5. அமிழ்தினும் இனியவள் அவள்

0
533
Amizhthinum Iniyaval Aval

அத்தியாயம் 5

“சோதனை மேல் சோதனை போதுமடா சாமி,

வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி

வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி”

ஹாலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ரசிகரான அம்மா மிகவும் ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கும் பாடல் ரூபனுக்கு என்னவோ தன்னுடைய சூழ்நிலைக்கு ஏற்ற விதமாக ஒலிப்பதாகத் தோன்றியது.

” ரூபன் இது உனக்குத் தேவையா? ” என்று அவன் தன்னைத் தானே நூற்றி முப்பத்து நான்காவது முறையாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.அவனிடம் அன்று சாரா அத்தை வந்து அனிக்காவிற்குப் பாடம் சொல்லிக் கொடுப்பாயா? எனக் கேட்டபோதே உடனடியாக முடியாதெனச் சொல்லி மறுத்திருக்க வேண்டும்.

சரி ஒரே ஒரு பாடம் தானே, அதுவும் அனிக்காவிற்குக் கணக்குப் பாடம் வரவில்லை என்பதால் தானே கேட்கிறார்கள். ஒரு மணி நேரம் கற்றுக் கொடுப்பதால் என்ன ஆகிவிடப் போகின்றது? என்றெண்ணி சம்மதித்தது இப்போது எவ்வளவு பாதகமாகி விட்டது.

அனிக்குப் பாடம் நடத்தச் சொல்லியதோடாவது இவர்கள் விட்டிருக்கலாம். சாரா அத்தை கேட்டுச் சென்ற பின்னர் அம்மா வந்து ஜீவனுக்கும் பாடம் எடுக்கச் சொல்லும் போது வேண்டாமென மறுத்திருக்கலாம். அதைச் செய்தானா? இல்லையே? பாடம் சொல்லிக் கொடுக்கவென இவர்கள் இருவரையும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் வைத்துக் கொண்டு, இவர்கள் இரண்டு பேரின் சண்டையை மட்டும் தானே தீர்த்துக் கொண்டு இருக்கின்றான் அவன்.

பாடம் பயிலுவதற்கான ஒரு மணி நேரத்தில் இவர்களுடைய அட்டூழியங்கள், அடிபிடிகள் செய்யும் நேரம் போக மீதி கிடைக்கும் பத்து நிமிடங்களில் ஒரு கணக்கை, ஆம் ஒரே ஒரு கணக்கை போட்டு அவனிடம் காண்பிப்பதோடு சரி. சரியாகக் கடிகார முள் ஒரு மணி நேரம் முடிந்ததைக் காண்பித்ததும் ஏதோ அதுவரையில் வகுப்பில் வெட்டி முறித்ததைப் போல அவசர அவசரமாகத் தங்கள் பைகளை எடுத்துக் கொண்டு செல்கின்ற இரெண்டு பேரையும் பிடித்து முதுகில இரெண்டு வைத்தால் தான் என்ன? என்று அவனுக்கு அடிக்கடி தோன்றினாலும் அப்படி அவனால செய்யத்தான் இயலுமா? அவனுடைய அமைதியான குணத்தை இந்த வாண்டுகளும் பயன்படுத்திக் கொள்வதை எண்ணிக் கொண்டிருந்த ரூபன் பதட்டத்தில் தன் கை விரல் நகங்களைக் கடிக்கலானான்.

அடச்சே இது என்ன ஜீவன் போல நகங்கள் கடிக்கும் பழக்கம் எனக்கும் வந்து விட்டதே? என்று தன்னைத் தானே கடிந்து கொண்டவனாக, தன் அறையினின்று வெளிச் சென்று தன் விரல்களைக் கழுவி கொண்டான்.

அதே நேரம் அவனைச் சோதிப்பதற்காகவொ என்னமோ இந்திரா ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்த அந்தப் பாடலின் அழுகாச்சி வரிகள் அவனது காதில் விழுந்து வைத்தன.

“மாமா காஞ்சிப்போன பூமி எல்லாம் வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும்.

அந்த நதியே காஞ்சி போய்ட்டா??

துன்பப் படுறவங்க எல்லாம் அந்தக் கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க.

ஆனா தெய்வமே கலங்கி நின்னா??

அந்தத் தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்? 

இதைக் கேட்டு தன் ரூமில் ட்யூஷனுக்கு வந்திருக்கும் இருவரையும் பார்க்க திரும்பியவன், ஐயோ ஐயோ ஐயோ… என்று தலையை முட்டிக் கொள்ளலாமா என்று அப்போது யோசிக்க ஆரம்பித்தான்.

கணக்குப் பாடம் கற்க வந்து விட்டு அந்த ரெண்டு அறுந்த வால்களும், வழக்கம் போலவே தேவையில்லாத ஏதோ ஒன்றைச் செய்து கொண்டு அவனைக் கடுப்பாக்கிக் கொண்டு இருந்தனர்.

அனியைப் பார்த்ததும் அவள் செய்த சேட்டை ஒன்று கண்முன் நிழலாடிற்று. கணக்கு வகுப்பு ஆரம்பித்த புதிதில் அவளது வகுப்பு தோழிகளை அவன் வீட்டில், அவன் அறைக்குக் கூட்டி வந்து இவனைக் காட்சி பொருளாக்கி விளக்கவுரை கொடுக்கலானாள்.

 இங்க பாரு இது தான் என் ரூபன் அத்தான் அவங்களுக்குப் பத்தாவது, பன்னிரெண்டாவது வகுப்பில கணக்கு பாடத்தில கிடைத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? நூத்துக்கு நூறு, நான் இப்போ ரூபன் அத்தான் கிட்ட தான் கணக்குப் பாடம் படிக்கிறேன். பாரேன் நானும் பத்தாவதில நூறு சதவிகிதம் வாங்கப் போறேன் எனச் சூளுரைத்தாள். அவள் அவனைக் குறித்து தன் தோழியருக்குக் கொடுத்த அறிமுகத்தில் அவள் தோழிகள் அவனைப் பரிசோதனைக்கு வைத்த சுண்டெலியாகப் பார்த்தனர்.

 ஏன் அனி, நானும் உன் கூடக் கணக்கு வகுப்புக்கு படிக்க வரேனே, நீ வேணா உன் அத்தான் கிட்ட கேட்டுச் சொல்றியா?” என ஓரிரு தோழிகள் கேட்க, “ இது வேறயா, கடவுளே என்னைக் காப்பாத்து  என இவன் மனதிற்குள்ளாக அவசரமாய் வேண்டவும் கடவுள் உடனே அவனுக்கு மனம் இறங்கினார். அனி மூலமாகவே தீர்வும் கொடுத்தார்.

 யூ க்னோ? உண்மையில சொல்லப் போனா எங்க அத்தானுக்கு இப்பல்லாம் நேரமே கிடையாது. இந்த வருஷம் அவங்களுக்கும் இப்போ டிகிரி மூணாவது வருஷம். எங்க அம்மா ரொம்பக் கெஞ்சி கேட்டதனால தான் அவங்க படிப்பைக் கூடப் பார்க்காம எங்களுக்கு வகுப்பு எடுக்கிறாங்க, அதனால அவங்க என்னையும் ஜீவனையும் தவிர வேறு யாரையும் வகுப்பில சேர்க்கிறதா இல்லை  என்று பந்தாவாகப் பதில் சொன்னாள்.

“பரவால்ல டி  என்று சொல்லி அவள் ப்ரண்ட்ஸ் புறப்பட்டுச் சென்றார்கள்.

அந்தப் பத்தாவதில 100% வாங்க குறிக்கோள் வைச்சிருக்கிற பெரிய மனுஷி தான் இப்போ விழுந்து விழுந்து எதையோ எண்ணிக் கொண்டு இருக்கிறாள்? அவளிடம் கேள்வி கேட்டு விட்டு அவள் என்ன செய்யறான்னே புரியாமல் இந்த ஜீவன் லூசும் அசட்டுத் தனமா சிரிச்சிட்டு அவனோட ரெண்டுக் கையையும், காலையும் ஜூ(zoo) மங்கி போல நீட்டிக் கொண்டு இருக்கிறான்.

 கன்றாவி கன்றாவி …… இன்றைக்கு வகுப்பிற்கு வந்ததும் வராததுமா ஜீவன் அப்படி ஒரு அறிவார்த்தமான கேள்வி கேட்டு வைத்ததால் தான் இத்தனையும். அதற்குப் பின்னர் தான் அனிக்கா கடந்த 15 நிமிடங்களாக தன் ரஃப் புத்தகத்தின் கடைசி பக்கத்தில் வித விதமாக எழுதி எதையோ கணக்குப் பார்த்து தீவிரமாக (?) யோசிக்க ஆரம்பித்து விட்டாள்.

ஜீவன் அப்படி ஒன்றும் நாட்டிற்கு நல்லது செய்யும் மகத்தான கேள்வி எதையும் கேட்டு வைக்கவில்லை. தன்னுடைய வெகு நாளைய மனக்குறையை தீர்த்துக் கொள்ள அவனுக்கு இந்த கணித வகுப்பு நேரம் தான் கிடைத்திருக்குமோ?

 ஏன் அனி நானும் உன்னை விடவும் பெரியவன் தானே, அப்படின்னா நீ இனிமேலிருந்து என்னை ஜீவன் அத்தான்னு தான் மரியாதையா கூப்பிடனும்? என்று… கோரிக்கையை முன் வைத்தான்.

 என்ன ஒரு அறிவுக் கொழுந்து கணக்கு வகுப்பில கேட்க வேண்டிய கேள்விதான்டா இது.” இது ரூபனின் மனக்குமுறல்.

சரி அவன் தான் கேட்டு விட்டான், அனி ஒரு ஆமாவோ இல்லையோ சொல்லி விட்டு போக வேண்டியது தானே? அதானே? அதை விட்டு விட்டு தன் நோட்டில் எதற்கு கிறுக்கி வைக்க வேண்டும்? அந்த பக்கத்தில் ஒரு சில மாதங்களின் பெயர்கள், அவற்றின் நாட்கள் இவை எல்லாம் எழுதி எண்ண ஆரம்பித்து விட்டாள்.

அப்படி எண்ணுவதற்கு அவளுடைய 2 கைகள் மற்றும் கால்களின் விரல்கள் போதாமல் ஆகிப் போக, இப்பொழுது ஜீவனின் கைகளையும், கால்களையும் கடன் வாங்கி இருக்கிறாள்.

 கே ஜி பிள்ள மாதிரி விரலை வச்சி எண்ணிட்டு இருக்க நீ டென்த்ல 100% எடுக்கப் போற??!!… எல்லாம் என் நேரம் தான் என்று ரூபன் நினைத்துக் கொண்டு இருக்கும் பொழுதே அவள் ரூபனிடம் வந்தாள்.

 அத்தான் 

என்ன?”

உங்க விரல்லாம் கொஞ்சம் கடனா தர்றீங்களா? ப்ளீஸ். இப்பொழுது ரூபனும் தான் வேறென்ன செய்ய முடியும்? ஜூ(Zoo) மங்கியாக அவனும் (அவ்வ் …… இது ரூபனின் மைண்ட் வாய்ஸ்)

இப்பொழுது இந்திராவின் மற்றொரு விருப்பப் பாடல் ஹாலிலிருந்து ஒலிக்க ஆரம்பித்தது.

 உன்னைச் சொல்லிக் குற்றமில்லை

என்னைச் சொல்லிக் குற்றமில்லை

காலம் செய்த கோலமடி

கடவுள் செய்த குற்றமடி

கடவுள் செய்த குற்றமடி இன்னொரு சிச்சுவேஷன் சாங்கா? … நொந்தபடி ரூபன்.

ஒருவழியாக அவளுடைய “கால்  குலேஷன்ஸ் முடிந்திருக்க, ஜீவன் மற்றும் ரூபனின் கைகள் மற்றும் கால்களை விடுதலைச் செய்து விட்டுத் தொலைக்காட்சியில் தீர்ப்புச் சொல்லப் போகும் நீதிபதி போல அவர்கள் மேல் ஒரு பார்வை செலுத்தியவாறே பேசினாள்.

 இங்க பாரு ஜீவன் நான் உன்னை மரியாதையா அத்தான்னு கூப்பிடணும்னா நீ அட்லீஸ்ட் என்னை விட 1 வயசாவது கூட இருக்கணும் சரிதானே?”

இதைக் கேட்ட ஜீவன் என்னும் விஞ்ஞானி….

“அதான் சொல்றேன்ல அனி நான் உன்னை விட 6 மாதம் பெரியவன், கணக்கில எப்படிப் பாயிண்ட் பைவை, ரௌண்ட் பிகர் ஆக்கி நெக்ஸ்ட் டிஜிட்டுக்குக் கொண்டு போறாங்க அந்த லாஜிக் படி 6 மந்த்ஸ் இஸ் ஈக்வல் டு 1 இயர். ஸோ நானும் உன்னை விட 1 இயர் பெரியவன்தான் 

 ம்ம்… நீ சொல்ற இந்தக் கணக்குப் படிதான் நான் இவ்வளவு நேரம் கால்குலேட் செய்தேன் 

 ஐய்யோ அறிவாளிங்களா என்னால உங்க அறிவுக் கடல்ல மூழ்கி முத்தெடுக்க முடியலை விட்ருங்க  என்று நகரப் போன ரூபனை இருவரும் நகர விடவில்லை.

“அண்ணே ப்ராப்ளம் சால்வ் ஆகிறவரை எங்கேயும் போகாத  என்று அமர்த்தினான் ஜீவன். போங்கடா/ டி பெரிய ரவுண்ட் டேபிள் கான்பிரன்ஸ்  என்று ரூபன் நொந்தவாறு அமர்ந்தான்.

இங்கே பாரு டோட்டல் பார்த்தா நீ என்னை விட 5 மந்த்ஸ் 25 டேஸ் தான் பெரியவன். இந்த 5 டேஸ் மட்டும் குறைவா இருந்திருக்கா விட்டால் நான் உன்னை அத்தான்னு கூப்பிட்டுருப்பேன்.ஆனா என்ன செய்யிறது? இப்போ ஒன்லி பிகாஸ் ஓஃப் திஸ் 5 டேஸ் நான் உன்னைய அத்தான்னு எல்லாம் கூப்பிட முடியாமப் போயிடுச்சி, வேணும்னா என்னால “டேய் ஜீவா  னு மட்டும் தான் கூப்பிட முடியும். ஐயாம் ஸாரி ஜீவா  தன் தோள்களை அசட்டையாய் குலுக்கினாள்.

 போங்கடா நீங்களும் உங்க ஆராய்ச்சியும்  என்று வெறுத்து உட்கார்ந்திருந்தவன் கண்களில் அந்த ரெண்டும் மறுபடி சண்டைப் போடும் காட்சிப் பட இது நம்மால முடியாதுடா சாமி என்று தன் ரூமை விட்டு வெளியேறினான்.

இப்போது பாடல் மாறியிருந்தது.

 ஏன் பிறந்தாய் மகனே? ஏன் பிறந்தாயோ?

ஏன் பிறந்தாய் மகனே? ஏன் பிறந்தாயோ?

இல்லை ஓர் பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க

இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே? 

ஒரு வழியாக ரூபனின் இரண்டாம் வருட தேர்ச்சி பெற்ற சர்டிஃபிகேட், லீவிங்க் சர்டிபிகேட் எல்லாம் கிடைத்தது. கொஞ்சம் காலத் தாமதம் ஆனாலும் அவனது மார்க்குகள் காரணமாய்க் காலேஜ் அட்மிஷன் வாங்கி முதல் நாள் கல்லூரிக்கு வந்து விட்டான்.

என்னதான் சிறு வயதில் கல்விக் கற்ற இடமானாலும் கூட , பல வருடங்கள் கழித்து அது முன் பின் தெரியாத இடமாகவே தோன்றிற்று. அந்த சூழ் நிலையில் தவிர்க்கவே முடியாமல் ஹாஸ்டலில் முதல் நாள் தான் ஒன்றும் தெரியாமல் மிரண்டு முழித்த தருணங்கள் எல்லாம் அவனுக்கு ஞாபகத்திற்கு வந்து சங்கடப் படுத்தின. அப்போதைய ஏளனமான சில பார்வைகளும் கூட அவனைச் சுற்றி இன்னும் இருப்பது போல மாயத்தோற்றம் ஏற்படுத்தி அவனை உள்ளுக்குள்ளாக நடுங்கச் செய்தன.

தன்னை, தன் பயத்தை உள்ளுக்குள் அடக்கிக் கொண்டவனாகப் புறப்பட்டான். பிறகென்ன செய்வது? பிறர்முன் அவன் மனப் பயங்களைக் காட்டிக் கொண்டால் அது சிறுபிள்ளைத்தனமாக அல்லவா இருக்கும்.

கல்லூரி வளாகத்திற்குள்ளாக உள்ளே நுழையும் போதே அவனுடைய பார்வைக்கு எட்டிய தூரத்தில் அனியும், கிறிஸ்ஸும் நிற்பது கண்ணில் பட்டது. இப்பொழுது இவர்கள் இரண்டு பேரும் இங்கே என்ன செய்கிறார்கள்? என்று யோசித்தான்.ஏனென்றால், ஒரே நிர்வாகம் என்றாலும் பள்ளி மற்றும் கல்லூரி இரண்டிற்கும் வெவ்வேறு இடத்தில் நுழைவு வாயிலும், வெவ்வேறான கட்டிடங்களும் உண்டு.

இவனது கல்லூரி நேரம் மதியம் என்றால், அனியின் பள்ளி நேரம் காலை. அவள் இன்னேரம் வீடு போய்ச் சேர்ந்திருக்க வேண்டுமே? ஒரு வேளை கிறிஸ் அத்தான் அவளை அழைக்க வந்திருப்பான் போல.என்று எண்ணியவன் அவர்களை நெருங்கினான்.

 என்ன அத்தான், யாருக்காக காத்துட்டு இருக்கீங்க?”

 உனக்காகத்தான் ரூபன், ஆனால் காத்துக் கிட்டு இருக்கிறது நானில்லைப்பா இந்த மினியேச்சர் பாட்டிதான் 

 அண்ணா, நான் என்ன உனக்குப் பாட்டியா?” கால்களைக் கோபத்தில் தரையில் மிதித்தவள்

 நீங்க வாங்கத்தான்  என்று அவனை அழைத்துச் சென்றாள்.

 ஏய் ரூபன், தப்பா நினைச்சுக்காத, கோபப்படாத இவ இப்படித்தான் எதையாவது செஞ்சு வைப்பா 

கிறிஸ் சொல்ல வருவதென்ன என விஷயம் புரியாமல் திரும்பி பார்த்தவனிடம்…

 அம்மா நீ எல்லாரையும் நல்லாப் பார்த்துக்கணும்னு வேற சொல்லி வச்சிருப்பாங்க போல அதான் அவளுக்குக் கொஞ்சம் ஆர்வக் கோளாறு  என்று சொல்லி சிரித்தான் கிறிஸ்.

இன்னும் கூட ரூபனுக்கு ஒன்றும் புரிந்திருக்கவில்லை.

 அத்தான் இது தான் சந்தோஷ் அண்ணா, என் பிரண்ட் மாலதியோட அண்ணா தர்ட் இயர் படிக்கிறாங்க ”

என்று முன்பின் தெரியாத ஒருவனிடம் கொண்டு போய் நிறுத்தியிருந்தாள்.

 சந்தோஷ் அண்ணா இது தான் எங்க ரூபன் அத்தான். நான் சொன்னேன்ல இவங்க நம்ம காலேஜுக்கு ஃபர்ஸ்ட் டைம் வந்திருக்காங்க, அதான் எங்க போகணும், எப்படிப் போகணும்னு எல்லாம் அவங்களுக்குத் தெரியாது, நீங்கதான் எங்க அத்தானுக்கு ஹெல்ப் செய்யனும் ப்ளீஸ் 

 அதுக்கெதுக்குமா ப்ளீஸ் எல்லாம், நீ போம்மா உன் அத்தானுக்கு என்ன ஹெல்ப் வேணுமோ அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன், சரியா?” என்று சொல்லிச் சிரித்த சந்தோஷிடத்தில் நட்பு பாவனை இருந்தது. அவனும் ரூபனும் கை குலுக்கிக் கொண்டனர்.

தன் தங்கையின் செய்கையால் தர்ம சங்கடமாக நின்ற கிறிஸ்ஸிடம் அதெல்லாம் ஒன்றுமேயில்லை என்பது போலத் தலையசைத்தான் ரூபன்.

 பை (bye) அத்தான்  என்று தான் வந்த வேலை முடிந்தது என்ற பாவனையுடன் அண்ணனுடன் விடைப் பெற்றுச் சென்ற அனிக்குப் பதில் பை(bye) சொல்லி சந்தோஷீடன் திரும்பி நடந்த ரூபன் மனதில் என்னவென்றே புரியாத விதத்தில், சொல்லொண்ணா வகையில் இதம் பரவி இருந்தது.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here