7. அமிழ்தினும் இனியவள் அவள்

0
543
Amizhthinum Iniyaval Aval

அத்தியாயம் 7

அனிக்கா தன்னுடைய அறையின் வாசலுக்கு வந்து நிற்கிறாள் என்று அவளைப் பார்க்கும் முன்னதாகவே ரூபனின் புலன்கள் அவனுக்குச் சிக்னல் கொடுத்தன. இப்போது மட்டுமா பல நாட்களாகவே அவன் தன்னையே கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான். அவள் வீட்டிற்குள் வரும் முன்னதாகவே அவன் மனதிற்கு எப்படித்தான் புரியுமோ? தன்னையறியாத சந்தோஷம் உள்ளுக்குள் குமிழியிடும். அவள் குரல் முன்னறையில் கேட்கும் முன்னே அவள் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று மனம் பரபரக்கும். தன்னைப் பார்க்க வருவாள் என்று நினைக்கும் போது அவள் அவனைச் சந்திக்க வராமல் ஜீவனுடன் பேசும் சத்தம் கேட்டதும் காற்றுப் போன பலூன் போல மனம் உற்சாகம் இழந்து தவிக்கும்.

ஒருவேளை முன் தினம் தன்னிடம் திட்டு வாங்கிய பின் சமாதானப் படுத்த வந்திருப்பாளோ? எனத் தோன்றியது. எப்போதுமே அவள் அப்படித்தான், தன்னுடைய தவறென்றால் உடனே வந்து சமாதானப்படுத்தி விடுவாள். அடிக்கடி வீட்டில் நடப்பதுதான். ஆனால், சாரி (sorry) கேட்கின்ற வழக்கமே கிடையாது. சமாதானத் தூது விடுவதைப் போல எங்கிருந்தாவது ஒரு வெள்ளைத்துணியைக் கொண்டு வந்து ஆட்டுவாள். அவளுக்கு அது போர் நிறுத்தம் போலும்.

அவள் விசித்திரமான செயல்களையெல்லாம் வைத்துக் கொண்டே எல்லோரையும் கவர்ந்து விடுகிறாள் என்று எண்ணியவாறு நிமிர்ந்தவன் அடக்க முடியாமல் சிரிக்க ஆரம்பித்து விட்டான்.

மறுபடியும் திட்டி விடுவானோ? என்கின்ற தயக்கத்தோடு அவன் அறையின் உள்ளே ஒரு காலும், அப்படித் திட்ட ஆரம்பித்தால் ஓடி விடலாமென்று அறைக்கு வெளியே இன்னொரு காலும் வைத்து நின்றுக் கொண்டிருந்தவளின் கையிலிருந்த வெள்ளைத்துணி தான் அவன் சிரிப்பிற்குக் காரணம்.

“ஏன் அத்தான் சிரிக்கிறீங்க?”… முகத்தைச் சுருக்கியவளாய் மெதுவாக அருகில் வந்தாள். தேடிப் பார்த்தேன் ஒரு துணியும் கிடைக்கல, அதான் கிச்சன்ல இருந்து எடுத்து வந்தேன்.

அவள் எடுத்து வந்திருந்தது கிச்சன் டேபிள் துடைக்கும் துணி, அடக்க முடியாமல் மறுபடியும் சிரித்தான்.

அப்பாடா, அப்படின்னா இனிமேல் பேசலாம், திட்டு விழாது என்று எண்ணியவளாக அவள் ஆரம்பித்தாள்,

“அன்னிக்கு அந்த ஷைனி அக்காதான் உங்களைப் பத்தி விசாரிச்சாங்க, நம்ம வீட்டில இருக்கிற மத்த யாரையும் பத்தி விசாரிக்காம உங்களைப் பத்தியே கேட்டுட்டு இருந்தாங்களா …அதான்….”

எனச் சொல்ல ஆரம்பித்தவுடன் அவன் மனது அன்றைய தினத்தின் நிகழ்வுகளுக்குச் சென்றது. ஷைனி வேறு யாருமில்லை அவன் அண்ணியின் தங்கை. தற்போது இளநிலை கல்லூரி 2 ம் வருடத்தில் இருப்பதாக அம்மா சொன்னதாக ஞாபகம். பெண்பார்க்க பெரியவர்களும் தீபனும் மட்டும் சென்றிருந்ததால், அண்ணியைக் குறித்துச் செவி வழியாகக் கேட்டதும் புகைப் படத்தைப் பார்த்ததும் உண்டு. பெரியவர்கள் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் குறித்துப் பெரும்பாலும் போனில் பேசியதாலும், அவர்கள் ஏதாவது வேலையாக வீட்டிற்கு வரும் போது ரூபன் வேலையில் இருந்ததாலும் அந்தக் குடும்பத்தினரை நிச்சயதார்த்தம் அன்று தான் அவன் சந்திக்க நேர்ந்தது.

நிச்சயதார்த்தம் மிக எளிமையாக இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்களை மட்டுமே அழைத்துச் செய்யத் தீர்மானித்து இருந்தாலும் கூட ஓரளவு கூட்டமாகத் தான் இருந்தது. அன்றைய நிகழ்வுகள் பெண்வீட்டாரின் ஏற்பாடு என்பதால் அங்கே மாப்பிள்ளை வீட்டாராகிய இவர்களுக்கென்று அதிகமான வேலைகள் எதுவும் இருக்கவில்லை.பெரியவர்கள் பொறுப்பாக முன் நின்று செயல்படச் சென்று விட அவர்களுக்கு இடையூறு கொடுக்கா விதத்தில் அதே நேரம் தேவையிருந்தால் கூப்பிடும் தூரத்தில் இவர்கள் நின்றுக் கொண்டனர்.

தீபனும் ப்ரீதாவும் மோதிரம் மாற்றிய பின்னர் இருவரையும் ஒருவர் அருகே ஒருவர் உட்கார வைத்தனர். இருவருமே கொஞ்சம் பதட்டமாக இருப்பது தெரிந்தது. திருமணத்திற்கான நாளை குறிப்பதும், திருமண ஏற்பாடுகளைக் குறிப்பதும், சர்ச் சென்று எப்போது திருமணத்திற்கான செயல்முறைகளை ஆரம்பிக்க வேண்டுமென்று இரு குடும்பத்தினரும் பேசிக் கொண்டு இருந்தனர். வாழ்த்துக்கள் வழங்குதல், ஒருவர் மாற்றி ஒருவர் வந்து போட்டோ எடுப்பது, சுவையான விருந்து எனக் கலகலப்பாக இருந்தது.

அவன் அண்ணியின் பெற்றோர் அன்பாக வரவேற்ற விதம், தீபன் தன் தம்பிகளை ப்ரீதாவிடம் அறிமுகப் படுத்திய பொழுது எழுந்த நட்பான புன்னகை எல்லாமே மிக நன்றாக இருந்தாலும் ஏனோ ஷைனியின் நடவடிக்கை கொஞ்சம் இடத்திற்கு ஒவ்வாத விதமாக இவனுக்கு நெருடியது. இவனுக்கு மட்டுமல்ல பலருக்கும் அப்படித்தான் என்பதை அனைவர் பேச்சிலும் பின்னர் உணர்ந்து கொண்டான். அதற்கும் பல காரணங்கள் இருந்தன.

தன்னுடைய அக்காவிற்கு நிச்சயதார்த்தம் ஆயிற்றே, கூடமாட துணையாக இருக்கலாமென அவள் எண்ணாமல், தோழியர் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டு யார் வீட்டு விழாவுக்கோ வந்தது போலச் சுற்றும் முற்றும் கண்ணைச் சுழற்றிக்கொண்டு திரிந்தது நெருடியது. அதிகப் படியான மேக் அப், கவர்ச்சியான உடை கூடவே தேவையேயில்லாமல் சற்றும் முன் பின் யோசிக்காமல் எல்லோரையும் பற்றி அள்ளி விடும் கமெண்ட்கள் என்கின்ற காரணங்கள் தான் அவை.

ஷைனி அனியைக் கூப்பிட்டுப் பேசியதை சற்றுத் தொலைவிலிருந்து ரூபன் பார்த்துக் கொண்டு தான் இருந்தான். ஆனால், அது அவனைக் குறித்த விசாரணையாக இருந்திருக்கும் என அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. அவனுக்கு அவள் அனியைக் கூப்பிட்ட விதமும் அவளிடம் பேசிய தோரணையும் அப்போதே உறுத்தியது . அகம்பாவமான முகபாவனையோடு வெகு அலட்டலாகப் பேசிக் கொண்டிருந்தாள். அதையொன்றும் பெரிதாய் கண்டு கொள்ளாமல் அனி மிக உற்சாகமாக அவளுக்குப் பதிலிறுத்தாள்.

அனிக்கு மற்றவர்களைப் பற்றிய நுணுக்கமான கணிப்புகள் எதுவும் இல்லை போலும். வீட்டில் எல்லோரும் செல்லம் கொஞ்சுகிற மாதிரி வெளியில் இருக்க மாட்டார்கள் என்று எப்படிப் புரிய வைப்பது? சுடுசொல் கேட்டு அறியாத அவளை யாரும் வார்த்தைகளால் காயப் படுத்தி விடுவார்களோ? என்று ஏனோ தன்னையறியாமல் அவன் மனதிற்குள் அப்போது அச்சம் தோன்றியது. அவனுடைய இந்த அச்சம் பின்னர் ஒருமுறை நிஜமாகப் போகிறது என்றும் அதற்குக் காரணமாக ஷைனி தான் இருக்கப் போகிறாள் என்பதும் அவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

வீட்டில் விசேஷம் என்றாலே சிறியவர்களுக்கு ஏற்படும் உற்சாகத்தில் அனி அன்று திளைத்திருந்தாள். கிறிஸ் அண்ணாவுக்கு இணையான அன்பைக் கொட்டும் அவளுடைய தீபன் அத்தானுடைய நிச்சயதார்த்தம் அல்லவா? பிறகு அவளுக்கு மகிழ்ச்சிக்குக் குறைவுதான் ஏது?. எளிமையான அலங்காரத்தோடு பட்டுச் சல்வாரில் இருந்தவள் காதில் குட்டியூண்டு வைரங்கள் மின்னின. முகத்தில் சன்னமாக ஒற்றியிருந்த பவுடர் ஏற்கெனவே காணாமல் போயிருந்தது. அடிக்கடி மேடைக்குப் போய்த் தீபனுடனும், ப்ரீதாவுடனும் உரையாடிக் கொண்டிருந்தாள்.

முதலில் அனி அடிக்கடி தீபனின் அருகே வலம் வந்ததைப் பார்த்து ப்ரீதா அண்ணியிடம் முகச் சுளிப்புத் தோன்றியதைக் கவனித்தான். அது பொதுவாக எல்லா மனைவிமார்களுக்குத் தோன்றும் உரிமையுணர்வு தான் என்பது இவனுக்குப் புரிந்தது. பிறகு அண்ணன் அண்ணியிடம் அவளை அறிமுகப் படுத்திய பின்தான் அவர்களின் முகம் சாதாரணமாக ஆகியது. அப்படி என்னவென்று அனியை அறிமுகப் படுத்தியிருப்பான் என்று இவனுக்குத் தான் நன்றாகத் தெரியுமே…

“இது எங்க வீட்டுக் கடைக் குட்டி, அத்தைப் பொண்ணு. என் குட்டித் தங்கை என்று தான் சொல்வான்” வீட்டில் வரும் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யும் போது எப்போதும் அப்படிச் சொல்வது வழக்கம். இப்போது சில நாளாக அப்படி அவன் சொல்லும் போதெல்லாம்

“டேய் அண்ணா, ப்ளீஸ் அவளைத் தங்கச்சினு சொல்லி முறையை மாத்தாதடா…என்றுச் சொல்லிவிடலாமாவென இவனுக்குத் தோன்றும், தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்வான்.

’அதான் நான் அப்படி நினைச்சுக்கிட்டேன் அத்தான்”… என இவன் பல்வேறு சிந்தனைகள் கலைந்து அவள் பேசுவதைக் கவனிக்கும் முன் அவள் ஷைனி அவளிடம் என்னவெல்லாம் கேட்டாள் என்று ஏற்கெனவே பட்டியலிட்டு முடித்திருந்தாள்.

“அப்படின்னா , யாரும் என்னைப் பத்திக் கேட்டா, நீங்க என்னைக் கிண்டல் செய்ய ஆரம்பிச்சுடுவீங்க? அப்படித் தானா மேடம்”

“மேடமா… நான் ஒண்ணும் மேடமில்ல, எல்லாம் அந்தப் படத்தால வந்தது…” மறுபடி திட்டுகிறானே என்று தோன்ற குரல் தானாகக் கம்ம முனங்கினாள் அவள்.

“எந்தப் படம்?”

“லாஸ்ட் வீக் அந்தச் சல்மான்கான், மாதுரி தீக்ஷித் படம் டிவில பார்த்தேனா? …”

“அதில இந்தப் பாட்டு இருக்குமே… “தீதி தேரா தேவர் தீவானா”. மெலிதாகப் பாடியவள்… அந்தப் படம் அதில அப்படித்தான் இருந்தது.

அவள் பாடிக் காட்டியதைப் பார்த்து வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டவனாக, “அப்புறம்?” என்றதும்

அவன் ஆர்வமாகக் கேட்கிறான் என்று அவள் தொடர்ந்தாள்.

“ஷைனிக்கா நல்ல ஹைட், பார்க்கவும் நல்லா அழகா இருந்தாங்களா? அதான் நீங்க சல்மான், அவங்க மாதுரின்னு ஹி ஹி … இனிமேல் சொல்ல மாட்டேன் சரியா?

“நல்லா ஜோடிச் சேக்கிற நீ.?” மனதிற்குள் நொந்துக் கொண்டாலும் இனியும் திட்டினால் சரிவராது என நினைத்து அவளிடம் “சரி” எனச் சொல்லிப் புன்னகைத்தான்.

ஏதோ ரகசியம் சொல்வது போல அவனருகே வந்தாள் .

ரகசிய குரலில் அவள் பேசியது அவனுக்குச் சுவாரசியமாக இருந்தது.

“அத்தான்”

“என்ன?” அவனும் அதே போலப் பேசினான்.

“என் கிட்ட ஜீவன் பத்தியும் நிறையக் கர்ள்ஸ் கேப்பாங்க”

“ம்ம்”

“அதெல்லாம் கூடப் பரவாயில்லை இப்ப கொஞ்ச நாளா ஜீவன் எங்கிட்ட என் ஃபிரண்ட் மிலி பத்தி கேட்டுட்டே இருக்கான். அப்படின்னா… “அவள் தொடரும் முன்னே

“ஓடியே போயிடு பிசாசு என் அண்ணாகிட்ட என்ன சொல்லிகிட்டு இருக்க நீ?” என்று இவர்கள் ரகசிய உரையாடலில் இடையே வந்து நின்று ஃபுல் ஸ்டாப் போட்டான் ஜீவன்.

விட்டால் கோபத்தில் அவளை அடித்து விடுவானோ எனத் தோன்றியதால் சட்டென்று அனி அங்கிருந்து நகர்ந்தாள். வெளியே செல்லும் முன் அவனுக்குப் பழிப்புக் காட்ட மறக்கவில்லை அவள்.

:அவ ஒரு லூசுன்னா… அவ சொல்லுறத நீ நம்பாத…’ என்றான்.

“ம்ம் அப்படியா, அப்ப நீ சொல்லு, நீ சொல்லுறதை நான் நம்புறேன், யார் அந்த மிலி? “

“ஏய் என்னடா… ரெண்டு பேரும் என்ன பேசிக்கிட்டு இருக்கிறீங்க? …கேட்டவாறு உள்ளே வந்த தீபனிடம்

“அதெல்லாம் ஒண்ணுமில்லண்ணா சும்மா தான்” என ரூபன் சொல்ல,

தன்னைப் பற்றிப் போட்டுக் கொடுத்து விடுவானோ? என அது வரை பயந்து கொண்டிருந்த ஜீவன் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டான் .

தனது அண்ணன்கள் இருவரும் அவனுக்குப் புரியாத ஆனால், ஏதோ வெகு முக்கியமான விபரங்களைப் பற்றிப் பேசுவதைக் கவனித்துக் கொண்டிருக்க…

சட்டென்று பேச்சிலிருந்து திசை திரும்பிய தீபன் அவனிடம்

“என்னடா?” எனக் கேட்க,

“நீங்க ரெண்டு பேரும் இப்போ கொஞ்ச நாளா அடிக்கடி மீட்டிங்க் போடுறீங்களே அததான் பார்த்துட்டு இருக்கேன்…’

“எல்லாம் அண்ணன் கல்யாண விஷயம் தான்” பதில் சொன்னான் ரூபன்.

“பொய் சொல்லாதீங்க… உங்க ரெண்டு பேரையும் நான் கவனிச்சிட்டு தான் இருக்கேன். நீங்க ரெண்டு பேரும் ஏதோ சரியில்லை… ரூபன் அண்ணா படிக்கப் போறேன்னு சொன்னான் ஆனா அப்பா கிட்ட கோர்ஸுக்கு பணமே வாங்கல, இப்போ என்னன்னு பார்த்தா டிக்கெட் செலவும் அப்பாக்கிட்ட கேக்கல, உண்மையிலே நீ படிக்கதான் போறியா இல்ல முன்ன மாதிரி எங்களையெல்லாம் விட்டுட்டு எங்கேயும் போயி இருக்கப் போறியா?”

“அட இதப் பாருடா, சின்னப் பையன்னு நினைச்சுகிட்டு இருந்தா, என்னல்லாம் கவனிச்சுட்டு இருக்கான்.” வியந்தான் தீபன்.

தம்பியின் கேள்வியில் அவனுடைய ஆதங்கத்தில் அவன் தன்னுடைய பிரிவை விரும்பவில்லை என்பதில் ரூபனுக்கு ஏற்பட்ட ஆறுதலை வார்த்தையில் வடிக்க முடியவில்லை, அவனைத் தோளோடு அணைத்துக் கொண்டான். அவனிடம் என்ன பதில் சொல்லவென்று அவனுக்குப் புரியவில்லை.

“ஏய் ஜீவா, அவன் முன்ன படிக்கப் போயிருந்தான், அதுவும் நம்ம அம்மா அப்பா அவனுக்கு நம்மை விட ரொம்ப நல்லா படிக்க வருதுங்கிற காரணத்தால அனுப்பி வச்சதால, இல்லன்னா நமக்கு அவனைப் பிரியணும்னு ஆசையா? ஜீவனுக்குப் பதில் சொன்னாலும் ரூபனின் மனமறிந்து ஆறுதலாகப் பேசியவன். அவன் அப்படி மறுபடி நம்மளை விட்டுட்டுத் தூரமா போறதா இருந்தா நான் அவனை விடுவேனா? நீ ஏண்டா டென்ஷன் ஆகற? சரி நானே உனக்குச் சொல்றேன், அவன் ரெண்டு வருஷம் படிக்கப் போகலை வேலைக்குப் போறான்.

….

திரும்ப வந்து பிசினஸ் ஆரம்பிக்கப் போறான். இப்போ வேலைப் பார்த்துட்டு இருக்கிற இடத்தில ஏற்கெனவே பேசி வச்சிருக்கான். அவங்களுக்கு வர்ற ஆர்டர்ல சில வேலைகள் வெளியே கொடுத்து தான் செஞ்சு வாங்குவாங்களாம். அது போல முதல்ல சின்னதா ஒரு யூனிட் ஆரம்பிச்சு மெது மெதுவா பிசினஸை வளர்த்துக்கலாம்னு ஐடியா? … “

“அதெல்லாம் எப்படிச் சரிப்பட்டு வரும்? பிசினஸ்னா எவ்வளவு பணம் வேணும், அனுபவம் வேணும். உனக்கு விளையாட்டா இருக்குதான்னா?”

சின்னவனாக இருந்தாலும் பொறுப்பாகக் கேள்வி கேட்கும் தம்பியின் கவலையும் அக்கறையும் அவன் கேள்வியில் புரிய வர, அவனுக்குப் புரிய வைத்து விட வேண்டுமென்ற நோக்கில் இப்போது ரூபன் அவனிடம்,

“அதெல்லாம் நான் யோசிக்காம செய்வேனா? இந்த ரெண்டு வருஷமும் வேலைப் பார்க்கிறது அது ரெண்டு விஷயத்துக்காகவும் தானடா…இப்போ வேலைப் பார்க்கிற தொழிற்சாலையிலும், சேல்ஸ் , அட்மினிஸ்ட்ரேஷன் எல்லாம் எனக்கு அத்துப்படி ஆகி விட்டது.இன்னும் ரெண்டு வருஷம் வேலைன்னு சொன்னாலும் அது ஒரு வகையில் எனக்கு நிர்வகிக்கிறதுக்கான டிரெயினிங்க் தான். கூடவே நிறையச் சம்பளமும் கிடைக்குதே. பிசினஸ் ஆரம்பிக்க அந்தத் தொகையை ஒரு பக்கம் சேர்த்து வைப்பேன், அப்பாவும் ஹெல்ப் செய்யறேன்னு சொல்லியிருக்காங்க, பாங்க் லோனும் கிடைக்கும்.

……

அதைத்தான் அண்ணா கூடச் சேர்ந்து அப்பப்போ ப்ளான் செய்வோம்.எப்படி பிசினஸ் ஆரம்பிக்கிறது? கடனையெல்லாம் சீக்கிரமா எப்படி அடைக்கிறது? பிசினஸ் எப்படி எக்ஸ்பாண்ட் செய்யிறதுன்னு தரோவா ப்ளான் செஞ்சு வச்சிருக்கேன் சீக்கிரம் செட்டில் ஆகணும்டா” ரூபன் சொன்ன கடைசி வரிகளைக் கவனிக்காமல்,

“அப்படின்னா வீட்டுல என்னையைத் தவிர வேற எல்லாருக்கும் தெரியும். நான் கேட்கலைன்னா என் கிட்டயும் சொல்லியிருக்க மாட்டீங்கள்ல…”

“இல்லடா, அப்படியில்ல…”

தம்பிகள் இரண்டு பேரும் பேசி சமாதானம் ஆகி விடுவார்கள் என்று தோன்ற அங்கிருந்து நகர்ந்தான் தீபன்.

இரவு ஆகியிருந்தது கடந்த மாதத்தில் ஒரு நாள் அத்தை வீட்டிற்குச் சென்றபோது கவனிப்பாரற்றுக் கிடந்த அனியின் துப்பட்டாவை கடத்தி வந்திருந்த ரூபன், அதைத் தன் தலையணைக்கு மேலாகப் பரப்பித் தலைச் சாய்த்துப் படுத்திருந்தான். என் மனதை திருடி விட்டு இப்போது என்னையே திருடனாக்கி விட்டாள் என்று தன்னவளைக் செல்லமாக உள்ளத்தில் கடிந்தவாறு அயர்ந்து உறங்க ஆரம்பித்தான்.

கற்றுக் கொடுங்களேன்…

யாராவது அவளுக்கு

களவு செய்வது எப்படியென்று

கற்றுக் கொடுங்களேன்.

வரை முறையில்லாமல்

என்னை முழுதுமாய்

களவு செய்து போகிறாள்.

கடிந்து கொள்ளவும் இயலாமல்

எப்போதும்

புன்னகை ஆயுதம் கொண்டு

என்னைக் கொன்றுப் போகிறாள்.

உயிர்வதைச் செய்யாமல்

உள்ளம் திருடும் கலையை

யாராவது அவளுக்கு

கற்றுக் கொடுங்களேன்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here