8. அமிழ்தினும் இனியவள் அவள்

0
529
Amizhthinum Iniyaval Aval

அத்தியாயம் 8

திருமண வீடு களைக் கட்டியிருந்தது. மாப்பிள்ளை தீபன் க்ரே சூட்டில் அமர்க்களமாக இருக்க, நாங்கள் என்ன சளைத்தவர்களா என்று ரூபனும் தீபனும் கூடச் சூட்டில் (suit) கண்ணைக் கவர்ந்தார்கள். தம்பியின் திருமணத்திற்காக டில்லியிலிருந்து வந்திருந்த ஜாக்குலின், ராஜா தம்பதியர் தங்கள் 4 வயது வாண்டு பிரின்ஸ் கூட்டத்தில் எங்கே போய் நிற்கிறானோ என அவன் மேல் ஒரு கண் வைத்தவாறு பெண் வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்களை மேற்பார்வைப் பார்த்துக் கொண்டனர்.

கிறிஸ், பிரபா இளம் ஜோடிகளுக்கு இணையாக ராஜ் இந்திராவும், தாமஸ் சாராவும் கூட ஜொலித்தனர். சுற்றிலும் அலையலையாக மகிழ்ச்சியுணர்வு பரவியிருந்தது. உறவினர்கள் அனைவரும் வீட்டை நிரப்பியிருக்க விளையாட்டும் சிரிப்புமான பேச்சுக்கள் எனக் கலகலப்பான சூழ்நிலை.

பல்வேறு பரபரப்பான வேலைக்கு நடுவிலும் ரூபனின் மனது மட்டும் எங்கோ நிலையில்லாமல் வானத்திற்கும் பூமிக்குமாகப் பரவசமாகத் துள்ளாட்டம் போட்டுக் கொண்டு இருந்தது. .

திருமணத்திற்கென உடைகள் எடுக்கச் செல்லும் போது ஜாக்குலினுக்கு எடுக்கின்ற மாதிரியே அனிக்காவிற்கும் பட்டுப் புடவையொன்று எடுத்தார் இந்திரா. தாமஸிற்கு இதில் விருப்பமில்லை. தன் மகள் உடுக்கும் விலையுயர்ந்த புடவை முதன் முதலில் தான் வாங்கித் தந்ததாக இருக்க வேண்டும் என்ற உரிமை உணர்வோ, இல்லை அவள் இன்னும் சின்னப் பிள்ளைதானே அவளுக்கு எதற்குப் புடவை என்னும் தயக்க உணர்வோ ஏதோ ஒன்று அவரைத் தடுக்க, அவர் அந்தச் சேலையை மகளுக்குக் கட்ட வேண்டாம் என மனைவியிடம் மிகவும் சொல்லிப் பார்த்தார்.

தன்னுடைய அண்ணன் வீட்டிலிருந்து எடுத்துக் கொடுத்த புடவையை உடுக்காவிட்டால் அது அவர்களுடைய அன்பை புறக்கணிப்பதாகாதா? எனச் சாரா பல விதமாகச் சொல்லி அவரைச் சமாதானப் படுத்தி இருந்தார். அது வரை எப்படியோ தெரியாது ஆனால், மகளைச் சேலையில் பார்த்த நொடியில் என்னுடைய மகள் இவ்வளவு வளர்ந்து விட்டாளா? என்னும் ஆச்சரியத்தையும் மகளின் அழகுத் தோற்றத்தில் அவர் அடைந்த புளங்காகிதத்தையும் சொல்ல வார்த்தையில்லை.

“நல்லாயிருக்காப்பா?” என்று கேட்ட அனிக்குப் பதில் சொல்ல இயலாமல் உச்சந்தலையில் முத்தமிட்டு அவள் முகம் பார்த்துத் தலையாட்டினார்.மகளுக்குப் பின்னே நின்ற சாரா, ” என்ன?” எனப் புருவம் உயர்த்திக் கேட்க அப்போதும் அவரால் பதில் சொல்ல இயலவில்லை.

“நான் அண்ணா அண்ணி கூட அத்தை வீட்டுக்கு போறேம்மா” எனச் சொல்லி அனி புறப்பட்டு விட்டாள். அவள் சென்றதும்

“அனி எப்படி வளர்ந்துட்டா என்ன சாரா ?”

“ஆமாங்க… இந்த மெரூன் கலர் அவளுக்கு எடுப்பா இருக்குல்ல…”

“நீயே என் பொண்ணுக்கு கண்ணு போட்டுடுவ போல… சும்மாவே என் மக அழகுதான், நகையெல்லாம் வேற போட்டு விட்டிருக்க, வீட்டுக்கு வந்ததும் கண் திருஷ்டி கழிச்சிடு சரியா…”

“இது ரொம்ப ஓவர்… நான் அவளுக்குக் கண்ணு வைக்கிறேனா, அவ உங்க மக மட்டுமில்ல என் மகளும்தான்”

மனைவியின் கோபத்தை ரசித்தவராக “தெரியும் தெரியும்” எனச் சொல்ல,

“ஞாபகமிருந்தா சரி” என்று செல்லக் கோபத்தோடு பதிலளிக்க

இருவரும் மகிழ்வோடு திருமண வீட்டிற்குப் புறப்பட்டனர்.

முன்தினம் இரவு வரை பல்வேறு ஏற்பாடுகள் செய்து விட்டதால் அனைவரும் காலைச் சாப்பாடு சாப்பிட்ட பின்னர்ப் பெண் வீட்டிற்குப் புறப்படுவதாக இருந்தது. வருகின்ற ஒவ்வொருவரையும் வரவேற்கவும், ஒழுங்காகச் சாப்பிட வைக்கும் வேலையில் மாப்பிள்ளையின் தம்பிகள் இருவரும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அனிக்கா தன் அண்ணா அண்ணி கிறிஸ் மற்றும் பிரபாவுடன் வந்து இறங்கினாள்.

“கிறிஸ் அத்தான், பிரபாக்கா வாங்க வாங்க” என்றவனாக அவர்களது காரின் அருகே சென்ற ரூபன் இன்னும் பின் சீட்டில் இருந்தவளைக் கவனித்திருக்கவில்லை.

“மினியேச்சர் பாட்டி இப்போ ஒரிஜினல் பாட்டியா ஆகிட்டா அத்தான்” என ரூபன் பின்னே வந்த ஜீவன் அனிக்காவைக் கிண்டலடிக்க, கிறிஸ்ஸும் விளையாட்டாய் தீபனுக்கு ஹை ஃபைவ் கொடுத்தான்.

“ஏண்டா உனக்கு வேற வேலையில்லை அழகான பிள்ளையைப் பாட்டின்னு சொல்லுற” முகம் கடுத்து நின்ற அனிக்காவிற்காகப் பிரபா ஜீவனையும் “நீங்களும் தான் அதென்ன விளையாட்டு” எனக் கணவனையும் அதட்டினாள்.

“என்ன அத்தான் உங்களுக்கும் திட்டு விழுது? …” எனக் கிறிஸ்ஸிடம் பேசியவாறு பிரபா முன் சீட்டில் இருந்து இறங்கியதும் அங்கே உட்கார்ந்து கொண்டான் தீபன். இன்னிக்கு பார்க் செய்யறதுக்குக் கொஞ்சம் தள்ளிப் போகணும் எனச் சொல்ல. பிரபாவும் அனிக்காவும் இறங்கவும் இருவரும் காரை பார்க் செய்யச் சென்றனர்.

உறவினர் ஒருவர் பிரபாவை அழைக்க “அனி, நீ சேலை தெத்திடாம மெதுவா பார்த்து வா நான் ஆண்டிகிட்ட பேசிட்டு வாரேன்” என்று சென்றாள் பிரபா.அனிக்காவிற்கு முதன் முதலில் சேலையை அணிந்த போது இருந்த உற்சாகம் இப்போது பயமாக ஆகி விட்டிருந்தது. அப்படியும் சேலை விலகாமலிருக்க ஸ்டாப்ளர் அடிக்காத குறையாக அம்மாவிடம் சொல்லி சுற்றிலும் பத்து சேப்டி பின்களையாவது குத்தி வைத்திருந்தாள்.

ஒரு இடத்தில் ஒரு நிமிடம் நில்லாத கால்களை இப்போது மெதுவாக நடந்து வரக் கட்டுப் படுத்துவது அவளுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. அவளைப் பார்த்த நொடியிலிருந்து வேகமாக அடிக்கும் இதயத் துடிப்பை கட்டுப் படுத்த இயலாதவனாக அவள் முகத்திலிருந்து கண்களைத் திருப்ப இயலாமல் தவித்துக் கொண்டிருந்த ரூபனிடம் அவள் திரும்பினாள்.

உண்மையிலேயே ஜீவன் கிண்டலடிதத படியே தான் பார்க்க நன்றாக இல்லையோ? என்று மனதிற்குள் எழுந்த மிக முக்கியமான சந்தேகத்தைக் கேட்டே ஆகிவிட வேண்டும் என்ற உந்துதலோடு,

“அத்தான், நான் எப்படி இருக்கேன்? சேலை எனக்கு நல்லா இல்லையோ?” எனக் கேட்க

கொடி போல நாசூக்காக அவளைத தழுவியிருந்த சேலையையும், குழந்தைத் தனம் மாறாத அவள் முகத்திற்கு முதன் முறையாக அணிந்திருந்த மிதமான ஒப்பனையும், முடியை நவீனமாய் அலங்கரித்து, தாராளமாய் அதே நேரம் அவள் முடி அலங்காரத்திற்குப் பொருத்தமாய் அவள் அணிந்திருந்த மணமும், அழகும் கொள்ளைக் கொள்ளும் மலர்ச் சரங்களும் , அவளின் அழகிற்குக் கூடுதல் அழகூட்ட அவள் கைகளிலும், காதுகளிலும் , கழுத்திலும் மின்னிக் கொண்டிருந்த பொன் நகைகளையும் ,மொத்தத்தில் இதுவரை தான் பார்த்த அனிக்காவாக இல்லாமல் அசரடிக்கும் அழகோடு அந்த அழகை உணராத பேதமையோடு இருந்தவளை மீண்டும் ஒருமுறை பார்க்க கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் முற்றிலுமாய்ப் பார்த்தவன்.

“சேலை உனக்கு ரொம்ப அழகா இருக்கு அனி, அவன் உன்னைச் சும்மா கிண்டல் செய்யிறான். நீ மூஞ்ச இப்படி உர்ருன்னு வச்சிட்டு இருக்கிறது மட்டும் தான் அழகாயில்லை’ எனச் சொல்ல,

“அப்படியா அத்தான், அவன் ஒரு லூசு, மெண்டல், நான் இனிமே அவன் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன்” என்று அவள் தன் பழைய கலகலப்பிற்குத் திரும்பினாள்.

“அத்தான் எனக்கு ஒரே ஒரு ஹெல்ப்”

“என்னம்மா?”

“என் கூட வீட்டுக்கு உள்ள வரைக்கும் வாங்களேன். எனக்குச் சேலை உடுத்திட்டு நடக்கிறது…தடுக்கி கீழ விழுந்திருவேனோன்னு பயமா இருக்கு” பரிதாபமாய்ச் சொல்ல,

“வேணும்னா சொல்லு உன்னை நடக்க விடாம தூக்கிட்டுப் போகக் கூட நான் ரெடிச் செல்லம்” எனச் சொன்ன மனதை கட்டுப்படுத்தி, சரி வா” என அழைத்துச் சென்றான். இருவரும் இணைந்து வீட்டின் வாயில் வரை நடந்திருக்க அவர்கள் பின்னிருந்து

“அனி இங்க வா” எனக் குரல் கேட்க ,

“ஐ அம்மா வந்தாச்சு” என அவனிடமிருந்து நகர்ந்து சாராவுடன் அவள் இணைந்துக் கொண்டாள்.

ரூபனுடைய காதல் அனிக்காவின் குணத்தை அடித்தளமாகக் கொண்டது. ஒரே குடும்பம் மற்றும் சிறுவயது முதலாக ஒருவரை ஒருவர் அறிந்தவர்களே. ஆதலால் அவள் முகத்தைப் பார்த்து அவனுக்கு ஈர்ப்பு ஏற்ப்பட வேண்டிய சூழ்நிலை அங்கு இல்லை. ஆனால், இப்போது அவளைச் சேலையில் பார்த்த நேரம் முதலாக அவனால் அவளை விட்டுக் கண்ணை அகற்றுவது மிகவும் சிரமமாக இருந்தது.” இப்படியா ஒருத்தி அழகாக இருந்து தொலைப்பாள்?!!!” எனத் தன்னையே கேட்டுக் கொண்டான் அவன்.

மாப்பிள்ளை தீபன் வீட்டினர் பெண் வீட்டிற்குப் புறப்பட்டனர். அரை மணி நேர தூரம் கடந்த பின் அந்த ஹாலுக்கு வந்து சேர்ந்தனர். திருமணம் நடைபெறவேண்டிய ஆலயத்திற்கு அருகாமையில் இருந்ததால் அதைத் தேர்ந்தெடுத்து இருந்தார்கள். ஹாலின் உள்ளே நுழையும் முன்பே மாப்பிள்ளை வரவேற்பாக ப்ரீதாவிற்குச் சொந்த அண்ணன் இல்லாத காரணத்தினால் உறவு முறை அண்ணன் ஒருவர் தீபனுக்கு மாலை அணிவித்து, தங்க செயின் அணிவித்து வரவேற்றார்.

அங்கே காலை உணவு ஒரு புறம் பறிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. அங்கோ பெண்ணை அலங்கரித்து ஆலயத்திற்குக் கூட்டி வர மாப்பிள்ளை வீட்டார் புறப்பட்டனர்.பெண்ணை ஆலயத்திற்கு அழைத்து வருவதற்குச் சற்று முன்னர் அவன் ஆலயத்திற்குச் சென்றால் போதும் என்பதால் தீபன் ஹாலிலேயே மணமகன் அறையில் அவன் நண்பர்களோடு காத்திருந்தான். மாப்பிள்ளை உபச்சாரம் குறைவில்லாமல் நடந்தது.

திருமணத்திற்கான பட்டுச் சேலை, ரீத் (முன்னெற்றியில் அணியும் பூக்களால் ஆன கிரீடம்), நெட் (தலையை மறைக்கும் வெள்ளை நிற வலைத்துணி), மாலை, அலங்காரப் பொருட்கள், பழங்கள் என ஆளுக்கொரு தட்டோடு தீபன் வீட்டுப் பெண்கள் அணி வகுக்க ஒரு வழியாக மணப்பெண்னை அலங்கரித்து ஆலயத்திற்குள் அழைத்து வந்தார்கள். ஆலயத்தில் தீபனையும், ப்ரீதாவையும் அருகருகே அமர வைத்தனர்.

தீபன் ப்ரீதாவின் முகத்தைப் பார்க்க முயல அறை குறையாக மனைவி முகம் பார்க்க கிடைக்க அவள் முகத்தை மறைக்கும் நெட்-ஐ குறித்துச் சலித்துக் கொண்டான்.அவன் நண்பர்கள் வேறு அவன் முயற்சியைக் கண்டு கொண்டதைப் பார்த்து கிண்டலடிக்க ஆரம்பித்தனர்.அவர்கள் கிண்டலுக்குப் பயந்து நல்ல பிள்ளையாகத் திருமணத் திருப்பலி (Mass) யில் ஜெபிக்க ஆரம்பித்தான்.

மணப்பெண் தோழர் தோழியாகப் பிரபாவும் ராஜாவும் இருக்க, மணமக்களுக்குப் பின் வரிசையில் அருகிலேயே இருந்தாள் அனிக்கா. அவள் மடியில் ஜாக்குலின் மகன் பிரின்ஸ் இப்போது உட்கார்ந்திருந்தான்.

ரூபனின் மனம் வழிப்பாட்டில் லயிக்காமல் அவன் கண்கள் அனிக்காவையே சுற்றி வந்தது.

பைபிள் வாசகங்கள், தொடர்ந்து மறையுரை (preaching) கடந்த பின்,பாதிரியார் அவர்கள் இருவரும் திருமணம் செய்யச் சம்மதிப்பதை முதலில் உறுதிச் செய்து கொண்டார். திருமண வார்த்தைப்பாடு ஆரம்பித்தது.

பாதிரியார் சொல்ல மணமக்கள் திரும்பச் சொன்னார்கள்.

“தீபன் ஆகிய நான் ப்ரீதா ஆகிய உன்னை என் மனைவியாக ஏற்றுக் கொள்கிறேன். இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும், நோயிலும் உனக்குப் பிரமாணிக்கமாக இருந்து, வாழ்நாளெல்லாம் உன்னை நேசிக்கவும், மதிக்கவும் வாக்களிக்கிறேன்.”

“ப்ரீதா ஆகிய நான் தீபன் ஆகிய உங்களை என் கணவனாக ஏற்றுக் கொள்கிறேன். இன்பத்திலும் துன்பத்திலும், உடல் நலத்திலும், நோயிலும் உங்களுக்குப் பிரமாணிக்கமாக இருந்து, வாழ்நாளெல்லாம் உங்களை நேசிக்கவும், மதிக்கவும் வாக்களிக்கிறேன்”

அதைத் தொடர்ந்து தீபன் ப்ரீதாவிற்கு அணிவிக்க வேண்டிய திருச் சிலுவை நடுவில் அமைந்திருக்கும் இதய வடிவிலான டாலர் கொண்ட தாலிச் செயின் செபிக்கப் பட்டு தீபன் கைகளில் கொடுக்கப் பட்டது.

“ப்ரீதா என் அன்பிற்கும், பிரமாணிக்கத்திற்கும் அடையாளமாகிய இந்தத் திருமாங்கல்யத்தைப் பிதா, சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே அணிந்துக் கொள்.” என்று சொல்லி ப்ரீதாவிற்கு அணிவித்தான். அந்த நேரம் ஏற்கெனவே ஏற்பாடு செய்தபடி வெளியே பட்டாசுக்கள் வெடித்தன. திருப்பலியின் ஏனைய ஜெபங்கள் அத்தனையும் நிறைவுற மணமக்கள் இருவரும் திருமணத்திற்கான ரெஜிஸ்டரில் தங்கள் கையெழுத்தை இட்டனர். பெரியவர்கள் சாட்சிக் கையெழுத்திட திருமணம் முடிந்த மகிழ்ச்சி அங்கே ஒவ்வொருவர் முகத்திலும் தெரிந்தது.

திருப்பலி நிறைவேற்றிய பாதிரியார்கள் உடன் ஓரிரு புகைப்படம் எடுத்தபின் அங்கே இருந்த உறவினர்களும் உடனே வாழ்த்துச் சொல்லி புகைப் படம் எடுத்துக் கொண்டனர். தனித் தனியாக ஆலயத்திற்கு வந்த தீபனும் ப்ரீதாவும் கைக் கோர்த்தவர்களாகக் கணவன் மனைவியாக ஆலயத்தினின்று வெளியே வந்தனர். அனைவர் முகத்திலும் களிப்பே நிறைந்து இருந்தது.

உறவினர்கள் எல்லோரும் ஹாலிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். ரூபனின் பார்வை விடாமல் அனிக்காவைத் துளைத்துக் கொண்டிருந்தது. நடைபெற்ற எல்லா நிகழ்வுகளிலும் அவன் தன்னையும் அனிக்காவையும் சேர்த்து சேர்த்து எண்ணிப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான், தன்னை ஆறு விழிகள் கவனித்துக் கொண்டிருப்பதை அறியாமல்.

அவள் விழிகளில்

விழுந்தேன் நான்

மீளவே இயலா

புதை மணலில்

விழுந்தாற் போல்

அவள் விழிகளில்

விழுந்தேன் நான்

மீண்டும் எழுகின்ற

உத்தேசம் இல்லாதது போல்

அவள் விழிகளில்

விழுந்தேன் நான்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here