6. அமிழ்தினும் இனியவள் அவள்

0
511
Amizhthinum Iniyaval Aval

அத்தியாயம் 6

உன்னையை இனிமேல் எல்லாம் த்ரீ பீஸ் தான் எடுக்கணும்னு நான் சொல்லியிருக்கேனா இல்லையா? கையில் ஜீவனின் ஷர்ட் பேண்டை வைத்துக் கொண்டு அதட்டிக் கொண்டிருந்தாள் அனிக்கா.

:இரண்டும் 12 வது வகுப்பிற்கு வந்து விட்டன ஆனால் சண்டையை விட வழியில்லை” என்று இரண்டு பேர் அம்மாக்களும் சலித்துக் கொள்ளும் சப்தம் சமையலறையினின்று கேட்டுக் கொண்டிருந்தது. இந்திராவின் விளக்கம் தொடர்ந்தது

 ஜீவனை யாரோ அவன் கிளாஸ் பொண்ணு நீ சட்டைப் போடுறது ஹாங்கர்ல சட்டை தொங்க விடற மாதிரியே இருக்குன்னு கிண்டல் பண்ணிட்டாளாம் அதான்  எனச் சிரிப்பும், அனியின் கோபத்தைக் குறித்த பெருமையும் அவர் குரலில் தொனித்தது.

 அவன் ஒழுங்கா சாப்பிட்டாத் தானே?, இல்ல அண்ணி, அதான் ஜீவன் இப்படி இருக்கிறான். மத்தியானம் நம்ம வீட்டுக்கு அனுப்பி வைங்க அவளோட சாப்பிடட்டும், அவன் தலையில குட்டி குட்டியாவது சாப்பிட வச்சிடுவா  எனச் சொல்ல இருவரும் சிரித்துக் கொண்டனர்.

 ரெண்டும் ட்வின்ஸா பிறக்க வேண்டியதுங்க இல்ல  ” என ஒருவர் சொல்ல,

 அப்படிப் பிறந்திருந்தா நம்ம பாடு கஷ்டம் அதான் இப்படி வேற வேற வீட்டில பிறந்துட்டாங்க, நன்றி கடவுளே” என மற்றவர் சொல்ல வெடிச் சிரிப்பு கிளம்பியது.

குடும்பங்களில் ஏதேனும் வைபவங்கள் நிகழும் போது உறவினர்கள் கூடிப் பேசுவதும், விளையாட்டும், சிரிப்புமாக இருப்பது வழக்கம் தானே? அங்கு இருந்த கலகலப்பிற்குக் காரணம் ஒரு மாதத்திற்குள்ளாக நிகழவிருக்கும் தீபனின் திருமணம் தான்.

கிறிஸ்ஸிற்கு முந்தின வருடமே திருமணம் நடைப் பெற்றிருக்க , மணப்பெண்ணான பிரபா தாமஸின் உறவினர் மகளென்பதால் அவர்களுக்கு அத்தனை பெரிதான வித்தியாசம் தென்படவில்லை. ஒரே குடும்பத்திற்குள்ளான அத்தனை நடைமுறைகளிலும் ஒரு ஒத்துழைப்பும் நெருக்கமும் இருந்ததென்னமோ உண்மை.

தீபனுக்கு நிச்சயம் செய்த ப்ரீதா குடும்பத்தினர் அறிமுகமானது குடும்ப நண்பர் ஒருவர் மூலமாகத்தான். தீபனுக்கு ப்ரீதாவை பிடித்திருக்க உடனே திருமணத்திற்கான ஏற்பாட்டில் இறங்கினர். கடந்த வாரத்தில் ராஜ் விடுப்பில் வரவும் நிச்சயதார்த்தம் எளிமையாக வைத்து திருமணத்திற்கான நாளை குறித்து வந்தனர். திருமணத்திற்கான வேலைகளுக்காகச் சாரா தன் அண்ணிக்குத் துணையாக வந்து கூட இருப்பது, வேலைகளைத் திட்டமிடுவது, சேர்ந்து செயல்படுத்துவது தற்போது சில நாட்களாக வாடிக்கையாக இருந்தது.

தன்னுடைய க்ளாஸ்மேட்களின் கமெண்ட்ஸ் கேட்டதிலிருந்து ஜீவனை உடையில் கவனம் செலுத்த சொல்லிக் கொண்டிருந்த அனியின் கண்களில் முன்தினம் ஜீவன் வாங்கி வந்திருந்த டிரெஸ் கண்ணில் படவே, அவனைத் திட்டிக் கொண்டிருந்தாள்.

 உன்னால என் ஃபிரண்ட்ஸ் முன்னாடி மானமே போகுது, மரியாதையா அதே கடைக்குப் போயி நீ டிரெஸ்ஸ மாத்திட்டு வரலனா பாரு… உன்னை நான் என்ன செய்யிறேன்னு 

 அதெல்லாம் அந்த எக்ஸிபிஷனுக்கு இந்த டிரெஸ் காணும், நீ உன் வேலையைப் பாரு, பெரிய இவ? வந்திட்டா நான் என்ன டிரெஸ் செய்யணுன்னு டிசைட் பண்ணறதுக்கு” என்று அவள் பேச்சைக் கேட்காமல் கத்திக் கொண்டிருந்தான் அவன்.

உலகில் ஒரு இடத்தில் குளிர் நடுக்கும் போது இன்னொரு இடத்தில் வெயில் காயும், மற்றொரு இடத்தில் மழைக் காற்று சுற்றி சுழற்றி வீசும் இல்லையா? அது போலத்தான் இவர்கள் பேச்சைக் கேட்டுக் இருந்த அம்மாக்களின் மனநிலை ஒரு விதமென்றால், பக்கத்து அறையிலிருந்த ரூபனின் மனநிலை வேறாக இருந்தது.

கடந்த இரண்டு வருடங்களில் அவன் மனதிலிருந்த காயங்கள் வெகுவாக ஆறிப் போயிருந்தன. ஜீவன் மற்றும் அனிக்கு ட்யூஷன் எடுத்தது ஒரு வகையில் தன்னுடைய தனிமையிலிருந்து வெளிவர காரணமாக இருந்தது என்றால், அந்தக் காலேஜில் சந்தோஷ் மட்டுமல்ல மற்ற எல்லோருமே இவனோடு நட்பாகப் பழகியது. அவனுடைய அறிவாற்றலைக் கண்டு கொண்டு தட்டிக் கொடுத்த ப்ரொபசர்கள் என்று அத்தனையுமே அவன் வாழ்க்கையைச் சமநிலைப் படுத்தியிருந்தனர்.

கல்லூரி நாட்களும் நிறைவுற, ரூபன் மிக நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருந்தான். அந்த நேரத்தில் ராஜ் லீவில் வந்திருந்தார், மனைவி சொன்ன அத்தனை விஷயங்களும் கேட்டு மகனைக் குறித்து அவர் உள்ளத்தில் கவலைப் படர்ந்தது. பன்னிரெண்டாம் வகுப்பில் அவன் பெற்ற மதிபெண்ணுக்கு மெடிக்கலுக்கு முயற்சிக்கலாமா என்று கூட அவர்களுக்குத் தோன்றியிருந்தது. ஆனால், அவன் எதிலுமே ஈடுபாடு காட்டாதது அவருக்கு ஞாபகம் வந்தது. அவனுடைய கடந்த காலத்தின், அளவு கடந்த அமைதிக்கு பின்னே இருந்த மன வருத்தங்களை அவரால் இப்போது உணர முடிந்தது.

எனவே மனைவியிடம், அவன் என்ன செய்ய விருப்ப படுகிறானோ செய்யட்டும்? அவனை எந்த விதத்திலும் கட்டாயப் படுத்தாதே எனக் கூறினார். அது போலவே மகனிடமும் அவன் இன்னும் எதையாவது கற்றுக் கொள்ள விரும்பினால் கற்றுக் கொள்ளச் சொன்னார். ஒரு வேளை மேலாண்மை குறித்த எதுவும் படிக்க விரும்புவானோ என அவருக்கு ஒரு ஊகம் இருந்தது. ஏனென்றால் டாக்டர், எஞ்சினியர் என்று அவர்களுக்குத் தெரிந்த அவன் மார்க்குகளுக்கு உகந்த எல்லாப் படிப்புகளையும் அவனைப் படிக்கச் சொல்லி அலுத்து களைத்துப் போயிருந்தார்களே?

ஆனால் அவனுடைய விருப்பமோ மற்றவர்களின் சிந்தனைக்குச் சற்று மாறாக இருந்தது. தான் தன்னுடைய நண்பன் சந்தோஷோடு கூட ஒரு பாக்டரியில் மேற்பார்வையாளனாகப் பணிபுரியப் போவதாகவும் அங்கு உற்பத்திப் பிரிவில் இருந்து வேலை நுணுக்கத்தைக் கற்றுக் கொள்ளப் போவதாகவும் கூறவே அவருக்கு மிகவும் ஆச்சரியமாயிற்று.

“ஏம்பா ரூபன், அதற்குக் கோர்ஸ் எதுவும் இருந்தாப் போய்ப் படி, டிகிரி முடிச்சவுடனே யாருப்பா உங்களுக்கு நல்ல வேலைத் தருவா? எனக் கேட்கவும்,

 நான் அதே ஃபீல்ட்ல கோர்ஸ்க்கு யோசிச்சுட்டு இருக்கேன்பா, ஒரு வருஷம் இந்த வேலையெல்லாம் எப்படி நடக்குதுன்னு கொஞ்சம் அடிப்படை தெரிஞ்சு வச்சுக்கிட்டேன்னா, அந்த எக்ஸ்பீரியன்ஸோடு அடுத்த வருஷம் கோர்ஸ் ஜாயின் செய்யறது நல்லாயிருக்கும்னு மனசில ப்ளான் இருக்கு, ஆனா இதை ரொம்ப டீடெயில்டா கத்துக்கணும்னா அப்ராட்ல தான் இந்தக் கோர்ஸ் போகணும்…

“அதுக்கென்னப்பா எங்க போயி படிக்கணுமோ படி, என்னன்னாலும் எங்கிட்ட கேளு என்ன? மனசிலயே வச்சுக்கிட்டு இருக்காத?” என அவன் தலையை வருடினார் அவர்.

 சரிப்பா  என்றவனின் புன்னகையில் அவர் மனம் மலர்ந்திருந்தது.

அவர்கள் வேலைக்குச் சேர்ந்திருந்த பாக்டரியில் ரூபனோடு கூடச் சந்தோஷ் மற்றும் இரண்டு நண்பர்களும் சேர்ந்திருந்தனர். அது சந்தோஷுடைய உறவினருடைய பாக்டரி. மோட்டர் வாகனத்திற்கான சிறு சிறு பாகங்களைத் தயாரிக்கும் வேலை அங்கு நடைப் பெற்றுக் கொண்டிருந்தது. கல்லூரியில் படிக்கும் போதே ஏற்கெனவே ஓரிரு முறை சந்தோஷ் ரூபனை இங்கு அழைத்து வந்திருந்தான். அப்போதே ரூபனுக்கு அந்த வேலை மிகவும் சுவாரஸ்யமாகத் தோன்றியிருந்தது.

கல்லூரி நாட்களிலும் இருவரும் பெரும்பாலும் அந்தப் தொழிற்சாலை குறித்தே பேசி வந்தனர். தனக்கு அந்த வேலையைக் கற்றுக் கொள்வதில் இருக்கும் ஆர்வத்தைத் தெரிவித்ததும் சந்தோஷ்தான் இந்த வேலையை அவனுக்காக ஏற்பாடு செய்து இருந்தான். ரூபனுடைய நோக்கம் வேலையைக் கற்றுக் கொள்வதாக இருந்ததால் குறைவான சம்பளத்தை அவன் பெரிது படுத்தவில்லை.

தனக்கு விருப்பமான விஷயம் என்பதால், அதைக் குறித்த பல்வேறு விபரங்களைச் சேகரித்தவனுக்கு ஒரு சில கோர்ஸ்கள் குறித்த விபரங்களும் தெரிய வந்தன. ஆனால்,அதிலேயே பல்வேறு விதமான பிரிவுகளும் அவற்றிற்கான வித விதமான கோர்ஸ்களும் இருந்ததால் குறிப்பிட்டு எதைக் கற்றுக் கொள்வது என்று முடிவு செய்ய இந்த ஒரு வருடக் காலம் உதவும் என அவனுக்குத் தோன்றியது.

அவன் வேலைக்குச் சேர்ந்து அப்போது ஒரு மாதமாகியிருந்தது, சந்தோஷின் மாமா வேலையில் முன்அனுபவமில்லாதவர்களைச் சேர்த்திருந்தாலும் மிக விபரமாகச் ஒரு வருடத்திற்கான காண்டிராக்டில் அவனைக் கையெழுத்திடச் செய்திருந்தார். இவனோடு சேர்ந்திருந்த மற்ற இரண்டு நண்பர்களுக்கும் ஓரிரு வாரங்களில் வேலை சலித்துப் போயிருக்கக் காண்டிராக்ட் என்னும் பெயர் கேட்டதும் சத்தமே இல்லாமல் வெளியேறி விட்டனர். சந்தோஷும் தான் மேற்படிப்புப் படிக்கப் போவதாகச் சொல்லி சென்று விட்டான். ஆனால் தனக்கு மிகவும் பிடித்த வேலையென்பதாலோ என்னவோ ரூபனுக்கு அங்கே சலிப்பு தட்டவேயில்லை. அதைப் போல அவனுக்கு அங்கே அதிக வேலைப் பளு கிடையாது, பொறுப்பாக இருந்து அங்கு இருக்கும் ஸ்டாக்குகளைப் பார்வையிடுவது தான் அவனுக்குக் கொடுக்கப் பட்டிருந்த வேலை. அவன் அதோடு நிற்காமல் வேலை நுணுக்கங்களை நின்றுக் கவனிக்க ஆரம்பித்தான். அவனுக்கு மெது மெதுவாகப் பல விஷயங்கள் புரிபடத் தொடங்கியது.

வீட்டில் மீதி நேரங்களில் அனி, ஜீவனின் பிரச்சினைகளுக்குப் பஞ்சாயத்துச் செய்வது அவனுக்கு வழக்கமாயிற்று. அவர்கள் இருவரின் சண்டைகளைக் கிட்டே இருந்து பார்த்து பார்த்து அவனுக்கு அவர்கள் மேல் எரிச்சல் வருவதற்குப் பதிலாக அவர்கள் நட்பைப் பார்த்துப் பொறாமை வந்தது தான் உண்மை.

என்னதான் இருவரும் சண்டைப் போட்டாலும் இருவரும் ஒருத்தரை ஒருத்தர் பார்க்காமல் சண்டைப் போடாமல் ஒரு நாளும் இருந்தது கிடையாது. நான் தானே என் வீட்டில் சின்னப் பிள்ளை, இவள் என்ன என் அம்மாவிடம் ,அண்ணனிடம் வந்து செல்லம் கொஞ்சுவது? என்பது தான் ஜீவனுக்குக் கோபம் என்று அவனுக்குப் புரிந்தது. அதற்கேற்றபடி தீபனிடமும், அம்மாவிடமும் அவள் கொஞ்சல் கொஞ்சம் கூடுதல் தான். இவனைக் கோபப் படுத்துவதற்காகவே அவள் அப்படிச் செய்கிறாளோ? என்று அவனுக்குத் தோன்றும்.

இப்படியே பல மாதங்கள் கடந்திருந்தன. அனி அவனை மிகவும் பாதித்துக் கொண்டிருந்ததைப் போல அவனுக்குத் தோன்றியது. அவளை அறியாமலே எல்லோரிடமும் வெளிப்படும் அவளது அக்கறை அவனை வெகுவாக ஈர்த்துக் கொண்டிருந்தது. அவனும் நிறையப் பெண்களைப் பார்த்திருக்கிறான். அலங்கரிப்பில், பேச்சில், தன்னை எல்லோரும் கவனிக்க வேண்டும் என்ற முனைப்பில் எல்லோரிடமும் ஒரு வெளிவேடத்தனமான தன்மை இருப்பதாகவே அவனுக்குத் தோன்றும்.ஆனால், அனியோ அத்தனை பேரிலும் மிகவும் வித்தியாசமானவளாக இருந்தாள்.

ஒருவேளை நாமும் தீபன், ஜீவனைப் போல இங்கேயே இருந்து சேர்ந்து பேசி விளையாடி வளர்ந்திருந்தால் நமக்கு அவளைப் பார்க்க வித்தியாசமாகத் தெரிந்திராதோ? எனப் பலமுறை தன்னைத் தானே அவன் கேட்டுக் கொண்டிருந்தான். அதற்கான பதில் தான் அவனுக்குக் கிடைக்கவில்லை.அந்த களங்கமற்ற கண்களில் தன்னைத் தொலைத்துக் கொண்டிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. இன்னும் சில மாதங்களில் தன்னுடைய 2 வருடப் பயிற்சி மற்றும் படிப்பிற்காகத் தான் வெளி நாடு செல்ல வேண்டி இருக்கும். இந்த இரண்டு வருடப் பிரிவு அவளைக் குறித்த தன்னுடைய எண்ணம் சரியா தவறா எனத் தீர்மானிக்க உதவும் என்று நம்பினான்.

ஆனால், அப்படி அவனுக்கு அவகாசம் கொடுக்க விரும்பாமலே அவன் மனதில் இருப்பது என்னவென வெளிச்சம் போட்டுக் காட்டவென்று வந்தது ஒரு நாள்.

அன்று ஜீவன் காய்ச்சலில் துவண்டு போயிருந்தான் அதனால் வகுப்பிற்குச் செல்ல முடியவில்லை.மற்ற நாட்களில் லீவு எடுத்தால் கூட மறு நாள் சென்று லீவு சொல்லிக் கொள்ளலாம், ஆனால் அன்று அவர்களுடைய முக்கால் வருடப் பரீட்சை ஆதலால் அன்றே வீட்டினர் யாராவது போய் அவன் வராததற்கான காரணம் சொல்லியாக வேண்டும். எனவே அம்மா சொன்னதற்கு இணங்க ரூபன் அவனுடைய கல்லூரிச் சென்றான். ஏற்கெனவே ஒவ்வொருவராகப் பரீட்சை எழுதி வெளியே வந்து கொண்டிருந்தனர்.

தகவல் சொல்லி வெளியே வந்தவன் தன்னுடைய டூ வீலரை நோக்கிச் செல்லவும், என்கிருந்தோ வந்து “அத்தான்” என்று அவன் வலக் கையைப் பற்றிக் கொண்டாள் அனி. அந்தக் கைப் பற்றுதல் அவள் பொதுவாகக் கிறிஸ்ஸிடமும், தீபனிடமும் செய்திருப்பதை அவன் கவனித்து இருக்கிறான். அதோடு நிற்க மாட்டாள் அவள் ரெண்டு கால்களும் நர்த்தனமாடும், வாய் ஓயாது பேசும், கூடவே கண்களும் அபிநயம் பாடும், சிரிப்பு மாறி மாறி அவள் கண்களிலும், கன்னங்களிலும் தெறித்துச் சிதறும். தூர இருந்து பல முறை ரசித்த நிகழ்வுகளெல்லாம் ஞாபகத்தில் வந்து இடறின.

“என்ன அனி?”

“நான் உங்களோடயே வீட்டுக்கு வரேனே”

“சரி வா, அதுக்கு ஏன் இவ்வளவு டென்ஷன்”

“இல்ல அத்தான், பின்னால ஒரு குரங்கு நிக்கிது”

“என்ன குரங்கா?” சட்டென்று திரும்ப எண்ணியவனை மறுபடி கைகளைப் பிடித்துக் கட்டுப் படுத்தினாள்.

“குரங்குனா, குரங்கு இல்ல அத்தான், அவன் செய்யிற வேலையெல்லாம் குரங்கு மாதிரி, ரொம்ப நாளா தொல்லைப் பண்ணிட்டு இருக்கிறான். நான் எவ்வளவோ திட்டிப் பார்த்திட்டேன் கேட்க மாட்டேன்கிறான். லவ்வாம் வவ்வு ஸ்டுப்பிட்.”

கட்டுப் படுத்தவே இயலாமல் இயல்பாகத் திரும்பிப் பார்ப்பது போல் அவன் பார்த்தான், சற்றுத் தூரத்தில் அவளை விட ஒன்றிரண்டு வயது கூட இருக்கும். பார்க்க படு ஸ்மார்ட்டாக ஒரு பையன் தன் ஷர்ட்டை சரி பண்ணிக் கொண்டு இங்கேயே பார்ப்பது புரிந்தது,

“யாரு அந்த ப்ளூ ஷர்டா?”

“ஆமா அத்தான். ப்ளீஸ் அத்தான் யார்கிட்டயும் இந்தக் குரங்கைப் பத்திச் சொல்லிடாதீங்க, விஷயம் தெரிஞ்சதுனா… அண்ணா உடனே நீ இனிமே வெளியிலயே போக வேணாம். வீட்டுல இருந்து படின்னு சொல்லிடுவான்.இன்னிக்கு ஜீவன் வரலையில்லை?.. அதனாலத்தான் கிட்ட கிட்ட வந்து வந்து பேசறான். இல்லன்னா கொஞ்சம் பயந்து இருப்பான்” என்று அவள் புலம்பல் தொடர்ந்தது.

“நான் யார்கிட்டயும் எதையும் சொல்லல சரியா? நீ கொஞ்சம் புலம்பாம வா”

அதன் பின்னர் …

அவளை வீட்டில் போய் விட்டு விட்டு திரும்பவும் அவளை அழைத்து வந்த இடத்திற்கே ஏன் வந்தான்?

தூரத்தில் சென்று கொண்டிருந்த அந்த ப்ளூ ஷர்டை தேடிப் பிடித்து ஏன் மிரட்டினான்?

வேலைக்குச் சென்றும் ஏன் அவனால் எங்கும் கவனம் செலுத்த முடியவில்லை?

மதியமும் இரவும் ஏன் பசிக்கவில்லை?

இதோ இரவாகிவிட்டது ஏன் அவனால் தூங்கமுடியவில்லை?

பல்வேறு ஏன்களுக்கு அவனிடம் பதிலில்லை.ஒன்று மட்டும் புரிந்தது அவளை வேறு யாரும் உரிமையோடு பார்ப்பதைக் கூட அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவன் உடலெல்லாம், மனதெல்லாம் மிளகாய் அரைத்துப் பூசி விட்டது போல ஒரு காந்தல் இம்சித்தது. ஜீவன் மீது எழும் சின்னஞ் சிறு பொறாமைகளுக்கெல்லாம் உண்மையான காரணம் என்னவென்று அவனுக்கு இன்று அவன் மனம் உணர்த்தியது.

ஒரு பொழுது என்னால் அவளை வேறு யாரோடும் சேர்த்து யோசிக்க முடியவில்லை, வாழ் நாள் முழுவதும் எப்படி? சிந்தனைகள் பலவாறாகத் தோன்ற நான் அவளைக் காதலிக்கிறேன், அவளை என்னால் யாருக்கும் விட்டுக் கொடுக்கவே முடியாது? என்ற தீவிர எண்ணம் மனம் முழுக்க வியாபித்து நின்றது. அதற்கடுத்த இரண்டு மாதங்களும் மனதிற்குள் காதலைச் சுமந்து கொண்டு அலைவது எவ்வளவு சிரமமான காரியம் என்று அவனுக்குப் புரிய வைத்தன,

அவனது பயணத்தின் நாளுக்கு ஓரிரு நாட்கள் முன்னதாகத் தீபனின் திருமணமும் இருக்க வீடே பல்வேறு தயாரிப்புக்களில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அனியின் விளையாட்டும், ஜீவனுடனான அவளின் சண்டைகளும் அவனுக்கு இப்போது வெகுவாக எரிச்சல் மூட்டின.

நான் உன்னை விட்டுத் தொலைவு போகிறேனே உனக்குக் கவலையில்லையா? என அவளிடம் முறையிட்டுக் கொண்டிருந்தது அவன் மனது. உனக்கு எல்லோரும் முக்கியம் நான் முக்கியம் இல்லை அப்படித்தானே? எனப் பலவாறாகக் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தது அது.

வீட்டிற்கு அவள் வரும் பொழுதுகளெல்லாம் அவளின் கர்ச்சீப், ஹைர் பின், கழற்றி வைத்துப் பின் தேடிய மேட்சிங் கம்மல், கண்ணாடி வளையல் என்று ஒவ்வொன்றாக அவள் கண்ணிலிருந்து காணாமல் போய் அவன் பையில் தஞ்சம் புக ஆரம்பித்திருந்தன.

மற்ற எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு பல்லைக் கடித்துக் கொண்டு இருந்த அவனால் தீபனின் நிச்சயதார்த்தம் அன்றிலிருந்து இவனைப் பார்க்கும் போதெல்லாம் அந்த ஷைனியின் பெயரை அவனோடு இணைத்துச் சொல்லி அவள் கிண்டல் செய்வதைத்தான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

[center]ஏ காதலியே,[/center]

[center]
[/center]

[center]என் மீதான[/center]

[center]உந்தன் உரிமையை[/center]

[center]யாருக்கும் விட்டுக் கொடுக்காதே.[/center]

[center]
[/center]

[center]என் உயிர் உனதாயிருக்கட்டும்[/center]

[center]
[/center]

[center]கொல்வதோ[/center]

[center]வெல்வதோ[/center]

[center]
[/center]

[center]அதன் உரிமையும் உனதாயிருக்கட்டும்.[/center]

[center]
[/center]

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here