34. அமிழ்தினும் இனியவள் அவள்

0
510
Amizhthinum Iniyaval Aval

அத்தியாயம் 34

ரூபன் அனிக்காவின் நிச்சயம் முடிந்து ஏறத்தாழ இரண்டு மாதங்கள் ஆகியிருந்தன. அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை, ஆலயத்தில் திருப்பலியில் அனிக்கா செபித்துக் கொண்டு இருந்தாள். அம்மாவின் அறிவுரைப்படி நிச்சயத்திற்குப் பின்னர் வீட்டிலும் வெளியிலும் எங்குச் சென்றாலும் சேலைதான் அணிவது. அன்று பீச் நிற ஜொலி ஜொலிக்கும் வேலைப்பாடுள்ள சேலையில் மிளிர்ந்து கொண்டிருந்தாள். ஏறத்தாழ ஒரு மணி நேரம் கடந்து திருப்பலி நிறைவுறும் நேரம் நெருங்கியது. அன்றைய தினம்தான் அவளுக்கும் ரூபனுக்குமான திருமண அறிக்கை முதன்முதலாக வாசிக்கப் படவிருக்கின்றது.

ரூபன் அங்கு ஆலயத்தில் இல்லையெனத் தெரிந்தும் கூட மனதிற்குள்ளாக அவனை அவள் மிகவும் தேடினாள்.நிச்சயத்திற்கு அடுத்த நாள் அவன் அவள் வீட்டில் அவள் அறைக்கே வந்து பேசிச் சென்றான்தான். அதன் பின்னர் அவன் அவள் வீட்டிற்கு நாட்களில் ஹாலிலேயே இருந்து கொள்வான். வேலையிலிருந்து களைத்துப் போய் வருகின்றவனுக்கு அனிக்காவோ ஓடி ஓடி உபசரிப்பாள்.

அனிக்காவை பார்க்கத்தான் வருகின்றான் என்றாலும் சும்மா வெறுங்கையோடு காரணமின்றி எப்படி வருவதென்று தயங்கியவனாக எப்போதும் அவளது பொருள் ஏதாவது கொண்டு வந்திருப்பான். அவளை அங்கு அவள் வீட்டில் சந்திப்பதோடு சரி. ஞாயிறுகளில் ஆலயத்தில் திருப்பலி முடிந்து வீடு திரும்பும் வேளைகளில் அவளை நோக்கி சின்னச் சின்னப் பார்வை பரிமாற்றங்களும், புன்னகையும் பகிர்வது உண்டு. இருவருமே பொதுவிடத்தில் பிறர் முன்பாகத் தங்களுக்கென்று மரியாதையான எல்லையோடு நடந்து கொள்வார்கள்.

அவளைத் தன்னோடு எங்கும் ஊர் சுற்ற அழைத்துச் செல்ல அவனுக்குப் போதுமான நேரம் இருந்திருக்கவில்லை. அவன் வேலைப் பளு அறிந்திருந்ததால் அவளும் அது குறித்து வருந்தவில்லை. தானும் அவன் வேலையைப் பகிர்ந்து கொள்ள அவள் எண்ணினாலும் அதற்கு அவன் அனுமதிப்பதாக இல்லை.

 ஏன் ஜீவா நான் அலுவலகத்திற்கு வந்தால் இருக்கிற வேலையில கொஞ்சமாவது உதவியாக இருக்கும் இல்லை?, ஞாயிற்றுக் கிழமை கூட இரெண்டு பேரும் மதியமே வேலைக்கு போயிடறீங்க… உங்களுக்கு ரெஸ்ட் இல்லாம வேலை இருக்கு… நானும் வீட்டில சும்மாதானே இருக்கேன். நான் அவங்க கிட்டே கேட்டேன் வர வேண்டான்னு சொல்லிட்டாங்க… அத்தான்ட சொல்லேன் என்று கேட்க,

அவனோ வேறு ஒரு கதை சொன்னான். அதாவது ரூபன் அவளைப் பெண் கேட்டுத் தாமஸ் தர மறுத்திருந்த போது அவர் யாரிடமோ…

“என் மகளை அவன் கட்டினா, அவன் தொழிற்சாலைக்கு இலவசமாக வேலை செய்ய ஒரு ஆள் கிடைச்சிடும் என்று எண்ணி கேட்டிருப்பான்” என்று சொன்னாராம்.

அதனைத் தெரிந்துக் கொண்டதன் முதலாக “என்னோட காதலை மாமா ரொம்பக் கொச்சைப் படுத்திட்டாருடா” என ரூபன் குமுறினானாம். அன்றே ஜீவனிடம், ‘அனிக்கா இனிமே தொழிற்சாலைக்கு வராம பார்த்துக்கப் போறேன்  என்று முடிவாகத் தன்னிடம் கூறியதாகச் சொன்னான்

அதனால் தான் அவளை அவன் தொழிற்சாலைக்கு வர வேண்டாமென்று சொல்லியிருப்பான் என்று யூகித்துக் கூறினான்.

 இந்த மாமனார், மருமகன் தொல்லை ரொம்ப ஆகிப் போச்சு, இவங்களால எனக்குத்தான் பிரச்சினை தாங்கலை; என்று கடைசியில் அவள் தான் சலித்துக் கொள்ள வேண்டியதாயிற்று.

அனிக்காவின் வீட்டிற்குச் செல்லும் போதெல்லாம் அவன் அவள் அறைக்குச் செல்லாவிடினும், அவள் வீட்டினர் ரூபன் வந்ததுமே ஹாலிலிருந்து ஒதுங்கி அவர்களுக்குப் பேச தனிமைக் கொடுத்து சென்று விடுவதுண்டு. அனிக்காவை தன் அருகில் அமர்த்தி அவள் உள்ளங்கையோடு தன்னுடையதையும் கோர்த்துக் கொண்டு அவளோடு சற்று நேரம் அளவளாவி கொண்டு அமர்ந்திருப்பான்.

அவளுடன் பேசுவதிலேயே அவனுக்கு உற்சாகம் கூடிப்போகும். வீட்டிற்க்கு திரும்புகையில் தன் களைப்பிலும் பொலிவாக விடை பெறுவான். அவளுக்கு அவனாகப் போன் செய்தாலும் அவன் சுபாவமே அளவுக்கு அதிகமாகப் பேசுவதாக இல்லையென்பதால் ஓரிரு பேச்சுக்களுக்கு அப்புறமாக என்ன பேசுவது எனத் தெரியாமல் மௌனமாகிவிடுவான். அனிக்கா தான் தொடர்ந்து அவனிடம் பேசியாக வேண்டும் அவன் அவளைப் பேச விட்டு கேட்டுக் கொண்டிருப்பான்.

எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது ஆனால் கடந்த 20 நாட்களாக ஏதோ ஒரு வேலையாக ரூபன் வெளியூர் சென்றிருக்கின்றான், என்ன வேலை என்று எதுவும் சொல்லவும் இல்லை. அவளுக்குத்தான் சொல்லவில்லை என்றால் அவன் வீட்டினருக்கும் ஏன் அவனுடைய எல்லா வேலைகளையும் ஜீவனுடைய தலையில் சுமத்திச் சென்றவன் அவனுக்குமே சொல்லியிருக்கவில்லை.

நமக்கு இருக்கிற ரெகுலர் ஆர்டர் வேலையே சரியாயிருக்கு அனி, எங்க போயிருக்கான்னு விபரம் சொல்லலை. ஆனா, கொஞ்ச நாளா ஏதோ புது ஆர்டர்காகப் போன் கால்ஸ் வந்திட்டு இருந்தது. வேலை கவனத்தில நானும் எதையும் கேட்டுக்கலை.அது விஷயமா எங்கேயும் போயிருப்பானோன்னு டவுட்டா இருக்கு. இப்ப ரெகுலரா இருக்க வேலையே சரியா இருக்கு, இதில புது ஆர்ட்ர்ஸ்னா எப்படி வேலையை மேனேஜ் செய்வானோ? என்று புலம்பியதும் இன்னும் இவளை குழப்பியது.

இவளாகப் போன் செய்தால் அங்கு நெட்வர்க் பிரச்சினையோ என்னவோ சரியாக லைன் கிடைப்பதுமில்லை. கிடைக்கும் போதும்… எப்படி இருக்க அனி? சாப்டியா? வீட்ல எல்லோரும் நல்லா இருக்காங்களா? என்பதோடு அவன் பேச்சு முடிந்து விடும். இவளுடைய கேள்விகளுக்கு நான் வந்து சொல்றேன்மா  என்று முடித்து விடுவான்.

கடந்த நான்கு நாட்களாக அவனும் இவளை தொடர்பு கொள்ளவில்லை. இவளும் கோபத்தில் போன் செய்ய முயற்சிக்கவில்லை. கடந்த வாரத்தில் அப்பா மூலமாகத் தெரிந்து கொண்ட விஷயம் குறித்தும் அவள் வெகுவாக உணர்ச்சிவசப்பட்டிருந்தாள்.

ரூபனை பாராத ஏக்கம், கோபம், தன்னிடம் என்னென்னவெல்லாம் மறைத்து வைக்கிறான் என்கிற ஆதங்கம் இன்னும் என்னென்னவோ மனதைச் சூழ அவள் உள்ளம் கொந்தளிப்பில் இருந்தது. அதிலும் இன்று அவர்கள் திருமணத்திற்கான முதல் அறிக்கை. அவர்கள் இருவருக்குமாகத் திருமணம் செய்யவிருக்கிறார்கள் என்பதையும், அந்தத் திருமணத்தில் ஏதேனும் தவறுகள் இருந்தால் மக்கள் தெரிவிக்க வேண்டுமென்றும் பங்கு குருவானவர் ஆலயத்தில் அறிவிப்பார். இவ்வாறு திருமணம் நடைபெறும் நாளுக்கு முந்திய சில ஞாயிற்றுக் கிழமைகளில் குறைந்த பட்சம் இரண்டு அறிக்கைகள் அதாவது இரண்டு ஞாயிறுகள் அறிவிக்கப் படவேண்டும் என்பது முறையாகும்.

இதன் நோக்கம் தவறான உறவு முறைகளில் திருமணம், அல்லது ஏற்கெனவே திருமணம் செய்தவராக மணமக்களில் யாராவது இருந்தால் ஆலயத்தில் வரும் யாரும் அதனை வெளிப்படுத்தி அந்தத் தவறான திருமணம் நடைபெறாமல் தடுக்க இயலும் என்பதாகும்.

இதுதான் நோக்கம் என்பது ஒருபுறம் இருக்க, இப்படி முதல் திருமண அறிக்கை அறிவிக்கும் நேரம் ஆலயத்தில் வரும் எல்லோருக்குமே இன்னாருக்கும் இன்னாருக்கும் திருமணம் என்று தெரியவந்துவிடும். அது தெரிந்ததும் நெருங்கிய தோழர்கள், தோழிகள் திருப்பலி முடிந்தவுடன் கேலி கிண்டல் என்று சீண்டுவதும் உண்டு. அல்லாது அவ்வளவு பரிச்சயம் இல்லாத மற்றவர்கள் பொண்ணு யாரு இந்தப் பொண்ணா? பையன் யாரு அவனா? என்று குறு குறு பார்வைகள் பார்ப்பதுவும் உண்டு.

எனவே எப்போதும் மகிழ்ச்சியும், வெட்கமுமான தருணங்களை முதல் திருமண அறிக்கை மணமக்களுக்கு வழங்கக் கூடிய ஒன்றாகும். எதிர்பார்த்த நேரம் வர பங்கு குரு அறிக்கை வாசிக்க ஆரம்பித்தார்.

” ……………வசிக்கும் நமது பங்கைச் சேர்ந்த தாமஸ், சாரா இவர்கள் மகளான அனிக்காவிற்கும், …………வசிக்கும் நமது பங்கைச் சேர்ந்த ராஜ், இந்திரா மகனான ரூபனுக்கும் திருமணம் செய்ய முடிவெடுத்திருக்கின்றனர். இந்தத் திருமணத்தில் ஏதேனும் விக்கினம் இருந்தால் பங்கு குருவிடம் தெரிவிப்பது பங்கு மக்களின் கடமையாகும்”

என்று அவர்களது திருமண அறிக்கை வாசித்து அதனைத் தொடர்ந்து திருப்பலி இறுதி செபத்துடன் நிறைவுற, அவளை நோக்கி ஒவ்வொருவராக வந்து விசாரிக்கவும், வாழ்த்துத் தெரிவிக்கவுமாக இருந்தனர். அவள் தன் அன்னையோடும் அண்ணியோடும் ஒன்றிக் கொண்டாள்.

வயதான ஒருவர் சாராவிடம் வந்து விசாரிக்கலானார்,

சாரா உன் பொண்ணை உன்னோட அண்ணன் பையனுக்குக் கட்டி கொடுக்கிறியாக்கும் 

ஆமா மாமி 

பையன் எங்க இருக்கிறான்? …கூப்பிடு பார்ப்போம்.

அனிக்கா அவன் எங்கே வந்திருக்கப் போகிறான்? என்று எண்ணியிருக்க  . சாராவோ,

ரூபன் தம்பி வெளியில தான் இருக்கான் மாமி கூப்பிடறேன் என்றவராகத் திரும்பினார்.

அட ஃபிராடு அப்போ நீ திரும்ப வந்திட்டியா?.. அப்படியே வந்தாலும் நீ இவ்வளவு நேரம் ஜெபிக்கச் சர்ச்க்கு வராம கடைசி நேரம் அறிக்கை வாசிக்கிறப்போ வந்தியா? என மனதிற்குள்ளாக அனிக்கா திட்டிக் கொண்டாள்.

என்ன அத்தை? என்று சாராவிற்குப் பதில் கொடுத்தவனாக ரூபன் அனிக்கா அருகில் வந்து பாந்தமாக நின்று கொண்டான். வழக்கத்திற்கு மாறாகக் காஸுவலில் அனிக்காவை கவரவே வெகு சிரத்தை எடுத்து தயாராகி வந்திருந்தவனை அவளோ திரும்பியும் பார்க்கவில்லை. ஏற்கெனவே இருந்த பலவித உணர்வுகளோடு கூட ஆலயத்தில் அவனோடு ஜோடியாக நிற்க நேர்ந்த வெட்கமும் சேர்ந்து கொள்ள அவளால் அவனை நிமிர்ந்தும் பார்க்க முடியவில்லை.

அந்தப் பெரியவரோ தான் ஊருக்குச் செல்வதாக இருப்பதால் திருமணத்தின் போது வரவியலாது எனச் சொல்லி இருவருக்கும் நெற்றியில் சிலுவை வரைந்து ஆசீர்வாதம் வழங்கிச் சென்றார்.

அவனோடு நிற்கும் நொடிகளில் வெட்கத்தில் வெடவெடத்துக் கொண்டிருந்தவளை அவன் பாராதது போலப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“வாரேன் அத்தை” சிறிது நேரத்தில் விடைப் பெற்றான். அவளோ இப்போதும் கூட அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. ஆலயத்தினின்று வெளியேறும் முன் மறுபடியும் முழந்தாளிட்டு சிலுவை அடையாளம் வரைந்தாள். அம்மா, அண்ணியுடன் சேர்ந்து புறப்பட்டவள் தன் அருகில் நின்று கொண்டிருந்த ஹனியுடன் தன் கையைக் கோர்த்துக் கொண்டு, வெளியே வந்து, தங்கள் வீடு நோக்கி நடக்கலானாள்.

ஆலயத்தின் நேர் வழியினின்று திரும்ப வேண்டிய திருப்பம் வந்தபோது தன்னைத் தானே தடுக்க இயலாதவளாகப் பல நாட்களாகக் காணாதிருந்த அவன் உருவம் காண மெதுவாய் தலையைத் திருப்பினாள். ஆலயத்திற்குச் சற்றுத் தள்ளி வெளியில் நின்றிருந்தவனோ முன்பிருந்தே தன் கண்களை அகற்றாது அவளையேத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

கண்கள் சிவந்து, சோர்ந்து களைப்பில் ரூபன் நின்று கொண்டிருந்தது அவளுக்குப் புரிந்தது. எப்போது வந்தானோ தெரியவில்லை. தன்னைக் காண்பதற்காகவே தூங்காமல் கொள்ளாமல் ஓடி வந்திருக்கிறான் என்றெண்ணி உள்ளூர உருகினாள். ஆனால், வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.அவனைக் கண்டதும் வெடுக்கென்று தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

ரூபனோ “நான் உன்னை அறிவேனடி” என்ற பாவனையில் தன்னைச் சுற்றி நின்றவர்கள் கிண்டலையும் பொருட்படுத்தாது அவள் சென்ற திசை நோக்கி புன்முறுவலோடு பார்த்து நின்று கொண்டிருந்தான்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here