32. அமிழ்தினும் இனியவள் அவள்

0
456
Amizhthinum Iniyaval Aval

அத்தியாயம் 32

வழக்கத்தின் படி நிச்சயதார்த்தம் அன்று பெண்ணை அலங்கரிப்பதற்குத் தேவையான அனைத்தையும் மாப்பிள்ளை வீட்டினர் பெண்ணின் வீட்டிற்குக் கொண்டு சென்று அலங்கரித்து மேடைக்குக் கூட்டி வரவேண்டும். அதற்காவது அனிக்காவை அன்று தங்கள் வீட்டிற்குக் கூட்டிச் சென்று வழமையை நிறைவேற்றலாம் என்று அனிக்கா வீட்டினர் கேட்க ரூபன் தன்னுடைய பிடிவாதத்தினின்று பின்வாங்கவே இல்லை. ஆனாலும், பிரச்சினைகள் வேண்டாம் என்று சாராவும், பிரபாவும் அதைப் பெரிது படுத்தாமல் செய்ய வேண்டிய முறைமைகளை நடத்திக் கொண்டிருந்தனர். இதன் காரணமாகக் கிறிஸ் இன்னும் கடும் கோபத்திலேயே இருந்தான். ஆனால், தாமஸ் என்ன எண்ணிக் கொண்டிருக்கிறார் என்று அவரது முகத்தைப் பார்த்து யாராலும் கணிக்க முடியவில்லை.

முன் தினமே கணவர், மகனோடு வந்து விட்டிருந்த ஜாக்குலின் நிகழ்ந்தவை அறிந்துக் கொண்டவளாக முடிந்தவரை பிரச்சினைகள் எதுவும் நிகழாமல் இருதரப்பிலும் பேசி சமாதானமாக அனைத்தையும் கொண்டு சென்று கொண்டிருந்தாள், ராஜ் வெளி நாட்டிலிருக்க அவசர கதியில் நிகழ்ந்த அனைத்து ஏற்பாடுகளிலும் திணறிக் கொண்டிருந்த ரூபனுக்குக் கடைசி நேரமே வருகை தந்திருந்தாலும் அக்கா, அத்தான் வருகை மிகத் தெம்பளித்தது.

அனிக்கா ஏற்கெனவே ஹாலிற்கு அழைத்து வரப் பட்டிருக்க, தானே முன் நின்று அத்தனையையும் கவனித்துக் கொண்டிருந்த ரூபன் தான் அதற்கும் முன்னதாகவே ஹாலிற்குச் சென்று விட்டிருந்தான். ஏதோ ஏற்பாடுகளைக் குறித்துப் பேசிக் கொண்டு ஹாலின் பின் புறம் சென்றிருக்கும் வேளையில் அனிக்காவை ஹாலில் அழைத்து வந்திருக்க அவளை அவன் அப்போது பார்த்திருக்கவில்லை.

அதன் பின்னர் ஒவ்வொன்றாக நிகழ்வுகள் ஆரம்பிக்கத் தீபனும் , ஜீவனும் அவனை அமரச் சொல்லிவிட்டு மீதி பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டனர். சற்று முன்னர்த் தன்னிடம் வந்து தனியாகப் பேச வேண்டுமென்று அழைத்துச் சென்று பேசிய தாமஸ் மாமா சொன்னது குறித்து ரூபன் வெகுவாக அதிர்ந்து போயிருந்தான்.

முதன்முறையாக அவரைத் தாம் மிகக் குறைவாக மதிப்பிட்டு விட்டோமோ என்று எண்ணிக் கொண்டான். தன் மகனுக்கும் தெரியாமல் இத்தனை காரியங்கள் முடித்திருக்கின்றாரா? என வியந்தவன், அவர் சொன்னவிதமே தான் செய்ய வேண்டிய நிகழ்வுகளைத் தன் நிச்சயத்திற்குப் பின்னர்ச் செய்ய எண்ணிக் கொண்டான்.

கேமராமேன் ஹாலிற்கு வர, பின் தொடர்ந்து மாப்பிள்ளை வீட்டினர் வரிசையாகத் தாம்பாளங்களில் பெண்ணுக்கான பட்டுச் சேலை, பூச்சரம், வித விதமான பழங்கள், மேக் அப் சாதனங்கள் என ஒருவர் பின் ஒருவராக நிற்க கேமரா அனைவரையும் நின்று நிறுத்தி அழகாய் உள்வாங்கிற்று. அங்கிருந்த பெண்கள் கூட்டத்தில் குட்டியாக இருந்த போதும் கோட் சூட்டில் ராபின் தன் கையில் தன் சித்திக்காகக் கனம் குறைந்த குட்டி தாம்பாளம் ஒன்றை கைகளிரண்டிலும் ஏந்திக் கொண்டு அம்மா முன்பாக நின்று பெருமையாகச் சுற்றும் முற்றும் பார்ப்பதுவும் , ப்ரீதா வின் சொல்லுக்கேற்ப மெதுவாக முன்செல்லுவதுமாக நின்றான். கூடவே ஹனி பாப்பாவும் அவனோடு நின்றவளாய் அவனைப் போலவே குட்டியான பொருளொன்றை கையில் வைத்திருந்தாள். ஜாக்குலின் மகன் பிரின்ஸ் தன்னைப் பெரியவனாகப் பாவித்தவனாக அந்தப் பெண்கள் குழுவில் சேராமல் தந்தையோடு நின்று கொண்டான்.

ரூபனின் கவனம் அங்கு ஹாலில் இருந்த மற்றவர்களைப் போலவே அழகாய் அணிவகுத்து நிற்கும் அவர்கள் பால் திரும்ப, மனதை அழுத்திக் கொண்டிருந்த சிந்தனைகள் மாறி மகிழ்ச்சியான மன நிலைக்கு மாறினான். மற்ற பிரச்சினைகள் எத்தனை இருந்தாலென்ன? இன்று அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாள். அவன் எத்தனையோ வருடங்களாகக் காத்திருந்தது இதற்காகத் தானே?! தன்னுடைய மனப் போராட்டங்கள், தவிப்பிற்கு இனி வேலையில்லை. அவன் மனம் கவர்ந்தவள் இனி அவனுடையவள். ஏற்கெனவே ஜம்மென்று ஃபார்மலில் அசத்தலாக நின்றவன் முகம் மகிழ்ச்சியிலும் , நிறைவிலும் இன்னுமாக ஒளிர்ந்தது.

அவன் உறவினர்களும், கல்லூரி, தொழில் முறை நண்பர்களும் வருவதும், அவனோடு அளவளாவதுமாக இருந்தனர். ஜீவனோ முற்றிலுமாக விருந்தினர் கவனிப்பில் மூழ்கி போய் விட்டான். தன்னோடு கூட வந்த திவ்யாவை அனிக்காவோடு அனுப்பி வைத்து விட்டு அதன் பின்னர் அவளை மறந்தே போனான்.

தங்கள் சொந்தத்தில் இருக்கும் இளம் வயது பெண்களுடன் கலகலவென்று பேசியதில், தூரத்திலிருந்து அவளைக் கவனித்துக் கொண்டிருந்த திவ்யாவிற்கு ‘லகலகவென்று  காரம் சாப்பிடாமலே கோபத்தில் முகம் செவ்வெனச் சிவந்தது.

சித்திக்கு தான் கொண்டு சென்ற கிஃப்ட் குறித்து அப்பாவிடம் ஒப்பிக்க அவசரமாய் வந்திருந்தான் ராபின், பின்னோடாக ஹனியும் வந்திருந்தாள். அனிக்காவை அலங்கரிக்கும் நேரம் எதற்கு வீணாகச் சின்னப் பிள்ளைகள் என்று பெண்கள் எல்லாச் சின்னவர்களையும் மணப்பெண் அறையினின்று வெளியே அனுப்பி விட்டிருந்தார்கள்.

அவ்வளவு நேரம் ஒருவர் மாற்றி ஒருவர் ரூபனிடம் வந்து பேசிக் கொண்டிருக்க, நின்று நின்று கால்கள் வலித்ததால் சற்று அமர்ந்தான். சற்று நேரத்தில் சின்னவர்கள் இருவரும் அவனருகே வந்து அமர்ந்தனர்.

பெரியவர்கள் போல எல்லாம் தமக்குத் தெரியும் எனும் பாவனையில் இருவரும் ஏதேதோ பேசிக் கொண்டு இருந்தனர்…அப்போது

எங்க அட்டய (அத்தைய), எங்க அட்டய நாங்க இன்னிக்கு கூட்டிட்டு போயிடுவோம்  .என்று ஆரம்பித்தாள் ஹனி.

நோ, நோ, சித்திக்கு காச்ச (காய்ச்சல்) எங்க வீத்துல தான் இருப்பாங்க  என்று அனிக்கா தங்கள் வீட்டில் இருந்ததற்குக் காரணமாகப் பெரியவர்கள் சொன்ன காரணத்தைச் சொன்னவனாகத் தொடர்ந்தான் ராபின்  . இவ்வாறு மாறி மாறி இருவரும் பேசிக்கொள்ள அதனை ரூபன் சுவாரசியமாய்ப் பார்த்திருக்க,

நீங்க சொல்லுங்க சித்தப்பா  …சித்தி நம்ம வீட்டுல தான இருப்பாங்க என ரூபனிடம் ராபின் கேட்க,

இல்ல மாமா அட்டய நாங்க கூட்டிட்டு போய்டுவோம்  அடம் பிடித்தாள் ஹனி.

எங்க அட்ட டான் (தான்) எனக்கு ஸ்டோரி சொல்லும் 

சித்தி கூட நான் கேம்ஸ் விளாடுவேன் … என இருவரும் மோதிக் கொள்ள ஆரம்பித்த்னர். இருவரையும் சமாதானப் படுத்த ரூபன் அவர்கள் இருவரையும் இரு கைகளிலும் ஒரே நேரத்தில் தூக்கிக் கொண்டான், உடனே அந்தக் குட்டிச் செல்லங்கள் இருவரும் தாம் இதுவரை பேசியவை மறந்து ஒருவரை ஒருவர் பார்த்து கிளுக்கி சிரித்தனர்.

சட்டென்று ஹனி ‘அட்ட, அட்ட  என மகிழ்ச்சியாய் ஆரவாரம் செய்ய, அவளும் ராபினும் அவன் கைகளினின்று இறங்கிப் போனதைக் கூட உணராதவனாகத் தன் வீட்டினர் கைவண்ணத்தில் அலங்காரப் பதுமையாய் ஹாலிற்கு வந்து மேடை நோக்கி கூட்டிச் செல்லப் படுபவளைப் பார்த்து உறைந்து நின்றான் ரூபன்.

பச்சையும் தங்க நிற பார்டருமாய்த் தம்பி மூலமாகத் தான் அவளுக்குத் தெரிவு செய்திருந்த பட்டுச் சேலையில், பச்சை சோலையாய், தலை நிறைய மல்லிகைப் பூக்கள் சூடி அவை இரு தோளிலும் வழிய தலை அலங்காரத்தாலோ, வெட்கத்தாலோ தலைக் குனிந்தே வெளியே வர, மை சூடிய அவளது பெரிய கண்களின் தாழ்ந்த இமைகளிலும், மலர்ந்து இருந்த முக வனப்பிலும், கன்னங்களின் முறுவலிலும், மிக அளவாய் வண்ணம் சேர்த்துப் பளபளத்திருந்த மெல்லிய உதடுகளின் அழகிலும் தன்னை மறந்து லயித்திருந்தான்.

தீபன் வந்து அவனை மேடைக்கு அழைத்துச் செல்ல தன்னவளைப் பார்த்த நேரம் முதலான மயக்கம் தீராமலே தன் பக்கத்தில் அமர்ந்திருந்தவளை, பார்த்தும் பாராதது போலே தன் பார்வைகளால் கொள்ளையிட்டான். அனிக்காவிற்கோ அருகிலிருந்தவன் பார்வை ஏற்படுத்திய தயக்கத்தால் அவனை மட்டுமல்லாமல் யாரையுமே ஏறிட்டும் பார்க்கவியலாது வெட்கம் தடைச் செய்தது.

தன்னை அறையினின்று ஸ்டேஜிற்கு அழைத்துச் செல்லுகையில் மட்டும் அவள் அவனைக் கண்ணால் தேடி ஒரு நொடி பார்த்ததோடு சரி. கையில் இரு பிள்ளைகளையும் ஏந்தியவனாய், வழக்கத்திற்கு மாறான முகப் பளபளப்போடு நின்றிருந்தவன். அவனது புன்முறுவலால் சற்றே அடர்ந்த அவன் மீசையும் சிரிக்கின்றது போல அவளை ஈர்த்தது. அவனுக்கு வெள்ளைச் சட்டை அவ்வளவாய் அழகாகப் பொருந்தியிருக்க அவனுடைய திண்ணிய மார்பும் , கம்பீரமும் அவளைக் கட்டிப் போட அப்போது அவனை விட்டு சட்டென்று கண்களை அகற்ற அவளால் முடியவில்லை. பக்கத்தில் இருந்த ஜாக்குலின் அண்ணி அவளைப் பார்த்து க்கும்  எனக் கிண்டலாய் தொண்டையைச் செருமி சிரிக்கவும், வெட்கியவளாகத் தன் கண்களைத் தாழ்த்திக் கொண்டாள்.

மேடையில் அமர்ந்திருக்கும் தருணம் தன்னருகில் இருப்பவன் பார்வை அவளை நிமிரவே விடவில்லை. மோதிரம் மாற்றும் தருணம் இருவரும் எதிர் எதிராக நிற்க வைக்கப்பட்டனர். அவள் கையைப் பற்றியவன் கையின் வெப்பம் அவள் உள்ளங்கையைத் தகிக்கச் செய்ய, சட்டென்று மோதிரத்தை அணிவிக்காமல் அவளைப் பார்த்தவாறு நின்றான். அவன் செய்கையைப் பார்த்த அருகில் நின்ற குடும்பத்தினர் மௌனமாக ஒருவரை ஒருவர் பார்த்து முறுவலித்தனர். அவன் செயலில் தீபனும், ஜீவனும் சற்று நகைக்க ஆரம்பிக்கக் கிறிஸ்ஸின் முகத்திலும் அனைவரின் செயலின் பிரதிபலிப்பாகச் சற்றாய் புன்முறுவல் மலர்ந்தது.

தன் கையைப் பற்றிக் கொண்ட ரூபன் இன்னும் ஏன் தனக்கு மோதிரம் அணிவிக்கவில்லை? என்றெண்ணியவளாகத் தயங்கிக் கொண்டே தன் முகத்தை நிமிர்த்தியவளைக் கண்டு தன் ஆகர்ஷிக்கும் புன்னகையைப் பரவ விட்டு மோதிரத்தை அணிவித்தான் ரூபன். அவன் புன்னகையினின்று கண்ணை அகற்ற முடியாதவளாக அவளும் மந்திரத்தில் கட்டுண்டவள் போல அவனுக்கு மோதிரம் அணிவிக்க அனைவரின் மகிழ்ச்சியும் கரகோஷமாக ஒலித்தது. திருமணத்திற்கான நாளை அங்கேயே இரு வீட்டாரும் பேசி முடிவு செய்யச் சில பல சம்பிரதாயங்கள் செவ்வனே நிகழ்ந்தன.

அந்த இனிய மாலையில் ஒருபக்கம் விருந்து ஆரம்பித்திருக்க, அவர்களுக்கு வாழ்த்துச் சொல்ல ஒருவரொருவராக மேடைக்கு வந்தனர். தொலை தூரம் இருந்தாலும் ராஜ் மகன்களின் ஏற்பாட்டில் நேரடியான ஒளிபரப்பில் அங்கு நிகழ்வன அனைத்தும் கண்டு கொண்டிருந்தார்.

நிகழ்வுகள் அனைத்தும் நிறைவு பெற்றது, விருந்துணவும் சிறப்புற அமைந்திருந்தது. விருந்தினர்கள் அனைவரும் விடைப் பெற்றுச் செல்லவும், அப்போது அனிக்காவை வீட்டிற்கு அழைத்துச் செல்ல தயாரானார்கள். ரூபனுக்கு அவளைப் பிரிவது சொல்ல முடியாத அளவிற்குத் துயரமாகத் தோன்றியது. திருமணத்திற்கு இன்னும் மூன்று மாதங்கள் இருக்கின்றனவே? எனப் பெருமூச்செழுந்தது.

மறுபடியும் அவளைப் பார்க்க கிடைக்காத அந்த வெறுமையான நாட்களா? கேள்வி கேட்ட உள்ளத்தின் வருத்தங்களை அப்படியே வெளிக்காட்டாமல் அடக்கினான். அதில் தான் அவன் தேர்ச்சி பெற்றவனாயிற்றே? அத்தானின் கிண்டல்களுக்குப் பதில் கொடுத்துக் கொண்டிருக்க, தம்பியை சீண்டும் கணவனை அதட்டி விட்டு ஜாக்குலின் தம்பியின் முகமாற்றம் குறித்து விசாரித்துச் சென்றாள். எப்படித்தான் அக்காவிற்கு எல்லாம் புரிகின்றதோ? திருமணமாகி இவ்வளவு வருடங்களானாலும் தன் மேல் அவள் கொண்டுள்ள தனிப்பட்ட கவனம் குறித்து நெகிழ்ந்தான்.

இரவும் வந்தது, வெகு நாளைக்குப் பின்னர் ரூபன் தன்னுடைய அறைக்குத் தூங்கச் செல்லுகின்றான். நிச்சயதார்த்தம் நடைப் பெற்ற ஹாலிலிருந்தே ரூபனை கவனித்துக் கொண்டிருந்த ஜீவன் ,

 இன்னிக்கு மட்டும் நான் உன் கூடப் படுக்க வர்றதா இல்லை, என்னோட கற்பை நான் காப்பாத்திக்கிறேன்  என்று அண்ணனை கிண்டலடித்தவனாக அவன் முறைப்பை பொருட்படுத்தாமல் அம்மா , அக்காவோடு கதை பேச தனது அறைக்குள் சென்று விட்டான்.

பிரின்ஸிம் தன் அப்பாவோடு ஹாலில் சோஃபா கம் பெட்டை விரித்துத் தூங்கி விடவே தன்னந்தனியனாகத் தன் அறைக்குச் செல்லவே ரூபனுக்கு வெறுப்பாக இருந்தது. யாராவது கூடவே இருந்தாலாவது நன்றாக இருக்கும் என்றெண்ணியவனுக்கு அவனது அறை அவனது அறை போலல்லாமல் அனிக்காவின் அறை போலவே தோன்றலாயிற்று.

எங்குப் பார்த்தாலும் அவள் பிம்பம். மோதிரம் மாற்றுகையில் அவள் தன்னைப் பார்த்த பாவம், அந்தக் கண்களில் இருந்த நேசம், தனக்கேயான அவள் வெட்கம் ஒவ்வொன்றாக அவன் மனதில் நிழலாடியது. என்னவள் தான் எவ்வளவு அழகு? எண்ணியவன் நெஞ்சம் பெருமூச்சால் ஒரு முறை விம்மி தணிந்தது. இப்போதே அவளுடன் பேச வேண்டுமென மனம் விழைந்தது.

எத்தனை நாட்கள் வலிய பேச வந்திருப்பாள்? அப்போதெல்லாம் பாராமுகமாய் இருந்து விட்டு இப்போதென்னவாம்? நேரமறியாமல் மனம் அவனைக் குத்திக் காட்டியது

இதுவரை தன் போக்கில் அவள் வீட்டினரை ஆட்டி வைத்த ஆண் எனும் ஆணவம் சற்றே தலை தூக்க, அவளது வீட்டிற்குப் போய் இப்போதே அழைத்து வந்து விடலாமா? என்று ஆர்பரித்த தன் எண்ணங்களைப் பிரயத்தனப்பட்டுத் தட்டி அடக்கினான்.

இந்தச் சினிமாவில் காட்டுவது போலப் பின்பக்கமாகச் சுவரேறி அவளறையில் குதிக்கலாமா? சாத்தானாய் மனம் ஆலோசிக்க, அவன் மனதோ ‘அடச் சீ இப்போது நீ வாசல் வழியாகவே போகலாம். எதற்கு இப்படிச் சில்லறை ஐடியாவெல்லாம்?’ எனத் தலையிலடித்துக் கொண்டது. அதன் பின்னர் அவன் உள்ளத்துச் சாத்தான் சென்றவிடம் தெரியவில்லை.

நாளைக்குத் தொழிற்சாலையில் தனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன, அதற்காகச் சீக்கிரம் தூங்க வேண்டும் எனத் தன்னைக் கடிந்து கொண்டான். ஆனால், அதற்குப் பலனேதும் தான் இல்லை. அரை மணி நேரம் ஒரு மணி நேரமாகி விடப் படுக்கையில் உருண்டு புரண்டும், களைப்பாக இருந்த போதும், உடல் ஓய்விற்குக் கெஞ்சிய போதும், கண்கள் களைப்பில் எரிந்த போதும் அவனுக்குத் தூக்கம் வரவேயில்லை.

தான் தன் கட்டுப்பாட்டில் இல்லாத நிலை அவனுக்கு மிகுதியாக எரிச்சலை வரவழைக்க, அவனுக்கு எழுந்த கோபத்தில் கைக்கு அகப்பட்ட ஒவ்வொன்றாக வீசி எறிய எண்ணியவனாகத் தலையணையை எடுத்து எறியப் போக அதன் கீழே படபடத்தது அந்த மடிக்கப் பட்ட பிங்க் நிற அழகிய பூக்கள் இறைந்துக் கிடந்த தாள் ஒன்று.

அத்தான் எனும் வார்த்தைக்கு அருகில் பெரியதாக ஸ்மைலி ஒன்று அவனைப் பார்த்துப் புன்னகைக்கத் தாகத்தில் தவித்தவனுக்குச் சுனை ஒன்று காணக் கிடைத்தது போலப் புதையலாக எண்ணி அதைக் கைப்பற்றினான்.

மறுபடியும், மறுபடியும் அதை வாசித்தவன் ஒவ்வொரு முறையும் கணக்கற்ற முத்தங்களை அக்கடிதத்திற்குப் பரிசளிக்க, கண்கள் தூக்க மயக்கத்தில் சொக்கும் வரை அதைப் படித்தவன் தன் இதயத்திற்கு நெருக்கமாக அதை வைத்தவனாக, அணைத்துக் கொண்டு நிம்மதியாகத் தூங்கினான்.

அவளது கடிதம்

அவளது பிரதி பிம்பமாய்

கடிதத்தின்

வார்த்தை ஒன்றிலும்

அவளது அன்பு

கடிதத்தில் எனை அழைக்கும்

விளிப்பில் தெரிக்கும் – அவள்

நேசத்தின் வாசம்

தாகத்தில் தவித்தேன்

அவளுரு காண

பேசவே துடித்தேன்

அவள் குரல் கேட்க

தவித்தே இருந்தேன் – அவள்

மதி முகம் பார்த்து

ஆயிரம் முத்தங்கள் பதிக்க

அவளது கடிதம்

அவளது பிரதி பிம்பமாய்க் காணவும்

ஆறுதல் அடைந்தேன்.

அவள் வார்த்தை ஒவ்வொன்றிலும்

அமைதியும் கொண்டேன்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here