35.அமிழ்தினும் இனியவள் அவள்

0
601
Amizhthinum Iniyaval Aval

அத்தியாயம் 35

அதே ஞாயிற்றுக்கிழமை:

மதிய நேரம் கடந்து இப்போது மாலையாகியிருந்தது. காலையில் சர்ச்சில் பார்த்திருந்த ரூபனை மறுபடி காண அனிக்காவின் மனம் வெகுவாக ஏங்கியது. அவன் களைத்துப் போய் வந்திருப்பான் தூங்கட்டும் என்று மதியம் வரை பொறுத்திருந்தாள். நேரம் கடந்து செல்லவே ஏன் இன்னும் தன்னைப் பார்க்க வரவில்லை? எனும் கேள்வி மனதை அரித்தது. வெளியே சென்றிருந்தாலும் கூட வேறெங்கே சென்றிருப்பான்? தொழிற்சாலைக்குத்தான் சென்றிருக்க வேண்டும். அவனுக்கு அவன் வேலைதான் ரொம்ப முக்கியம், என்னையும் விட முக்கியம் எனத் தன் மனதிற்குள்ளாகப் பொருமிக் கொண்டிருந்தாள். ஆனால், வெளியில் வீட்டினர் முன்பு காட்டிக் கொள்ளவில்லை.

முன்பு போல இருந்திருந்தால் எண்ணியவுடனே அவன் வீட்டில் எல்லோரையும் சென்று பார்ப்பதாகச் சொல்லி நேரடியாகவே சென்று அவளே அவனைப் பார்த்திருக்கலாம். இப்போது நிச்சயம் ஆகிவிட்டதால் வீட்டை விட்டு வெளியேயும் போகக் கூடாதாமே.

…….ம்ப்ச்ச்  போகட்டும் பரவாயில்லை  எங்கள் திருமணத்திற்கு இன்னும் 29 நாட்களே தான் இருக்கின்றன என்று மனதிற்குள்ளாக ஆறுதலாகச் சொல்லிக் கொண்டாள்.

ரூபன் மதியம் கடந்து சற்று நேரம் தாழ்ந்த பின்னரே அவளைச் சந்திக்க வந்து சேர்ந்தான், அவன் கையில் இன்றும் பெரியதொரு பை  அது என்ன உங்க கையில்? அதென்ன எப்ப பார்த்தாலும் எதையாவது கொண்டு வருவது? … இன்றைக்கு மறுபடியுமா? எனப் போன தடவை கேட்ட கேள்வியை இப்போதும் கேட்கதான் போகிறாள் என்று எண்ணி தன் மனதிற்குள்ளாகச் சிரித்துக் கொண்டான்.

காலையில் அவள் முறைத்த முறைப்பு அவன் கண்களுக்குள்ளாக நிழலாடியது. யப்பா  என்னவொரு கோபம்?  காதல் கொண்டிருந்த அவனது மனது அவள் கோபத்தையும் இரசிக்கச் சொன்னது.

தன் காரை பார்க் செய்தவன் அனிக்காவின் வீட்டின் வாசல் வரையிலும் வந்துவிட்டிருந்தான், உள்ளே நுழையும் முன்னே அவள் குரல் கேட்கவும் சட்டென்று முன் சென்று அவளுக்கு அதிர்ச்சிகள் கொடுக்க வேண்டாம் என்று, ஹாலிலிருப்பவருக்குத் தெரியாதவண்ணம் அமைந்திருந்த முன் வாயில் பகுதியில் நின்று கொண்டு கள்ளத்தனமாய் உள்ளே தன் கண்களால் துழாவினான். அவன் பார்வைக்குள் அவள் அகப்பட்டாள்.

ரூபனோ தான் காலையில் அணிந்திருந்த அதே உடையில் தோற்றம் நலுங்கிப் போய் வந்திருந்தான். ஆனால், அனிக்காவோ புதுச் சேலை ஒன்றை அணிந்து பிங்க் நிறத்தில் பெரிய ரோஜாப் பூவாகவே மலர்ச்சியாக இருந்தாள். அவளைச் சுற்றி குட்டிக் குட்டி பூக்கள் பூத்திருந்தன. ஆம், ஹனியும் அவள் குட்டி நண்பர்களும் அவர்கள் உயிர்ப்பூட்டும் நிஜ பூக்கள் தானே? 

அவளைச் சுற்றிக் குழந்தைகள் அமர்ந்திருந்தனர். ஏதோ கதை ஒன்றை அபிநயம் பிடித்து அவள் சொன்ன விதத்தில், கதையில் அரக்கன் வரும் போதெல்லாம் இருப்பதிலே குட்டி மனுஷனொருவன் அந்தக் கூட்டத்தை விட்டு பயந்து ஓடுவதும், அவனைப் போக விடாமல் அனியும் மற்ற சிறார்களும் இழுத்துப் பிடித்துத் தங்களோடு சேர்ப்பதுவுமாக வீடு கலகலத்துக் கொண்டிருந்தது.

 வா ரூபன்  , அத்தையின் அன்பான அழைப்பில் உள்ளே நுழைந்தான். வாண்டுகள் அனைத்தும் அவளிடமிருந்து இவனிடம் பாய,

 இடு எங்க மாமா  என்று ஹனி தன் வாண்டுகள் கூட்டத்திற்கு அறிமுகப்படுத்தினான். அவனும் குழந்தைகளோடு கதை பேசிக் கொண்டு தான் வாங்கிக் கொண்டு வந்திருந்த சாக்லேட்டுகளைக் கொடுத்து அவர்களோடு சிறிது நேரம் ஐக்கியமானான். அதோடு கூடஎதிரில் இருந்தவளை வெகு நாளாகக் காண இயலாத காரணத்தால் விழி இமைக்காமல் அவன் கணவன் பார்வை அதான் காதல் பார்வை பார்த்து வைக்க,

அவளும் தன் விழிகள் நோவதை பொருட்படுத்தாமல் அவனை மனைவி பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள் அதாங்க முறைத்துக் கொண்டிருந்தாள்.

வந்திட்டான்… எப்ப பாரு கைல ஒரு பார்சல் இல்லாம வரவே தெரியாது. இன்னிக்கு குரியர் பாய் பார்சல் கொஞ்சம் பெரிசா இருக்கும் போலியே?  என்று எண்ணினாலும் அதைக் கண்டு கொள்ளவில்லை

அவளைப் பார்த்த அம்மாவும் அண்ணியும் என்ன இது இன்றைக்கு நம்ம வீட்டு பொண்ணுக்கு என்ன ஆச்சு? மாப்பிள்ளையைப் பார்த்ததும் காலில சக்கரம் கட்டிக்கிட்டு ஓடி ஓடி உபசரிக்குமே?  இன்றைக்குப் பார்த்து எல்லாமே மறந்திட்டுதா? என்று புரியாத தோரணையில் அவளுக்குப் பதிலாகத் தாங்கள் ரூபனை வந்து வந்து உபசரித்துப் போக அவளோ இப்போது தான் அவன் அவளைப் பெண்பார்க்க வந்த மாதிரி பாவித்து அவனுக்கெதிரில் அசையாதவளாக அமர்ந்திருந்தாள்.

காஃபி குடித்து முடித்ததும் க்ளாஸை திரும்ப வைக்கக் கையில் எடுத்தவனாகக் கிச்சன் பக்கம் அவன் சென்றான்.

 இதெல்லாம் எதுக்கு எடுத்துக்கிட்டு ரூபன், நான் எடுத்திருப்பேன்ல  அவனைக் கடிந்தவராகச் சாரா அவன் கையினின்று க்ளாஸை வாங்கிக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அவன் அவரிடம் ஏதோ பேசுவதும், அவரோ

‘அதெல்லாம் அவளுக்குப் பிடிச்சா போதும்பா  நான் எதுக்குப் பார்த்துக்கிட்டு?’ என்றவராய் ஏதோ பேச முழுதாக இவள் காதில் எதுவும் விழாத நிலை.

‘அனிம்மா அத்தானை உன் ரூமுக்கு கூட்டிட்டு போ’ என்றார். அம்மாவின் தோரணையே மறுக்கமுடியாததாக இருக்க அவள் அவனோடு மாடியிலிருக்கும் தன் அறைக்குச் சென்றாள்.

‘அத்தான் கை கால் கழுவிக்கோங்க’ எனத் தன் அறையிலிருந்த அட்டாச்ட் பாத்ரூமைக் காட்ட, பரவாயில்லை நம்மளை கவனிக்காத மாதிரி இருந்தாலும் இவளுக்கு நம்ம டயர்டா இருக்கிறது புரியுது என்று எண்ணிக் கொண்டான்.அவன் திரும்ப வரும் போது அவள் தன் அறையின் ஏசி டெம்பரேச்சரை அட்ஜஸ்ட் செய்து கொண்டிருந்தாள். இன்னும் அவனைப் பார்க்காதது போலவே ஒரு அடம்,

 நீங்க இருங்க அத்தான் நான் இப்ப வாரேன் 

என்றவளாய் அங்கிருந்து தப்பிக்கப் பார்த்தவள் வாசலுக்கு வெளியே ஒரு காலை தூக்கி வைத்தது வரை தான் அவளுக்குத் தெரியும்.

தன் ஒற்றைக் கையால் அவள் இடுப்போடு அணைத்து தூக்கி அறைக்குள்ளே தன் முன் நிறுத்தியிருந்தான் ரூபன். இன்னும் அவன் கைப்பிடியில் இருந்தாலும் அவள் அவனை அவள் நிமிர்ந்தும் பார்த்திருக்கவில்லை.

நானே பார்த்து இவ்வளவு நாளாச்சேன்னு ஆசையா உன்னைப் பார்க்க ஓடி வந்தா இப்படிப் படுத்துற நீ. செல்லமாய்க் கடிந்துக் கொண்டவன். அவள் முகத்தைப் பற்றிக் கொண்டு நெற்றி, புருவம் கண்கள், கன்னங்கள் என்று பாகுபாடின்றி முகம் முழுக்கச் சலிக்காமல் முத்தங்கள் பதிக்கலானான்.

முடியவே முடில அனி, அதான் அவசர அவசரமா ஓடி வந்துட்டேன். மூச்சு விடாமல் முத்தமிட்டதால் சற்று மூச்சு விட்டுக் கொண்டவனாய்த் தொடர்ந்தான். இன்னிக்கு சர்ச்ல நம்ம கல்யாணத்தோட முதல் அறிக்கை வேறையா? நீ என்னைத் தேடுவன்னு தோணிட்டே இருந்துச்சு அதான் ரெண்டு மூணு நாளாவே ஃபிளைட் டிக்கெட்டுக்கு அலையோ அலைன்னு அலைஞ்சு நேத்து ராத்திரி தான் கிடைச்சது ஒரு வழியா மூணு மணி போலக் காலைல வந்து சேர்ந்தேன்.

இன்னும் பதில் பேசாமல் தன்னைப் பார்த்துக் கொண்டு நிற்பவளைப் பார்த்து, நீ ஏன்டா எனக்குப் போன் பண்ணல? என்றவன். இன்னுமாய் அவளைத் தன்னோடு அணைத்துக் கொண்டு ,

நான் உன்னை எவ்வளவு மிஸ் பண்ணேன் தெரியுமா? என்றவனாய் அவள் முகம் உயர்த்தி அவள் உதடுகளில் ஆழ்ந்த முத்தமிட்டான்.

ரூபனின் அதிரடியால் அனிக்கா விழிவிரிய நின்றுக் கொண்டிருந்தாள். முன்னொரு நாள் இருவரும் முத்தமிட்டனர்தாம் அது கன்னங்களைத் தாண்டி சென்றிருக்கவில்லை. அவனும் , அவளும் நிகழ்ந்தவைகளை எண்ணி கண்ணீர் உகுக்க ஆறுதல் என்னும் காரணம் கொண்டு அன்றைய முத்தங்கள் அமைந்திருந்தன.

அப்போது முத்தமிடும் போது ஒன்றும் தோன்றாவிட்டாலும் பின்னர்ப் பல நேரம் அதை நினைத்து அனிக்காவிற்கு வெட்க முறுவல் தோன்றும். ஆனால், இன்றைக்கு ரூபன் நடந்து கொள்வது, தரும் ஆசை முத்தங்கள் அத்தனையும் அவர்களுக்குள் மிகவும் புதிது. இதற்கு என்னவாகப் பதிலிருக்க வேண்டும் என்று அவளுக்குப் புரியவில்லை, புரியாத உணர்வில் சிக்கித் தவித்தாள்.

ஏற்கெனவே, அவன் மீது இருந்த கோபம், ஊடல் சிகப்போடு முகத்தில் வெட்கச் சிகப்பும் சேர்ந்து கொண்டது. தன்னில் திகைத்து, தவித்து நிற்பவளின் நிலை புரிந்துக் கொண்டவன் முதலில் தான் அமர்ந்து, அவளை தன்னோடு சேர்ந்து அமரவைத்துக் கொண்டவன். அவள் விரல்களோடு தன் விரல்களையும் இணைத்துக் கொண்டான்.

வழக்கம் போல் இருவர் கைவிரல்களும் உறவாட, எங்கோ படித்த வரிகள் ஞாபகத்தில் எழுந்தது.

விரல்களின் நடுவில் இந்த இடைவெளி எதற்கு? என்ற காதலியின் கேள்விக்கு,

 உன் விரல்களோடு என் விரல்களைக் கோர்த்துக் கொள்ளத்தான்  என்று காதலன் பதிலளித்தானாம்,

அவர்கள் பேசா நொடியிலும் அவர்கள் விரல்கள் உரக்க பேசிக் கொண்டிருந்தன, வேறு யாரும் உணர இயலா மொழிகளில் சத்தமிட்டு காதல் சொல்லின.

மார்பில் சாய்ந்திருந்தவளின் மௌனம் அவனைப் புண்படுத்தியதோ என்னவோ? அவள் முகத்தை நிமிர்த்தினான்.

இங்க பாரு அனி  கண்டிப்பான அவன் குரலுக்குச் செவிமடுத்தவளாக அவனைப் பார்த்தாள். இதுவரை காதல் சொன்ன கண்கள் இப்போது என்ன சொல்லினவோ? அவளுக்குத்தான் ஒன்றும் புரியவில்லை.

இப்பன்னு இல்ல எப்பவுமே ஒரே ஒரு விஷயம் மட்டும் நம்ம ரெண்டு பேருக்குள்ள பின்பற்றணும்னு நான் நினைக்கிறேன்.

என்னவென்று அவள் விழிகள் கேட்க, அவன் தொடர்ந்தான்.

நாம ரெண்டு பேரும் ஆயுசு முழுக்க ஒருத்தர் கூட ஒருத்தர் இருக்கப் போறோம்.

மனசில எதுவும் கோபம் இருந்திச்சுன்னா சண்டைப் போடலாம் தப்பில்ல, வேணும்னா நல்லா திட்டிக்கோ, அடிச்சுக்கோ அதுவும் கூடத் தப்பில்ல ஆனா, என் கூட பேசாம மட்டும் இருக்காதே.

நீ என்ன நினைச்சிட்டிருக்கன்னு எனக்கும் புரியாம, நான் என்ன நினைச்சிட்டிருக்கேன்னு உனக்கும் புரியாம, வருத்தத்தை மனசுக்குள்ளே வச்சிட்டிருந்தா, கொஞ்ச நாள்ல வெறுப்புத்தான் வரும். என்ன புரியுதா?

அதட்டலும் கொஞ்சலும், கெஞ்சலுமாய்க் கலவையாய்த் தொனித்தது அவன் வார்த்தைகள்.

உடனே அனிக்கா படபடவெனப் பொரிய ஆரம்பித்தாள்.

அதான் நான் கோபமா இருக்கேன்னு தெரியுதில்ல, பின்ன எப்படி என்னைக் கேட்காம என்னைக் கிஸ் பண்ணிட்டு, அடிச்சுக்கோ, திட்டிக்கோன்னு சொல்றீங்க… முரண்டினாள்.

உனக்குத் தானே என் மேல கோபம்  எனக்கு உன் மேல கோபம் இல்லில்ல  எனக்குக் கிஸ் பண்ணனும்னு தோணுச்சு பண்ணினேன். அதுக்கெல்லாம் உன் கிட்ட கேட்டுட்டு இருக்க முடியுமா? தேர்ந்த பிசினஸ்மேனாக அவளை நன்றாகக் குழப்பினான்.

அப்ப நான் இப்ப உங்களை அடிக்கலாம் திட்டலாம் என்னவேணா செய்யலாமில்ல… பொறுங்க இப்ப உங்களுக்கு அடி இருக்கு, கோபத்தில் அவன் முதுகில் அருகில் இருந்த தலையணைக் கொண்டு ஐந்தாறு மொத்தினாள்.

அவன் தலைப் பக்கம் தன் கைகளைக் கொண்டு சென்று அவன் முடியை கொத்தாகப் பிடித்து ஆட்டவா? என யோசித்தவள் அவனைப் பாவம் பார்த்து விட்டு விட்டாள். அடி வாங்கியவன் தெம்பாய் அமர்ந்திருக்க அடித்தவள் தான் கோபம் தீராமல் முறைத்தவளாய் மூச்சு வாங்கிக் கொண்டவளாகக் களைப்பாய் அவன் பக்கத்தில் அமர்ந்தாள்.

இப்போ என்ன? இன்னும் என் மேல கோபம் தீரலியா? என்றான் ரூபன் சிரிப்பு மாறாமலே,

எங்க போனீங்கன்னு சொல்லிட்டு போகலை, போனவங்க எனக்குத் தினமும் ஃபோனும் செய்யலை. என்ன வேலையா போயிருக்கீங்கன்னு கேட்டா பதிலும் சொல்லுறதில்லை  இதில நான் உங்களுக்கு போன் செய்யலைன்னு என் கிட்டயே கேட்கிறீங்க? ம்ம்… வரிசையாக அவன் குற்றங்களை அடுக்கியவள்…

இன்னிக்கு திரும்ப வந்தும் கூட உங்களுக்கு என்னை உடனே பார்க்க வர தோணலில்ல? என்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள்.

சாரிம்மா நாளைக்கு எக்ஸ்போர்ட் அனுப்ப வேண்டிய நாள்  பாவம் ஜீவன் தனியா எவ்வளவுதான் கவனிப்பான். இப்ப கூட வர முடியாதோன்னு நினைச்சேன். இன்னிக்கு எல்லாம் ரெடியாகிட்டதா போன் வரவும் வாங்கிட்டு இங்கயே வந்திட்டேன். என்றவனாய் எழுந்து கொண்டு வந்திருந்த பேகை தூக்கி வந்தான்.

என்னதிது? கேள்வியாய் விரிந்தது அவள் கண்கள்.

கட்டிலில் பேகை கோண்டுச் சென்றவன் ஒவ்வொன்றாய் எடுத்தான். விரித்தான். பரப்பி வைத்தான் எல்லாம் என்னோட சாய்ஸ் அனிம்மா, உனக்கு எது பிடிக்கலைன்னாலும் சொல்லு மாத்திடலாம். அதான் நம்ம மேரேஜிக்கு ஒரு மாசம் போல இருக்கே? என்றவனை அனிக்கா விழி இமைக்காமல் பார்த்து வைத்தாள்.

அவளுக்காகப் பார்த்து பார்த்து அவன் தங்க நகைகளாக வாங்கிக் குவித்திருந்தான். அத்தனை நகைகளில் வடிவமைப்பும், அழகும் கருத்தைக் கவர்வனவாக இருந்தன. நெற்றிச் சுட்டி முதலாகக் கம்மல், மாட்டி, நெக்லஸ், ஆரம், வளையல்கள் என அவள் முன்னே கடைப்பரப்பி வைத்திருந்தான். அவளுக்கு அத்தனையும் பிடித்திருக்கின்றதா? என்னும் ஆர்வத்தில் அவன் அவளைப் பார்த்திருக்க, அவளுக்கோ கண்ணீர் துளிர்த்துக் கண்களில் தேங்கி நின்று கொண்டிருந்தது.

ஹேய் குட்டி, உனக்குப் பிடிக்கலியா? என அருகில் வந்து கேட்டவனிடம்

எப்பவும் உங்களுக்கு இதே வேலையாப் போச்சு  …என்றவளின் குரல் கமற உணர்ச்சி வசத்தில் கண்ணீர் தெரித்தது.

ஏய் இதென்ன அழுகை? பொறுக்கவியலாதவனாக அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

நீ எப்பலருந்து இப்படி அழுகாச்சியா மாறுன அனி  தாங்க முடிலடி … சும்மா சும்மா அழாத  யாராவது நகை வாங்கிக் கொடுத்தா உன்னை மாதிரி அழுவாங்களா  லூசு லூசு

நானா லூசு, நீங்கதான் லூசு அழுகையோடும் அவனைத் திட்டிக் கொண்டிருந்தாள்.

ஏன் இப்ப உனக்கு என்ன தான்மா பிரச்சினை?  அவன் குரல் உயர்ந்தது.

உங்களை யாரு இப்ப நகையெல்லாம் வாங்கிட்டு வரச்சொன்னது? 

ஏன் எனக்கு ஆசை நான் வாங்கித் தாரேன். உனக்குப் போடுறதுக்கு என்ன? ஊர் உலகத்தில பொண்டாட்டிக்கு எவனும் நகையே வாங்கிக் கொடுக்கலியா? சும்மா தொண தொணன்னுட்டு …

யாரும் உங்களை மாதிரி கல்யாணத்துக்கு முன்னாடியே வாங்கிட்டெல்லாம் வர மாட்டாங்க  பொண்ணுங்களுக்கு அப்பாதான் கல்யாணத்துக்கு நகை செய்வாங்க  .

இப்ப என்னாச்சு நாம கொஞ்சம் வித்தியாசமா தான் செய்வோமே? இதுக்கெல்லாம் இப்படியா கண்ணீர் விடுவ?  போய் முகத்தைக் கழுவிட்டு வா 

இல்ல நீங்க பேச்ச மாத்தாதீங்க  இன்னொரு விஷயம் கேட்கணும் உங்க கிட்ட  அதையும் கேட்டதிலிருந்து எனக்குக் கஷ்டமா இருக்கு அதையும் சொல்லிடறேன். கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தவள் முகத்தைத் தன் கர்ச்சீப் எடுத்து, அவள் முகம் பற்றி நிதானமாய் துடைத்து விட்டான்.

சொல்லு அழுகுணி சீக்கிரம் சொல்லு  நகை வாங்கிட்டு வரப்போ என்னென்னவோ எதிர்பார்த்தேன் சத்தியமா இதை எதிர்பார்க்கலடி  என்றான் கடுப்பாக 

அது எனக்கு அப்பா மூலமா தெரிஞ்சது… என அவள் ஆரம்பிக்கவும், என் அருமை மாமா தன் மக கிட்ட என்ன சொல்லி வச்சாரோ? எனச் சட்டென்று திகைத்தவன், அவர் தன்னிலும் பெரிய அழுத்தமானவர் என்று நியாபகத்திற்கு வரவும் சுதாரித்தான்.

அனிக்கா சொல்ல ஆரம்பித்தாள்,

அன்னிக்கு சம்பள நாள்னு என் கிட்ட கையெழுத்து வாங்க சுரேஷ் வந்தார் இல்லையா? சுரேஷ் ரூபன் தொழிற்சாலையில் பணிபுரிபவன் பேங்க் சம்பந்தப்பட்ட வேலையெல்லாம் பார்த்துக் கொள்பவன்.

ரூபன் சென்ற வேலை இழுத்துக் கொண்டே சென்றதால் சம்பள நாளுக்கு முன்பே வருவதாக எண்ணியும் வர முடியவில்லை. அப்போது தான் அவன் சுரேஷை அவளிடம் கையெழுத்து வாங்கச் சொல்லி இருந்தான் அதைத்தான் குறிப்பிடுகிறால் என புரிந்துக் கொண்டான். அதுக்கும் இவ இப்படி உணர்ச்சிவசப்படுவதற்கும் என்ன சம்பந்தம்? என்று விழித்தான்.

அப்ப தான் அப்பா என் கிட்ட ஏன் நீ கையெழுத்து போடற?ன்னு கேட்டாங்களா… நான் தான் அப்பா முன்னாடி அக்கவுண்ட்ஸ் முழுசும் மேற்பார்வை பார்த்துட்டு இருந்தேன் அதனால கையெழுத்து கேட்கிறாங்க போலனு சொன்னேன். அப்பா நான் சொன்னதை நம்பாம போய் எப்படியோ விபரம் தேடிட்டு வந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன். என் கிட்ட கூடச் சொல்லலை அம்மா கிட்ட தான் சொல்லிட்டு இருந்தாங்க, நீங்க என்னை தொழிற்சாலை பார்ட்னரா சேர்த்திருக்கீங்களாம்… அப்படியா? முட்டைக் கண்ணை விரித்துக் கேட்டவளை என்னென்னவோ செய்ய ரூபனுக்கு ஆசை வந்தது.

அதுக்கு? என்றான் ரூபன் அமுக்கிணியாக 

இப்ப கூட உருப்படியா எதையும் சொல்றீங்களா? நானா தான் கேட்டுட்டு இருக்கேன். இப்ப எதுக்கு என்னைப் பாட்னரா ஆக்கணும்? பாவம் ஜீவன் தானே உங்க கூட கஷ்டப்பட்டு வேலை செய்யுறான், நியாயமா நீங்க அவனுக்குப் பார்ட்னர்ஷிப் கொடுத்திருக்கணும். எனக்குப் போயி  இப்ப அத்தை என்ன நினைச்சுப்பாங்க? நம்ம வீட்ல எல்லோரும் என்ன நினைச்சுப்பாங்க?  கல்யாணத்துக்கு முந்தியே இப்படின்னு யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்களா? உதட்டை சிறு பிள்ளையாய் பிதுக்கியவளை 

சரி சொல்லறது எல்லாம் சொல்லிட்டியா நீ போய் முகத்தைக் கழுவிட்டு வா , நான் பதில் சொல்றேன். உன் ரூம்ல எதுவும் ஸ்னாக்ஸ் வச்சிருந்தா தந்துட்டு போ  வேலை பாக்கிறப்போ கூட இவ்வளவு களைப்பாகலை. உன் கிட்ட பேசி, உன் கண்ணீரைப் பார்த்து ரொம்ப களைப்பா இருக்கு… பசிக்குது… கொலை பசி என்றவனை முறைத்தவள் அங்கிருந்த பவுலில் இருந்த திராட்சைப் பழங்களை மறுபடி ஒரு முறை கழுவி அவன் முன் வைத்தாள். ஆப்பிளையும் கழுவி கத்தியோடு அவன் முன் வைத்தாள்.

முறைப்போடேயே தன் முகம் கழுவச் சென்றாள், முகம் துடைத்து திரும்ப வந்து அவனருகே அமர்ந்தாள், அவனோ இப்போது தான் பழங்களை ரசித்து ருசித்து ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தான்.

ஏய் என்ன பார்க்கிற? மாமனார் வீட்ல கொஞ்சம் ரிலாக்ஸா சாப்பிட விடு, முறைச்சு முறைச்சு பார்த்து கண்ண வச்சுக்கிட்டு… என்றவனை இன்னும் முறைத்தாள்.

அமைதியாகச் சாப்பிட்டு முடித்தவன் நிதானமாகப் பேச தொடங்கினான்.

அனி உனக்கு மொத கவலை நம்ம வீட்ல என்ன சொல்வாங்கன்னு இருந்தா, அத மொத்தமா தொடச்சி தூரப் போடு. ஏன்னா நகை வாங்கிறப்போ நான் வீட்ல சொல்லித்தான் வாங்கினேன். அம்மாவை அழைச்சுக் கிட்டுத்தான் போயிருந்தேன். ஜீவனுக்கும் கூட இது தெரியும். யாரையும் உன் கிட்ட சொல்லக் கூடாதுன்னு சொல்லி வச்சிருந்தேன்.

……

இது உனக்கொரு ஸ்வீட் சர்ப்ரைஸா இருக்கட்டும்னு பார்த்தேன். கல்யாணத்துக்குப் பிறகுதான் வாங்கிக் கொடுக்கணும்னு எதுவும் ரூல்ஸ் இல்லடா, என் வைஃப் கு நான் எப்ப வேணா வாங்கிக் கொடுப்பேன்  …என் இஷ்டம் அதில யார் என்ன சொல்லுறது?

……

முன்னேயெல்லாம் ஜீவன் எப்பவும் என் கிட்ட “மாமா நீ அவங்க சொத்துக்கு ஆசைப்பட்டுதான் பொண்ணு கேட்கிறேன்னு  சொல்ல போறார்னு சொல்லிட்டே இருப்பான் …… .அப்பவே நினைச்சு வச்சதுதான் இது.

….

கல்யாணத்துக்கு நகை முதலா நானே செஞ்சுக்கிறேன் மாமா நீங்க பொண்ணு தந்தா போதும்னு சொல்லி பொண்ணு கேட்கணும்னு நினைச்சிருந்தேன். நான் செஞ்ச நகை மட்டும் போட்டு உன்னைக் கட்டிக்கணும்னு நினைச்சிருந்தேன்  இப்போ இதெல்லாம் சொல்லப் போனா எங்க பொண்ணுக்கு எங்களை நகை போடாதன்னா சொல்லறன்னு உங்க அப்பா ஒருவேளை என்னை விட்டாலும், உன் அண்ணா என்னை அடிக்கவே வந்திடுவாங்க சிரித்தவனை என் அப்பாவையும் அண்ணனையுமா கிண்டலடிக்கிற? என்று கண்கள் இடுங்க பார்த்தாள்.

‘இந்த மொறைப்பை கொஞ்சம் விடுடி, அதான் லைஃப் முழுக்க என்னை முறைக்கிறதுக்கு டைம் இருக்கே… கொஞ்சம் மூஞ்சை மாத்து’ என்றவனிடம் ஈ எனச் செயற்கையாக இளித்து வைத்தாள்.

போதும் போதும்….கொஞ்சம் அதிகமா சிரிச்சுட்ட தாயே… குறைச்சுக்கோ.

அந்தப் பார்ட்னர்ஷிப் விஷயம் உன் கிட்ட வேணும்னே எல்லாம் மறைக்கலை அனி, வேலை வேலைன்னு ஓடி கிட்டு இருந்ததில சொல்ல டைம் கிடைக்கலை ……கல்யாணத்துக்கு அப்புறம் நிதானமா சொல்லலாம்னு நினைச்சிருந்தேன். நீ சொன்ன மாதிரி அந்த விஷயத்திலயும் வீட்டுல யாரும் ஒண்ணும் நினைக்கப் போறதில்ல, அப்படி நினைக்கிறதில நியாயமும் இல்லை.

எனக்குப் பிசினஸ் ஆரம்பிக்க அண்ணன் பணம் தந்தார் தெரியுமில்ல 

தலையை ஆட்டியவளாய் ஆமெனப் பதிலிருத்தாள் அனிக்கா.

அதுக்கப்புறம் கொஞ்ச வருஷத்தில நானும் எல்லாம் திரும்பக் கொடுத்திட்டேன் 

என்ன சொல்ல வருகிறான் என்றவளாய் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அன்னிக்கு அண்ணாவோட துணை, பணம் எல்லாம் இல்லைனா நான் இன்னிக்கு ஒரு நல்ல நிலைமைக்கு வந்திருக்க முடியாது. இதுதான் அண்ணன் தம்பிக்கு இடையே இருக்க வேண்டிய கொடுக்கல் வாங்கல் 

ஏதோ சொல்ல வந்தவளை அவள் உதடுகளில் விரல் வைத்து நிறுத்தினான்.

பொறு நான் சொல்லி முடிச்சிடுறேன், போன வருஷம் அண்ணா ஊர்ல வீடு கட்டினான்ல அது யார் பேருக்கு இருக்குன்னு தெரியுமா? இல்லை இப்போ ஃப்ளாட் வாங்கினான்ல அது யார் பேருக்கு வாங்கினான்னு தெரியுமா?

அவளைப் பேச விடாமல் தொடர்ந்தான்.

ஊர்ல இருக்கற்து எல்லாம் அவன் பேர்ல இருந்தாலும், அண்ணி பேருக்கு ஃப்ளாட் வாங்கிருக்கான், இதை யாராவது தப்புன்னு சொல்வாங்களா?

அண்ணன் தம்பிக்குள்ளே இருக்க வேண்டிய கொடுக்கல் வாங்கல் வேற அதைப் பத்தி நீ கவலைப் படாதே. சொத்தெல்லாம் அவனவன் பொண்டாட்டி பிள்ளைங்க பேர்லதான் எழுதுவாங்க இதுக்கெல்லாமா நீ இவ்வளவு யோசிச்சு அழுது வழிஞ்சுட்டு இருப்ப? என்று அவளையே கேள்விக் கேட்டவன்.

தான் எண்ணியது தவறோவெனத் தன்னைக் குறுக்கிக் கொண்டு அமர்ந்திருப்பவளை நெருங்கி அமர்ந்து அணைத்துக் கொண்டான்.

அதுக்காக இப்போ கில்டியா ஃபீல் பண்ணி சாவடிக்காத ….என்றவனாய் அவள் தலையில் முத்தமிட்டான்.

….

என் கிட்ட சண்டைப் போட உனக்கு முழு உரிமையும் இருக்கு ….எனக்கு உன்னோட இந்தக் கோபம் சண்டை எல்லாம் ரொம்பப் பிடிச்சு இருக்கு  அப்பப்ப சண்டைப் போடறதும் நல்லதுதான் இல்லியா?

………

என் அனிக்கு கோபமே வராதே என்னோட காதல் கதையில் ஊடல்னு ஒன்னு வராம போயிடுமோன்னு நினைச்சிட்டு இருந்தேன் என்று சிரிக்கலானான்.

‘அத்தான்’ என்று சிணுங்கியவளாய் அவன் அணைப்பிற்க்குள்ளாக பாந்தமாய் அடங்கினாள்.

‘சரி இப்போ நகை எல்லாம் பிடிச்சிருக்கா இல்லியான்னு சொல்லு. அப்ப தான் நான் எங்க போயிருந்தேன்னு விபரம் சொல்லுவேன்’ என்றவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவள் நகைகளைப் பார்வையிட்டாள்.

‘நம்பவே முடில அத்தான்…’

என்னது நம்ப முடியலை உனக்கு? 

இவ்வளவு அழகா நகை செலக்ஷன் பண்ண உங்களுக்குத் தெரியுமான்னு நம்ப முடிலன்னு சொல்றேன் நினைச்சீங்களா? 

பின்னே? 

என் அத்தான் இவ்ளோ பேசுவாங்களான்னு தான் நம்ப முடியலை என்றவளை …

வாலு என்றவனாய் பின்னோடு அணைத்துக் கொண்டான்.

‘கொஞ்சம் விடுங்க அத்தான்’ என்று அவன் கைகளை விடுவித்தவள், ஆசையாகத் தனக்காகப் பார்த்துப் பார்த்துத் தெரிவு செய்து நகைகள் வாங்கி வந்தவனை மகிழ்விக்க எண்ணினாளோ என்னவோ தன்னுடைய கம்மல் , வளையல், கழுத்தில் கிடந்த பெரிய நகைகளை ஒவ்வொன்றாகக் கழற்றியவள் அவன் கொண்டு வந்த நகைகளை அணியலானாள்.

ரூபன் அவள் நகை அணிவதை மிக ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தான்.

அத்தனை நகைகளும் அணிந்த பின்னர் அவளைப் பார்க்க பார்க்க அவனுக்கு தெவிட்டவில்லை.

அத்தனையும் அணிந்த பின்னர்  நல்லாயிருக்கா அத்தான்  என்று அவனிடம் கேட்டவளுக்கு அவனால் சட்டென்று பதில் சொல்லவே இயலவில்லை.

சற்று நேர மௌனம் கலைந்து… ‘ரொம்ப அழகா இருக்க அனி’ என்றவனாய் அணைத்துக் கொண்டான், பரிசாய் சில முத்தங்கள் வேறு …… .

சரி இப்போ சொல்லுங்க?  எங்க போயிருந்தீங்க 

அவன் சொல்ல, அவள் முகத்திலோ ஆயிரம் வாட்ஸ் வெளிச்சம்  இருவரும் டன்  டன் என்று உற்சாகமாய்த் தம்ஸ் அப் செய்து கொண்டனர்  ரூபன் சொன்ன செய்தி தந்த மகிழ்ச்சி தாளாமல் அவள் அவன் காலரைப் பற்றிக் கீழே இழுத்துக் கன்னத்தில் முத்தமிட்டாள்  அன்று அவர்களுக்கிடையேயான முத்தங்கள் அத்தனையும் கருப்புப் பணம் போலக் கணக்கிடப் படவியலாமல் போயின.

இருவரும் திட்டமொன்றை வகுத்துச் செயல்படுத்த முடிவுச் செய்த பின்னர்ச் சேர்ந்தே மாடியிலிருந்து கீழே இறங்கினர். அவனைப் பின்னே விட்டு விட்டு அவர்கள் இருவரையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் அப்பாவிடம் விரைந்தாள். நின்றவிடமே இருந்து அம்மாவையும் அவர்களருகே கூப்பிட்டாள்.

சாரா தாமஸ் அருகில் வரவும்  அப்பா அம்மா இந்த நகையெல்லாம் எனக்கு அத்தான் வாங்கிட்டு வந்திருக்காங்க நல்லாருக்கில்ல  எனக் கண்கள் மிளிரக் கேட்கவும், தாமஸிற்க்கு தான் இது வரை மகளுக்காக வாங்கிய நகைகள் அத்தனையும் ஞாபகத்திற்க்கு வந்தது. அவை அவள் அணிந்திருப்பவையிலும் பல மடங்கு மிகுதியானவை.

என்ன இருந்தாலும் அவளுக்கு அவன் வாங்கிக் கொண்டு வந்தது தான் உயர்வோ? என்று மனதிற்க்குள் கொஞ்சமாய் மருமகன் மேல் பொறாமை வந்து சென்றது. மறு நேரமே மகளின் மகிழ்ச்சிப் பார்த்துத் தெளிந்தார். நல்லாயிருக்கும்மா  .என்று தந்தையின் பதில் கேட்கும் வரை அவள் அங்கிருந்து நகரவில்லை. சாராவும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். மகளைக் கையாலே தடவி திருஷ்டி கழிக்க 

உடனே அண்ணிக்கு நகைக் காட்ட அவள் விரைந்துச் சென்றாள். தாமஸ் சிறிது நேரம் ரூபனை அருகமர்த்தி அளவளாவிக் கொண்டிருந்தார். அடுத்த நாள் தான் அனிக்காவை மதியம் வெளியே அழைத்துக் கொண்டு செல்ல அனுமதி கேட்ட பின்னரே அவன் அங்கிருந்து விடைப்பெற்றுச் சென்றான்.

மறுநாள் புலர்ந்தது மதியம் வரை அன்று இருந்த முக்கியமான ஏற்றுமதிக்கான வேலை முடிவடைய இன்னும் சில அது தொடர்பான வேலைகள் இருந்தனதான் ஆனால், ஜீவனை ரூபன் வெளியில் சாப்பிடப் போகலாம் என்று சொல்லி பொறுப்புகளை ஒரு சில மணி நேரங்களுக்காக மேனேஜரிடம் ஒப்படைத்து கூட்டிச் சென்றான்.

எனறைக்குமில்லாத அதிசயமா இன்றைக்கு இவனுக்கு என்னாச்சு? என்று ஜீவன் தன் அண்ணனைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவரவர்க்கு அவரவர் கவலை? … அவனுக்குத் திவ்யா இன்றும் ஆஃபீஸிற்கு வந்திருக்கவில்லை என்பதே கவலையாக இருந்தது. அவளுக்கு எதுவும் பிரச்சினை இல்லையே என்று அறிந்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது.

அவன் திவ்யாவை அதிகம் நெருங்க முடியாமலும், விலக முடியாமலும் தவித்துக் கொண்டிருந்தான். அனிக்காவும் இவர்களோடு சேர்ந்து கொள்ள இவங்க ரெண்டு பேரும் என்னவோ பிளான் செய்திருக்கிறார்கள் என்று மனதிற்குள்ளாக உறுதிப் பட்டுவிட்டது.

என்ன பாட்டிம்மா இன்னிக்கு ஸ்கர்ட்ல  …சாரி ஸ்டோக் தீர்ந்திடுச்சா? …… என நக்கலாகவே ஆரம்பித்து அவள் காரில் ஏறும் முன்பே இரண்டு கொட்டுகளைப் பரிசாகப் பெற்றுக் கொண்டான்.

ஜீவா நீ பின்னால உக்கார்ந்துக்கோ அனி முன்னால இருக்கட்டும் என்றதும் கடுப்பானவன். இதை முன்னாடியே சொல்லியிருந்திருக்க வேண்டியது தானே என  .

முதல் தடவை நாங்க ரெண்டு பேரும் வெளிய போறோம்  உனக்கு ஏன்டா பொறாமை?

அண்ணா முதல் தடவை போறவன் எதுக்கு என்னை வீணா கரடி மாதிரி என்னைக் கூட்டிட்டு போகணும்?  விடு நான் இறங்கிக்கிறேன் என முறுக்கிக் கொண்டான்.

‘எல்லாம் கரடிக்கு ஜோடி சேர்க்கத்தான்’ என்று அனிக்கா முன்னாலிருந்து சொன்னது அவனுக்கு அரைகுறையாகக் கேட்டது. அவன் அவளிடம், ‘நீ இப்ப ஏதோ சொன்ன இல்ல?; எனக் கேட்க, தான் அப்படி ஒன்றும் சொல்லவே இல்லையென்று அவள் மறுத்தாள்.

அண்ணா அனி ஏதோ சொன்னா  .நீ கேட்டியா? என அவனிடமும் கேட்டான். அவனும் இல்லையே? என அப்பாவியாய் கண் விரித்துத் தோள் குலுக்கினான்.

என்னமோ பிராட் வேலை நடக்குது செய்யுங்க செய்யுங்க எனக்கென்ன? என்று பின்னால் சாய்ந்து அமர்ந்தவன் அதற்க்கப்புறமாக அவர்களிடம் பேச்சுக் கொடுக்கவில்லை…

நாம மூணு பேரும் சும்மா சேர்ந்து மதிய சாப்பாட்டுக்குத்தான் போறோம் ஜீவா  உனக்கு எதுக்கு இவ்வளவு டென்ஷன்? என்றவனும் பின்னர்ப் பேசவில்லை.

அந்த நட்சத்திர ஹோட்டலின் முன் அவர்கள் கார் வந்து நின்றது.

காரை பார்க் செய்யக் கை நீட்டிய ஹோட்டல் ஊழியனுக்குச் சாவியைக் கொடுத்து விட்டு மூவரும் முன்னே நடந்தனர்.

தனக்குத் தேவையானவைகளை எடுத்துக் கொண்டு சாப்பிட அமர்ந்தனர்.

அனிக்காதான் முதலில் ஆரம்பித்தாள் 

சரி அப்போ சொல்லு 

என்ன சொல்லணும்  இது ஜீவன்

சும்மா இரு, சாப்பிட்ட அப்புறம் பேசலாம்  அனியை ரூபன் தடுத்தான்.

அப்புறம் அவள் ஜீவனை அதிகமாய்க் கண்டு கொள்ளாமல், ரூபனை சீண்டிக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டு இருந்தாள்.

சாப்பாடு மெயின் கோர்ஸ் முடித்த பின் அவள் டிஸ்ஸெர்ட் கொண்டு வந்த விதத்தில் அண்ணன் தம்பி இருவருமே சிரிக்க ஆரம்பித்தார்கள்.

வழக்கமான சின்ன தட்டை எடுக்காமல் கொஞ்சம் பெரிய பிளேட்டில் அங்கிருந்த அத்தனை இனிப்புக்களையும் அவள் அள்ளிக் கொண்டு வந்திருந்தாள்.

இருவரும் சிரிக்கவும் அவளுக்கு வெட்கமாகி விட்டது.

 உங்க ரெண்டு பேருக்கும் சேர்த்து தான் கொண்டு வந்தேன்  என்று சமாளித்தாள்.

ஹேய் அனிம்மா நீ சாப்பிடு என்று அவள் தலையைப் பிடித்துச் செல்லமாய் ஆட்டி வைத்தான் ரூபன்.

இன்னும் தன்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கும் ஜீவனின் கண்ணில் அருகிலிருந்த ஃபோர்க்கை எடுத்து குத்துகிற பாவனைக் காட்டி அவள் பயமுறுத்தினாள்.

அதற்க்கும் அடங்காதவனை என்ன செய்வதெனப் புரியாமல் திரும்பி அமர்ந்து கொண்டு சாப்பிடலானாள்.

ஆண்கள் இருவருக்கும் அவள் செய்கைகளால் முகம் சிரிப்பில் மலர்ந்திருந்தது,

‘ஏ அனி லூசு, நான் சிரிக்கலை நீ திரும்பி உட்காரு’ என்று ஜீவன் சொன்னபின்னரே திரும்பி அமர்ந்தாள்.

சாப்பிட்டு முடிந்ததும் விசாரணை ஆரம்பமாயிற்று  ஜீவனை எதிரில் விட்டு விட்டு ரூபனுடன் கட்சி சேர்ந்து கொண்டாள் அவள்.

உனக்குத் திவ்யாவை பிடிக்கும்ல? ஒழுங்கா மரியாதையா உண்மையச் சொல்லு  தோழி என்ற நிலைக் கடந்து அண்ணனருகில் அமர்ந்து அண்ணி தோரணையைக் காட்டுபவளை ஜீவனுக்கு இன்னும் அதிகமாய்ப் பிடித்தது.

அதுதான் இல்லைன்னு சொன்னேன்ல 

உண்மையச் சொல்லு  நீ என் கிட்ட பொய் சொல்லுற 

அவன் நான் என் லவ் சொன்னப்பவே பிராக்டிகலா என்னெல்லாம் பிராப்ளம் வரும்னு சொன்னவன் … இப்பவும் மனசுக்குள்ள எதையாவது வச்சிட்டு தான் இல்லைன்னு சொல்லிட்டு இருப்பான்  அண்ணன்காரன் கரெக்டாய் பாயிண்ட்டை பிடித்தான்.

ஜீவா முதல்ல பிராப்ளம் என்னன்னு சொல்லு, சால்வ் செய்ய முடியுமா இல்லையான்னு பார்க்கலாம் என்று அனி தைரியம் கொடுக்கக் கொஞ்ச கொஞ்சமாய் அவன் மனம் திறக்க ஆரம்பித்தான்.

அதெல்லாம் ஒண்ணுமில்ல இப்ப எனக்கு லவ், மேரேஜுன்னு யோசிக்க வேண்டிய வயசில்ல, எனக்குன்னு முதல்ல எதையாவது சாதிக்கணும், அதுக்கப்புறம் தான் எல்லாம்.

  என்றனர் இருவரும் ……

நாங்க ரெண்டு பேரும் சேம் ஏஜ் க்ரூப் ……

அதனால என்ன? இது ரூபன்.

உனக்கும் அனிக்கும் வயசு வித்தியாசம் இருந்ததால் உன்னோட இலக்கை அடைஞ்சுட்டு திருமணம் பற்றி யோசிக்க நேரம் இருந்த மாதிரி எனக்கு நேரம் இருக்காதே? என்றான்.

அதுக்காக எனக்காகக் காத்திட்டுன்னு இருன்னு அவள் கிட்ட சொல்லிட்டு வருஷக் கணக்கா இழுக்கிறது எப்படி நியாயம் ஆகும்? என் காதலுக்காக அவ வாழ்க்கையை எதுக்கு நடுவில இழுக்கணும்னு தோணுச்சு அதனால தான் அவக்கிட்ட என்னால வெளிப்படையா எதுவும் பேச முடியலை.

சரி இப்போ உன்னோட இலட்சியங்களை அடைந்துக் கொள்ள உனக்கு எவ்வளவு வருஷம் வேணும்? , ஒரு ரெண்டு வருஷம் போதுமா? பசங்க 25 இல்ல 26 வயசில திருமணம் செய்யலாம் தப்பில்ல… என்ன சொல்லுற நீ?

இரெண்டு வருஷங்களா? அதுக்குள்ள எப்படி? என்று புருவம் நெறித்தவனை

‘சரி நான் இப்போ உன் அண்ணனுக்கு மவுத் பீஸ் ஏன்னா உங்க அண்ணனுக்கு என் அளவுக்கு சரியா பேசத் தெரியாது’ எனக் கூறவும், பேசி பேசியே எந்த ஒரு பிரச்சினை வந்தாலும் கிளையண்ட்களைச் சமாளிக்கின்ற தன் அண்ணனைக் குறித்துக் குறைச் சொல்பவளைப் பார்த்து, அவனால் முறுவல் பூக்காமல் இருக்க முடியவில்லை.

சரி சொல்லுங்க அண்ணி  எனப் பணிந்தான்.

இப்போ உனக்கே உனக்கு ஒரு தொழிற்சாலை கை வசம் வருதுன்னு வச்சுக்கோ, கூடவே பல்கா (bulk) நிறைய ஆர்டர்ஸிம் வருதுன்னு வச்சுக்கோ 

இப்பன்னா இப்ப ஒரு சில மாதங்களில்… அப்படின்னா உனக்கு உன் இலக்குகளை அடைந்துக் கொள்ள இரெண்டு வருடங்கள் போதும் இல்லையா? எனவும்,

அவள் சொல்ல வந்ததை ரூபன் விளக்கினான். தாங்கள் முன்பு தொழிற்சாலை நடத்திக் கொண்டிருக்கும் இடம் மறுபடி அவர்களுக்கு நடத்த தான் ஏற்பாடு செய்திருப்பதாகவும், நெடு நாளாகத் தான் முயற்சி செய்து கொண்டிருந்த ஆர்டர்கள் கிடைத்திருப்பதாகவும், கடந்த நாட்களில் அதற்காகவே அவன் பயணம் மேற்கொண்டதாகவும் தெரிவித்தான்.

கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. தானும் அண்ணனைப் போலவே தொழிற்சாலை ஒன்று ஆரம்பிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தாலும், அது அண்ணனுக்கு எதிரான செயலாக, போட்டியாகக் கருதப் படுமோ என்ற சிந்தனை அவனைக் கட்டிப் போட்டிருந்தது. இப்போதோ தனக்காக எல்லாவற்றையும் தயார் செய்து தன் கனவை லகுவாக்கியவன் குறித்தும், அதை அவனை விட மகிழ்ச்சியாகக் கொண்டாடுபவள் குறித்தும் மனம் பெருமையில் விம்மியது.

இது நல்ல ஐடியா இல்லை அத்தான்?  .நம்ம தொழிற்சாலையில் வேலை அதிகமாகினால் நாம ஜீவன் தொழிற்சாலைக்கு வேலை அனுப்பி வைச்சிரலாம்  இல்லை அவன் ஆர்டர்ஸ் முடிக்க முடியலைன்னா நாம அதைச் செஞ்சுக் கொடுக்கலாம்  என வேலை நுணுக்கம் புரியாவிட்டாலும் அனிக்கா உற்சாகத்தில் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தாள்.

நிகழ்காலத்தில் சடுதியில் திரும்பிய ஜீவன் ‘ஏன் அண்ணா இதுக்கெல்லாம் பணம்?  என்று கேள்வி கேட்டான்.

அதெல்லாம் நான் பார்த்துப்பேன் ஜீவா  உனக்கு நல்ல திறமை இருக்கு உன்னால நல்லா எடுத்து நடத்த முடியும், வாழ்த்துகள்டா …

என்றவனாகத் தம்பியின் இருக்கை எதிரே வந்தவன் அவன் எழுந்து நிற்கவும் அணைத்துக் கொண்டான்.

நெகிழ்ந்தவனாய் ‘நன்றிலாம் நான் சொல்ல போறதில்ல அண்ணா… ஏன்னா நீ என் அண்ணாவாச்சே உனக்கு எதுக்கு நன்றி எல்லாம்? …. ஆனால், எல்லா வரவு செலவுக் கணக்கும் எனக்குத் தெரியணும்  . நான் சீக்கிரம் திரும்பத் தந்திடுவேன்… என்றான்.

‘அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்’ என்று ரூபன் பட்டுக் கத்தரித்தான்.

அண்ணனும் தம்பியுமாய் அணைத்து நிற்பதைக் கண்டவள் ‘ஹேய் நானும்’ என்று அவர்களோடு அனிக்காவும் இணையச் சென்றாள். தம்பியோடு இணைந்து நின்ற ரூபனின் மறுபக்கம் அவளும் அவன் அணைப்பில் நிற்கவும் அது மிகவும் அழகிய காட்சியாய் இருந்தது. அந்த நாளை நியாபகப் படுத்திக் கொள்ள வேண்டி அதனை அவர்கள் சுயமிக்களாக (selfie) எடுத்துத் தள்ளினர்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here