24. அமிழ்தினும் இனியவள் அவள்

0
527
Amizhthinum Iniyaval Aval

அத்தியாயம் 24

யோசித்து யோசித்து ரூபனுக்குத் தலை வின் வின்னென்று தெறிக்க ஆரம்பித்தது. பரேஷின் ரிப்போர்ட் வரும் வரை மட்டும் தொடருவதாக இருந்த அனிக்காவின் பாதுகாவலை முதல் வேலையாக தான் கூறும் வரை இன்னுமாய் நீட்ட வேண்டுமென்று தொடர்பு கொண்டு தெரிவித்தான்.

செக்யூரிட்டி சர்வீஸில் இருந்து வழக்கமாக இரவில் அவனுக்கு வரும் தினசரி ரிப்போர்ட்டுக்காக காத்திருக்க இயலாதவனாக, இன்றைய நிலவரம் என்னவென்று அப்போதே விசாரித்து தெரிந்துக் கொண்டான்.

அனிக்கா மதியம் அவள் வீட்டிற்கு வந்த ஒரு விருந்தாளியோடு வெளியே சென்றதாகத் தகவல் கிடைத்தது. தன்னிடமிருந்த புகைப்படத்திலிருந்த விக்ரமின் படத்தை அனுப்பி அது விக்ரம் தான் என்று உறுதி செய்து கொண்டான். விக்ரம் அனிக்காவின் வீட்டிற்குள் செல்லுமளவும் அப்படி அவனுக்கு அனிக்காவின் வீட்டினரோடு எப்படி நெருக்கம்? என்று குழம்பினாலும் அதன் காரணம் அவனுக்குப் புலப்படவில்லை.

அனிக்காவின் வீட்டினர் அவளுடைய தோழியரோடு கூடச் சட்டென்று எங்கும் அனுப்பாதவர்கள் ஆயிற்றே? விக்ரமோடு எப்படி வேளியில் செல்ல அனுமதித்தனர்? என அவனுக்கு மனதில் பல கேள்விகள் எழுந்தன. கூடவே அவளுடைய வீட்டிலிருந்து விக்ரம் அனிக்காவை அழைத்துச் சென்றிருப்பதால் நிச்சயமாய் இன்றைய தினம் அவளுக்கு ஆபத்து ஒன்றும் விளைவிக்க மாட்டான் என்கின்ற ஆசுவாசமும் தோன்றிற்று.

தன்னிடமிருந்த விக்ரமின் அனைத்து போன் நம்பர்களிலும் அவனைத் தொடர்பு கொள்ள ரூபன் முயற்சித்துப் பார்த்தான், அவற்றில் எந்த நம்பரும் பதிலளிக்கப் படாததால் அவனைத் தொடர்பு கொள்ள வழியில்லாமல் திணறினான். விக்ரம் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலிலும் சென்று விசாரித்தான் அதற்க்குள்ளாக அங்கிருந்தும் அவன் செக் அவுட் செய்து விட்டிருந்ததாகத் தகவல் வரவே ரூபனின் நிலை முட்டுச் சந்தில் போய் முட்டிக் கொண்ட நிலையானது.

ரூபனுக்கு விக்ரமைக் கொல்லும் அளவிற்கு ஆத்திரம் வந்த போதும் இயன்றவரையில் விவேகமாகச் செயல்பட எண்ணினான். தன் மேலிருக்கும் கோபத்தைத் தன்னிடம் மட்டும் காட்டச் சொல்லி, அவனுக்குத் தேவையானதென்ன என அறிந்து தன்னுடைய தவறுக்கு எத்தகைய தண்டனைப் பெறவும் அவன் சித்தமாக இருந்தான்.

மறுபடி ஒரு முறை விக்ரம் மேல் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி அவனுக்கு உயிரானவளை இழக்க மட்டும் அவனால் இயலாது என்பதே அதற்குக் காரணம். அதற்காகத் தான் அவனைச் சந்தித்து அவனிடம் மன்னிப்பு கேட்கவும், அவன் தரும் தண்டனைகளை ஏற்கவும் தயாராக இருப்பதாகச் சொல்லி பல்வேறு செய்திகளை விக்ரமுக்கு அனுப்பி வைத்தான். அவற்றிற்குப் பதிலொன்றும் கிட்டவில்லை.

அடிக்கடி விக்ரம் அனுப்பிய ஃபோட்டோவே நினைவிற்கு வந்து ரூபனை இம்சித்தது, அதில் அனிக்கா கொலைஞன் முன்னால் நிற்கும் பலி ஆட்டைப் போலவே அவனுக்குத் தெரிந்தாள். இல்லை, முடியவே முடியாது தலையை உதறிக் கொண்டான். ஒரு நாளும் எவனோ ஒருவன் தன் மேல் கொண்ட பழிவெறிக்காக அவளது வாழ்க்கையைப் பலியிட முடியாது. அதற்காக நான் எந்த எல்லைக்கும் செல்வேன் என்று உறுதிக் கொண்டான்.

செய்ய வேண்டியவை என்னவென்று வரிசையாகத் திட்டமிடலானான்.

அதில் முதலாவதாக ஜீவனைத் தன்னுடைய இந்தப் பிரச்சினையினின்று விலக்கி வைப்பதை முடிவுச் செய்தான். அவனுடைய தற்போதைய சூழல் போர்க்களத்திற்கு ஒப்பானதாகத் தோன்றிற்று. ஏற்கெனவே இவனுக்காக அனிக்காவை குறி வைத்திருக்கும் விக்ரமின் பழி உணர்ச்சிக்குத் தன்னைச் சார்ந்த மற்றெவரையும் பாதிப்பில் ஆழ்த்த அவன் விரும்பவில்லை.

இரண்டாவதாக அனிக்காவை இந்த விஷயத்தினின்று பாதுகாப்பது எப்படி? என்ற கேள்விக்குக் கிறிஸ் அல்லது தாமஸ் மாமாவிடம் சொல்லலாமா என யோசித்தால், ரூபனை அவர்கள் எத்தனை தூரம் நம்புவார்கள்? எனப் புரியவில்லை . உனக்காக என் மகளை ஏன் குறி வைக்க வேண்டும் என்று கேட்க, தான் சொல்லும் பதில் எந்த அளவிற்கு அவனுக்கும், அவன் காதலுக்கும் நலம் பயக்கும் என்றும் ஒரு முடிவிற்கு அவனால் வர முடியவில்லை.

தன் மகளை அவனுடன் அனுப்பி வைக்கும் வரைக்கும் நெருக்கமான விக்ரம் குறித்து இவன் என்ன கூறினாலும் அதற்கு உரிய விதத்தில் யோசித்து அவர்கள் தீர்வு காண முன் வருவார்களா? என்பதும் தற்போதைய சூழலில் சந்தேகமே?

தன்னிடம் இருக்கும் ஆதாரங்கள் மற்றும் தற்போதைய ஆடியோ முதலியன போலீஸில் கொடுத்து உதவி கேட்டால் என்ன? என்று தோன்றிய ஐடியாவை செயல்படுத்த முடியாமல் விக்ரம் குறித்த எண்ணம் தடுத்தது. அவன் நினைத்தால் எதையும் தலைகீழாக மாற்றும் வல்லமை படைத்தவன். யோசிக்காமலா வாய்ஸ் மெஸேஜ் அனுப்பியிருப்பான்.

இப்போது போலீஸ் உதவியை நாடினால், அதனால் குடும்பத்தில் ஏற்படும் குழப்பத்தினூடே தன்னுடைய எண்ணத்தை விக்ரம் எளிதாக நிறைவேற்றிக் கொள்வான். தான் பதட்டப்பட்டு அவனுக்கு எந்த வாய்ப்பையும் கொடுத்து விடக் கூடாது என்று எண்ணினான். அதே நேரம் தான் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது எப்படி முடியும்? என்றவனாய் பரேஷைத் தவிர்த்து அவனைப் பரிந்துரைச் செய்த தனக்குப் பரிச்சயமான போலீஸில் இருக்கும் நபரிடம் விசாரித்து மற்றொரு டிடெக்டிவ் ஏஜென்சியின் விபரம் பெற்று அவர்களை அணுகி தன்னிடமிருந்த அனைத்து தகவல்களையும் ஒப்படைத்து வந்த பின்பே அவனால் ஓரளவுக்கு நிம்மதியாகச் சுவாசிக்க முடிந்தது.

இப்படிப் பல சோர்வுகளோடு பலமணி நேரங்கள் கழித்து மதியம் சென்றவன் சாயுங்காலத்தில் வீடு திரும்பியபோது அனிக்கா அவன் வீட்டிலிருந்தாள்.

வாசலினின்றே அவளைப் பார்த்தவன் முன் தினத்தின் ரசனை பார்வை எல்லாம் எப்போதோ அவனிடமிருந்து விடைப் பெற்றுச் சென்றிருக்க அழுத்தமாய்த் தலை முதல் கால் வரை அவளை ஆராய்ந்தான். அவளோ தன்னுடைய வழக்கமான சிரிப்போடு தீபனிடம் முகம் மலர பேசியவாறு நின்றுக் கொண்டிருந்தாள்.

அவளுடைய கண்ணைத் தொடும் அகல புன்னகைக் கண்டு வழக்கமாய் எழும் ஆசை எழாமல் இப்போது ஆத்திரம் தான் வந்தது. இப்படித்தானே அவனோடும் சிரித்துக் கொண்டு நின்றாள்.

‘அறிவே கிடையாதுடி உனக்கு? யாரோடு பேச வேண்டும்? யாரிடம் சிரிக்க வேண்டும்? எப்படிப் பழக வேண்டும் என்று ஒன்றும் தெரியாது? பச்ச பிள்ளை மாதிரி சிரித்து வைக்க மட்டும் தெரியும்’ எண்ணியவன் பற்கள் கோபத்தில் நற நறத்தன.

அவனுக்கு இருந்த பதட்டத்திற்கு இப்போதே அவளைத் தன் மனைவியாக்கி அவனிடமே பத்திரமாக வைக்கத் தோன்றிற்று. ஆனால், அது முடியாதே? இவளுக்குத் தான் அப்படி எதுவும் செய்தால் பிடிக்காதே. எல்லாம் முறையாகச் செய்ய வேண்டுமாம். ஏடாகூடமாக நான் எதையாவது செய்து வைக்க அவள் என்னை வெறுத்து விட்டால் எனப் பயமெழ  ம்ஹீம் அவனிடம் பெருமூச்செழுந்தது.

இவளை எப்படி நான் காப்பாற்றப் போகிறேன்? மனதை மறுபடி ஒருமுறை பயப்பந்து அழுத்தியது. அதே சிந்தனையில் அவர்களைக் கடந்து சென்றான்.

 அத்தான் நான் விஷ் பண்ண வந்தேன். ஹாப்பிக் கிறிஸ்மஸ்  என்று சொல்லி ரூபன் முன் வந்து நின்று அவனிடம் கை நீட்டிய அனிக்காவிற்கு அது வரை ஞாபகம் வராத அவனது பெண்கேட்ட நிகழ்வு அப்போது சட்டென்று ஞாபகத்திற்கு வர என்ன செய்யவெனப் புரியாமல் திக்கு முக்காடினாள்.

அனிக்காவின் கரம் பற்றி அவளுக்கு வாழ்த்துச் சொன்ன தம்பியையும் ,அவளையும் முதன் முறையாக ஜோடிகளாக எண்ணி கண் நிறையப் பார்த்துக் கொண்டிருந்தான் தீபன். அவர்களைப் பார்க்க பார்க்க அவனுக்கு மிக அழகாகத் தோன்றிற்று. அவர்கள் ஒருவருக்கொருவர் பேசட்டும் என்றெண்ணியவனாக அங்கிருந்து நகன்று சென்றான்.

 அனி உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்  என்றவனாக அவன் தன் அறைக்குள் நுழைய, திருமண விஷயம் குறித்தோவென எண்ணியவளாய் மிகத் தயங்கி எட்டுக்கள் எடுத்தவளாய் அவன் பின்னே அவளும் உள்ளே வந்தாள்.

என்னத்தான்?..

அவன் கரத்தைப் பற்றித் தன் தலை மேல் வைத்தவன்.

எனக்கொரு பிராமிஸ் செய்வியா? என்றவனிடமிருந்து தன் கரத்தை விலக்கியவள்

நீங்க என்ன லூசா அத்தான்? என அவள் பொறியவும் திகைத்து விழித்தான்.

தன் மேல் சத்தியம் கேட்டது அவளுக்குப் பிடிக்கவில்லையோ? என அவன் எண்ணியிருக்க,

நம்மளுக்குப் பிராமிஸ் செய்யிறதுக்கெல்லாம் பர்மிஷன் கிடையாது அது உங்களுக்குத் தெரியாதா? எனச் சொல்ல அவளது ரூல்ஸ் ரெகுலேஷன்ஸ் அவதாரம் குறித்து ஜீவன் சொன்னது அப்போது தான் ஞாபகம் வந்து தொலைத்தது. இனிமேல் சொல்லி முடிக்காம நிக்க மாட்டாளே? சரி திட்டட்டும் கொஞ்சம் திட்டு வாங்கிக்குவோம் என எண்ணிக் கொண்டான்.

நமக்குக் காட் பிராமிஸ் அப்படில்லாம் சொல்ல பர்மிஷன் கிடையாது ஏன்னா அவர் நம்மை விட ரொம்ம்பப் பெரியவர், அட் தெ சேம் டைம் நம்ம மேல பிராமிஸ் செய்யவும் பர்மிஷன் கிடையாது, ஏன்னா நாம காட் பிள்ளைங்க ஆச்சே, நம்ம மேல நம்மள விடக் காட் (God)க்கு தான் நிறைய உரிமை இருக்கு, நமக்குக் கிடையாது எனச் சொல்லி முடித்தாள். புரிஞ்சுதில்ல  எனத் துணைக் கேள்வியும் வேறு கேட்க,

புரிந்ததாகத் தலையை ஆட்டியவன் ஸாரி இனி பிராமிஸ்லாம் கேட்கலை. அதை விடு நான் எதுவும் சொன்னா நீ கேட்பல்ல, நான் உன் நல்லதுக்குத்தான் சொல்வேன்.

ம்ம் 

நான் இப்படில்லாம் எதுக்குச் சொல்றேன்னு ரீசன் எல்லாம் இப்ப என்னால சொல்ல முடியாது அனிம்மா, ஆனாலும் நான் சொல்றதை நீ கேட்கணும் சரியா?  கொஞ்ச நாளைக்கு நீ தனியே எங்கேயும் போகக் கூடாது? யார் கூடயும் வெளிய போறப்ப அம்மா, அப்பா, அண்ணா, அண்ணி யாரையாவது துணைக்குக் கூட்டிட்டு போ. நாளைக்கு அலுவலகம் வர்றப்போ ஜீவன் கூட வா, தனியே வராதே சரியா? 

ஏறத்தாழ தன்னிடம் கெஞ்சிக் கொண்டிருந்தவனை எதற்காக இப்படிச் சொல்கிறானோ? எனப் பார்த்தவள்.

அவன் ப்ளீஸ் எனவும், சரி என்றவாறு அவன் அறையை விட்டும் வெளியேறினாள்.

சற்று நேரமுன்பு வெளியே சென்று விட்டு வந்திருந்த இந்திராவும் , ப்ரீதாவும் அவளை விசாரிக்க அவர்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

தன்னுடைய அறையினின்றே ரூபன் அத்தனையையும் கவனித்துக் கொண்டு இருந்தான். அவன் எதிர்பார்த்தது போலவே அவளது மதிய நேர சம்பவங்களை அவளாகவே சொல்லிக் கொண்டிருந்தாள்.

நான் இங்கே வரனும்னு தான் புறப்பட்டேன் அத்தை, அம்மாவும் இங்கே கொண்டு வர்றதுக்கு என் கிட்ட கொடுத்து விடக் கிறிஸ்மஸ் ஸ்வீட்ஸ் எல்லாம் எடுத்து வச்சிருந்தாங்க, நான் வெளியே புறப்படவும் ஒரு வெளியூர் ரிலேடிவ் அப்பாவப் பார்த்துப் பேச வந்திருந்தாங்களா  அவங்களுக்கு ஷாப்பிங்க் செய்யக் கூடப் போய்ட்டு வர ஹெல்ப் செய்ய அப்பா சொன்னாங்க. நம்ம xxx மால் (Mall) க்கு தான் ஷாப்பிங் கூட்டிட்டு போனேன்.

நானும் உடனே ஷாப்பிங்க் முடிஞ்சிடும்னு நினைச்சி போனா இவ்வளவு நேரம் ஆச்சு. அவங்க எவ்ளோ ஷாப்பிங்க் பண்ணினாங்க தெரியுமா அத்தே? … நானே டயர்ட் ஆயிட்டேன் ஷப்பா …. லாக்ஸ் ல பில் வந்திருக்கும். நாம ஒரு வருஷம் செய்யிற ஷாப்பிங்க ஒரு நாள்ல செஞ்சிருக்கார். எல்லாம் அவங்க கர்ள் ஃபிரண்டுக்காம்  கிளுக்கிச் சிரித்தவள்  நான் தான் அவங்க கர்ள் ஃபிரண்ட்க்கு ஷாப்பிங்க்கு ஹெல்ப் செஞ்சேன்னு என் ஃபோட்டோ காட்டணும்னு சொல்லி என்னோட செல்ஃபி வேற எடுத்து அனுப்பிச்சார்…என மேலும் சிரித்தாள்.

வரும்போது லேட் ஆகிடுச்சா? … அதான் நான் அந்த ரிலேட்டிவ்ட சொல்லி இங்கேயே இறங்கிட்டேன். வீட்டுக்கு போயிட்டு திரும்ப வரனும்னா இன்னும் லேட்டாகிடும்ல. நாளைக்கு ஸ்வீட்ஸ் கொண்டு வரேன் என்றாள். இனி அடுத்த முறை அவள் இந்த வீட்டிற்க்கு வருவதற்க்குள் என்னென்ன பிரச்சினைகளையோ எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது என்பதை அறியாதவளாக…

ஏற்கெனவே தாமதமாகி விட்டதால் அனிக்காவை வீட்டில் விடத் தீபன் சென்று வந்தான். தீபனை வரவேற்று பேசிக் கொண்டு இருந்தார் சாரா, அனிக்காவிற்குத் தீபன் அங்கிருந்து செல்லும் வரை வீட்டில் எல்லாம் சரியாக இருந்ததாகவே தோன்றிற்று. அதன் பின்னால் ஏனோ மனதிற்க்கு சரியாகத் தோன்றவில்லை.

கிறிஸ்மஸ்ஸிற்காக மதியம் பிரபா வீட்டிற்க்கு சென்றிருந்த கிறிஸ், பிரபா மற்றும் ஹனி மறுநாளே வருவதாக இருக்க, அவர்கள் வீடு வெறிச்சோடியிருந்தது.

தனியே தூக்கம் வராமல் படுக்கையில் உருண்டு கொண்டிருந்த அனிக்கா பக்கத்தில் அம்மா வந்து அமர, வாகாய் அவர் மடியில் படுத்துக் கொண்டாள் அவள்.

அனி நீ ஷாப்பிங்க் போனவ நேரா விட்டுக்கு வந்திருக்க வேண்டியது தானேம்மா. எதுக்கு அத்த வீட்டுக்கு போன? கணவன் தன்னிடம் காட்டிய கோபத்தை மகளிடம் வெளிப்படுத்தாதவராக அமைதியாகக் கேட்க,

இல்லம்மா நான் மதியமே போறதா இருந்தேன், ஆனா ஷாப்பிங்க்லர்ந்து வரவே லேட்டாயிடுச்சுல்ல அதான் அத்தைக்கு, அத்தானுக்கு எல்லாம் விஷ் பண்ண போனேன். ஏன் இந்தப் புதிதான கேள்வி என்பது போலத் திரும்பி தாய் முகம் பார்த்தாள்.

உனக்குக் கல்யாணத்துக்குப் பேசிட்டு இருக்காங்க குட்டிம்மா. இனிமேல் நீ அங்கே எல்லாம் போக வேண்டாம்? ஆஃபீசுக்கும் போகாம இருக்க அப்பா சொல்லிருக்காங்க. இன்னும் கொஞ்ச நாள் தான் நீ நம்ம வீட்ல இருக்கப் போற, அதுவரைக்கும் அம்மா கூடக் கொஞ்சம் டைம் ஸ்பெண்ட் பண்ணுவியாம் சரியா? சொல்லும் முன்பே சாராவின் குரல் தளதளத்து விட்டது.

அம்மா  வென்றவள் அவரை இடுப்பைக் கட்டியவண்ணம் தன்னையறியாமல் வெளியேறிய கண்ணீரை அவர் சேலையிலேயே அழுத்தி துடைத்தாள்.

இருவாரங்கள் கடந்திருந்தன. ரூபனுக்கு விக்ரமிடமிருந்து எந்தத் தகவலுமில்லை, அவனுடைய தொடர்ந்த முயற்சிகளும் தோல்வியுற அவனோடு ரூபனாலும் தொடர்பு கொள்ள இயலவில்லை., அவனோ அடிக்கடி இருப்பிடம் மாற்றிக் கொண்டிருந்தான். இங்கே இருக்கிறான் என அவனுக்குத் தகவல் வரும், சந்திக்கச் செல்லும் முன்பே அவன் அந்த இடத்தை விட்டு சென்றிருப்பான். இப்படியே இவர்கள் இருவருக்கும் இடையேயான கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்ந்தது.தன்னைக் குறித்து விக்ரமின் திட்டங்கள் குறித்து ஒன்றையும் ரூபனால் யூகிக்கவும் முடியவில்லை.

தான் அனிக்காவை பாதுகாக்க வைத்திருந்த நபர்கள் மூலமாக விக்ரம் ஓரிரு முறை அனிக்காவின் வீட்டிற்க்கு சென்றதாகத் தகவல் கிடைத்தது. ஆனால், அவனோடு அனிக்கா எங்கும் வெளியில் செல்லவில்லை. அவனோடு மட்டுமல்ல அவள் வீட்டை விட்டு வெளியே எங்குமே சென்றிருக்கவில்லை.

தான் விக்ரமை பின் தொடர்வதைச் சலித்து நிறுத்திவிட்டிருந்த ரூபன், அவன் அனிக்காவை நெருங்காமலிருக்கும் விதமாக அத்தனையும் ஏற்பாடு செய்திருந்தான். தன்னுடைய பாதுகாப்பு வளையத்திற்குள்ளாக அனிக்கா இருப்பதால் அவளுக்குத் தீங்கு எதுவும் நேராது என்ற நிம்மதி ஒரு புறம் இருந்தாலும் சமீப காலப் பல்வேறு பிரச்சினைகள், வேலைப் பளு, மற்றும் அனிக்காவைப் பல நாட்களாகப் பார்க்காமல் ஏறத்தாழ பைத்தியக்காரனைப் போல ரூபன் இருந்த நேரம் தான் அவனுக்கு அந்தத் தகவல் வந்தது.

ரூபனுக்கு அனிக்காவைத் தர சம்மதமில்லை என்பதாகவும், அவளுக்கு வேறு இடத்தில் திருமணம் முடிவாகி இருப்பதாகவும் தாமஸ் ராஜீக்கு போன் மூலமாகத் தகவல் தெரிவித்து இருந்தார்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here