29. அமிழ்தினும் இனியவள் அவள்

0
514
Amizhthinum Iniyaval Aval

அத்தியாயம் 29

தாமஸ், கிறிஸ், பிரபா இவர்களுக்குப் பேசுவதற்க்கு வார்த்தைகளில்லாத நிலைமை போல வெறுமையாக இருந்தது. சோர்வாக மிகச் சோர்வாக அந்த மூவரும் தம் வீட்டை அடைந்திருந்தனர். தன் அகங்காரம் தூள் தூளாகி, தன்னை அனைவரும் பார்த்து கெக்கேபிக்கேவென இழிவு படுத்திச் சிரிப்பது போல ஒரு எண்ணம் பரவ தாமஸ் உள்ளுக்குள்ளே கூசிப் போனார்.

மகள் சொன்னது பச்சைப் பொய் என்பது அவருக்கும் தெரியும். எதற்காகச் சொன்னாளாம்? அந்த ரூபனை போலீஸிடமிருந்து காப்பாற்றவா? அவன் மீது அவ்வளவு கரை காணாத காதலா? பெற்று வளர்த்த என்னை விட அவன் அவளுக்கு முக்கியமாகப் போய் விட்டானா? அவ்வளவு தானா பெண் பிள்ளையின் அன்பு.

எல்லோரும் சொல்வார்களே பெண் பிள்ளை மீது அதிகம் பாசம் வைக்காதே பின்னொரு நாள் தகப்பனை எட்டியும் பாராமல் கணவன் வீட்டில் ஐக்கியம் ஆகி விடப் போகிறவர்கள் என்று, தனக்கு தன் மகள் இப்போது அதைத் தான் அட்சரம் பிசகாமல் நிறைவேற்றி விட்டாள். அவரது முகத்தில் கசந்த முறுவல் ஒன்று இழையோடியது.

கிறிஸ் தன் மனைவியின் மீது கடும் கோபத்தில் இருந்தான். தன் தந்தையின் நிலை பார்த்து அவனுக்குத் தாளவில்லை. முன்பு ஒருபோதும் இப்படி அவரது வாடிய முகத்தைப் பார்த்திராதவன் என்பதால் நிகழ்ந்த அனைத்திற்கும் மனைவியையே காரணமாக்கி, கோபத்தில் அவள் முகத்தை அவன் எட்டியும் பார்த்திருக்கவில்லை.

பிரபாவின் நிலையோ சொல்லில் அடங்காது. புகுந்த வீட்டில் கூட இவளை ஒரு வேளை ஏதாவது சொல்லாமல் விட்டு விட வாய்ப்பு இருக்கின்றது, ஆனால் இது குறித்து தன்னுடைய பிறந்தகத்திற்கு விஷயம் தெரிய வரும் போது என்ன பேச்செல்லாம் கேட்க வேண்டுமோ என அஞ்சினாள். அவளிடத்தில் அவள் அம்மாவும், ஏனையோரும் கேள்விகள் கேட்டு ஒருவழி செய்து விடுவார்களே பெரும் கலக்கம் சூழ்ந்தது.

அனைவரும் கலைந்தது என்னவோ ஹனியின் குரல் கேட்டுத்தான்.

டம்பி இங்க பாரு… என்றவளாக அவள் ராபினுக்குத் தன்னுடைய விளையாட்டுச் சாமானகளையெல்லாம் எடுத்துக் காண்பித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அடிக்கடி “த” வராமல் மக்கர் செய்யும் அதனால் தம்பி ‘டம்பி’ ஆகி விட்டிருந்தான்.

 பெரியப்பா தண்ணி எடுத்துக்கோங்க  என்றவளாக ப்ரீதா அந்த நேரம் மிக முக்கியமாகத் தேவைப்பட்ட குளிர் நீரை அவர்முன் வைத்தாள். ட்ரேயிலிருந்த மற்ற கிளாஸ்களையும் கிறிஸ் மற்றும் பிரபா முன் வைத்தாள்.

ஹனி என்று இதுவரை கவனிக்காமல் விட்டிருந்த மகளை நோக்கி பிரபா கவனம் திருப்பவும்.

‘நான் பாப்பாக்கு ஸ்னாக்ஸ் கொடுத்திட்டேன் அண்ணி’ என்று அவள் பதிலிறுத்தாள். பின்னாக வந்த தீபன் நான் தான் ஹனியை ஸ்கூல்லருந்து அழைச்சிட்டு வந்தேன். அத்தைக்குத் துணையா அம்மாவை இங்க தான் விட்டுட்டு போனேன் என்றவனாய் அவர்கள் கூடவே அமர்ந்தான். நிகழ்ந்தவைகளால் மனைவியின் உறவுகளோடு எக்கச் சக்க கோபத்தில் இருந்தாலும் கூட, அப்போது தீபனையோ ஃப்ரீதாவையோ ஒன்றும் சொல்லவியலாத நிலையாக இருந்தது.

அனிக்காவை காண வருவதாகச் சொன்ன சாராவை வர வேண்டாமென்று சொல்லிச் சென்ற தாமஸ் எண்ணாததை அல்லவா தீபன் செய்திருக்கிறான். எல்லோரும் ஒரேவிடம் கவனம் செலுத்த வீட்டிலிருக்கும் சாராவையும், ஹனியையும் குறித்து அவர்கள் செலுத்தாத கவனத்தைப் பொறுப்பாக நிறைவேற்றிய தீபனை அவமானப் படுத்துவதை விடக் கீழான செயல் என்று வேறெதுவும் இருக்க முடியுமா? இதற்குத் தான் துன்ப காலத்தில் சொந்தங்கள் வேண்டும் என்பார்களோ?

கிச்சனில் குக்கர் சப்தம் எழுப்பவே சென்று அணைத்து வந்த ஃப்ரீதா. ‘சமையல் எல்லாம் ஆயிடுச்சு நேரத்துக்குச் சாப்பிடுங்க’ என்று புன்முறுவல் செய்தாள்.

அம்மா எங்க? தீபன் கேட்க

 அனி ரூம்ல பெரியம்மா இருக்காங்க அங்கே தான் அத்தையும் போயிருக்காங்க  என்றாள்.

ப்ரீதா, பிரபா மற்றும் சிறு பிள்ளைகள் விடுத்து அனைவரும் மாடிக்கு விரைந்தனர்.

தாமஸ் தன் மகளின் அறைக்குள் நுழைந்தார். அழுது களைத்து இந்திராவின் அணைப்பில் இருக்கும் மனைவியைப் பார்க்கவே நெஞ்சம் கனத்தது. மகள் அறையில் மகள் இல்லாத வெறுமை அதை விடப் பலமாகத் தாக்கிற்று.

மனைவியின் கண்ணில் கண்ணீர் கோடுகள் எதற்காகவாம்? சாராவின் விழிகள் தன் கரத்தையே நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தது. அவர் கரங்களில் இருந்தது என்ன?

அம்மாவின் கரத்தை திறந்தவன் அதிர்ச்சியில் உறைந்தான், வழக்கமாகத் தாமஸ் எடுத்துக் கொள்ளும் தூக்க மாத்திரைகள் நிறைந்த பாட்டில் அது. அதனோடு அந்தக் காகிதம் என்ன?

கிறிஸ்ஸை முந்திய தாமஸ் அக்காகிதத்தை நடுங்கும் விரல்களோடு எடுத்துக் கொண்டார்.

மகளின் அழகான கையெழுத்து, வருடாவருடம் வீட்டிலிருக்கும் ஒவ்வொருவர் பிறந்தநாளைக்கும் அவள் வண்ண வண்ண காகிதங்களால் அலங்கரித்து வாழ்த்து எழுதி தரும் போது மட்டுமே வாசித்த கையெழுத்து. இப்போது அப்படி என்ன எழுதியிருக்கிறாளாம். தாமஸிற்கு அதை திறந்து வாசிக்கும் முன்பே கைகள் நடு நடுங்கின.

ஏதோ தற்கொலை செய்து கொள்வதாக மகள் சொன்னதாக அவரும் பிறர் பேசக் கேட்டிருந்தாலும், அதற்கு அவர் அவ்வளவாக முக்கியத்துவம் கொடுத்திருக்கவில்லை.

அவரைப் பொருத்தவரை மகள் இன்னும் விளையாட்டுப் பிள்ளைதான். உண்மையாகவே இப்படியொன்று செய்ய அவளால் இயலாது. ஏதோ பொய்யாகக் கதைக் கட்டுவதாக எண்ணி அந்த விபரத்தை அவர் காது கொடுத்தும் கேட்டிருக்கவில்லை. இப்போது இது என்ன காகிதம்? அதுவும் அவருக்கே தெரியாமல் அவரது அறையினின்று அவளறைக்கு மாறிய தூக்க மாத்திரை பாட்டில் சகிதமாக.

எனக்கு என் வீட்டினரை எல்லோரையும் ரொம்பப் பிடிக்கும். இப்படியாக ஆரம்பித்து இருந்தது அந்தக் கடிதம்.

யாருக்கு இவ்வளவு அன்பான ஃபேமிலி கிடைக்கும். எனக்குக் கிடைத்திருக்கிறதே. நான் எவ்வளவு லக்கி. லவ் யூ பப்பா, லவ் யூ மா, அண்ணா , அண்ணி, ஹனி லவ் யூ சோ வெரி மச்.

நானும் எப்பவும் உங்கள் எல்லோருக்கும் பிடித்த மாதிரி இருக்கணும் என்று முயலுவேன். எப்பவாவது மிஸ் பண்ணியிருந்தால் அயாம் வெரி சாரி மம்மா, பப்பா, அண்ணா, அண்ணி.

ஏனோ இந்த முறை உங்களுக்குப் பிடித்த மாதிரி நடக்க முடியாது போலத் தோன்றுகிறது. உங்களுக்குப் பிடித்தமாதிரி நான் நடந்து கொண்டால் , என் மனசாட்சியே என்னைக் கொன்றுவிடும் போலிருக்கிறது. உங்களுக்குப் பிடிக்காத மாதிரி நடந்து கொண்டாலும் என் நிலை அதுவாகவே இருக்கிறது.

எதற்காக இந்தக் குழப்பம் என்பதற்காகத் தான் இந்த முடிவை நான் எடுத்திருக்கிறேன். இந்த முடிவினால் எல்லாம் முன் போல நலமாகி விடும் இல்லியா பப்பா. முன் போல நம்ம ஃபேமிலியில் எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையா மகிழ்ச்சியா இருப்பீங்கன்னு நம்பறேன். லவ் யூ பப்பா.

கதறி விட்டிருந்தார் தாமஸ், அவரோடு இணைந்து மனைவியும் அழ இருவரையும் சமாதானப் படுத்துவதற்க்குள்ளாக ஒருவழியானது. கிறிஸ் இன்னுமாய் இறுகிப் போயிருந்தான். பிரபா மாடிக்கு விரைந்தாள்.

அந்நிமிடங்கள் மௌனத்தில் உறைந்தன. தீபன் மென்மையாக அதே நேரம் அழுத்தமாக பேச ஆரம்பித்தான்.

 மாமா, ரூபன் செஞ்சது ரொம்பப் பெரிய தப்பு. நான் ஒத்துக்கறேன் அவனுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். அனிக்கா வாயிலிருந்து செத்துப் போறேன்னு இப்படி ஒரு வார்த்தை வரவும், அவளை கோபத்தில அடிச்சிருக்கான். ஏதோ ஒரு வேகத்தில முன்னே பின்னே யோசிக்காம தாலியும் கட்டிட்டான். இது அதையும் விடப் பெரிய தப்பு.”

“அவங்க ரெண்டு பேருக்கும் முன்னேயே எல்லாம் கல்யாணம் ஆகலை. அவள் மயக்கத்திலிருந்தப்போ தான் ரூபன் அனிக்காவுக்குத் தாலிக் கட்டினதா ஜீவன் எனக்குச் சொன்னான்” எனவும்,

‘எங்க வீட்டுப் பொண்ணைப் பற்றி எங்களுக்குத் தெரியாதா?’ எனும் விதமாகத் தாமஸும், கிறிஸ்ஸிம் அவனைப் பார்த்து வைத்தனர்.

மறுபடி டிஸ்சார்ஜ் ஆகி இங்க அனிக்கா வந்தான்னா தற்கொலைக்கு முயன்றிடுவாளோன்னு பயந்து, அவன் தன் கூட அவளையும் வீட்டுக்கு கூட்டிட்டு போகிற உரிமைக்காகத் தான் அந்த வேலையைச் செஞ்சு வச்சிருக்கான். அவனைப் பொருத்தவரை அதற்கு வேற ஒரு காரணமும் இல்லை.

அதே நேரம் அனிக்காவும் போலீஸ் விசாரிக்கும் போது உண்மையைச் சொன்னா ரூபனுக்கு எதுவும் ஆகிடுமோன்னு தான் இப்படிப் பொய் சொல்லி வச்சிருக்கா. அதனால,

அதனாலே  காட்டமாகவே எழுந்தது கிறிஸ்ஸின் கேள்வி.

அண்ணன் நானிருக்கத் தன் மனதை எனக்குச் சொல்ல முடியாதா? எனத் தன் தங்கையின் மீது எழுந்த கசப்புணர்வின் வெளிப்பாடு அது. எவனோ ஒருவன் தன் தங்கை பற்றிச் சொல்லிக் கொண்டிருக்க நான் கேட்க வேண்டியிருக்கிறதே என்பதான கோபத்தின் வேளிப்பாடாக எழுந்த கேள்வி அது.

நடந்தது எல்லாம் தப்புத்தான், நாம வெளியே எல்லோருக்கும் அப்படியே சொல்ல வேண்டிய தேவை எதுவும் இல்லை. நாம் ரூபன் கிட்ட பேசிப் பார்த்துட்டேன். அவன் அனிக்காவை நம்ம வீட்டுக்குத்தான் டிஸ்சார்ஜ் பண்ணிக் கூட்டிட்டுப் போகப் போறேன் அதில ஒண்ணும் மாற்றமில்லன்னு சொல்றான். அவளுக்கு உடல் நலம் சரியாகக் கொஞ்ச நாளாகும்னு டாக்டர் சொல்லியிருக்கார். அதுக்கப்புறமா எங்கேஜ்மெண்ட் வச்சுக்கலாம்.

‘ஊரை கூட்டி எனக்குன்னு அவளை நிச்சயம் பண்ணிட்டு, கல்யாண நாள் குறிச்சிட்டு அவளைக் கூட்டிட்டுப் போகச் சொல்லுங்க. எல்லோர் முன்னால சொன்னாதான் பேச்சு மாற மாட்டாங்கன்னு நான் நம்புவேன்’ அப்படின்னும் சொன்னான் எனவும் கிறிஸ்ஸிற்கு ரூபனைப் பிடித்து மீதம் கொடுக்க வேண்டியிருந்த அறைகளைக் கன்னம் கன்னமாக கொடுக்கக் கை பரபரத்தது.

 யார் வீட்டுப் பெண்ணைக் கூட்டி வர யார் அனுமதி கொடுப்பது. அவ என் தங்கச்சி  உறுமினான் கிறிஸ்.

 பொறுமையா இரு கிறிஸ்  அவனை தாமஸ் சாந்தப் படுத்தினார். ‘நான் பேசறேன்’ அவர் கையிலிருந்த மகளின் கடிதம் அவரது அகம்பாவம், ஆணவம் இவற்றினின்று அமைதிப் படுத்தியிருந்தது.

‘ஒரு நேரம் யோசிக்கும் போது மகளாவது ஒண்ணாவது அப்படியே தலை முழுகிடலாமான்னு தோணுது ‘ தாமஸ் தன் பற்களைக் கடித்துக் கொண்டு பேசினார். அதைக் கேட்டு அடக்கப்பட்டிருந்த சாராவின் விம்மல் எழ இந்திரா தேற்றினார்.

‘ஆனால் என் மகளா போயிட்டாளே. அவ எனக்குத் தர்ற பரிசு இதுவா?’ வெறுப்பாய் அக்கடிதத்தைப் பார்த்தார்.

‘இங்க பாரு தீபன் நான் அவளுக்குப் பேசி வச்சிருக்க இடம் ஒன்னும் சாதாரண இடமில்ல, மல்டி மில்லியனர் ஃபேமிலி, அத்தோட என்னோட ரிலேஷனும் கூட. இந்தச் சம்பந்தத்தைச் சட்டுன்னு முறிக்கிறது எனக்கு ரொம்பவே அவமானம். ஆனால் இவ இப்படி எதுவாவது செஞ்சி வைப்பான்னு நான் தினந்தோறும் பயந்துகிட்டு இருக்கிறதை விட முறிச்சிறது தான் சரின்னு தோணுது. அவரிடத்தில் பெருமூச்செழுந்தது.

எதற்கும் நான் அவங்க கிட்டே விஷயத்தை சொல்லுவதற்கு ஒரு வார காலம் எனக்குத் தேவை, பேசாம டிஸ்சார்ஜ் ஆனதும் அனியை இங்கே கொண்டு விட்டுற சொல்லுங்க. நான் அதுக்கப்புறமா செய்ய வேண்டியது என்னன்னு பார்க்கிறேன். ஒரு வாரம் முடிஞ்சதும் பார்க்கலாம் எனப் பட்டுக் கத்தரித்தார் போலப் பேசினார். அமைதியாக அத்தையிடம் விடைப் பெற்று, அன்னையை அழைத்துக் கொண்டு தீபன் கீழே வந்தான்.

ராபினை கையில் தூக்கிக் கொண்டவன் மனைவியோடு புறப்பட விழைந்தான். அந்த வீட்டில் அப்போது உற்சாகமாக இருந்த ஒரே ஒரு குட்டி ஜீவனான ஹனி மட்டும் டாட்டாக் காட்டி அவர்களுக்கு விடையளித்தாள்.

அதன் பின்னர்க் கிறிஸ்ஸீம் தாமஸீம் எவ்வளவோ கூறியும் ரூபனுடைய பிடிவாதமே வென்றது. அனிக்காவை தன்னுடைய வீட்டிற்கே அதுவும் தன்னுடைய அறைக்கே அழைத்து வந்திருந்தான். அவளுக்குத் தேவையான அனைத்தையும் பார்த்துக் கொண்டான். அக்கம் பக்கத்தினர் யாருக்கும் எதுவும் விபரம் தெரியாமல் அவர்கள் பார்த்துக் கொண்டனர்.

முதலில் சரியாக பேச்சுக் கொடுக்காமல் தவிர்த்து வந்த தாமஸ் ஒரு வாரம் கழிந்ததும் ரூபன் கூறியவாறு அனைத்தையும் செய்யச் சம்மதித்தார். உடல் நலக் குறைவினால், மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்டிருந்த அனிக்கா உறக்கமும் விழிப்புமாக நாட்களைக் கடந்திருக்க, இந்திராவின் கவனிப்பில் ஓரளவு தேறியிருந்தாள்.

அதுவரை பதில் கொடுக்காது இழுத்தடித்துக் கொண்டிருந்த தாமஸ், தன் வீட்டினரையும் அனிக்காவைப் பார்க்க அனுமதித்து இருக்கவில்லை. அவரது சம்மதம் தெரிந்த பின்னரே நிச்சயத்திற்கான உடைகள் எடுப்பதற்காகச் சாராவையும், பிரபாவையும் ஹனியையும் தன் வீட்டிலிருந்து அனுப்பி வைத்தார்.

ஏறத்தாழ ஒரு வாரம் கழித்து நிச்சயத்திற்கான உடைகள் எடுப்பதற்காக இந்திராவுடன் சேர்ந்து செல்ல அங்கு வந்திருந்த அம்மாவையும்,அண்ணியையும், ஹனியையும் பார்த்த அனிக்கா அழுது கரைந்தாள். அவளைத் தேற்றவே வெகு நேரமானது. இன்னமும் அண்ணனையும், அப்பாவையும் பார்க்காத ஏக்கம் அவளில் இருந்தது.

அவர்கள் தன் மீது கோபமாகவும் வெறுப்பாகவும் இருப்பார்கள் என்றெண்ணி அவளுக்கு மிகுந்த மன வேதனையாக இருந்தது. ரூபனின் ஒதுக்கம் தான் அதனை விட அதிகமாகப் பாதித்தது.

அவனறையில் அவன் வீட்டில் தான் அவள் இருக்கின்றாள். ஆனால், அவன் அவளிடம் இதுவரை பேசவில்லை. பார்த்து பார்த்து அவளுக்காக ஒவ்வொன்றாகச் செய்கிறான். அவளுக்கான உடைகள், மருந்து மாத்திரைகள், ஹாஸ்பிடல் கூட்டிச் சென்று அவளுடைய தற்போதைய உடல் நிலைப் பற்றிக் கேட்பது என்று ஒன்றிலும் குறை வைப்பதில்லை. அவளும் வித விதமாக முயற்சி செய்து பார்த்து விட்டால். ஆனால், இது வரை அவளிடம் அவன் தானாக வந்து ஒரு வார்த்தைக் கூடப் பேசி இருக்கவில்லை. அவள் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலும் அவள் முகத்தைக் கூடப் பார்க்காமல் பதில் சொல்லி விட்டு நகர்ந்து விடுகின்றான்.

என்ன செய்து இவனைப் பேச வைப்பது? என்றெண்ணியவளாகப் பகல் முழுக்கத் தூங்கி எழுந்ததில் நடு ராத்திரி தூக்கம் வராமல் எழுந்தவள் தண்ணீர் குடிக்கச் சமையலறை பக்கம் சென்றாள்.

அங்கே இருட்டுக்குள் நடமாடுவது யார்? சமையலறை ஸ்விட்சைத் தட்டி விட எழுந்த ஒளி வெளிச்சத்தில் எதிரில் தன்னை மோத வந்து தன்னை நிலைப் படுத்தி நிற்கும் உருவத்தைக் கவனிக்கலானாள்.

களைத்துச் சோர்ந்த நிலையிலும் கண்ணைக் கவருபவனாய் அவள் கண்ணாளன் அவளெதிரில் நின்று கொண்டிருந்தான்.

நீ என் கண் அவன்

நீ என்னவன்.

உனைக் காணும் நாட்களுக்காய்

பல நூறு ஆண்டதனை

தவமாகக் கழித்திருந்தேனோ- இல்லை

பசி தூக்கம் தான் மறந்து

உனையே தினம் நினைந்து

உலகத்தின் கோ அவனிடம்

உனையே நிதம் யாசித்திருந்தேனோ?

நீ என் கண் அவன்

நீ என்னவன்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here