30. அமிழ்தினும் இனியவள் அவள்

0
504
Amizhthinum Iniyaval Aval

அத்தியாயம் 30

ரூபன் அப்போது தான் தொழிற்சாலையின் அலுவல்கள் அத்தனையும் மேற்பார்வை, கணக்கு வழக்குகள் பார்த்து முடித்து விட்டு வீட்டிற்கு வந்திருந்தான். நேரம் காலம் இல்லாமல் வந்து போகும் தன் வேலை காரணமாக யாரையும் காத்திருக்கச் சொல்லாமல் தன்னிடம் ஒரு சாவி வைத்துக் கொண்டு வருவது போல அன்றும் நள்ளிரவில் வந்திருந்தான்.

பழக்கமான இடம் தானே என்று சமையலறையில் லைட்டை ஆன் செய்யாமல் குளிர்சாதனப் பெட்டியினின்று தண்ணீர் பாட்டிலை எடுத்து தாகம் தீர வாயில் சரித்து விட்டுத் திரும்புகையில் யாரோ வருகின்ற அரவம் கேட்டது. வேறு யார்? இவன் வந்ததை தெரிந்துக் கொண்டு தூக்கத்திலிருந்து எழும்பி வருவது அம்மாவாகத்தான் இருக்கும்.

எனக்காக விழித்திருக்க வேண்டாமென்று சொன்னால் கேட்டால் தானே? என்றெண்ணியவனாக முன் நடக்க, சட்டென்று அங்கே ஒளி பரவியது. எதிரில் யாரையோ மோதுகிற நிலையைச் சமாளித்து நின்றால் வந்தது யார்? என்னவளாகிய மோகினிப் பெண்ணா? மோகினியே தான். கண்ணை உருட்டிக் கொண்டு நிற்பதைப் பாரேன் தன் மனதிற்குள்ளாகப் பேசிக் கொண்டான்.

நீயெல்லாம் ரொமான்ஸ் லுக் விடுகிறாய் என்று சொல்லி விடாதே முட்டைக் கண்ணி  அவனுக்கான அவளின் பார்வையைப் பார்த்து ரூபன் உள்ளுக்குள் சிரிப்பாக வந்தாலும் அடக்கிக் கொண்டான். அவன் மனமோ இதில் நல்லதொன்று இருக்கின்றது இன்று அவளை ஒளிந்து போய்ப் பார்க்கும் சங்கடம் ஏற்படாமல் அவளே தரிசனம் தந்து விட்டாள் என்று குதூகலித்தது.

அவன் உள்ளத்தில் இருக்கும் ஆயிரம் வலியுணர்வுகள் எதிரில் அவள் நின்றாலும் அவளிடம் வெளிப்படையாகப் பேச முடியாமல் அழுந்தியது. இவளிடம் பேச வேண்டும், ஒவ்வொன்றாகப் பேச வேண்டும். எனக்கும் அவளுக்குமான தனிமையில், எங்களை யாரும் தடைச் சொல்ல இயலாத உரிமை நிஜமாகவே வந்த பின்னர் ஒரு நாள் பேச வேண்டும். இப்போது சென்று ஓய்வெடுப்போம் என்றெண்ணியவனாக நகர்ந்தான்.

அத்தான் இன்னிக்கு இவ்வளவு லேட் ஆகிடுச்சா?

 ம்ம்

சாப்பிட்டீங்களா?

…இல்ல நேரமாச்சுப் போய்த் தூங்கப் போறேன்.

 ஆ…ஹான் நோ நோ அத்தான் உட்காருங்க சாப்பிடாம எல்லாம் தூங்க கூடாது கொஞ்சமாச்சும் சாப்பிடுங்க  வலுக்கட்டாயமாக அவனைச் சமையலறையை அடுத்து இருந்த டைனிங்க் டேபிளில் அமர வைத்தாள்.

அமர்ந்ததும் உடனே எழுந்தவனை மறுபடி அமரச் சொல்லி அதட்டினாள்.

‘கை கழுவப் போறேன்’ எனத் தான் எழுந்த காரணத்தைச் சொல்லியவனாய் அவன் அவளைத் தாண்டிச் செல்லவும் தன் நாக்கைக் கடித்துக் கொண்டு தனக்கே “ஸாரி  சொல்லிக் கொண்டாள்.

அனிக்காவோடு ரூபனின் அறையில் துணைக்கு படுத்திருந்த இந்திரா யாரோ வீட்டில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என இவர்கள் பேச்சுச் சப்தம் கேட்டு எழுந்து வந்தார். அங்கு நிகழ்பவற்றைப் பார்த்த பின்னர்த் தான் வந்த வண்ணமே சத்தம் காட்டாமல் மறுபடி போய்ப் படுத்துக் கொண்டார்.

அனிக்கா ஹாட் பாக்ஸிலிருந்த இட்லிகளை எடுத்துத் தட்டில் வைத்தாள். கை கழுவி வந்தவன் அவள் அதிகமாக எடுத்து வைத்திருந்தவைகளை மிகுதியானவைகளை எடுத்து ஹாட் பாக்ஸிலேயே திரும்ப வைத்தான். உடனே சட்னியை எடுத்து வைத்தவள், சாம்பாரையும் சூடாக்கி எடுத்து சாப்பிடும் படி வைத்து விட்டு ஒரு பெரிய கிளாஸ் பால் சூடு செய்து டேபிளில் வைத்தாள்.

அவளது பரிமாறிய வேகம் பார்த்து மிரண்ட ரூபன், ஹேய் இது என்ன எனக்கு ராத்திரி கொஞ்சம் சாப்பிட்டாலே போதும். பால் எல்லாம் வேணாம் எனப் பதறினான்.

வேணும்னா ஒரு இட்லி குறைவா சாப்பிடுங்க, ராத்திரி பால் குடிக்கணும்னு அம்மா சொல்லிருக்காங்க என்று திடீர் நாட்டாமையாக மாறி தீர்ப்புச் சொன்னாள் அனிக்கா.

சரி சரி நீ போய்த் தூங்கு, நான் சாப்பிட்டுக்குவேன்  என அவளை விரட்டினான்.

பாத்திரம்லாம் எடுத்து …

அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். போ என ஒரு வழியாக அவளை அங்கிருந்து விரட்டிய பின்னரே அவனுக்கு ஆசுவாசமாயிற்று. வீட்டில் யாராவது இந்த இரவில் இவர்கள் இருவரும் சமையலறையில் சேர்ந்து நிற்பதை பார்த்தால் என்ன நினைப்பார்கள்? என்று அவனுக்கு மனதில் உறுத்தலாகத் தோன்றிக் கொண்டிருந்ததே அதற்குக் காரணம். ஏற்கெனவே அவளுக்கு தன்னால் ஏகப்பட்ட மன உளைச்சல்கள் இருக்க இன்னும் புதுப் பிரச்சினைகள் எதற்கு? எனும் முன்னெச்சரிக்கை தான் காரணம்.

இதற்கு முன்பாக நடந்த சம்பவங்கள் அனைத்தும் அவனுடைய கட்டுப் பாட்டை மீறி நடந்து விட்டிருந்தன. அவள் அவனைச் சந்திக்க தொழிற்சாலை நோக்கி வருவதாக அறிந்த நேரம் அவனுடைய திட்டமே வேறாக இருந்தது.

அனிக்காவிற்கு விக்ரமோடு திருமணம் நிச்சயமாகப் போவதாகத் தெரிந்த நாள் முதலாக விக்ரமிடமிருந்து அவளைக் காப்பாற்ற வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தில் அவள் எப்போது வீட்டை விட்டு வெளியே வந்தாலும் ரூபன் அவளைக் கடத்துவதாக முடிவு செய்திருந்தான். அது மிகத் தவறாகவே தெரிந்திருந்தாலும் அவளுடைய நலனுக்காக அதைச் செய்தே ஆக வேண்டும் என்கின்ற முடிவுக்கு வந்திருந்தான்.

அவள் தன்னை நேசிப்பதை தெரிந்து கொண்ட பிறகும் யாருக்கும் அவளை அவனால் விட்டுக் கொடுக்க இயலாதே. அதிலும் விக்ரமின் பழிவாங்கும் படலம் அறிந்த பின்னும் அவளைக் காவு கொடுக்க அவனால் எப்படி முடியும்?

சர்ச்சில் திருமணம் செய்ய வேண்டுமானால் ஆணும் பெண்ணும் சென்று பங்கு குருவானவரை சந்தித்துப் பேசுவது தான் முறை. தற்போதைய நிலையில் அது சாத்திய படாது எனவே முதலில் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து அவளைத் தன்னுடையவளாக்கிக் கொண்டு பாதுகாத்த பின்னர்ச் சர்ச்சிலும் திருமணம் செய்து கொள்ளலாம். அப்படிப் பட்ட வழிமுறைகள் இருக்கின்றனவே என்றெண்ணியவனாக ரெஜிஸ்டர் திருமணம் செய்வதற்காக ஏற்கெனவே முன்பதிவு செய்து வைத்திருந்தான்.

தன்னுடைய திட்டத்தின் படி செயல்படும் போது தேவைப்படும் என்றெண்ணி அனிக்காவிற்காக ஸ்பெஷலாகச் செய்த தாலி தான் அன்றைக்கு அவன் அவள் கழுத்தில் கட்டியது. அவர்கள் குடும்ப வழக்கப்படி பெண்கள் நன்கு பருமனான ஓரளவு பெரிய தாலி செயின்கள் அணிவதே வழக்கம். ஆனால், அவள் ஏதேச்சையாக அவள் அண்ணியிடம் பேசியதைக் கேட்ட போது அவளுக்கு எளிமையான ட்ரெண்டியான சின்னச் செயின் அணிவதில் விருப்பம் என்று அறிந்து இருந்ததால் வெகுவாகத் தேடி அந்தச் சின்ன அழகான செயின் மாடலையும், மறவாமல் அதற்கேற்ற வகையில் சின்னதான ஹார்ட் ஷேப்பின் நடுவே சிலுவைக் கொண்ட குடும்பத்தில் அம்மா, அக்கா, அண்ணி அணிகின்ற வகையிலான திருமாங்கல்யத்தையும் செய்யச் சொல்லி அவன் ஆர்டர் செய்து வந்திருந்தான்.

அம்மா தனக்காக அனிக்காவின் வீட்டில் அண்ணனோடு போய்ப் பேசுவதாக இருந்ததும் அந்த ரெஜிஸ்டர் மேரேஜ் மற்றும் கடத்தல் திட்டத்தைத் தள்ளி வைத்து விட்டு சில நாட்களாகத் திருமணக் கனவுகளில் லயித்து இருந்தான். எப்படியாகத் தங்கள் திருமணம் நடைபெறும் என்று தினம் தோறும் வண்ண வண்ண கனவுகள் தாம். ஆனால், அன்று இவ்வளவு நாளாக வீட்டை விட்டு எங்கேயும் சென்றிராத அனிக்கா திடீரென வெளியே வரவும் அவள் விக்ரமை தேடிப் போகிறாளோ? அப்படி இருந்தால் அவளைப் பாதுகாக்க வேண்டும் என்றெண்ணி இருந்தவன் அவள் தொழிற்சாலைக்கு வருவதாகத் தெரிந்ததும் தன் திட்டத்தை மாற்றினான்.

தங்கள் குடும்ப விஷயம் தொழிற்சாலை அலுவலர்கள் முன்பு விவாதிக்க வேண்டாம் என்றெண்ணியதால் அலுவலர்களுக்கு மட்டும் விடுமுறை கொடுத்து அனுப்பினான். தொழிற்சாலை அலுவலகத்தின் கதவுக்கு அப்பால் இருப்பதால் இந்த பக்கம் என்ன நடக்கின்றது? என்பது எவருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

ரூபன் அனிக்காவிற்காகக் கேபினில் காத்திருந்த போது தனியாக இருந்து சிந்தித்ததில் தான் முறையாகப் பெண் கேட்டும் அனிக்கா குடும்பத்தினர் தன்னை நிராகரித்தது பெருமளவு அவனைப் பாதித்திருக்க, அந்நினைவுகள் அவனை இம்சித்தன. தன்னை நேசித்தவளுக்குத் தன் காதலுக்காகப் போராட தெரியவில்லையா? மனம் விட்டு பேசி குடும்பத்தினருக்கு தன்னுடைய விருப்பத்தைச் சொல்ல முடியவில்லையா? என்கின்ற ஆங்காரம் மூண்டெழுந்தது.

சஞ்சலம் கொண்ட அவன் மனம் ஒருவேளை அவள் தனக்கும் விக்ரமுக்குமான திருமணத்திற்கு அழைக்கத்தான் வருகின்றாளோ? என்று தவறான சிந்தனைகள் பலவற்றால் சூழ்ந்து, கோபத்தில் அவனுடைய மூளை சுயமிழந்து சாத்தானின் உலைக் களமாய் மாறியிருந்தது.

தன்னந்தனியனாகத் தன் காதலுக்காகப் போராடி அவன் களைத்திருந்தான். கைக் கோர்த்து நடப்பாளேன எண்ணியவள் தனது உணர்வுக்குச் சற்றும் பிரதிபலிப்புத் தராமல் தள்ளி நிற்பதுவும், ஒரு முறை தன்னை வேண்டாமென்ற பின்னும் யாசகன் போல மறுபடியும் அவளது வீட்டிற்கு அவளைக் கேட்டு தன் வீட்டினர் செல்ல வேண்டியிருந்ததால் அவனுடைய தன்மானம் வெகுவாக அடிப்பட்டிருந்தது.

வந்தவளோ தன் அணைப்பில் உருகி நின்றதும் அவனும் உருகியே போனான். ஆனால், அதன் பின்னே அவள் சொன்ன சொற்களை அவனால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அவளது “சாகப் போகிறேன்” என்கின்ற முட்டாள் தனமான கூற்றைக் கேட்டதும் தான் முன்பிருந்த கொதி நிலைக்கு மாறி மூடனாகி இருந்தான்.

அவளது அந்த வார்த்தைகளை கேட்டு தாங்கிடவே இயலாமல் ஓங்கி அறைந்திருந்தான். அவள் எப்படி அப்படிச் சொல்லலாம்? அவள் இறந்த பின்னர் அவனுக்கும் வாழ ஆசையொன்றுமில்லையே? அவனைப் பொறுத்தவரையில் அவள் மரிப்பதும் அவன் மரிப்பதும் ஒன்றல்லவா?

சாகப் போவதாகச் சொன்னாளே ஒழிய தன்னைச் சந்திக்க வரும் போது உயிர் போக்க எதையும் உட்கொள்ளாமல் அவள் இருந்ததே அவனுடைய உயிரை மீட்டுத்தந்திருந்தது. அவள் தனக்காக வீட்டில் பேசவில்லையே என்று மனதில் அவன் மனதில் இருந்த கோபம் எல்லாம் அவள் தனக்காக மரிக்கவும் துணிந்திருக்கிறாளே? என்பதில் வடிந்திருந்தாலும், அதனால் அவன் பெருமைக் கொள்ளவோ மகிழ்ச்சியுறவோ முடியவில்லை. அவள் உயிர் அவளுக்கு ஒரு வேளை முக்கியமில்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், அவனுக்கு அவள் தானே எல்லாம்.

தற்கொலை முடிவு எடுத்தவளை மயக்கத்தில் அப்படியே விட்டுச் செல்ல மனம் வரவில்லை. அவள் வீட்டினர்க்கு எப்படியோ அவனுக்கு அவள் மிக முக்கியம். அன்று தான் ஏதேச்சையாக அவன் ஆர்டர் செய்திருந்த தாலியும் செயினும் கைக்கு வந்திருந்தது. பையிலேயே இருந்து போன அந்தச் செயின் பற்றிய நினைவு ஹாஸ்பிடலில் தான் அவனுக்கு வந்திருந்தது.

அவளைத் தற்போதைய உடல் நலக் குறைவு சரியாகும் வரை மருத்துவமனையில் சிகிட்சை பெற வைத்து, மறுபடி அவளை அவளது வீட்டிற்கே அனுப்பி வைத்தால் மட்டும் மறுபடி இப்படி ஒரு கோழைத்தனமான முடிவிற்கு வர மாட்டாள் என்று என்ன நிச்சயம்?

அவள் மேல் தனக்கு உரிமை இருந்தால் மட்டுமே அவன் அவளைப் பாதுகாக்க முடியும். தன்னைத் திருமணம் செய்வதற்குக் கேட்ட போது ஆயிரம் காரணங்கள் சொல்லி வேண்டாமெனச் சொன்னவளுக்குச் செத்துப் போகிறேன் என்று சொல்வது எளிதாக இருந்ததே. அவள் சொன்ன வார்த்தைகள் எத்தனை கொடூரமானவைகளாக இருந்தாலும் அவளை அவனால் அப்படியே விட முடியாது.

அதனால் தான் தன் அழகிய கற்பனைகளுக்கு மிகவும் ஒவ்வாத வகையில் மருத்துவமனை கட்டிலில் தன்னவள் உணர்வற்று இருக்கையில், அவளுக்கு முற்றிலும் பிடிக்காத விதத்தில், தன்னுடைய குடும்பங்களின் ஆசீர் பெற இயலாத தருணத்தில், அந்தத் தாலியை அவன் அவளுக்கு கட்டி முடித்திருந்தான்.

அத்தனையும் மறுபடி ஒருமுறை எண்ணிப் பார்த்தவனுக்குக் காதல் தரும் சுகங்களை விட வலிகளே அநேகம் என்பது புரிந்தது.விக்ரம் அனிக்காவை கொல்ல முயற்சிகள் செய்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவள் எப்படியிருக்கின்றாளோ? என ஒவ்வொரு நிமிடமும் துடிதுடித்து நாட்களை கடத்துவதற்கு பதிலாக தவறான விதத்திலாகினும் அவளை உரிமைக் கொண்டு, கவர்ந்து தன்னுடைய கண் முன்னே பாதுகாப்பாக வைத்து இருப்பது மிகுந்த நிம்மதியாக இருந்தது.

ஆனாலும், விக்ரம் செயல்பாடுகளை ஆராய்ந்துக் கொண்டு அவன் மீது ஒரு கண் வைப்பதையும் அவன் நிறுத்தவில்லை. அனிக்கா எங்கே வெளியே செல்ல வேண்டுமானாலும் அவளைத் தன்னோடு மட்டுமே அழைத்துச் சென்றான்.

தன்னுடையவளை அவளுக்குரிய மரியாதையோடு மனைவியாகத் தன் வீட்டில் கொண்டு வருவதற்கான போராட்டம் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது. நிச்சயதார்த்தம் முதலில் நடந்த பிறகு தான் அவளை அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைப்பதாகப் பிடிவாதமாக நின்றான்.

பெரியவர்கள் அவனிடம் பலமுறை பேசியும் அவன் தன்னுடைய நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை. ஒன்று ஊரறிய அவளை எனக்கு மணமுடிப்பதாகச் சொல்லி நிச்சயதார்த்தம் நடத்தி விட்டு அவளை தங்களோடு அழைத்துச் சென்று எனக்கு திருமணம் செய்து கொடுங்கள். அல்லது நான்தான் அவளுக்கு ஏற்கெனவே தாலி கட்டியாயிற்றே? அவள் என் மனைவியாக எங்கள் வீட்டிலேயே என்னோடு இப்படியே இருந்து விடட்டும் என்று முடிவாகக் கூறி விட்டான்.

மகளை விட்டுக் கொடுக்க இயலாமல் அனிக்கா வீட்டினர் தான் இறங்கி வர வேண்டியதாயிற்று. தங்கை மீது கோபம் இருந்தாலும் சாராவின் கலக்கமான நிலைப் பார்த்துக் கிறிஸ் தன் அன்னையின் பக்கம் நிற்க தாமஸ் வேறு வழியில்லாமல் ரூபனின் பேச்சிற்கு இறங்கிப் போனார்.

ஆரம்பத்திலிருந்தே தான் எதைச் சொன்னாலும் ஏறுக்கு மாறாகப் பேசிக் கொண்டும் எதற்கும் எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டும் இருந்த தாமஸ் மாமா சில நாட்களாகக் காண்பிக்கும் சுமூகமான நிலைக் குறித்து ரூபனுக்கு ஆச்சரியமே. இரண்டு பக்கமும் பிடிவாதக்காரர்களாய் மாமாவும் மருமகனும் நிற்க, மற்றவர்கள் இடையில் இங்குமங்குமாய் பேசி பேசி அவர்கள் மண்டை ஒரு வழியாகி இருந்தது.

தன் பிடிவாதத்திலிருந்து கீழிறங்கிய தாமஸ் மாமாவின் மாற்றத்தால் ரூபனுக்கு கொஞ்சம் நிம்மதி கிடைத்தது என்றே சொல்லலாம். அப்படி அவர் திடீரென மாறக் காரணம் என்னவாக இருக்கும்? அவனைப் பொருத்தவரை அது ஒரு பதில் தெரியாத கேள்விதான். பதில் தெரிந்த பின் அது குறித்து அவன் என்னவாக அதை எடுத்துக் கொள்வானோ? பார்க்கலாம்.

கிறிஸ் இன்னும் இவனை முறைக்கிறான் தான். அனிக்காவின் கடிதம் குறித்தும், அவள் தன் மரணத்திற்காக எடுத்து வைத்திருந்த தூக்க மாத்திரைகள் குறித்தும் ஏற்கெனவே தீபன் மூலமாக அறிந்த நேரம் முதலே ஏகத்திற்கும் மனம் கலங்கிப் போயிருந்தவனுக்கு அனிக்காவின் கடிதம் சொல்லிய செய்தி ரூபனின் மனதில் பசுமரத்தாணியாக பதிந்து விட்டிருந்தது.

அனிக்கா தன் காதலுக்கும் குடும்பத்திற்குமிடையில் தனக்குள்ளாக அல்லாடி இருந்திருக்கின்றாள். அதனால் தான் அத்தகையதொரு முடிவினை எடுத்திருக்கின்றாள். எனவே, அவளை ஒரு போதும் குடும்பமா? இல்லை காதலா? என்கின்ற இக்கட்டான நிலைமையில் நிறுத்தக் கூடாது என்ற முடிவுக்கு ரூபன் வந்திருந்தான். அதனால் கிறிஸ்ஸின் கோபத்தை அவன் பெரிது படுத்தவில்லை. உரிமையுள்ளவன் திட்டுகின்றான் கேட்டுக் கொண்டால் என்ன குறைந்து விடப் போகின்றது? எல்லாம் அவளுக்காக என்ற பொறுமையோடு கிறிஸ்ஸின் முறுமுறுப்புகளை எடுத்துக் கொண்டான்.

அவள் அப்பா, அண்ணனாகக் குடும்பம் முழுவதுமாக அவளைத் தனக்கு மணமுடித்துக் கொடுத்தாலொழிய அவளால் முழு மனத்தோடு அவனுடன் வாழ இயலாது என்பதும் அவனுக்குப் புரிந்த விஷயமே.

ஒரு வழியாக அனிக்காவை அவளுடைய அம்மா, அண்ணியைத் தன் வீட்டிற்கு நிச்சயத்திற்கான ஷாப்பிங் காரணம் சொல்லி புறப்பட்டு வரச் செய்து அனிக்காவோடு ஒன்று சேர்த்தாகி விட்டது. இனி அவளது அப்பா , அண்ணனோடும் சமாதானப் படுத்த வேண்டும்.

தாமஸ் மாமாவை பொருத்தவரையில் அவருக்கு ரூபன் தன் ஸ்டேடஸில் இல்லை என்பதுதான் பிரச்சினை. அவராக அவனைத் தன் ஸ்டேடஸுக்கு ஏற்றவன் என்று எண்ணும் வரைக்கும் ரூபனால் ஒன்றுமே செய்ய முடியாது. அவர் தன்னோடு சமாதானமாகா விட்டாலும் அவர் தன் மகளோடு சமாதானமாக இருந்தாலே அவனுக்குப் போதும்.

ஆனால், கிறிஸ் தங்கை குறித்துக் கொண்டிருக்கின்ற கவலைகளை அவனால் புரிந்து கொள்ள முடிகின்றது. உறவு முறைக்குள்ளான திருமணம் என்பதான அவனது கவலைகள் குறித்து அறிந்து இருந்தவன் அவனும், அனிக்காவும் மருத்துவரை சந்தித்து ஆலோசனைப் பெற்றுக் கொண்டு ஒரு சில மருத்துவ டெஸ்ட்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

ரூபனுக்குக் கிறிஸ்ஸிடம் தான் அவன் தங்கைக்கு ஏற்றவன் தான் என்று தன்னை நிரூபிக்க வேண்டி இருக்கின்றது. அவளை அறைந்ததாலேயே இவன் தன் தங்கையைக் கண்கலங்காமல் வைத்துக் கொள்வானா? என்று எழுந்துள்ள சந்தேகத்தை முற்றிலுமாகத் தீர்த்து வைக்க வேண்டியிருக்கின்றது.

கிறிஸ் அத்தான் மட்டுமா? தன் தம்பிக்கும், அண்ணனுக்குமே தன் மீது வந்த நம்பிக்கையின்மையை என்ன சொல்வது. தனக்காகப் பார்த்து பார்த்துப் பேசி தாமஸ் மாமாவை ஒரு வழிக்குக் கொண்டு வந்திருந்தாலும் தீபன் இவனைத் தனியே அழைத்து “உன் கோபத்தைக் குறைத்துக் கொள்  என்று அரை மணி நேரம் லெக்சர் கொடுத்ததையும், ஜீவன் “நீ எவ்வாறு என் ஃபிரண்டை அடிக்கலாம்  என்று தன்னிடம் சண்டைக்கு வந்ததையும் என்ன சொல்ல? என்னைக் கோபப் படுத்தி அடிக்க வைத்தவள் அவள் அல்லவா? அவள் பேசியது தவறென்று இல்லாமல் போய் என் கோபம் மட்டும் தவறாகிப் போனதே? எல்லாம் செய்து விட்டுச் சுகமில்லாமல் ஆகி விட்டதால் நல்லவளாகிப் போனாயடி. நான் தான் எல்லோரிடமும் அகப்பட்டுக் கொண்டேன் எனச் செல்லமாக அனிக்காவை தன் மனதில் திட்டிக் கொண்டான்.

எது எப்படி இருந்தாலும் அனிக்காவை அடித்ததை அவனாலேயே சரியென்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தனக்கு ஏன் அன்று அவ்வளவு கோபம் வந்தது? என்று அவன் வருந்தாத நாளில்லை. அதனால் எழுந்த குற்ற உணர்ச்சியாலோ என்னமோ அனிக்காவிடம் சாதாரணமாகப் பேசவும் கூட அவனால் முடியவில்லை.

அனிக்கா போட்ட ஆர்டரை மீறாமல் சாப்பிட்டு, பால் அருந்தி உறங்கச் சென்றான். நாட்கள் நெருங்கியது பேசி முடிவெடுத்தபடி நிச்சயதார்த்தம் நிகழ இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருந்தது.

நெருங்கிய உறவினர்கள் ஓரிருவர்கள் முன்னதாகவே இவர்கள் வீட்டிற்கு வந்திருக்க, பெண் எதற்காக இப்போதே மாப்பிள்ளை வீட்டிலிருக்கிறாள்? என்று பல பேரிடமிருந்து பல விதமான கேள்விகள் வர எதையோ சொல்லி சமாளித்தார்கள்.

அனிக்கா முன்போல உற்சாகமாகி இருந்தாள். அடிக்கடி ரூபனிடம் வந்து பேச்சுக் கொடுத்துப் பார்ப்பதும், அவன் சரியாகப் பதில் பேசாததும் ஏமாற்றத்தோடு திரும்புவதுமாக இருந்தாள்.

ஜீவனோடு கொட்டம் அடிக்கவும் ஆரம்பித்தாள். அவளை முன் போல உற்சாகமாகப் பார்த்து அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.

சாரா ரூபனை அழைத்துப் பேசினார். அத்தை பேச முற்படும் முன்பே ரூபன் அவரிடம் தான் அனிக்காவை அடித்தது குறித்து மன்னிப்பைக் கேட்டான். தான் அவளை விரும்புவது குறித்தும், தான் கோபத்தில் அவ்ளிடம் நடந்து கொண்டது எல்லாம் தவறே என மனம் வருந்தி சொல்லவும், மகள் எடுத்த முடிவு எதனால் இருக்கும் என்றறிந்தவர் அவளது சார்பாக அவனிடம் பேசினார். மகளைக் குறித்த அவரது கவலைகள் எல்லாம் ரூபனிடம் சொன்ன பின்னரே அவருக்கு ஆறுதலாயிற்று. அவர்கள் வீட்டில் நடந்த விஷயங்கள் அனைத்தையும் அத்தை வாயிலாகத் தெரிய வந்த பின்னரே அவனுக்கு அனிக்காவின் மனநிலை முழுமையாக புரிந்தது. தான் அவளை மகிழ்ச்சியாகப் பார்த்துக் கொள்வதாக அவருக்கு உறுதிக் கொடுத்தான். சாராவிற்கு ரூபனுடனான அந்த உரையாடல் மனதிற்கு நிறைவாக அமைந்து இருந்தது.

அடுத்த நாள் நிச்சயதார்த்தம், இருதரப்பிலும் ஏறத்தாழ எல்லா உறவினர்களையும் அழைத்து ஏற்பாடுகள் மிகப் பெரிதாகவே செய்யப் பட்டிருந்தன. சில வாரங்களாகத் தனது வீட்டில் தன் அறையில் இருந்தவளை, தினம் தோறும் தான் விரும்பிய நேரம் பார்க்க கிடைத்தவளை மறுபடி அவள் வீட்டிற்கு அனுப்பி வைப்பதை எண்ணியே ரூபனுக்கு மிகவும் கசப்பாக இருந்தது. தன் மனதை சமாதானப் படுத்தியவனாக அனிக்காவை சந்திக்கத் தன்னுடைய அறைக்குச் சென்றான்.

முதன்முறையாக அவளிடம் தாமாகவே போய்ப் பேச வேண்டியிருக்கின்றது, பேசித்தான் ஆக வேண்டும். அவன் அவள் தங்கியிருந்த தன் அறைக்குள் நுழைய, அவளோ அந்நேரம் தன் வீட்டு வாண்டுகளோடு பக்கத்து வீட்டுக் குழந்தைகள் இரண்டு பேரையும் சேர்த்து விளையாடிக் கொண்டிருந்தாள். அவர்கள் ஓட அவர்களைத் துரத்தியவளாகப் பின் சென்றவளை நிறுத்தினான்.

‘அனி கொஞ்சம் உக்காரு.பேசணும் 

இதென்ன அதிசயம்? என்னிடம் பேசப் போகிறானா? ஸாரி இனிமேல் போகிறாரா என்று சொல்லணுமோ? அனிக்கா மைண்ட் வாய்ஸ்.

அவன் எதிரில் இருக்கையில் அமர்ந்தாள்.

 சித்தி கேம்  என்று வந்து நின்ற ராபினிடம், கண்களைச் சுருக்கி, கைகள் இரண்டின் விரல்களையும் காட்டி “டைம் ப்ளீஸ்  என்றதும் பெரிய மனத்தோடு அந்த வாண்டு அவளை விட்டு விட்டு விளையாட்டைத் தொடரச் சென்றான்.

“சொல்லுங்க அத்தான்” என்றவளைப் பார்த்து, ரொம்பப் பிஸிதான் என மனதிற்குள் சிரித்துக் கொண்டவன். தான் அவளுக்குத் தாலிக் கட்டிய சூழ்நிலையை விக்ரம் குறித்த விபரங்களை மட்டும் தவிர்த்து விம் பார் போடாமலேயே விளக்கிக் கொண்டிருந்தவன். அவளெதிரில் தவறு செய்தவன் போலத் தலைக் குனிந்தவாறு அமர்ந்திருந்தான்.

அவன் அவ்வாறு அமர்ந்திருந்தது அவளுக்குச் சற்றும் பிடிக்கவில்லை. எதற்காக இந்தத் தலைக் குனிவாம்? அவளும் அவன் சொன்னதற்கெல்லாம் ஊம் கொட்டினாள். இப்போது அவளுடைய மனநிலை கதைக் கேட்பதை ஒத்திருந்தது. முன்பே தெரிந்த அத்தனை விஷயங்களையும் மறுபடியும் எதற்குச் சொன்னான் என்பது அவளுக்கு இன்னும் புரிபடவில்லை.

அதனாலே  

ம்ம்  அதனாலே

நாளைக்கு நம்ம எங்கேஜ்மெண்ட்

ம்ம் 

நாளைக்கு உன் கழுத்தில தாலியிருந்தா எல்லாரும் ஏதாவது பேசுவாங்க, அதனால 

அதனால 

அந்தத் தாலியை கழட்டிடு

 பேச்சற்று நின்றவளிடம் மறுபடியும் அவன் அதையேச் சொல்லி கேட்க, இதுவரை தானாக பலமுறை அணுகியும் தன்னிடம் பேசியிராதவன் வெகு நாட்கள் கழித்து தானாக வந்து பேசியிருக்க, முன்பெப்போதும் இதுபோல ரூபனிடம் உரிமையாகப் பேசியிராதவள் உற்சாகத்தில் அவனுடனான பேச்சை நீட்டிக்கும் பொருட்டு நறுக்கென்று பதில் சொல்லாமல் வள வளத்தாள்.

ம்ம்  நான் ஒன்னு கேட்கணுமே அத்தான்…

சொல்லு…

இதை என் கழுத்தில ராஜேஷ் அண்ணா ஹாஸ்பிடல் சிஸ்டர் யாரும் கட்டினாங்களோ?

ம்ப்ச் …ஏன் இப்படிக் கேட்கிறாள் என்று புரியாதவனாகச் சலித்தான்.

இல்லன்னா அந்த லேடி டாக்டர் கட்டினாங்களா?

இல்லை அதான் உனக்கு இப்பதானே சொன்னேன்… இதை நான் தான் கட்டினேன்.

அப்படின்னா கழற்ற முடியாது.

அதான் இது ப்ராப்பரா கட்டினது இல்லில்ல, கழட்டினா ஒன்னும் தப்பில்ல கழட்டித் தா 

அதெல்லாம் தர முடியாது. நீங்க ப்ராப்பரா நம்ம மேரேஜ் அன்னிக்கு வேற தாலி கட்டுவீங்கள்ல அதுக்கப்புறம் வேணும்னா இதைக் கழட்டுறேன்.

“பிடிவாதம்” பற்களைக் கடித்தான் அவன்.

“பிடிவாதம் தான் உண்மையோ பொய்யோ தாலி பத்தி எத்தனையோ செண்டிமெண்ட் இருக்கு. சும்மாவே நம்ம வீட்டுக்குள்ள ஆயிரம் ப்ராப்ளம் ஓடிட்டு இருக்கு. இதில நான் இதைக் கழட்ட உங்களுக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா என்னால அதெல்லாம் பார்த்துட்டு இருக்க முடியாது  விளையாட்டுப் பாவனையில் இருந்தாலும் உள்ளத்தில் உள்ளவைகளைச் சொல்கையிலேயே சற்றாக அவள் குரல் உடைந்தது.

அவள் குரல் பேதம் உணர்ந்து அவளை ஆறுதல் படுத்த கரம் நீட்டி அவளை அணைக்கவும் முடியாமல் ரூபன் தன்னைக் கட்டுப் படுத்தியவனாக நின்றான். அவளே தன்னைச் சுதாரித்துக் கொண்டு தொடர்ந்தாள்.

“நான் எப்படியாவது தாலிச் செயினை மறைச்சுக்குவேன், நீங்க ஒண்ணும் கவலைப் பட வேண்டாம்.

எப்படி மறைப்பாளாம்? மனதிற்குள் கேள்வி எழுந்தது ரூபனுக்கு… இப்போது அணிகின்ற சல்வாரில் துப்பட்டாவை கழுத்தை மூடி அணியும் பாணியில் இதுவரை மறைத்துக் கொண்டிருக்கிறாள். சேலையில் அது முடியுமா என்ன? அந்தத் தாலிச் செயின் வேறு சிறியதாயினும் கழுத்தைத் தாண்டி சற்றுப் பார்வையில் படும் விதமான அளவு கொண்டது. யோசிக்கையில் சட்டென்று அவனுக்கு ஒரு உபாயம் தோன்றியது.

இதே செயின் சைஸ்ல என் கிட்ட ஒரு செயின் இருக்கு, நீ அதைப் போட்டா ஒரு வேளை இது மறையலாம்… என்றவனாகக் கப்போர்டை நோக்கிச் சென்றான். ஜீவன் எப்போதும் ரூபனின் அந்தக் கப்போர்ட்டைக் குறித்து ரகசிய கப்போர்ட் என்று கமெண்ட் அடிப்பதை அவளும் அறிவாள். எனவே ஆர்வ மிகுதியில் அந்தக் கப்போர்டில் என்னதான் இருக்கிறது என்றறிய அவன் பின்னாகச் சென்றாள்.

‘கொஞ்சம் தள்ளி நில்லு’ அவளிடம் சிடு சிடுத்தான் ரூபன். ஆர்வம் கொஞ்சம் மிகுதியாகி ரூபனை ரொம்பவே நெருங்கி நின்றதை அனிக்கா அப்போது தான் உணர்ந்தாள்.

சற்றே தள்ளி நின்று கப்போர்டினுள்ளே அப்படி என்னதான் வைத்திருக்கிறான் என்று பார்க்க முயன்றாள். ஒன்றையும் அனுமானிக்க முடியவில்லை. அவனோ சட்டென்று எடுக்க எண்ணியவற்றை எடுத்து கதவை மூடினான். சட்டென்று கதவைப் பூட்ட, கதவிலிருந்த கண்ணாடி அவள் முகத்தையே காட்டவும் சற்றாகப் பயந்து போனாள்.

ஹி ஹி இது நம்ம ஃபேஸ் தான் சுதாரித்துக் கொண்டவள் கையில் ரூபன் அந்தச் செயினை வைத்தான். கண்ணாடியைப் பார்த்து அதனை அணிந்துக் கொண்டவளுக்கு அது சரியாகத் தாலிச் செயினை மறைக்கும் விதமாக இருந்ததைப் பார்த்து திருப்தியாகிற்று. பக்கத்தினின்று பார்த்துக் கொண்டிருந்தவனுக்கும் தான்.

வந்த வேலை முடிந்தது என்ற எண்ணத்தில் அங்கிருந்து நகன்ற ரூபனை அழைத்தாள்.

அத்தான் இன்னொன்னு வேணுமே?

என்ன வேணும்? என்று கேட்டு திரும்பியவன் அவள் பேச்சிலும் , செயலிலும் திகைத்தான்.

காஸ்ட்லியா ஒண்ணுமில்ல, சிம்பிளா… ஒரே ஒரு கிஸ் தான் அத்தான், என்று தன் கன்னத்தைக் காட்டிக் கேட்டுக் கொண்டிருந்தாள் அனிக்கா.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here