37. அமிழ்தினும் இனியவள் அவள் _ ஜான்சி

0
1112
Amizhthinum Iniyaval Aval

அத்தியாயம் 37

அவள் கண்களுக்குள்ளே ஒளிப் பிரவாகம், முன் தினம் காலை முதல் இரவு வரை எதிர்கொண்ட அவர்கள் திருமண வீடியோ ஷீட்டிங்க் ஃப்ளாஷ் லைட்டிங்கே அதற்கு காரணம். ஆழ்ந்த உறக்கத்திலும் அவளது கண்கள் கூசின, உடனே தன் கண்களைப் புறங்கையால் தேய்த்து விட்டுக் கொண்டாள்.

முதல் குழந்தைப் பெற்றவர்களுக்குக் குழந்தை செய்யும் எல்லாமே ஆச்சரியமாகவும், பார்க்க பார்க்க ஆசையாகவும் இருப்பது போல அவளை மாரோடு அணைத்திருந்தவன் நிலையும் அங்கு அதுவாகத்தான் இருந்தது.

மனதின் உற்சாகத்தில் சீக்கிரமே விழிப்பு வந்து விட்ட போதும் படுக்கையை விட்டு எழவோ தன் மார் சாய்ந்து உறங்குகின்றவளை தள்ளிப் படுக்க வைக்கவோ ரூபனுக்கு விருப்பமில்லை. அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

இடை வரை நீண்ட அவள் முடி தாறுமாறாய் கலைந்து அவன் உடலிலும் பரவி கிடந்தது. அவனை ஏக போக உரிமையோடு தலையணையாய் பாவித்து உறங்குகிறவள் தூக்கத்திலேயே பல்வேறு முகபாவனைக் காட்டி கண்களைக் கசக்கி விட்டுக் கொள்ள அதைப் பார்க்க பார்க்க அவனுக்கு மிகவும் இரசனையாய் இருந்தது.

தன் முகத்தில் உரசும் முடிகள் கூச்சமாய் இருந்திருக்கக் கூடும். அதனால் தூக்கத்திலேயே மென்மையாய் சிரித்தவள் அவன் மார்பில் முகத்தைத் தேய்த்தாள். தேய்த்த தன் முகத்தை டெடி  என்றவளாய் திருப்பிய போது தான் அவனுக்கு அவள் அவனை டெடியென்று எண்ணிக் கொண்டாள் எனப் புரிந்தது.

அடிங்க  உனக்கு நான் டெடியா?  காலைலயே காமெடி பண்ணுறாளே? என்று மனதில் எண்ணியவனுக்குப் புன்னகை பெரிதாய் விரிந்தது.

அப்படியே படுக்கையில் உருண்டவள் சட்டென்று விழித்து விழி சுருக்கி பார்த்தாள். சட்டென்று ஏதேதோ ஞாபகம் வர வெட்கி அவன் மார்புக்குள்ளேயே மறுபடியும் ஒளிந்தாள்.

அவள் தலையை சிறிது நேரம் வருடியவன் அவளை விட்டு எழுந்தான். உடனே தான் குளித்து ரெடியாகியவன் நான் கொஞ்சம் வெளிய போய் வாரேன் அனி, மறுவீடு போகணும்னு அம்மா சொன்னாங்கல்லியா நீயும் புறப்பட்டுக்க… என்று அவளுக்குத் தனிமை கொடுத்து அகன்றான்.

காலை உணவு நேரமே இருவரும் அனிக்காவின் வீடு செல்ல வேண்டியிருந்ததால் அவர்கள் சீக்கிரமே புறப்பட்டு விட்டிருந்தனர். திருமண உடையை உடுத்துவதுதான் சம்பிரதாயம் என்பதால் அதே தேன் நிறச் சேலையில் பொன்னாய் ஜொலித்த மனைவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு ரூபன் தன் சட்டையை அணிந்து கொண்டிருந்தான்.

தலை வாரிக் கொண்டிருந்தவளிடம்,

‘ரொம்ப அழகாயிருக்க அனி’ என்றான்.

வெட்க முறுவலோடு அவள் புன்னகைத்தாள்.

‘நான் நல்லாயிருக்கேனா?’ சிறு பிள்ளை போலக் கேள்வி எழுப்பினான், எல்லாம் சகவாச தோஷம் தான் வேறென்ன?

ம்ம்  என்றவள் அதற்கு மேல் பேசவில்லை.

‘ஏ வாலு இன்னிக்கு என்ன இப்படிச் சைலண்ட் ஆயிட்ட, நேத்திக்கு போட வேண்டிய சண்டையை இன்னிக்கு போஸ்ட்போன் வேற பண்ணிருக்க  என் கூடச் சண்டைப் போடலியா? எனவும் சிரித்தாள்.

அவளருகே நெருங்கியவன், முதுகோடு சேர்த்து அணைத்துக் கொண்டவனாய்,

‘நீ எப்பவும் போல இரு அனி, அதுதான் நல்லாயிருக்கு’ என்றான். அவன் முகம் பார்க்க திரும்பி நின்றவளின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்.

ராபினையும் அழைத்துக் கொண்டு புதுமணத் தம்பதிகள் மறுவீட்டுக்குச் சென்றனர். அங்கு சாராவும், தாமஸீம் மகளைப் பிரிந்து மாத கணக்கில் ஆனது போல இவர்களுக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தனர்.

கார் வாசலில் வந்து நிற்க மகளையும், மருமகனையும் வரவேற்க நின்ற சாராவிடம் அத்தம்மா என்று கதவை திறந்ததும் ராபின் முதல் ஆளாய் குரல் கொடுத்தான்.

வாங்க, வாங்க பேரப்புள்ளோ, இன்னிக்கு நீங்க ஸ்கூல் போகலியா? என்றவாறு அவனைத் தூக்கிக் கொண்டு எதிரில் நின்ற மகளை வா வென்று சொல்லி முன்னே நடக்கச் சற்று நேரத்தில் காரை பார்க் செய்து விட்டு ரூபன் உள்ளே நுழைந்தான்.

‘வா தம்பி’ என அவனையும் வாயிலில் வந்து அழைத்தவர் கணவரைப் பார்க்க, மகளிடம் பேசியவாறு நின்ற தாமஸ் மருமகனை வரவேற்றார்.

அக்கா எங்க அத்தம்மா?  என்றவனாய் ராபின் ஹனியை தேசினான். ஹனியின் தலையில் இரட்டை தென்னை மரங்களை உருவாக்கி கொண்டிருந்த பிரபா மகளை விட்டதும் அவளோ தன்னை தேடிய ராபினை கவனியாமல் “அட்ட” என்றவளாய் அனிக்காவிடம் பாய்ந்தாள்.

இப்போது அனியும் ஹனி பாப்பாவும் கொஞ்ச நேரம் கொஞ்சி தீர்த்தார்கள். பிரபாவும், கிறிஸ்ஸிம் வரவே ஹாலில் அமர்ந்து சற்று நேரம் அளவளாவிக் கொண்டிருந்தனர். முதலில் அனிக்காவையும், ரூபனையும் சாப்பிட வரச் சொல்ல எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவோமே என ரூபன் கேட்டுக் கொண்டதால் அரட்டையோடு காலைச் சாப்பாடு மிகவும் ருசித்தது.

அதன் பின் அவன் தன் மாமனாரோடும், கிறிஸ் அத்தானுடனும் உலக அரசியல் உள்ளூர் அரசியல், தொழில் நிலவரம் முதலாகக் கதை பேச, சாராவும், பிரபாவும் மதிய சமையலில் ஈடுபட, அனிக்கா விளையாடிக் கொண்டிருந்த ராபின், ஹனியுடன் இணைந்துக் கொண்டாள்.

என்னை அவ அம்மா வீட்டுக்கு வந்ததும் முசுட்டு மாமா, அத்தான் கூடக் கோர்த்து விட்டுட்டு ஜாலியா விளையாடிட்டு இருக்கா என அனிக்கா குறித்து மனதில் முறு முறுத்துக் கொண்டவனைக் காப்பாற்றுவதற்காகவே சரியான நேரத்தில் ஜீவன் அங்கு வந்து சேர்ந்தான்.

ஒருத்தரையும் விடாமல் அவன் கேலி பேசி வைக்க, அவன் மனம் நோக வைக்காமல் சிரிக்க வைக்கத் தெரிந்தவன் என்றதால் எல்லோரும் அவன் பேச்சை கேட்டுச் சிரித்துக் கொண்டிருந்தனர். மறக்காமல் அனிக்காவையும் பேச்சோடு பேச்சாய் இழுத்து கிண்டலாய் பேசிக் கொண்டிருந்தான். ஒருகட்டத்தில் அவன் பேச்சில் அவளுக்கு ரொம்பவே கோபம் வர, இப்போது அடக்க ஒடுக்கமாய் இராமல் சண்டைப் போட்டால் அம்மாவிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள நேரிடும் என்பதால் ராபின் காதில் ரகசியமாய்

 உன் சித்தப்பாக்கு ஒரு அடி கொடுத்துட்டு வா செல்லம்  எனச் சொல்ல, அவன் சித்தி சொன்னதைத் தப்பாமல் செய்தவனாய் போய் ரூபனுக்கு ரெண்டு அடி வைத்தான். அத்தோடு விடாமல்

 சித்திதான் உங்களை அடிக்கச் சொன்னாங்க சித்தப்பா  என்று அவளைப் போட்டும் கொடுத்தான்.

திருதிருவென முழித்துக் கொண்டிருந்தவளைக் கண்டதும் ரூபனுக்கு என்ன நடந்திருக்கும் என்று புரிய அவளைப் பார்த்துச் சிரித்தான். மகனை மடியில் அமர்த்தியவன்,

 சித்தி சொன்னது சித்தப்பாவை இல்ல உங்க ஜீவா சித்தாவை  எனச் சொல்லிக் கொடுக்க, கர்ம சிரத்தையாய் அவனும்,

 ஏன் சித்தி சித்தாவையா அடிக்கணும்  என்று அனைவர் முன்பும் கேட்டு வைத்தான்.

இவன் இன்னிக்கு எங்க அம்மாகிட்ட திட்டு வாங்கவைக்காம விட மாட்டான் போலயே என்று ஹி ஹி என அவள் சிரித்து வைக்க, அனிக்காவின் கையாள் ஜீவனை அடிக்க முன்னேறினான்.

‘ஏண்டா நீ ஒரு பொடிப்பையன், என்னையே அடிச்சிருவியா?  ‘ என மிரட்டி பார்த்த ஜீவன் அவன் பின் வாங்குவதாக இல்லை எனவும் ஓட ஆரம்பித்தான். அவன் பின்னால் ராபினும் ஓட இவர்கள் கலாட்டாவை பார்த்தவர்களுக்குச் சிரித்து முடியவில்லை.

மதிய உணவு நேரம் ரூபனின் குடும்பத்தினரும் வந்து சேர மணக்க மணக்க அசைவ உணவுகள் பறிமாறப் பட்டன. அதனைத் தொடர்ந்து இனிப்புகள் சாப்பிட்டுக் கண்கள் சொக்க தாமஸ் மதிய தூக்கம் போட எழுந்தார். ஜீவன் வீட்டுக்கு புறப்பட்டவன் ராபினோடு ஹனியையும் கூட்டிச் சென்றான். ராஜ், இந்திரா, தீபன், ப்ரீதாவும் சற்று நேரம் இருந்து கதை பேசிய பின்னரே புறப்பட்டுச் சென்றனர்.

நீங்க ரெண்டு பேரும் போய் ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே? என அனிக்காவையும் ரூபனையும் சாரா சொல்ல, அவர்கள் அனி ரூம் சென்றனர்.

தன் அறையில் மகிழ்வாய் நின்றவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன்,

ஏன் அனி உன் ரோஜா செடிக்கு என்னை அறிமுகம் செய்ய மாட்டியா? எனக் கேட்டான்.

என் செடிக்கு உங்களை நல்லா தெரியுமே, அதுக்குப் பேச தெரிஞ்சா அதுவும் உங்களை அத்தான்னு கூப்பிட்டிருக்கும் எனக் கல கலவெனச் சிரித்தாள்.

அப்ப அது உன் தங்கையா?

ஆமாம் எனத் தலை அசைத்தவள். நான் அன்னிக்கு மாதிரி தான் எப்பவும் என் செடி கூட, டெடி கூட ஏன் இந்தப் பெட் கூடவும் பேசுவேன். என்றவளாய் சிரித்தாள். அவள் சிரிப்பில் மலர்ந்த அந்தக் கன்னங்களைப் பிடிக்க வந்தவனைத் தட்டி விட்டாள்.

‘நேத்தே வச்சு என் கன்னத்தை ஒரு வழியாக்கிட்டீங்க …… போங்க அங்கே  

என்ன பண்ணேன்? கிஸ் தான பண்ணேன்?  என்றவனாய் இன்னும் நெருங்கி வர, தன் இரு கரங்களையும் கொண்டு கன்னங்களைப் பாதுகாத்து மூடிக் கொண்டாள், பாவம் அவள் இதழ்கள் மாட்டிக் கொண்டன.

முத்தம் கொடுத்து, எடுத்துக் கள்ளுண்டவண்ணம் கண்கள் சொருகி, மயங்கி நின்றவன், கைகளில் அவளை அள்ளிக் கொள்ளக் குனிந்தான். இரவு விட்ட பாடம் மீண்டும் தொடர்ந்தது.

தூக்கம் கலைந்து எழ தன்னையே பார்த்திருந்தவளுக்குத் தன் கைகளை விரிக்க அவளும் சுகமாய் அவன் மார் சேர்ந்தாள்.

அனி…

ம்ம்ம்…

நீ மட்டும் இல்லின்னா நான் லைஃப்ல என்ன ஆயிருப்பேன்னே தெரியலை ………

ஒரு நாளும் இல்லாமல் மனம் திறந்து பேச எண்ணுகிறவனை இடையூறு செய்யாமல் கவனிக்கலானாள்.

இப்ப உன்னைப் பார்க்கையில தான் மனசுக்கு ஒரு விஷயம் தோணுச்சு. உனக்கு வீட்டுல உன் வயசில பேச, விளையாட ஆளில்லைன்னதும் அதைக் கூட விளையாட்டா எடுத்துட்டு செடி கூட, டெடி கூடப் பேசுவேன்னு சொன்ன இல்லையா? அதுமட்டும் இல்லாம வலிய நம்ம வீட்டுக்கு வந்து ஜீவன் கிட்ட வம்பிழுப்ப, அம்மா கூடக் கொஞ்சி கிட்டு அவனை வெறுப்பேத்துவ, ஆனா எப்பவும் உன் முகத்துல ஒரு சிரிப்பு, மலர்ச்சி அது இருந்துட்டே இருக்கும், நீ சந்தோஷமா இருக்கிறதோட மட்டுமில்லாம உன் அக்கம் பக்கத்தில இருக்கிறவங்களுக்கும் அதே சந்தோஷத்தை தர்றவ நீ.

….

அதே நேரம் விளையாட்டுத்தனமானவன்னு சொல்லியும் உன்னைத் தட்டிக் கழிக்க முடியாது. அத்தனை விளையாட்டிலயும் உன் கிட்ட ஒரு அக்கறை இருக்கும். உன்னைப் பார்த்து பார்த்து தான் நான் வாழ்க்கையை வாழ கத்து கிட்டேனோ என்னவோ தெரியலை. ஆனா நீ இல்லாம வாழவே முடியாதுன்னு மட்டும் ரொம்ப நாள் முன்னாடியே தெரிஞ்சிடுச்சு.

எத்தனையோ பேர் முட்டி மோதி வராம தவிக்கிற படிப்பு எனக்கு மிகச் சாதாரணமாவே வந்தது. ஆனா, எனக்குத்தான் எதிலயும் நாட்டமில்ல, அன்பில்லாத ஒரு இயந்திர தனமான வாழ்க்கையை நான் பல வருஷமா அதுவும் சின்ன வயசில இருந்தே வாழ்ந்திட்டேன். அதனால வாழ்க்கைல ஒரு பிடிப்பே இல்லாம இருந்துச்சு  என்னோட மார்க்ஸ் பார்த்து அம்மா அப்பாவுக்கு என்னை டாக்டர், எஞ்சினியர்னு உருவாக்குகிற பற்பல கற்பனைகள் இருந்தது. நீ இதைப் படிக்கிறியா? அதைப் படிக்கிறியான்னு அடிக்கடி கேட்பாங்க. ஆனால், அவங்க சொன்னதுக்காகவே நான் அதெல்லாம் படிக்கக் கூடாதுங்கிற வறட்டு பிடிவாதத்தில இருந்தேன்.

….

நம்மளை பிடிக்காம தானே இவ்வளவு தூரம் அவங்களை விட்டு பிரிச்சு வச்சிருக்காங்கன்னு எனக்குள்ளே ஆத்திரம், அதை வெளிக்காட்ட இப்படி அவங்க சொல்லுற எதையுமே செய்யாம இருக்கிறது தான் வழின்னு தோணுச்சு.

ம்ம் 

அப்புறமா நீ என் வாழ்க்கைல வந்த, நீ தீபன் அண்ணன் திருமணம் அன்னிக்கு நானும் ஜீவாவும் பேசிட்டு இருந்ததைக் கேட்டேன்னு சொன்னே இல்லியா? 

ம்ம் 

அப்ப அவன் என் கிட்ட “அனி உனக்குக் கிடைக்கா விட்டா என்ன செய்வே?னு கேட்டான்  அதுவரைக்கும் கூட நான் ஒரு குருட்டு நம்பிக்கைல தான் இருந்தேன். அவன் வார்த்தை என்னை ரொம்பச் சுட்டுப் பொசுக்கிடுச்சு. என் வாழ்க்கையே ஒன்னும் இல்லாதது போல வெறுமையா தோணுச்சு. அன்றைக்கு எப்படியாவது மாமா மதிக்கிற அளவு உயர்ந்து காட்டணும்னு மனசில பதிச்சுக்கிட்டேன். நிறைய நாள் ஒழுங்கா தூங்கினது இல்ல. வெறிப்பிடிச்ச மாதிரி உழைச்சிருக்கேன். வீட்டில் எல்லோர் சப்போர்ட் கிடைச்சது பைத்தியக்காரன் மாதிரி உழைச்சதுக்கெல்லாம் மொத்தமா பலன் கிடைச்சது…

………

நான் இந்தப் பணம், பொருள் இதெல்லாம் என்னதான் சாதிச்சு இருந்தாலும் அதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயமே இல்ல அனி, ஆனா நீ என்னைக் காதலிச்ச பாரு, அதுதான் எனக்கு ரொம்பப் பெரிய விஷயம்.

அவள் நாடியில் பெருவிரல் கொடுத்து நிமிர்த்தியவன் மென்மையாய் அவள் உதட்டில் முத்தமிட்டுத் தொடர்ந்தான்.

சொற்களின் வேகத்தில் உணர்ச்சிவசமாய் அவன் வார்த்தைகள் வெளி வந்தன… ‘நீ ஒருவேளை எனக்கில்லைன்னு ஆகியிருந்தால் நான் ஒருவேளை இருந்திருப்பனோ, மாட்டேனோ?  

…… ஸ்ஸ் ஷீ  இதென்ன நீ?  கண்ணில் நீரோடு பார்த்திருந்தவளை அதட்டினான்.

அதான் நீ இப்ப எனக்கு கிடைச்சிட்டியே?, சும்மாதானே பழைய கதை பேசறேன். அதை அழாம கேட்க மாட்டியா? அவள் முயன்றும் அந்தக் கண்ணீர் துளி நில்லாமல் அவள் கன்னம் வழிந்து ஓடியது.

அனி  ப்ளீஸ்மா அவர்களுக்குள்ளே காதல் உருகி கரைந்தது.

தொடர்ந்து அவனுக்கு ஒன்றும் பேச தோன்றவில்லை, அவளுக்கும் கேட்க தேவையில்லை என்றாயிற்று.

தூக்கம் கலைந்து மனைவி தந்த டீயை சுவைத்துக் கொண்டிருந்தவர் கண்களில் மாடியிலிருந்து மகளும், மருமகனும் வந்தது தெரிந்தது. தன் கண்ணே பட்டுவிடுமோவென எண்ணி அவர்களைப் பார்ப்பதை அவர் தவிர்த்தார்.

மறுவீட்டிற்க்கு வந்து திரும்பும் போது பெண் வீட்டில் புது உடை எடுத்துக் கொடுக்க அதை அணிந்தே வீடு திரும்ப வேண்டுமென்பதால் இருவரும் புது உடைகளில் இன்னும் அதிகமாய்க் கண்களைக் கவர்ந்தனர்.

ரூபனுக்குப் பிரபல பிராண்ட் ஷர்ட், பேண்ட் மிகப் பொருத்தமாய் இருக்க, அனிக்காவிற்க்கு அந்த ஆரஞ்சு நிற பட்டுப் புடவையும் அழகாய் பொருந்திப் போனது. தன்னருகே மரியாதையாய் அமர்ந்த ரூபனிடம் தாமஸ் புன்னகை புரிந்தார். ஒரு சில அளவளாவல்கள் தொடர்ந்து இருவரும் விடைப் பெற்றனர்.

மகளின் முகப் பொலிவு, கணவனோடான இழைவு, சட்டு சட்டென்று பூக்கும் வெட்கமும், சிரிப்பும் அவர் கண்களில் படத் தவறவில்லை. ஜோடிக் கிளிகள் என்று சொல்லும் வார்த்தையைக் கண்கூடாக இன்றுதான் அவர் தன் மகள் மருமகனில் கண்டிருந்தார்.

உள்ளத்தில் யாருக்கும் சொல்லவியலாத ரகசிய அறையொன்று திறக்க, தான் எவ்வளவு பெரிய தவறு செய்யவிருந்தோம்? என எண்ணி அவர் மனம் நடுங்கிற்று. அவர் எண்ணங்கள் சுழன்றன…

அனிக்கா ரூபனிடம் அறை வாங்கி மயங்கி மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்த நேரம் அது, ரூபன் அவள் சுய உணர்வு இல்லாத நிலையில் பிடிவாதமாக தாலியை அணிவித்து விட்டு, அவளைத் தன்னோடு அழைத்துச் செல்லப் போவதாக ஒரு புறம் மிரட்டல் விடுக்க, மகள் தன் சார்பாகப் பேசுவாள் எனப் பார்த்தால் அவளோ ரூபனை காப்பாற்ற பொய் சொன்னதும், வீட்டிற்க்கு வந்து பார்த்தால் மகளின் தற்கொலை கடிதமும், தூக்க மாத்திரை பாட்டிலும் கிடைக்க, அந்த நேரம் தன் வாழ்விலேயே அடுக்கடுக்காகப் பல அதிர்ச்சிகளைச் சந்தித்து வெகுவாக அதிர்ந்து போயிருந்தார்.

தீபனிடம் நான் என் மகளுக்காகப் பார்த்திருக்கும் இடம் மல்டி மில்லியனர் ஃபேமிலி, அதை விட அவர்கள் அவருக்குச் சொந்தமும் கூட எனச் சொல்லி ரூபனுக்குப் பதில் சொல்ல ஒரு வார அவகாசம் கேட்டிருந்தார்.

அவர் அன்றைய நாள் முதல் விக்ரமை தேடி அலைய, அவனோ அவர் கண்ணிலேயே அகப்படவில்லை.அவன் போனும் தொடர்புக்குள் இல்லை அப்போதுதான் அவருக்கு அவன் அடிக்கடி தன்னுடைய இருப்பிடத்தை மாற்றுவது புரிந்தது.அவன் எதற்காக இப்படிச் செய்கிறான்? என்று அவருக்குப் புரியாவிட்டாலும் இரண்டொரு நாட்கள் கழித்து அவனைக் கடந்த முறை சந்தித்திருந்த நட்சத்திர ஹோட்டலில் வந்திருக்கின்றானா என அடிக்கடி கேட்டுப் பார்க்கச் சொல்லி தன் செகரெட்ரியை பணித்திருக்க, அவருக்கு நான்காவது நாள்தான் அவன் அங்குச் செக் இன் செய்ததாகத் தகவல் கிடைத்தது.

இந்த விஷயத்தை போனில் பேசுவது மரியாதை இல்லை என்பதால் , நேரில் சந்தித்துப் பேசலாம் என்றெண்ணியவராக தாமஸ் அன்றைக்கு போன் செய்யாமல் அவனை சந்திக்கப் புறப்பட்டு வந்திருந்தார். அவனது அறை இருக்கும் மூன்றாம் மாடியில் லிஃப்டில் பயணிக்கும் போதே தன்னைக் குறித்துக் கீழாக, இழிவாக உணர்ந்தார்.

வலிய வந்து பெண் கேட்டானே?  நான் முதலில் சரியென்று சொல்லி விட்டு இப்படி மறுப்பது எவ்வளவு ஒரு அவமானச் செயல். எப்படி எடுத்துக் கொள்வானோ? அவன் வீட்டினர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ? சொந்தம் விட்டு விடும் போலிருக்கிறதே. என் மகளுக்குப் போயும் போயும் இப்படிப் புத்தி போயிருக்கின்றதே என வருந்தி தன் நிலை எண்ணி கையாலாகாதவராக மனம் கூசிப் போய் நின்றார்.

லிஃப்டிலிருந்து வெளிவந்தது தான் தாமதம் எதிரில் விக்ரம் போனில் பேசியவாறு காரிடாரில் நடந்து செல்வது தெரிந்தது. அவன் பின்னாலேயே அவரும் விரைந்துச் சென்றார்.

அவர் அவன் போன் பேசும் வரை சற்று நேரம் நாகரீகம் கருதி, அங்கேயே அமைதியாக காத்திருக்க நினைத்தார். அவன் உரக்க, உல்லாசமாய் பேசுவது இவர் காதில் வந்து விழுந்தது.

எனக்குக் கல்யாணமா? ஹா ஹா ஹா…அது சும்மா ஒரு டைம் பாஸ்டா நான் அப்புறமா சொல்றேனே 

போன் ரீச் ஆகலியா  அதெப்படி ஆகும்? நான் தான் அந்த ரிசார்ட்ல ஒரு வாரம் தங்கியிருந்தேனே. அது கொஞ்சம் அவுட்டர்ல இருக்கிற இடம், அங்கே எல்லாம் கிடைக்கும். தண்ணி, பொண்ணு ஒன்னுக்கும் பஞ்சமில்ல …… . சூப்பர்டா ……… 

எனவும் முதன் முறை அவன் பேச்சுப் பேதத்தை உணர்ந்தார், தன்னிடம் பேசிய பாவனை என்ன? அப்படி என்றால் இவன் பேசியது எல்லாம் நடிப்பா? என் மகளை இவனை நம்பி கொடுக்க இருந்தேனே?  கல்யாணம் இவனுக்கு டைம் பாஸாமா?

அப்ப நான் சொல்லாம நீ விட மாட்ட …… சரி சொல்லி தொலையுறேன், நம்ம கூட ஹாஸ்டல்ல ஒரு மகா மேதை இருந்தானே, எப்ப பாரு மெடல் வாங்கிட்டு  ம் ம் அதே ரூபன் பயல்தான்…

அவன் படிப்பை கெடுக்கிறதுக்காகத்தான் நாம அவனை அன்றைக்கு தண்ணி அடிக்க வச்சோம். கோபப்படுத்தினா சண்டைக்கு வருவான், நாம கம்ப்ளெயிண்ட் செஞ்சு அவனை ஹாஸ்டல் விட்டு வெளியேத்தலான்னு பிளான் பண்ணோம் இல்லியா?  நாம நினைச்ச மாதிரி தான் ஆச்சு, ஆனா நடந்தது என்ன? அவன் அம்மாவை நான் கெட்ட வார்த்தை பேசப் போக என் பல்லு தான் நாலு போச்சு.

எனக்கு என் முன் பல்லு போனதால், பொய் பல்லு ஃபிக்ஸ் பண்ண எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமாடா? வீட்டில அண்ணன் தம்பிங்க என்னைப் பண்ணின கலாட்டா  தன் பற்களை நற நறத்தான்.

இப்ப கூடக் கொஞ்சம் க்ளோஸா பழகுனதுக்கு அப்புறம் இந்தப் பொண்ணுங்க எல்லாம் பேச்சு பேச்சா வித்தியாசம் தெரிஞ்சு என் பல்லு ஏன் இப்படி இருக்குன்னு விஷயம் கேட்கிறப்போ அப்படியே எனக்கு வெறி கிளம்பி வரும். அன்னிக்கு ஒன்னு அவனை நான் கொன்னுருக்கணும் இல்லைன்னா நான் செத்துருக்கணும்னு வெறியே வரும். அவ்வளவு அவமானமா இருக்கும்.

ஆனா எப்பவுமே மனசில நினைச்சுப்பேன் அவனைத் தான் நாம விரட்டிட்டோமே, இண்டர்னேஷனல் லெவல் காலேஜிலிருந்து வெளியேறியவன் அதுவும் சும்மாவா அவமானப் படுத்தி விரட்டப் பட்டவன் உருப்பட்டுருக்கவா போறான்னு நினைச்சு சந்தோஷமா இருந்தேன்டா 

அந்த சந்தோஷமும் எனக்குக் கிடைக்கலை. ஒரு மீட்ல தான் அவனைச் சந்திச்சேன். ரொம்பக் கம்பீரமா, அழகா, தன்னம்பிக்கையா, தொழிற்சாலை உரிமையாளனாக அங்கே வந்து உட்கார்ந்திருந்தான்.

என் ரத்தமெல்லாம் கொதிச்சது, நான் ஆசைப்பட்ட வெளி நாட்டுக் கார் அவன்கிட்ட இருந்தது. பக்கத்திலேயே ஒரு பொண்ணு, அவளைப் பார்க்கிறான் பார்க்கிறான் அப்படி ஒரு பார்வை ஒரு வேளை கல்யாணம் முடிஞ்சிடுச்சோன்னு எனக்குக் கூடப் பொறாமையா இருந்தது.

அவனைக் கொஞ்ச நாளா பின் தொடர்ந்தேன், டிடெக்டிவ் மூலமா விபரங்கள் தெரிஞ்சுகிட்டேன். அவனால எப்படி இவ்வளவு முன்னேற முடிஞ்சதுன்னு எனக்குச் சுத்தமா புரியலை  நல்ல பணக்கார பின்புலம் இல்லை. குடும்பத்தில யாரும் முன்னே பின்னே பிஸினஸ் செஞ்சி அவனுக்குக் கைட் செய்யவும் வழியில்லை  எப்படி எப்படின்னு என்னை நானே கேட்டப்போ தான் எனக்கு தோணுச்சு  …அது எப்படியும் இருந்துட்டு போகட்டும்.

ஆனால்  என்னை அவமானப்படுத்தினவனைப் பைத்தியக்காரனா, ஒன்னுமில்லாதவனா, ரோடு ரோடா அலைய விடணும், கதறடிக்கணும். சின்ன வயசில இந்த மிடில் க்ளாஸ் பையனை என் கூட அதும் விக்ரமாதித்யன், ஆதித்யன் க்ரூப் ஆஃப் கம்பனீஸோட வாரிசோட எங்க அம்மா அப்பா இணை கூட்டினாங்க, அப்பவே எனக்கு அவன் மேல வந்த வன்மம் இது.

அது எப்படிச் செய்யணும்னு நினைச்சப்ப தான் அவன் கண்ணில உயிரைத் தேக்கி அந்தப் பொண்ணை அவன் ஒரு கடற்கரையில் பார்த்து ஏதோ சொல்லிக் கொண்டு இருந்தான். அப்பத்தான் பொறி தட்டுச்சு, அவளைத் தூக்கினா, அவன் கதறுவான். எனக்கு அதுதான வேணும்  .ஹா ஹா

…………… .

ஆமாடா பெரிய மாஸ்டர் பிளான் தான் போட்டேன், ஆனா மிஸ் ஆகிடுச்சு, எப்படித்தான் சரியான நேரத்தில அங்கே வந்து நின்னானோ?  அந்த பொண்ணை இன்னும் அஞ்சு நிமிஷம் கடலுக்குள்ளேயே அமுக்கி வச்சிருந்தேன்னா ஜலசமாதி ஆகிருப்பா  அதுக்கும் விடாம வந்து அவளை அள்ளிப் போயிட்டான்.

…………

பெரிய தப்புப் பண்ணிட்டேன், அன்னிக்கே அவளை முடிக்க ரெண்டாவது முறை முயற்சி செஞ்சேன்.

……

ஆமா, ஆனா அதுக்குள்ள அவளுக்குக் காவலா ஆட்கள் போட்டிருந்தான், அந்தப் பொண்ணை அதுக்குப் பிறகு என்னால நெருங்கவே முடியலை.

………

ம்ம் என்னையும் அவன் டிடெக்டிவ் வச்சி கண்டு பிடிச்சிட்டான். நான் அவன் கிட்டே ஓப்பன் சாலஞ்ச் விட்டேன்.

……

அவன் எனக்கு ஆயிரம் மெசேஜ் அனுப்பிருப்பான், உன் கோபம் என் மேலதானே அவளை விட்டுடு. நான் வேணா வந்து உன்னைப் பார்க்கிறேன். மன்னிப்பு கேட்டுக்கிறேன்னு 

…………… .

அன்னிலிருந்து தான் நான் அடிக்கடி இடம் மாத்துறது, ஒரு பக்கம் அவனைக் குழப்பிட்டே இருந்தேன். நான் இருக்கிற இடம் தெரிஞ்சு அவன் என்னைத் தேடி வர்றதா தெரிஞ்ச உடனே சட்டுன்னு இடத்தை மாத்தி அவன் கைல அகப்படாமலே போக்கு காட்டிட்டு இருந்தேன். இன்னொரு பக்கம் அவனுக்குப் பிடிச்ச பொண்ணோட அப்பா கிட்ட போய்ப் பேசினேன். அவரு எங்க தூரத்து ரிலேஷனாம்  அது யாரா இருந்தா என்ன? எனக்குப் பழி வாங்கனும் அவ்வளவு தான்.

………

எதுக்கு அவனைப் போயி நான் பார்த்து பேசணும், அவன் அப்பவே பாடி பில்டர்.இப்போ இன்னும் முறுக்கேறி திம்முன்னு இருக்கான். ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. நமக்கு உடம்புல தண்ணியடிச்சு வெறும் ஷோ பீஸ் தான்.அவனோட ஒரு அடிக்கு தாங்குவேனா நான்?  அதான் இன்னிக்கு வர அவன் கைல அகப்படலை… ஹி ஹி எனக் கேவலமான சிரிப்பை சிரித்து வைத்தான்.

………

நான் முன்னமே இப்படித்தானேடா  இங்க வேலை விஷயமா இருக்கேன்னு வீட்டுல சொல்லி வச்சிருக்கேன், சும்மாவே வாரக்கணக்குல வெளில தங்கிற பழக்கம்னு அவங்களுக்குத் தெரியும். அதான் கண்டுக்க மாட்டாங்க  கல்யாணம் பண்னப் போறேன்னதும் அவங்களுக்கு ரொம்பச் சந்தோஷம், பையன் அப்படியாவது திருந்தட்டும்னு  மறுபடி ஒரு கேவலமான சிரிப்பு 

………

ஆமாடா பின்ன எதுக்கு> முதல்ல அந்தப் பொண்ண நான் கட்டுனதும் அதிலயே அவன் பாதிச் செத்துடுவான். அதுக்கப்புறம் அவளை இஷ்டம் போல  .ஹி ஹி  …கொஞ்ச நாள் கழிச்சு அவளை எங்கேயாவது மலை உச்சிக்குக் கொண்டு போய்த் தள்ளிட்டு தெரியாம விழுந்திட்டான்னு சொல்லி நல்லவன் போல அழுதுடுவேன், எல்லோரும் என்னை நம்பிடுவாங்க 

….

அவன் அந்த ரூபன் கிறுக்கு பிடிச்சு தெரு தெருவா அலைவான், அலையணும். நான் அதைப் பார்க்கணும், பற்களை நெரித்துக் கொண்டிருந்தவன் பேச்சை இன்னும் கேட்க இயலாதவராகத் தட்டு தடுமாறியவராக ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தார்.

அவரது உடல் நடுங்கிக் கொண்டு இருந்தது. ஏன் உங்கள் முகம் சரியில்லை என துளைத்தெடுத்த மனைவியிடம் சொல்ல கூட அவரால் முடியவில்லை. என் செல்லப் பெண்ணை மலை உச்சியிலிருந்து தள்ளுவானாம்? எதற்காம் நான் அவனை நம்பி பெண் கொடுப்பதற்காகவா?

மனைவியைப் பார்த்தவர் இவள் இதைக் கேட்டால் மனம் தாங்குவாளா? ஏற்கெனவே மகள் டிஸ்சார்ஜ் ஆகி ரூபன் வீட்டிற்குச் சென்றிருக்க, கணவன் எப்போது அனுமதி தருவார் அவளைப் போய்ப் பார்க்கலாம் என்று தவியாய் தவித்துக் கொண்டு, இரவு தூங்கவும் இயலாமல் படுக்கையில் உருண்டு கொண்டு, தனக்குத் தெரியாமல் கண்ணீரை வடிக்கின்ற மனைவியை அவரும் பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றார்.

தான் எடுத்த முடிவு தவறென்று இதுவரை அவர் நினைத்திருக்கவில்லை, இப்போது தான் அவருக்கு அது எவ்வளவு பெரிய தவறென்று பொட்டில் அடித்தாற் போலத் தெரிந்தது. அந்தக் குடும்பத்தின் மருமகளாக மகள் செல்ல வேண்டுமென்று எண்ணினேனே, ஒரு பொழுதாவது அவனைச் சந்தேகித்து அவன் குண நலன் அறிய முயன்றேனா?

அவளைப் பாதுகாக்க ரூபன் ஏற்பாடு செய்திருக்கின்றானாம்  அதனால் அவளை அணுக முடியாது அவளைக் கொல்ல என்னுடைய உதவியைத் தேடி இருக்கின்றான். எப்படிப்பட்ட கயமைத்தனம்? இப்போது என்னை ஏமாற்றியது போலவே உங்கள் மகள் மலையுச்சியிலிருந்து விழுந்து விட்டாள் என அவன் முதலைக் கண்ணீர் உகுத்தால் தானும் நம்பியிருக்கத்தான் செய்வோம்.

என பல்வேறு எண்ணங்களுக்கிடையேயும், மகள் பத்திரமான இடத்தில் நல்லவன் ஒருவனின் கண்காணிப்பில் இருக்கிறாள் என்பதே அவருக்குத் தெம்பளித்தது. ரூபன் மகள் மேல் ஒரு தூசியும் அணுக விட மாட்டான் என்பதே அவருக்கு ஆசுவாசமளித்தது.

அவரது வயதிற்கு முன் போலச் சட்டு சட்டென்று முடிவு எடுக்க முடியவில்லை. மகளுக்குத் தற்போது ஆபத்தில்லை என்று உணர்ந்த பின்னரே கொஞ்சம் ஓய்வெடுத்து விட்டு முடிவெடுக்க எண்ணினார்.

மகனும் வந்து அவரது முகம் பார்த்து என்ன ஆயிற்று? என விசாரிக்க, அனைவரும் கவலைப் படுவார்கள் என்பதற்காகவே அவர்களோடு இணைந்து அரைக் குறையாகச் சாப்பிட்டு தூங்குவது போலப் படுத்தே கிடந்தார். அவருக்கு மகளைக் குறித்த கவலை என்று மற்றவர்கள் எண்ணிக் கொண்டனர்.

மகளை எண்ணி உள்ளுக்குள் அழுது கொண்டு தூங்காமல் நெடு நேரம் விழித்திருந்த மனைவி தூங்கியதை முடிவுச் செய்த பின்னர் எழுந்து அமர்ந்தார்.

மனதிற்குள்ளாகப் பல்வேறு யோசனைகள், திட்டங்கள் என விடிந்ததும் தெளிந்திருந்தார்.

அடுத்த நாள் இரவே விக்ரமை தாமஸ் ஏற்பாடு செய்திருந்த ஆட்கள் தூக்கியிருந்தனர். நடுக்காட்டில் ஒரு பங்களாவில் வாயில் பிளாஸ்டரும், கை கால்கள் கட்டப்பட்ட நிலையிலும் எதிரில் பலசாலியான பத்துப் பேர்கள் நடமாட அவனைக் கேட்காமலேயே பயத்தில் அவனுடைய பேண்ட் ஈரமானது.

நான்கு நாட்கள் கடந்திருந்தன  அவனது நிலையில் மாற்றமில்லை. குடித்துக் குடித்து உள்ளுக்குள் கெட்டுப் போன உடல். நல்ல உடையணிந்து படோபமாக ராஜா வீட்டு கன்னுக் குட்டியாய் திரிந்தவன் கை கால்களை நாளில் இரு நேரமே திறந்து விட்டு இயற்கை உபாதை கழிக்கச் சொல்லவும், ஒரு வேளை மட்டுமே மட்டமான சாப்பாடு கொடுத்து விடவும் செய்ய வெகுவாகக் களைத்துப் போயிருந்தான்.

காடு காடு சுற்றிலும் காடு… அவன் உடல் வளையாமல் வளர்ந்திருந்தவன் ஆகையால் தானாகவே அங்கிருந்து தப்பிச் செல்ல முடியாது என்பதை உணர்ந்தான். யாரையும் தொடர்பு கொள்ளக் கையில் ஃபோனும் இல்லை.

கொடூர உருவங்கள் கொண்ட அவர்களிடம் பேசவும் பயந்து நடுங்கினான்.

ஆனால், அவர்கள் அடிக்கடி பெரியகருப்பன் அண்ணன் வந்தா இவன் கதை காலி, எதுக்கு இன்னும் வராம இழுத்தடிக்கிறாரு என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

எதற்காக தான் கடத்தப் பட்டிருக்கிறோம்? என்றே அவனுக்குப் புரியவில்லை.

அன்று அவன் முன்னே உட்கார்ந்து அவர்கள் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள்.

இவனை எதுக்குன்னே இங்க வச்சிருக்கோம்? 

வேறெதுக்கு முடிக்கிறதுக்குத்தான் 

அப்ப இப்பவே ஒரு போடு போட்டு முடிச்சிர வேண்டியது தானே?  ஒரு ஈ காக்கா இல்லை, இவன் செத்தான இருக்கானான்னு இங்க யாருக்கு தெரியப் போகுது? 

எனக்குத் தெரிஞ்சு இவனை அடிச்செல்லாம் சாகடிக்க வேண்டாம், அப்படியே போட்டுட்டுப் போயிடலாம், பட்டினி,பசியிலயே செத்திடுவான். இது மற்றவன்.

ஆமாடா இதுவும் நல்ல ஐடியா தான், எத்தனை நாள்தான் இவனுக்காக நாம காவல் காக்குறது. அப்படி இவனை விட்டுட்டு போகறதா இருந்தா நாமளும் நம்ம நம்ம வீடு வாசல் பார்க்க போகலாமில்ல. பெரிய கருப்பன் அண்ணன் வந்து இவனை முடிக்கிறதுக்காக நாம எவ்வளவு நாள்தான் காத்துக் கிட்டு இருக்கிறது?

இவன் அப்படி என்ன தப்பு செஞ்சிருப்பான், பார்க்க பெரிய இடத்துப் பையனா தெரியுதே? 

ஒருத்தர் பொண்ணைக் கடல்ல தள்ளி கொல்ல பார்த்தானாம் மச்சி, அவரு நம்ம பெரிய கருப்பண்ணன் கிட்ட அவன் யாருன்னு கண்டு பிடிச்சு முடிச்சிடு, அவன் யாருன்னு கூட நான் முகம் பார்க்க ஆசைப்படலைன்னு சொல்லிட்டாராம்.

அப்படின்னா இப்ப நமக்கும், பெரிய கருப்பண்னனுக்கும் மட்டும் தான் இதுதான் இவன்னு தெரியும்… அப்படித்தானே?

ஆமாம்பா…

எனக்குக் கூட இவனை இந்த ஊரை விட்டு விரட்டி விட்டுருவோமா, பேசாம பயபுள்ள பிழைச்சு போகட்டும்னு தோணுது. தப்பிக்க விட்டுட்டு தப்பிச்சு போயிட்டான்னு சொன்னாதான் என்னன்னு? தோணுது…

அறிவுக் கெட்டவனே… அப்படி கனவுலேயும் நினைக்காதே … இப்ப அந்த பொண்ணோட அப்பா கூட வேலையா இருக்கிற பெரிய கருப்பண்ணன் இங்கே வந்து இவனை தேடும் போது, நாமதான் இவனை தப்பிக்க விட்டுட்டோம்னு தெரிஞ்சதோ இவனுக்குப் பதிலா நம்மளை பொலி போட்டுருவார்.

ஆமாடா… அது ரொம்ப ரிஸ்க் தான்… எவனுக்கோ பார்த்து நாம எதுக்கு சாகணும்? இவனை அவரே வந்து கொல்லட்டும்… நாம நம்ம வேலையை பார்ப்போம்.

நீ இவனை விட்டுட்டா மட்டும் இவன் திருந்திடுவானா என்ன? மறுபடி அந்தப் பொண்ணைப் போய் கொல்லப் பார்ப்பான். இவன் யாருன்னு அங்கே அவருக்கும் தெரியும்… உடனே போட்டுத் தள்ளிடுவாறு… எப்படியும் இவன் சாவுறது என்னமோ உறுதி.

அதென்னவோ உண்மைதான்…, சாவுறவன் இன்னிக்கு செத்தா என்ன? நாளைக்கு செத்தா என்ன? என உரக்க பேச

விக்ரம் உயிர் பிழைக்கக் கிடைத்த வாய்ப்பெனெ எண்ணி தன் கால்களை வேக வேகமாய்த் தரையில் அடித்தான்.

இப்ப உனக்கு என்னாச்சு?, எதுக்கு இப்படி அலம்பல் பண்ணுற? என்றவனாய் அவன் கன்னத்தில் ஒரு அறை ஓங்கி விட்டவன் வாயிலிருந்து பிளாஸ்டரை வேகமாய் அகற்றினான்.

என்னைப் பெரிய கருப்பண்ணன் வரதுக்கு முன்னாடி தப்பிச்சு விட்டுருங்க, நான் இந்த ஊர்லயே இருக்க மாட்டேன், எங்க ஊருக்கு போயிடுறேன். ஏன் இந்த நாட்டிலயே இருக்க மாட்டேன், வெளி நாட்டுக்கே போயிடறேன் இந்தியாவே வேண்டாம் எனக்கு… அந்த பொண்ணையும் ஒன்னும் செய்ய மாட்டேன்… கதறினான்.

அப்படியா சொல்லுற? பொண்ணை ஒன்னும் செய்ய மாட்டியா? நாங்க எப்படி உன்னை நம்பறது? உன்னால அந்த பொண்ணுக்கு எதுவும் ஆனதுனா நாங்கதான் முதல்ல பலியாவோம்…

சத்தியமா சொல்லுறேன்… அவருக்கு என்னை அடையாளம் தெரிஞ்சதுக்கு அப்புறமா அங்கே போய் மூஞ்சை காட்ட எனக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு? அங்கே போகவே மாட்டேன்… அந்த பொண்ணை ஒன்னும் செய்யவும் மாட்டேன்… என்னை விட்டுருங்க?

ஓ அப்படியா சொல்லுற? உன்னை விட்டுறணுமா… அந்த பொண்ணை ஒன்னும் செய்ய மாட்டேன்னு சொல்லிருக்க…. அங்கே போனாலே உன் பொணம் தான் விழும்னு தெரிஞ்சும் நீ போக மாட்டதான்… ஆனால், நாங்க உன்னை தப்பிக்க விட்டா பெரிய கருப்பண்ணன் கிட்ட அடி வாங்கில்ல சாகணும். உன்னை தப்பிச்சு விடறதுல எங்களுக்கு என்ன ஆதாயம்?

ப்ளீஸ் என்னை விட்டுருங்க… உங்களுக்கு நான் லட்ச லட்சமா பணம் தந்துடறேன். என் கூட யாராவது ஒருத்தர் வந்தீங்கன்னா போதும் என்னோட ஹோட்டல் ரூம்ல எப்பவுமே நிறைய ரூபா வச்சிருப்பேன். உங்களுக்குத் தந்திடுவேன்.

நீ என்னை ஏமாத்திட்டீன்னா 

அதெல்லாம் பண்ண மாட்டேன், இப்பவே முகத்தை மூடிட்டு தான் நான் அங்கே போகப் போறேன். உங்க பெரிய கருப்பண்ணன் கண்ணில நான் படாம இங்கிருந்து தப்புறது தான் இப்ப முக்கியம். இந்த நேரத்துல என் உயிரைக் காப்பாத்துற உங்களைக் கேவலம் பணத்துக்காக ஏமாத்த மாட்டேன். எங்க அப்பா கிட்ட ஏராளம் பணம் கொட்டி கிடக்குது. போனா போகட்டும் அதில கொஞ்சம் நீங்களும் அனுபவிச்சுக்கோங்க 

ஏய் என்ன நாங்க என்ன பிச்சைக் காரங்களா? நீ எங்களுக்குப் போனா போகட்டும்னு தர்றதுக்கு… அப்படியே நீ ஏதாவது திருட்டுத்தனம் செஞ்ச அதான் உன் கூட பணம் வாங்க வர்றவன் கிட்ட துப்பாக்கி இருக்குதே… அங்கேயே உன்னைப் போட்டுத் தள்ளிட்டுதான் மறு வேலையே 

ஸாரின்னே  மன்னிச்சுக்கோங்க… நான் அப்படிச் சொன்னதுக்காகக் கோவிச்சுக்காதீங்க, எப்படியாவது என்னைக் காப்பாத்திடுங்க நான் உங்களுக்குத் தர வேண்டியதை நிச்சயமா தந்திடுவேன், அதை மாதிரி இங்க யார் கண்ணிலும் படாம போயிடுவேன். உங்களுக்கும் என்னால ஒரு தொந்தரவும் இருக்காது, உங்க பெரிய கருப்பண்ணன் கண்ணுலேயும் நான் பட மாட்டேன் என்று கெஞ்சினான்.

பின்னர் அதன் படியே எல்லாம் நடைபெற தாமஸிக்கு விபரம் வந்து சேர்ந்தது. அதற்க்கிடையில் ரூபனுக்கு இசைவாக மகளுடனான் நிச்சயம் குறித்த நிகழ்வுகளைப் பேச ஆரம்பித்தார். மனைவி, பேத்தி மருமகளையும் அவளைச் சந்திக்க அனுப்பி வைத்தார். அப்பா விட்டாலும் நான் விடுவேனோவென எல்லா விஷயத்திலும் கிறிஸ் ரூபனோடு முரண்டிக் கொண்டு நிற்க, தான் திடீரென நல்லவராவது எல்லோர் கண்ணிலும் உறுத்தும் என்று எண்ணியவராக தன் மாறாத அதே கெத்தோடு தாமஸ் இருந்து கொண்டார்.

விக்ரமை கடத்தியதும் மிரட்டியதும் தாமஸின் தொழில்முறை வேலைகளுக்காக வைத்திருக்கும் நபர்கள் தான். மிரட்டுவது வரைக்கும் தான் அவர்களை எப்போதுமே உபயோகித்துக் கொள்ளுவார். தவறான வேலை எதுவும் இதுவரை செய்ததில்லை. மகள் விஷயத்தில் விக்ரமை கொன்று விடலாமா? என அவருக்கு வெறியே வந்தபோதும் கூட, அந்நேரம் இரவும் பகலும் ஜெபிக்கும் மனைவி தான் அவர் கண் முன் வந்தார்…

கணவர் வேலை அவருக்குப் புரியுமோ என்னவோ, ஆனால் அடிக்கடி “நாம செய்யிற ஒவ்வொண்ணுக்கும் பலன் நம்ம பிள்ளைங்க வாழ்க்கைக்கு வரும்ங்க, நம்மளால நல்லது செய்ய முடியாட்டாலும், தப்பா எதுவும் செஞ்சு அவங்க தலையில சாபத்தை ஏத்தி வச்சிடக் கூடாது என்று பேசுவார்  தனக்குத் தெரிந்தும் தெரியாமலும் மனைவி செய்யும் அனேக நல்ல காரியங்கள் அவருக்குத் தெரியும்.

யார் உதவி என்று வந்தாலும் சாரா மறுப்பதில்லை, செய்து விட்டு போகட்டும் என்று அதை இவர் கண்டு கொள்வதுமில்லை. அதனால் தானோ என்னவோ இன்றைக்கு அவரது மகள் வாழ்க்கை காப்பாற்றப் பட்டிருக்கின்றது. தான் விக்ரமை கொலை செய்தால், தன்னுடைய இரத்தக் கறை படிந்த கரங்கள் பிள்ளைகளுக்குச் சாபம் கொண்டு வந்து விடக் கூடாதே என அஞ்சினார்.

அதே நேரம் அவனை அப்படியே விட்டு விடவும் அவரால் முடியாது. பாடம் கற்பித்தாக வேண்டும், தன் மகளை இன்னொரு முறை எட்டிப் பார்க்கும் படி கூட அவன் துணியக் கூடாது என்ற உறுதி அவர் மனதில் எழுந்தது. அவர் சொன்ன படியே விக்ரமிற்கு உயிர் பயம் காட்டும் அந்நிகழ்வு அரங்கேற்றப் பட்டது.

நிச்சயத்திற்க்கு முந்தைய தினம்தான் அவன் தன் தந்தையின் பிசினஸ் இருக்கும் நாடொன்றிற்க்கு சென்று விட்டதாய் அவருக்கு தகவல் கிடைத்தது. பெரிய கருப்பன் என்கின்ற முகமறியாத, நிஜத்தில் இல்லவே இல்லாத கற்பனை கதா பாத்திரமான அந்த எதிரியை எண்ணி அவன் ஒரு போதும் அனிக்காவை நெருங்க போவதில்லை. பழி வாங்குவதை விடத் தன் உயிரைக் காப்பதே சிறந்தது என்கின்ற பாடத்தை அவன் கற்றுக் கொண்டான் தன் மகள் பாதுகாப்பை உறுதிப் படுத்தி விட்டார், இதுவே எனக்குப் போதும் என்று அவருக்குத் தெளிவு பிறந்தது.

ரூபனை எந்த அளவிற்குப் படுத்தி இருந்தால் அவன் கோபம் கொண்டு அடித்திருப்பான்? அவனைத் தவறாக எண்ணினோமே என்று பல நாளாய் மனதில் அவன் குறித்து இருந்த தவறான எண்ணமும் அகன்றது.

மகளின் நிச்சயதார்த்தம் அன்று மன மகிழ்ச்சியோடே சந்திக்க சென்றிருந்தார். மகள் மன்னிப்பு கேட்டு அழுது கரைய, தவறு செய்தது நீ அல்ல நான் தான் என மனதிற்குள் சொல்லிக் கொண்டார்.

ஹாலிற்குச் சென்றாலோ அங்கு ரூபனை பல்வேறு ஏற்பாடுகளில் உழன்றவனாகக் கண்டார். அவனுக்கு இன்னும் விக்ரம் விஷயம் தெரியாது, அதனை தெரிவித்தால் நிம்மதியாக இருப்பானே எனத் தோன்ற தனியே அழைத்து ஓரளவு விளக்கமாகக் கூறினார்.

தான் இது குறித்து யாரிடமும் சொல்லவில்லை எனக் கூறவும், தானும் இது குறித்து யாரிடமும் சொல்லவில்லை, ஜீவனுக்குக் கூட விக்ரம் விஷயம் தெரியாது. அனிக்கா பயந்து விடுவாளென்று இது குறித்த எந்தத் தகவலும் தான் தெரிவிக்கவில்லை என ரூபன் கூறினான். அவருக்கு மருமகன் மேல் மிகவும் மதிப்புக் கூடியது, தன்னைப் போலவே அழுத்த காரனாய் இருக்கும் மருமகனை மிகவும் பிடித்துப் போனது. அவர் கூறியதுக் கேற்ப அனிக்காவிற்குக் கொடுத்து வந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை அதன் பின்னர் அவன் நிறுத்தி விட்டிருந்தான் என அறிந்து கொண்டார்.

அவர் இந்த உண்மைகளையெல்லாம் சொன்ன பின்னர் நிச்சயதார்த்த நிகழ்வுகளில் ரூபன் இலகு மன நிலையோடு கலந்துக் கொண்டதைப் பார்த்த போது தான் அவனுக்குத் தாம் விபரம் தெரிவித்தது மிக நல்லதாயிற்று. இல்லையென்றால் அவன் இன்னும் மன அழுத்தத்தோடு இருந்திருப்பான். இன்றைய நிகழ்வை பதட்டத்தோடு அணுகி இருப்பான் என அவருக்குத் தோன்றியது.

இப்போதோ தன் மகளுக்கு மிகப் பொருத்தமான, அன்பான இணை அமைந்தது அவருக்கு மிகவும் நிறைவே.

என்னாச்சு ஒரே யோசனை என்றவாறு அருகமர்ந்து புன்னகைத்த சாராவைப் பார்த்து தன் எண்ணங்கள் களைந்து புன்னகைத்தார் அவர். ஹனியை சற்று நேரம் முன்பு கிறிஸ் அழைத்து வந்திருக்க,

 டாட்டா டம்பி அவன் காரை இங்க விட்டுப் பொயிட்டான் பாருங்க, என காலையில் ராபின் விட்டுச் சென்ற காரை அவள் காட்டினாள்.

இவ ஒருத்தி டாட்டா பிர்லான்னுட்டு எனப் பேத்தியை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு கொஞ்சினார்.

 நாம அங்கே போகும் போது தம்பி காரை கொடுத்திடுவோம் சரியா  எனச் சொல்ல அவர்களைத் துன்புறுத்தும் வண்ணம் வந்திருந்த காலம் மகிழ்வான காலமாக மாறிக் கடந்தது.

வீட்டிற்கு வந்த மகன், மருமகளைக் கண் திருஷ்டி எடுப்பதாகக் கையால் சுற்றி நெட்டி முறித்தார் இந்திரா. என் பிள்ளைகள் ஜோடி எவ்வளவு நல்லாயிருக்கு. எல்லோர் கண்ணும் பட்டிருக்கும் என்றார். சேலை மாற்ற முதலாகச் சென்ற அனிக்கா கதவை தாளிடும் முன் உள்ளே வந்தான் ரூபன்.

அந்த ரகசிய கப்போர்டின் முன் நின்று தன் புதுச் சேலையில் தன்னை அழகு பார்த்துக் கொண்டிருந்தாள். சட்டென்று அவள் முன்பு நீண்டது ரூபன் கரம். கையில் ஒரு சாவி,

“இது உன் கப்போர்ட் அனி, உன் பொருளெல்லாம் வச்சுக்க” என்றவன் நிற்க,

இந்தத் திருப்பத்தை எதிர்பார்த்திராதவள் ஆர்வமாய் அந்தக் கப்போர்டை திறந்தாள். ஏற்கெனவே, பாதி அடுக்குகள் நிரம்பி இருந்தன. டிராவை இழுக்க அதற்க்குள் சின்னச் சின்னதாய் கீ செயின், குட்டி பொம்மை போன்றவை இருந்தன.

இதெல்லாம் நான் முதல்ல தொழிற்சாலையில் வேலைக்குப் போயிட்டு இருந்தேன் இல்ல அப்ப உனக்காக வாங்கினது. அப்போல்லாம் உன் பேக்ல இப்படிக் குட்டி கீ செயின் எல்லாம் நிறையத் தொங்கும். குட்டி பொம்மை கீ செயின் நிறைய வச்சிருந்த ஞாபகம் இருக்கா? என்றவனை விழி விரிய பார்த்தவள் அடுத்த அடுக்கில் இருந்த மேக் அப் பாக்ஸ் ஐ எடுத்துப் பார்த்தாள்.

இது ஃபாரின்லருந்து வந்தப்போ உனக்காக வாங்கினது என்றான்.

அழகழகாய் பற்பல வண்ணங்களில் சேலைகள், ரெடிமேட் உடைகள், பரிசுப் பொருட்கள், புத்தம் புது மெருகு குலையாமல் இருந்தன. லாக்கரின் உள்ளே ஒரு சில குட்டி அழகு மோதிரங்களும் இருந்தன.

இதெல்லாம் ஒவ்வொரு முறையும் உன்னோட பர்த் டே, என்னோட பர்த் டே, கிறிஸ்மஸ், ஈஸ்டர், ஊர் திருவிழா அப்பல்லாம் உனக்காக வாங்கினது அனி, வெளில எங்கயாவது ட்ராவல் பண்ணாலும் அங்கே உனக்காக எதையாவது வாங்கச் சொல்லும். வாங்கி வச்சதுக்கு அப்புறமா உனக்குக் கொடுக்கறதுக்குத் தயக்கமா இருக்கும். என்னன்னு சொல்லி கொடுக்கிறதுன்னு புரியாம சேர்ந்துட்டே போச்சு.

உனக்கு இதெல்லாம் பிடிச்சிருக்கா? என்றவனின் ஆர்வம் பார்த்து அனிக்கா பேச்செழாமல் நிற்க,

என் கப்போர்ட் அடிக்கடி ஜீவன் திறப்பான், அவனுக்குத் தெரியாம எப்படி ஒளிச்சு வைக்கன்னு யோசிச்சதில ஒரு கப்போர்ட் வாங்கி உன்னோட எல்லாத் திங்க்ஸிம் வச்சுட்டேன். ஜீவனுக்கு இதில என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்க ரொம்ப ஆசை என்றவன் சிரித்தான்.

அவள் கப்போர்டின் டிராவை இழுக்க அங்கேயிருந்தன அவளது தொலைந்து போன ஹேர்பின்கள், வளையல், அந்தத் துப்பட்டா, ஒவ்வொரு பொருளையும் பார்த்தவள் செல்லமாய்க் கோபம் கொண்டு கணவனை முறைத்தாள்.

மனைவி தன் கள்ளத்தனத்தைக் கண்டு கொண்டாளே என அசடு வழிந்தவன், உன் ஞாபகம் வர்றப்போ இதில எதையாவது என் கூட வச்சுக்குவேன். ரொம்பக் கவலையா தூக்கம் வராம இருந்தா உன் துப்பட்டா முகத்தில போட்டுக் கிட்ட உடனே தூக்கம் வந்திரும்  என்றவன் அருகில் நின்றவளை தன்னோடு இறுக்கி முத்தமிட்டான்.

துணிகள் அடுக்கிலிருந்த பல சல்வார்களை அவளுக்குக் காட்டியவன்

இதெல்லாம் நீ எப்ப உடுத்துவ? பார்க்கணும்னு நான் ஆசையா இருந்தேன், அதில சில டிரெஸ் நீ போட்டது எனக்கு ரொம்பச் சந்தோஷம். அந்த ஆஃப் வைட் சல்வார்ல ரொம்ப அழகா இருந்த நீ…

எது நீங்க அன்னிக்கு கண்ணாடில பார்த்துச் சைட் அடிச்சீங்களே அன்னிக்கு உடுத்திருந்ததா? எனக் கிண்டலாய் கேட்க,

அடக் கடவுளே என் பொண்டாட்டிக்கு மட்டும் நான் செய்றது எல்லாம் எப்படித்தான் தெரிஞ்சிருதோ? எனச் சுகமாய்ச் சலித்தான்.

அதான் வீட்லயே எனக்கு ஒரு ஸ்பை இருக்கே…

யாரு என் தம்பி தங்க கம்பி தானே? அவள் தலையை முட்டியவன் ,

முதல்ல உங்க ரெண்டு பேர் ஃப்ரண்ட்ஷிப் பார்த்து ரொம்ப ஜெலஸ் ஆகிருக்கேன், என்னதான் சொல்லு நீயா நானான்னு? கேட்டா அவன் எப்பவும் உன் பக்கம் தான் நிப்பான்.

‘அது மூழ்காத ஷிப் அத்தான் ஃப்ரண்ட்ஷிப்’ கண்ணடித்தாள் அனிக்கா…

 நம்ம ஷிப்-ம் மூழ்காத ஷிப்தான் அனி  …லைஃப் ஷிப்  …லவ் ஷிப் …என்ன சொல்லுறீங்க மிஸர்ஸ் ரூபன்?”

கேட்டவனுக்குப் பதிலாக அவள் அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள். வருடக் கணக்காக அவளை மட்டுமே சிந்தித்து, அவளுக்காகவே தன் வாழ்க்கையைப் போராடி வென்று, சின்னச் சின்ன விஷயங்களையும் அவளுக்காக யோசிக்கும் அவனுடைய அன்பு உன் அன்பெல்லாம் பெரிதல்ல என அவளைப் புதுப் புதுப் பரிமாணங்களில் மிரட்டிக் கொண்டிருந்தது. இருவரில் யார் யாரை அதிகமாய் அன்பு செய்கிறார் என்பதைக் கணிக்க இயலாமல் அங்கே தராசு மாறி மாறி தாழ்ந்து எழுந்து கொண்டிருந்தது. அதுதானே இனிய இல்லறத்தின் ரகசியமும் கூட.

ரூபன் அனிக்காவிற்கான திருமணப் பரிசாகக் கிறிஸ் தம்பதியருக்கு வெளி நாட்டு ஹனிமூன் பேக்கேஜை பரிசளிக்க, இப்போது ஹனிமூன் செல்ல முடியாத படி நிறைய வேலையிருக்கிறதே என ஹனிமூனை தவிர்க்க நினைத்த அண்ணனை ஜீவன் சரிக்கட்டி அனுப்பினான். ஒரு மாத காலம் தெவிட்டாமல் தனிமையில் காதல் செய்தவர்கள் நாடு திரும்பினர். ரூபன் உற்சாகமும், மும்முரமாகத் தன்னுடைய மற்றும் தம்பியின் புது தொழிற்சாலைக்கான வேலைகளில் ஈடுபடலானான்.

ஜீவனின் தொழிற்சாலையில் இப்போது வேலைகள் ஆரம்பித்து விட்டிருந்தன. ஆரம்பக் கட்டம் என்பதால் அது நிறைய உழைப்பை விழுங்கிக் கொண்டு இருந்தது. அண்ணனும் தம்பியும் இரண்டு தொழிற்சாலைகளின் வேலைகளையும் மும்முரமாக வேலை செய்து கவனித்துக் கொண்டனர். அனிக்கா கூட இருந்து வேலைகளைக் கவனித்துக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று எண்ணினாலும் ரூபனால் அவளை தொழிற்சாலைக்கு வா என்று சொல்ல முடியவில்லை. மனைவியைக் கொண்டு காரியம் சாதிக்க நினைப்பவனா அவன்? தன்னுடைய மனைவியை வேலையாளாய் பணி செய்வதற்காகப் பயன்படுததுவதற்காகத்தான் திருமணம் செய்யக் கேட்டதாக மாமனார் சொன்னதை அவனால் இன்னும் மறக்க முடியவில்லை. அது அவனது சுயமரியாதை அடிப்பட்ட விஷயமல்லவா?

மாதங்களாகின…

மகளை மதியம் ஒருமுறை போய்ச் சந்திப்பது தாமஸின் வழக்கமாக இருந்தது, பல நாட்கள் அப்பாவோடு தொற்றிக் கொண்டு அவளும் தன் தாய் வீடு சென்று வருவாள். அன்றும் அப்போதுதான் சாப்பிட்டவர் நடைக்கு நடையும் ஆயிற்று, மகளைப் பார்த்தார் போலவும் ஆயிற்று என்று புறப்பட்டார்.

அப்போது ரூபன் ஏதோ வேலையாக வீட்டிற்கு மதியம் வந்தவன் கட்டிலில் உட்கார்ந்து பேப்பர்களைச் சரிப்பார்த்துக் கொண்டிருந்தான். அருகில் குட்டித் தூக்கம் போட்டுக் கொண்டிருந்தவள் பக்கத்தில் கணவனைப் பார்த்து, உற்சாகமாகி அவன் மடியில் தலை சாய்த்துக் கொண்டாள். அவள் தலையை வருடியவன் தன் வேலையைச் சரி பார்க்க ஆரம்பித்தான்.

அத்தான் சாப்பிட்டீங்களா?

ம்ம்  நீ? 

நானும்… அதான் தூக்கம் வந்திச்சா படுத்து தூங்கிட்டேன். சோம்பல் முறித்தவள் அவன் மடியின் மேல் இன்னும் வசதியாய் பரவினாள்.

அத்தான் வீட்ல தனியா இருந்து போரடிக்குது, நீங்க இன்னிக்கு போகாதீங்களேன் 

இந்தப் பேப்பர்ஸ் இப்ப சப்மிட் பண்ணனும் மா  வேலை முடிச்சிட்டு சீக்கிரம் வர பார்க்கிறேன் சரியா? என் செல்லமில்ல… போக விடு  … ஜீவன் தொழிற்சாலை முக்கியமான ஆவணங்கள் இவை, ரொம்ப முக்கியம் மா எனக் கெஞ்ச , அவள் அவனை விடாமல் தொல்லைப் பண்ணிக் கொண்டே தோளில் தொங்கிக் கொண்டவாறு அவர்கள் அறையின் வெளியே வரை வந்தாள்.

எதிரில் அப்பாவைப் பார்த்ததும்,

‘அப்பா வாங்கப்பா’ என்றவள் மறுபடி கணவனிடம் அதே பாட்டைப் பாடி வைக்க,

 தம்பிதான் சொல்றாங்க இல்லியா? அப்புறமும் ஏன் உனக்கு இவ்வளவு பிடிவாதம்? அவங்க ரெண்டு பேருக்கும் இப்ப வெளி வேலையா அலையறதுக்கே நேரம் சரியா இருக்கும். கூடப் போயி உதவி செய்தோமானு இல்லாம அவர் வேலையும் கெடுக்கிறியா?” எனக் கடிந்தார்.

அப்படின்னா நான் அத்தான் கூட தொழிற்சாலைக்கு போனா உங்களுக்கு எதுவும் வருத்தமில்லையாப்பா?

இதை எதற்காகத் தன்னிடம் மகள் கேட்கிறாளென?ப் புரியாதவராக, தான் முன்பெப்போதோ அகங்காரமாய்ப் பேசிய வார்த்தைகள் ஒருத்தனை சல்லி சல்லியாய் நொறுக்கி போட்டிருப்பதை நினைவில் வைத்திராதவர்,

 பின்ன வீட்டுல சாப்பிட்டு சாப்பிட்டுத் தூங்கறதுக்கா படிக்கப் போனே?  எனக் கேட்க,

மாமனார் கொடுக்கும் கவுண்டரில் ரூபனுக்குச் சிரிப்பே வந்து விட்டது.

‘எப்ப பாரு இவங்க ரெண்டு பேரு இஷ்டத்துக்கு என்னை ஆட்டி வைக்கிறது, பின்னே என்னையே டேமேஜ் செய்யிறது’ என அப்பாவை முறைக்க முடியாத காரணத்தால் கணவனை முறைத்தாள். அதில் “இன்னிக்கு உனக்கு இருக்கு மகனே ”… என்கிற மறை முக மிரட்டல் இருப்பதை உணர்ந்தவன் அங்கிருந்து நகர யத்தனித்தான்.

அவன் கையை விடாமல் பற்றியவள், ‘நான் அப்போ நாளையிலருந்து அலுவலகம் வருவேன்’ என அப்பா முன்பாக உறுதி படுத்திக் கொண்டாள்.

 சரி வா  , என அந்தப் பிடிவாதக் காரனையே உறுதிக் கொடுக்க வைத்து தான் கையை விட்டாள்.

இன்னிக்கு வரை மட்டும் தான் உங்களுக்கு சுதந்திரம். நல்லா எஞ்சாய் பண்ணிக்கோங்க, நான் அங்கே வர்றதே நீங்க உங்க வேலையை சரியா செய்யிறீங்களான்னு பார்க்கத்தான் என மிரட்டியவளை ரசனையாய் பார்த்து விடைப் பெற்றான்.

அவளும் அப்பாவோடு அமர்ந்து சற்று நேரம் அளவளாவலானாள்.

இப்போது அவளும் தொழிற்சாலை சென்று வர ரூபனுக்கு வேலைகள் கொஞ்சம் குறைந்தது. வேலையாளாக அவளைப் பணி புரிய விடாமல் முதலாளியாய் வேலை பழக்கினான். முன்பு பெற்ற பயிற்சி அவளுக்கு ஓரளவிற்கு உதவிகரமாக இருந்தது. கணவன் தொழிற்சாலையில் இல்லாத தருணங்களில் இயன்றவரை விஷயங்களைச் சமாளித்துக் கொள்வாள். முடியாத பட்சத்தில் அவனுக்குப் போன் போட்டு புரியும் வரை அவனிடம் கேள்விகள் கேட்டு தெளிந்து செயல்படுத்துவாள்.

என்ன இருந்தாலும் அவளை காலையில் நிதானமாக நேரம் கழித்தே தொழிற்சாலை வரச் சொல்பவன், சாயங்காலம் கண்டிப்பாகச் சீக்கிரமே அனுப்பி வைத்து விடுவான்.

வீட்டில் முடிந்த வரை அத்தைக்கும், ப்ரீதாவுக்கும் உதவியாக இருப்பவள், சற்று வேலைகள் கடந்த பின்னே அலுவலகம் சென்று வருவாள், அடிக்கடி அம்மா அப்பாவைப் போய்ப் பார்த்து வருவதும், ஹனியுடன் நேரம் செலவழிப்பதுவும், ராபினுடன் விளையாடுவதும் என அவள் வாழ்க்கை அவளது இயல்பு மாறாமலேயே கடந்து சென்றது.

அவளின் குறையாத புன்னகையும், மகிழ்ச்சியுமே ரூபனின் எதிர்பார்ப்பாக இருக்க அங்கே அவர்களது வாழ்க்கை தடங்கலில்லாமல் கடந்து சென்றது.

ஒரு வருடம் கடந்ததும் சற்று தன் தொழிர்சாலை நிர்வாகம் ஸ்திரப் பட ஜீவனுக்குத் திவ்யாவை பெண் கேட்கச் செல்வதற்காக ரூபன் குடும்பத்தில் சொல்லி முனைந்தான்.

ஒரு நல்ல நாளில் ஜீவனுக்கும், திவ்யாவுக்கும் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்தது. ஒரு வருடம் கழித்துத் திருமணம் என்று அவர்கள் திட்டமிட்டுக் கொண்டனர்.

தீபன் தன்னுடைய ப்ளாட் தயாராகி ஒப்படைக்கப் பட அனைவரும் சேர்ந்து அங்கே இருக்கலாம் என அழைத்தான்.

பிள்ளைங்க சொந்த கால்ல முன்னேறி நல்லா இருக்கிறதை பார்க்கிறதை தவிர எங்களுக்கு என்ன சந்தோஷம், நாங்க இங்க தான் இருப்போம், நீ போப்பா எனத் தனியாய் சிறகுகள் விரித்துப் பறக்க மகனை மகிழ்வோடு அனுப்பி வைத்தனர் பெற்றோர். பேரன் ராபின் பெரும்பாலும் தாத்தா பாட்டியோடு இருக்க, வார இறுதி நாட்களை அனைவரும் சேர்ந்தே கழிக்க அந்த வாழ்க்கை முறையும் அவர்களுக்குப் பழகித்தான் போயிற்று.

அடுத்து இன்னொரு வைபவம் சில மாதங்களில் நடைபெறுவதற்காக அனைவரும் மகிழ்ச்சியாக ஒன்றாகக் கூடியிருந்தனர்.

ரூபன் கடந்த வருடம் ஆரம்பித்திருந்த வீட்டின் வேலை நிறைவு பெற்றிருக்க, புதுமனை புகு விழா அது. பார்த்து பார்த்து ரசித்து ரசித்து ரூபன் வீட்டை கட்டியிருந்தான்.

தாமஸிக்கு தான் முன்பு வீடு கட்ட எண்ணியிருந்த அந்தக் குறிப்பிட்ட, பிரபலமான இடத்தில் தன் மருமகன் எப்படி வீட்டை நிர்மாணித்தான் என்பது ஆச்சரியமே? தன்னுடைய மருமகனுடைய சிந்தனைகள் ஓரளவு ஒன்று போலவே இருப்பதைப் பார்த்து அவருக்கு வியப்பாக இருந்தது , பெருமையாகவும்.

கடந்த சில மாதங்களாகவே வீட்டுக் கட்டுமானம் நிறைவு பெற வரும் போதே வீட்டிற்க்குள் ஏகத்திற்குச் சலசலப்பு.

அனிக்காவிற்கு மாமியார் மாமனாரை விட்டு இந்த வீட்டை விட்டுச் செல்ல விருப்பமே இல்லை. நாம அத்தை, மாமா எல்லோர் கூடவும் இருப்போம் அத்தான். எதுக்கு அங்கே போய்த் தனியா? என அதிருப்தியை காட்டினாள்.

வாங்கம்மா, அப்பா எல்லோருமா சேர்ந்து இருப்போம் என்று ரூபன் ஏற்கெனவே கேட்டுப் பார்த்திருந்தான். ஆம் முன்பு போலல்லாது அம்மாவிடமும், வீட்டில் எல்லோருடனும் சகஜமாகப் பேச ஆரம்பித்திருந்தான். எல்லாம் அனிக்கா மயமே…

தீபன் அழைத்த போது அவனோடு இருக்கச் செல்லாதவர்கள் இப்போது ரூபன் அழைத்ததும் செல்வது தவறு என்று பெரியவர்களுக்குத் தோன்றியது. பிள்ளைகள் மட்டில் யாருக்கும் மனப்பேதம் வந்து விடக் கூடாது என்பதில் அவர்கள் மிகக் கவனமாய் இருந்தார்கள். அதனால் அவர்களோ ரூபனின் வீட்டிற்கு குடிபெயர மறுத்திருந்தனர். அனிக்கா மற்றும் பெற்றோரின் விருப்பமின்மை பார்த்து ரூபனுக்கு மண்டையைப் பிய்த்துக் கொள்ளலாமா? எனும் குழப்பம் ஓடிக் கொண்டிருந்தது. அப்போது தான் மகன் ஆசை அறிந்து ராஜ் மருமகளைச் சமாதானப் படுத்தினார்,

அட நீ வேற மருமகளே, நீங்க ரெண்டு பேரும் புது வீட்டுக்கு போங்க. எங்களையும் உங்க கூடவே கூப்பிட்டா எப்படி? நானே இப்பத்தான் ரிடையர்ட் ஆகி வந்திருக்கேன், உங்க கூடவே வந்திட்டா எங்களுக்குப் பிரைவசி கிடைக்குமா?

எனச் சிரிப்பு வெடி கொளுத்திப் போட்டார். கேட்டவளுக்குச் சிரிப்பென்றால், இந்திராவிற்கு வெட்கமாகி போய்விட்டது.

‘உங்களுக்கு இந்த வயசுல இப்படிப் பேச வெட்கமாயில்லை, பிள்ளையில்லாத வீட்ல கிழவன் துள்ளி விளையாண்டானாம் அப்படி இல்ல இருக்கு’ என்று அவர் பொரிவதும், ராஜ் பணிவதுமாக ரூபனுக்கும், அனிக்காவுக்கும் அந்த விளையாட்டைப் பார்க்க பார்க்க சலிக்கவில்லை ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.

அப்போது புதுமனை புகுவிழா நாளுக்கு முன்பாகவே ஒரு நாள் அனிக்கா கருவுற்றிருப்பது தெரிய வர, ரூபனுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. மனைவியை இன்னுமாய்க் கொண்டாடினான். கருவுற்றிருக்கும் காலத்தில் எதற்காக வீடு மாற வேண்டும், இப்போது முழுவதுமாக அங்கு ஷிப்ட் ஆகாவிட்டாலும் கொஞ்ச கொஞ்சமாக அங்கு ஷிப்ட் ஆகிக் கொள்லலாம் என்று இருவரும் முடிவெடுத்தனர்.

இந்த நேரத்தில அனிப் பிள்ளையைத் தனியா விட முடியுமா? நீ என் பேரப்பிள்ளை பொறந்து தாய்ப்பால் குடிக்கிற வயசு வரைக்கும் இங்க தான் இருக்கணும் சொல்லிட்டேன், கொஞ்சம் வளர்ந்திட்ட பிறகு அவரவர் வீட்டுக்கு போங்க, இல்லை வேலையைப் பார்க்க போங்க நாங்க எங்க பேரப்பிள்ளைகளைப் பார்த்துக்கிறோம் என்று இந்திரா சொல்லி விட்டார்.

 உங்க பேரப்பிள்ளையால உங்க பிரைவசி போச்சே மாமா  என அனிக்கா எடுத்துக் கொடுக்க,

‘மாமாவும் மருமகளும் அடிவாங்காம போயிடுங்க’ என்ற இந்திராவின் முகத்தில் மகிழ்ச்சியே இருந்தது.

வீட்டு வேலை நிறைவுற்று புதுமனை புகுவிழா அன்று நிகழவிருந்தது. ரூபனும், ஜீவனும் முன் தினம் இரவே அங்குக் கொண்டு செல்ல வேண்டிய பொருட்களைக் கொண்டு சேர்த்திருந்தனர். தூசு ஒத்துக் கொள்ளாது எனச் சொல்லி அனிக்காவை அவர்கள் அங்கு வர விடவில்லை. அன்றைய விழாவின் சாப்பாடு முதலாக எல்லாம் வெளியில் ஆர்டர் செய்யப்பட்டிருந்தது.

அதிகாலையிலேயே மனைவியோடு ரூபன் தங்கள் வீட்டிற்குச் சென்று விட்டிருந்தான். ஏற்கெனவே அவளழகு அவனை நிலையிழக்கச் செய்யும். இப்போதோ தாய்மையின் பொழிவில் இன்னும் அதிகமாய் அழகாய் இருந்தாள். அவள் அருகே இருக்கும் போது அவனது கண்கள் அவளை விட்டு இங்குமங்கும் அகலுவதில்லை.

வீட்டினர் வர இன்னும் நேரமிருக்கக் கிடைத்த தனிமையை நன்கு பயன்படுத்திக் கொள்ள நினைத்தவன் வீட்டின் புதிய ஃபர்னிச்சர்களைக் கவனமாய்ப் பார்வையிட்டுக் கொண்டிருந்தவள் முன் வந்து நின்றான்.

புன்னகை சுமந்த அவள் விழிகள் அவனை மலர்வாய் நிமிர்ந்து பார்த்தன. அவள் தோள்களில் ஊர்ந்த அவன் கைகள் நகர்ந்து அவள் இடுப்பை மென்மையாய் பற்றிக் கொள்ளக் காதலாய் இதழ் முத்தம் பதித்தான். இடையில் பதிந்த கரங்கள் முதுகை சுற்றி வளைத்துக் கொள்ளத் தனக்குள் இணைத்து அணைத்துக் கொண்டான்.

 இப்பல்லாம் உன்னைத் தொடவே பயமா இருக்கு அனி  , இப்போது அவள் உச்சந்தலையில் சிலீரென இறங்கியது முத்த மழையின் சாரல்.

ஆனா புது வீட்டுல முதல் முத்தம் முதல் அணைப்பு இதெல்லாம் வேணும்ல  பின்னால ஒரு நாள் எனக்கு முத்தம் கொடுத்தீங்களா?ன்னு நீ கேட்டு வருத்த படக் கூடாதில்ல அதுக்குதான் குறும்பாய்ச் சிரித்தன அவன் கண்கள்.

‘இப்படி ஒரு நொண்டிச் சாக்கு வச்சிருக்கீங்களா?’ அவன் வலு மிக்கப் புஜத்தை கிள்ள முயன்று தோற்றவள் கடித்து வைத்தாள்.

;புது வீட்டில நான் கடிக்கலைன்னு நீங்க வருத்த படக் கூடாதில்ல?’  . கிண்டலாய் சொன்னவள் தனக்கு அருகில் இருந்த அவன் நாடியில் செல்லமாய்க் கடித்து முத்தமிட்டதோடு நில்லாமல் குனிந்து அவன் இட மார்பில் முத்தமிட்டாள்.

ஹேய் ஹார்ட்ல கிஸ் பண்றேன்னு உனக்கே நீ முத்தம் கொடுத்துக்கிறியா? உள்ளுக்குள்ள நீதானே இருக்க எனக் காதல் பேசியவனை…

லவ் யூ அத்தான்  என்றவளாய் நின்று நிதானமாய்ப் பார்வையிட்டாள். மனதிற்குப் பிடித்தவளுடனான வாழ்க்கையோ, வெற்றிகரமான தொழில் நடத்தும் திறன் தந்த தன்னம்பிக்கையோ, தகப்பனாகப் போகும் பெருமிதமோ ஏதோ ஒன்று அவனை இன்னும் இன்னும் அதிகமாய் ஆகர்ஷிப்பவனாகக் காட்டியது.

‘இப்போ நீங்க இன்னும் ஹேண்ட்சமா ஆகிட்டீங்க மஸல்ஸ் வேற முன்ன விட இப்போ… ம்ம்’ எனக் கண்ணை உருட்டியவளிடம்,

‘இப்போ நான் அப்பா ஆகிட்டேன்ல’ என தன் மீசையை முறுக்கிக் கொண்டான்.

அவனிடம் தன் நாக்கை நீட்டி, கண்ணை உருட்டி கிண்டலாய் அபிநயித்தாள்  ‘முன்ன விட இப்போ மீசை கொஞ்சம் அடர்த்தியாயிடுச்சு என அவன் மீசையைத் தன் விரல்களால் அளந்தாள்  ம்ம இதுவும் கூட ரொம்ப அழகாயிருக்கு’ தன்னவனின் ஆண்மை மிளிரும் ஆளுமையை ரசித்தாள்.

பதவி உயர்வு கூடக் கூட மீசையும் கூடும்ல…நீ வேணா பாரு நமக்கு இரண்டாவது பிள்ளை பிறக்கும் போது இன்னும் அடர்த்தியாக்கிடுவேன்  என்றான்

ஓஹோ  கண்ணடித்தவள் தனக்கு மிகவும் பிடிக்கும் அதே நேரம் எரிச்சல் மூட்டும் குரல் ஒன்று வீட்டின் வாயிலில் கேட்க, அங்கே செல்ல எண்ணியவள் அந்த நேரம் கணவனின் கை மீசையை வருடப் போக அதை விளையாட்டாய் தட்டிவிட்டு நாக்கை துருத்திக் காட்டியவளாக அங்கிருந்து வாயில் நோக்கி விரைந்தாள்.

‘என்னங்க மேடம் ஒரு வேலையும் செஞ்சா மாதிரி தெரியலை, நாங்க வச்சா வச்ச மாதிரியே இருக்கு. கொஞ்சம் தூசி கூட தட்ட முடியலியா?’ ஏற்கெனவே சுத்தமாய் இருந்தவற்றை அங்கிருந்த துணியால் சுத்தம் செய்கின்றவனைப் போலத் தட்டிக் கொண்டிருந்தான்.

‘ஏண்டா என்னைத் தொல்லைச் செய்யுறதுக்கு வந்துட்டியா? எல்லாம் சுத்தமா தான இருக்கு…’ வந்தவள் வம்பிளுத்தவனைக் கோபத்தில் முறைத்தாள்.

‘அதெல்லாம் நாங்க செஞ்சது, குடும்பத் தலைவி மேடம் என்ன செஞ்சீங்க?’ கொஞ்ச நாளா எல்லோரும் உன்னை ரொம்பத்தான் கொஞ்சறாங்க, ஒண்ணும் சரியில்லை…

போடா உனக்கு என் மேல பொறாமை…

விட்டால் முட்டிக் கொள்வார்கள் போல இருக்க ரூபன் அவர்களுக்கிடையில் புகுந்தான்.

ஏன்டா? நீங்க ரெண்டு பேரும் கெட்டது போதாதுன்னு என் பிள்ளைக்குச் சண்டை போட சொல்லி கொடுத்திடுவீங்க போல?…

;அதெல்லாம் உன் பிள்ளை அனி மாதிரி சண்டைக் கோழியா தான் இருக்கப் போகுது அண்ணா… அப்படியே தெரிஞ்சும் தெரியாமலும் உன்னை மாதிரி அமைதியா பிறந்துட்டா நான் தனியா கூட்டிட்டுப் போய்ச் சண்டைப் போடுறதுக்கு டிரெயினிங் கொடுத்திருவேன் பார்த்துக்க…’ என்றான் கெத்தாக

 ப்போடா நீயும் உன் ட்ரெய்னிங்கும்” எனத் தோள்களைக் குலுக்கிக் கொண்டவள் அவன் பின்னால் கண்ணைச் செலுத்தியவளாக, “வா திவி  … எனவும் ஜீவன் அதிர்ந்து திரும்பி பார்த்தான். ஏனென்றால் திவ்யா மதிய நேரம் தான் வருவதாக இருந்தது, மேலும் அவள் மற்ற நேரங்களில் இவர்கள் சண்டையில் தலையிடாவிட்டாலும், தற்போது கருவுற்றிருக்கும் அனிக்காவை அவன் சீண்டுவது அவளுக்குப் பிடிக்கவில்லை,

 வயித்தில இருக்கப் பாப்பா நம்ம சித்தப்பாவா இப்படின்னு உன்னைத் தப்பா நினைச்சுக்கும் கொஞ்ச நாள் வம்பிழுக்காம சும்மா இரு  என ஓரிரு முறை கோபித்துக் கொண்டிருக்கிறாள். என்னதான் அவனும் முயன்றாலும் அனிக்காவிடம் வம்பிழுக்காமல் அவனால் இருக்க முடிந்ததில்லை.

அவன் திகைப்பை கண்டு கணவனிடம் காட்டி கிண்டலடித்துச் சிரித்தவளை இது ரெண்டும் திருந்தாத கேஸ்கள் என்ற பார்வையோடு ரூபன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அப்பா, அம்மா எல்லாரும் வராங்க அத்தான் என வாயில் நோக்கி வேகமாய் விரைந்தவளை எட்டி நெருங்கி அவள் தோளில் கைப்பதித்து ஹேய் மெதுவா நட, உன்னைக் கவனிச்சுக்கவே ஒரு ஆள் வைக்கணும் போல எனக் கடிந்தான்.

கணவனின் கை வளைவிற்குள் வேகம் குறைத்து வந்தவளை பார்த்துக் கொண்டிருந்த அவள் வீட்டினருக்கு அவர்கள் இருவரை தங்கள் பெண்ணுக்கு மிகச் சரியான வாழ்க்கைத் துணை அமைந்திருக்கிறது எனும் எப்போதும் காணும் போதும் எழும் மன நிறைவு இன்றும் எழுந்தது.

மனைவி நடை வேகம் குறைத்ததும் அவள் தோளை விட்டு கையை நகர்த்தியவன் அவர்களை வரவேற்க முன் சென்றான். வீடு மிக விஸ்தாரமாகப் பல அறைகளோடு அழகாகவும், நளினமாகவும் அமைந்திருந்தது.

அத்தையும், அம்மாவும், ப்ரீதா அக்காவும், பிரபா அண்ணியும், ஜாக்குலினும் முன்னே நின்று நடத்த அனிக்காவை யாரும் இடத்தை விட்டு அசையக் கூடாதெனச் சொல்லி விட்டனர்.

தாமஸிம் ராஜும் ஒருபக்கம் அமர்ந்து பழைய கதைகள் பேச,

கிறிஸ், தீபன், ரூபன், ஜாக்குலின் கணவர் இணைந்து இன்னொரு பக்கம் அரட்டை அடிக்க

ப்ரீதா குடும்பத்தினர், திவ்யா குடும்பத்தினரும் சற்றுத் தாமதமாக வந்தாலும் மகிழ்ச்சியாகக் கலந்துக் கொண்டனர். திவ்யா கூட மாட ஒத்தாசையாக இருந்தாள். அவ்வப்போது ஜீவனுடன் டூயட் பாடவும் மறக்கவில்லை. திவ்யா பெற்றோர்கள் வீட்டை சுற்றி பார்க்கச் சென்றிருக்க,

 ஏன் அனி ஜீவா தம்பியை காணோமே நீ பார்த்தியா?” என ப்ரீதா எடுத்துக் கொடுக்க,

 அவன் இப்ப ரொம்பப் பிஸி அக்கா 

என அனிக்கா கிண்டலடிக்க டெரஸ் பக்கம் டூயட் பாடிக் கொண்டிருந்தவர்கள் திருதிருத்தவர்களாய் ஒன்றன் பின் ஒன்றாக வந்து நின்றனர்.

எனக்குன்னு அண்ணிங்க வாய்ச்சிருக்காங்க பாரு, என முணு முணுத்தவாறு ஜீவன் கடந்து செல்ல திவ்யா அனியுடன் சேர்ந்து அமர்ந்துக் கொண்டாள்.

அனியும் ப்ரீதாவும் காற்றில் ஹை ஃபைவ் செய்து கொண்டனர்.

‘அவ பாட்டுக்கு இருக்கா… அதிகமா மசக்கை படுத்தாம இருக்கிறாளே, ஒரு வேளை கொண்டிருக்கிறது பெண்பிள்ளையா இருக்குமோ?’ எனப் பெரியவர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டிருந்த ராபின், கட்டிலில் சாய்வாக அமர்ந்திருந்தவள் அருகே வந்து சற்று சேலையை அகற்றி அவள் வயிற்றில் கண்கள் பொருத்தி பார்க்கலானான்.

கூச்சமாய் இருக்க,” என்னடா செய்யற குட்டி?” என அனிக்கா அவனிடம் கேட்டாள்.

‘நான் குட்டி பாப்பாவை பாக்கேன் சித்தி அவ தெரியவே மாட்டேங்கிறா’ என்றான். பெரியவர்கள் சிரிக்க, சற்றே வளர்ந்து விட்ட ஹனிப்பாப்பா தன் கீச்சுக் குரலில்,

‘அதெல்லாம் இப்ப தெரிய மாட்டாங்க டம்பி, ஹாஸ்பிடல் போயிதான் பாப்பாவ வாங்கிட்டு வருவாங்களாம், அதுக்கப்புறமாதான் பார்க்க முடியும். என் பிரண்டு தான் எனக்குச் சொன்னா அவங்க வீட்லயும் இப்பத்தான் தம்பி பாப்பா வாங்கிட்டு வந்துருக்காங்க  என நீட்டி முழக்கவும்,

ராபினையும், ஹனியையும் அருகில் அழைத்த ஜீவன்,

சரி ஹனிக்கு, ராபினுக்கு விளையாட தம்பி பாப்பா, தங்கச்சி பாப்பா எல்லாம் வேணுமா, வேண்டாமா? எனச் சரித்திர முக்கியமானக் கேள்வியைச் சின்னவர்களிடம் கேட்டு வைக்க,

இரண்டு பேரும் பெரியவர்கள் போலச் சிந்தித்ததவர்களாக, “ஆமாம் வேணும்  எனத் தலையாட்ட,

 அப்ப போயி உங்க அம்மா அப்பா கிட்ட போய்த் தம்பி பாப்பா, தங்கச்சி பாப்பா வேணும்னு அடம் பிடிங்க போங்க என ஏவி விட்டான்.

இரண்டும் அவரவர் அம்மாக்களிடம் போய் “எனக்குக் கூட விளையாடதுக்கு இப்பவே பாப்பா வேணும்  எனக் கேட்டு வைக்க, குழந்தைகளுக்கு இதையெல்லாமா சொல்வது என்று ப்ரீதா, பிரபா கோபத்தோடு ஜீவனை அடிக்கத் துரத்த அவன் அப்பா பின்னால் ஓடி மறைந்தான். பத்திரமாக நின்று கொண்டு

 எப்ப பார்த்தாலும் ஒரு சின்னபபையனையே எல்லோரும் அடிக்கத் துரத்துறது கொஞ்சம் கூட நல்லாயில்லை சொல்லிட்டேன்  எனப் பேசி கலகலக்க வைத்தான்.

ஜாக்குலினும் தம்பிக்கு சப்போர்ட்டுக்கு வந்தாள்.

இப்ப என்ன என் தம்பி தப்பா சொல்லிட்டான், போங்க போய் ஆகற வேலையைப் பாருங்க என்று கிண்டலடித்தாள்.

போட்டோ கிராபரை ஏற்பாடு செய்திருக்க அழகழகான தருணங்களைப் படத்திற்க்குள் சேகரித்தனர்.

அனைவரையும் குடும்பமாக இணைந்து போட்டோ எடுக்க ஆயத்தமாக ப்ரீதா பெற்றோர்களும், திவ்யா பெற்றோர்களும் கூட அமர்ந்தனர். தாமஸ் சாரா மற்றும் ராஜ் இந்திராவும் அமர்ந்தனர். அவர்களுக்குப் பின்னே கிறிஸ்ஸிம் பிரபாவும் நிற்க, அடுத்து ஜாக்குலின் கணவரோடு நிற்க, அதை அடுத்து தீபன் ப்ரீதாவும், அதன் பின் ரூபன் அனிக்காவும், அடுத்து ஜீவன் நிற்க வெட்கத்தில் தயங்கியே திவ்யா அவனருகில் வந்து நின்றாள். பிரின்ஸ், ஹனி மற்றும் ராபின் தரையில் ஸ்டைலாக முட்டிக்கால் போட்டு நின்று போஸ் கொடுத்தனர்.

க்ளிக், க்ளிக், க்ளிக் மனமகிழ்ச்சியான அத்தருணமும் நிழல்படமாய்ப் பதிந்தது. இனிய அந்தக் குடும்பத்தின் அன்பின் வெளிப்பாடு ஒவ்வொருவர் முகத்திலும் நிறைவைத் தந்தது.

மதிய சாப்பாடு கடந்து அரட்டை சாயங்கால ஸ்னாக்ஸ் என அமர்க்களப் பட நிகழ்ச்சிகள் நிறைவுற அனைவரும் புறப்பட்டனர். பால்காய்ப்பு அன்னிக்கே உடனே அங்கே வரவேண்டாம், ரெண்டு நாள் உங்க வீட்ல தங்கிட்டு ஆற அமர வாங்க என்று சொல்லி விடைப்பெற்றார் இந்திரா.

மகனிடம் மருமகளைக் கவனிக்கச் சொல்லி பலமுறை அறிவுறுத்தவும் மறக்கவில்லை, அத்தனையையும் சாரா மகிழ்வோடு பார்த்திருந்தார். இதைவிட ஒரு தாய்க்கு வேறென்ன வேண்டும்?

பெரும்பாலான வேலைகளை வேலையாட்கள் கொண்டே செய்திருக்க, அவர்கள் இல்லம் புதுப் பொலிவோடு சுத்தமாய் மின்னியது. சுற்றி எல்லா விளக்குகளையும் அணைத்து வந்த ரூபன் அனிக்காவோடு இரவு உணவை உண்ண, ஒன்றுமே வேலைச் செய்யாவிடினும் ஜீனியர் ரூபன் வரவால் களைப்பாய் உணர்ந்தவள் சீக்கிரமே உறங்கி விட, வழக்கம் போல அவள் கணவன் அவளை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதிகாலை சூரியன் புலராத, மென் காற்று சுகமாய் தாலாட்டும் நேரம், சுற்றியும் இயற்கை சூழல் இருந்த இடத்தில் அவர்கள் வீடு அமர்ந்திருந்ததால் காற்றிற்கு அங்குப் பஞ்சமில்லை.

சீக்கிரமே விழிப்பு வந்த அனிக்கா அந்தப் பொழுதின் ரம்யத்தை ரசித்தவளாய் வெளிப்புற மங்கலான காட்சிகளில் லயித்திருக்க அவள் வயிற்றில் மென்மையாய் அவன் கரங்கள் படர்ந்தன.

என்ன செய்றீங்க மம்மி? 

நான் உங்களுக்கு மம்மியா? கையைக் கிள்ளினாள்.

என் பிள்ளைக்கு இப்பவே உன்னை எப்படிக் கூப்பிடணும்னு சொல்லிக் கொடுக்கிறேன். பார்த்தியா மரியாதையா பேச ஆரம்பிச்சிட்டேன்.

அப்படிங்களா அப்பா… என்றவாறு திரும்பி நின்றவள் விளையாட்டாய் அவன் மீசையை இழுத்து நீவி விட்டவாறு அப்படின்னா நீங்க ஒழுங்கா மரியாதையா உங்க பிள்ளைக்கு அம்மான்னு கூப்பிடச் சொல்லி கொடுங்க சரிதானே? சரிந்து விளையாட்டாய் கண்டித்தாள்.

‘சரிங்க அம்மா’ என்று அவள் கன்னங்களைப் பிடித்துச் செல்லமாய் ஆட்டியவன்

என்ன சீக்கிரம் முழிச்சிட்டியா? ஏன் கொஞ்ச நேரம் தூங்க வேண்டியதுதானே? என்றான்.

நல்லா தூங்கி எழுந்துட்டேன் அத்தான். இன்னிக்கு காலை எவ்வளவு ஃப்ரெஷ்ஷா இருக்கு. கட்டும் போது கூட இவ்வளவு புரியலை, ஆனா இப்பதான் தெரியுது சூப்பர் இடம், வீடும் ரொம்ப அழகாயிருக்கு அத்தான்.

பரவால்லியே என் பொண்டாட்டி கிட்டருந்து பாராட்டு கிடைச்சிடுச்சே ……செல்லமாய்ச் சலித்தான்.

ரொம்பதான் சலிச்சுக்கிறீங்க 

பின்ன உனக்காகப் பார்த்து பார்த்து ஒருத்தன் வீட்டை கட்டிட்டு இருக்க, அங்கிருந்து இங்க வர மாட்டேன்னு சொன்னவ தான நீ 

அது அத்தை மாமாவுக்காக, அவங்களை எப்படித் தனியா விடறது? ஜீவன் மெரேஜ் ஆகிட்டா கூட திவ்யா அவங்க கூட இருப்பா, அத்தைக்குத் தனியா எவ்வளவு விஷயம் பார்க்கணும், கஷ்டம்ல

தனியால்லாம் விட்ருவோமா? அவங்க மாட்டேன்னு சொன்னாலும் நாம விட முடியுமா? கொஞ்ச கொஞ்சமா இங்க இழுத்துடுவோம். ஒத்தாசையா தான் வேலைக்கு ஒருத்தங்களைச் சேர்த்தாச்சே, நீ ஏன் கவலைப் படறே? அதெல்லாம் விடு அப்பாவே ப்ரைவசி வேணும்னு சொல்லிட்டாங்களே?  சிரித்து வைத்தான்.

ச்சீ அத்தான் அவங்க விளையாட்டா சொன்னா நீங்களுமா?, உங்களுக்கு ரெண்டு அடி போட்டாதான் சரி வருவீங்க.

அதான் தினம் என்னை அடிக்கிறியே, போலியாய் அழுவது போல நடித்து முறைப்பை வாங்கினான். விளையாட்டு சீண்டல்கள் தொடர்ந்தன.

நான் ரொம்பச் சந்தோஷமா இருக்கேன் அனி, எல்லாத்துக்கும் நீ தான் காரணம், நீ என் வாழ்க்கையில் வந்தது தான் காரணம் அவள் கைகளைப் பற்றி முத்தமிட்டான்.

தன் மேல் கொண்ட அன்பால் தன்னை நித்தமும் அரவணைக்கும், தனக்காய் பார்த்து பார்த்துச் செயல்படும் கணவனின் அன்பு அவளை உருக்கிற்று. எல்லாம் செய்து விட்டு அவன் அன்பில் முக்குளிக்கும் அவளை, ஆண் என்னும் அகங்காரம் இல்லாதவனாகத் தன்னைத் தாழ்த்திக் கொண்டு அவளே எல்லாம் போலச் சரணடைபவனைப் பார்க்கும் அவளுக்கு இனி வாழ்வில் வேறொன்றும் தேவையில்லை எனத் தோன்றலாயிற்று.

அப்படியா? என்றவள் அவனளவுக்குச் சொல்லால் தன் காதலை வெளிப்படுத்த தெரியாததால், அவன் முகம் பார்த்து கைகளை அவன் தோள் மேல் மாலையாய் போட்டு அவனைப் பார்த்து சிரித்தவள் அவன் நெஞ்சம் சாய்ந்து அவனைத் தன்னோடு அணைத்துக் கொண்டாள். வார்த்தையால் மட்டுமல்ல வாழ்க்கையால் நிரூபிப்பதல்லவா காதல். இருவரும் நொடிப் பொழுதும் வீணாக்காமல் தங்கள் அன்பை மற்றவருக்கு வெளிப்படுத்த மறக்கவில்லை.

என் சொந்தம் நீ

என் பந்தம் நீ

என் உணர்வுகள் நீ

என் உயிரும் நீ

என் வாழ்வும் நீ

எனை ஆள்பவள் நீ

மனிதரை அமரராக்கும்

அமிழ்தின்

உருவோ, சுவையோ,

வடிவோ எதுவும்

நான் அறிந்திலேன்.

ஆனால், எனை உயிர்ப்புடன்

வாழ வைக்கும்

அன்பும், அழகும், கனிவின் உருவே- என்

அமிழ்தினும் இனியவளே,

நீ எனது இன்னுயிர் என்பதை

நான் அறிவேன்.

இனிதே நிறைவுற்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here