31. அமிழ்தினும் இனியவள் அவள்

0
501
Amizhthinum Iniyaval Aval

அத்தியாயம் 31

ரூபன் தன்னுடைய திருமண நிகழ்வுகளை எவ்வளவோ திட்டங்களோடு அமைக்க எண்ணியிருந்து இருக்க, தற்போது எதிர்பாராதவிதமான சூழ்நிலைகளால் அவசர அவசரமாகத் தன் நிச்சயதார்த்த விழாவை நடத்த வேண்டியிருக்கின்றது என்பதில் சற்று ஏமாற்றமடைந்திருந்தான்.

அவன் கோபத்தில் நிதானமின்றிச் செய்தவைகளுக்காக ஆளாளுக்கு அவனை அட்வைஸ் செய்து குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கிக் கொண்டிருந்தார்கள் என்றால் அன்று காலைதான் அப்பாவும் போன் செய்து அன்பாகத்தான் என்றாலும் அறிவுரை மழையைப் பொழிவித்து இருந்தார். எல்லாத் திருமணங்களிலும் மாப்பிள்ளை வீட்டார்தான் கெத்து காட்டுவார்கள் இவனோ தன் திருமணப் பேச்சிற்காக அடிக்கடி மாமனார், மற்றும், கிறிஸ்ஸையும் பார்க்கப் போக, அவர்கள் காட்டும் வேண்டாவெறுப்பான வித விதமான பாவனையில் நொந்து நூலாகி இருந்தான்.

வீட்டிற்கு நிச்சயத்தின் சில நாட்கள் முன்பே வந்திருந்த ஒரு சில பெரிசுகள் எதற்குப் பெண்ணை மாப்பிள்ளை வீடான இங்கு வைத்திருக்கிறீர்கள்? என்று வேறு குடைந்தெடுத்து விட்டனர். வீட்டில் இது போன்ற எத்தனையோ பிரச்சினைகள் இருக்க, அதற்கு இணையாக எக்ஸ்போர்ட் செய்ய வேண்டிய பல ஆர்டர்களும் அதே வாரத்தில் இருந்தன.

கடந்த நாட்களில் அனிக்கா அவனைத் தேடி வருவதற்கு முன்பாக அவளைக் குறித்து எழுந்த கவலைகள், தாமஸ் மாமா தனக்குப் பெண் தர மாட்டேனென்று சொல்லியதால் அவன் சோர்வுக்குள்ளாகி இருந்த போது கவனம் செலுத்தாமல் விட்டிருந்த பலவேலைகள் இப்போது அவனிடம் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதாது என்று நெருக்கிக் கொண்டிருந்தன.

அத்தனை குழப்பத்திலும் தான் அணிவித்த தாலிச் செயினால் இன்னுமொரு குழப்பம் வேண்டாமே என்று நேரம் ஒதுக்கி வந்து, என்ன பேச வேண்டும்? எப்படிப் பேச வேண்டும்? என்று ஒத்திகையோடு அவனுடைய அழகான ராட்சசியிடம் வந்து பேசினான்.

அந்த வாயாடியோ வழக்கத்திற்கு மாறாக அவனது பேச்சுக்கு எதிர் கேள்விகளாகப் பேசி மடக்கினாள் என்றாலும் அவள் பேசிய பேச்சில் அவனது உள்ளம் குளிர்ந்தே போனது. நான் கட்டியது என்பதால் அவளுடைய நியாயத் தர்மங்களுக்குப் புறம்பானதாக இருந்தாலும் தன் கழுத்திலிருந்த தாலியை கழட்ட விரும்பவில்லையே? அதுவும் எனக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்பதற்காகவாம்.

அவள் அவனுக்காகத் தன் உயிரையே பொருட்படுத்தாதவள்தான். அவளது அந்தத் தற்கொலை செய்யும் முடிவினால் அவள் வீட்டினர் மட்டுமல்லாது அவனும் பெருமளவு பாதிக்கப் பட்டு இருந்தான். எங்களிடம் மனம் திறந்து பேசியிருக்கக் கூடாதா? அவளுடைய உயிரை விடவா எங்களது பிடிவாதம் பெரியது என்கிற பொருமல் அவளது வீட்டினருக்கு என்றால், என்னைத் திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டேனே? என்னைத் திருமணம் செய்வதை விட அவளுக்குத் தன் உயிரை மாய்த்துக் கொள்வது தானே பிடித்திருந்தது என்கிற பொருமல் ரூபனுடையது.

ஹாஸ்பிடலில் காவலர் முன்பாகத் தன்னைக் காப்பாற்றவே தங்களிருவருக்கும் திருமணம் ஆனதாக அனிக்கா சொன்னாள் என்பது அவனுக்கு மட்டுமல்ல அவளுடைய குடும்பத்தினருக்கும் மிகத் தெளிவாகத் தெரிந்த ஒன்று. இத்தனை இருந்தும் தான் அணிவித்ததற்காக அவள் அந்தத் தாலிச் செயினுக்குக் கொடுத்த முக்கியத்துவம் அறிந்த பின்னர் அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. தன் காதலி தன்னை அதிகம் நேசிப்பது, தனக்கு முக்கியத்துவம் கொடுப்பது யாருக்குத்தான் பிடிக்காது போகும்?

சரி தாலியை கழட்ட வேண்டாம், அவனிடம் இருந்த சற்றே அகலமான அந்தத் தாலியின் நீளத்தில் அமைந்திருந்த செயினைக் கொண்டு மறைக்கலாம் என்கின்ற யோசனை சட்டென்று தோன்ற அந்தச் செயினைத் தன் கப்போர்டிலிருந்து எடுக்கச் சென்றால் அவனை நெருங்கி வந்து, ஏறத்தாழ கிட்டே வந்து உரசிக் கொண்டு அவனை அவன் பொறுமையைச் சோதிக்கின்றவளை என்ன சொல்வது?

தற்போது அவள் அவன் அறையில் தங்க ஆரம்பித்ததிலிருந்தே அவன் தன்னுடைய அறைக்குள் வரும் போதெல்லாம் அவளுடைய வாசனை உணர்ந்து அவஸ்தைக்குள்ளாக்கிக் கொண்டிருந்தான், அப்படியிருக்க நெருங்கி நின்று நெருக்கடி கொடுத்தால்?.. வேறு வழியில்லாமல் தான் அவளைத் திட்டி நகர்ந்து நிற்கச் செய்தான்.

அதன் பின்னர் அவள் செயினை அணிந்து அளவைச் சரி பார்த்தவுடன் நாளைக்கு இந்நேரம் தன்னுடைய வீட்டிற்குச் சென்று விடுவாள்  அவள் தன்னுடைய அறையில் இருக்க மாட்டாள் என்றேண்ணியவாறு ஏக்கத்துடன் சற்று நேரம் அவளறியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் அங்கிருந்து பிரயத்தனப்பட்டு நகரும் போது வம்படியாய் முத்தம் கேட்பவளை என்னவென்று சொல்வது?.

“ஒரே ஒரு கிஸ் தான் அத்தான்”, என்று பேராம் பேசியவளாக நின்றவளை முறைத்தான்.

இவளை முத்தம் கொடுத்து கொஞ்சுகின்ற நிலையில் தானே இருக்கிறேன் என்றெண்ணியவனாகத் தன் பற்களைக் கடித்தான். அமுல் பேபி பாவனையில் கன்னத்தில் கை வைத்து நின்றவளைப் பார்த்தவனுக்கு ‘இரண்டு மூணு வயசு வாண்டுகளோடு விளையாடுபவள் இப்படிக் கேட்காவிட்டால் தான் ஆச்சரியப்பட வேண்டும்  என்று தோன்றவே அவளுக்குப் பதில் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்தான்.

அனிக்காவிற்கோ இவ்வளவு நாளாகத் தன்னிடம் சரியாகப் பேசாத ரூபன் இன்று வலிய வந்து பேசவும் தலை கால் புரியவில்லை. அதனால் தான் தன்னுடைய வழக்கமான இயலபு மறந்து, அவனை வம்பிழுக்கும் நோக்கத்தோடு எல்லாவற்றிற்கும் எடக்கு மடக்காகப் பதில் கொடுத்துக் கொண்டிருந்தாள். அவள் முத்தம் கேட்டதுவும் கூட அவளறியாமல் வெளிப்பட்ட குறும்பின் வெளிப்பாடுதான். இப்போது ரூபன் தான் கேட்டதற்குப் பதில் பேசாமல் திரும்பச் செல்லவும் தன்னுடைய திட்டம் நிறைவேறாத கடுப்பில் அவனை மறித்தவாறு எதிரில் வந்து நின்றவள்,

நான் என்ன உங்க சொத்தையா கேட்டேன்? அதுக்கு ஏன் இப்படி முறைக்கிறீங்க? என்றாள்.

இன்னிக்குக் கொஞ்சம் ஓவரா தான் பேசுறா என்றெண்ணியவன் சிடுசிடுப்பாக “உன் வேலையைப் பார்த்துட்டுப் போ  என்றான்.

 பின்ன ஒரு நாள் ஐயோ அவ கேட்டாளே நாம கொடுக்கலையேன்னு வருத்த படக் கூடாதேன்னு பார்த்தா ரொம்பத்தான் …” சீண்டுவதை விடவில்லை அவள்.

 என்ன பின்ன ஒரு நாள்? இப்ப என்ன சொல்ல வர நீ?’ தான் அவனைச் சீண்டி சீண்டி கோபத்தைத் தூண்டிக் கொண்டிருக்கின்றோம் என்பதை உணராமல் பேசாமல் ஒதுங்கிப் போகின்றவனைப் பேச வைக்கிறோம் என்பதைச் சாதனையாக எண்ணிக் கொண்டு வாயை விட்டாள்.

இல்ல நாளைக்கு எங்க வீட்டுக்கு போயிடுவேன்? (அப்ப இது உன் வீடு இல்லியா என்று முறைத்தவனைக் கண்டு கொள்ளாமல்) அதுக்கப்புறம் மறுபடி ஏதாவது பிரச்சினை வந்தா? ஐயோ பாவம் ஒரு முத்தம் தானே கேட்டா கொடுத்திருக்கலாமேன்னு நீங்க வருத்த படக் கூடாதில்ல  அத தான் சொன்னேன் என முடிக்கும் முன் அவன் கோபம் எல்லை மீறியது.

 இங்க பாரு அனி  அப்படி ஏதாவது ஒண்ணு நடந்திச்சு  என்னை ஏமாத்தலான்னு உங்க வீட்ல யாராவது பார்த்தாங்க  அப்புறம் கொலை தான் விழும் 

கர்ஜித்துச் சென்றவனைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு “ஒரு முத்தம் தான கேட்டேன்  கொலைக் குத்தமா பண்ணிட்டேன்?” என்ற பொருமலும்

 நாம இன்னிக்கு ரொம்ப அதிகமா பேசிட்டோமோ? என்று மிகத் தாமதமாக ஞானோதயமும் எழுந்தது.

அடுத்த நாள் நிச்சயதார்த்தம் என்று தொழிற்சாலைக்கு விடுப்பு கொடுக்க முடியாததால் பாதி நாள் வேலை வரை ஓரளவு சமாளித்து விட்டு அரை நாள் தன்னிடம் வேலைப் பார்ப்போருக்கு விடுப்புக் கொடுத்து, தானும் வீடு திரும்பினான்.

சமீபத்தில் ரூபன் தொழிற்சாலையில் அட்மினில் வேலைக்குச் சேர்ந்திருந்த திவ்யாவும் அவனோடு சேர்ந்தே பயணித்து வீடு வந்திருந்தாள். அவள் அனிக்காவைப் பார்க்க வருவதாகச் சொன்னாலும், சில நாட்களாக ஜீவனை தொழிற்சாலையில் அடிக்கடி பார்க்க முடியாதது தான் காரணம் என்பது அவள் மனம் மட்டுமே அறிந்த ஒன்று. இல்லையென்றால் வீட்டிற்கு வந்து தான் அனிக்காவை சந்திக்க வேண்டுமா என்ன? மாலை ஹாலிற்கு வந்து அனிக்காவை சந்தித்து இருக்கலாமே.

 அனி இங்க தான் இருப்பா  என்றவனாகத் தன் அறைக்குச் சென்று வாசலில் தாமதித்தவன், கதவு திறந்து விரிந்தே கிடக்க, பக்கத்து அறையில் அனிக்காவின் சத்தம் கேட்கவும் பக்கத்து அறைக்குச் சென்றான்.

அங்கு அனிக்காவும் ஜீவனும் மிக மும்முரமாக ஏதோ பேசிக் கொண்டிருப்பது போல இருந்தது. அவ்வப்போது ஜீவன் முகத்தில் வந்த கோபம் பார்க்கையில் அனிக்காவை எதற்காகவோ கண்டிக்கிறானோ? என்று தோன்றியது இன்று அவள் தன் வீட்டுக்குத் திரும்பச் செல்லவிருப்பதால் அறிவுரை கூறுகிறான் போலும், அவளது தற்கொலை முடிவில் அவனும் அதிகமாய் அரண்டுப் போயிருந்தானல்லவா?

ஜீவனின் கையைப் பற்றியவளாக அவன் தோளில் தன்னிச்சையாய் சாய்ந்திருந்து கொண்டு அவன் சொல்வதெற்கெல்லாம் ஆமாம் சாமி போட்டுக் கொண்டிருந்தவளைப் பார்த்துக் கொண்டிருந்த திவ்யா தன்னருகில் நின்ற ரூபனின் முகபாவனைகளைப் படிக்க முயன்றாள். அதில் சற்றும் கோபமோ, வருத்தமோ, பொறாமையோ, எரிச்சலோ இல்லை. ஏதோ சின்னப் பிள்ளைகள் இருவர் உரையாடலைப் பார்க்கும் சுவாரஸ்யம் தான் இருந்தது.

அனிக்காவை திருமணம் செய்து கொள்ளப் போகிறவன் மனத்திலோ முகத்திலோ சற்றும் ஜீவனுடனான அவளுடைய நட்பைக் குறித்த சஞ்சலங்கள் இல்லாதிருக்கத் தான் அனிக்காவின் தோழியாக இருந்து கொண்டும் அவர்கள் நட்பைக் கொச்சையாய் பேசியது அவள் நினைவில் நெருடி சங்கடத்தைக் கொடுத்தது.

ஜீவன் ஏதேச்சையாக வாசல் புறம் பார்க்க, இனி அவன் பார்த்துக் கொள்வான் என்கிற பாவனையில் அதுவரை அவர்களைப் பாராதது போல ரூபன் அங்கிருந்து சட்டென்று நகர்ந்தான்.

“வா திவ்யா” என வரவேற்றவன். நான் இன்றைக்கு ஒரு பிரபலத்தை உனக்கு அறிமுகப்படுத்தப் போகிறேன்  என்று அவளை அறையிலிருந்த நாற்காலியில் அமர்த்தினான்.

ப்ரீதா அதற்குள்ளாக அவர்கள் அறைக்குள் வந்து திவ்யாவிற்குக் குளிர்பானம் கொடுத்து உபசரித்துச் சென்றாள்.

“யாரந்த பிரபலம்? என்று கேட்ட திவ்யாவுக்கு அனிக்காவைக் காட்டி , “ இன்னிக்கு நடக்கப் போற பங்க்ஷனோட ஹீரோயின்… இதோ இவங்க தான்: என்று நாடக பாணியில் இடை வரை குனிந்து வணங்கி பாவனைக் காட்டியவன் அனிக்காவிடமிருந்து அடியைப் பெற்றுக் கொண்டு இதெல்லாம் மிகச் சாதாரணமான ஒன்று என்பது போலத் தூசியைத் தட்டி விடுவதைப் போலச் செய்தான்.

அவர்கள் தொடர்ந்து பேச்சுச் சுவாரஸ்யத்தில் இருக்க,

 உனக்கு ஒரு விஷயம் தெரியுமா திவ்யா? இவ எனக்கு 6 மந்த்ஸ் சின்னவ நான் என்னை அத்தான்னு மரியாதையா கூப்பிடுன்னு எவ்வளவு நாள் சொல்லியிருப்பேன்  எனச் சொல்ல அனிக்கா அவர்களது சிறு வயது ஞாபகத்தில் கலகலத்துச் சிரித்தாள்.

ஆனா இப்போ எனக்கு ஒரு பெரிய கொடுமை நடந்திடுச்சி? பொய்யாய் அழுகைக் கோலம் காட்டினான்.

ஊம் கொட்டி திவ்யா அவன் சொல்லுபவற்றைச் சுவாரஸ்யமாகக் கேட்க அனிக்காவும் ஜீவன் என்னதான் சொல்லவருகின்றானோ கேட்போம்  எனக் கூர்ந்துப் பார்த்தாள்.

ஒரு பையன் அழறானேன்னு கொஞ்சமாவது இரக்கம் காட்டுறீங்களா? கதை கேட்க மட்டும் நல்லா ரெடியா இருப்பீங்களே எனச் சலித்துக் கொண்டாலும். சரி சரி எனக்கு நடந்த கொடுமையை நான் சொல்லிடறேன்… என்னோட சின்னவளான இந்த அனிக்கா என்னையை ஒரு நாளும் மரியாதையா கூப்பிட்டதே இல்லை. டேய் ஜீவா, ஏய் ஜீவான்னு ஏலம் போடுவா. ஆனா நான் இனிமே இவளை அனின்னு கூப்பிட முடியாது. ஏன்னா இவ தான் என் அண்ணி ஆகிட்டாளே.

சோகம் போல நடித்தவன் நான் தான் இனிமே இவளை அண்ணின்னு கூப்பிடனும், மரியாதை கொடுக்கணும். எல்லாம் என் தலைவிதி எனப் போலியாகச் சலித்துக் கொண்டான், அவன் கூறிய பாவனையில் அவர்கள் இருவரும் கலகலத்துச் சிரித்தார்கள்.

அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் நீ என்னை எப்பவும் போல அனின்னே கூப்பிடு என்று சொன்னாள் அனிக்கா.

 அனி… அண்ணி ரெண்டிலயும் பெரிய வித்தியாசம் ஒன்னும் இல்லையே  எனத் திவ்யா சொல்லவும் ‘ஹேய் இதுவும் சரிதான்  ரெண்டும் ஒரே மாதிரி தான் இருக்கு  , என ஜீவன் அதை ஏற்றுக் கொண்டான். அந்நேரம் வீட்டின் முன்னறையில் யாரோ வந்திருக்கும் சலசலப்புக் கேட்க மனதின் உந்துதலில் அனிக்கா ஜீவனின் அறையை விட்டு வெளியே வந்தாள். அவள் மனவோட்டம் அவளுக்குச் சரியானதையே உணர்த்தி இருந்தது. அங்கே அவள் வீட்டினர் அனைவருமே வந்திருந்தனர்.

இது உண்மைதானா? என்னை என் அப்பாவும் அண்ணாவும் மன்னித்து விட்டார்களா? அவள் மனம் தளும்பியது. விரைந்தவள் அப்பாவென அவர் தோளில் சாய்ந்துக் கொண்டாள். கிறிஸ்ஸிம் தங்கையின் மன நிலை அறிந்தவனாக அருகில் வர அவன் கரத்தையும் பற்றிக் கொண்டாள். அது உணர்ச்சிகரமான நிகழ்வாக அமைந்திருந்தது. அங்கே யார் யாருக்கு ஆறுதல் சொல்வதென்றே புரியவில்லை. அனிக்காவின் கண்களினின்று கண்ணீர் நில்லாமல் சொரிந்து கொண்டிருந்தது. ஊமை நாடகம் போலப் பேச்சின்றி உணர்வுகள் மட்டுமே பரிமாறப் பட்டுக் கொண்டிருந்தது.

யார் யாரிடம் மன்னிப்பு கேட்கவென்று புரியாமல் அனைவரும் நின்றார்கள். அவர்களைக் காண அவள் உள்ளேயிருந்து வெளியே வரும் பொழுதே அவளுடைய முகத்தின் மலர்ச்சியைக் கண்டு கொண்ட தாமஸ் மற்றும் கிறிஸ்ஸின் கண்கள் தாங்கள் எவ்வாறு அவளது மகிழ்ச்சியைக் கண்டு கொள்ளாமல் செயல்பட்டோம் என்று குன்றலாக உணர்ந்தார்கள். ஆனாலும், இருவருமே தங்கள் வீம்பான மன நிலையினின்று முழுவதுமாக வெளிவந்திருக்கவில்லை.

அனிக்காவிற்கு ஹாஸ்பிடலில் ரூபன் சார்பாகக் காவலரிடம் தான் பதிலளித்தது… அந்நேரம் அவள் எடுத்த முடிவு அவளைப் பொருத்தவரை சரியாக இருந்தாலும் கூடத் தன்னுடைய அந்தச் செயலால் அப்பாவும் அண்ணாவும் எவ்வளவாக அவமானமாக உணர்ந்திருப்பார்கள், என்கிற குற்ற உணர்ச்சி அவளை வாட்டியது.

பல நேரங்களில் எல்லோரும் அவரவர் இடத்தில் சரியாக இருந்தும் எல்லாமே தவறாகப் போய்விடக் கூடும். இப்போது அவர்களின் நிலையும் அவ்வாறே இருந்தது.

என்னதான் தன்னை மகிழ்ச்சியாகக் காட்டிக் கொண்டாலும் தந்தையையும் அண்ணனையும் பார்த்தவுடன் அவளுடைய உள்ளத்தினின்று எழுந்த ஆறுதலை ரூபன் தூரத்தினின்று கண்டு கொண்டிருந்தான். அவள் வீட்டினர் சம்மதம் இல்லையென்றால் இவள் தன்னுடன் முழு மனத்தோடு ஒன்றி வாழ்வது இயலாத ஒன்று என்று தான் எண்ணியது மிகவும் சரிதான் என்று தனக்குள் எண்ணியவனாக முறுவலித்துக் கொண்டான்.

ரூபனின் எத்தனையோ முயற்சிகளுக்குப் பிறகு, தீபனின் உதவியால் அவர்களை அன்று சாயுங்காலம் நடைபெறவிருந்த அவனுக்கும் அனிக்காவுக்குமான நிச்சய விழாவிற்கு முன்னதாகவே அனிக்காவை சந்திக்க வைத்து விட்டான். இப்போது அது குறித்து மிக நிறைவாக உணர்ந்தான். தன் இணையின் மனதை உணர்ந்து நடப்பதில் உள்ள இன்பம் அவன் உள்ளத்தில் வெளிப்பட்டது.

மகளிடம் முன் போல இயல்பாகப் பேசவிடாமல் தாமஸின் ஈகோ தடுத்தாலும் அவள் கண்ணீரைப் பார்க்கவியலாதவராக அவளை ஆசுவாசப் படுத்தினார். கிறிஸ்ஸிம் தந்தையின் செயலைத் தொடர சற்று நேரத்தில் அவளின் அழுகை மட்டுப்பட்டது. அவள் அவர்களிடமிருந்து விலகி உள்ளே சென்று முகம் கழுவி தெளிவாய் வெளியே வர அங்கே அவள் வீட்டினருக்கான உபச்சாரம் நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. சற்று நேரத்தில் தாமஸிம் கிறிஸ்ஸிம் புறப்பட்டுச் செல்ல அம்மாவுடனும், அண்ணியுடனும் அனிக்கா ஒன்றினாள்.

யாருமே கடந்த நாட்களில் நிகழ்ந்த கசப்பானவற்றை மறுபடி அசைபோட விரும்பவில்லை என்பதால் ஒன்றுமே நிகழாதது போலப் பாவித்துக் கலகலப்பாக நிச்சயத்திற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டனர்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here