகள் அணிந்து, பெண்கள் நகை ஆபரணங்கள் சூடி, பூக்களின், வாசனை திரவியங்களின் வாசனை சூழ, மகிழ்ச்சியின் குரல்கள் கேட்க, அந்த இரவிலும் உற்சாகத்தில் தூக்கம் தொலைத்து உற்சாகமாக வளையவரும் சின்னஞ்சிறுவர்கள் அனைவரும் வந்து சேர ஆலயத்தில் ஆடம்பர திருப்பலி மகிழ்வுடன் ஆரம்பித்து நடைப் பெற்றது.

திருப்பலி நிறைவு வரை செபத்தில் நிலைத்திருந்த ரூபன். ஜெபத்திலும் தனக்கு மனைவியாக அனிக்காவையே வழக்கம் போல இறைவனிடம் வேண்டினான். திருப்பலிக்கு பின்னரே அவளைக் கவனித்தான். (சர்சில் சைட் அடித்தால் பின்னால் ஒருக்காலம் பேச்சு வாங்க வேண்டி வரும் என்கிற பயம் தான்.)

கிறிஸ்துமஸ் உடையாக டிசைனர் சேலையில் இருந்தாள் அனிக்கா, வழக்கம் போல அவளிடம் பதிந்த விழிகளைப் பிய்த்து எடுப்பதற்க்குள் ரூபனுக்குப் பெரும்பாடாக ஆகிவிட்டது. தன்னை நோக்கி அவள் வருவதாகத் தோன்றவும் சட்டெனக் கூட்டத்தில் நகர்ந்து அவள் கண்ணில் படாமல் மறைந்து போனான்.

அடுத்த நாள் காலையிலிருந்து ரூபனுக்கு ஒரு இன்பமான எதிர்பார்ப்பு மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தது. மதியம் சமையலறையிலிருந்து வித விதமான பதார்த்தங்கள் தயாரிக்கும் வாசனை நாசியை நிரப்பிற்று. இரவே அப்பா ,அக்கா, அத்தான் பிரின்ஸ் எனத் தூரத்தில் இருக்கும் உறவுகளுக்கு வாழ்த்துச் சொல்லி ஆயிற்று…நேரம் கடந்தது இன்னமும் அனிக்கா ரூபன் வீட்டிற்க்கு வந்திருக்கவில்லை.

மற்றெல்லா வருடங்களும் இன்னேரத்திற்க்குள் வீட்டிற்கு வந்து என் டிரெஸ் நல்லாயிருக்கா?வென எல்லோரிடமும் கேட்டு ஒருவழிப் பண்ணியிருப்பாள் என எண்ணியவன் முகத்தில் புன்னகை உறைந்தது.

மதியம் சாப்பாடு முடிந்தும் கூட அவள் வந்திருக்கவில்லை, மனதை ஏமாற்றம் கவ்வியது.அந்நேரம் பரேஷின் அலைபேசி அழைப்பு வர அதை ஏற்றான்.

 ஓ சரி நான் வரேன், நீங்களும் அங்கேயே  .ஓ யெஸ் யெஸ் …” வீட்டில் விடைப் பெற்றவனாகக் கிளம்பினான்.

பரேஷ் அன்று அனிக்காவிற்கு கடலில் நிகழ்ந்த விபத்து குறித்த தன்னுடைய ரிப்போர்ட்டை சமர்ப்பிக்கவிருந்தான். ஜீவன் வீட்டில் இல்லை, மற்ற யாருக்கும் அது குறித்துத் தெரிவிக்க ரூபன் விருப்பபடவும் இல்லை. எனவே, தன்னுடைய அலுவலகத்தில் விபரம் சமர்ப்பிக்கக் கூறி பரேஷை அழைத்தவன் அவனைச் சந்திக்கப் புறப்பட்டுக் கொண்டிருந்தான்.

பரேஷ் தரும் ஆதாரத்தை வைத்து காவல்துறைக்குச் சென்று தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவனுடைய நோக்கமாக இருந்தது. அனிக்கா மேல் கை வைத்தவனைச் சும்மா விடுவதா? மற்றெல்லா விஷயமும் பின்னுக்குப் போக அதே கடல், அதே விபத்து, அதே தவிப்பிற்க்குள் மற்றொரு முறை மூழ்கியவனாக ஆஃபீஸிற்கு வந்து சேர்ந்தான்.

பரேஷிம் சற்று நேரத்தில் வந்தவன், தன்னிடமிருந்த பெரிய என்வெலப் ஒன்றை அவன் கையில் கொடுத்தான்.

ஹாப்பிக் கிறிஸ்மஸ் என்று வாழ்த்திய கையோடு தான் உடனே வெளியே செல்ல வேண்டியிருப்பதால் விபரங்களடங்கிய ஃபைலை ரூபன் பார்த்துச் சதேகமிருந்தால் தனக்குப் போன் செய்யச் சொல்லிக் கூறியவன் மறக்காமல் முக்கியமானதொன்றைக் கூறிச் சென்றான்.

சார் நீங்க நினைக்கிற மாதிரி இந்த ப்ரூஃப் வைச்சி அந்த ஆளை உள்ளே எல்லாம் தள்ள முடியாது. அன்னிக்குப் பஸ் கிட்ட இந்த நபரைப் பார்த்த எங்க ஏஜென்சி நபர், திவ்யா மேடம் ஹெல்ப்ல கிடைச்ச ஸ்கெட்ச், அவரோட ஃபோன் ரெகார்ட் காண்பிச்ச லொகேஷன்ஸ் எல்லாம் ஒருவேளை இவரா தான் இருக்குமோன்னு ஒரு யூகத்துக்கு வழி வகுத்திருக்கே தவிர, அவர் அப்படிச் செஞ்சதை யாருமே, ஏன் அனிக்கா மேடமோ இல்லை திவ்யா மேடமோ கூடப் பார்க்க வில்லை. அதனால முழுக்க முழுக்க இவர் மேல நாம உறுதியா குற்றம் சாட்ட முடியாது.

நான் அன்னிக்கு பீச்சுக்குக் குளிக்கதான் போனேன் அது தப்பான்னு அவர் கேட்டா? கோர்ட்டில கேஸ் நிக்காது. ஆளும் பெரிய இடம் போல இருக்கு பார்த்துச் செய்யுங்க 

செல்லும் முன் தன்னுடைய வேலைக்குச் சம்பளமாகிய பெரும் தொகையைக் கேஷாகப் பெற்றுக் கொள்ளவும் மறக்கவில்லை. அத்தனையையும் மறைவாக வைக்க எண்ணிய ரூபனுக்கு அதற்கான ஆதாரமாக எதையும் விட்டு வைக்க எண்ணமில்லை. பேங்க் ட்ரான்ஸாக்ஷன் ஒன்று விடாமல் கவனிக்கும் அனிக்கா கண்ணிலிருந்து அது தப்ப வேண்டுமே? அதற்காகத்தான் பணமாக கொடுத்தான்.

பரேஷ் சென்று விட ஃபைலை திறந்தவன் முகத்தில் குழப்ப முடிச்சுக்கள். அதில் விக்ரமின் ஆதி முதல் அந்தம் வரை குறிப்பிடப் பட்டிருந்தது. தற்போதைய போன் நம்பர், மெயில் ஐடி முதலியனவற்றைச் சட்டென்று தன் ஃபோனில் சேமித்தான்.

விக்ரமா? ஏன்? எதற்கு? பல்வேறு கேள்விகள் எழும்ப, கல்லூரியில் தான் அவன் பற்க்களை உடைத்ததையும், அது எவ்வளவு பெரிய குற்றம் என்று உணர்ந்ததும் அதற்குத் தாம் மனமார வருந்தியதும் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று எண்ணியதையும் அது நிறைவேறாதது குறித்தும் நினைவிற்கு வந்தது.

அதைத் தொடர்ந்து பரீட்சை எழுத செல்லுகையில் அவன் பேசிய தரக் குறைவான வார்த்தைகளை விடத் தான் அவனுக்கு இழைத்த தவறே அவனுக்குக் குற்ற உணர்ச்சியைத் தூண்டி மன உளைச்சல் தந்ததையும், தான் அதற்கு உளவியல் ரீதியான சிகிட்சை பெற்ற பின்னரே நலமானதையும் யோசித்துப் பார்த்தான்.

பரீட்சை எழுதச் செல்லும் போதே அவனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று எண்ணியே சென்றிருந்தான். ஆனால், விக்ரம் தான் அதற்கு வாய்ப்புக் கொடுக்கவேயில்லையே? விரட்டி விரட்டி அடிப்பது போலல்லவா அவனுடைய கடும் சொற்கள் இருந்தன.

அவனுக்கு என் மீது கோபம் இருப்பது நியாயமானது, ஆனால், அவன் அனிக்காவை தாக்க ஏன் முயற்சி செய்ய வேண்டும்? அதுவும் எப்படிப் பட்ட கொடூரமான தாக்குதல்? … ரூபனின் மனதில் தான் செய்த தவற்றிற்கு மன்னிப்பு கேட்கவில்லையே என்று அதுவரையிலிருந்த நெருடல் உணர்ச்சி மறைந்து கோபம் கொழுந்து விட்டு எரியலாயிற்று.

எதுவானாகிலும் சரி அவனிடம் பேசி ஒரு முடிவிற்கு வர வேண்டும். அனிக்காவிற்கு எதுவும் ஆகிவிடுமோ? என்னும் பயத்தோடு எத்தனை நாள் தான் பதட்டத்திலிருப்பது? விக்ரமிடம் பேச போனை எடுக்க அதே நேரம் விக்ரமின் வாய்ஸ் மெசெஜ் ஒன்று அவன் இன்பாக்ஸில் வந்து சேர்ந்தது.

அவசரமாய் அதை ஒலிக்க விட்டான்.

 ஏண்டா ஏய் பொ  பயலே அவனுடைய ட்ரேட் மார்க்கான வசவுகள் வரிசையாய் விழ பற்களைக் கடித்துக் கொண்டு அவன் என்ன சொல்ல வருகிறான் எனக் கேட்க காத்திருந்தான்.

டிடெக்டிவ்க்கு டிடெக்டிவ் வச்சவனை நீ என்னிக்காச்சும் பார்த்திருக்கியா  ஹே ஹே  இளிப்புச் சத்தம் அது நான் தாம்ல  யாரு? அவன் பரேஷ் இப்பதான் உன் அலுவலகத்திலிருந்து புறப்பட்டதாக எனக்கு தகவல் வந்தது. நீ எனக்குப் போன் பண்ணி பேசுறது, நீ கேள்வி கேட்டு நான் சொல்லுறது இதெல்லாம் எனக்குப் பிடிக்காத விஷயம்…என்னப் புரியுதா?.. நான் பேசுவேன்… ஆமா நான் மட்டும் தான் பேசுவேன, நான் பேசறத நீ கேட்கணும். என்ன புரிஞ்சதா? என நிறுத்தியவன் குரலில் தான் எத்தனை ஆணவம்.

இப்ப எதுக்கு உன் அத்தைப் பொண்ண குறி வச்சிருக்கேன்னு நீ வேணும்னா நினைக்கலாம். எனக்கு வாழ்நாளெல்லாம் வருத்த படற மாதிரி காயத்தைத் தந்துட்டு போனவன் நீ. அப்போ நானும் உனக்குப் பதிலுக்கு அப்படி ஒன்னு தரணுமில்ல… எல்லாம் அதுக்காகத்தான்… அந்தப் புள்ளபூச்சிக்கு கெட்ட காலம் அதான் உன் கண்ணுல பட்டு, பின்ன என் கண்ணுல பட்டு  .ச்சே  அன்னிக்கே அவள முடிச்சிருக்கணும் தப்பு பண்ணிட்டேன்  பார்த்தியா அதான் உன் கிட்டல்லாம் பேசிட்டு இருக்க வேண்டியதா போயிடுச்சு…

நீ பெரிய இவன்… செக்யூரிட்டி வச்சிருந்தா நாங்கல்லாம் அப்படியே பயந்து பம்மிடுவோம் பாரு. இப்ப உன் அத்த மவ எங்கிருக்கா?னு கொஞ்சம் உன் வாட்ஸ் அப்பை திறந்து பாருடா மவனே  என்று முடிந்திருந்தது

வாட்ஸ் அப்பில் வரிசையாக ஃபோட்டோக்கள் வலம் வர டவுன்லோட் ஆகி ஒவ்வொன்றாய் பார்வைக்குக் கிடைத்தது. அத்தனையும் அவனுக்குச் சர்சில் முன்தினம் தரிசனம் தந்த அதே டிசைனர் சாரியில் அனிக்கா அழகாய் புன்னகைத்தபடி பின்னே நின்றிருக்க அவளுக்கு முன் நின்றவனாக விக்ரம் எடுத்திருந்த செல்ஃபிக்களாக இருந்தன.

அதிர்ச்சியில் செயலற்று நின்றான் ரூபன்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here