4. அமிழ்தினும் இனியவள் அவள்

0
532
Amizhthinum Iniyaval Aval

அத்தியாயம் 4

ரூபன் குடும்பத்தினரை அவசரமாக வரச் சொன்ன ரூபனின் ஹாஸ்டல் நிர்வாகம் அவனைக் குறித்த தகவல்கள் எதையும் முழுமையாகத் தெரிவித்திருக்கவில்லை . என்னவாயிற்றோ ? ஏதாயிற்றோ ? என்ற பதட்டத்தோடு இரவோடு இரவாகப் புறப்பட்டு அதிகாலையில் வந்து சேர்ந்த இந்திரா , தீபன் மற்றும் தாமஸுக்கு அங்குச் சொல்லப் பட்ட விஷயங்களை நம்பவா ? வேண்டாமா ? என ஒன்றும் புரியவில்லை . தனது பிள்ளைகளிலேயே மிகவும் அமைதியானவன் ரூபன் தான் என்பது இந்திராவுக்குத் தெரியாததா என்ன ? அங்கு ஏதோ தவறாக நடந்திருக்கிறது என்று அவரது உள்ளுணர்வு கூறியது . ரூபனின் உடலில் இருந்த காயங்களும் அதை உணர்த்தின . அவனை அவனது அறைக்குச் செல்ல விடாமல் கல்லூரி ஆபீஸின் முன் அறையிலேயே இரவிலிருந்து நிறுத்தி வைத்திருந்தார்கள் .

அவனிடம் அடி வாங்கியவர்கள் ஓரிருவர் அவனுக்கு எதிரில் இருந்து அவனை முறைத்துக் கொண்டிருந்தனர் . அவர்களுக்கு முதலுதவி செய்யப்பட்டு இருந்தது . ஆனால் , ரூபனை யாரும் கண்டு கொண்டதாகவோ அவனுக்கு முதலுதவி செய்ததாகவோ தெரியவில்லை . அவர்களுள் மிக அதிகமாக அடி வாங்கி முன்பற்களில் நான்கை இழந்திருந்தவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகப் பேசிக் கொண்டார்கள் .

எல்லோருடைய குற்றம் சாட்டல்களின் சுட்டு விரலும் ரூபனை நோக்கியே நீண்டிருந்தது . ஏனென்றால் , அங்கு நிகழ்ந்த களேபரத்தில் போதையில் இருந்தது அவன் மட்டுமே . தன் வீட்டினர் வரும் முன்பே போதை தெளிந்திருந்த ரூபன் நிகழ்ந்தவற்றை எண்ணிக் கூனிக் குறுகிப் போனான் .

 தானா இப்படி நடந்து கொண்டது ?” என்று தன்னையே கேள்விகள் கேட்டுக் கொண்டான் . தன்னால் தன் குடும்பத்தினருக்கு வந்த அவமானம் குறித்துக் கலங்கியவனாகச் சுவற்றில் சாய்ந்து தன் தலையே தனக்குப் பாரமானதைப் போலத் தலையை இரு கரங்களாலும் பிடித்த வண்ணம் அமர்ந்து உறைந்த வண்ணம் அமர்ந்திருந்தான் .

அங்குள்ள மற்ற மாணவர்கள் இந்த விஷயம் குறித்துக் கேள்விப் பட்டதிலிருந்து மேலும் விபரம் அறிந்து கொள்ளும் ஆவலோடு ஆபீஸின் வாயில் வரை வந்து பார்க்க முயன்றனர். உள்ளே யாரும் அனுமதிக்கப் படாததால் ஏமாற்றத்தோடு திரும்பினர் .

இரவில் தகவல் சொன்னதோடு சரி அங்கு யார் பொறுப்பாளர்? யாரை அணுகிப் பேசுவது? என்று இவர்களுக்கு ஒன்றும் புரியாத நிலை . எனவே , மேலும் விபரம் தெரிந்துக் கொள்ளவும் சமரசம் பேசி பிரச்சினைகளைத் தீர்க்கவும் தீபனும் , தாமஸும் கல்லூரி பொறுப்பாளர்களையும் தேடி இங்குமங்குமாக அலைய ஆரம்பித்தனர். இந்திரா தன்னுடைய மகனுடன் அமர்ந்து கொண்டார் . தாய்க்கும் , மகனுக்குமிடையே வார்த்தைகளே இல்லாத சூன்ய மணித்துளிகள் அவை . பேச்செழாத மௌனம் அங்கு நிலவியது .

சண்டையில் தன்னுடைய நான்கு பற்களை இழந்து மருத்துவமனையில் இருப்பவன் தனக்கு ஒரு வகையில் தூரத்துச் சொந்தம் , மற்றும் அவர்கள் மிகவும் பெரிய செல்வந்தர்கள் எனத் தெரிய வரும் வரையில் தான் தாமஸ் இவர்கள் சார்பாக இருந்தார் . தாமஸும் தீபனும் அவர்களுடன் சமரசம் பேசச் சென்றனர். அங்கே மேல் உதடு கிழிந்து , மேல் நாடியிலுள்ள பற்களை இழந்து, முக அழகு குலைந்து, மருத்துவக் கவனிப்பில் இருந்தவன் மனதில் ரூபனைக் குறித்து மென்மேலும் வன்மம் கூடிக் கொண்டு இருந்தது . ஆம் அவன் ரூபனுக்கு அவமானத்தை ஏற்படுத்த எண்ணித் திட்டம் தீட்டி அவனுக்குத் தன் நண்பன் மூலமாக மது அருந்த கொடுத்தவன் தான் .

தன்னுடைய திட்டத்தின் படியே எல்லாம் நடந்து கொண்டிருக்கையில் , இவன் என்ன செய்து விடுவான்? என்ற அலட்சியத்தினால் தூண்டப் பட்டவன் , கிடைத்தது வாய்ப்பு என்றெண்ணி அத்தனை நாட்களாகத் தன் மனதில் வைத்துக் கொண்டிருந்த கசடுகளையெல்லாம் தேவையில்லாமல் வெளியேற்றியது தான் அவன் செய்த பிழை . அவன் ரூபனின் குடும்பத்தை மிகக் கேவலமாகப் பேசிக் கொண்டிருக்க, அதனைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் ரூபன் எதிர்த்துத் தாக்கினான். இருவருக்குமிடையேயான சண்டை வலுத்தது . அவனைக் காப்பாற்றச் சென்ற மற்றவர்களுக்கும் சகட்டு மேனிகு அடிகள் விழுந்தன . அடிப்பட்டவர்கள் அனைவரும் ரூபனை திருப்பித் தாக்கியதால் அவனுக்கும் காயங்கள் ஏற்பட்டன . அதற்குள் மற்றவர்கள் அந்த இடத்திற்கு வந்து சேர அந்தச் சண்டை ஒரு வழியாக முடிவிற்கு வந்தது. நிர்வாகத்திற்கு விஷயம் தெரிய வரவே, அவரவர் பெற்றோர்க்கு தகவல் தெரிவிக்கப் பட்டது .

தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை தனக்குப் பிடிக்காதவனுக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என்று குரூரமாக எண்ணும் மனிதர்களை நாம் பார்த்திருப்போமல்லவா ? அது போலவே தனது பற்களைப் பறிக் கொடுத்த நிலையிலும் அவனுடைய மனதில் இன்னும் என்னவெல்லாம் செய்து ரூபனை அவமானப் படுத்தலாம் என்ற சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது .

இத்தனை வருடங்களாக யாரையும் எதிர்த்து ஒரு வார்த்தைக் கூடப் பேசியிராத ரூபன் அன்றைய இரவில் அவர்களை இப்படி அடித்து , துவம்சம் செய்வான் என்று அவன் என்ன , யாருமே எண்ணியிருக்க வாய்ப்பில்லை

இரவிலேயே அவனைப் பார்க்க வந்து விட்டிருந்த அவனுடைய பெற்றோர் தங்கள் மகனின் நிலைக் கண்டு கொதித்துப் போயினர் , அதிலும் அவன் தந்தையோ தன் மகனை அடித்தவனை எப்படியாவது கல்லூரியிலிருந்து வெளியேற்றியே ஆக வேண்டும் என்ற முடிவில் கல்லூரி பெரிய தலைகளுக்கு மாற்றி, மாற்றி தகவல் தெரிவித்து ஆவனச் செய்யச் சொல்லிக்கொண்டிருந்தார் . ஆனால் , அவனுக்கோ அதில் சற்றும் விருப்பம் இல்லை , ரூபனை ஒரேயடியாக வெளியேற்றுவதில் என்ன த்ரில் இருக்கிறது ? அவனை தன் கண்முன்னே வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக அவமானப் படுத்திப் பார்த்தால்… பார்த்தால் என்ன பார்த்தால்?  தான் நினைக்கும் படி செய்தே ஆக வேண்டும் என்ற உறுதியான எண்ணம் அவன் மனதில் உருவாகியிருந்தது .

அதே எண்ணத்தில் தான் ரூபன் சார்பாகப் பேச வந்திருந்த அவனது உறவினர் முன்னும் தன் திட்டத்தைச் செயல் படுத்த ஆரம்பித்தான் . முதலில் தாமஸ் மற்றும் தீபனுடன் பேசவே விருப்பம் தெரிவிக்காத அவன் தந்தை தாமஸை அடையாளம் கண்டு பிடித்தவுடன் கொஞ்சம் கோபம் குறைந்தவராகப் பேச ஆரம்பித்தார் .

தன்னுடைய மகனின் காயங்களைக் காண்பித்து அவர் உருக்கமாகப் பேசியது ஒரு காரணம் என்றால் , அவர் தனக்கு உறவினர் முறை என்று தெரிந்தது மற்றொரு காரணமாகி விட, தாமஸ் முற்றிலுமாக அவர்கள் சார்பாகச் சாய்ந்து விட்டார் என்பதை அவர் கூட வந்திருந்த தீபன் உணர்ந்தான் . தன்னுடைய வாய்க் காயங்களால் பேச முடியாமல் இருந்தவன் தன் தந்தையிடம் தான் எழுத விரும்புவதாகச் சொன்னதும் அவன் தந்தை அவனுக்கு எழுத தாளையும் பேனாவையும் கொடுத்தார் .

 ரூபனை காலேஜிலிருந்து நீக்க வேண்டாம் அவனை என்னிடம் மன்னிப்புக் கேட்கச் சொன்னால் போதும் ,” என்று அவன் அதில் எழுதிக் காண்பித்தான் .

அதைப் படித்து தாமஸிடம் காண்பித்த அவன் தந்தை

 பார்த்தீர்களா , என் பையனுக்கு எவ்வளவு இரக்க குணம்?!! 

என்று மெய் சிலிர்க்க அவரும் தாமஸும் ஃபிரிட்ஜிற்கு வெளியே வைத்த பனிக்கட்டி போலஸ் சட்டென உருகிப் போனார்கள் .

தீபனுக்கோ இதில் ஏதோ உள்ளர்த்தம் இருப்பதாகத் தோன்றியது , ஆனாலும் அவன் அங்கு ஒன்றும் சொல்வதற்கும் செய்வதற்கும் இல்லையே ? என்ன செய்து பிரச்சினையைத் தீர்க்கலாம்? என்ற ஒரே குறிக்கோளில் அவன் தாமஸை பின் பற்ற முடிவுச் செய்தான் .

பல மணித் துளிகளுக்குப் பின்னர் ரூபனையும் இந்திராவையும் சந்திக்க வந்த இந்த இருவரும் தாங்கள் மருத்துவமனையில் சந்தித்ததவர்களையும் , அங்குப் பேசியவைகளையும் குறிப்பிட்டனர் . அடிப்பட்டவனிடம் ரூபன் மன்னிப்புக் கேட்டு, சண்டையிட்ட இருவரும் சமரசமாகப் போவது தான் நல்லது என்று தாமஸ் அறிவுரைக் கூறினார் .

இந்திராவிற்கு அங்கு நிகழ்ந்த எதுவுமே சரியாகப் படவில்லை . அங்கிருந்த ஒரு சில மணித்துளிகளிலேயே உணர்ந்த இறுக்கமான சூழ் நிலையில் அவருக்கு மூச்சு விடவே சிரமமாகி இருந்தது .

மூச்சு விட ஆக்ஸிஜன் மட்டும் தானே தேவை என்று ஒருவேளை நாம் நினைக்கலாம் , ஆக்ஸிஜன் மட்டுமா தேவை ?!.

நம் இல்லத்தில் , சுற்றுப் புறத்தில் நம் மேல் அன்பும் ஆதரவும் காட்ட யாருமில்லாமல் , நம்மைத் தம்முள் ஒருவராக ஏற்று உறவாடாமல் , நாம் என்ன செய்தாலும் குற்றம் சாட்டும் மனிதர்களும் , நம்மை எப்போதும் தாழ்வாக அற்பமாக நினைக்கும் ஆணவ முகங்களும் , அவற்றின் அலட்சிய முகச் சுளிப்புக்களும் சூழ வாழும் மணித்துளிகளெல்லாம் நமக்கு மூச்சு விட இயலாத சிரமமான நேரங்கள் தானே ? என்ன சொல்லுகிறீர்கள் ?

தன்னால் ஒரு சில மணித்துளிகளைக் கூட இங்குச் செலவிட முடியவில்லையே ? தன்னுடைய மகனை எத்தனை ஆண்டுகளாகத் தான் இங்கு விட்டு வைத்திருந்தோம் என்ற குற்ற உணர்ச்சியால் அவர் வெந்து கொண்டிருந்தார் . ஒரு நல்ல நண்பன் கூடவா என் மகனுக்கு இல்லை ? இவன் சார்பாகப் பேசவோ, ஆதரவு காட்டவோ ஒருவரும் முன் வரவில்லையே ? இப்படிப் பற்பல எண்ணங்கள் அவர் மனதினில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன .

முதன் முறையாக அன்று பிறர் வருந்தினாலும் பரவாயில்லை, தனக்குச் சரியெனப் படும் முடிவொன்றை எடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தார் . தன்னுடைய மகனின் முகத்தைப் பார்த்தார் . ஏற்கெனவே குற்ற உணர்ச்சியால் குன்றிப் போன ரூபனுடைய முகம் தரை நோக்கித் தாழ்ந்திருந்தது. தான் செய்த தவறுகளுக்கு தான் மன்னிப்புக் கேட்கவும் தயார் எனச் சொல்லும் விதமாக அவன் முகம் இருந்தது .

இருவருக்கிடையில் சண்டை ஏற்பட்டால் இருவரும் அமர்ந்துப் பேசி சமரசமாவது உலக நடப்பு . இங்கோ ஒரு தரப்பாக எல்லாம் நிகழ்வது போல அவருக்கு வெட்ட வெளிச்சமாகத் தோன்றிற்று . தான் உணர்ந்தவற்றை உள்ளபடியே எடுத்துரைக்கவும் அவருக்கு மனதில்லை . தாமஸ் பல்வேறு வகையில் அவருக்கு உதவியிருக்கிறார் . அது மட்டுமல்ல அவர் தன் கணவரின் தங்கை கணவர் . அவர் சொல்வதைப் போலச் செய்ய இயலாது எனும் நிலையில் இருந்தாலும் கூட, அவரது மனம் கோணாமல் சொல்ல வேண்டும் என்று சிந்தித்தவராக அவரிடம் 

 எனக்கென்னமோ இவ்வளவு பிரச்சினை ஆனதுக்கு அப்புறம் இங்கே ரூபன் படிக்க வேண்டான்னு தோணுது  இப்பவே இவனை நாம கூட்டிட்டுப் போயிடலாம் . அவங்க கிட்ட ரிக்வெஸ்ட் செஞ்சு எக்ஸாம் மட்டும் எழுத பர்மிஷன் கேட்டுத்தாங்க . அடுத்த வருஷம் நம்ம தீபன் படிச்ச காலேஜிலயே இவனும் படிக்கட்டுமே? 

 அவங்க கிட்ட கொஞ்சம் ரிக்வெஸ்ட் செஞ்சு, தயவு செய்து இவன் சர்டிபிகேட் எதிலும் அவனைப் பத்தி தப்பா எழுதிராம பாத்துக்கோங்க …” என்று சொல்லி முடித்தார் .

என் மகனை யார் முன்னும் மன்னிப்புக் கேட்க விட மாட்டேன் என்னும் தீவிரம் அவர் எண்ணத்தில் இருந்ததைத் தீபனும் உணர்ந்தான் . அவனுக்குத் தன் தாயின் முடிவு மிகச் சரியானதாகத் தோன்றிற்று .

கேட்டுக் கொண்டிருந்த ரூபனுக்கு ஒரு வகையில் இதுவும் கூடத் தவறாகத் தோன்றியது ,

 அப்படியென்றால் என் மேல நம்பிக்கை இல்லாததனால் தானே அம்மா என்னைத் திரும்ப அழைத்துச் செல்வதாகச் சொல்லுறாங்க . ஒரு தடவை தப்புச் செய்தால் நான் என்ன எப்பவுமே தப்புச் செய்வேன் என்று நினைக்கிறாங்களா ?” என மனதிற்குள் குமைந்தான் .

தாமஸ் இம்முறை தன்னுடைய ஆலோசனைகள் எடுபடவில்லை என உணர்ந்தவராக, இந்திராவின் சொற்படியே தேவையானது அனைத்தும் செய்து முடித்தார் .

ரூபன் தன் ஸ்டடி ஹாலிடேஸில் வீட்டிலிருந்து படித்தவன் பரீட்சைக்கு மட்டுமாக ஹாஸ்டல் சென்றுத் திரும்பி வந்தான் .

ரூபனால் தனக்கு வெகுவாக அவமானம் ஏற்பட்டு விட்டதாகக் கருதிய தாமஸ் , இந்திரா குடும்பத்திற்காக முன்போல் அவ்வளவாக அக்கறை எடுத்துக் கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார் .

அந்தச் சம்பவத்தை நினைவில் வைத்து பக்கத்து வீட்டுப் பெண்மணி கேட்டது குறித்து ரூபனின் தாய் இந்திராவிற்கு மிகவும் ஆற்றாமையாக இருந்தது . அந்தச் சம்பவம் நிகழ்ந்து வருடங்கள் பல ஆகியும் அதை மறக்காமல் எப்படி இருக்கிறார்கள்?!! என ஆச்சரியமாகவும் கூட ……

ஸொல்லப் போனால் நம்மை யாருமே கவனிக்கவில்லை என்று பல நேரம் நாம் நினைத்துக் கொண்டிருப்போம் , ஆனால் நம்மை உலகமே கவனித்துக் கொண்டிருக்கின்றது என்பது ஒரு சில நேரங்களில் தான் தெரிய வரும் . இதுவும் கூட அப்படி ஒரு தருணம் தானோ ? என்றுபலவாறாகச் சிந்தித்துக் கொண்டிருந்த இந்திரா அப்போது இரவு வெகு நேரம் ஆகி விட்டதை உணர்ந்து இன்னும் வீடு திரும்பியிராத ரூபனுக்காக உணவை மேசையில் எடுத்து வைத்து விட்டு ஓய்வெடுத்துக் கொள்ளச் சென்றார் .

அவர் சிந்தனையினின்று விடுபட்ட இடத்தினின்றே இக்கதை தொடர்கின்றது .

இடம் : சாரா இல்லம்

தீவிரச் சிந்தனையோடு தன்னுடைய மடியில் படுத்திருக்கும் மகளை வாஞ்சையோடு பார்த்துக் கொண்டிருந்தார் சாரா . பட்டாம் பூச்சியாகப் படப் படக்கும் அவளை ஒரு இடத்தில் பிடித்து வைப்பதே கடினம் . இப்படி அவளாக அமைதியாக இருப்பதோ தீவிரமாகச் சிந்திப்பதோ அவளுக்கு ஒத்து வராத விஷயம் , இப்போதும் கூட அவளாக வாய் திறந்து தான் என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாள் என்று சொன்னால் தான் உண்டு என்று நினைத்துக் கொண்டார் .

அப்படி என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாளோ ? என்று எண்ணியவருக்கு அவள் இப்படிச் சீரியஸாக யோசித்துக் கொண்டிருந்த மற்றொரு நாள் நியாபகத்திற்கு வந்தது . அன்று ஜாக்குலின் திருமணத்திற்கு அடுத்த நாள் . மறு வீடு என்னும் என்னும் சம்பிரதாயத்திற்காக மணப் பெண்ணின் வீட்டில் மதியம் உணவிற்குச் சென்று அப்போது தான் வீடு திரும்பியிருந்தார்கள் . தாமஸூம் , கிறிஸ்ஸும் தங்கள் தொழில் ரீதியான முக்கியமான சந்திப்பு ஒன்றிற்க்கு சென்றிருந்தவர்கள் இன்னும் வீடு திரும்பியிருக்கவில்லை .

இது போலவே தன் அன்னையின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டு வெகு நேரம் யோசித்துக் கொண்டிருந்தவள் மெதுவாகத் தன் சிந்தனையிலிருந்து கலைந்து பேசத் தொடங்கினாள் .

 அம்மா , இனி ஜாக்குலின் அண்ணி டில்லி போயிடுவாங்க இல்ல 

ஆமாடா …… குட்டி ……

அதே நேரம் வீட்டிற்க்குள் வந்த தாமஸ் தன் மகளின் கால்களைத் தன் மடியில் எடுத்து வைத்தவராக அதே சோபாவில் அமர்ந்தார் . என்னவென்று மனைவியிடம் சைகையால் கேட்டார் . அவருக்கும் மகள் இவ்வாறு அமைதியாக இருப்பது வழக்கமாக காணக் கிடைக்காத காட்சியல்லவா ….

தனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லும் மனைவியின் சைகைக்குத் தலையசைத்துப் பதில் சொல்லியவறாக  தன்னிச்சையாக மகளின் கால் விரல்களுக்குச் சொடுக்கெடுத்துக் கொண்டிருந்தார் .

அப்பா , அந்தப் பெரு விரல்ல நீங்க சரியா சொடுக்கெடுக்கலைப் பாருங்க …. செல்லமாய் கால் விரலை நீட்டிக் காட்டினாள் அவள் ….

 அடக் கழுதை  அப்பாக்கிட்ட இப்படியா சொல்றது ”… மகளைச் அதட்டினாள் சாரா .

அதே நேரம் தந்தையோடு வெளியில் சென்று வந்து திரும்பியிருந்த கிறிஸ் தங்கள் காரை பார்க் செய்து விட்டு உள்ளே வந்து கொண்டிருந்தான். தங்கை அம்மா அப்பாவிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டு படுத்து இருப்பதைப் பார்த்து வலிக்காத வண்ணம் அவள் தலையில் ஒரு கொட்டு வைத்துச் சென்றான்.

 அப்பா இந்த அண்ணனை பாருங்க ……

 ஏண்டா சின்னப் பிள்ளையை அடிச்சிக்கிட்டு ……” அவனை அதட்டியவராய் மகள் சொன்ன விரலில் கர்ம சிரத்தையாகச் சொடுக்கெடுக்க ஆரம்பித்தார் தாமஸ் .

அண்ணனுக்கு ஏச்சு வாங்கிக் கொடுத்த பெருமிதத்தில் அவனைப் பார்த்துப் பழிப்புக் காட்டியவளுக்குப் பதிலாகப் பழிப்புக் காட்டியபடி கிறிஸ் தன் அறை நோக்கிச் சென்றான் .

 நான் வரும் போது என்னவோ பேசிக்கிட்டு இருந்த மாதிரி இருந்தது ………………….”

ஆமா , அப்பா நான் தான்  எனக்கு ஒரு சந்தேகம் வந்திச்சா அதான் அம்மாகிட்ட கேட்டுட்டு இருந்தேன் 

 என்னடா சந்தேகம் ?….”

இல்ல . ஜாக்குலின் அண்ணி இப்போ டில்லி போயிடுவாங்கல்லபா …”

 ஹ்ம்ம் 

 அப்புறம் அத்தையை யாரு பாத்துப்பாங்க?  அவங்க பிளட் பிரஷர் மாத்திரை எல்லாம் யாரு நேரத்துக்குக் கொடுப்பாங்க?  ஜீவன் எப்ப பாரு விளாடிட்டே இருப்பான்பா …… அவன்ட சொன்னாலும் கேட்க மாட்டான் அதான் ….”

மகள் சொன்னதைக் கேட்டவருக்குத் தன் மகளை நினைத்துப் பெருமிதமாக இருந்தது …. பார்த்தாயா ? எனும் விதமான உணர்வோடு மனைவியைப் பார்த்து புன்னகைத்தார் .

 அடடே  ஜீவன் பேச்சை கேட்க மாட்டேங்கிறானா  அப்போ என்ன செய்யலாம் …… இந்த பசங்க எல்லோருமே உதவாக்கரைகள் என்னடா .” எனச் சாரா கேட்க .

 ஆமாம்மா ….” என்று ஆமோதித்தாள் அவளும்

 என்ன செய்யலாம் …. நம்ம குடும்பத்தில பொறுப்பான பொண்ணுங்க யாராவது இருக்காங்களா? இப்போ சட்டுன்னு ஞாபகம் வர மாட்டேங்குதே .”. என யோசிப்பவராகப் பாவனைச் செய்ய 

 அம்மா நான் இருக்கேன்ல? “…. எதையோ கண்டு பிடித்த பாவனை அவளிடம் .

 இனிமே நான் அத்தையை நேரத்துக்கு மாத்திரை சாப்பிட வைக்கிறேன் சரியா ?”… என்று துள்ளி எழுந்தவள்  காற்றின் வேகத்தில் பறந்து தன் அறை நோக்கி விரைந்தாள் .

தங்கள் மகளுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு விளையாட்டுத்தனம் இருக்கின்றதோ அவ்வளவுக்குப் பொறுப்பும் இருக்கிறது என்று சாராவும் , தாமஸும் அன்று பேசிக் கொண்டனர் . அத்தோடு மட்டுமா அக்கம் பக்கம் நிகழும் ஒவ்வொரு விஷயத்தையும் கவனித்து அதற்கு நாம் என்ன செய்யலாம்? என்று அவர்களிடமே கேள்விகள் கேட்பவள் தான் அவள் .

அது போல இன்று அவள் எதைக் குறித்து யோசிக்கிறாளோ ? என்று எண்ணியவறாக அவளே சொல்வாள் என்று தன் மகளின் வார்த்தைக்காகக் காத்திருந்தார் .

 அம்மா …”

 என்னடா? …”.

 ரூபன் அத்தான் மறுபடியும் டிஷ்யும் , டிஷ்யும் ஃபைட் போட்டுட்டாங்களோ ?….”

 இல்லையே  ஏண்டா ?…”

இல்லம்மா கொஞ்ச நாளா அவங்க ரொம்ப வருத்தமா இருக்காங்க  யாருக்கிட்டயும் பேசுறதில்லை . அவங்க ரூமை விட்டே வெளில வர்றது இல்லைம்மா 

ம்ம்ம் 

ஒரு வேளை அவங்களுக்கு எதுவும் அடிப்பட்டிருக்குமோ? 

அவள் சொல்வது போல அவனுக்கு அடிப்பட்டுத் தான் இருந்தது , உடலில் அல்ல மனதில் . சாரா தன் மகள் சொன்னதை அசட்டைச் செய்யாமல் இந்திராவிடம் சொல்ல , அவரும் தங்கள் குடும்ப மருத்துவரை நாடினார் . அவரது வழிநடத்துதல் படியே மன நல மருத்துவரிடம் அவர்கள் ரூபனுக்காக ஆலோசனைப் பெறச் சென்றனர் .

அவனது தற்போதைய மன அழுத்தத்தின் நிலையை எடுத்துக் கூறிய மருத்துவர் அவர்களை எச்சரித்தார் . ஏற்கெனவே , பல்வேறு மனப் பிரச்சினைகளில் இருந்தவன் பரீட்சை எழுதச் சென்றிருந்த போது எதிர் கொண்ட அளவு கடந்த அவமானப் படுத்தலில் துவண்டு போயிருந்தான் .

அவனுடைய தற்போதைய நிலை நீடித்தால், அவனுடைய வாழ்க்கை முழுவதுமாகப் பாதிக்கப் படும் என்றும் , கூடிய அளவு அவன் தன்னுடைய தனிமையிலிருந்து வெளி வந்து, பிறரோடு பழகுவது மட்டுமே அதற்கான தீர்வு என்று சொன்னதைக் கேட்டு இரண்டு பெண்களும் பேரும் சேர்ந்து எடுத்த முடிவு தான் ரூபன் ஜீவன் மற்றும் அனிக்காவிற்கு டியூஷன் எடுக்க வேண்டுமென்பது 

இந்த இரண்டு வாலில்லா வாரனங்களும் அவன் மன அழுத்தத்தைக் குறைப்பார்களா ? இல்லை கூட்டுவார்களா ?

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here