25. அமிழ்தினும் இனியவள் அவள்

0
522
Amizhthinum Iniyaval Aval

அத்தியாயம் 25

ஆத்திரமா? அதிர்ச்சியா? ஏமாற்றமா? தான் உணர்வது என்னவென்று தெரியாமல் ரூபன் திண்டாடினான். ஏற்கெனவே அதிகமாக யாருடனும் தன்னுடைய உணர்வுகளைப் பகிர்ந்து பழக்கமில்லாத காரணத்தால் உள்க்குள்ளேயே தன்னுடைய எண்ணங்களை வைத்து வெந்து கொண்டிருந்தான்.

தன் அனிக்காவிற்கு வேறு ஒருவரோடு திருமணம் என்பதை எவ்வாறு எடுத்துக் கொள்ளுவது? என்று அவனுக்குப் புரியவில்லை. அனிக்கா தன்னை நேசித்தது உண்மையல்லவா? அவளது கண்களில் கண்ட காதல் உண்மையேதானே? இல்லை நானாகவே கற்பனை செய்து கொண்டேனோ? எனத் தனக்குள் மூழ்கியவன் தன் எண்ணங்களை ஜீவனிடமோ, அம்மாவிடமோ கூடப் பகிர்ந்து கொள்ள இயலாதவனாக இறுகிப் போனான். வழக்கமான தன்னுடைய வேலைகளில் கூட அவனால் முன்போலக் கவனம் செலுத்த முடியவில்லை.

பல நேரம் எதற்காக இதெல்லாம்? இந்த உயரம் அவளுக்காகவே தான் முயன்று அடைந்ததல்லவா? அவளே தன் வாழ்வில் இல்லை என்றான பின்னே எதற்கு இதெல்லாம்? அத்தனையையும் உதறி தள்ளிவிட்டு சென்று விடலாமா? என்று எண்ணினான். தன்னைச் சார்ந்து இருப்பவர்கள், தன்னுடைய தொழிற்சாலையின் பணியாளர்களின் நலன் குறித்த எண்ணமும் மட்டுமே அவனைத் தற்போது கட்டிப் போட்டிருந்தது.

ஜீவனுக்குத் தன்னுடைய அண்ணனின் மன நிலைக் கேற்ப அவனைத் தொந்தரவு செய்யாமல், அதே நேரம் அவனுக்கும் சேர்த்து இன்னும் அதிகமாக வேலையில் ஈடுபட வேண்டி இருந்தது. இத்தனைக் குழப்பத்தில் அவர்களுக்கும் ஒருவர் ஒருவரிடம் மனம் விட்டுப் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை.

தீபன் ரூபனிடம் ஆறுதலாகப் பேச எண்ணினான். ஆனால், ரூபனோ யாரிடமும் பேசுகின்ற நிலைமையில் இல்லை. வேலையில் தன்னை மூழ்கடித்துக் கொளவதும், தன்னிஷ்டம் போல வருவதும், போவதுமாக இருந்தான். அவன் என்ன யோசிக்கிறான்? என்ன செய்கிறான்? என யாருக்குமே புரியவேயில்லை.

மாடியிலிருந்தது அந்த விஸ்தாரமான அறை, அவர்களின் வீட்டு ராஜ குமாரிக்கெனவே பிங்க், ஸ்கை ப்ளூவென அவளுக்குப் பிடித்த வண்ணங்களால் அலங்கரித்துப் பார்த்து பார்த்துக் கட்டிய அறைதான் அது. ஏசி தேவையே இல்லாமல் இயற்கை காற்று ராஜ்ஜியம் செலுத்தும் அறையாகும். அனுமதி இல்லாமல் யாரும் ஒரு போதும் அங்கு நுழைந்தது இல்லை என்பதால் எந்நேரமும் அவ்வறையின் கதவு திறந்தே இருக்கும்.

காற்றின் வேகத்தில், அழுத்தத்தில் எப்போதும் மூடியே காணப்படும் அந்தக் கதவை அழுத்தமாக யாராவது திறந்தால் அதே வேகத்தில் மறுபடி நிலையில் சென்று பெரும் சப்தம் எழுப்பி அடித்து, அடைத்துக் கொள்ளுவது வழக்கமான ஒன்றுதான். சற்றும் உற்சாகமில்லாமல் சோம்பி இலக்கற்று வெறித்துக் கொண்டிருந்த அனிக்காவிற்கு அந்த வழக்கமான தடாலெனும் சப்தம் சட்டென்று தன் மௌன நிலையினின்று கலைத்து எழுப்பி விட்டதோடு அல்லாமல் அவளுக்குள்ளே நடு நடுக்கத்தையும், பயத்தை உண்டாக்கியது. எனவே, அவள் தட தடவெனத் தன் இதயம் அதிர எழுந்து அமர்ந்தாள்.

“என்னாச்சு பாப்பா? நான் தான் க்ளீன் பண்ண வந்தேன்” என அறையைச் சுத்தம் செய்ய வந்திருந்த அமுதா மிரண்டவளாக இருந்த எஜமானர் மகளிடம் பரிவாய் கூறினார்.

 இல்லக்கா ஒன்னுமில்ல, சும்மாதான் எழுந்தேன் 

வறண்ட புன்னகையை அவருக்குப் பதிலாகக் கொடுத்து அவள் மறுபடி படுக்கையில் சரிந்தாள், தன்னுடைய அறையையே சுற்றி வெறித்த அவள் பார்வை ஓரிடத்தில் நின்றது. அங்குக் கிறிஸ்மஸ் அன்று தான் விக்ரமுடன் ஷாப்பிங்க் செய்த அனைத்தும் அவளது அறையின் ஓரத்தில் குவித்து வைத்திருக்கப் பட்டிருந்தது. அதனைப் பார்க்கவும் பிடிக்காமல் முகத்தைத் திருப்பியவளுக்குக் கண்முன் காட்சிகள் விரிந்தன.

அனிக்கா பாதுகாப்புக் குறித்து அவள் மேலேயே தன்னுடைய கவனத்தைக் குவித்து வைத்திருந்த ரூபன், விக்ரம் சில நாட்களாகத் தாமஸ் அலுவலகத்தில் அவரைச் சந்தித்து உறவை வளர்த்ததையும், அதைத் தொடர்ந்தே கிறிஸ்மஸ் அன்று அனிக்காவை அவன் ஷாப்பிங்க் என்னும் பெயரைச் சொல்லி அழைத்துச் சென்றதையும், ரூபனிடம் தன்னுடைய பராக்கிரமத்தைக் காட்ட செல்ஃபி எடுத்து அனுப்பி வைத்ததையும், கூடவே சாயங்காலம் அவளை ரூபனின் வீட்டில் டிராப் செய்தவன் அதே நேரம் அவளின் வீட்டிற்குச் சென்று அனிக்காவை திருமணம் செய்யக் கேட்டதை அறிந்திருக்கவில்லை.

மற்ற நேரமாக இருந்தால் தாமஸ் அனிக்காவிற்கு எந்த வரன் வந்தாலும் ஆற அமர விசாரித்துச் செய்கின்ற விதமாக நிதானித்திருப்பாராக இருக்கும். ஆனால், ராஜ் தன் மகன் ரூபனுக்காகப் பெண் கேட்டிருந்த சமயம் என்பதாலோ என்னமோ தன்னுடைய மகனைக் கேட்காமல், மனைவியிடம் ஆலோசிக்காமல் தன்னுடைய மகளுக்கு வரனாக விக்ரமை அவசரமாகத் தேர்ந்தெடுத்து விட்டார்.

இதனை அறிந்த கிறிஸ் முதலில் தந்தையை நிதானிக்கச் சொல்லிப் பார்த்தான். பின்னர்த் தந்தையின் பிடிவாதத்தைப் பார்த்தவன் விக்ரம் அவன் தந்தையின் எதிர்பார்ப்பின் படி செல்வத்தில் சிறந்தவனாகவும், அவனுடைய எதிர்பார்ப்பின் படி அழகில், ஆண்மை நிறைத் தோற்றத்தில் தங்கைக்கு ஏற்றவனாகவும் இருப்பதை உணர்ந்தான். குறைச் சொல்ல வாய்ப்பொன்றுமில்லையே என்றெண்ணி தந்தையின் சொல்லுக்கு அவனும் இசைந்தான்.

இதில் தாமஸிம், கிறிஸ்ஸீம் அனிக்காவிற்கு இந்த விஷயம் குறித்துத் தெரிவிப்பதோ, சம்மதம் கேட்பதையோ முதல் கடமையாகக் கருதவில்லை. எப்போதுமே அவளுடைய முடிவுகளைத் தாங்களே எடுத்து பழகியதாலோ என்னவோ, அவளிடம் இது குறித்துச் சொல்லாததைக் குறித்து அவர்கள் பெரிது படுத்தவில்லை. சாராவோ கணவரும், மகனும் இதைக் குறித்து மகளிடம் பேசியிருப்பார்கள் என்றெண்ணி இருந்து விட்டார்.

சம்மதம் தெரிவித்த அடுத்த நாளே விக்ரம் அவர்கள் வீட்டில் தன் இரு கைகள் நிறைய ஷாப்பிங்க் பைகளைத் தூக்கவியலாமல் தூக்கி வந்து தாமஸ் முன் நின்றான். அத்தனையும் அனிக்காவின் விருப்பத்திற்கேற்ப வாங்கியவை தான். விலையுயர்ந்த துணிமணிகள், நகைகள் எனப் பெண்கள் விரும்பும் அத்தனையும் அவற்றில் இருந்தன.

அவற்றை வாங்கிக் குவிக்கும் போதே அனிக்கா அவன் செலவழித்த தொகை குறித்து வாய் பிளந்திருந்தாளே? பல பெண்களோடு பழகிய உறுதியிலேயே அவன் அவளை அன்று தன்னோடு ஷாப்பிங் கூட்டிச் சென்றது. எப்படியாகிலும் தான் இறைக்கும் பணத்தைப் பார்த்து மற்ற பெண்கள் மயங்குவது போல, இவளும் மயங்கி விடுவாள் என்கின்ற அசையாத நம்பிக்கை அவனுக்கு இருந்தது.

தன் மகளுக்காக இத்தனையாய் பார்த்து பார்த்து வாங்கிக் கொண்டு வந்து நிற்கும் விக்ரமை பைகளைச் சுமக்க விட்டவாரே நிற்க செய்யத் தாமஸ் விரும்பவில்லை. முதலில் அனிக்காவை வரவழைத்து அவற்றை வாங்கிக் கொள்ளச் செய்ய வேண்டும் என்று எண்ணியவர் சட்டென்று மனதை மாற்றிக் கொண்டார்.

கிறிஸ் அலுவலகம் செய்யாமல் வீட்டில் இருந்திருந்தால் ஒருவேளை அவர் செய்ததை அனுமதிக்க வாய்ப்பு இருந்திருக்காது. சாராவும், பிரபாவும் மதிய தூக்கத்திலிருக்கும் நேரம் விக்ரம் வந்திருந்ததால் தாமஸ் அவராகவே முடிவெடுத்து விக்ரமை அனிக்காவின் ரூம் இருக்கும் மாடிப் பகுதியைக் காண்பித்து அங்குச் சென்று அவனுடைய பரிசுகளைக் கொண்டு போய்க் கொடுக்கச் சொன்னார்.

அதே நேரம் அவள் அறையில் இருந்த அனிக்காவோ தன்னுடைய அம்மா சொன்னதையே வேதவாக்காகப் பின்பற்றிக் கொண்டு அவரோடு ஒட்டிக் கொண்டே கடந்த நாட்களைக் கடந்திருக்க, தினம் தோறும் பொழுது போக்க புதுப் புது ரெசிப்பிகளாக முயற்சி செய்து வீட்டினரை சோதனைச் சுண்டெலி ஆக்கியவளாக இருந்தவள் அம்மா தூங்க சென்ற பின்னரே சற்று முன்னர்த் தன்னுடைய அறைக்கு வந்திருந்தாள்.

தன்னுடைய அறையில் மட்டும் அவளுக்குக் கிடைக்கும் “Say No to Dupatta” சுதந்திரத்தை பயன்படுத்தியவள். துப்பட்டாவை அணியாதவளாய், படுத்தவாக்கில் கைகளை ஊன்றிக் கொண்டு லேப்டாப்பில் கவனத்தைப் பதித்துக் கொண்டிருந்தாள். கால்கள் காற்றில் நடனமாடிக் கொண்டிருந்தன.

அலையன்ஸ் என்று அண்ணி ரூபனைச் சொன்னதும், அம்மா திருமணம் வரை என்னோடு டைம் ஸ்பெண்ட் பண்ணு என்று சொன்னதுமாக அவளது கற்பனையில் ரூபன் தான் தனக்காக வீட்டினர் பார்த்திருக்கும் வரன் என்ற எண்ணம் தோற்றுவித்திருக்க, அதைக் குறித்து அவள் எதையும் அலட்டிக் கொள்ளவில்லை. அலட்டிக் கொள்ளுமளவு ரூபனும், அவன் வீடும் அவளுக்கு அந்நியமும் இல்லையே?

அப்போதுதான் அவள் தடாரென அதிரும் கதவின் ஒலி கேட்டது. வழக்கமான காற்றின் அழுத்தத்தை விடவும் அதிகமான ஒலியாயிற்றே? என்றெண்ணியவள் எட்டிப் பார்த்தாள். அவளது அறைக் கதவு முழுமையாகத் திறந்து கிடக்க, வாசல் முழுவதையும் அடைத்துக் கொண்டு உயரமாக நின்று கொண்டிருந்தான் விக்ரம்.

நம்முடைய அறைக்கு வீட்டில் யாரும் இப்படிச் சட்டென்று வந்ததில்லையே? இவன் எப்படி? என வெகுவாகக் குழம்பினாலும் சட்டென்று தன்னைச் சரிப்படுத்தி, எழுந்து உட்கார்ந்தாள் அனிக்கா. கை வாக்கில் எங்கோ எறிந்திருந்த துப்பட்டா மட்டும் இன்னும் அவள் கண்ணில் படாமல் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தது.

அவள் துப்பட்டாவைத் தேடிய ஓரிரு நொடிகளுக்குள்ளாக அவளை அளவெடுத்தன விக்ரமின் லேசர் கண்கள் 

செக்ஸி  சொல்லியவன் பார்வையிலும் சொல்லிலும் விதிர்த்து அவசரமாய்ப் பக்கத்திலிருந்த டவலை தன் மீது போர்த்திக் கொண்டாள்.

அவனைக் கீழே அழைத்துச் சென்று விடும் நோக்கத்தில்,

வாங்க கீழ அம்மா அப்பா கிட்ட கூட்டிட்டு போறேன் என்று புறப்பட்டவளை,

‘என்னை மாமாதான் இங்கே அனுப்பி வச்சாங்க’ என்றான் அவன்.

ஏற்கெனவே தாமஸை அவன் உறவு முறையெனச் சொல்லி மாமாவென்று அழைத்திருந்ததால் அவளுக்கு அது வித்தியாசமாகத் தெரியவில்லை.

அப்பாவா? எதுக்கு?

இதோ இந்தக் கிஃப்ட்ஸ் தரச் சொல்லி தான்.

அப்போதுதான் அவனது கைகளில் இருந்தவற்றைக் கவனித்தவள்,

இதெல்லாம் எனக்கெதுக்கு?

ஏன்னா நீ தான என் கர்ள் ஃபிரண்ட்  கண்ணடித்துச் சிரித்ததில் அவள் உறைந்தாள்.

நானா?

பின்னே நீ தான், வேற யாரு? நெக்ஸ்ட் மந்த் நம்ம எங்கேஜ்மெண்ட் & தென் மேரேஜ் என்றவனை நம்பாமல் பார்த்தாள்.

சரி சரி வா, நாம கொஞ்ச நேரம் வேளியே போய்க் கொஞ்சம் சுத்திட்டு வரலாம், மூவி ஆர் ஷாப்பிங்க் வாட்ஸ் யுவர் சாய்ஸ்  என அவளை உரிமையாய் அழைத்தான்.

ஏற்கெனவே தொடர்ந்த அதிர்ச்சி செய்திகளால் மூளை சிந்திக்கும் திறனை இழந்திருந்தாலும் கூட, ரூபன் சொன்னது மனதிற்குள்ளாக ஒலித்தது.

 கொஞ்ச நாளைக்கு நீ தனியே எங்கேயும் போகக் கூடாது? யார் கூடயும் வெளிய போறப்ப அம்மா, அப்பா, அண்ணா, அண்ணி யாரையாவது துணைக்குக் கூட்டிட்டு போ ”… இன்னபிற விஷயங்கள் நினைவிற்கு வர,

இல்ல நான் உங்க கூட எங்கேயும் வரலை என அவனிடம் தெளிவாகவே பதிலளித்தாள்.

அவனோடு பேசியவாறு தன் அறையின் கதவைத் தாண்டி அவள் வெளியே வந்திருக்க, தான் கொண்டு வந்த பரிசுப் பொருட்களை மிகப் பெருமிதமாக அவளது அறையின் டேபிளொன்றில் வைத்தான்.

 இதெல்லாம் ஒவ்வொரு நாளா நீ எனக்கு உடுத்துக் காட்டுற  என்ன சரியா? என்றவனாய் முகம் முழுக்கப் புன்னகையை ஒளிரச் செய்தவனாய் அவளுக்கு இணையாகப் படிகளில் இறங்கத் தொடங்கினான்.

தாமஸ் படிகளினின்று இறங்கி கீழே வந்து கொண்டிருக்கும் மகளையும் விக்ரமையும் நோக்கினார், அவர் கண்ணுக்கு எல்லாம் நிறைவாகத் தோன்றியது.

கீழே வந்த விக்ரம் பதவிசாகத் தாமஸ் முன்பு அமர்ந்து கொள்ள, சற்று முன்னே மதிய தூக்கத்தினின்று விழித்திருந்த சாரா ஹாலுக்கு வந்து நின்று என்ன நடக்கிறது? என்று பார்த்துக் கொண்டிருந்தார். அனிக்கா அவரருகே போய் நின்றுக் கொண்டாள்.

விக்ரம் தாமஸிடம்,

நான் அனிக்காவை வெளிய அழைச்சுட்டு போக வந்தேன் மாமா, அவ என்னன்னா வர மாட்டேன்னு சொல்லிட்டா  என்றான்.

ஏன் அனிம்மா அன்னிக்கு போய்ட்டு வந்த மாதிரி போக வேண்டியது தானே? மகளிடம் தாமஸ் இலகுவாகவே வினவினார்.

‘இல்லப்பா நான் எங்கேயும் போகலை’ என்று பதிலளித்த அனிக்காவிற்கு ஏற்ற விதமாக

 இல்லத் தம்பி இப்ப வெளிய போறது எல்லாம் சரி வராது  எனச் சாராவும் கூற,

 அவக் கிடக்கிறா பட்டிக்காடு, அவளுக்குத் தெரிஞ்சதெல்லாம் கிராமத்து பழக்க வழக்கம் தான். அதுக்கேத்த மாதிரியே பொண்ணையும் வளர்த்து வச்சிருக்கா, இன்னிக்கு இருக்கட்டும் இன்னொரு நாளைக்கு அனியை வெளிய கூட்டிட்டு போங்க  என்று வருங்கால மருமகனை சமாதானப் படுத்தும் நோக்கில் தன் மனைவியைத் தாழ்த்திப் பேசியவர் அதனால் சாராவின் முகத்தில் எழுந்த வேதனையைக் கணக்கில் கொள்ளவில்லை.

சற்று நேரம் அமர்ந்து தாமஸுடன் அளவளாவி விட்டு, சாராவின் விருந்தோம்பல் மற்றும் உபசரிப்புக்களுக்குப் பின் விக்ரம் விடைப் பெற்றுச் சென்றான்.

உடனே தாமஸ் மகளிடம் கோபத்தில் வினவினார்.

 நான் தான் போகச் சொன்னேன்ல அப்படியும் நீ போகலைன்னு சொல்லுற அனிம்மா. அவங்க எப்படிபட்ட ஃபேமிலி, எவ்வளவு பெரிய ஆட்கள்னு தெரியுமா? நீ என்னன்னா இப்படிச் சட்டுன்னு கூடப் போக மாட்டேன்னு சொல்லிட்ட  என்றவரிடம்

 இல்லப்பா அவங்க நெக்ஸ்ட் மந்த் எங்கேஜ்மெண்ட் அப்படில்லாம் சொல்லிட்டு இருந்தாங்க  அதான்  செக்ஸி யெனச் சொல்லி நெருடலை ஏற்படுத்தியதை தந்தை முன் சொல்ல கூச்சப் பட்டவளாய் அவனது பார்வையையும், வார்த்தையையும் தணிக்கைச் செய்து விக்ரம் கூறிய மற்றவற்றைச் சொல்ல முனைந்தாள்.

ஆமா, விக்ரம் சரியாதான் சொல்லியிருக்கார். நெக்ஸ்ட் மந்த் உங்க ரெண்டு பேருக்கும் எங்கேஜ்மெண்ட். சாரா நீ இதைப் பத்தி இன்னும் அனிக்கு சொல்லலியா? என்று மனைவியிடமே விஷயத்தைத் திருப்ப,

இல்ல நான் நீங்க சொல்லியிருப்பீங்கன்னு நினைச்சேன்  என முனகியவரிடம்

 அம்மா எனக்கு  இந்த இவங்க கூட  மேரேஜ் வேண்டாம்மா  என எண்ணியதைச் சொல்லி விடச் சாராவுக்குச் சட்டென்று தன்னுடைய இளமைக் காலம் ஞாபகத்திற்கு வந்தது.

சொல்லுவத்ற்கு கிராம பிண்ணனி கொண்ட நபர்கள் தாம். ஆனால், அவர் அம்மாவும், அண்ணனும் சாராவுக்கு மனதிற்குப் பிடித்த விதமாக வரன் வரும் மட்டும் எதிலும் கட்டாயப் படுத்தியது கிடையாது.

 வாழப் போறவ என் தங்கச்சிம்மா, அவளுக்குப் பிடிச்சாத்தான் நாம மேற்கொண்டு பேசணும்  என்று தன் சார்பாக எப்போதும் நின்று பேசிய அண்ணன் ஞாபகம் வந்தது. தாமஸின் வரன் வந்து சாராவிற்கு விருப்பம் இருப்பதை உணர்ந்ததால் மட்டுமல்லவா ராஜ் இவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். அதனால் மட்டும் தானே அவர்களது திருமண வாழ்க்கை இத்தனை காலமாக மகிழ்ச்சியோடு கடந்து சென்றிருக்கின்றது.

அந்த உணர்வில், தன் மகளுக்குத் தாயாகத் தான் கொடுக்க வேண்டிய தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் ஊட்ட எண்ணியவராக,

 அதுக்கென்ன செல்லம், வாழப் போறவ நீதானே,உனக்கு பிடிச்ச மாதிரி இருந்தா தான் மேற்கொண்டு பேசுவோம். நீ கவலைப் படாதே. இந்த மாப்பிள்ளை இல்லன்னா என்ன வேற பார்க்கலாம் எனச் சொல்லும் முன் தாமஸ் தன்னுடைய பொறுமை இழந்தவராக மனைவியை நோக்கி ஆங்காரமாய்க் கத்த தொடங்கினார்.

 ஓஹோ, அப்ப எல்லாம் உன்னோட பிளான் தானா. பிடிக்கலைன்னு மகளைச் சொல்ல வச்சு மாப்பிள்ளையைத் தட்டி விட்டா மட்டும் நான் அனிக்காவை உன்னோட அண்ணன் மகனுக்குக் கட்டிக் கொடுத்திடுவேன்னு கனவும் காணாதே 

என்றவரின் பேச்சைக் கேட்டு அவமானத்தில் குன்றியவராகச் சாரா நிற்க, சத்தம் கேட்டு எழுந்து வந்த பிரபாவும் என்ன சொல்வெதென்று புரியாமல் மௌனம் காத்தாள். தன் தந்தையின் இத்தகைய பேச்சையும், குரலையும் முன்பொருபோதும் அறிந்திராத அனிக்கா தான் தன் மனதை வெளிப்படுத்தித் தனக்கு விக்ரமை பிடிக்கவில்லை என்று சொன்னதால் தானே தன்னுடைய அம்மாவிற்க்கு இத்தனை பிரச்சனைகளும் என மனம் வாடியவளாக ஓரத்திலிருந்த டைனிங்க் டேபிளில் கைகளில் தலையைத் தாங்கி குனிந்தவளாக அமர்ந்து இருந்தாள்.

தாமஸ் அத்தோடு நிற்காமல் மணிக்கணக்காகத் தன்னுடைய ஆத்திரத்தை மனைவியிடம் கொட்டிக் கொண்டு இருந்தார்.

ரூபனுக்கும் அவன் குடும்பத்திற்கும் தனக்குச் சரிசமமாக வருகின்ற எந்த அருகதையும் இல்லை என்றும், தன்னுடைய சொத்திற்காகவே தன் மகளை அவன் மணக்க கேட்பதாகவும், அத்தோடு நில்லாமல் தன்னுடைய மகளைத் திருமணத்திற்குப் பின்னர்ச் சம்பளமில்லா வேலைக்காரியாகப் பயன்படுத்திக் கொள்ளவும் தான் அவன் எண்ணியிருப்பதாகவும் அவர் பேசிக் கொண்டிருந்தார். அவரது பேச்சுக்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலமாக இருந்தன.

கூடவே விக்ரமுடனான தன் மகளின் திருமணத்தில் எந்த மாற்றமுமில்லை என்பதைத் திட்டவட்டமாக அறிவித்தார். அன்றைய தினத்தினின்று அந்த வீட்டின் கலகலப்பிற்க்கு பஞ்சம் ஏற்பட்டு விட்டது. பஞ்சம் ஏற்படாமல் எப்படி இருக்கும்? தன் எதிர்காலத்தை எண்ணி, எண்ணியே அனிக்காவைத் தான் பயமும் நடுக்கமும் சூழ்ந்துக் கொண்டதே.

மறுபடி ஒருமுறை வந்து விக்ரம் அழைத்தும் அவள் அவனுடன் வெளியே செல்லவில்லை. அவளின் செயலால் விளையும் விக்ரம் மற்றும் தன் அப்பாவின் கோபப் பார்வைகளை அவள் அறிந்தே இருந்தாள். ஆனால், ரூபன் சொல்லை மீறி விக்ரமோடு அனிக்காவால் தனியாக எங்கும் செல்ல இயலவில்லை. இன்னுமெத்தனை நாட்களுக்கு இப்படிச் செய்கிறாய்ப் பார்க்கிறேன்? என்று சிறுத்தையாய் சீறிய விக்ரமையும், அவனை அவமானப் படுத்துவது தன்னையே அவமானப் படுத்தியதாக எண்ணி கோபத்தில் பொறிந்த அப்பாவையும் பார்த்தவளுக்கும் அதே தான் தோன்றியது  இன்னும் எத்தனை நாட்களுக்கு?

இந்திரா தன்னுடைய மகனைக் கவனித்துப் பார்த்துக் கொண்டு மனதில் வேதனையோடு இருந்தார். அப்பொழுது அவருக்கு மனதில் ஒரு எண்ணம் தோன்றியது. எப்படியும் இன்று வரை அனிக்காவின் திருமண நிச்சயம் கூட நிகழவில்லை. மறுபடி ஒருமுறை அவர்களது வீட்டிற்கு முறையாகச் சென்று பெண் கேட்டால் என்ன? வெளிப்படையாகப் பேசி தீர்வு காணலாமே? என்பது தான் அது.

அவர் அடுத்த நாள் வீட்டிற்கு வரப் போவதாகத் தெரிந்தவுடன் மறுபடியும் தாமஸின் ஆணவ முகத்தை அவர் வீட்டினர் பார்க்க முடிந்தது. சாரா மேலும் மேலும் வேதனையோடு அவரின் கடுஞ்சொற்களைக் கேட்டவாறு இருக்கத் தந்தையின் பேச்சுக்களைக் கேட்ட கிறிஸ் தன் அன்னையின் வேதனையைத் தணிக்க முயன்றவனாக அருகே வந்து,

அம்மா அத்தையை இப்ப நம்ம வீட்டுக்கு வர வேணான்னு சொல்லுங்க, வீணா பிரச்சினை எதுக்கு? அப்படியும் நமக்கு இந்தச் சம்பந்தம் சரிவராது சயின்ஸ் படி சொந்தத்துக்குள்ள மேரேஜ் செய்யிறது ஃப்யூச்சர் ஜெனரேஷனுக்கு நல்லது இல்ல. எனக் கூறிக் கொண்டிருக்க, மகனின் பேச்சினூடே தன்னுடைய பேச்சை தாமஸ் இணைத்துக் கொண்டார்.

அப்படி நாளைக்கு அவங்க யாரும் வந்தாங்கன்னா நான் சொந்த பந்தம்னு பார்க்க மாட்டேன், நான் பேசற பேச்சில அவங்க உறவே இல்லாம போனாலும் பின்னாடி நான் கவலைப் பட மாட்டேன். எனக் கர்ஜித்தவர் தான் சொன்னதைச் செய்வார் என்பதற்கு நூறு சதவிகித வாய்ப்புக்கள் இருந்தன.

திகைத்து நோக்கிய மனைவியிடம் சொல்லாமல் தாமஸ் விடை பெற, தன் தாயையும், தங்கையையும் கவனித்துக் கொள்ளச் சொல்லி கண்களாலேயே சொல்லி பிரபாவிடம் கிறிஸ் விடை பெற இருவரும் அலுவலகத்திற்குப் புறப்பட்டனர்.

அனிக்காவிற்கும், விக்ரமிற்குமான நிச்சயத்திற்காக இன்னும் ஒரு வாரமே இருக்க அனிக்கா தன் அன்னையையும் , அண்ணியையும் பார்த்தாள். இருவருமே தத்தம் கணவருக்குக் கட்டுப் பட்டவர்கள். அவர்களிடம் தனக்கான தீர்வுகள் இல்லையெனத் திட்டவட்டமாய்ப் புரிந்தது. அவள் அருமை கிறிஸ் அண்ணன் இன்று பேசியதைப் பார்த்தால் அவன் ரூபனுக்குப் பெண் கொடுப்பதா வேண்டாமா? என்பதில் காட்டிய தெளிவில் ஒரு சதம் கூடத் தங்கைக்கு விக்ரமை பிடித்திருக்கிறதா? என்பதில் காட்டவில்லை. அவனும் அப்பாவின் சார்பாகவே இருப்பதாகத் தோன்றிற்று.

எனக்கென்று விருப்பு வெறுப்பு ஒன்றுமில்லையா? படிப்பு, பள்ளி, கல்லூரி, வேலை என்று எல்லாமே இவர்கள் தான் தீர்மானித்து இருக்கிறார்கள். யாரிடம் பேச வேண்டும், யாரிடம் பேசக் கூடாது, எவர் வீடு செல்ல வேண்டும்? எவர் வீடு செல்லக் கூடாது? இப்படி எல்லாவற்றையுமே அவர்கள் தீர்மானத்தின் படியே தன்னுடைய நலன் கருதி கூறியதாக எண்ணி தான் பின்பற்றவில்லையா?

இப்போது மனதிற்கு முற்றிலும் ஒவ்வாத ஒருவனை  அவனைக் குறித்து எண்ணும் போதே கண்களில் காமம் நிரப்பி, இவளின் உடைகளுக்குள்ளான நிர்வாணம் தேடி, அங்குலம் அங்குலமாய் அவள் உடலை அளந்து தன்னைச் செக்ஸி எனச் சொன்ன அவனின் வார்த்தைகள் அமிலமாய் இறங்கின.

பிறந்ததிலிருந்தே பாதுகாப்பற்ற உணர்வை அறிந்திராதவள், தன்னுடைய அண்ணனின் கண்ணியம் மட்டுமல்ல, மாமா மகன்களாயினும் ஒரு போதும் கண்ணியம் தவறாத ஆண்களோடு பழகியே வளர்ந்தவள். தன்னைத் தங்கையாய் பாராட்டும் தீபனும், தன் தோழியைத் தவறாக யாரும் பார்க்கவும் விடாமல் அவளை முழுமையாய் பாதுகாக்கும் ஜீவனும், தன்னிடம் காதலைச் சொல்லி திருமணத்திற்குக் கேட்டிருந்தாலும் ஒரு போதும் தன் தவறான பார்வையால் அவளை வெறும் உடலாய், சதைப் பிண்டமாய்ப் பார்த்திராத ரூபனும் மனதளவில் அவளுக்குக் கொடுத்திருந்த பாதுகாப்பு உணர்வு அற்றுப் போய் வெகு நாளாகி விட்டனவே.

தனக்கென யாரும் ஆதரவாக இல்லை என்றதும் காலையில் தந்தையும், அண்ணனனும் விடைப் பெற்ற நேரம் முதலாக முக்கியமான பலவற்றை அவள் சிந்தித்துச் சில முடிவுகள் எடுத்தாள். அவளது முடிவுகள் சரியா தவறாவென அவளுக்குத் தெரியாது. ஆனால், நாளை அவர்கள் வீட்டிற்க்கு அவளுக்கு மிகப் பிரியமான அத்தையும் அவர் குடும்பத்தினரும் வந்து அவமானப் படுவதை மட்டும் அவளால் பார்க்கவியலாது. அதற்காகத் தான் என்னவேண்டுமானாலும் செய்யலாமெனத் தோன்றிற்று.

 அவசரம் அவசரம்  என்று அவளைச் சூழ்நிலை அவசரப் படுத்த, தனக்குத் தேவையான அத்தனையையும் தயார் செய்தவள் தன்னுடைய அண்ணனின் அறைக்குச் சென்று உரிய விதமாகப் பேசி அண்ணியைத் தன்னோடு அழைத்துக் கொண்டு ரூபனின் தொழிற்சாலையை நோக்கி புறப்பட்டாள்

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here