36. அமிழ்தினும் இனியவள் அவள்

0
668
Amizhthinum Iniyaval Aval

அத்தியாயம் 36

அந்தப் பிரபலமான பிரமாண்ட பட்டுச் சேலைக் கடைக்கு அவர்கள் வந்திருந்தனர். திருமணத்திற்கான மற்ற ஷாப்பிங்க் வேலைகள் முடிந்து அனிக்காவிற்கான திருமணச் சேலை வாங்குவது மட்டுமே மீதமிருந்தது. அனிக்காவின் திருமண சேலை அவனுடைய தேர்வாகத்தான் இருக்க வேண்டுமென்று ரூபன் பிடிவாதமாக கூறிவிட வீட்டினர் அந்த ஷாப்பிங்கை மட்டும் அவர்கள் போக்கில் விட்டு விட்டனர்.

ரூபனின் தொழிற்சாலை மற்றும் அலுவலகத்தின் அலுவல் நேரத்தில் வித்தியாசம் உண்டு, காலை எட்டு மணி அளவில் தொழிற்சாலை செல்லும் ரூபனும், ஜீவனும் பட்டுச் சேலை கடை திறக்கும் நேரத்தில் வருவதாக முடிவெடுத்திருந்தனர். அனிக்காவை கடைக்கு தனியாக எப்படி அனுப்ப? என்று யோசித்த அத்தையிடம் அவளைத் திவ்யா வந்து அழைத்து வருவாள் எனச் சொல்லவும் அவரும் சம்மதித்தார்.

‘திவ்யா நீ இன்னிக்கு அலுவலகம் வரக் கூடிய நேரத்தில் அனியை வீட்டிலிருந்து அழைத்துக் கொண்டு இந்த குறிப்பிட்ட கடைக்கு வா’ என்று ஜீவன் திவ்யாவிடம் கேட்டுக் கொண்டு இருந்தான். அவர்கள் திட்டப்படியே பெண்கள் இருவரும் நேரமே கடைக்கு வந்து சேர்ந்திருந்தனர்.

சேலைக் கடையினுள் நுழையும் போதே கடையினுள்ளே நின்றிருந்த அனிக்காவை பார்த்து விட்டிருந்த ரூபன் அக்கம் பக்கம் யாரையும் பாராமல் அவளை மட்டும் இமைக்காமல் பார்த்து முன்னேற, அண்ணன் நிலைப் பார்த்து, ஜீவன் தன் தலையில் அடித்துக் கொண்டான்.

முதலில் உள்ளே வந்த ரூபனிடம்…

‘ஹாய் அண்ணா’ என்று திவ்யா விஷ் செய்ய, அவளைப் பார்த்து ஒரு செகண்ட் செலவழித்து ஹாய் சொன்ன ரூபன் லஜ்ஜையே இல்லாமல் மறுபடியும் அனியைப் பார்த்து ஜொள்ளினான். திவ்யா பின்னே வந்த ஜீவனுக்கும் ஒரு ஹாய் சொல்லி வைத்தாள். முகத்தில் எவ்வித பாவனையுமில்லாமல் சாதாரணமாகப் பேசும் அவளை ஜீவன் கவனத்தில் கொண்டான்.

ரூபனை பார்த்த நொடியிலிருந்து அனிக்கா மனதில் ‘எவ்வித ஒப்பனையும் இல்லாமலே இந்த ஆண்கள் மட்டும் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறார்கள்?’ என்ற மகா முக்கியமான கேள்வி ஓட எப்போதும் அவளை வசீகரிக்கும் அவள் அத்தானை அவளும் இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள். ஒருவேளை இன்னும் அவளுக்கு ஆண்களுக்கான பார்லர் குறித்த விபரம் தெரியாதோ? என்னவோ?

ரூபன் வழக்கம் போல அலுவலகத்துக்குச் செல்லும் விதமாகத்தான் உடை அணிந்து இருந்தான். இங்கே புறப்பட்டு வரும் முன் தொழிற்சாலை மெஷினில் எழுந்த ஒரு சின்னப் பிரச்சினையை அங்கிருந்த பணியாளரோடு இணைந்து சரி பார்க்கையில் மடக்கி விட்டிருந்த தன் சட்டையின் கைப்பகுதியை அவன் இன்னும் சீராக்கி இருக்கவில்லை. அதுவும் அனிக்காவை மிகவும் கவர்ந்தது.

‘அனிக்கா இனிமே எப்பவுமே வெளியே போகும் போது கொஞ்சமாவது நகைப் போட்டுக்கணும்’, என்று அண்ணி கண்டிப்பாகச் சொல்லியிருக்க, அவள் ரூபன் வாங்கித் தந்தவைகளையே அன்று அணிந்து இருந்தாள். ரூபன் சிறகில்லாமல் வானில் பறக்க இந்த ஒரு காரணம் போதாதா என்ன?, அதுவுமல்லாமல் பல வண்ணங்களோடிய சேலையில் கண்களைப் பறிக்கும் விதமாக அவள் நின்றிருந்தாள்.

அவன் சும்மாவே அப்படி, பின்னே இப்ப எப்படி? சேலையில எப்ப பார்த்தாலும் ரொம்ப அழகா இருக்கிறா  மேரேஜிக்கு அப்புறம் தினம் ஸாரிதான் கட்டச் சொல்லணும்  அவன் மனதிற்க்குள்ளாக ரகசிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

அவர்கள் இருவரையுமே வாயில் ஈ புகுவது கூடத் தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்த திவ்யா எனும் அப்பாவி பிள்ளையை ஜீவன், ‘வா அவங்க சேலை எடுக்க போகட்டும் நாம அதுவரைக்கும் கொஞ்ச நேரம் வெளியே போயிட்டு வருவோம்’ என அழைத்தான்.

தான் எதற்காக அனியோடு வந்தோம்? என்பதையே மறந்தவளாக ஜீவன் சொல்வது சரிதானே?  திருமணம் செய்து கொள்ளப் போகின்ற இருவர் நடுவில் இடைஞ்சலாக நாம் எதற்கு? … என்றெண்ணியவளாக அவனோடு புறப்பட்டாள். தன்னுடைய திட்டத்தின் படியே அவளைத் தனியே பேச அழைத்துச் செல்ல வாய்ப்புக் கிடைத்ததென்று ஜீவன் உள்ளுக்குள் சிரித்தவனாகக் காரை வேகமாக எடுத்தான்.

இங்கு ரூபன் தன் சட்டைக் கைப்பகுதி மடிப்பை சட்டென்று கவனித்து எடுத்துவிட முயல, “ இருக்கட்டுமே அத்தான்  என்றவளாக அவன் செய்கையைத் தடுத்து அவன் கையைப் பற்றிக் கொண்டாள். அவர்கள் இருவரும் திருமணப் பட்டுக்கள் இருக்கும் பகுதிக்கு சென்றனர்.

சேலைத் தேர்வு செய்த நேரம் முதலாக அவள் தனக்குப் பிடித்த டிசைன்களை ஒவ்வொன்றாகத் தெரிவு செய்து காண்பிக்க இவன் அந்த ஒவ்வொரு முறையும் இந்த டிசைனில் மெரூன் கலர் இருக்கா? எனக் கேட்டுக் கடை ஊழியரை திணறடித்தான். இவனுக்கு மெரூன் கலர்தான் இஷ்டமோ என்று எண்ணியவளாகத் தேர்வு செய்வதை நிறுத்தி அவனையே பார்த்து வைக்க, அவனைச் சுற்றி ஏராளமான மெரூன் கலர் சாரிகள் குவிந்து இருந்தன. அதிலிருந்து சட்டென்று சேலை ஒன்றை எடுத்தவன், அதைக் கையில் ஏந்தியவனாய் அவளுக்குப் பொருந்துமா எனப் பார்க்க எண்ணி தன் விழிகளை திருப்ப அவனையே பார்த்துக் கொண்டிருக்கும் அவளிடம் என்ன? என்று கேட்டு வைத்தான்.

சுற்றி இருக்கும் சேலைகளைக் காட்டி சைகையில் அவள் என்ன? என்று கேட்க அசடு வழிந்தான்.

 உனக்கு இந்தக் கலர் ரொம்ப அழகாயிருக்கும் அனி  என்றான்  அவளுக்கு அவன் தீபன் திருமணத்தில் தன்னைப் பார்த்த உருவில் பார்க்க எண்ணுகிறான் என்பது இன்னும் நினைவிற்கு வரவில்லை.

 என் கிட்ட அந்தக் கலர்ல சாரி இருக்கு அத்தான்  …நம்ம மேரேஜ் சாரி எல்லாத்தையும் விட ஸ்பெஷலாக இருக்க வேண்டாமா?” என்றவளின் கூற்று மனதிற்குச் சரியெனப் படச் சரி என்று ஆமோதித்தவன்.

 இருந்தாலும் என் ஆசைக்கு இந்தக் கலர்ல ஒரு ஸாரி எடுத்துக்கோ அனிம்மா, பின்னே எப்பவாவது உடுத்துக்கோ  எனக் கூறவும் அனிக்கா மிகவும் பிகு செய்து கொண்டு அதில் ஒன்றை தெரிவுச் செய்தாள்.

ஊர் உலகத்தில உன்னை மாதிரி பொண்ணு பார்க்க கிடைக்கிறது ரொம்பவே கஷ்டம் தான் எனச் சலித்துக் கொண்டவனைப் பார்த்து அவள் புருவம் உயர்த்தவும்,

 நகை, புடவைன்னா பொண்ணுங்க ஆசைப்படுவாங்கன்னு கேள்வி பட்டிருக்கேன். இங்க நான் தான் கெஞ்சிக் கூத்தாடி உனக்கு வாங்கிக் கொடுக்க வேண்டியிருக்கு 

என்றவனை மற்றவர்களுக்குத் தெரியாதபடி நாக்கை துருத்தி பழிப்புக் காட்டினாள்.

இங்கே இவர்கள் திருமண உடைத் தெரிவில் மும்முரமாக இருக்க, அங்கே ஜீவன் மற்றும் திவ்யா என்ன செய்கின்றனர் என்று பார்ப்போம்.

திவ்யாவுடன் ரெஸ்டாரெண்டிற்குச் சென்ற ஜீவன் அவளிடம் ஏதேதோ கதைகள் பேசிக் கொண்டிருந்தான். ஓரளவு சாதாரணமான பேச்சுக்கள் முற்று பெற, எந்த டாபிக் பேசுவது என்று தெரியாமல் திவ்யா,

ஜீவா நாம எல்லோரும் போனோமே பிக்னிக்  அன்னிக்கு அனி கடலில் மூழ்கியிருந்தா இல்லியா அது விஷயமா ஒருத்தரோட உருவம் வரையறதுக்கு  ஸ்கெட்ச் காக  என்னை ஒரு இடத்துக்குக் கூட்டிட்டு போனே இல்லியா? பின்ன அது என்னாச்சு? ஏதாவது விபரம் தெரிஞ்சதா எனக் கேட்டு வைத்தாள்.

ஹ்ம்ம் அந்த விஷயம் தானே  அண்ணன் அவ்வளவா முயற்சி பண்ணியும் அது யாருன்னே கண்டு பிடிக்க முடியலையாம், அன்னிக்கு பீச்ல நடந்த சம்பவம்  யாரோ விளையாட்டுக்கு செஞ்சதா இருக்கும்னு டிடெக்டிவ் ஏஜென்சில சொன்னதா அண்ணன் சொல்றான். ஆரம்பத்திலேயிருந்து நானும் இதையேதான் சொன்னேன். அவன் கேட்டாத்தானே?

………

அனிக்கா கிட்ட விசாரிக்கப் போக, அவளும் தன்னை யாரோ காலைப் பிடிச்சு இழுத்து கடலுக்கு உள்ளே அழுத்தினதா சொன்னதும் எனக்கு இன்னும் திகிலா போச்சு  ஆனா அதுக்குப் பின்னாடி ஒரு பிரச்சினையும் இல்லைங்கிறப்போ, நிச்சயமா அது ஏதேச்சையா நிகழ்ந்த ஒண்ணாதான் இருக்கணும். யாரோ விளையாட்டுக்கு அவ காலை இழுத்திருக்கலாம் அவ பயந்திருப்பாளா இருக்கும். அவ மயங்கினதும் காலை பிடிச்ச ஆளு பயந்துட்டு சொல்லாம விட்ருக்கணும்.

ம்ம் 

எல்லாம் இந்த லவ் படுத்தற பாடு, எங்க அண்ணனுக்கு அவன்னா உயிரு அதான் இப்படி ஒரு சின்ன விஷயம் கூட அவனால பொறுத்துக்க முடில அப்படிப் பதறிட்டான்.

மறுபடியும் ம்ம் என்றவளிடம்

ஏன் திவ்யா நீ லவ் பத்தி என்ன நினைக்கிற  ? மெல்லிதாகத் தூண்டில் போட்டான்.

உங்க அண்ணன், அனி ரெண்டு பேரும் லக்கி ,அவங்க லவ் ரொம்பவே சூப்பர். ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுக்காம இவ்வளவு நேசிக்கிறாங்க  எனக்கு ரொம்பவே ஆச்சரியமா இருக்கும்  என்று தொடர்ந்தவளை பாதியில் நிறுத்தியவன்…

திவ்யா நான் அவங்க லவ் பத்திக் கேட்கலை, பொதுவா லவ்னா உனக்கு எப்படித் தோணும்? இப்ப நான் தான் உன்னை லவ் பண்றேன்னு சொல்றேன்னு வச்சுக்கோ? அப்ப நீ என்ன சொல்லுவ?

சட்டென்று இருக்கையை விட்டு அவள் எழுந்து விட்டிருந்தாள். சட சடவென்று பேசுகின்றவள் தான் ஆனால் கொஞ்ச நாளாக அவள் இயல்பே மாறிப் போயிருந்ததே?  சட்டென்று பேச நா எழவில்லை.

` ஹேய் உக்காரு திவ்யா என்று அவளை அமரச் செய்தவன்.ஆர்டர் செய்திருந்த ஜூஸை அவளருகே நகர்த்தினான். மௌனத்தில் நொடிகள் நகரத் துளி துளியாகப் பருகினாலும் ஜூஸ் எப்படியாகினும் தீர்ந்தே ஆக வேண்டியது ஒன்று தானே?

பதிலுக்காகக் காத்திருக்கிறான் என்று தெரிந்தும் சொல்லாமல் நேரம் கடத்தியவள்.

அதெல்லாம் சரிப்பட்டு வராது ஜீவா… என்றாள்.

ஏன்? சட்டென்று கேள்வி எழுப்பினான் ஜீவன்.

எனக்குச் சட்டு சட்டுன்னு கோபம் வரும் 

ஆனா எனக்கு வராதே, நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்.

உனக்கு என்னை விட நல்ல பொண்ணு கிடைக்கும் …… 

எனக்கு நீ தான் வேணும், உனக்கும் என்னைப் பிடிக்கும்னு தெரியும் சும்மா பொய் சொல்லாதே… உனக்கு நான் யார் கிட்டயும் க்ளோஸா பழகுறது பிடிக்கலைன்னா வேணும்னா கொஞ்ச கொஞ்சமா குறைச்சுக்கிறேன் என்றவனை அடிப்பட்ட பார்வைப் பார்த்தாள் திவ்யா.

நான் அப்படியொன்னும் சொல்லலை  நான் அன்னிக்கு அனிக்கும் உனக்கும் உள்ள ஃப்ரண்ட்ஷிப் தெரியாம பேசிட்டேன்.அதுக்காக உன்னைத் தப்பாவே நினைப்பேன்னு நினைக்காத  அனி எங்கேஜ்மெண்ட் அன்னிக்கு உன்னைச் சுத்தி எல்லா லேடீஸ் பாத்ததும் என்னையறியாம ஜெலஸ் ஆனேன்தான். என்னமோ தெரியலை உன் கிட்டதான் இப்படி ஆயிடுறேன். ரொம்ப உரிமை எடுத்துக்கிறேன் போலிருக்கு  இனி அப்படி நடந்துக்க மாட்டேன்.

இதிலருந்தே உனக்கு என்னைப் பிடிக்கும்னு தெரியலையா? இன்னும் ஏன் உன் மனசை மறைக்கிற? 

அவள் கரத்தைப் பற்றியவன் பேசத் தொடங்க அவர்கள் காதலைச் சொல்லிக் கொள்ள நேரம் கொடுத்து நாம் அங்கிருந்து நகர்வோமா?

ராஜ் வேலையினின்று ஓய்வு பெற்றவராகத் தாயகம் திரும்பி வந்து விட்டிருந்தார். மகனின் திருமணத்திற்கான வேலைகளைப் முடுக்கி விட்டுக் கொண்டு, பெருமிதமாக உற்சாகமாக இருந்தார். தான் ஆசைப்பட்டது போலவே தங்கை மகளை மகனுக்கு மணம் முடிக்க இருப்பது இன்னும் மகிழ்ச்சி சேர்த்தது. வந்த உடனேயே அனிக்காவை சென்று பார்த்து தான் அவளுக்காக வாங்கி வந்திருந்த தன் பரிசுகளை அளித்து வந்தார்.

இந்திரா தன்னுடைய பொறுப்புக்களைப் பகிர்ந்துக் கொள்ளும் வண்ணம் இம்முறை கணவர் கூடவே வந்து நிற்க மிகவும் இலகுவாக உணர்ந்தார். ஜாக்குலினும் குடும்பத்தோடு வந்துவிட்டிருந்தாள். வீடு திருமணக் களைக் கட்டத்தொடங்கியது. அம்மா, அப்பா, அக்கா, அத்தான், அண்ணா அண்ணி, தம்பி என ஒரு குழுவே தன் திருமண வேலைக்கு உதவ இருக்க ரூபனுக்கு நிச்சயதார்த்தம் அன்று இருந்த வேலைப் பளுவில் கால்வாசி கூடத் தற்போது இல்லை.

தொழிற்சாலையில் அதிகப்படியான வேலைகள் குறைந்து வழக்கமான ஷிப்டுகள் மட்டும் வேலை ஓடிக் கொண்டிருக்க ரூபனும், ஜீவனும் நேரமே வீட்டுக்கு வந்து விட ஆரம்பித்தனர். ஜீவனுக்கான தொழிற்சாலை குறித்த வேலைகளை ஆரம்பிக்க இன்னும் சில மாதங்கள் கால அவகாசம் இருந்தது. அவற்றை ரூபனின் திருமணத்திற்குப் பின்பே ஆரம்பிக்க எண்ணியிருந்தனர்.

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த ரூபன் அனிக்கா திருமண நாளும் வந்தது. இருவர் வீடும், வீட்டிலுள்ளவர்கள் அகமும்,முகமும் மகிழ்ச்சியால், நிறைவால் ஜொலி ஜொலித்துக் கொண்டிருந்தது.

நாளுக்கு நாள் அனிக்காவின் முகப் பொலிவு கூடிக் கொண்டே சென்றது. அது ஒப்பனையாலா? மனதின் மகிழ்ச்சியாலா? என்று யாராலும் கணிக்க இயலவில்லை.

முன் தினம் ரூபனை ஆலயத்தில் பார்த்ததை அவள் நினைவு கூர தானாகவே மகிழ்ச்சியில் , வெட்கத்தில் அவள் முகம் மலர்ந்தது. எந்த ஒரு திருவருட்சாதனமாயினும் ( கிறிஸ்தவத்தில் திருமணமும் ஒரு புனித சடங்கு/அருட்சாதனம்) அதைப் பெறுவதற்கு முன்னதாக ஆலயத்தில் confession எனும் பாவ மன்னிப்பு பெறுதல் அவசியம். அதனால் பாவ மன்னிப்பு பெறும் நிகழ்விற்காக இருவருமே தங்கள் குடும்பத்தினரோடு ஆலயம் சென்றிருந்தனர்.

அனிக்காவும், ரூபனுமாக இருக்கும் தருணங்களில் பேசுகையில் அவளால் சகஜமாக அவனுடன் பேச முடிந்தாலும், வெளியிடத்தில் அல்லது குடும்பத்தினர் முன்பு எப்போதுமே அவளுக்கு அவனுடன் பேச உதறல் எடுக்கும். அதனால் அவனைக் கண்டும் காணாதவள் போல இருந்து கொண்டாள். அதிலும் அவர்கள் இப்போது வந்திருப்பது ஆலயம் வேறு, அந்தந்த இடத்திற்குரிய மரியாதையைப் பின்பற்ற வேண்டுமல்லவா?

தனித் தனியே சென்று குருவானவரிடம் தங்களது பாவ மன்னிப்பு பெறும் நிகழ்வை முடித்ததும், ஆலயத்திற்கு வெளியே வந்தாலும் யாரையும் நிமிர்ந்தும் பார்க்காமல் நின்றாள். திருமண நாட்கள் நெருங்க நெருங்க ஏற்கெனவே வெகுவாகப் பதட்டமாக உணர்ந்துக் கொண்டிருந்தவளுக்கு நாளையே திருமணம் எனும் போது இன்னும் பதட்டம் கூடிக் கொண்டிருந்தது.

ரூபன் அவனாகவே அருகில் வந்து அவளிடம் இரு நிமிடம் பேசி விடைப் பெற்றுச் சென்றான். ஜாக்குலின், ப்ரீதா, பிரபா இவர்களும் கூடவே இருக்க இவளை கேலியில் ஓட்டி எடுப்பதே அவர்களது முழு நேர வேலையாயிற்று.

மகளைப் பார்த்துக் கொண்டிருந்த பெற்றோருக்கும் மிகுந்த மன நிறைவே. தன்னையே கணவர் பார்த்துக் கொண்டிருப்பதை அறிந்தவராகத் தாமஸை சாரா பார்க்க அவரோ கண்களால் தன்னுடைய தவறுகளுக்காக மன்னிப்பை யாசித்துக் கொண்டிருந்தார். அவர் கையில் தன் கரத்தால் ஆதூரமாக அழுத்தி புன்முறுவல் காட்டிய சாராவின் முகபாவனை நடந்தவைகள் எல்லாம் கடந்து சென்றவைகளல்லவா? அதை விட்டு விடலாம் என்னும் தெளிவு இருந்தது.

அனிக்காவின் கைகளில் இரு நாள் முன்பு வரையப்பட்டிருந்த மெஹந்தி முன் தினம் சிகப்பாக இருந்து இப்போது கரும்சிகப்பாக மாறி அவள் கைகளை அழகு படுத்திக் கொண்டிருந்தது. அதன் அழகைப் பார்த்தவளாக லயித்து நினைவுகளில் ஆழ்ந்திருந்தவளை பிரபா எழுப்ப வந்தாள்.

அனிம்மா தூங்காமலா இருக்க? கல்யாணப் பொண்ணு இப்படி இருக்கலாமா? நாள் முழுக்க மாத்தி மாத்தி நிகழ்ச்சிகள் இருக்கப் போகுது. களைப்பாகிற போற?  எனக் கவலைப் பட்டாள்.

‘இல்லண்ணி இப்ப கொஞ்சம் முன்னாடி தான் எழுந்தேன்’ என்றவள் தன் சிந்தனைகள் கலைந்து புறப்படலானாள்.

அங்கோ ரூபனுக்கு இரவு முழுவதும் மகிழ்ச்சியில் தூக்கமே வரவில்லை. அவனுக்கு ஏற்கெனவே அதிகமாக நெருக்கமான நண்பர்களில்லை, தொழில்முறை நண்பர்களும், ஓரிரு கல்லூரி நண்பர்களும் மறுநாள் ரிசப்ஷனுக்கு வருவதாக இருக்க, அவன் வீட்டினரும் சில விஷயங்களில் மிகுந்த கண்டிப்பு காட்டுபவர்கள், பிள்ளைகளும் பெரியவர்களுக்கு அடங்கிச் செல்லுபவர்கள் என்பதால் அவனுக்குப் பாச்சிலர் பார்ட்டி எனும் தொல்லைகளில்லை. முழுக்க, முழுக்கத் திருமணக் கனவுகளில் ஆழ்ந்திருந்தான்.

மனைவிக்கான தன் அறையின் தற்போதைய மாற்றங்களை அடிக்கடி சரியாக இருக்கின்றனவா என்று பார்த்துக் கொண்டான். கனவுகள் நனவாகி கைச் சேரும் நாள் இன்று என்று தன்னை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்டவனாகப் புறப்படலானான்.

அனிக்காவை அலங்கரித்து ஆலயத்திற்க்கு அழைத்து வர ரூபன் வீட்டுப் பெரியவர்கள் பெண்கள், சிறியவர்கள் அனைவரும் சென்று விட்டனர். ஜாக்குலின் அக்காவின் கணவர் ராஜா, தீபன், ஜீவன் மற்றும் சில உறவினர்களோடு ரூபன் புறப்பட்டுத் திருமண ஹால் சென்றான். அங்கு அவனை எதிர் கொண்டழைத்து மரியாதை செய்யக் காத்திருந்தான் கிறிஸ்.

கடந்த சில நாட்களில் தன் தங்கையை உயிராய் பாவிக்கும் ரூபனை கிறிஸ் வெகுவாய் கண்டு கொண்டிருந்தான். தான் தேடிய தங்கைக்கேற்ற அழகான இணையாக இவனிருக்க நாம் இவனைக் கருத்தில் கொள்ளாதிருந்ததும், தாழ்மையாக நினைத்ததும் எப்படி? என்று எழும் கேள்விக்கு அவனிடம் பதிலில்லை. அப்பா எதிர்பார்த்த அளவு அவன் செல்வம் கொண்டவனில்லைதான். ஆனால், அமைதியாக உலகம் தெரியாதவன் போலக் காட்சியளிக்கும் இந்த ரூபனின் தொழில் செய்யும் திறமையைக் கிட்டே இருந்து பார்த்தால் அல்லவா புரிகிறது.

ஏற்கெனவே நான்கு கால் பாய்ச்சலில் சில வருடங்களில் அவன் அடைந்திருக்கும் அசுர வளர்ச்சி, இன்னும் வருடங்களாக வளருவானே அன்றித் தேய்பிறை காண வாய்ப்பில்லை. இவனுக்கே தன்னை அவனோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் தாழ்வு மனப்பான்மை வந்துவிடுமோ என்று தோன்ற வைத்திருந்தான் ரூபன்.

எல்லாவற்றையும் விட அவனுக்குத் தேவையானது ஒன்றே. அவன் தங்கையின் மகிழ்ச்சி. அவள் தன் வீட்டில் மகளாய், தங்கையாய் மகிழ்ச்சியாக இருப்பதைப் போலவே, அவனது மனைவியான பின்னரும் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கப் போகிறாள் என்னும் எண்ணம் அவனளவில் உறுதிப் பட்டிருந்தது.

அன்றொரு நாள் ஒரு மோசமான சூழலில் கன்னம் கன்னமாய் அவனுடைய அறைகளனைத்தையும் வாங்கிக் கொண்டு ஒரு வார்த்தை தன்னை எதிர்த்துப் பேசாத ரூபன், நிச்சயத்திற்கு முன்பான அத்தனை சந்திப்புக்களிலும் இவன் கொடுத்த அத்தனை குடைச்சலையும் பொறுமையாக ஏற்றுக் கொண்ட ரூபன், நினைக்க நினைக்க அவன் பொறுமையான குணம் கிறிஸ்ஸூக்கு ஆச்சரியம் தான்.

தங்கையின் திருமண நாள் நெருங்க நெருங்க என்னதான் இருந்தாலும் தன் தங்கையின் கணவன் ஆகப் போகிறவன், தான் கொடுத்த குடைச்சல்களால் எழுந்த கோபத்தைப் பின்னொரு நாள் தன் தங்கையிடம் காட்டி விடக் கூடாது என்றெண்ணியவனாக அவனிடம் தன்னுடைய ஈகோவை விட்டுக் கொடுத்து மன்னிப்புக் கேட்டான், அவன் கேட்கும் முன்னதாகவே ரூபன் பதறிவிட்டான்.

என்ன அத்தான் நீங்க? எதுக்கு மன்னிப்பெல்லாம்? நீங்களும் அண்ணனும் எனக்கு ஒண்ணுதான். நான் தப்பு பண்ணா என்னைக் கண்டிக்க உங்களுக்கு உரிமை இருக்கு. நான் அதையெல்லாம் பெரிசா எடுத்துக்கலை. சொல்லப் போனா அன்னிக்கு நீங்க என்னை அடிச்சதுக்கு அப்புறம் நமக்கு இந்தத் தண்டனை தேவைதான்னு மனசுக்கு ரொம்ப திருப்தியாச்சு என்றவன்  நிதானித்தவனாக

நீங்க கவலையே படவேண்டாம் அத்தான்… நான் அவளை ரொம்ப நல்லா பார்த்துப்பேன். அன்னிக்கு ஏற்கெனவே ரொம்பக் குழப்பம் ஓடிட்டு இருந்தது. அதில அனியும் அப்படிச் சொன்னதும் முட்டாள்தனமா கையோங்கிட்டேன். இன்னும் கூட எனக்கு நான் அப்படி நடந்து கிட்டது குற்ற உணர்ச்சியா இருக்கு. இனி ஒரு நாளும் அப்படித் தப்பைச் செய்ய மாட்டேன் என்று கிறிஸ்ஸின் மனதில் இருந்த கேட்காத கேள்விக்கும் அவன் பதில் கூறினான்.

அது மட்டுமா அவனது மனதை உறுத்திக் கொண்டிருந்த உறவு முறையிலான திருமணம் குறித்த கலக்கத்தை நிச்சயத்தின் சில நாட்கள் கழித்துத் தங்கள் இருவரின் ரத்த பரிசோதனை முடிவுகள் மற்றும் மருத்துவரின் கருத்தையும் அமைதியாக விளக்கிச் சென்றிருந்தான். ரூபனுடைய காதலின் வலிமையோ என்னவோ அவை அவனுக்குச் சாதகமாகவே இருந்தன.

அதே நிறைவு உணர்வோடு மேளதாளத்தோடு நீல நிற சூட்டில் அமர்க்களமாய் வந்து கொண்டிருந்த ரூபனையும், உறவினர்களையும் எதிர்கொண்டு சென்று வரவேற்றான் கிறிஸ். மகிழ்ச்சியில் ரூபனை அணைத்துக் கொள்ளவும் மறக்கவில்லை  என்னவிருந்தாலும் அவனது செல்லத் தங்கையின் கணவனாயிற்றே?

அனிக்கா அழகான அந்தத் தேன் நிற பட்டுச் சேலையில், மிக அழகான தலையலங்காரத்தில், தலையில் க்ரீடம் அணிந்து, அதை ஒட்டி தலை மறைத்து,இடை தாண்டி அழகான வெய்ல்-ல்(Veil) (வெள்ளை நிற நெட் துணியாலான பெண்கள் அணியும் தலை முக்காடு) பரவி நிற்க தேவதையாய் கண்ணைப் பறித்தாள்.

ரூபனுக்கான அனைத்து வரவேற்பையும் முடித்து, தங்கை வீட்டை விட்டு மணமகளாய் விடைபெறும் போது அவளைப் பார்க்கவென கிறிஸ் அவசரமாய் வீட்டிற்க்கு திரும்ப வந்திருந்தான்

அனிக்கா திருமணத்திற்கு ஆயத்தமாகி நின்ற அந்த நேரத்தில் குடும்பத்தினர் அனைவரும் மிகவே உணர்ச்சிவசப்பட்டிருந்தனர். அப்பா, அம்மா, அண்ணா, அண்ணி என ஒவ்வொருவரிடமும் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டிருந்தாள்.

திருமண உடையோடு தன்னருகில் வந்தவளை தாமஸ் அணைத்துக் கொண்டார், எப்போதும் தன்னைச் சுற்றி சுற்றி வரும் மகள் திருமணமாகி மற்றோர் வீட்டிற்குச் செல்லப் போகிறாள் என்னும் பிரிவுத்துயரம் வெகுவாய் அழுத்த ஆண்கள் அழக் கூடாதெனும் பழைய மானுட கொள்கை ஒன்றுதான் அன்று அவரை அழ விடாமல் காத்துக் கொண்டது எனலாம்.

தன்னுடைய எண்ணம் போல் இல்லையென்றால் என்ன? தான் மறுத்த வரனுடனே மகளின் திருமணம் நடைப்பெற்றால்தான் என்ன? இப்போது காணக் கிடைக்கும் அவள் மனமகிழ்ச்சி மட்டும் தானே அவருக்கு வேண்டியது.மகளின் நெற்றியில் முத்தமிட்டவர், ஆசீர்வாதமாய் ஜெபித்துச் சிலுவை வரைந்தார்.

அடுத்து மகளை அணைத்துக் கொண்ட சாராவின் நிலை இன்னும் நெகிழ்வாய், எந்நேரமும் கைக்குள் வளைய வருபவள், தொண தொணவெனப் பேசி,

 நீ என் மாமியாரா அனி?” என அடிக்கடி திட்டு வாங்குபவள், தன்னை அவ்வப்போது கணவரிடம் மாட்டி விட்டு வேடிக்கைப் பார்ப்பவள், தாய்க்கு சுகமில்லை என்றதும் கலங்கிய முகத்தோடே நாள் முழுதும் இருப்பவள். தன்னுடைய சுகவீனத்தின் பொழுதுகளில் சிறு பிள்ளையாய் அன்னை மடி தேடுபவள்… சாராவின் வாழ்வின் அத்தனை வண்ணக்கலவையும் அவரது மகள் அல்லவா? மகள் செல்லப் போவது தன் அண்ணன் வீடாயினும் தன்னை விட்டு பிரியும் அந்தத் தருணம் அவருக்கு மிகவும் மனவருத்தம் தந்தது. அணைப்பிலும், முத்தத்திலும் அவர் அன்பை வெளிப்படுத்தியவர், மகள் நெற்றியில் சிலுவை வரைந்து முகம் திருப்பி வெளியே தெரியாமல் கண்ணைத் துடைத்து விட்டுக் கொண்டிருக்க அவரைப் பிரபா ஆறுதலாக அணைத்துக் கொண்டாள்.

கிறிஸ் எல்லா நேரமும் தங்கையிடம் இளக்கமாய்ப் பேசுபவனல்ல. கண்டிப்பும் கறாருமாய் இருப்பவன் தான், ஆனால் தன்னைத் தவிர வேறு யாரையும் அவளைக் கண்டிக்க விட்டதில்லை. ரூபன் விஷயத்தில் தன்னுடைய விருப்பத்தை அவனிடம் சொல்லவில்லை என்கின்ற ஆதங்கம் தவிர அவளிடம் இதுவரை ஒரு மனக் குறையும் அவனுக்கு ஏற்பட்டதில்லை. அதுவும் தற்போது கொஞ்ச கொஞ்சமாய் மறைந்தே போனது.

அண்ணாவெனத் தன் தோள் சாய்ந்தவளை தலை வருடியவன் தன்னைத்தானே தேற்றிக் கொள்பவனாக …… 

ஏ அனிகுட்டிமா, என்ன இங்கே ஒரே இமோஷனல் சீன் போயிட்டிருக்கு, நீ கல்யாணத்துக்கு அப்புறமா எங்களை விட்டுத் தூரமாவா போகப் போற இங்க பக்கத்தில தானே இருக்கப் போற  இதுக்கெல்லாமா இப்படி ஃபீல் செய்யுற  … என்றான். அம்மாவின் கண்ணீரும், அப்பாவின் சோகமும் அவளையும் தாக்கியிருக்க, அழுகை வெடித்து விடும் போலிருந்த அவள், தன் முகபாவனையைச் சரியாக்க முயன்று சற்றே விசும்பினாள்.

கண்ணீர் துளிர்த்திருந்த தன் கண்களைச் சிமிட்டியவாறு விரல்களால் துடைக்கப் போகப் பிரபா மேக் அப் கலைந்து விடாவண்ணம் அவளருகே வந்து சரி செய்து விட்டாள். சுற்றியிருந்தோரும், கிறிஸ்ஸிம் பிரபாவும் அனிக்காவை உற்சாகப் படுத்தும் படி பேசி அவள் முகத்தில் புன்முறுவல் வரும்வரை விடவில்லை.

‘அத்தைக் கூட இருந்து கவனிச்சுக்கோ ஹனி பாப்பா’, எனச் சின்னவள் கரத்தில் அனிக்காவை ஒப்படைத்தாள் பிரபா  இங்கு நிகழும் அத்தனையும் லைவ்வாக ரூபனுக்கு ஒளிபரப்பிக் கொண்டிருந்தாள் அவனின் பிரியத்திற்குரிய ஜாக்கி அக்கா.

அந்த லைவ் வீடியோவில் முதலில் அனிக்காவின் திருமண லுக்கின் அழகில் தொபுக்கடீர் என்று விழுந்து விட்டிருந்த ரூபன், பின் அவள் கண்கலங்கும் சீனில் எல்லாம் மனம் வருந்த, அதன் பின்னரான அவள் புன்னகை மேக மூட்டமான வானத்தினின்று சட்டென்று வெளிப்பட்ட நிலவின் அழகைப் போலிருக்க அதில் லயித்திருக்க, இதை ஒன்றும் அறியாத தீபன்…

 இப்ப எதுக்கு மொபைல நோண்டிட்டு இருக்க? நாம சர்ச்க்கு வந்திட்டோம்…அதை உள்ள வைடா ……” என அவனை அதட்டினான். ஜீவனோ ஓரக்கண்ணால் ரூபன் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு கிண்டலாகச் சிரித்து ரூபனிடம் முறைப்பை வாங்கிக் கொண்டான்.

ஏற்கெனவே ஒரு சில உறவினர்கள் திருமணத் திருப்பலி காண ஆலயத்தின் உள்ளே அமர்ந்திருந்தனர். மணமகனும் அவனோடு கூட வந்திருந்த மற்ற ஆண்களும் உள்ளே போய் அமர்ந்தனர். திருமணத் தயாரிப்புக்கள் எல்லாம் சரியாக நடக்கின்றனவா? எனப் பார்க்க ரூபனின் தந்தையும் அண்ணனும் விரைந்தனர்.

வீடீயோ கவரேஜ் அன்றைய கதா நாயகன் மற்றும் கதா நாயகியின் ஒரு செயலையும் விடாமல் அத்தனையையும் உள்வாங்கிக் கொண்டிருந்தது.

சட்டென்று ஆலயம் பரபரக்கவே, ரூபன் தன்னுடையவளின் வருகையை எதிர்பார்த்துத் திரும்பினான். இப்போது நண்பர்கள் உறவினர்கள் கேலியை சட்டை செய்ய அவன் தயாரில்லை.

முன்னே சின்னஞ்ச்சிறார்கள் வர தாமஸ் தன் மகளை ஆலயத்திற்க்கு உள்ளே அழைத்து வந்தார், பின்னே ஏனைய உறவினர்கள் அனைவரும் வரலாயினர்.

சுற்றியுள்ளோர் பார்வை அனைத்தும் அனிக்காவை நோக்கியே இருக்க, கூச்சத்தோடு சற்று குனிந்தவாறு ஆலயத்தின் வாயிலிலிருந்து திருப்பீடத்தின் முன்னால் மணமக்களுக்காக அமைத்திருந்த இருக்கை வரை தந்தையோடு அவள் மென் நடையோடு வந்து சேர்ந்தாள். அவளழகுக்குப் போட்டியாக அவளது கரத்தில் மலர்க் கொத்தொன்று வீற்றிருந்தது.

பலவருடக் கனவொன்றை கண்முன்னே நிஜமாகப் பார்க்கின்றவனுக்கு எப்படி இருக்கும். அப்படித்தான் இருந்தான் ரூபன். மனம் மகிழ்ச்சியில் விம்மியது. அவனது வாழ்வில் முன்பொருபோதும் இதுபோல மகிழ்ச்சியை உணர்ந்ததில்லை என்றே எண்ணினான்.

தன்னருகில் அமர்ந்திருந்தாலும், வெட்கத்தில் தலை குனிந்தே அமர்ந்திருப்பவள் தன்னைப் பார்க்க மாட்டாளா? என அனிக்காவின் ஒரு பார்வைக்கு ஏங்கினான்.

திருப்பலியும் ஆரம்பமானது, வழக்கமான செபங்களோடு கூடத் திருமணத்திற்கென்றே விசேஷமாகக் கணவன் மனைவி வாழ்வு எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கான பைபிள் பகுதிகள் வாசிக்கப் பட்டன.

பின்பு ஆண்டவராகிய கடவுள், மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன் என்றார். ஆண்டவராகிய கடவுள்மண்ணிலிருந்து எல்லாக் காட்டு விலங்குகளையும் வானத்துப் பறவைகளையும் உருவாக்கி, அவற்றிற்கு மனிதன் என்ன பெயரிடுவான் என்று பார்க்க, அவற்றை அவனிடம் கொண்டுவந்தார். உயிருள்ள ஒவ்வொன்றுக்கும் அவன் என்ன பெயரிட்டானோ அதுவே அதன் பெயராயிற்று.

கால்நடைகள், வானத்துப் பறவைகள், காட்டு விலங்குகள் ஆகிய எல்லாவற்றிற்கும் மனிதன் பெயரிட்டான்; தனக்குத் தகுந்த துணையையோ மனிதன் காணவில்லை.ஆகவேஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்து, அவன் உறங்கும் பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, எடுத்த இடத்தைச் சதையால்அடைத்தார்.

ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்துவந்தார்.அப்பொழுது மனிதன், “இதோ! இவளே என்எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்; ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால், இவள் பெண் என்று அழைக்கப்படுவாள்” என்றான்.இதனால் கணவன் தன் தாய் தந்தையைவிட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர்.

இவ்வாறு முதல் பைபிள் பகுதி வாசிக்கப் பட அடுத்தபடியாக,

திருமணமான பெண்களே, உங்கள் கணவருக்குப் பணிந்திருங்கள்.இதனால், அவர்களுள் சிலர் கடவுளுடைய வார்த்தையை ஏற்காதிருந்தாலும் மரியாதையுடைய உங்கள் தூயநடத்தையைக் கண்டு, கவரப்பட்டு நல்வழிப்படுத்தப்படுவர். அப்போது வார்த்தையே தேவைப்படாது.முடியை அழகுபடுத்துதல், பொன் நகைகளை அணிதல், ஆடைகளை அணிதல்போன்ற வெளிப்படையான அலங்காரமல்ல,மாறாக, மனித உள்ளத்தில் மறைந்திருக்கும் பண்புகளாகிய பணிவும் அமைதியுமே உங்களுக்கு அழியாத அலங்காரமாய் இருக்கட்டும். கடவுள் பார்வையில் அதுவே விலையுயர்ந்தது. முற்காலத்தில் கடவுள்மேல் நம்பிக்கை கொண்டிருந்த தூய பெண்களும் இவ்வாறுதான் தங்களை அணி செய்து கொண்டார்கள்; தங்கள் கணவருக்குப் பணிந்திருந்தார்கள்.அவ்வாறே, சாரா ஆபிரகாமைத் “தலைவர்” என்றழைத்து அவருக்குக் கீழ்ப்படிந்திருந்தார். நீங்களும் நன்மை செய்து, எவ்வகைஅச்சுறுத்தலுக்கும் அஞ்சாதிருப்பீர்களென்றால் சாராவின் புதல்வியராய் இருப்பீர்கள்.

அவ்வாறே, திருமணமான ஆண்களே, உங்கள் மனைவியர் வலுக்குறைந்தவர்கள் என்பதை நீங்கள் உணர்ந்து, அவர்களோடு இணைந்து வாழுங்கள். வாழ்வுதரும் அருளுக்கு உடன்உரிமையாளராக இருப்பதால் அவர்களுக்கு மதிப்புக் கொடுங்கள். அப்போதுதான் நீங்கள் தடையின்றி இறைவேண்டல் செய்ய முடியும்.

இறுதியாக, நீங்கள் எல்லாரும் ஒருமனப்பட்டிருங்கள். பிறரிடம் இரக்கமும் சகோதரர் அன்பும் பரிவுள்ளமும் மனத்தாழ்மையும் கொண்டிருங்கள். தீமைக்குப் பதில் தீமைசெய்யாதீர்கள்; பழிச்சொல்லுக்குப் பழிச் சொல் கூறாதீர்கள்; மாறாக, ஆசி கூறுங்கள். ஏனென்றால் கடவுள் வாக்களித்த ஆசியை உரிமையாக்கிக் கொள்வதற்கேஅழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.

என்னும் பைபிளின் மற்றொரு பகுதியும் வாசிக்கப் பட்டது.

அதனைத் தொடர்ந்து திருமணச் சடங்கு ஆரம்பிக்க, குருவானவர் மணமகன் மணமகள் பெற்றோரை அழைக்க, அனிக்காவின் அருகில் தாமஸிம் சாராவும், ரூபனின் அருகில் ராஜீம் இந்திராவும் வர சுற்றி நெருங்கிய சொந்தங்கள் சூழ்ந்தனர்.

ரூபன், அனிக்கா நீங்கள் இருவரும் முழுமனச் சுதந்திரத்துடன் திருமணம் செய்து கொள்ள எவ்வித வற்புறுத்தலுமின்றி இங்கு வந்திருக்கின்றீர்களா? என்று கேட்டு முதலில் ரூபனிடம் மைக்கை நீட்ட அவன் ஆம் என்றான்.

அடுத்ததாக அனிக்காவின் முன்னால் மைக்கை நீட்ட பக்கத்தில் ஜீவன் முகம்கொள்ளாச் சிரிப்புடன், ‘இல்லைன்னு சொல்லு அனி’ என்று ரூபன் காதருகில் வந்து விசமமாய்ச் சொல்லி வைக்க அதுவரைக்கும் தலைத்தாழ்ந்து இருந்தவள் ஒரு நொடி தலை நிமிர்ந்து எதிரில் நிற்கும் ரூபனைப் பார்த்து எழுந்த முறுவலை அடக்கி தன்னை நோக்கி நீட்டபட்ட மைக்கில் “ஆம்  என்று தன் சம்மதத்தைச் சொன்னாள்.

அனிக்காவின் நொடி நேர பார்வையும், முறுவலும் நினைவு கூறத்தக்க மென் நிகழ்வாய் ரூபனின் மனப்பெட்டகத்தில் சேர்ந்து கொண்டது.

அடுத்தச் சில செபங்களைத் தொடர்ந்து குருவானவர்

நீங்கள் திருமண ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புவதால் உங்கள் வலது கைகளைச் சேர்த்துப் பிடியுங்கள்.இறைவன் திருமுன், திருச்சபையின் முன்னிலையில் உங்கள் சம்மதத்தைத் தெரிவியுங்கள்.” எனக் கூறவும் ரூபன் தன் வலக்கரத்தோடு அனிக்காவின் வலது கரத்தைப் பற்றிக் கொள்ள அவர்கள் இணைந்த கரங்கள் மேல் மந்திரிக்கப் பட்ட நீரை தெளித்து ஆசீர்வதிக்க இருவரும் ஒருவர் பின் ஒருவராகத் தங்கள் வாக்குறுதியை அளித்தனர்.

ரூபன் என்னும் நான் அனிக்கா என்னும் உன்னை என் மனைவியாக ஏற்றுக் கொள்கின்றேன். இன்பத்திலும், துன்பத்திலும், உடல் நலத்திலும், நோயிலும் நான் உனக்குப் பிரமாணிக்கமாயிருந்து என் வாழ் நாளெல்லாம் உன்னை நேசிக்கவும், மதிக்கவும் வாக்களிக்கிறேன்.

அனிக்கா என்னும் நான் ரூபன் என்னும் உங்களை என் கணவராக ஏற்றுக் கொள்கின்றேன். இன்பத்திலும், துன்பத்திலும், உடல் நலத்திலும், நோயிலும் நான் உமக்குப் பிரமாணிக்கமாயிருந்து என் வாழ் நாளெல்லாம் உம்மை நேசிக்கவும், மதிக்கவும் வாக்களிக்கிறேன்.

அவர்கள் வாக்குறுதியைத் தொடர்ந்து குருவானவரின் தொடர்ந்த செபம் முடிந்து அவர் திருமாங்கல்யம் ஆசீர்வதித்துக் கொடுக்க,

ரூபன் “அனிக்கா என் அன்புக்கும் பிரமாணிக்கத்திற்கும் அடையாளமாக இந்தத் திருமாங்கலியத்தைப் பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயராலே அணிந்துக் கொள்  எனக் கூறி அவளுக்கு அணிவித்தான்.

அதே நேரம் ஆலயத்திற்க்கு வெளியே வெடிகள் வெடிக்கப் பட, அனைவரும் மகிழ்ச்சியோடு மணமக்களைப் பார்த்திருக்க, சுற்றியிருந்த கேமெராக்கள் அக்காட்சிகளை விழுங்கிக் கொண்டிருந்தன.

அடுத்து மணமக்கள் ஒருவருக்கொருவர் மாலை அணிவித்தனர். தொடர்ந்த திருப்பலி செபங்கள் நிறைவுபெற திருமணக் கையேட்டில் மணமக்கள் இருவரும் கையொப்பமிட்டு வந்ததோடு அந்த திருமணச் சடங்குகள் நிறைவுப் பெற்றன. உடனே போட்டோ எடுக்கும் வைபவம் பரபரவென ஆரம்பித்தது.

ஆலயத்தினுள்ளே திருப்பலி ஆற்றிய குருவானவர்களோடும், குடும்பத்தினரோடும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். தந்தையின் கரம் பற்றி ஆலயத்தின் உள்ளே வந்தவள், ரூபனின் மனைவியாக அவன் கரம் பற்றி ஆலயத்தின் உள்ளே இருந்து வெளியே வரலானாள். ரூபனின் மனைவியாகிய அந்த உரிமை தந்த மகிழ்வு, தான் எண்ணிய வண்ணம் சற்றும் குறையாமல் தன் திருமணம் நடந்த நிறைவும் களிப்பும், அனிக்காவின் முகத்தில் பெருமிதமாக வெளிப்பட்டது.

ரூபனின் மகிழ்ச்சியும் அதற்குச் சற்றும் குறைந்தது அல்ல, தன்னுடையவளை இரு வீட்டார் சம்மதத்தோடு, குறைவு படாத மரியாதையோடு முக்கியமாய் அவள் முகத்தில் இன்றைக்குக் காணப்படும் குழப்பமற்ற அந்த நிமிர்வோடு தான் கைப்பிடித்தது எண்ணி பெருமிதம் கொண்டான். பல நாள் கனவு, பற்பல மனச் சங்கடங்கள், தவறுகள், வருத்தங்கள் கடந்து கிடைத்த நிறைவு அவன் முகத்தை மலரச் செய்திருந்தது.

அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி மகிழ்ச்சி, மகிழ்ச்சி தவிர வேறொன்றுமில்லை. ஜீவன் பொறுப்பாக ஒரு பக்கம் எல்லாவற்றையும் கவனித்துச் செய்பவற்றைச் செய்து கொண்டு, இன்னொரு பக்கம் கிடைத்த வாய்ப்பிலெல்லாம் மணமக்கள் இருவரையும் கிண்டலடித்துக் கொண்டு சிரிக்க வைத்துக் கொண்டிருந்தான்.

தன்னுடைய ஒரே மகளுக்கான திருமணத்தைத் தாமஸ் எவ்வாறு பிரமாண்டமாக நடத்துவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தவண்ணமே எல்லாம் அமைந்திருந்தது. திருமண ஹாலும், மேடை அமைப்பும், உணவு ஏற்பாடுகளும் அத்தனையும் மிகச் சிறப்பாக அவர் ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த ஹாலிற்குப் புதுமணத் தம்பதிகள் வரவே ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நடத்துபவர்கள் ஏற்பாடுகளின் படி மணமக்களுக்கு வரவேற்பும், ஒருசில நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கேக் வெட்டினர். அடுத்ததாக ரிசப்ஷன் ஆரம்பமானது.

ஒரு பக்கம் உறவினர்களோடு கூடத் தாமஸ் மற்றும் கிறிஸ் தொழில் முறை நண்பர்களென்றால், இன்னொரு பக்கம் ரூபனின் தொழில் முறை நண்பர்கள் எனச் செல்வாக்கு மிகுந்த பெரிய ஆட்களாக வர அவர்களை மரியாதை குறைவு ஏற்படாமல் கவனித்து அனுப்ப வேண்டுமென்பதே அனைவரின் கவனமாக இருந்தது. ரூபன் மறவாமல் டாக்டர் ராஜேஷையும் சமாதானப்படுத்தித் திருமணத்திற்கு அழைத்திருந்ததால் அவரும் தன் குடும்பத்தோடு வந்திருந்தார். ஷைனி தன் திருமணத்திற்குப் பின்னர் வெளிநாட்டிலேயே இருந்து விட்டதால் இவர்கள் திருமணத்தில் கலந்துக் கொள்ளவில்லை. இந்தியாவில் இருந்திருந்தாலும் அவள் கலந்து கொள்வது சந்தேகமே.

அனிக்கா மற்றும் ரூபனுக்கு வாழ்த்துச் சொல்ல வந்த அவள் தோழிகள் அனைவரும் மேடையைக் கலகலப்பாக்கிச் சென்றனர் அதில் திவ்யாவும் உண்டு.

திவ்யாவின் பார்வை அனிக்கா ரூபன் நிச்சய விழாவின் போது போலவே தற்போதும் உறவு முறைப் பெண்களை வரவேற்றுப் பேசிக் கொண்டிருக்கும் ஜீவன் பக்கமே இருந்தாலும், அதில் இப்போது பொறாமை என்பது துளியும் இல்லை. அவளும் தன் தோழிகளிடமிருந்து விலகி வந்து அவள் பங்கிற்கு அவனோடு இணைந்து அவர்களோடு அளவளாவலானாள்.

ரூபனின் கல்லூரி நண்பர்கள் வந்து பரிசுகளை அளித்துச் சென்றனர். அஷோக் தன் மனைவியோடு வந்து தந்த பரிசு மட்டும் கொஞ்சம் பெரியதாய் இருக்க ரூபன் என்னவென வினவினான். ‘சர்ப்ரைஸ்’ எனச் சொல்லி அசோக் அவனுக்கு மட்டும் தெரிய கண்ணடித்தவன், கிஃப்ட் பார்த்துட்டு அப்புறமா சொல்லு எனச் சொல்லிச் சென்றான். அதனை உடனே பிரித்துப் பார்க்க ஆர்வம் இருந்தாலும் தொடர்ந்து வரிசைக் கட்டியிருந்த நண்பர்கள், குடும்பத்தினர் வாழ்த்துக்களைப் பெற வேண்டியிருந்ததால் சரி எனச் சொல்லி, அவனுக்கு விடையளித்தான்.

மணமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த கூட்டம் சற்றுக் குறைந்ததும் அவர்களைச் சாப்பிட அழைத்துச் சென்றனர். அங்கும் அவர்களைப் போட்டோகிராஃபர் விடாமல் தொடர்ந்தார். போட்டோ எடுப்பதற்காக ஒருவருக்கொருவர் உணவை ஊட்டி விடச் சொல்ல சிரிப்பும் வெட்கமுமாக மணித்துளிகள் கடந்தன.

ரிசப்ஷன் முடிந்து, ரூபன் வீட்டிற்குப் பெண்ணை அழைத்துச் செல்ல வேண்டிய தருணம் வந்தது. அனிக்காவோடு துணையாகப் பிரபாவும் ஹனியோடு வர, அவர்கள் ரூபன் வீட்டை நோக்கி புறப்பட்டனர். அவர்களைத் தவிர அனிக்காவின் பெற்றோர் மற்றும் ஏனைய பெண் வீட்டினர்கள் சாயங்காலத்தின் மாப்பிள்ளை வீட்டு விருந்திற்குச் செல்ல தேவையான ஏற்பாடுகள் செய்யத் தயாரிக்கச் சென்றனர்.

 மணமகளே மருமகளே வா, வா  என்னும் காலங்கள் கடந்தும் மறையாத அந்தப் பாடல் பிண்ணனியில் ஒலிக்க ரூபனின் மனைவியாகக் காரிலிருந்து இறங்கி கணவனோடு அனிக்கா வீட்டின் வாயிலில் நிற்க ஆலம் கரைத்து, திருஷ்டி சுற்றி மணமக்களை இந்திரா வரவேற்றார். அங்கு அவர்களுக்கான இருக்கைகளில் அமர்த்திப் பாலும் பழமும் கொடுத்து ஒருவருக்கொருவர் ஊட்டச் சொல்லி சொல்லப் போனால் ஒருவகையில் ராகிங்க் செய்து அதன் பின்னரே விட்டனர்.

அதனைத் தொடர்ந்து ரிசப்ஷனிற்கு வந்திராத ஒரு சில அக்கம் பக்கத்தவர், மற்றும் உறவினர்களின் வருகையும், அவர்களிடம் பரிசுகளும் வாழ்த்துக்களும் வாங்குவதுமாய் நேரம் கழிந்தது. அதுவரை இருவர் தோள்களையும் அழுத்திக் கொண்டிருந்த மாலைகளைக் கழற்ற சொல்ல அவர்களுக்கு ஆசுவாசமாயிற்று.

ரூபன் வீட்டில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் மாப்பிள்ளை வீட்டு அசைவ விருந்து பரபரப்பாகத் தயாராகிக் கொண்டிருந்தது. நெருங்கிய உறவினர்கள் மட்டும் என்றாலும் கூட ஊரிலிருந்து வந்த பெரும்பாலானவர்கள் ஏறத்தாழ முக்கால் வாசி ஊரே அங்கிருந்ததால் அங்குக் கலகலப்பிற்க்கு பஞ்சமில்லை. ரூபன் இப்போது அனிக்காவோடு இல்லாமல் உறவினர்களோடு ஆண்கள் கூட்டத்தில் அமர வேண்டியதாயிற்று, அங்கு அவன் பேச வேண்டியதற்கும் சேர்த்து ஜீவன் பேசிக் கொண்டிருந்தான்.

 அடுத்தால நம்ம சின்ன மாப்பிள்ளைக்குத்தான் கல்யாணம்  என ஒருவர் பேச்செடுக்க,

இல்லாத மீசையை முறுக்கிக் கொண்டான் ஜீவன்.

அதே நேரம் அனிக்காவை காணவில்லையே என ரூபன் தேடிக் கொண்டிருந்தான். வீட்டிற்கு வந்ததும் வராததுமாக அவள் பிரபாவிடம் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தான், பின்னர் பிரபா இந்திராவிடமும், பெரியவர்கள் ஓரிருவரிடமும் பேசியதைப் பார்த்தான். இவளுக்கு அப்படி என்ன எனக்குச் சொல்லாமல் ரகசியம் வேண்டிக் கிடக்கிறது, பொறாமையில் வெந்தான்.

சாயங்காலம் ஆனதும் பெண்கள் வீட்டினர் பரபரப்பாக வந்து இறங்கினர். வாழைக் குலை, அரிசி மூட்டை, பண்ட பாத்திரங்கள், அனிக்காவின் உடைகள் அடங்கிய சூட்கேஸ், திருமணத்தில் கிடைத்த பரிசுப் பொருட்கள், ஏராளமான முறுக்குக் கூடைகள் எக்ஸெட்ரா எக்ஸெட்ரா பொருட்கள் வந்து சேர்ந்தன. பொருட்கள் வைக்க இடம் போதாமல் தேடவேண்டியிருந்தது. பெண் வீட்டிலிருந்து வந்தவர்களை முறையாக உபசரித்தனர்.

அப்போதுதான் ரூபன் தன் பெற்றோரை குடும்பத்தை வரவேற்க வந்து நின்ற அனிக்காவின் முற்றிலும் மாறி இருந்த தோற்றத்தை கவனித்தான். அவன் கண்களை அவனாலே நம்ப முடியவில்லை. அவன் விருப்பத்திற்காகத்தான் தன் அண்ணி மூலமாக அம்மாவிடமும், பெரியவர்களிடமும் பேசி அவனுக்குப் பிடித்த அந்த மெரூன் வண்ண சேலையை இப்போது அவள் அழகுற உடுத்தி இருந்தாள். தனக்குப் பிடித்தமான அந்த வண்ணச் சேலையில் அனிக்காவை பார்க்க பார்க்க ரூபனுக்கு தெவிட்டவில்லை.

காலையில் அந்தத் தேன் நிற சேலையும், அதற்கேற்ற ஒப்பனைகளும், க்ரீடமும், வெய்லுமாய்த் தேவதையாய் தன் கையில் மலர்ச்செண்டு ஏந்தி தன்னருகில் வந்திருந்தவளின் அழகிலேயே முற்றும் முழுதுமாய்க் கொள்ளைப் போயிருந்தவன், இப்போதோ ஏற்கெனவே அவனுடைய மகாராணி ஆகி இருந்தவள் தன்னுடைய கிரீடம் களைந்து ஆலயத்திற்க்காக அணிந்திருந்த முக்காட்டை அகற்றியவளாய் வேறொரு தலையலங்காரத்தில் அவனுக்குப் பிடித்த நிறச் சேலையில் அவனை அசரடித்துக் கொண்டிருந்தாள். அவள் அழகைப் பார்க்கையிலேயே ரூபனுக்கு மூச்சு திணறியது.

முத்தழகியே

கொஞ்சம் எனக்கு

மூச்சு விட வாய்ப்புக் கொடு

விடாமல் என்னை

அழகென்னும் ஆயுதம் கொண்டு

அதிரடியாய்த் தாக்குகிறாய்.

மூச்சு விடாமல் என்னை

மூர்ச்சையாகும் வரை

வீழ்த்துகிறாய்.

எழாமல் நானுமே

உன்னை-எந்தன்

கண்களால் விழுங்கப் பார்க்கையிலே

ஓரவிழி பார்வை பார்த்தே

இமை அசைவினில்- எந்தன்

உயிரினையே மீட்டுகிறாய்.

அவனுக்காகவே தான் உடுத்திய அந்தச் சேலைக்கான எதிரொலி ரூபனிடமிருந்து எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனிக்காவிடம் இருந்தாலும், இப்படியா வெட்கம் கெட்டவனாக எல்லோர் முன்னிலும் பார்த்து வைப்பான் என்று அவன் பார்வைக் கண்டு நாணம் கொண்டாள். அவனைக் கண்ணொடு கண் பார்க்க இயலாதவளாய் ஓரவிழி பார்வைப் பார்த்து வைத்தாள். அப்போதும் அவன் பார்வை மீளாமல் இருக்க வெட்கத்தில் தலையைக் குனிந்துக் கொண்டாள்.

இரவு உணவு உண்பதற்கு முன்னதான சில சம்பிரதாயங்கள் நடைபெற இருந்தன. தற்போது மாறி வரும் காலகட்டத்திற்கேற்ப இவையெல்லாம் அருகி வருகின்றன என்றாலும், ரூபன் அனிக்கா திருமணம் ஒரே குடும்பத்தில் என்றதாலும், உடன் பிறப்புக்கள் ராஜ், சாரா பெற்றோர்கள் இடத்திலிருந்து வழி நடத்திக் கொண்டிருந்த பெரியவர்கள் முறைப்படி எல்லாம் நடக்க வேண்டும் என்று காட்டிய அக்கறையாலும் அந்த நிகழ்வு ஆரம்பித்தது.

இப்போது மணமகன் தரப்பும் மணமகன் தரப்பும் எதிர் எதிராக அமர்ந்துக் கொண்டனர், அனிக்கா மணமகள் தரப்பில் தன் சொந்தங்களோடு அமர்ந்திருக்க, எதிரில் ரூபன் மணமகன் தரப்பிலாக அமர்ந்திருந்தான்.

ஒரே குடும்பம் என்றதால் அனிக்காவின் தரப்பில் தாமஸ் சொந்தங்கள் தவிர மற்றெல்லோரும் எந்த அணியின் போய்ச் சேருவதென யோசித்து அமருவதற்க்குள்ளாக பஞ்சமில்லாமல் சிரிப்பும், கேலியும் நடைப் பெற்றது.

ரூபனின் அருகில் அல்லது அணியில் சுற்றி இருந்த அவன் குடும்பத்தினர் அருகில் அனிக்கா வீட்டிலிருந்து வந்த முறுக்குப் பெட்டிகள் வீற்றிருந்தன. அடுத்து என்ன நிகழப் போகிறது என முன்பின் நிகழ்வைப் பார்த்திராதவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது.

அனிக்காவின் தாய், பெரியம்மா, சித்தி முறை அனைவரும் ஒவ்வொருவராக அனிக்காவின் அத்தான் முறையிலான அனைவருக்கும் அதாவது ரூபனின் அண்ணன் தம்பி முறையிலான அனைவருக்கும் பரிசாகப் பணம் வழங்க வேண்டும்.

இங்கே பரிசுப் பணம் என்பது பெரிய தொகை என்பதல்ல, அவரவர் வசதிக்குக் கொடுப்பது தான். ஒரு வகையில் இரு குடும்பங்களும் ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்திக் கொள்ளும் நிகழ்வு எனலாம்.

முதலில் சாரா மருமகன்களுக்குக் கொடுக்க ரூபாய் எடுக்க அதனைப் பெரியவர் ஒருவர் அறிவித்தார், இப்போ மாமியார் பெரிய மருமகனான தீபனுக்குப் பரிசு பணம் அனுப்பி வைக்கிறார் எனவும், கூட்டத்தில் கொஞ்சம் பெரிய நோட்டா அனுப்புங்க என்பதான கேலிப் பேச்சுக்கள் நடைபெற அனிக்கா வெற்றிலை, பாக்கு, மஞ்சளோடு இருந்த அந்தத் தாம்பாளத்தட்டை ஏந்தி பரிசை மாப்பிள்ளை வீட்டார் பக்கம் வர ரூபன் அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டான்.

எதிரணியிலிருந்து தங்களுக்காகப் பரிசை கொண்டு வந்த மருமகளை வரவேற்ற இந்திரா அள்ளி அள்ளி அந்தத் தட்டில் முறுக்கை எடுத்து வைக்க, இன்னும் கொஞ்சம் வைங்க  எனச் சில சிபாரிசுகளும், என் மருமகளுக்குக் கொடுக்காமலா? எனப் பதில்களுமாய்த் தொடர்ந்தது நிகழ்வுகள். அடுத்து ஜீவனுக்குப் பரிசுப்பணம், மறுபடி மாமியாரிடமிருந்து முறுக்கைக் கொண்டு போய் அம்மா இருக்குமிடம் சென்று கொடுக்க அந்த முறுக்கு உடனே அங்கேயே பகிரப் பட்டது. சாராவின் உடன் பிறந்த சகோதரிகள் இல்லையாயினும் அவரது ஒன்று விட்ட சகோதரிகள் பெயர் சொல்லி மருமகன்களுக்குப் பரிசுப்பணம் கொடுக்க, இப்போது ரூபன் தவிர அவர்களது உறவில் ராஜின் ஒன்று விட்ட அண்ணன் தம்பிகள் மகன்களுக்கும் சேர்த்து பரிசுப் பணம் இங்குக் குவிய, முறுக்குகள் அங்கு இடம் மாறின.

முன் பின் தெரியாத இரு குடும்பங்களில் திருமணம் நிகழும் போது பெண்ணுக்கு அம்மா யார், பெரியம்மா, சித்திகள் யார் எனத் தெரிய வைக்கும் நோக்கம் ஒரு புறமும். மாப்பிள்ளைக்கு அண்ணன் தம்பிகள் யார்? என்று ஒன்று விட்ட உறவுகள் முதலாய் நினைவில் கொண்டு வரும், அறிமுகப்படுத்தும், அனைவரையும் ஒரே குடும்பமாய் ஒன்றிணைக்கும் இத்தகைய நிகழ்வுகளை ஏற்படுத்திய பெரியவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியுமா?

அது மட்டுமா மணப்பெண்ணையே பரிசுகள் கொண்டு வர பணித்திருப்பதன் பிண்ணணியில் இரண்டு குடும்பங்களுக்கும் நான் தான் பாலம் என்றதான மறைக் கருத்தும் இருக்கின்றதே. தாய் வீட்டிலிருந்து பரிசுக்களைத் தான் வாழ வரும் வீட்டிற்க்கு ஏந்திக் கொண்டு வருபவளை மாமியார் வீட்டினர் இவள் இன்றிலிருந்து என் வீட்டு மருமகள் நான் அவளை விட்டுக் கொடுப்பேனோ என்பதாக அவள் பரிசுக் கொண்டுவரும் தட்டில் அள்ளி அள்ளி முறுக்கை திணிக்கும் போது உரிமை உணர்வும், வரவேற்பாகவும் திகழ்கின்றதே. தன் பிறந்தகம் விட்டு புதிய குடும்பத்தில் கால் ஊணி குடும்பத்தின் அச்சாணியாய் மாறப் போகும் மருமகளுக்கு இதை விடச் சிறப்பாக என்ன மரியாதை செய்து விட முடியும்?

அடுத்து ரூபனுக்குப் பரிசு வழங்க வேண்டிய நேரம். அதுதான் அந்நிகழ்வின் நிறைவுப் பகுதி, அதன் பின்னர் மணமக்களை அருகருகே அமர்த்தி விட்டு மாப்பிள்ளை வீட்டினர் பெண் வீட்டினருக்கு இரவு உணவு பரிமாறச் செய்வார்கள்.

இவ்வளவு நேரமும் இங்கும் அங்குமாய்த் தன் கண்முன் நடமாடிக் கொண்டு இருந்தவள் வெட்கத்தில் தலைக் குனிந்தே தனக்கான பரிசைக் கொண்டு வர, அவளே எனக்குப் பரிசுதானே இதில் இன்னொரு பரிசா? என்றெண்ணியவனுக்குத் தன்னையறியாமல் முகத்தில் புன்முறுவல் படர்ந்தது. அவளது வருகைக்காக எழுந்து நின்றான். அவளை அனைவரும் உன் மாப்பிள்ளை கிட்ட ப்ளெஸ்ஸிங்க் வாங்கிக்கோ என்று சொல்ல, தன் முன்னால் குனிய இருந்தவளை ப்ளெஸ்ஸிங்கிற்குத் தாழ் பணிய தேவையென்ன? இதென்ன பத்தாம் பசலித்தனம் என்றெண்ணி தடுத்தான். அவள் நெற்றியில் சிலுவை வரைந்து, அவள் அவனுக்காகக் கொண்டு வந்த பரிசை வாங்கியவனாகத் தன்னுடனே இணையாக அவளை நிறுத்திக் கொண்டான்.

அனைவரும் சாப்பிடச் சென்றனர், விருந்தினர் வரவேற்பில் ரூபன் அனிக்காவை யாரும் கவனிக்காமல் விட்டு விட ஜீவன் உணவு பறிமாறலானான்.

இரவு உணவு நிறைவு பெறவும் பெண் வீட்டினர் விடை பெறும் நேரம், அனிக்காவிற்க்கு படப் படப்பாக, சொல்ல முடியாத விசித்திர உணர்வுகள் பாடாய் படுத்தின. நன்கு தெரிந்த குடும்பத்தில் திருமணம் ஆகி வந்திருக்கும் எனக்கே இப்படி உணர்வுகள் எழுகின்றனவென்றால் முன் பின் தெரியாத வீட்டில் மணம் முடிக்கும் பெண்கள் நிலை எப்படியிருக்கும்? என எண்ணினாள். ஆர்ப்பரிக்கும் எண்ண அலைகள் தாங்காமல் தலை குனிந்தே நின்றாள்.

ஆறுதலாய் அவள் கரம் பற்றியது ரூபனின் கரம். ஒவ்வொருவராய் வந்து அவளை அணைத்துச் செல்ல இனிப்புக்கள் நிறைந்த பாத்திரத்தோடு இந்திராவை நெருங்கினார் சாரா.

இப்படிச் சொல்லு என்று பெரியவர்கள் பின்னிருந்து சொல்லிக் கொடுக்க, சொல்லவே முடியாமல் வார்த்தைகள் கனத்தது சாராவுக்கு  ‘இனி என் மகள் உங்களுடைய மகள், அவளைப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்பதான வார்த்தைகளை ஒருவாறாகச் சொல்லி முடிக்க,

“இதை நீ சொல்லணும்னு தேவையே இல்லையே, அவ என்னிக்குமே என்னோட மக தான்  என்றவறாக இந்திரா சாராவை அணைத்துக் கொண்டார்.

ஹனி, ராபின் வயது வாண்டுகள் எல்லாம் என்ன நடக்கின்றது? என்பதாக அருகே இருந்து அனைத்தையும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். எல்லாமே அவர்களுக்குப் புதிய நிகழ்வுகள் அல்லவா?

கிறிஸ், பிரபா வந்து தம்பதியரிடம் விடைப்பெற்றுச் சென்றனர். ஒவ்வொருவராக விடைபெற இப்போது இருந்தது ரூபன் வீட்டினர் மட்டுமே. அங்கு இன்னும் மற்ற பல வேலைகள் இருந்தன. சாப்பாடு பந்தி நடந்த இடத்தைப் பார்வையிடுவது மற்றும் அதுவரை நிகழ்வுகளில் பணி புரிந்த அனைவருக்குமான பணப்பட்டுவாடா இவையெல்லாம் முக்கியமான ஒன்றாயிற்றே?

பெரும்பாலான விபரங்கள் ரூபனுக்குத் தெரியும் என்பதால் அவனும் அப்பா, அண்ணாவோடு நின்று கொண்டிருந்தான். எங்கு நின்றாலும் அவன் கவனம் அனிக்கா எங்கே இருக்கிறாள்? என்பதாக இருந்தது. காலை போலவே இரவும் தாயை பிரியும் போது விசும்பி விட்டிருந்தாள். எல்லோர் முன்பாகப் போய் அவளை ஆறுதல் படுத்த முடியாத நேரம் அதனால் அவனும் அவள் கண்ணீர் பார்த்துக் கலங்கினான்.

‘இவ வர வர சரியான அழுகுணி ஆகி விட்டாள், இனிமே அழுதான்னா இவளுக்கு இருக்கு’, என்றவனாக எண்ணிக் கொண்டான்.

ஜாக்குலின் அனிக்காவை அழைத்துச் சென்று அவள் எளிமையான சேலை ஒன்றை அணிய வைத்து ரூபனின் அறைக்கு வெளியே நிறுத்தி,

‘நீ போ அனி, டயர்டா இருப்ப போய் ரெஸ்ட் எடுத்துக்க, அவன் இப்ப வருவான்’ என்று அனுப்பினாள்.

ரூபன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவனறைக்குச் சென்ற அனிக்கா சில நொடிகளில் பேயறைந்தவள் போலத் திரும்பி வந்து வெளியே நின்று மலங்க, மலங்க முழித்தாள். இவனுக்கு அதன் காரணம் புரியவில்லை. அனிக்கா மெதுவாகச் சமையலறை பக்கமாகச் செல்லவும் ரூபன் தன் அறையைப் போய் எட்டிப் பார்த்தான்.

அச்சச்சோ  இதென்ன இப்படி செய்து வைத்திருக்கிறான்?  அவனுக்கு ஜீவன் செய்த வேலையை என்ன சொல்வதென்று புரியவில்லை. வீட்டில் சின்னப் பிள்ளைகள் இருக்க, அதிலும் குழந்தைகள் எல்லாவிடமும் போய் வருவார்கள் அதனால் என் அறையில் எதையும் செய்து வைக்காதே… என்று கண்டிப்பாக ஜீவனிடம் சொல்லி இருந்தும், அவன் ஸ்டார் ஹோட்டல் அளவிற்கு ரூபன் அனிக்கா முதலிரவிற்காக மிகவும் ரொமாண்டிக்காக ரூபன் அறையை, படுக்கையை அலங்கரித்து வைத்திருந்தான்.

‘போடாப்போ சும்மாவே அவ இன்னிக்கு ரொம்ப மிரண்டு போய் இருக்கிறா, இவன் வேற’ என எண்ணிக் கொண்டு நிற்க, தந்தை அழைக்கவும் வெளியே விரைந்தான்.

மறுபடி சிறிது நேரம் கழித்து அம்மா அவளைத் தன் அறைப் பக்கமாகக் அழைத்துச் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது உள்ளே சென்றவள் அரை நிமிடத்தில் திரும்பி வந்து விட்டாள். அதைப் பார்த்துக் கொண்டிருந்த அவனுக்குச் சிரிப்பை அடக்கவும் முடியவில்லை.

வெளியே வந்தவள் அரைத் தூக்கத்தில் சிடு சிடுத்துக் கொண்டிருந்த ராபினை தூக்க முயல அவனோ அவளிடம் செல்ல விரும்பாமல், தூக்க களைப்பில் சிணுங்கினான். அவனை ப்ரீதா வந்து தூக்கி சென்று விட்டாள். இப்போது அனிக்கா மட்டுமாக சோஃபாவில் தனியாக அமர்ந்திருந்தாள், ரூபன் அவளருகே வந்து அமர்ந்தான்.

என்னாச்சு அனி?

கேட்டவனுக்குப் புன் முறுவலால் ஒன்றுமில்லை என்பதாக அமைதியாகப் பதிலளித்தாள்.

‘தூக்கம் வரலியா? வா…’ என்றழைத்தவனாய் அவள் கைப்பற்றி அழைத்துச் செல்ல தயங்கியே அவனைப் பின் தொடர்ந்தாள். அவள் கையோ அவள் மன நிலை பிரதிபலித்த விதமாய்ப் பயத்தில் விரைத்து குளிர்ந்து கிடந்தது. விட்டால் நடுங்கி விடுவாளோ?. அறையின் உள்ளே சென்றவன் அலங்காரத்தைக் கவனியாதவன் போல, ‘வா நம்ம கிஃப்ட்ஸ் எல்லாம் திறந்து பார்ப்போமா?’ என்றழைக்க அவளும் உற்சாகமானாள்.

கதவை தாழிட்டவன் கையில் ஒரு கிஃப்ட் பார்சலோடு ஆர்வமாய் நின்றவளையே அவளறியாமல் கண்களால் பருகிக் கொண்டான். இன்றைக்கு அவள் அணிந்திருக்கும் மூணாவது சேலை இது. ஒவ்வொண்ணுல ஒவ்வொரு அழகா இருக்கா  என்றெண்ணிக் கொண்டிருந்தவனை ஏதேச்சையாக நிமிர்ந்து பார்த்தவள் அவன் பார்வையில் தடுமாறினாள்.

அருகே வந்தவனுக்கு இது என் ஃபிரண்ட்ஸ் கிஃப்ட் அத்தான், எனக் காண்பிக்க வெள்ளை கவுன், கருப்புச் சூட் அணிந்த மணமக்கள் மேற்கத்திய நடனமாடும் ஷோ பீஸ் ஒன்று மிக அழகாய் இருக்க அதில் தன்னையும் ரூபனையும் பொருத்திப் பார்த்தவள் முகம் மலர்ந்தது. பரிசைப் பார்த்தவனாக

இது போல நாமும் டேன்ஸ் செய்யலாமா? என இவன் கேட்க,

அவள் வெட்கமாய் மறுத்தாள்.

அவளுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே, சில பரிசு பார்சல்கள் பிரிக்கப் பட மிரண்டு போய் இருந்தவள் இப்போது அவனுடன் சகஜமானாள்.

அப்போது அஷோக் தந்த பரிசு ஞாபகம் வரவே தனக்குத் தானே ஆப்பு வைத்துக் கொள்ளப் போவதை அறியாமல் அதனை எடுத்து அவசரமாய் ரூபன் பிரிக்கலானான்.

தன் கையில் இருந்ததைத் தள்ளி வைத்தவள் அந்தப் பெரிய பார்சல் பிரிக்க அவனுக்கு உதவி செய்தாள். அது ஒரு மிகப் பெரிய போட்டோ பிரேம் எனப் புரிய ஆரம்பித்தது. இதிலென்ன சர்ப்ரைஸ் இருக்கப் போகிறது? என்று எண்ணியவனுக்கு நிஜமாகவே ஆனந்த அதிர்ச்சிதான்.

அதில் அவனும் அவளுமாகத் தீபன் திருமணத்தன்று 6 வருடங்களுக்கு முன்பாக எடுத்த புகைப்படம் பெரிது படுத்தப்பட்டு, பிரேம் செய்யப் பட்டிருந்தது. அது ஜீவன் அவனது கேமெராவிலிருந்து அழித்த புகைப்படமல்லவா?

ஆவென ஆச்சரியத்தில் மகிழ்ச்சியில் திக்கு முக்காடிய அவனுக்கு உள்ளே இருந்த க்ரீட்டிங் கார்ட் ஒன்று கண்ணில் பட எடுத்து வாசித்தான்.

 நீ சொல்லாவிடினும் உன் காதலை நான் அன்றே அறிவேன் நண்பா. பின்னொரு நாள் உதவும் என்பதாலோ என்னவோ எனனுடைய கேமெராவில் சிக்கிய இந்தத் தருணத்தை நான் உனக்காகப் பத்திரப் படுத்தி வைத்திருந்தேன்.

உனக்கும், என் அன்புத் தங்கை அனிக்காவிற்க்கும் திருமண வாழ்த்துக்கள்  என்று எழுதியிருந்தது.

ஆனந்த அதிர்ச்சியில் இருந்தவன் அனிக்காவின் முகபாவனையைப் பார்க்க தவறினான்.

‘இந்த ஃபோட்டொ சூப்பரா இருக்குல்ல அனி, என் ஃபேவரைட்’ என்றவன் ஃபோட்டோவிலிருந்த அனிக்காவிற்க்கு முத்தம் ஒன்று வைக்க நிஜ அனிக்காவிற்குப் பிரளயமே வெடித்து விட்டது.

“நீங்க அன்னிக்கு என்னை ஏமாத்தி எடுத்த ஃபோட்டோ தான இது? எனக்கு அன்னிக்கே ரொம்பக் கோபம் கோபமா வந்தது. இப்ப என்னன்னா அதுக்குக் கிஸ் பண்ணுறீங்க  என்று பொரிந்தாள்.

அப்போதுதான் திரும்பி பார்த்தவன்,

உனக்கு இந்த விஷயம் தெரியுமா? எனக் கேட்க, அவளும் தான் அறிந்த அத்தனையும் கூறினாள்.

நீங்க அன்னிக்கு எவ்வளவு ஃப்ராடா இருந்தா என் பக்கத்தில வந்து ஃபோட்டோ எடுத்திருப்பீங்க? தன் இடுப்பில் கை வைத்துக் கொண்டு முறைத்துக் கொண்டு நின்றவளை என்னென்னவோ சொல்லி சமாதானப் படுத்த பார்த்தான். அவள் கேட்கிற மாதிரி இல்லை.

இங்க பாரு அனி, அப்ப நான் 2 வருஷம் வெளி நாட்டுக்கு வேலைக்குப் போகப் புறப்பட்டு இருந்த டைம், உன்னை 2 வருஷம் கழிச்சு தான் பார்க்க முடியும்கிற சூழ்நிலை. நீ வேற அந்த சேலையில் ரொம்ப அழகா இருந்த, அதான் ஆசையில எடுத்துட்டேன். வேனும்னா எதுவும் தண்டணை கொடு, சண்டைப் போடாதே. சும்மாவே ஒரு வாரமா ஓடியாடி வேலை செஞ்சு, காலையிலிருந்து அலைஞ்சு திரிஞ்சு களைப்பா இருக்கு’ என நடித்தான்.

‘ஓ அப்ப அதனால தான் அதே கலர் சேலை திருமணத்திற்காகத் தேடிருக்காங்க’ என எண்ணியவள் அவன் களைப்பா இருக்கு என்றதும் இளகி விட்டாள்.

‘சரி அப்ப நான் நாளைக்குச் சண்டை போடுவேன்’,

என்றதும் சண்டை தற்காலிகமாக ஒத்தி வைக்கப் பட்டது.இன்றைக்கோ நாளைக்கோ எப்போது இருந்தாலும் தான் என்ன ரூபனுக்கு இவளை ஏமாற்ற புது வழிகள் புலப்படாமலா போகும்?

என்னது நாளைக்குச் சண்டை போடுவியா? … சரி போட்டுக்கோ  என்றவன்,

 ஏன் அனி ரொம்ப நேரமா நிக்கிறியே உனக்குக் கால் வலிக்கலை?” என,

 ஆமா வலிக்குது  என்றவளை இடுப்பில் கைக் கொடுத்து தூக்கிக் கொண்டவன் பேச்சுக் கொடுத்துக் கொண்டே படுக்கை வரை தூக்கி வந்து கவனமாய் அவளையும் படுக்க வைத்து அவனும் படுக்க, இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி பேசிக் கொண்டிருக்க,

ஏதேச்சையாக உருண்டவள் கைகளில் கொத்தாகச் சிகப்பு நிற ரோஜா இதழ்கள் கிடைக்க அதைப் பார்த்து திருதிருத்தாள்.

நீங்க ஃப்ராட் அத்தான்…

நான் என்ன செஞ்சேன்?

என்னைக் கேட்காமலே என்னை தூக்கிட்டு வந்திருக்கீங்க 

ஆமா நான் ஃப்ராட் தான் 

நீங்க பக்கா வில்லன்…

தேங்க்ஸ் பொண்டாட்டி

நான் நீங்க ரொம்ப நல்லவங்கன்னு நினைச்சிட்டு இருந்தேன்

அப்படியா? …

ஆனா நீங்க அப்படி இல்லை  

பரவால்லை.அட்ஜஸ்ட் பண்ணிக்கோ…

நான் உங்க கிட்ட கோபப்படறேன், திட்டறேன், நீங்க கண்டுக்கவே மாட்டேங்கீங்க அத்தான்  சிணுங்கியவளிடம்

உனக்கு என் மேல கோபம் திட்டுற, எனக்குத் தான் உன் மேல கோபம் இல்லியே?…

இப்படிதான் அன்னிக்கும் சொன்னீங்க 

என்னிக்கு? 

சற்று நேரம் கழித்துப் பேச்சு வார்த்தைகள் கொஞ்ச கொஞ்சமாய்த் தேய்ந்து பின்னர் இல்லாமல் போயிற்று.

நள்ளிரவில் எழுந்த ரூபன் கைவளைவில் அமைதியாய் துயில் கொண்டிருந்த அவன் மனைவியைக் கண்டான். மிச்ச சொச்ச முத்தங்களை அவள் முகம் முழுக்கப் பதிக்க ஆசை வந்தது. தூங்குகிறவளை முத்தமிடலாமா? என ஆராய்ச்சி செய்த மனதை அடக்கி விட்டு ஆசையாய் தன் காதலை முத்தங்களாய் அவளில் பதிக்கலானான்.

ம்ம்… வேண்டா அத்தான் தூக்கத்தில் முகத்தைத் துடைத்தவளை சீண்டி மீண்டும் முத்தங்கள் பதித்து மார்போடு சேர்த்தணைத்துக் கொண்டான். அன்று பொழுது விடியும் போது அவன் உள்ளத்திலிருந்த அத்தனை தனிமை உணர்வும், கசப்புணர்ச்சிகளும் மறைந்து மனம் நிர்மலமாய் இருந்தது

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here