33. அமிழ்தினும் இனியவள் அவள்

0
508
Amizhthinum Iniyaval Aval

அத்தியாயம் 33

ரூபனுக்கு அன்றைய காலை மிகப் புத்துணர்வூட்டும் விதமாக அமைந்து இருந்தது. அனிக்கா எழுதியிருந்த கடிதத்தைத் தன் பையில் பத்திரமாய்த் வைத்துக் கொண்டிருந்தான். ஏற்கெனவே அவன் அக்கடிதத்தைப் பலமுறைகள் படித்தாகி விட்டது. ஆனாலும் கூடக் கையில் அகப்பட்ட பொக்கிஷத்தைப் போல அக்கடிதம் குறித்துப் பரவசமாய் உணர்ந்தான்.

காலை எழுந்ததும் வழக்கமாகச் செய்யும் தன்னுடைய உடற்பயிற்சிகளைக் கூட மறந்துவிட்டு அனிக்காவைப் பார்க்கச் செல்லட்டுமா? என அவன் மனம் கிடந்து அடித்துக் கொண்டிருந்தது. ஆனால், அதிகாலை 5 மணிக்கு சாரா அத்தை வீட்டிற்குச் சென்று எழுப்பப் போனால் என்னவாகும்?

சும்மாவே இந்த அமைதியான பையனா அனிக்கா விஷயத்தில் நம் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டியது? என்று இவனைக் குறித்து மிக நல்ல(!) உருவகம் பதிந்து போயிருக்க, அவள் வீட்டிலுள்ள எல்லோரும் ரூபன் இப்போது எதற்காக வந்திருக்கிறானோ? என்று அடித்துப் புரண்டு ஓடி வருவதற்காகவா?

அவனே ஆசைப்பட்டாலும் காலையிலேயே அவளைப் பார்க்க செல்லவியலாதபடிக்கு அவன் தொழிற்சாலையில் முன் தினம் தன்னுடைய நிச்சயத்திற்காகப் பாதி நாள் விடுப்புக் கொடுத்ததனால் தேங்கிய வேலைகளையும் இன்று முடித்தாக வேண்டி இருந்தது. வேலைகளைப் பட்டியலிட்டவனுக்கு இன்று தன் வேலைகளை முடித்து அவளைச் சந்திக்கச் செல்வதானால் இரவாகிவிடும் என்று புரிந்தது. தன்னுடைய சூழ்நிலை எண்ணி ஏக்கத்தில் தன்னையறியாமல் பெருமூச்செழுந்தது.

தொழிற்சாலை:

அப்போது மதியம் சாப்பாட்டு வேளை கடந்து வெகு நேரமாகியிருந்தது. ஜீவன் பசியில் வேகவேகமாகப் தொழிற்சாலை பகுதி கடந்து, ஆபீஸிற்கான கதவை திறந்து உள்ளே வந்தான். அங்குச் சில நாட்களாக வழக்கமாகக் காணக் கிடைத்த திவ்யாவின் முகம் அவள் லீவில் இருந்ததால் இன்று மிஸ்ஸிங். அதனால் அவனுக்கும் கூட உள்ளுக்குள் ஏதோ ஒன்று மிஸ் ஆனதான உணர்வு. ‘டெமோன் டெமோன்னு  தன்னைத் தானே சொல்லிட்டு இருந்தவள் நினைவில் நின்றவன் என்னையும் ‘காதல் டெமோன்  ஆக்கிடுவா போலிருக்கு தனக்குள் எண்ணியவனாகத் தலையை லேசாக உதறி, தன்னைக் கவனித்துக் கொண்டிருக்கும் மற்ற ஸ்டாப்களைக் கவனியாதவன் போலக் காட்டியபடி சம நிலைக்கு வந்தான்.

கேபினுக்குள் நுழைந்தவன் பசியின் அவசரத்தில் டிபன் பாக்ஸ்களைத் திறந்து தனக்குத்தானே பரிமாறிக் கொண்டான்.வெளியில் வேலையாகச் சென்றிருந்த ரூபனைக் காணவில்லையே? என யோசித்தவனாய் அவனுக்கு டயல் செய்தவன் மொபைலை ஸ்பீக்கரில் போட்டவாறு .ஸ்பூன் உதவியால் சாப்பிடத்தொடங்கினான்.

அலைபேசியோ ரிங் சென்று கொண்டிருந்ததே தவிர, ரூபனால் எடுக்கப் படவில்லை. தொடர்ந்து ரிங்க் சென்று தானாகவே துண்டித்து விடவும் அதைக் கண்டு கொள்ளாமல் அவன் தன் சாப்பாட்டில் மூழ்கி இருந்தான். சாப்பிட்டு முடித்து டிபன்களை அடுக்கிக் கொண்டிருக்கும் தருணம் போன் வரவும் ஸ்பீக்கரிலேயே அட்டென்ட் செய்தான்.

டேய் ஜீவா 

யாரென்றே பெயர் பாராமல் அழைப்பை ஏற்றிருக்க அனிக்காவின் குரல் கேட்டு முகம் மலர்ந்தான். உடனே போலி பவ்யத்துடன் 

சொல்லுங்க அண்ணியாரே என்றான் … அவன் குரலில் குறும்பு ததும்பி வழிந்தது,.

டேய் மரியாதையா பேர் சொல்லி கூப்பிடு …. முதல்ல போனை கையில எடு இதென்ன ஸ்பீக்கர்ல போட்டிருக்க? …

கண்டு பிடிச்சிட்டியா என் சயின்டிஸ்டு  சாப்பிடுற நேரத்தில போன் போட்டா அப்படித்தான். இங்க கேபின்ல நான் மட்டும்தான் இருக்கேன்  உங்க வீட்டுக்காரர் இல்லை, நீ சும்மா ஸ்பீக்கர்லயே பேசு 

உனக்கு ரொம்பக் கொழுப்பு கூடிப் போச்சு…முன்னைக்கு இப்ப இன்னும் ரொம்பவே வாய் பேசற  பொறு பொறு உனக்கு நல்லதா பனிஷ்மென்ட் யோசிச்சு வைக்கிறேன்.

யோசி யோசி சரி என்ன திடீர்னு பெரியவங்க நீங்கல்லாம் இந்த எளியவனுக்குப் போன் போட்டிருக்கீங்க  இந்த அடியேனை இன்று அழைத்ததன் காரணம் என்னவோ? நக்கலாகப் பேசினாலும் அதில் அனிக்கா தன்னுடைய பிரச்சினைகளின் போது தன்னைத் தொடர்பு கொள்ளாத கோபம் இருந்தது.

அனிக்கா நண்பனின் கோபத்தில் சில நிமிடம் தயங்கினாலும் தொடர்ந்தாள்.

ஹேய் நேத்திக்கு நிச்சய விழாவில எடுத்த புகைப்படங்கள் எல்லாம் அண்ணாவோட கேமரால பார்த்துட்டு இருந்தேனா அதில ஒரு கெமிஸ்ட்ரி பார்க்க கிடைச்சது 

கெமிஸ்ட்ரியா? அது உனக்குப் பிடிக்காத பாடமாச்சே அதெல்லாம் உனக்கெப்படி?….எனச் சொல்லிக் கொண்டிருந்தவன் அனிக்கா எதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறாள் எனக் கொஞ்சம் புரிபடவும் சட்டெனப் பேச்சை நிறுத்தினான்.

ஹேய் பிராடு … திவ்யாக்கும் உனக்கும் இடையில என்ன ஓடிட்டு இருக்கு? சீக்கிரம் சொல்லு பார்ப்போம்.

சுத்தமாக அவள் கூற்றை மறுத்த ஜீவன். அதெல்லாம் ஒண்னுமில்ல  நீயா இப்படில்லாம் பேசி உன் பிரண்ட் பேரைக் கெடுத்து வைக்காத.

ஹேய் சும்மா சொல்லாத?…எனக்கு தெரியும் இது ஒன் சைட் இல்ல டூ சைட் லவ் தானே  என அவள் சீண்டிக் கொண்டிருக்கவும் அதே நேரம் வெளியிலிருந்து வந்த ரூபன் கேபின் கதவை திறக்கவும் அனிக்காவின் குரல் கேட்டு இன்ப அதிர்ச்சியில் மிதந்தான்.

போன் ஸ்பீக்கரிலேயே இருக்கட்டும் என்று தம்பியிடம் சைகையில் ரூபன் சொல்ல, ஜீவனும்  தன்னிடம் வலிய வந்து,

 இதோ என் கழுத்து, இஷ்டம் போல வெட்டிக்கோ 

என்று நிற்கும் ஆட்டை பலி குடுக்காமல் விட முடியுமா? என எண்ணியவனாய் விஷமமாய்ச் சிரித்தான்.

தம்பியின் விஷம சிரிப்பை புரிந்துக் கொள்ளாதவன் தனக்கு உணவை பரிமாறியவாறே அனிக்காவின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

தன்னையும் திவ்யாவையும் குறித்துக் கேட்டுக் கொண்டிருந்த அவள் கேள்விகளை வெற்றிகரமாகப் திசை திருப்பிய ஜீவன்… முன் தினத்தின் நிச்சயதார்த்த நிகழ்வில் வந்து நின்றான்.

உனக்கு ஒரு விஷயம் தெரியுமா அனி நேத்து என் அண்ணனுக்கு என்கேஜ்மென்ட்  சும்மாவே என் அண்ணா ரொம்ப ஹேன்ட்சம் இதில நேத்திக்கு என் அண்ணா என்னா சார்மிங்கா இருந்தான் தெரியுமா?

காரணம் இல்லாம இவன் இப்படிப் பேசமாட்டானே? தம்பியின் முகத்தில் சந்தேகமாய் ரூபனின் கண்கள் பதிந்தன.

ஹாலில நிறையப் பொண்ணுங்க என் அண்ணனைப் பார்த்து விட்ட பெருமூச்சில ஏசி காத்துக் கூடச் சூடாகிடுச்சு  ஆனா என்ன செய்யிறது? எங்க அண்ணணுக்கு நிச்சயம் ஆன பொண்ணுதான் அங்கே இருந்ததிலேயே ரொம்பச் சுமார்.

அடப்பாவி என்னதிது இவன் என் வாழ்க்கையில விளக்கேத்தா விட்டாலும்ம் பரவாயில்லை. கொள்ளி கம்பை வைச்சிடுவான் போலவே ரூபன் திகைக்க ஜீவன் தன் பேச்சை நிறுத்தவே இல்லை.

எங்க சாய்ஸா இருந்தா நல்லா அழகா பொண்ணைப் பார்த்திருப்போம்,… என்ன செய்ய எல்லாம் அவனே தேடிக்கிட்டது…என இழுத்து முடித்தவன் வராத பெருமூச்சை இழுத்து விட்டான்.

எப்படில்லாம் பேசறான் இவன்! … ரூபன் திறந்தவாய் மூடாமல் உறைந்தான்.

இங்கப்பாரு நான் உன்னைப் பத்தி மட்டும் தான் பேசறதுக்குப் போன் பண்ணேன் நீ உங்க அண்ணனைப் பத்தி பேசிட்டிருக்கிறதா இருந்தா போனை வைக்கிறேன் போ  அவளின் குரலில் இருந்த ஆதங்கத்தை ஜீவன் உணர்ந்தானோ இல்லையோ ரூபனுக்கு உள்ளூர ஏதோ செய்தது.

போ போ உன் அண்ணனுக்கு வேற பொண்ணப் போய்ப் பார்த்துக்கோ  பெரிய அண்ணன்  பொருமினாள்.

ஏ என்ன எங்க அண்ணனைப் பத்தி கொறைச்சு சொல்லிட்டு இருக்க நீ  

உனக்கென்ன தெரியும்? எனக்குத் தான் கஷ்டமாயிருக்கு. நான் நம்ம வீட்டில அங்கே இருக்கப்போ தினம் அத்தான்ட பேசறதுக்குப் போவேன் என் கிட்ட பேசவே மாட்டாங்க  சரி பரவால்லன்னு நேத்து  எனச் சொல்லி பேச்சை மாற்றிய விதத்தில் அந்தக் கடிதம் குறித்துச் சொல்ல வந்து திணறுகிறாள் என்று ரூபனுக்குப் புரிந்தது.

நேத்து? … எடுத்துக் கொடுத்தான் ஜீவன்.

இல்ல நேத்து நான் வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் போனாவது பண்ணுவாங்கன்னு நினைச்சேன் அதுவும் செய்யலை. அவங்களுக்குப் பனிஷ்மென்ட் நான் ஏற்கெனவே யோசிச்சு வச்சிருக்கேன். விடமாட்டேன் என்றவள் குரல் பரிதாபத்திலிருந்து வில்லி டோனுக்கு மாறியிருந்தது.

அதுவரை அவளின் பேச்சைக் கேட்டு ரொம்பவே நோகடித்து விட்டோமோ என்றெண்ணிக் கொண்டிருந்த ரூபனின் முகம் அவள் பனிஷ்மென்ட் எனவும் தானாகவே மலர்ந்தது.

பனிஷ்மென்ட் என்னன்னு சொல்லு நான் அண்ணனுக்குச் சொல்ல மாட்டேன். ரூபனைப் பார்த்து கண்ணடித்தவனாக ஜீவன் அனிக்காவிடம் கேட்க

அதெல்லாம் சொல்ல முடியாது என்றவளை பேசி பேசிக் கரைத்தான், அவளும் ஒருவழியாகச் சொன்னாள்.

கல்யாணத்தன்னிக்கு சர்ச்ல பாதர் … உனக்கு இந்தத் திருமணத்துக்குச் சம்மதமான்னு? கேப்பார்ல 

ம்ம்  ஆமாம் என ஜீவன் சுவாரஸ்யமாகக் கேட்க ,

ரூபனோ இவள் ஏதோ பெரிய ஆப்பாக வைக்க யோசித்திருக்கிறாள் எனக் கதிகலங்கினான்.

அப்படிக் கேட்கும் போது நான் “இல்லை ஃபாதர், இந்த ஆளோட திருமணம் செய்யிறதுக்கு நான் சம்மதிக்கலை நோ” ன்னு சொல்லிடுவேன்  . எப்பூடி ……… என்றாள் வில்லியாக

ஜீவன் பெரிய குரலெடுத்து சிரிக்க ஆரம்பித்து இருந்தான்.

அப்புறம் அத்தான் என் கிட்ட ரொம்ப ரிக்வெஸ்ட் பண்ணுவாங்களா? ரொம்பப் பிகு பண்ணிட்டு சரின்னு சொல்லுவேன். சூப்பர் ஐடியால்ல?…

சிலாகித்தவளும் அவனோடு சேர்ந்து சிரித்தாள். அவர்கள் போனில் பேசி முடியவும்,

ஏற்கெனவே சாப்பிட்டு முடித்திருந்த ரூபன் அவசரமாய் ஜீவனிடம் ஒரு சில வேலைகளை ஒப்படைத்து விட்டு எங்கோ செல்வது போலப் புறப்பட்டுச் சென்றான்.

நீ எங்கப் போறன்னு எனக்குத் தெரியுமே? என்று எண்ணியவாறே அவனைப் பார்த்திருந்தான் ஜீவன்.

காரில் ஏறி அமர்ந்தவனுக்கு மறுபடியும் வாசிக்கத் தோன்றவும் எத்தனையாவது முறையாகவோ தன் பையிலிருந்த கடிதத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்திருந்தான்.

சாரி அத்தான்  இப்படித்தான் ஆரம்பித்திருந்தது அந்தக் கடிதம்.

நான் செஞ்சது எல்லாமே தப்புத்தான். அதுக்காக நீங்க என் கிட்ட பேசாம இருக்கிறது எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு.

அன்னிக்கு நீங்க பீச்ல கேட்டவுடனே எனக்கு உடனே பதில் சொல்ல வரலை ரொம்ப மிரண்டுட்டேன். அப்புறமா கூட நீங்க என்னைப் பார்க்கும் போதெல்லாம் என் கிட்ட பதில் எதிர்பார்க்கிறது புரியும் ஆனா எதுவும் சொல்லத்தான் எனக்குத் தைரியம் வரலை.

ஒரு தடவை அண்ணி உங்களுக்கு என்னைப் பெண் கேட்கிறதா சொன்னப்போ முதலில் என் கிட்ட கேட்காம எப்படிப் பெண் கேட்கிற அளவுக்கு வரலாம்னு உங்கள் மேல ஒரு பக்கம் கோபமா இருந்தாலும் கூட, நாமளும் இப்படி அவங்களை வீட்டுக்கு வந்து பேச சொல்லுறதா தானே இருந்தோம்னு நினைச்சு சந்தோஷமாவும் இருந்துச்சு.

நம்ம ரெண்டு பேரும் எப்பவுமே மனம் விட்டுப் பேசியிருக்காவிட்டாலும் நீங்க அடிக்கடி உங்களுக்கு நான் எவ்வளவு முக்கியம்னு உணர்த்திட்டே இருப்பீங்க அது எனக்கு நல்லாவே புரியும்.

ஆனால், நீங்க எனக்கு எவ்வளவு முக்கியம்னு ஒரு நான் ஒருபோதும் உணர்ந்திருக்கவேயில்லைனு நினைக்கிறேன்.

அதனால தான் உங்களைத் திருமணம் செஞ்சுகிட்டா எப்பவுமே திருமணத்துக்குப் பிறகு அம்மாவை அடிக்கடி சந்திக்கிற மாதிரி பக்கத்தில வீடுன்னு ஒரு காரணம். எனக்கு ரொம்பப் பிடிச்சவங்க எல்லோர் கூடயும் அதான் அத்தை, ஜீவன், தீபன் அத்தான் கூடயும் இருக்கக் கிடைக்குமே அப்படி ஒரு காரணம் இப்படில்லாம் தான் நான் எனக்கே காரணம் கற்பிச்சிட்டு இருந்தேன். இதெல்லாம் விக்ரம்னு ஒருத்தரை அப்பா எனக்குப் பார்த்திருக்கார்னு சொல்லியிருந்த வரைக்கும் தான்.

அதுக்கப்புறமாதான் எனக்கே என் மனசு புரிஞ்சது. உங்களுக்குன்னு நான் என் மனசில கொடுத்திருக்கிற இடமும் புரிஞ்சது. அதை வேற யாருக்கும் கொடுக்கவே முடியாது என்கிற உண்மையும் கூட.

கடைசில அவசர அவசரமா நான் முடிவெடுக்கப் போக நான் செஞ்ச தப்புக்கெல்லாம் நீங்க நிறையக் கஷ்டப்பட வேண்டியதாயிடுச்சு. எல்லாம் என்னால தான். உங்களுக்கு என் மேல ரொம்பக் கோபமிருக்குன்னு புரியுது அத்தான். நீங்க என்னைத் திட்டினாலும் பரவாயில்லை. ஆனால் ப்ளீஸ் என் கிட்ட பேசுங்க எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு.

ப்ளீஸ்.

கடிதத்தை வாசித்தவன் நிகழ்ந்த எல்லாவற்றையும் தன்னுடைய தவறாக உருவகப்படுத்திக் கொண்டு இருக்கின்றவளை இவள் எனக்கும் மேல் இருக்கிறாளே என்று மனதிற்குள்ளாகச் செல்லமாகத் திட்டிக் கொண்டான். போன் பேசுவதானால் இரவே பேசியிருப்பான். ஆனால், அவளே குறிப்பிட்ட மாதிரி இதுவரை இருவரும் மனம் விட்டு பேசியதே கிடையாது.

முன்பு என்னவென்றால் அவளுக்கே தெரியாமல் அவளுக்குத் தாலியைக் கட்டி தன் வீட்டிற்குக் கூட்டி வந்தவனுக்குத் தன்னுடைய எந்தவித செயலாலும் தன் வீட்டினராகவே இருந்தாலும், யாரும் அவளைத் தரக்குறைவாகப் பேசி விடக் கூடாது என்பதனால் அப்போது அவளுடன் பேச மிகத் தயக்கமாக இருந்தது. நிச்சயம் ஆன பின்னால் இருவரும் பேசும் போது யாரும் எதுவும் சொல்ல இயலாது என்பதால் அந்நாளுக்காகக் காத்திருந்தான்.

இப்போது முன்னிரவு அவள் கடிதம் படித்த பின்னால் அவளை எப்போது பார்ப்போமோ? என்று இருந்தாலும் தன் வேலை முடிந்து சாயும்காலம் அவளைச் சந்தித்துப் பேச எண்ணியிருந்தான். ஆனால், ஜீவனுடனான் அவள் பேச்சைக் கேட்டபின்னால் அவனால் அப்படி இருக்க முடியவில்லை. ஏதோ சிரிப்பு விளையாட்டு என்று அவள் தன்னைக் காட்டிக் கொண்டாலும் அவளுக்கு உள்ளுக்குள்ளே ஏகத்திற்கு ஆதங்கம் இருக்கின்றது என்று உணர்ந்ததால் உடனே அவளைச் சந்திக்க விரைந்தான்.

வெகு நாளைக்கு அப்புறமாக ரூபன் அனிக்காவின் வீட்டிற்கு வந்திருந்தான். முன்னறையிலேயே அத்தையைக் காணவும் அமர்ந்துப் பேசிக் கொண்டிருந்தான். ஆனால், அவன் கண்களின் அலைபாய்தலோ நிற்கவில்லை. சாராவும் அவன் பொறுமையை அதிகம் சோதிக்காமல் ,

 அனிம்மா இப்போதான் அவ ரூமுக்கு போனா  என்று பாதித் தகவலும் பாதி அனுமதியுமாய்ப் பதிலிருக்க, ரூபன் மாடிப்படிகள் ஏறத் தொடங்கினான். சாரா மருமகன் கையிலிருந்த அந்தப் பெரிய பையைக் கவனிக்கத் தவறவில்லை.

அவளறையின் வாசல் அருகே சென்றவன் முதலில் அவளை அழைக்கவா? என்றெண்ணி தாமதிக்க உள்ளேயோ அவள் யாருடனோ பேசிக் கொண்டிருக்கும் குரல் கேட்டது. போனில் பேசுகிறாளாக இருக்கும் என்றெண்ணினான். தனது சத்தத்தால் அவளுக்குத் தொந்தரவு ஏற்பட்டு விடும் என அவளை அழைக்காமலேயே அறையினுள்ளே நுழைந்தான்.

அந்த அறை அவன் அறையை விடவும் சற்று விசாலமான அறைதான், திருமணத்திற்குப் பிறகு அவளுக்கு ஏற்ற மாதிரி தன் அறையில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று அங்கு நின்றவாறே, சில நொடிகளில் கண்ணால் அளவிட்டான்.

நாளைக்கு நான் உன்னை மாதிரி சேம் கலர் ஸாரி தான் கட்டுறதுக்கு எடுத்து வச்சிருக்கேன். காலைல மட்டும் மேட்சிங்கா வச்சுக்கிறதுக்கு ஒரே ஒரு பூ பறிச்சுக்கட்டுமா?

கைகளில் போன் இல்லை ஜன்னலின் அந்தப் பக்கம் யாரோடு பேசிக் கொண்டிருக்கிறாளெனக் கவனித்து அவளை நெருங்கினான். அவள் வழக்கமான உடையில் இல்லை. வீட்டிற்கு உடுக்கும் வகையிலான அதிகக் கனமில்லாத சேலையொன்றை அணிந்திருந்தாள். அதன் இளஞ்சிவப்பு நிறம் அவளது உருவத்தை ரம்யமாய்க் காட்டி இன்னுமதிகமாய் அவனை ஈர்த்தது.

குழந்தையிடம் கொஞ்சிக் கொண்டு இருப்பது போலத் தன்னுடைய ரோஜாச் செடியிடம் பேசி, அடுத்த நாளைக்காகப் பூ ஒன்றை கேட்டுக் கொண்டிருந்தவள் மீது அவனுக்கு அளவில்லாமல் ஆசை கூடியது. இவன் பின்புறம் வந்து நிற்பதை அவள் இன்னும் உணரவில்லை. ரூபன் அளவிற்கு அனிக்காவிற்கு உள்ளுணர்வுகள் சமிக்ஜை கொடுப்பதில்லையோ? என்னவோ?

அனிக்காவின் இடது கை ஜன்னல் திட்டில் பதிந்திருக்க அவள் விரலில் அவன் முன் தினம் அணிவித்திருந்த அழகான அந்த நிச்சயதார்த்த மோதிரத்தில் ஒற்றை வைரம் ஒய்யாரமாய் அமர்ந்து கண்ணைப் பறித்ததோடு நில்லாமல் அவளுக்கும் அவனுக்குமான உறவை கட்டியம் கூற ரூபன் அக்கரத்தை பின் நின்றவனாகப் பற்றினான். முழுக் கையுமே அவன் வசத்திலிருக்கத் தனக்குப் பிடித்தது அந்த மோதிரம் தரித்த விரல் மட்டுமே என்பது போல மற்றெல்லா விரல்களும் கோபிக்கும் விதமாக அவள் விரலை ஆசையாய் வருடியவாறு

 எதுக்கு இந்த ரோஜாச் செடியை பயமுறுத்திட்டு இருக்க, உனக்கு எந்தக் கலர் ரோஸ் வேணும்னு சொல்லு நான் வாங்கிட்டு வரேன்.” என்றான்.

அனிக்கா அவன் வருகையை எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் அருகாமையும், தொடுகையும் அவளுக்கு வெகுவாகப் படப் படப்பு ஏற்படுத்தியிருக்க என்ன செய்வதென்று திகைத்தவள், சட்டென்று திரும்பி அவனைத் தன்னோடு அணைத்துக் கொண்டாள்.

ரூபன் கரங்களும் அவளைத் தன்னோடு சேர்த்து இறுக்கிக் கொண்டன. தற்போது எல்லாம் சுபமே என்றபோதும் மனதிற்குள் இருந்த தவிப்பு வெளிப்பட்டதோ என்னவோ? யாரும் எங்களைப் பிரித்து விடாதீர்களேன்? என்பது போன்ற உணர்வில் இருவரும் இருந்தனர். தனக்குள்ளே புதைந்துக் கொண்டிருப்பவளின் முகம் காணவியலாது அவள் உச்சியில் தன் முதல் முத்தம் பதித்தான் ரூபன், அனிக்காவிற்கு அந்த முத்தம் தலை முதல் கால் வரை தித்திப்பாக உள்ளூரப் பாய்ந்தது.

அந்நேரம் தன்னை அணைத்துக் கொண்டு இருப்பவளைக் குறித்து மகிழ முடியாமல் தங்களது முதல் அணைப்பும், அதைத் தொடர்ந்து நிகழ்ந்த அத்தனையும் நினைவிற்கு வந்து நெருட 

 ஸாரிடா உன்னையை அன்னிக்கு அடிச்சிட்டேன்  என்று புலம்பலானான்.

அவனின் வார்த்தைகளைச் செவி மடுக்கும் போதே, தன் தலை மேல் சொட்டு சொட்டாக விழுவது என்ன? அனிக்கா திகைத்து நிமிர்ந்தாள். அவள் தலையிலிருந்து காதோரமாய் வழிந்திருந்தது அவனது கண்ணீர் துளி , அவள் துடித்துப் போயிருந்தாள். அவன் முகத்தை ஏந்திக் கொண்டாள் இப்போதோ அவள் கண்களிலும் கார்காலம்.

இருவரின் மன அழுத்தங்களும் கண்ணின் நீராய் வெளியேற, இருவருமே ஒருவரை ஒருவர் ஆறுதல் படுத்திக் கொண்டனர். அவர்களுக்குள்ளாகப் பேசவேண்டியவை நிறைய இருந்தன. அருகருகே அமர்ந்து முதல் முறை காதல் பேசுபவர்களை ஏன் தொல்லைச் செய்ய வேண்டும் என்று அந்த அறையை ஒட்டியிருந்த அனிக்காவின் தோழியான ரோஜாச் செடியும் வெளிப்பக்கமாகத் தன் கவனத்தைப் பதித்தது.

இனிமையாய் கழிந்த அந்நேரத்தில் கண்ணீர் துளிகளும், கலக்கங்களும் மாயமாகி, ரூபனின் விலகலுக்குக் காரணம் அவன் குற்றவுணர்வே அன்றி அவள் மேல் அவனுக்குக் கோபம் எதுவும் இல்லை என்பதை அவன் உணர்த்தினான்.

அவனது கோபமும் அவளை அறைந்தது தொடர்ந்து நிகழ்ந்த அனைத்தும் அன்றைய பொல்லாத சூழ்நிலையின் பிரதிபலிப்பு எனத் தான் உணர்ந்ததைச் சொல்லி, அவளுக்கு அவன் மேல் வருத்தம் ஏதுமில்லை என்பதை அவள் அவனுக்கு உணர்த்தினாள். அந்த இருவரும் நிகழ்ந்த அனைத்து கெட்டதிலும் நன்மையாகத் தற்போது தாங்கள் இணைந்திருப்பதை மட்டுமே எண்ணி மகிழ்வாய் உணர்ந்தனர்.

இனிமையான புன்முறுவலும் கலகல பேச்சும் அங்கு நீண்டிருந்தன. பேச்சின் ஊடாக அவ்வப்போது முத்த பரிமாற்றங்கள் நிகழ, இன்னும் அனிக்காவை தன் கைப்பிடியினின்று விடாமலேயே வைத்திருந்தான் ரூபன்.

பேசிக் கொண்டிருந்தவன் சட்டென்று எழ அதற்க்குள்ளாக செல்கிறானா என ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தன அனிக்காவின் விழிகள். எழுந்தவனோ அவளைத் தன் கரம் கொடுத்து எழுப்பி நிறுத்தினான்.

 ஒரு நிமிடம்  என்று அனுமதி கேட்டவன் வாயிலின் வெளிப்பக்கம் சென்று தான் கொண்டு வந்திருந்த மலர்க் கொத்தை கையில் ஏந்தி வந்தான். சொல்லி வைத்தார்போல அனிக்காவின் சேலையின் நிறத்தை ஒட்டி சிவப்பில் அந்த ரோஜாக்கள் இருந்தன.

அம்மலர்களின் நிறமும் அழகும் தன்னைக் கொள்ளைக் கொண்டதை விட அதனைக் கொண்டு வந்தவனின் அன்பில் உள்ளம் மொத்தமாய்க் கொள்ளை போனது.

அவள் எதிரில் வந்து ஒற்றைக் காலால் மண்டியிட்டவன் “இது மலர்க் கொத்து அல்ல, என் இதயம்  என்றவனாய் தன்னுடையவளிடம் நீட்டினான்.

ஆசையாய் அதனை வாங்கிக் கொண்டு தன்னோடு அணைத்தவள் உருகி நிற்க, எழுந்தவன் அவளை ஒட்டி நின்று காதின் அருகே சென்று

 என் செல்ல அனி நல்ல பொண்ணில்ல, நம்ம மேரேஜ் அன்னிக்கு சர்ச்ல ஃபாதர் ரூபனை கட்டிக்கச் சம்மதமான்னு கேட்கிறப்போ சம்மதம்னு சொல்லிடுவியாம்  என்றான்.

அதைக் கேட்டவள் ஜீவனின் வேலைதானா இதெல்லாம் என்றெண்னியவளாய் ஒரு நொடி திகைத்து, உடனேயே கலகலத்துச் சிரிக்கலானாள். அவள் தலையைச் செல்லமாய் முட்டியவனோ அவள் கன்னத்தில் அழுத்தமாய் முத்தங்கள் பதித்தான்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here