27. அமிழ்தினும் இனியவள் அவள்

0
495
Amizhthinum Iniyaval Aval

அத்தியாயம் 27

ரூபனின் ஒற்றை அறையிலேயே அனிக்கா வேரற்றவளாக மயங்கிச் சரிந்தாள். அவள் விழுந்த வேகத்தில் தரையில் மோதி இருந்தால் அவளுக்கு பெரிதளவில் காயம் ஏற்பட்டிருக்கக் கூடும். அறைந்தவன் அந்த ஆபத்தை உணர்ந்ததால் மிகுந்த பதட்டத்துடன் அவள் தரையில் விழும் முன் தன் கைகளில் ஏந்திக் கொண்டு இருந்தான்.

நிகழ்ந்தவற்றை எல்லாம் சிந்திக்கும் போது ரூபனுக்கு உலகமே நின்றாற்போலப் பிரமை சில நிமிடங்களுக்கு ஏற்பட்டது. அவள் மயங்கி விழுந்த காரணம் என்னவாக இருக்கும்? என்று அவனுடைய மூளை அவனிடம் கேள்வி கேட்க, ஒருவேளை இப்படியிருக்குமோ? என்று எதையோ எண்ணியவன் உடல் நடுக்கமுற,

“நான்  நான் …செத்துப் போகப் போறேன்  எனச் சொல்லி தன் அடியை வாங்கிக் கொண்டு உணர்வில்லாமல் கிடப்பவள். தான் சொன்னதற்கேற்ப உயிரைப் போக்க எதையாவது செய்த பின்னரே தன்னிடம் வந்திருப்பாளோ? உயிரை மாய்க்கும் எதையும் உண்டிருப்பாளோ? என்றப் பயம் அவன் மனதைக் கவ்வ, அவளை உடனே மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு செல்ல புறப்பட்டான்.

ஒன்றும் புரியாமல் திகைத்த பிரபாவோ தானும் அனிக்காவுமாய் வந்த காரை ரூபனின் காரை பின்தொடர்ந்து வரச் சொல்லி விட்டு, அனிக்காவை தூக்கிக் கொண்டு புறப்பட்ட ரூபனோடு கூட காரில் ஏறி பயணித்தாள். பயணம் முழுவதும் அனிக்காவை தன் மீதே சாய்த்திருந்த ரூபன் டிரைவரை வண்டியை வேகமாக விடச் சொன்னதோடு நில்லாமல், ராஜேஷிற்க்கு அலைபேசி வழியாகத் தகவல் தெரிவித்துச் சிகிட்சைக்காக எல்லாவற்றையும் தயார் நிலையில் இருக்கச் செய்தான்.

ராஜேஷிடம் பேசும்போதே அவன் விழிகளிலிருந்து உருண்டோடிய கண்ணீரும், கடந்த சில நிமிடங்களாகக் கண்கூடாகத் தான் கண்ட அனைத்தும் பிரபாவிற்கு நிறைய விஷயங்களைப் புரிய வைத்திருந்தன. அவை அனைத்தும் அவளுக்கு நம்ப வியலாதவனவாக இருந்தன.

இப்போதைய சூழலில் தான் முதலில் அனிக்கா மயக்கமுற்று இருப்பதை உடனே வீட்டிற்குத் தெரிய வைக்க வேண்டும் என்று மனதிற்குப் புரிந்தாலும், ஏற்கெனவே போர் சூழலில் தம் வீடு இருக்கும் நிலைமையில் தானும் அவசரப்பட்டு எதையாவது செய்து வைக்கக் கூடாது என்று எண்ணினாள். இன்னும் சில நேரத்தில் மருத்துவரிடம் காண்பித்து அனிக்காவின் உடல் நிலை தெரிந்த பின்னரே வீட்டிற்குத் தெரிவிக்க வேண்டும் என்று முடிவு செய்தாள்.

தன் வீட்டுப் பெண்ணை ஒருவன் அறைந்ததை அவளாலேயே தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த விஷயம் தெரிய வந்தால் கிறிஸ் என்னவாக இதைக் கையாளுவான்? ரூபனின் ஒரு அடிக்கு ஆயிரமாகவாவது பதில் சொல்லுவான்? என்பதில் பிரபாவிற்குச் சந்தேகம் எதுவுமில்லை. அவளை ரூபன் அடித்ததன் பிண்ணனி வெறுப்பாக மட்டும் இருந்திருந்தால் என்றால் நிச்சயமாக அதை அப்படித்தான் கையாள வேண்டும் என்று பிரபாவும் ஆதரித்திருப்பாள்.

ஆனால், இங்கே கதையே வேறாக இருக்கின்றதே விட்டால் அவளை அடித்த தன் கையை நொறுக்கி விடும் விதமாகத் தன்னைத் தானே காயப் படுத்திக் கொண்டிருப்பவனை இன்னும் எவ்வாறு தண்டிக்க? தான் அடித்து வீங்கிய அவள் கன்னத்தை அடிக்கடி தடவிப் பார்த்தவனாக மௌனமாகத் தன்னையறியாமல் கண்களினின்று வடிகின்ற ரூபனின் கண்ணீர் அவன் உடையில் தெறித்து, அதையும் தாண்டி அவன் கை வளையில் கிடக்கும் அவள் உடையிலும் தெறித்துக் கொண்டிருந்தது. அவள் எழும்பி விட மாட்டாளா? என அடிக்கடி அவளை உலுக்கிப் பார்த்துக் கொண்டிருக்கின்றவனிடம் எவ்வாறு தான் கோபத்தைக் காட்ட?

அனிக்கா மயக்கம் தெளிந்து எழுந்து விட்டாளென்றால் அவர்கள் ரூபனை சந்திக்க வந்த தடமே தெரியாமல் அவளைக் கையோடு கூட்டிச் சென்று விடவேண்டும் என்கிற மற்றொரு திட்டம் பிரபாவிடம் இருந்ததாலும் கூடப் பிரபா தன் வீட்டினருக்கு அனிக்காவின் நிலைச் சொல்லாமல் தாமதித்தாள். அவள் எண்ணியது நடக்குமா?

அவசர அவசரமாக அனிக்காவை பரிசோதித்து விட்டு வெளியே வந்த ராஜேஷ் ரூபனையும் பிரபாவையும் தன் அறைக்குள் அழைத்துப் பேசலானார். ரூபன் சந்தேகித்த மாதிரி அவள் உயிர் போக்கும் எதையும் உட்கொள்ளவில்லை என்றதும் தான் இருவருக்கும் ஆசுவாசமாயிற்று. சில நேரம் ராஜேஷின் திட்டுக்களை வாங்கித் தலைக் குனிந்து அமர்ந்திருந்த ரூபன் அப்படியென்றால் அவள் மயங்கி விழுந்ததன் காரணம் என்னவென்று அறிந்து கொள்ள எண்ணி கேள்வி கேட்க தலை நிமிர்த்தினான்.

பிரபா ராஜேஷிடம் ‘டாக்டர் அண்ணா அனிக்கா இப்போ எழுந்திடுவாளா? நான் அவளை வீட்டுக்கு கூட்டிட்டு போகட்டுமா? இப்ப ஹனி பாப்பாவை ஸ்கூல்லருந்து கூட்டிட்டு வர்ற டைம். நாங்க ரெண்டு பேரும் அரை மணி நேரத்தில வந்திட்டுத் திரும்பப் போகிறதா நினைச்சி வீட்டிலிருந்து புறப்பட்டது இப்படி ஆகும்னு நான் எதிர்பார்க்கலை. வீட்டில இன்னிக்கு கூடப் பிரச்சினை இப்ப இவ இப்படி மயங்கி கிடக்கிறான்னு தெரிஞ்சா அவ்வளவுதான்’ என்றவள் காலையில் வீட்டில் நிகழ்ந்தவற்றை சொல்லி முடித்தாள்.

இல்ல சிஸ்டர் அவ தன்னோட மயக்கத்திலிருந்து முழிக்கிறதுக்குக் கொஞ்ச நேரமாகும். இன்னும் டெஸ்ட் பண்ணிட்டு இருக்காங்க, எனக்குப் பார்க்க எப்பவும் போல அவ தெரியலை ரொம்ப நாளா ஒழுங்கா சாப்பிடாம தூங்காம இருந்திருப்பாளோ? டாக்டரின் கேள்வி பிரபாவை குற்ற உணர்ச்சிக்குள்ளாக்கியது. தான் அறிந்தவைகளை அவள் சொன்னாள்.

வீட்டில யார்கிட்டயும் எதையும் பகிர்ந்துக் கொள்ள முடியாம உள்ளுக்குள்ளே எல்லாம் வைச்சு ரொம்பவே கஷ்டப் பட்டிருப்பான்னு நினைக்கிறேன். ஒரே விஷயத்தை யோசிச்சு யோசிச்சு ரொம்ப அதிகமான மன அழுத்தம், கூடவே பல நாளா சாப்பிடாம, தூங்காம இருந்ததாலயும் பலவீனமாகவும் இருக்கலாம். எப்படின்னாலும் அவளோட திருமணம் விஷயத்தில உங்க வீட்ல நடந்துக்கிட்டது ரொம்பவே தப்பு.

‘சரி எதுவானாலும் அவளை தகுந்த சிகிட்சை கொடுத்து சரி பண்ணிடலாம். தற்கொலை வரை யோசிச்சிருக்கா? மனநல ஆலோசனை எதுவும் தேவையான்னு பார்க்கலாம். இப்ப அட்மிட் பண்ணிடறேன், நைட்குள்ள ஓரளவு சரியாகிட்டா அவளை டிஸ்சார்ஜ் பண்ணிடலாம். நீங்க அனி அட்மிட் ஆகியிருக்கிற விஷயத்தை வீட்ல சொல்லிருங்க சிஸ்டர் இன்னும் தாமதமா சொன்னீங்கன்னா கிறிஸ் உங்க மேல கோபப்படப் போறான்’ எனத் தீர்வு கூறினான். பிரபா எழுந்து சென்றதும் ரூபனிடம்,

இப்ப என்ன செய்யலாம்னு நினைக்கிற ரூபன்? அனியை நீ அடிச்சு வேற வச்சிருக்க, அவ அப்பா போலீஸில் உன்னைப் பிடிச்சு கொடுக்காம விட மாட்டாரே?.. வேணும்னா நான் உன் பேரை சொல்லாம விஷயம் வெளியே தெரியாம பார்த்துக்கறேன். பிரபா கிட்டயும் அப்படியே சொல்ல சொல்லிடலாம். யாருக்கும் தெரியாம இங்கிருந்து புறப்பட்டுப் போ. போகிற போக்கில் கிறிஸ் மனைவியிடம் அனிக்காவின் அட்மிஷன் ஃபார்மலிடீஸ் செய்யச் சொல்லிடு. நான் எல்லா விஷயத்தையும் பார்த்துக்கிறேன் பிரச்சனையே வேண்டாம் சரிதானே? …. என்றவனுக்குப் பதில் கொடுக்காதவனாக ரூபன் எழுந்து ரிசப்ஷனை நோக்கி சென்றான்.

அட்மிஷன் பார்ம்களில் கேட்ட இடங்களிலெல்லாம் கையெழுத்திட்டவன் முன்தொகையாகக் கட்ட வேண்டியதை கார்ட் செலுத்திக் கட்டினான். பிரபா போனில் கிறிஸ்ஸிடம் பேசி கொண்டிருப்பது கேட்டது. அவளை முழுவதுமாகச் சொல்ல விடாமல் கணவன் திட்டிக் கொண்டிருக்கின்றான் என்பது அவள் முகபாவனையிலேயே தெரிந்தது.

அனிக்காவை அட்மிட் செய்திருந்த அந்த ஸ்பெஷல் அறைக்குள் ரூபன் நுழைய, சற்று முன்னரே அவளைப் பரிசோதித்து விட்டு டாக்டர் சென்றிருக்க அக்கம் பக்கம் யாருமில்லாத அந்தத் தனிமை அவனுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.

அட்மிஷன் பார்ம்களில் அவள் பெயரை எல்லாவிடமும் மிசர்ஸ் அனிக்கா ரூபன் என்று எழுதி இருந்தவன் ஹஸ்பெண்ட் என்று தன்னுடைய கையெழுத்தையே தேவையான இடங்களிலெல்லாம் இட்டிருந்தான். தான் என்ன சொன்னால் என்ன செய்து வைத்திருக்கிறான் என்கிற ஆத்திரத்தில் அவ்வறையின் வாயில் வந்து நின்ற ராஜேஷையும், தொழிற்சாலை செக்யூரிட்டி மூலமாக அனிக்கா ஆஃபீஸிற்கு வந்ததையும், ரூபன் அவளைத் தூக்கிக் கொண்டு ஹாஸ்பிடல் போகும் வழிச் சென்றதையும் அறிந்து அனிக்காவிற்கு என்னவாயிற்றோ? எனப் பதறியபடி வந்து நின்ற ஜீவனையும் சாட்சியாக்கி மயங்கியிருந்த அனிக்காவை தன் மடியில் ஏந்தியவனாகத் திருச்சிலுவைக் கொண்ட அவர்கள் குடும்ப வழக்கமான தங்கத் தாலிச் செயினை ரூபன் அவளுக்கு அணிவித்து இருந்தான்.

அனிக்காவை வசதியாகப் படுக்க வைத்தவனிடம் ராஜேஷ் ஆக்ரோஷமாக வந்து சட்டையைப் பற்றிக் கொண்டு “ நான் தான் உன்னை போக சொன்னேனில்லை? நீ இங்கே என்னடாச் செஞ்ச்சிட்டு இருக்கிற?” எனக் கேட்டதை கண்டு கொள்ளாமல் ரூபன் அலட்சியமாய் நின்றான். ஜீவன் அவர்களுக்கு இடையே வந்து நின்று ராஜேஷின் கரத்தை ரூபனின் சட்டையினின்று பிரித்தெடுத்தான்.

ராஜேஷ் ரூபனிடம் ‘உன்னை நம்பினதுக்கு நீ இப்படிச் செய்வன்னு நான் நினைக்கலை?’ ஏமாற்றமாய் சொன்னான்.

‘நான் இப்ப கிறிஸ்ஸீக்கு என்ன பதில் சொல்வேன்? நான் தான் உனக்கு உதவி செய்யுறேன்னு சொன்னேனே, நீ போயிருக்கலாமே?”

அதுவரையிலும் அமைதியாக இருந்த ரூபன் அவனிடம் பொரிய ஆரம்பித்தான்.

 நான் எதுக்கு பிரச்சனைக்கு பயந்து அவளை விட்டுட்டுப் போகணும்? அவ தற்கொலை செய்யறதை பார்க்கிறதுக்காகவா? இப்படி ஒரு நிலைமையில் அப்படிப் பயந்து தப்பிச்சுப் போகிறவனாக இருந்தால், நான் அவளை நேசிக்கிறதில் அர்த்தமே இல்லை. அவங்க வீட்டுக்காரங்க அவ மனசைப் புரிஞ்சுக்கிறவங்களா இருந்தா அவ மனசு வெறுத்து சாகிறேன்னு சொல்லுற வரைக்கும் வர விடுவாங்களா? நீங்க பேருக்கு அவளோட அண்ணேன்னு சொல்லிட்டு இருக்காதீங்க. என்ன பிரச்சினை வந்தாலும் நான் பார்த்துக்கிறேன். முடிஞ்சா எனக்குச் சப்போர்ட் செய்யுங்க, இல்ல ஒதுங்கிப் போங்க. நான் எல்லாத்தையும் பார்த்துப்பேன்.”

….

இனி அவ என் பொண்டாட்டி என் கூட என் வீட்டுக்கு தான் வருவா. எப்போதும் எல்லோரும் அவளை இஷ்டப் படிக்கு ஆட்டி வைக்கிறதை எல்லாம் என்னால பார்த்திட்டு இருக்க முடியாது. திடமாய் ஒலித்தது அவன் குரல்.

உண்மைதானே? ஒருவேளை தான் கிறிஸ்ஸிற்காகப் பார்த்து தற்போது ரூபனுக்கு உதவாவிட்டால் அனிக்கா ஏதாவது தவறான முடிவு எடுத்து விட்டால் தன்னால் தன்னையே மன்னிக்க முடியாது போகும் என்றெண்ணிய ராஜேஷ் தான் ரூபனை எதிர்ப்பதை அக்கணமே விடுத்தான்.

‘நடந்த விஷயங்களில் நான் உனக்குச் துணையாக இருப்பேன் என்று எதிர்பார்க்காதே, ஆனால் உனக்கு எதிர்ப்பாகவும் இருக்க விரும்பலை. என்னவாயிருந்தாலும் நீயே எதிர்கொள்’ என்றவனாக ராஜேஷ் அங்கிருந்து நகர்ந்தான்.

அடுத்து என்ன நிகழப் போகிறதோ? என ரூபன் தவிர்த்து அனைவரும் உள்ளுக்குள் உதறலாகக் காத்திருக்க அனிக்கா மட்டும் நிர்சிந்தையாக மயக்கத்தில் இருந்தாள்.

வாசலிலிருந்த பிரபாவை முறைத்தவாறே கிறிஸ் ஹாஸ்பிடலின் உள்ளே நுழைய பின்னாகத் தாமஸ் போலீசொருவரோடு வந்திறங்கினார். மகளைக் காணச் சென்றவரின் கண்கள் அருகில் இருந்த ரூபன் மேல் நெருப்பைக் கக்கியது.

தன் மகளைக் காயப் படுத்தியதாகவும், கடத்தி வந்ததாகவும் தாமஸ் போலீஸிடம் கூறி ரூபனை கைது செய்யச் சொன்னார். ரூபனோ தாங்கள் கணவன் மனைவி என்றும், சாதாரணப் பலவீனம் காரணமாக மனைவியை அட்மிட் செய்திருப்பதாகவும், கடத்தி வரவில்லையென்றும் நிமிர்வாய் பதில் கூறினான்.

பெண்ணின் கழுத்தில் தாலி, அட்மிஷன் ரெக்கார்டில் இருந்த திருமதி எனும் அவள் பெயர் போன்றவை போலீஸிற்குக் குழப்பத்தை ஏற்படுத்த இப்போது அனிக்காவின் வாய்மொழியாக உண்மை என்னவென்று அறிந்தாலொழிய எந்த முடிவையும் எடுக்க முடியாது என்கிற நிலையாயிற்று.

தங்கையின் கழுத்தில் தாலியா? என அதிர்ந்து கிறிஸ் பிரபாவைப் பார்க்க அவளுக்கு இது எப்போது நடந்தது? என்பதே புரியவில்லை. இங்கே என்னதான் நடக்கின்றது? எதுவானாலும் அனிக்கா எழுந்து உண்மைச் சொன்ன பின்னே இவனுக்குத் தகுந்த பாடம் கற்பித்தாக வேண்டும் என்றெண்ணிய தாமஸ் தான் கூட்டி வந்த காவலர் முன்னே தன் கோபத்தைக் காட்டவியலாத சங்கடத்தில் இருந்தார்.

தான் அனிக்காவின் மயக்கம் தெளியும் வரை சிறிது நேரம் காத்திருப்பதாகக் கூறி காவலர் காத்திருக்க, ரூபனை கிறிஸ் வெளியே அழைத்தான்.

நிகழப் போவது தெரிந்திருந்தாலும் ரூபன் அயரவில்லை. ஜீவனிடம் அனிக்காவை விட்டு நகராதே என்றுச் சொல்லி அங்கேயே அமர்த்தி விட்டு கிறிஸ்ஸை பின் தொடர்ந்தான். இருவரும் ஹாஸ்பிடலின் பின்பக்கமாக, நடமாட்டம் அற்ற அமைதியான இடத்திற்கு வந்திருந்தனர். பிரபாவும் பதறியபடியே அவர்களை பின்தொடர்ந்து வந்திருந்தாள்.

 வேண்டாங்க எந்தப் பிரச்சினையும் வேண்டாம்” என் மனைவி கூற வருவதைக் கேட்கும் நிலையில் கிறிஸ் இல்லை.

‘என் தங்கச்சியையா நீ அடிச்ச?; என்றவனாய் ரூபனை ஆத்திரம் தீர அறைந்துக் கொண்டிருந்தான்.

‘விடுங்களேன்’ மனைவி அவனைப் பின்னிழுக்க ரூபன் கன்னங்களும் கண்களும் கலங்கியிருந்தாலும் இன்னும் எத்தனை அடித்தாலும் எனக்குப் போதாது என வரம் யாசிப்பவனைப் போல கிறிஸ்ஸின் அடிகளுக்காகக் காத்திருந்தான்.

‘ப்ளீஸ் சொன்னாக் கேளுங்களேன். அனிக்கா செத்துப் போறேன்னு சொன்னா அதான் கோபத்தில தம்பி அடிச்சிட்டாங்க, அவளுக்கு ரூபன் தம்பியை தான் பிடிக்கும் போலிருக்கு நாம தான் அவ விருப்பம் கேட்காம எல்லாம் அரேஞ்ச் பண்ணிருக்கோம். ப்ளீஸ் கேளுங்களேன்’ … என்றவளின் ‘அனிக்கா செத்துப் போறேன்னு’ என்பதில் சிக்கிக் கொள்ள விதிர்த்து மனைவியைப் பார்த்தான்.

அவனுடைய முதல் விளையாட்டுப் பொம்மை, முதல் குழந்தை அவன் தங்கை அவள் வாயிலிருந்து இப்படியும் வார்த்தை வந்ததா?வென அவனை அது உலுக்கியெடுக்க எல்லோரையும் மறந்து மறுபடி தங்கையைப் பார்க்க ஹாஸ்பிடலினுள்ளே அவன் விரைந்தான், கணவன் பின்னேயே பிரபாவும் விரைந்தாள்.

கிறிஸ்ஸிடம் அடிகள் வாங்கிய நேரம் வாயினுள்ளே சதைக் கிழிய உதட்டில் உப்புக் கரித்த ரத்தத்தைத் துடைத்தவன், எப்போது வந்தானோ? என்னவெல்லாம் பார்த்தானோவென எண்ணியவனாகத் தன் எதிரில் நிற்கும் தீபனைப் பார்த்தான். அருகில் வந்த தீபன் எதுவும் கேட்காமல் தம்பியை இறுக்க அணைத்துக் கொண்டான்.

நெருங்கிய ரத்த சொந்தங்கள் இப்போது யாராவது ஒருவர் வாய் விட்டாலும் குடும்பமே இரண்டு பட்டுப் போகவேண்டிய சூழல் இருந்தது. பெரியவர்கள் நிதானம் தவறினாலும் இளையவர்கள் பொறுமைக் காத்தார்கள்.கிறிஸ்ஸின் கோபம் மற்றும் அவன் தன் தம்பியை அறைந்தது சங்கடமாக இருந்தாலும் தம்பியின் வாழ்வு கருதி, தீபன் மௌனம் சாதித்தான்.

தங்கையின் மனம் புரியாமல் முடிவெடுத்து விட்டோமோ? என்கிற குற்றவுணர்ச்சியில் கிறிஸ் தங்கை வாயினின்று பதில் கேட்டபின் முடிவெடுக்கக் காத்திருந்தான்.

தாமஸ் தன் மகள் பொய் சொல்லமாட்டாள் என்பதை அறிவாராகையால் அவள் கண்விழித்து ரூபனை கை நீட்டி குற்றவாளியாக்கிய நொடியே சட்ட ரீதியாக அவனை உரிய விதத்தில் தண்டிக்கக் காத்திருந்தார். அவன் உருவாக்கியவைகள் அவன் பிசினஸ் அத்தனையும் அழித்து எப்படி அவனுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டுமென்று திட்டங்கள் பல அவர் உள்ளத்தில் உதித்தவாறு இருந்தது.

ஜீவன் அங்கு நிகழும் யாவையும் எவ்வாறு திரும்புமோ? எனக் கலக்கத்தில் வீட்டிலிருந்து வந்து கொண்டிருந்த அத்தனை போன் காலுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தான். அத்தனை பேரையும் தவிக்கவிட்டிருந்தவள் அரை மணி நேரத்தில் மயக்கத்தினின்று விழிக்க, டாக்டர் அனுமதிக் கொடுத்தவுடன் ஒவ்வொருவராக அந்த அறையில் கூடினர்.

காவலர் அனிக்காவின் அருகில் வந்து, உங்க அப்பா மிஸ்டர் தாமஸ் உங்களை மிஸ்டர் ரூபன் கிட்னாப் செஞ்சிட்டதாகக் கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்கிறார். மிஸ்டர் ரூபன் உங்களுக்கும் அவருக்கும் ஏற்கெனவே மேரேஜ் ஆகி விட்டதாகக் கூறுகிறார். ஆனால், உங்க அப்பா உங்களுக்கு இன்னும் மேரேஜ் ஆகவில்லை என்று கூறியிருக்கிறார். நீங்கள் உண்மை சொல்வதைப் பொறுத்தே நாங்கள் அடுத்த நடவடிக்கை எடுக்க முடியும். என்று கூறினார்.

அனிக்காவிற்க்கு நடப்பது என்னவென்று தலையும் வாலும் புரியவில்லை. கழுத்தினூடாக ஏதோ நெருடிக் கொண்டிருக்கத் தன்னிச்சையாக அதனை முன்னிழுத்துப் பார்த்தாள். அழகிய சின்னதொரு செயின் அதில் சிலுவை வடிவ அந்தத் தாலி புதுமெருகோடு பளிச்சிட்டது.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here