26. அமிழ்தினும் இனியவள் அவள்

0
492
Amizhthinum Iniyaval Aval

அத்தியாயம் 26

[color=maroon]அவளுடைய தோள்கள் இரண்டிலும் ஊர்ந்தன அவன் கைகள் அவளோ இப்படி ஒன்றை எதிர்பாராதிருந்ததால் தனக்குள்ளே இறுகிப் போய்ப் பாறையாக உறைய. சட்டென்று அவன் கரங்கள் தன் எல்லையைக் கடந்து அவள் கழுத்தை தாண்டி இறங்க முற்படவும் நடு நடுங்கிப் போனாள்.[/color]

தன்னருகே அமர்ந்து கொண்டு பயணிக்கும் அனிக்கா நடுங்குவதைப் பார்த்த பிரபா தன்னோடு அவளைச் சாய்த்து அணைத்துக் கொண்டாள். அவளை ஆசுவாசப் படுத்த எண்ணியவளாக முதுகை நீவி விட்டாள்.

முழிப்பிற்கு வந்த அனிக்காவிற்கு தான் விக்ரம் குறித்து இப்போது கண்டது கனவுதான் என்கின்ற ஆசுவாசம் எழுந்தது. அவனது பார்வைகளும், தனிமையில் செயல்களும் அவளை வெகுவாக அசூயையாக உணர வைத்துக் கொண்டிருந்ததால் இப்போதெல்லாம் இப்படிப் பட்ட கனவுகள் அடிக்கடி வருகின்றன.

அனிக்காவை அணைத்திருந்த பிரபாவோ, ‘சில வாரங்களாக அனிக்கா மாறிப் போய் விட்டாள்’ என வருத்தமாகத் தன் மனதிற்குள் எண்ணிக் கொண்டாள்.

அனிக்காவிற்கு திருமணம் குறித்து ஏதேனும் பயம் இருக்குமோ? அவள் வெளிப்படையாக எதையும் பேசினாலாவது தேவையானது சொல்லிக் கொடுக்கலாம். தனக்குள்ளே சுருண்டு போகின்றவளை என்ன செய்வது?

அவள் ஒழுங்காகச் சாப்பிடுகிறாளா? தூங்குகிறாளா? என்றும் கூட குறித்து பிரபாவின் மனதிற்குள் சந்தேகமே? எல்லோர் முன்பும் சாப்பிடுகிற மாதிரி காட்டிக் கொள்கிறாள். ஹனியை அவள் அறையினின்று தூக்கி வரச் செல்லும் போது தூங்கியது போல அவள் படுத்திருக்கும் பாவனையிலேயே அவள் இன்னும் தூங்கவில்லை என்று பிரபாவிற்குப் புரிந்து விடும். ஆனால், தன்னையே மறுத்து ஒளித்து வைப்பவளிடம் என்னவென்று கேட்க?

ஆரம்பத்தில் வேண்டாமென்று சொல்லியிருந்தாலும் அதன் பின்னர்த் திருமண ஏற்பாடுகள் எதற்கும் அவள் மறுத்துப் பேசவேயில்லையே? எதிலும் வெளிப்படையாகப் பேசுபவள் திருமணம் பிடிக்கவில்லை என்றால் மனதை மறையாது பிடிவாதமாகப் பிடிக்கவில்லை என்று சொல்லி இருப்பாளே? அப்படியும் கூட நடந்து கொள்ளவில்லை. வீட்டில் தினம் தோறும் நடைபெறும் களேபரத்தில் எல்லோரும் இந்தச் சின்னப் பெண்ணைக் கவனிக்காமல் விட்டு விட்டோமோ? பிரபாவின் மனம் கலங்கியது.

 அண்ணி என்னாலதான் நம்ம ஃபேமிலிக்குள்ள பிரச்சினையோன்னு மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. நாளைக்கு அத்தை நம்ம வீட்டுக்கு வந்து பேச வரும் போது, அப்பா அவங்களை அநாவசியமா பேசிட்டாங்கன்னா எப்பவுமே அம்மா மாமா வீட்டோட பேச முடியாம உறவு கொண்டாட முடியாம ஆகிடும்.

நான் ரூபன் அத்தான் கிட்ட போய்ச் சொன்னேன்னா அத்தைய வர வேண்டாம்னு அவங்களே சொல்லிடுவாங்க. இந்தப் பிரச்சினையை வராம தடுத்திடலாம். நீங்க எனக்குத் துணையா என் கூட தொழிற்சாலை வரைக்கும் வர்றீங்களா அண்ணி 

எனக் கெஞ்சிய சின்னவளிடம் மறுப்பாக எப்படிப் பேசுவது? அதனால் தான் தன் கணவனிடம் கூடச் சொல்லாமல், ஹனி பாப்பா கிண்டர்கார்டனிலிருந்து திரும்பி வருவதற்குள்ளாகத் திரும்பச் சென்று விடலாம் என்று எண்ணி அனிக்காவுடன் பிரபா புறப்பட்டு வந்திருந்தாள்…

தான் எண்ணியதைக் கோர்த்து வைத்ததைப் போலத் அண்ணியிடம் சொன்னதோடு சரி அதற்கு அப்புறமாக அனிக்கா எதையுமே பேசவில்லை. லொட லொடவென்று ஒரு விஷயமும் விட்டு வைக்காமல், மனதை மறையாமல் பேசும் அனிக்கா எப்போதிருந்து மாறிப் போனாள்? என்னும் சிந்தனையில் பிரபா இருந்த போதே அவர்கள் கார் ரூபனின் தொழிற்சாலையை அடைந்திருந்தது.

அனிக்காவிற்காக ரூபன் ஏற்பாடு செய்திருந்த டிடெக்டிவ் ஏஜென்ஸியிலிருந்து அவள் வீட்டிலிருந்து புறப்பட்டதாக வந்த செய்தியில் தான் எண்ணியவற்றைச் செயல் படுத்த எண்ணியிருந்த ரூபன் அவள் தன்னுடைய தொழிற்சாலை பக்கமாக வருவதாக அறிந்ததும் தன் திட்டத்தை மாற்றினான்.

உடனே சீக்கிரமாகத் தன்னுடைய அலுவலக ஊழியர்களுக்கு அரை நாள் விடுப்பு கொடுத்து அனுப்பி வைத்தான். அனிக்கா அலுவலக வாசல் வழியாக நுழைந்தவள் அலுவலர் ஒருவரையும் காணாமல் ஆச்சரியப் பட்டாலும் அண்ணியை அங்கு உட்காரச் சொல்லி விட்டு கேபினுக்குள் நுழைந்தாள்.

கேபினில் போய் இண்டர்காம் மூலமாக ரூபனை அழைக்க வேண்டுமென அவள் யோசித்து இருக்க அவளுக்கு அங்கே இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது. அவள் பார்வையில் தன்னையே வெறித்தவனாகத் தன்னுடைய மென்மையான இயல்பை தொலைத்தவனாக அமர்ந்திருந்த ரூபன் விழுந்தான்.

இவன் முறைப்பைக் கண்டு நான் ஏன் பயப்பட வேண்டும்? என்கிற எண்ணம் மனதில் வியாபிக்க அவள் அவனைப் பார்த்து, மென்மையாகப் புன்னகைத்தாள். இருவருமே சற்று நேரம் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

அவள் நின்றவிடமே நின்றிருக்க, அவளை நோக்கி அவன் எழுந்து வந்தான். அவனுக்குத் தன்னைக் குறித்து அவளின் எண்ணம் என்னவென்று அறிந்து கொள்ள வேண்டியிருந்தது. வார்த்தைகளால் கேட்டுப் பதில் பெறவியலாத ஆதங்கம் இன்னும் மிச்சம் இருந்தது. எல்லாவற்றையும் பேசும் அவள் வாய் தங்கள் காதலைப் பற்றிப் பேசாததால் மனதில் காயம் இருந்தது. தன் காதலை அவள் உணர்ந்திருக்கிறாளா? தன்னை நம்புகிறாளா? என மிக முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது.

எனவே அவளருகில் வந்ததும் அவளைச் சட்டென்று இழுத்து தன்னோடு இறுக்க அணைத்துக் கொண்டான். காற்றையும் அவர்களுக்கிடையில் வரவிடுவதாக அவனுக்கு எண்ணமில்லை போலும், தான் இருப்பது தன் பணியிடம், யாரும் பார்த்தால் என்னவாகும்? என்கிற சிந்தனையில்லை. அனிக்காவோடு அவள் அண்ணி வந்திருப்பதான பிரக்ஞை இல்லை. சொல்லப் போனால் அவன் அவனாகவே இல்லை, நொடிகள் கடக்கக் கடக்க அவன் அணைப்பு இறுகிக் கொண்டே போனது.

அனிக்கா இதனை எதிர்பார்த்திருக்கவில்லை. அவனைப் பார்க்க வேண்டும் என்று மனதின் உந்துதலில் அவள் வந்திருந்தாள். அவனைப் பார்த்ததும் அவள் மனதும் நிறைந்து விட்டது. அவன் முகத்திலிருந்த கோபம் கூட அழகாய்த் தெரிந்தது. அவள் அறிந்தவரையில் அவன் சாதாரணமாக எதிலும் கோபம் கொள்ளுபவன் அல்ல. அவன் கோபத்திலும் ஒரு நியாயம் இருக்கும் அந்தக் கோபத்திலும் ஒரு அழகு தெரியும். அந்த அழகை அவள் ரசித்துக் கொண்டிருந்தாள். இப்படிச் சட்டென்று தன்னை அவன் அணைத்துக் கொள்ளுவான் என்று நினைக்கவே இல்லை.

விக்ரம் தன்னை மறுபடியும் தன்னுடைய அறையிலேயே சந்தித்த போது அனுமதி பெறாமலே தன்னுடைய தோள்களில் ஊர்ந்த அவன் கரங்கள், அத்துமீறத்துணிந்த செயல் அவள் அவன் கரங்களைத் தட்டி விட்டவுடன் அவன் சீறிய சீற்றம். அப்போது அவனுடைய தொடுகை தனக்கு எவ்வளவாய் அருவருப்புத் தந்தது. ஆனால், இப்போது ஏன் எனக்கு அப்படி அருவருப்பாகத் தோன்றவில்லை? அதிலும் தன்னை அணைத்திருப்பது தன்னுடைய பார்வையிலும் கண்ணியம் காக்கின்ற ரூபனா? எனத் தனக்குள் எழுந்த ஆச்சரியத்தின் வெளிப்பாடாக அவன் முகத்தைப் பார்க்க எத்தனித்தாலும் முடியாதபடி அவன் கரங்கள் அவளை வளைத்திருந்தன. அந்த அணைப்பில் அவளுக்கு அத்தனையாய் இளைப்பாறுதல் கிடைத்தது, அந்த நிம்மதியின் அளவு எவ்வளவு என்று அவளால் கணக்கிடவே முடியவில்லை.

தன் உயிரும் உடலும் அதன் சொந்தமான இடத்திற்கு வந்தது போல அவளுக்குத் தோன்றியது. அவன் இறுக்க, அவள் அவனுள்ளே விரும்பியே புதைந்துப் போனாள். தன்னையும் அறியாமல் அவள் உடல் அவன் பிடியில் நெகிழ்ந்ததை உணர்ந்தாள்.

சட்டென்று அவளை ரூபன் விடுவிக்கத் தடுமாறியவள் சமாளித்துக் கொண்டு நின்றாள். அவனை ஏறிட்டும் பார்க்க கூச்சம் தடுக்க அப்படியே நின்றுக் கொண்டிருந்தாள்.

ரூபனோ அவள் மனதை அறிந்துக் கொண்டவனாய் பெருமிதமாய் உணர்ந்தவன் இனியும் காதலை உறுதிப் படுத்தும் கேள்விகள் கேட்டு நேரத்தை வீணடிக்கக் கூடாது என்று எண்ணியவனாய்,

அனி, நாம ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிப்போமா? என்றான் தன்மையாகவே,

இல்ல வேணாம் மறுத்தாள் அனிக்கா.

ஏன்? கூர்மையாய் வெளிவந்தது ரூபனின் கேள்வி. சற்று முன் என் அணைப்பில் இசைந்து நின்றாய் தானே? , இப்போது என்னை மணந்து கொள்ள உனக்கு என்ன பிரச்சினை? என்னும் நீண்ட கேள்வியை அந்த ஒற்றை வார்த்தை “ஏன்?” என்பதில் அவன் வெளிப்படுத்தி இருந்தான். அவன் கண்கள் அனிக்காவை அங்குலம் அங்குலமாய் அளந்து கொண்டிருந்தது, அவள் என்னதான் யோசித்து வைத்திருக்கிறாள்? என்று அறிய துடித்தது.

அதெல்லாம் வேண்டாம் அத்தான். நம்ம ரெண்டு பேர் ஃபேமிலிக்கும் அது பெருமை தேடி தராது. நிறையப் பிரச்சினை வரும்.

அனிக்கா அவன் பார்வையைப் பார்த்தும் பாராமலும் பதில் சொல்லிக் கொண்டிருப்பதைக் கவனித்து அவன் கண்கள் இடுங்கின.

அப்படின்னா நாளைக்குத் தான் அண்ணா, அண்ணி, அம்மாவோட உங்க வீட்டுக்கு வர்றாங்கள்ல அவங்க வர்றப்ப உன் சம்மதம் சொல்லு…

அத்தையை வரவேண்டான்னு சொல்லுங்க அத்தான், எங்க வீட்ல இப்ப எதுவுமே சரியா இல்ல. அத்தையை, தீபன் அத்தானை எல்லாம் அவமதிச்சி பேசிடுவாங்களோன்னு எனக்குப் பயமா இருக்கு. அவங்களை வர வேண்டான்னு சொல்லிடுவீங்களா? ப்ளீஸ்.

ரூபனின் நெருப்பு கக்கும் கண்களையும், தரையையும் மாற்றி மாற்றிப் பார்த்து ஒரு வழியாக இதை அவள் சொல்லி முடித்திருந்தாள்.

அவள் பதிலைக் கேட்டு உக்கிரமாய் முறைத்துக் கொண்டிருந்த ரூபனை அவளால் நிமிர்ந்துப் பார்க்கவே முடியவில்லை. ஆனாலும், அவள் மறுபடியும் தொடர்ந்தாள்.

நம்மளைக் கொண்டு நம்ம ஃபேமிலிக்குச் சந்தோஷம் வரணும் இல்லன்னா அட்லீஸ்ட் கஷ்டமாவது கொடுக்காம இருக்கணும்னு எப்பவும் நினைப்பேன் அத்தான். இப்ப இருக்கச் சூழ்நிலையில நம்ம மேரேஜ் நடந்துச்சுன்னா நம்ம ரெண்டு குடும்பத்திலேயும் சண்டைச் சச்சரவு தான் வரும், சமாதானம் வராது.

…….

நாம பெத்த பிள்ளை நம்மைத் தலைக் குனிய வச்சுட்டாளேன்னு நம்ம அம்மாவோ இல்லை அப்பாவோ ஒரு செகண்ட் யோசிச்சாலும் நம்ம வாழ்க்கையே வீண்தான்னு. இப்படிச் சூழ்நிலையில நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கும்னு எனக்குத் தோணலை. இப்ப மட்டும் இல்லை எப்பவுமே நடக்காதுன்னும் தோணுது.

அதுக்கு? இன்னும் சூடேறிப் போயிருந்தது ரூபனின் குரல்.

நீங்க எனக்காகக் காத்திருக்க வேணாம், வேற யாரையாவது கல்யாணம் பணணிக்கோங்க அத்தான்.

ஓ அப்படியா? வெறுப்பில் ரூபன் பதிலிறுத்ததோடு அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, தான் சொல்ல வந்ததைச் சொல்லி விட்டதாக எண்ணியவள் கேபினின் கதவைத் திறக்க யத்தனிக்க, வெளியே அமர்ந்திருந்த பிரபா அனிக்கா வெளியே வரப் போவதை உணர்ந்து தன் இருக்கையினின்று எழுந்தாள்.

கதவைத் திறந்து வெளியே செல்ல எத்தனித்தவளை ரூபன் கேள்வி தடுத்து நிறுத்தியது. சரி எனக்கொரு கேள்வி இருக்கு அதுக்குப் பதிலைச் சொல்லிட்டுப் போ 

சரி என்றவள் திறந்த கதவை விட்டு அவனை நோக்கி திரும்பினாள்.

எனக்கு இவ்வளவு அட்வைஸ் செஞ்ச, நான் வேற யாரையாவது திருமணம் பண்ணிக்கணும்னு… சரி, மேடம் நீங்க என்ன செய்யப் போறீங்க? காட்டமாய் வெளி வந்தன அவன் வார்த்தைகள்.

அவனுக்கு அவள் பதில் தெரிந்து கொண்டே ஆக வேண்டியிருந்தது. தன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டாளாம், தான் வேறு யாரையும் மணந்து கொள்ள வேண்டுமாம்? அப்படியென்றால் அவள் தன்னுடைய அணைப்பில் நெகிழ்ந்ததை எவ்வாறு எடுத்துக் கொள்வது?

முரண்பாடான அவள் செய்கையில் ஒன்றையும் கணிக்க முடியாமல் திகைத்தவன் மனதில் சந்தேகம் என்னும் கொடிய மிருகம் ஆட்சி செய்து கொண்டிருந்தது. அம்மா அப்பா தலைக் குனியக் கூடாதென்றவள் அவர்களுக்காக அவள் விக்ரமை திருமணம் செய்வதாக முடிவெடுத்து விட்டதாகவே எண்ணிக் கொண்டான். அதனை அவள் வாயாலே உறுதிப் படுத்த எண்ணினான். அப்படி அவள் கூறிய நொடியில் அவள் என்னிடம் அறை வாங்கப் போவது உறுதி என்றெண்ணியவன் தன்னை அடக்கியவனாகக் கைகளைக் கட்டுப்படுத்தி இறுக்கிப் பொத்தினான்.

அவள் அருகே வந்தவன், அவள் முகவாயை தன் விரலால் உயர்த்தினான்.

பதில் சொல்லு  என்ன செய்யப் போற? பிடிவாதமாய்த் தன் கேள்விக்குப் பதில் வேண்டினான்.

என்ன பதில் சொல்வதென்று சொல்லத் தெரியாமல் மிரண்டப் பார்வை பார்த்து நின்றவளிடம் இரக்கமே இல்லாமல் பதில் வேண்டியவளாய் நின்றான்.

அனிக்காவை பொறுத்தமட்டில் அவள் யோசித்து வந்தவை அனைத்தும் அவள் சொல்லியாகிவிட்டது. இப்படி ஒரு கேள்வி வருமென்றோ, அதற்கு என்ன பதில் சொல்ல வேண்டுமென்றோ அவள் முன்னதாகவே தயாரித்து வரவில்லை. ஏற்கெனவே மனதை அழுத்திக் கொண்டிருந்த பல உணர்வு அழுத்தங்கள் சூடாய் கண்ணீராய் அவள் கண்களினின்று வடியத் தொடங்கிற்று. கலங்கியவளாக அவனை நோக்கி என்னைக் கேட்காதேயேன் என்பது போலப் பரிதாபமாய்ப் பார்த்தாள்.

 பதில் சொல்லுங்கறேன்ல  ஏறத்தாழ உறுமினான் அவன்.

தன்னை வேறு யாரையாவது திருமணம் செய்து கொள்ளச் சொன்னவளின் அறிவுரையில் ஏற்கெனவே வெகுண்டெழுந்திருந்தான். ஆத்திரத்தில் அவள் கழுத்தை நெறித்து விடுவோமோ? என்னும் அச்சத்தில் தன் கைகளை வெகு பிரயத்தனப்பட்டு இறுக்கிக் கொண்டு இருந்தான்.

கண்களில் கலக்கமும் கண்ணீரும் வழிந்து நின்ற அவன் தோற்றம் அவனை அசைக்கவேயில்லை.

அவனுடைய ஆங்கார ரூபத்தைக் கண்டு பயந்தவள் தன்னையறியாமல் தன் மனதை உரைக்க, அதைக் கேட்டவன் ஆத்திரம் தாங்காமல் கையோங்கி அவளை அடித்து விட்டிருந்தான், அடுத்த அறை அவள் கன்னத்தில் விழும் முன்னே அவள் மயங்கிச் சரிந்தாள். அது வரையில் வெறித்தனமான கோபத்தில் இருந்தவனுக்குத் தன் செயலின் தவறு உரைக்க,

 அனிக்காமா ஸாரிடா  அலறியவனாய் அவள் கீழே தரையைத் தொட்டு விழும் முன் அவளைத் தாங்கிக் கொண்டான்.

பிரபாவின் விழிகள் அனிக்காவின் பதிலையும் அதன் பின் நிகழ்ந்த அனைத்தையும் பார்த்து அதிர்ச்சியோடு உறைந்தன.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here