3. அமிழ்தினும் இனியவள் அவள்

0
608
Amizhthinum Iniyaval Aval

அத்தியாயம் 3

அவள் கண்ணடித்தவுடன் திகைத்துத்தான் போய்விட்டான் ரூபன் . இந்தச் சின்னப் பிள்ளைகள் சண்டையைத் தீர்க்க வந்தால் இது என்னடா வம்பா போச்சு? என்று எண்ணிக் கொண்டிருக்கையில் 

அதுவரை ஜீவனின் கையிலிருந்த தன் சடைப் பின்னலை அவனிடமிருந்து இழுக்கவே முடியாத மாதிரி முகத்தைப் பாவம்போல் வைத்துக் கொண்டிருந்தவள் சட்டென்று வெகு இலகுவாகப் பிடுங்கி எடுத்துக் கொண்டு சோஃபாவில் வந்து அமர்ந்து ரூபனைப் பார்த்து முறைத்தாள் .

 போங்கத்தான் , உங்களால என் சண்டைப் போடற மூட் போயிட்டு “…

கேட்டவனுக்கு அவள் செய்கைப் பார்த்து வியப்பாகத் தோன்றிற்று கூடவே ரொம்ப வாலு தான் போலயே எனத்தோன்றி சிரிப்பாகவும் தான் . அத்தான் என்ற அழைப்பிலேயே அவள் யாரென்று புரிந்து கொண்டான் . இருவருக்கும் என்ன பிரச்சனை? என்று அறிந்து கொள்ள ஆர்வம் வந்ததால் அவளருகே அமர்ந்தான் .

இத்தனை நாளாய் அந்த ரூமுக்குள் அடைந்துக் கிடந்தவன் இன்று சகஜமாக ஹாலில் வந்து அமர்ந்ததைப் பார்த்த அவன் தாய்க்கு மனம் நெகிழ்ந்தது . இந்தக் குட்டிப் பொண்ணு யாரையும் இலகுவாக ஆக்கிவிடுவாள் என்று மனதிற்குள் மகிழ்ந்து கொண்டார் .

 நீ அனிக்குட்டி தானே , உன்னை ஜாக்குலின் அக்கா மேரேஜ் அன்னிக்கு பார்த்தது “… என்று ஆரம்பித்தான் .

“…”

தான் கேட்ட கேள்விக்குப் பதிலே பேசாமல் அமர்ந்திருந்தவளைப் பார்த்து , “ என்னாச்சு நீ பேச மாட்டேன்கிற , நான் உன்கிட்ட பேசுறேன்னு அங்கே ஒருத்தன் என்னை முறைச்சு , முறைச்சுப் பார்த்துகிட்டு இருக்கிறான்  என்றான்

 அது வேறொண்ணுமில்ல …… என்னைக் குட்டின்னு சொல்ற யார் கூடவும் நான் பேசக் கூடாதுன்னு டிசைட் பண்ணிருக்கேன் .”

இடையில் புகுந்த ஜீவன் ,

 அண்ணா நீ குட்டின்னே கூப்பிடு இவளை அனிக் குட்டி , ஆட்டுக் குட்டி ,  …”

 டேய் “… எழுந்து அவனைத் துரத்த ஆரம்பித்து விட்டாள் அவள் .

 இன்னிக்கு இவங்க சண்டைல மாட்டிகிட்டியா நீ  என்று கேட்டவாறு அப்போதுதான் தன் அலுவல் முடித்து வந்த தீபன் அவன் அருகில் அமர்ந்தான் .

 ஆமாண்ணா  என்று சொல்லி தன் அறைக்குள் செல்ல முயன்றவனைத் தடுத்து தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டு தீபன் அளவளாவினான் . தன்னைச் சகஜப் படுத்த அவன் எடுத்துக் கொள்ளும் முயற்சியை அறிந்தவனாக ரூபனும் அவனோடு உட்கார்ந்து பேச ஆரம்பித்தான் . சி  முடித்துத் தனக்கெனத் தனி அலுவலகம் அமைக்கும் முயற்சியில் இருந்த தீபனிடம் அது குறித்து விபரங்கள் கேட்டுக் கொண்டிருந்தான் .

கொஞ்ச நேரம் கழித்துச் சண்டைப் போட்டுக் களைத்த இருவரும் அவர்கள் அருகே வந்தனர் . அனிக்கா தீபனின் அருகில் அமர்ந்துக் கொண்டாள் . ஜீவன் ரூபனின் அருகில் அமர்ந்து கொண்டான் .

சற்று நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டவள் தீபனிடம் முறையிட்டாள் .

 பெரிய அத்தான் , நீங்க ரூபன் அத்தான் கிட்ட சொல்லி வைங்க நான் இங்க ஃபைட் செய்ய வரும்போது என்னை டிஸ்டர்ப் செய்யக் கூடாதுன்னு “…

பெரியவர்கள் இருவருக்கும் அதைக் கேட்டுச் சிரிப்பு வந்தது என்றால் , சின்னவனுக்குக் கோபம் வந்து விட்டது .

 உனக்குச் சண்டைப் போட நான் தான் கிடைச்சேனா “…

ஆமா , பிறகு நான் வேற யாருக் கிட்ட போய்ச் சண்டைப் போடுவேன்  என்கூடச் சண்டைப் போட வீட்ல யாருமே இல்லலா “…

கோபத்தில் உறுமிக் கொண்டு அவள் மேல் பாய இருந்த தம்பியை சமாளிப்பது ரூபனுக்கு வெகு சிரமமாக இருந்தது 

அங்கே நடப்பது எதையுமே கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அவள் தொடர்ந்தாள் .

 இப்படித்தான் பெரிய அத்தான் …… என்கூட வீட்ல யாருமே சண்டைப் போடுறதில்லங்கிறதனால , இனிமே வரப் போறவங்க கூடவாவது சண்டை போடலானு ரொம்ப நாளா பிளான் செய்தேன் .

 பிளானா? “… மூவருக்கும் அவள் என்ன சொல்லப் போகிறாள் எனக் கேட்க ஆர்வம் வந்து விட்டிருந்தது .

 லாஸ்ட் மன்த் கிறிஸ் அண்ணா எங்கேஜ்மெண்ட் இருந்துச்சில்ல அப்போ பிரபா அண்ணிக்கிட்ட போய் எங்க அம்மா ரொம்பப் பொல்லாதவங்க , சண்டைப் போடுவாங்க , திட்டுவாங்கன்னு எல்லாம் கதை கதையா சொன்னேனா …”…

பெரியவர்கள் இருவருக்கும் அதைக் கேட்டு முகத்தில் ஈயாடவில்லை 

சாரா அத்தைக்கு வீட்டுக்குளேயே இப்படி ஒரு எதிரியா? என்ற பாவனையோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் .

 அப்புறம் என்னாச்சி “… கதையில் இலயித்துத் தங்களுக்கிடையேயான சண்டையை மறந்து ஜீவன் கேட்டான் .

அவங்க என்னைக் கிட்ட கூப்பிட்டு 

கூப்பிட்டு 

 கன்னத்தில முத்தம் கொடுத்து , நீ உங்க அண்ணன் சொன்ன மாதிரியே ரொம்ப நாட்டியா இருக்க , ஸ்வீட் கர்ள்னு சொன்னாங்க “… என்று ஏமாற்றத்தில் முகம் சுளித்தாள் .

சிரித்தால் கோபப் படுவாளோவென இவர்கள் இருவரும் சிரிப்பை அடக்கிக் கொண்டு இருக்க , ஜீவன் ஹா ஹா ஹாவெனச் சிரித்து அடி வாங்கிக் கொண்டான் . மறுபடி அங்கு ஒரு யுத்தம் தொடங்கி இருந்தது. இவற்றையெல்லாம் நினைவில் கொண்டு வந்த ரூபனுக்கு எப்போது கண்கள் சுழற்றியது? , எப்போது தூக்கம் வந்தது? என்றே புரியவில்லை .

மறு நாள் காலை :

மனவருத்தங்கள் , கனவு , பல்வேறு சிந்தனைகளினால் இரவு தூக்கம் தடைப் பட்டிருந்ததால் ரூபனுக்கு மறு நாள் எழும்பச் சற்றுத் தாமதமாகியது . கடந்த ஒரு மாத காலமாகவே நடந்து வந்த பிரச்சினைகளால் அவன் தன் வேலைகளில் கவனம் செலுத்த இயலாமல் திணறிக் கொண்டிருந்தான் . வெகுவாகப் பாடுபட்டு, தனக்கென நிறுவியிருந்த அவனுடைய தொழிலை கோட்டை விட்டு விடுமோவெனும் நிலைக்கு வந்திருந்தது . புது ஆர்டர்கள் குறித்த வேலைகள் ஏராளமாகக் குவிந்திருந்தன . இரவு பகலாக வேலைச் செய்தாலும் தற்போது ஒரு நிலைக்குத் தொழிலைக் கொண்டு வர வேண்டுமென்றால் அவனுக்கு இரண்டு மாதங்களாவது தேவை .

அதனால் தான் நிச்சயத்திற்குப் பிறகு திருமணத்திற்கு 3 மாதங்கள் இருக்கும் படி அமைத்துக் கொண்டான் . வெளி நாட்டிலிருக்கும் தந்தை வேலையிலிருந்து ஓய்வெடுத்து வர இன்னும் இரண்டு மாதம் இருக்கிறது , அது மட்டுமா? அவள் திருமணம் அவளுக்குப் பிடித்தமானது மாதிரி நடக்க வேண்டாமா?  சுற்றிச் சுற்றி தன்னவளையே எண்ணும் தன் மனதைக் கட்டுப் படுத்தியவனாகத் தான் செய்ய வேண்டியிருக்கும் பல்வேறு வேலைகளை மனதிற்குள் வரிசைப் படுத்தியவாறு அவசர அவசரமாக எழுந்து , குளித்துப் புறப்பட்டான் .

இந்திரா மகனுக்கு உணவை எடுத்து வைத்தவாறே ,

 வா ரூபன் சாப்பிட உட்கார்  என்று அவனை அமரச் சொல்லி பரிமாறினார் .

சாப்பிட்டுக் கொண்டு இருந்தவனை 

 குட்மோர்னிங்க் அத்தான்  என்னும் குரல் கலைத்தது 

கண்ணைக் கவரும் ஆளுமைக் கொண்டவன் , மாநிறத்தில் , உயரமாய் , உடற்பயிற்சிகளால் வலுவேறிய புஜங்களும் கட்டுக் கோப்பான உடல் அமைப்பில் வாட்ட சாட்டமாய் , நெற்றியில் புரளும் கேசமும் , கூர்மையான விழிகளோடு எதிரில் அமர்ந்திருப்பவன் , கூப்பிட்டக் குரலுக்கு முகத்தைச் சற்று நிமிர்த்தி முணு முணுப்பாக  குட் மார்னிங்க்  சொல்லி அவளைப் பார்க்காமலிருக்க உடனே தலையைக் குனிந்து அவசர அவசரமாகச் சாப்பிட்டுக் கிளம்பினான் .

அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அவன் தன்னிடம் சகஜமாகப் பேசாமலிருப்பதன் காரணம் தெரிந்தே இருந்தது . நிகழ்ந்த அனைத்திலும் தங்கள் இருவரின் தவறுகளும் இருக்க, அதைப் பேசுவதற்கான நேரமோ , இடமோ இதுவரை அமையவில்லை எனவும் புரிந்து இருந்தது . எப்போதுமே பிரச்சனைகளுக்குள் உழலாமல் அதை விட்டு சட்டென்று வெளிவந்து விடும் குணமுடையவள் அவள். இன்றோ தன்னுடைய தவறான முடிவொன்றினால் எல்லாம் தலை கீழாக மாறி விட்ட தற்போதைய நிலை குறித்து மனம் வருந்தினாலும் கூட, தகுந்த நேரம் வரும் போது இருவருமாய் அமர்ந்து அவற்றைப் பேச வேண்டியது தான் என எண்ணினாள். அதை விடுத்துத் தற்போது மென்மேலும் பேச்சுக்களை வளர்ப்பதில் பிரச்சனைகள் தான் கூடும் என எண்ணியவளாகத் தனக்குக் காலை உணவை எடுத்து வைத்து சாப்பிடத் தொடங்கினாள் .

டேபிளினின்று எழுந்து நகர்ந்து வெளியே செல்ல புறப்பட்டிருந்த ரூபன் சற்று முன்னே சென்ற பின்னர் ஏதோ ஞாபகம் வந்தவனாக இரெண்டெட்டுப் பின் வந்து ஹாலில் இருக்கும் முகம் பார்க்கும் கண்ணாடியின் முன் வந்து நின்றான் . ஏற்கெனவே சரி செய்த சிகையைக் கோதும் பாவனையில் கண்ணாடியில் தெரியும் அவள் பிம்பத்தைப் பார்த்துக் கொண்டு தன்னிச்சையாகச் சீப்பை எடுத்து வாரிக் கொண்டு இருந்தான் .

அவளுக்கென அவன் என்றோ வாங்கி வைத்திருந்த ஆஃப் வைட் சுடியில் அவளைப் பார்ப்பது மனதிற்கு இதமாகவே இருந்தது . அவன் கண்கள் அவளது முகத்தை ஆராய்ந்தன . அவளோ முன்பிற்கு தற்போது உடல் நலம் தேறியிருந்தாள் . அவளது கன்னத்தைப் பார்க்க விடாதபடி கற்றை முடிகள் அவள் முகத்தை மறைத்திருந்தன . கழுத்தைச் சுற்றி மறைத்து அணிந்திருந்த அந்தத் துப்பட்டா பிறர் அறியா வண்ணம் அவன் அணிவித்திருந்த செயினை மறைத்திருந்தது .

அவன் மனதைக் கவரும் அந்த அழகுப் புன்னகையில் அவள் அவனுக்குத் தேவதைப் போலவே தோன்றினாள் . தலைக்குக் குளித்திருப்பாளோ ?.. இல்லையென்றால் இப்படி முடியை விரித்துப் போடுவது அவள் வழக்கம் கிடையாதே ?!.. என்ன திடீரெனெ அந்த முகத்தில் அத்தனை குறும்பு ? யாருடன் பேசிக் கொண்டு இருக்கிறாள் அவள் ?.. பார்வையை நகர்த்தியவனுக்கு அங்கே இவனை ஓரக்கண்ணால் பார்த்தபடி அவளுடன் பேசிக் கொண்டு அமர்ந்து இருக்கும் அவன் தம்பி ஜீவன் அகப்பட்டான் . அடப் பாவி கண்டு பிடிச்சிட்டான் போலயே?  சட்டென்று நகன்று ஒன்றுமே நிகழாதது போல விரைப்பாக அந்த இடத்தை விட்டு அகன்றுச் சென்று விட்டான் .

காலை வேலையை முடித்து ஓய்வாக அமர்ந்திருந்தார் இந்திரா , தீபன் அலுவலுக்குப் புறப்பட்டிருக்க , தீபன் மனைவி ப்ரீதா தன் மகன் ராபினுக்கு உணவுக் கொடுக்க மல்லுக் கட்டிக் கொண்டிருந்தாள் .

 அத்தே எதுவும் வேலையிருக்கா ?” என்றவளாய் அருகில் அமர்ந்தவளிடம் ,

 எல்லா வேலையும் ஆச்சு அனிம்மா , நீ மாத்திரை போட்டுட்டியா ?” என விசாரித்தாள் .

 போங்கத்தே நான் மாத்திரைச் சாப்பிடலை , உடனே ஒரே தூக்கமா வருது , இந்த ராஜேஷ் அண்ணா கிட்ட போறதே வேஸ்ட் , நாம வேற நல்ல டாக்டர் கிட்ட போலாம் அத்த  என்றவளை

 வாலு , அவனுக்கென்ன ஆசையா உனக்கு மாத்திரைத் தரணும்னு , நீயா உன் உடம்பைக் கெடுத்துக் கிட்டா அவன் என்ன செய்வான் ?” என்றவரின் வார்த்தை அவளுக்கு எதனையோ நியாபகப் படுத்த அவளின் முகம் வாடிப் போனது .

 ச்சே ச்சே என்னடா இது  என்று அதட்டியவர் அவளை அணைத்துக் கொண்டார் .

 சரி சரி போ மாத்திரைப் போட்டுக்கோ , அம்மாவும் நானும் இன்னிக்கு உங்க நிச்சயத்துக்குத் துணி எடுக்கப் போறோம் . உன்னை அலைய வைக்கக் கூடாதுன்னு ராஜேஷோட ஆர்டர் , ஜீவனை என்கூடவே கூட்டிட்டுப் போறேன் , அவன் ஒவ்வொரு சாரியும் உனக்குப் போட்டோ எடுத்து அனுப்பச் சொல்றேன் . உனக்குப் பிடிச்சது எதுன்னு சொல்லு என்ன ?”

அம்மா என்ற வார்த்தையிலேயே நின்றுப் போன அவள் எண்ணம் அவளைப் பேசத் தூண்டியது .

 அம்மா எப்ப வருவாங்க அத்தே , அப்பா அண்ணா எல்லோரும் என் மேல கோபமா இருக்காங்களா ? பிரபாண்ணிய அண்ணா திட்டிட்டானா ? ச்சே என்னால எல்லோருக்கும் எவ்வளவு பிரச்சனை?  கண்ணில் நீர் வரட்டுமாவெனத் தேங்கி நின்றது .

 என்னடாம்மா நீ இப்படில்லாம் பேசிட்டு …” சற்று அதட்டலான குரலில் பேச்சை மாற்ற வைத்தார் .

மறுபடியும் சேலை விபரம் சொல்ல  நீங்க எது எடுத்தாலும் எனக்குப் பிடிக்கும் அத்தே  என்று பதில் கூறினாள் .

 அம்மாவ ஹனிப் பாப்பாவ இங்க கொண்டு வந்து விடச் சொல்றேன் . நாங்க வர வரைக்கும் ரெண்டு பேரும் விளையாடிட்டு இருக்கீங்களா ?”

அண்ணன் மகள் வரப் போகிறாள் என்றதும் அவள் முகத்தில் வந்த ஒளிர்வு அவருக்குத் திருப்தியைக் கொடுத்தது .

ஷாப்பிங்க் முடித்து அனைவரும் மாலையில் வீடு வந்து சேர்ந்தனர் அனைவரும் இரவு ஜாக்குலின் டெல்லியிலிருந்து பேசினாள் .

 அம்மா நான் நாளைக்குப் புறப்படறேன் . உடனே புறப்பட வசதியா அமையல இங்கே உங்க பேரனுக்கு இப்போதான் செமெஸ்டர் நடந்திட்டு இருக்கு . அப்படி என்னாச்சிம்மா ? எதுக்கு இப்போ தம்பிக்கு அவசரமா எங்கேஜ்மெண்ட் வச்சிருக்கீங்க ? அவன் அடுத்த வருஷம் தான் தான் கல்யாணம் செஞ்சுப்பேன்னு சொல்லிட்டு இருந்தானே ?”

 அதெல்லாம் விபரமா சொல்லிட்டு இருக்க இப்போ நேரமில்ல , நீ உடனே புறப்பட்டு வா  என்றவராய் போனை வைத்தார் .

பக்கத்து வீட்டுப் பரிமளம் வீட்டுக்குள் வந்து கொண்டிருப்பதைப் பார்த்து எழுந்து வரவேற்றார் .

வாங்கக்கா 

ம்ம் 

சற்றுச் சாதாரணமாகப் பேசி கதையளந்த பின் தான் வந்த வேலையை ஆரம்பித்தார் அவர் .

என்ன இந்திரா பையனுக்கு நிச்சயம் வச்சிருக்கியாமே 

ஆமா அக்கா 

எங்களுக்கு அழைப்பு உண்டுமா இல்லையா ?..

உங்களைக் கூப்பிடாமலா அக்கா , பக்கத்தில இருக்கிறவங்களை யெல்லாம் நாளைக்குக் கூப்பிடறதா தான் யோசிச்சு வச்சிருந்தோம் .

பார்த்தியா , நீ சொல்லாமலே எனக்கு உன் வீட்டு விபரம் எல்லாம் எனக்கு தெரிஞ்சிருக்கு என்னும் பெருமிதம் அவர் முகத்தில் 

பொண்ணு யாரு? 

வேற யாரு அவங்க தங்கச்சி மகதான் 

யாரு அந்த அனிப் பிள்ளயா 

ஆமா அக்கா 

நான் அந்தப்பிள்ளய உன்வீட்டுல பார்த்தேனே ? நிச்சயம் ஆகிறதுக்கு முன்னால யாராவது மாமியார் வீட்டுல வந்து இருப்பாங்களா என்ன ?

அந்தப் பெண்ணின் முகப் பாவனையில் கேட்க வந்ததைக் கேட்டு விட்ட திருப்தி நிலவியது .

நல்ல வேளை அனிக்கு இவர்கள் பேச்சுக் கேட்டு இருக்காது இந்நேரம் அவள் தூங்கியிருப்பாள் என்று எண்ணிக் கொண்டார் இந்திரா .

அதுக்கென்னக்கா? இது அவ மாமா வீடு அவ வந்து போறதில என்ன இருக்கு? , சின்னப் பிள்ளையிலயே இருந்து இங்கேதான நிறைய நேரம் இருப்பா  இதைப் போயி பெருசாப் பேசிக்கிட்டு 

அதைக் கேட்டவருக்குத் தனக்குத் தேவையான பதில் கிடைக்கவில்லை என்ற எண்ணம் முகபாவனையில் வெளிப்பட்டது.

 இல்ல , இப்போ அவங்க உங்களை விட வசதி அதிகம் , அதான் உங்க வீட்ல பொண்ணைக் கொடுக்க மாட்டாங்கன்னு தான் பேசிக்குவோம் . அதிலயும் ரூபனுக்கு அந்தப் பிள்ளய விடக் கொஞ்ச வயசு கூடுதல் ஆச்சே. அதனால நாங்க இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கலை “.

 இழவு வீட்டுல பேசுற மாதிரி கல்யாண வீட்டுல வந்து பேசுது இந்தப் பொம்பள  என்றெண்ணி உள்ளூரக் கொதிப்புடன் இருந்தாலும் அந்தத் தாயின் முகத்தில் சலனமேயில்லை .

ஊர்வம்பு பேசும் குழுவிற்குப் பிரதிநிதியாக வந்திருந்த அந்தப் பெண்மணி தான் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கும் இந்திராவின் முகத்தில் ஏதாவது உணர்வுகள் தெரிகிறதா? எனத் தேடினார் .

கோபம் , வெறுப்பு , சலிப்பு , எரிச்சல் என்னும் எந்த உணர்வையும் அங்கே காணமுடியவில்லை என்றதும் அவருக்கு சப்பென்றானது . இதை இப்படியே விட முடியாது , எதையாவது பேசி விபரத்தை தெரிந்துக் கொள்ளாவிட்டால் மண்டை வெடித்து விடும் நிலையில் அவர் வந்திருந்ததால் 

 அவளைக் கட்டிக்கப் போறது ஜீவன்னா கூடப் பரவாயில்ல, ஆனா அந்த ஹாஸ்டல் பிரச்சினைக்கு அப்புறம் ரூபன்னாலே அந்தத் தாமஸ் அண்ணணுக்கு பிடிக்காதே  கொஞ்ச நாளா அதனால உங்க கூட அவ்வளவா நல்லா பேச்சு வார்த்தைக் கூட இல்லாம இருந்ததே?  அப்புறம் எப்படி இந்தக் கல்யாணத்துக்கு அவர் சம்மதிச்சார்னு தான் ….”

பேச்சுக்காகவென்றாலும் ஜீவனை அனியோடு சேர்த்துப் பேசியது , ரூபனை மட்டம் தட்டியது எல்லாம் அளவு கடந்த கோபத்தைத் தூண்டி விட்டிருந்தாலும் மறுபடியும் மௌனம் காத்தார் அவர் .

 இருங்க அக்கா உங்களுக்குக் காஃபி கொண்டு வரேன் “, என்று சொல்லி நகர்ந்தார் .

 உனக்கெல்லாம் நான் என்ன பதில் சொல்றது ? நீ இதுவரை பேசியது போதும் கிளம்பு  என்பது போல இருந்தது அவரது நடவடிக்கை .

இந்திரா கொடுத்த ட்ரீட்மெண்ட்டில்  ம்க்கும் ரொம்ப அழுத்தம் தான்  என மனதில் நொடித்துக் கொண்டவராகத் திரும்பினார் அந்த ஊர்வம்பு பெண்மணி 

இந்திராவுக்கு அவர் கிளப்பிச் சென்ற எரிச்சல் தீரவே வழியில்லாமல் ஆயிற்று . அதென்ன எல்லோரும் இந்த ஒன்றையே சொல்லி அவனை மட்டம் தட்டும் படி ஆயிற்று . மனிதன் தவறே செய்யாமலிருக்க முடியுமா ? ஒரு முறை ஒருவன் செய்த தவறை சுட்டிக் காட்டி காட்டி அவனை நிரந்தரமாக மனதளவில் முடமாக்க வேண்டிய தேவையென்ன ?

அதிலும் ரூபன் தன்னை அறியாமல் செய்த தவறுக்காக எத்தனை அவமானப் பட்டிருப்பான் . ஒரு காலத்தில் எதிலும் பிடிப்பில்லாமல் இருந்தவன் , இப்போது ஒரு நல்ல நிலை வந்த போதிலும் அவப்பெயர் அவனை விட்டு நீங்கவில்லையே என வருந்தினார் . என்னதான் பல நன்மைகள் ஒருவனிடத்தில் இருந்தாலும் மற்றவர்கள் தவறுகளை மட்டும் தோண்டி எடுத்துக் குதர்க்கமாகப் பேசுவதை விடுவதில்லை என்பது தானே நிதர்சனம் .

இப்போது சுயபுத்தியோடு திடமாகப் பிரச்சினைகளை தான் எதிர் கொண்டது போல அப்போது ஏன் எதிர் கொள்ளவில்லை ? எது என்னைத் தடுத்தது ? பிறரிடம் அறிவுரைக் கேட்பதோடு நிறுத்திக் கொண்டு, முடிவுகளை நாமே எடுப்பது தானே நல்லது. எனக்கு ஏன் அது முன்பு தெரியாமல் போயிற்று ? எனத் தன்னையே நொந்து கொண்டார் .

ரூபன் ஹாஸ்டல் செல்லும் முன் வேண்டாமென்று அழுதது அவர் கண்முன் வந்து நின்றது . மற்ற பிள்ளைகளைப் போல என்னுடன் வைத்துக் கொள்ளாமல் நான் ஏன் அவனை அங்குப் படிக்க அனுப்பினேன்? என எண்ணியவரின் சிந்தனை பின்னோக்கி பயணித்தது .

அப்போது இந்திராவின் கணவர் வெளிநாட்டில் பணிபுரியச் சென்று ஓரிரு வருடங்கள் ஆகியிருந்தன . வருடத்திற்கு ஒரு முறை ஓரு சில வாரங்கள் லீவிற்கு அவர் வந்து செல்வது வழக்கம் . எல்லாமே நன்றாகச் சென்று கொண்டிருக்கையில் திடீரென ஜீவனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது . பிறந்ததிலிருந்தே நோஞ்சானாக இருந்த அவனுக்கு மூளையில் சின்னதான ஒரு பாதிப்பு எனக் கண்டறியப் பட்டது , அது சரி படுத்தக் கூடியதும் , ஓரிரு வருடங்கள் தொடர்ந்து மருந்து உட்கொண்டு வர முற்றிலும் குணமாகக் கூடியதும் என அறிந்துக் கொள்ளவே அவர்களுக்கு ஒரு ஆண்டு ஆயிற்று .

ஒரு தாய்க்கு தன்னுடைய எல்லாக் குழந்தைகளுமே உயிருக்கு நிகரானவை என்றாலும் கூட , அதில் ஒரு குழந்தைக்கு மட்டும் ஏதேனும் துன்பம் வருகையில் தன்னுடைய மற்ற குழந்தைகளைக் கூட மறந்து அந்தக் குழந்தையின் பின்னே தான் அவள் மனம் நிலைக்கும் . அங்கே நிகழ்ந்ததும் அதுவேதான் .

ஜாக்குலினும் , தீபனும் பெரிய பிள்ளைகளாகத் தங்கள் வேலைகளைச் செய்து கொள்பவர்களாக இருந்ததால் அவருக்கு அவர்களுக்காக நேரம் செலவழிக்கத் தேவை ஏற்படவில்லை . ரூபனைக் குறித்தும் அவருக்கு எப்போதும் எந்தச் சிரமமும் தோன்றியதில்லை . சிறு வயதிலிருந்தே அவனுக்கு எந்த உடல் நலக்குறைவும் ஏற்ப்பட்டதில்லை என்பதோடு , படிப்பிலும் சிறந்தவனாக இருந்ததால் அவனைக் குறித்துப் பொதுவாகவே அவருக்குக் கவலை எதுவும் இல்லை என்றே சொல்ல வேண்டும் .

ஆனால் , ரூபனைக் குறித்துக் கவலைப் பட வேண்டிய நாளும் வந்தது . அவனின் ஸ்கூலில் இருந்து அவன் பெற்றோரை அழைத்து வரச் சொல்லி அழைப்பு வந்தது . அங்குச் சென்று அவனுடைய பிரின்ஸிபலைச் சந்தித்த போது அவனைக் குறித்து அவர் மிக நல்ல விதமாகவே கூறினார் . சமீப காலமாக அவனுடைய மார்க்குகள் எதிர்பார்ப்பிற்குக் குறைவாகவே இருப்பதாகச் சுட்டிக் காட்டினார் . அவன் ஸ்கூலின் மிகவும் நன்றாகப் படிக்கும் மாணவன் என்பதால் ஏதாவது பிரச்சினை இருக்குமானால் அதை அவன் பெற்றோருக்குச் சொல்ல வேண்டிய கடமை இருப்பதால் கூப்பிட்டு அனுப்பியதாகக் கூறினார் .

அவரின் பேச்சைக் கேட்டு வந்தவருக்குத் தான் சின்னவன் மேல் மட்டுமே கவனம் செலுத்துவதும் , ரூபனைக் கவனிக்க நேரம் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதுமே காரணம் என்று தெள்ளத் தெளிவாகப் புரிந்தது . ஆனால் , அவரும்தான் என்ன செய்வார் , சமீபத்தில் தான் ஜீவனின் ட்ரீட்மெண்ட் இன்னும் சில வருடங்கள் கூடுதலாக எடுத்துக் கொள்ளும் என்று தெரிய வந்திருந்தது . ராஜ் தன்னுடைய வேலையை இந்தியாவிற்கு மாறுதல் வாங்கி வர முடியாத சூழ்நிலையில் இருந்தார் .

தன்னுடைய கவலையைச் சாராவுடன் பகிர்ந்து கொண்டிருந்த போது தான் தாமஸ் தன் அலுவலிலிருந்து திரும்பி வந்திருந்தார் . அவர் சில வருடங்களுக்கு முன்பாகவே தன்னுடைய அரசாங்க வேலையை விட்டு விட்டு அரசாங்க கட்டிடங்களைக் கட்டிக் கொடுக்கும் காண்டிராக்ட்களை எடுத்து நடத்திக் கொண்டிருந்தார் .

ராஜின் குடும்பம் கிராமத்துப் பராம்பரியம் மிக்கது என்றால் , தாமஸின் உறவினர்களோ பெரிய தொழிலதிபர்களாக இருந்தனர் . அவர்களின் துணை மற்றும் தன்னுடைய அரசாங்க வேலை மூலம் கிடைத்த அரசியல்வாதிகள் , பெரிய மனிதர்களின் ஆதரவை தகுந்த நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளும் சூட்சுமம் தெரிந்தவராக இருந்தார் . எனவே , ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும் தற்போது தாமஸ் வெற்றியின் படிக்கட்டுக்களில் ஏறிக் கொண்டு இருந்தார் .

அவருடைய வெற்றிகள் அவருக்கு மிகவும் தன்னம்பிக்கையை ஏற்படுத்தி இருந்தன . பிறருக்கு உதவி செய்வதில் அவர் எப்போதும் முன் நிற்கிறவர்தான் ஆனாலும் , அவரிடம் ஆலோசனைக் கேட்பவர்கள் அவர் சொல்வதை அப்படியே கேட்டுப் பின்பற்ற வேண்டும் என்ற ஆதிக்க மனப்பான்மை அவரில் உண்டு . யாரைக் குறித்தும் ஒரு முறை ஏதாவது அறிய வந்தால் அந்த ஒன்றிலேயே நிலைத்திருக்கும் குணம் கொண்டவர் . எவனொருவன் நல்லவனாக அறியப் படுகின்றானோ அவனைக் கண்ணை மூடிக் கொண்டு நம்புவார் . அதே நேரம் ஒரு முறை யார் மீதாவது நம்பிக்கை இழந்து விட்டால் வாழ் நாள் முழுக்க அந்த மனிதனை நம்ப மாட்டார் இப்படி அவரைக் குறித்துச் சொல்லிக் கொண்டே போகலாம் .

அவர் வந்து என்ன பிரச்சினை ? என்று கேட்டு அறியவும் யோசிக்கலானார் . சாராவோ ஏன் அண்ணி அவன் இங்கேயே நம்ம வீட்டுலயே இருக்கட்டும் , நான் அவனைப் பார்த்துக்கிறேன் , படிப்பில கவனம் செலுத்த வைக்கிறேன் என்று தீர்வை முன் வைத்தாள் .

 அவன் என்னைய விட்டுட்டு இருக்க மாட்டானே  என்று இந்திரா கூறினார். அது என்னவோ உண்மைதான் எனச் சாராவும் சொல்லிக் கொண்டாள் . அம்மா தன்னைக் கவனிக்காமல் தம்பியைக் கவனிக்கிறவளாக இருந்தாலும் தாயின் அருகாமையில் இரவு தூங்குவதிலேயே அவனுக்கு நிறைவாகி விடும் . அவன் தாயை விட்டு அது வரை எங்கும் சென்றதும் இல்லை .

அது வரை ரூபன் படிப்பைக் குறித்து யோசித்துக் கொண்டு இருந்த தாமஸின் ஆலோசனையோ வித்தியாசமாக இருந்தது .

 நீங்க இப்படியெல்லாம் யோசிச்சிட்டு இருக்காதீங்க அக்கா , இப்போ அவன் படிப்பு தான் முக்கியம் . உங்க கூடவே வச்சிட்டு இருந்தீங்கன்னா அவன் ஃப்யூச்சர் என்னவாகும் ? எனக்குத் தெரிஞ்ச ஒரு ரெசிடென்ஸியல் ஸ்கூல் இருக்கு , எனக்கு ரொம்ப நல்லாத் தெரிஞ்ச ஒருத்தர் இப்போ தான் அதைபத்திச் சொல்லிக் கிட்டு இருந்தாரு . படிப்பு விளையாட்டுன்னு கத்துக்க அது ரொம்ப நல்ல இடமாம் , அங்கே மட்டும் அவனைப் போட்டுட்டீங்கன்னு வைங்க அவன் படிப்பை பத்தி நீங்க கவலையே பட வேண்டாம் . மச்சாண்ட கேட்டுட்டு சொல்லுங்க ., அட்மிஷனுக்காகவெல்லாம் நீங்க கவலைப் பட வேண்டாம் , நானே ஏற்பாடு செய்திடுவேன்.  என்றார் .

தன்னைவிட்டு ஐந்து நிமிட தூரத்தில் இருக்கிற தன் அத்தை வீட்டுக்கே போய்த் தங்காத பிள்ளையைக் கண்காணாத இடத்தில் கொண்டு போய் விடுவதா? என அவருக்கு மனம் பதறியது . இங்கே ஆலோசனைச் சொன்னதோடு நில்லாமல் இப்போ போன் போட்டால் கிடைப்பாங்கள்ல? என்று கேட்டவராகத் தானே ராஜிற்குப் போன் போட்டு விஷயத்தைச் சொன்னார் .

அவர் ரூபனின் படிப்பை முன் நிறுத்திய விதத்தில் இவர்களுக்குப் பதில் சொல்ல முடியாததாயிற்று , இறுதியில் அனைவரும் இணைந்து அந்த முடிவை எடுத்தனர் . ரூபனின் அழுகையை யாரும் பொருட்படுத்தவில்லை .

 அவன் ஆம்புளப் புள்ள , அதெல்லாம் இருந்துகிடுவான் “… என எல்லோரும் சொன்னாலும் அவன் ஒரு குழந்தைதான் என யாருக்கும் அப்போது நினைவில்லை . தன் தாயின் சேலையை வாசம் பிடித்து உறங்க ஆசைப்பட்ட அவனுக்குக் கட்டாயமான பிரிதல் கொடுக்கப் பட்டது .

முன்பின் தெரியாத இடத்தில் , சூழ்நிலையில் அவனால் ஒன்றவே இயலவில்லை . முதல் இரண்டு வருடங்கள் அவன் எப்படித்தான் கடந்தானோ தெரியாது . இரவில் தனிமையில் தாயின் சேலையைத் தேடுபவன் தனக்குக் கிடைத்த தனிமைக்குப் பழகிக் கொண்டான் . தனக்கு இயல்பாகவே ஆர்வமூட்டும் படிப்பில் மூழ்கிப் போனான் , அதிகமாகப் பிறரோடு அளவளாவும் பழக்கமில்லாததால் தாமரையிலைத் தண்ணீர் போல நண்பர்களோடு பழகிக் கொண்டு தன்னுடைய கவனத்தை எல்லாம் படிப்போடு விளையாட்டிலும் பதித்தான் .

அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது , ரூபனின் குடும்பத்தினர் அப்பர் மிடில் கிளாஸ் என்றால் , அவன் சேர்ந்த ஹாஸ்டல் , அதிலிருந்த வசதிகள் , படிப்புகள் எல்லாம் மிகவும் உயர் தரமானவை , பெரும் பாலான பணக்கார மக்களின் பிள்ளைகளின் அங்குப் படித்துக் கொண்டிருந்தனர் . தன்னைப் பலரும் தங்கள் குழுவில் சேர்த்துக் கொள்ளாததும் , தன்னுடன் நட்பு பாராட்டதுமான அந்தச் சூழ்நிலை அவனுக்குத் துயரமாகவே இருந்தது . இரண்டும் கெட்டான் நிலை என்பது இதுதானோ ?

தன்னுடைய குடும்பத்தினர் தனக்காக மிகவும் அதிகமாகச் செலவழிக்கிறார்கள் என்று அவனுக்குப் புரிந்து இருந்ததாலேயே அவர்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டுமென்ற எண்ணம் அவனை நன்றாகப் படிக்க உந்திக் கொண்டிருந்தது .

ஆனாலும் கூட ஏனோ தனிமை அவனைத் துரத்திக் கொண்டே இருந்தது . லீவுகளில் வீட்டுக்கு வரும் போதெல்லாம் அங்கு அவனால் ஒன்ற முடியாமல் போயிற்று . அப்பாவின் லீவுகளும் , இவனின் லீவுகளும் மாறாகவே அமைந்து இருந்தன . அவர் தன்னுடைய லீவுகளில் வரும் போதெல்லாம் ஒரு நாள் மட்டும் வந்து அவனைப் பார்த்துச் செல்வார் .

அம்மாவிற்கோ எப்போதும் ஏதாவது வேலை , ஆண்பிள்ளை வளர்ந்த பின்னர்ச் செல்லம் கொஞ்சக் கூடாது என யார் சொன்னார்களோ ? அதிகப் பட்சம் அவன் தலையை வருடி உனக்குச் சாப்பிட என்ன வேண்டும் என்று கேட்பாள் . “ அம்மா , உன் மடியில் நான் கொஞ்சம் படுத்துக் கொள்ளவா ?” எனக் கேட்க இவனுக்கு வாய் வராது . லீவுக்கு வீட்டிற்கு வந்த பிள்ளை வயிற்றை வித விதமாகக் கவனிப்பதிலேயே அவள் நேரம் போய் விடும் .

அண்ணன் தன் படிப்பிலேயே எப்போதும் மூழ்கி இருப்பதும் , தம்பி தன் வயது தோழமைகளோடு விளையாடுவதுமாக இருக்க அவனுக்கு உற்றத் தோழி அவன் ஜாக்கி அக்கா தான் .

தான் அங்குப் பார்த்த விஷயங்களை , தன்னை வசதிக்குறைவானவன் என்று தாழ்வாகப் பேசும் உடன் படிக்கும் மாணவர்களைப் பற்றிச் சொல்லி வருந்தும் போதெல்லாம் அவள் தான் அவனுக்கு ஆறுதல் சொல்வாள் , உற்சாகமூட்டுவாள் . ஒவ்வொரு வருடமும் சிறந்த மாணவன் பரிசை வாங்கி வந்து காட்டும் போது எல்லோரையும் விட அதிகமாக மனம் மகிழ்வாள் .

அவனுடைய வெற்றிக் கோப்பைகளை அடுக்குவதற்காகவே புதிதாக ஷெல்ஃப் அமைத்து அலங்கரித்து வைத்தாள் . இப்போது ஜீவனுடைய சிகிட்சை முடிந்து விட்டிருந்தது . இப்போதாவது தன்னை மறுபடியும் தங்களோடு அழைத்துக்கொள்வார்கள் என்று ரூபன் நினைத்திருக்க , அந்தக்கனவையும் கலைத்து வைத்தார் தாமஸ் .

ரூபன் படிப்பிற்காக வாங்கிய வெற்றிக் கோப்பைகளைக் காரணம் காட்டி , இப்போது அவனை மறுபடி இங்கு அழைக்க வேண்டாம் . உலகத்தரப் படிப்பு அவனுக்குக் கிடைப்பதை ஏன் தடுக்க வேண்டும் ? அவன் பட்டப் படிப்பு வரை படிக்கட்டுமே என்று அவனுக்காகப் பேசுவதாக நினைத்து அவனுக்கு விருப்பமில்லாததைச் செய்து வைத்தார் . தன் பிள்ளையின் நலனுக்காகத்தானே என நினைத்து ரூபன் பெற்றோரும் அதை ஏற்றுக் கொண்டனர் .

இப்போது அவனுக்கு ஓரளவு வெறுப்புத் தோன்ற ஆரம்பித்து இருந்தது . அவன் மனம் விட்டுப்பேசுகிறவன் கிடையாது , தனக்குள்ளே ஒவ்வொன்றையும் எண்ணி மறுகுகின்ற குணம் அவனுடையது .

அதனால் ‘ஒருவேளை அம்மாவிற்கு நம்மைப் பிடிக்காததால் தானே தாமஸ் மாமா சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள் போலும்’ என்று அவனுக்கு தோன்ற ஆரம்பித்து இருந்தது . மனதளவில் அவர்களிடமிருந்து விலக ஆரம்பித்து இருந்தான் . அதனோடு கூடத் தன்னுடைய ஒரே தோழியான ஜாக்கி அக்காவின் திருமணத்திற்கு தான் ஒரு விருந்தாளியாகப் போய் நிற்க வேண்டி வந்த போது அவன் மனதிற்குள் மிகவே அடி வாங்கினான் .

அவனது பன்னிரண்டாம் வகுப்பு பரீட்சையை முன் வைத்து அக்காவின் நிச்சயத்திற்குக் கூட அவனை அழைக்கவில்லையென அறிந்து அவனுக்குப் படிப்பின் மேலேயே வெறுப்பு வந்து விட்டிருந்தது .

இங்கே அவனுடைய வீட்டினர் அவன் மன நிலையை இன்னும் அறிந்துக் கொள்ளவில்லை . ரூபனோ தனக்குள் நத்தையாகச் சுருண்டு போனான் . லீவுகளில் வீட்டுக்குப் போக அவனுக்கு மனம் வரவில்லை . அங்குப் போனால் அவனுடன் பேச யார் இருக்கிறார்களாம் ?

பிடிவாதமாக அவனை அழைத்து வர அவர்களால் முடியவில்லை . ‘ நம்மை யாருக்குமே பிடிக்காது , அம்மாவுக்கே நம்மைப் பிடிக்கவில்லை எனும் போது வேறு யாருக்கு நம்மைப் பிடிக்கும்?’ என்ற கழிவிரக்கத்தில் மூழ்கினான் .

வீட்டினர் அவன் படிப்பில் கொண்டுள்ள ஆர்வத்தினால் தான் வீட்டிற்க்கு வருவது இல்லையோவென நினைத்துக் கொண்டிருந்தார்கள் . அவர்கள் நினைப்பதிலும் தவறென்ன இருக்கிறது ? தொடர்ந்து படிப்பிற்காகச் சிறந்த மாணவன் பரிசை வாங்குகின்றவன் அவன் தானே .

இத்தனை பிரச்சனைக்கு நடுவிலும் தன்னை ஒருவன் காழ்ப்புணர்ச்சியில் எப்போது கீழே தட்டலாம் எனக் காத்துக் கொண்டிருப்பதைக் குறித்து ரூபன் அறியவில்லை . தனக்கு நண்பனாக இருக்கும் ஒருவன் அவனுடைய கையாள் என்பதையும் உணரவில்லை .

 தராதரம் இல்லாமல் யாருக்கும் இங்குப் படிக்க அட்மிஷன் கொடுத்து விடுவதால் அல்லவா இவன் பரிசை வாங்க நாம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டி இருக்கிறது  என்பதே அவனின் குரோதத்திற்கான காரணம் .

மனதளவில் தளர்ந்துப்போன ரூபனின் நிலையைப் பயன் படுத்திக் கொள்ள அவர்கள் துணிந்தனர் . கொஞ்ச கொஞ்சமாக அவனைப் போதைப் பழக்கத்தில் ஆழ்த்துவதே அவர்கள் திட்டம் , அப்போது பட்டப் படிப்பின் இரண்டாம் வருட படிப்பின் கடைசிப் பரீட்சைக்கான ஸ்டடி ஹாலிடேஸ் ஆரம்பித்து இருந்தது . அங்கே பலரும் ஒளிவு மறைவாகச் சில போதைப் பழக்கத்திற்கு ஆளாகியிருப்பது ரூபனுக்குத் தெரியும் . அக்காவின் வழி நடத்துதலில் அவனுக்கு அது வரை அவற்றில் பெரிதான ஆர்வமில்லை , ஆனால் நண்பனின் வற்புறுத்தலும் , அப்போதைய அவனுடைய வெறுப்பான மன நிலையும் போதையின் பாதையில் அவனை நடத்திச் செல்லத் துணிந்தது .

ஒரு சில போதைகள் மந்த நிலையை ஏற்படுத்தும் , ஒரு சிலவோ ஆர்ப்பாட்டம் செய்யத் தூண்டும் . அவனைப் பிறர் முன் கூனிக் குறுகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் அவனுக்கு மதுவை மிக அதிகமாக ஊற்றிக் கொடுத்தனர் . கூடவே அவனை மிகவும் தாழ்த்திப் பேசவும் தொடங்கினர் . அவனுக்குக் கோபமூட்டுவதும் , அவனை பிறர் முன் கேவலப் படுத்துவதுமே நோக்கமாக இருந்த அவர்களுக்கு அவனுள்ளே கனன்று கொண்டிருந்த பெரிய ஜீவாலையைத் தான் பற்றியெழச் செய்கின்றோம் என்பது அப்போது தெரியவில்லை .

அமைதியாக இருப்பவர்களைப் பெரும்பாலும் குறைவாக எண்ணுதல் இங்குப் பலருக்கும் பழக்கம் அது சாதாரணப் புல் பூண்டுகளைக் கொண்ட மலையாக எப்போதும் இருக்காது. எரிமலைக் குழம்பை தன்னுள் அடக்கிகொண்டிருக்கும் மலையாகக் கூட இருக்கலாம் என அவர்களுக்குப் புரிவதில்லையே?  அன்றும் அது போலவே ஆயிற்று .

அந்த எரிமலை அன்று வெடித்துச் சிதறியது , எதிரில் நின்று தன்னைக் கேவலமாக , குத்தலாக , கேலிப் பேசியவர்களை அடித்து நொறுக்கியது . இயல்பாகவே நல்ல உடற்க்கட்டும் , உடற்ப்பயிற்சிகளால் தன்னை உறுதிப் படுத்தியிருக்கும் தேகமும் கொண்டவனை அவர்களால் எதிர் கொள்ள முடியவில்லை .

அடித்துப் புரண்டு ஓடி வந்த இந்திரா , தீபன் மற்றும் தாமஸை வரவேற்றது , தான் முதன் முறையாக எடுத்துக் கொண்ட போதையால் பலபேரைக் காயப் படுத்திவிட்டுச் சுவரோரமாகத் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த ரூபனேதான்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here