9. அமிழ்தினும் இனியவள் அவள்

0
580
Amizhthinum Iniyaval Aval

அத்தியாயம் 9

திருமணம் முடிந்து ஹாலிற்குப் புது மணத் தம்பதிகள் வந்து சேர மதியம் ஆகிவிட்டிருந்தது. மேளதாளத்தோடு வந்த மணமக்கள் இருவரையும் நண்பர்கள், உற்றார் உறவினர் ஆர்ப்பரிப்போடு வரவேற்க, மிகவும் உற்சாகமான தொடர் நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் இருவரும் கேக் வெட்டினர் உடனே ரிசப்ஷன் ஆரம்பித்தது.

அதே நேரம் ஹாலின் விஸ்தாரமான மாடியில் மதிய சாப்பாடும் ஆரம்பித்திருந்தது. சாப்பிட்டு விட்டு மணமக்களை வாழ்த்தி, பரிசுக்களைக் கொடுத்து, புகைப்படம் எடுத்து விட்டுப் புறப்படத் தயாராகக் கூட்டம் ரிசப்ஷனை மொய்த்தது.

இன்னொரு பக்கம் ஏஸி ஹாலில் இதமாக ஒலித்த இசையைக் கண்டு கொள்ளாமல், பலகாலம் கழித்துச் சந்தித்த உறவினர்கள் ஒருவர் மற்றவரிடம்உற்சாகமாய் அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். மணப்பெண்ணின் பக்கத்தில் உறவுப் பெண் ஒருவர் நின்று ப்ரீதாவிடம் கொடுக்கும் பரிசுகளை வாங்கிவாங்கி வைத்துக் கொண்டிருக்க, மணமகன் பக்கத்தில் ஜாக்குலின் நின்றுக் கொண்டிருந்தாள்.

அனிக்கா பிரின்ஸ் மற்றும் அங்கிருந்த ஒன்றிரண்டு வாண்டுகளோடு சங்கமமாகி இருந்தாள்.

பெரியவர்கள் விருந்தினர்களை வரவேற்கவும் சாப்பிடச் சொல்லவுமாக மிகவும் மும்முரமாக இருந்தனர். இரண்டு குடும்பத்தினருமே செலவுகளைபங்கிட்டு இருந்ததால் மாப்பிள்ளை வீட்டுச் செலவுகள் அனைத்தின் போதும் ராஜ் அன்றைய தினத்தின் ஏ டி எம் மிஷினாக மாறி மனைவியும் பிள்ளைகளும்சொல்லச் சொல்ல செலவுகளுக்குத் தேவையான பணத்தைப் பையிலிருந்து எண்ணி எண்ணிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஒன்றிரண்டு மணி நேரத்திற்கு அங்குத் திருமண வீட்டினர் அனைவரும் இரு கால்களிலும் சக்கரம் கட்டி விடப்பட்டார் போலச் சுழன்றனர். அதன் பின்னர் ஓரளவு கூட்டம் குறைந்து விட்டிருந்தது. அவ்வளவு அலைச்சலிலும், சோர்விலும் ஒரு வகையான மன நிறைவு. தங்கள் பிள்ளைகளுக்கான கடமைகளைநிறைவேற்றும் போது வரும் மன நிறைவு அது. பெற்றோர்கள் வாழ்வில் இது ஒரு வகையான வெற்றியின், சாதனையின் நிறைவைக் கொடுக்கும் என்றால்அது பொய்யன்று

அனைவரும் ஓய்வாக அமர்ந்து ஆற அமர உரையாடிக் கொண்டிருந்தனர். அனிக்கா ஏற்கெனவே பிரின்ஸை சாப்பிட வைத்து விட்டதால் ஜாக்குலினுக்கு ஒரு பெரிய வேலை முடிந்து விட்ட மாதிரி இருந்தது ,

“ஏன் அனி, இவன் உன் கிட்ட சேட்டையே செய்யாம சாப்பிட்டுடானா?” ஜாக்குலின் வியப்புத் தாளாமல் கேட்டாள்.

“அதெல்லாம் அவன் சேட்டை செய்யலியே…நல்லா சாப்பிட்டான் அண்ணி, நீங்க வேணா பிரின்ஸ் கிட்ட கேளுங்க? ப்ரின்ஸ் நீ சாப்பிட்டல்லமா… அம்மாட்டசொல்லு”

“ம்ம்ம்…சாப்தேன் மம்மி” சமர்த்தாகப் பதில் சொல்லி தலையாட்டினான் அவன்.

“பரவால்லியே, அப்போ நம்ம இந்த அத்தையை நம்ம வீட்டுக்கு கூப்பிட்டு போயிடுவோமா… தினமும் நீ சத்தமில்லாம சாப்பிட்ருவ பாரு”

“ம்ம்… நான்லாம் டில்லி வரலப்பா, வேணும்னா இந்தக் குட்டி பிரின்ஸை என் கிட்ட விட்டுட்டு போங்க… எனக்கும் போரடிக்காது’

“அதான் உங்க வீட்ல ஒரு குட்டி வரப் போகுதில்ல, பிறகு என் பிரின்ஸ ஏன் கேட்கிற நீ… ச்சீ இந்த அத்தை வேணாண்டா நமக்கு…”

“நோ, நோ என்கு இந்த அத்தே தா வேணு” அவளிடம் தாவினான் பிரின்ஸ்.

கல கலத்து சிரித்தவாறு பிரின்ஸை தூக்கிக் கொண்டு தன் அக்காவின் தோளில் சாய்ந்து நிற்கும் அனியை விடாமல் தொடர்ந்தது ரூபனின் பார்வை.

அவன் உள்ளத்தில் புதிதாக ஒரு யோசனை எழுந்தது அதைச் செயல் படுத்த எண்ணியவனாகச் சரியான நேரத்திற்காகக் காத்திருந்தான்.

அண்ணன் திருமணம் முடிந்த இரண்டு நாட்களில் அவனது வெளிநாட்டுப் பயணம் இருந்ததால், தன்னால் அண்ணனின் திருமண ஆல்பத்தைப் பார்க்கவியலாமல் போய்விடும் என்ற காரணம் சொல்லியவனாக ஏற்கெனவே மணமக்கள், மற்றும் தங்கள் குடும்பத்தினரை வளைத்து வளைத்துப் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தான். பிறருக்குத் தெரியாமல் அனிக்காவின் பல புகைப்படங்களும் எடுக்க முடிந்தது. தானும் குடும்பத்தினரோடு நின்று புகைப்படம் எடுக்கும் போது மட்டும் தன் நண்பன் அசோக்கின் உதவியை நாடினான்.

மேடையில் தீபனுக்கு உதவியாகப் பரிசுகளை வாங்கி வைக்க ஜாக்குலின் நிற்க, தேவைப்படும் போது இடையிடையே அனிக்காவின் உதவியை அவள் நாடினாள். இப்போதோ இருவருமே மேடையில் நின்றிருந்தனர். சற்று நேரத்தில் பிரின்ஸ் தாயிடம் ஏதோ கேட்க அவள் மகனுக்காக மேடையை விட்டு கீழிறங்கினாள்.

இப்போது தீபனின் வலப்பக்கம் உதவியாக அனிக்கா மட்டுமே நின்றாள். மணமக்களோ தங்கள் அக்கம் பக்கம் நின்றுக் கொண்டிருப்பவர்களைக் கவனிக்க நேரமில்லாதவர்களாகத் தங்களுக்குள்ளே பேசுவதும், புன்னகை புரிவதும், தங்களை வாழ்த்த வருபவர்களின் வாழ்த்தைப் பெற்றுக் கொள்வதும், தங்கள் உறவினர்களை ஒருவருக்கொருவர் அறிமுகப் படுத்துவதும், அடுத்த நொடியே அறிமுகப் படுத்த பட்டவர்களின் பெயர்கள் மறந்து போக, புதிதாகவாழ்த்துச் சொல்ல வருபவர்கள் குறித்து ஆர்வமாகக் கேட்பதுமாக இருந்தனர்.

இதுதான் தான் எதிர்பார்த்த சந்தர்ப்பம் என்றெண்ணியவனாக மேடையேறிய ரூபன், ஏற்கெனவே மணமக்களோடு தான் புகைப்படமெடுக்க ஆசைப்படுவதாகச் சொல்லி அசோக்கிடம் கேமெராவை கொடுத்திருக்க அனிக்காவின் கவனம் இல்லாத சந்தர்ப்பத்தில் அவளுக்கு அடுத்து நின்று அதாவது அந்த புகைப்படத்தைப் பார்த்தால் அனிக்கவும், ரூபனும் ஜோடியாக நிற்பது போல தோன்றும் வகையில் நின்றுக் கொண்டு அண்ணன் அண்ணியின் கவனத்தைத் திருப்பிப் புகைப்படம் எடுத்துக் கொண்டான்.

தொடர்ந்து மாற்றி மாற்றி ஒவ்வொருவராகப் புகைப்படமெடுத்துக் கொண்டிருக்க அனிக்காவிற்கு தன் அருகில் நின்றிருந்த ரூபனைக் குறித்து தவறாக ஒன்றும் தோன்றவில்லை.

தன்னையே தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்த இரண்டு விழிகளில் அவனது புகைப்படம் எடுத்த செய்கை அளவு கடந்த கோபத்தை ஏற்படுத்தி இருப்பதை அறியாதவனாகத் தான் எண்ணியதைப் போலத் தன்னுடையவளின் அருகில் நின்று புகைப்படம் எடுத்த களிப்பில் மிதந்து கொண்டிருந்தான் ரூபன்.

மறுபடியும் ஜாக்குலின் மேடைக்கு வந்து விடக் குழந்தைகளொடு விளையாட்டு விளையாட்டாக மாடியின் ஓரத்திற்குச் சென்றிருந்த அனிக்கா அங்கிருந்த பூச்செடிகளிலும், அழகிய நிறம் கொண்ட மீன்களின் அழகிலும் மெய்மறந்து நின்று விடத் திரும்பிப் பார்த்த போது தன்னோடு வந்திருந்த வாண்டுகள் அங்கு அவளோடு இல்லை என அறிந்துக் கொண்டாள்.

பார்வையால் குழந்தைகளைத் தேடியவள் அவர்கள் பத்திரமாக ஹாலின் உள்ளே அமர்ந்திருப்பதை உறுதிச் செய்து கொண்டவளாக அமைதியாகத் திரும்பலானாள்.

அந்த நேரம் ஏதோ பேச்சுக் குரல் கவனத்தை ஈர்க்க, அதிலும் தன்னுடைய பெயர் அடிபடவும் அங்கே நின்று விட்டிருந்தவள் தாம் கேட்ட வார்த்தைகளால் அதிர்ச்சியுற்றாள். இப்படியும் பேசுவார்களா? என்பது மனதைச் சுட மனம் காயப்பட்டவளாகத் திரும்பினாள். அவளுக்கு அங்கிருந்து உடனே கிளம்பி விட வேண்டும் என்று தோன்றி விட்டிருந்தது.

தாயிடம் வந்து சேர்ந்தாள். அருகில் குடும்பத்தினர் அனைவரும் இருந்தனர். அவளது சோர்ந்த முகத்தைப் பார்த்த ராஜ்,

“என்னாச்சு அனிக்குட்டிக்கு? ஏன் இவ்வளவு டல்லா இருக்கா?’ எனத் தங்கையிடம் வினவ

“ஒன்னுமில்லை மாமா, கொஞ்சம் தலை வலிக்குது அதான்” எனச் சொன்னவள் வீட்டிற்குப் புறப்படத் தயாராக இருந்த அண்ணி மற்றும் அண்ணனைப் பார்த்து நானும் உன் கூட வரேண்ணா” என்றாள்.

“வீட்டுக்கு போயி தனியா என்ன செய்வ? இன்னும் ரெண்டு மணி நேரத்தில இங்கிருந்து மாப்பிள்ளை பொண்ணு எல்லோரும் புறப்பட வேண்டியது தான். நீயும் எங்ககூட இருந்து வாயேன் அனி” என்ற சாராவிடம்

“வேண்டாம்மா, எனக்கு இப்பவே வீட்டுக்குப் போகணும்  ரொம்ப டயர்டா இருக்கு” என்றவளாகக் கிறிஸ் பிரபாவுடன் அவளும் புறப்பட்டுச் சென்று விட்டாள்.

மதியம் தாண்டி மணி மூன்றாகி இருந்தது. இரவு உணவு மணமகன் வீட்டில் என்பதால் பற்பல வேலைகள் பார்க்கச் செல்லுமாறு ராஜ் ரூபனிடம் சொல்லி அனுப்பினார். நானும் கூடப் போறேம்பா” என்று சொல்லி ஜீவனும் அவனோடு புறப்பட்டுச் சென்றான்.

இங்கே கிறிஸ் பிரபா மற்றும் அனிக்கா மூவரும் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தனர். தங்கையை அவளது அறைக்கு ஓய்வெடுக்கச் சொன்ன கிறிஸ் தாய்மையின் ஆரம்ப மாதங்களில் இருந்த மனைவியின் உடல் நலனை விசாரித்தவாறே தங்கள் அறைக்குள் நுழைந்தான்.

காலையில் இருந்தே இருந்த அனிக்காவின் உற்சாகமான மன நிலையை ஷைனியின் வார்த்தைகள் கலைத்துப் போட்டிருந்தன. ஏதோ அசிங்கமான, அருவருப்பான ஒன்றைத் தீண்டினாற்போல அனிக்காவின் உள்ளம் அருவருத்துப் போயிருந்தது. விரும்பத் தகாத நிகழ்வு என்றாலும் கூட அவளது அனுமதி இல்லாமலே அதே காட்சிகள் மனதிற்குள்ளாக மறுபடியும் ஓடிக் கொண்டிருந்தது… மறுபடியும், மறுபடியும், மறுபடியும்.

அங்கு அனிக்கா கேட்க நேர்ந்த உரையாடல் மாடியின் ஓரத்தில் நின்று பேசிக் கொண்டிருந்த ஷைனி மற்றும் அவளது தோழியின் உரையாடல்தான். தன் தமக்கையின் நிச்சயதார்த்தம் அன்று அவள் நடந்து கொண்டது போலவே அன்றும் யாருக்கோ திருமணம் நடக்கின்றது. நமக்கென்ன? என்பது போன்ற அலட்சிய பாவனையோடு அன்றும் அவள் நின்றுக் கொண்டிருந்தாள்.

திருமணத்திற்கு வருவோர் செல்வோரை குறித்த தகவல்களை இருவரும் விடாமல் அலசிக் கோண்டிருந்தனர்.

“ஏய் அந்த ஆளைப் பார்த்தியா அவர் சொட்டை மண்டையில…”

எனத் தோழியின் காதில் முணு முணுக்க அவர்கள் வெடித்துச் சிரித்தார்கள். அப்போது தான் ஷைனியிடம் அவள் தோழி,

“ஏய் நீ ரொம்ப லக்கிடி ஷைனி”

“நான் லக்கினு எனக்குத் தெரியும் , அதை நீ இப்போ ஏன் சொன்னேன்னு சொல்லு பார்ப்போம்”

“உன் அக்கா மாமியார் வீட்டுல ரெண்டு பேர் சூப்பரா இருக்காங்க இல்ல அதுதான்”

“ஷீ…யாரப்பா அது சூப்பரா ரெண்டு பேரு”

“உங்க அத்தான் தம்பிங்கதான், ஒண்ணு ஜெயம் ரவி மாதிரினா, இன்னொன்னு தனுஷ் மாதிரி என்ன நான் சொல்றது?”

“ச்சீ நீயும் உன் டேஸ்டும் போடி ரெண்டுமே சுத்த வேஸ்ட்…”

“ஏய் நான் சைட் அடிக்கக் கூடாதுன்னு தான அப்படிச் சொல்லுற”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல முதல்ல எனக்கும் அந்த ரூபனைப் பார்த்ததும் உன்னை மாதிரியே தான் தோணுச்சு, எதுக்கும் ஆளு வொர்த்தா இல்லையான்னு தெரிஞ்சிக்கத் தான், அவங்க வீட்டுல அனி அனின்னு ஒரு அரை வேக்காடு இருக்கில்ல அதைக் கூப்பிட்டு விசாரிச்சேன்”

யாருப்பா அது? அந்த அனி…

பொறு நான் சொல்றேன். அதுக்கும் முன்னால அந்த 2 பேரைப் பத்தியும் கேட்டுக்கோ… அதுக்கப்புறம் அது வேஸ்டா இல்லையான்னு சொல்லு 

அந்த ரூபன் அதான் உன் ஜெயம் ரவி ம்க்கும்  அவன் ஒரு தொழிற்சாலைல வேலைப் பார்க்கிறானாம்…

ச் ச்சீ  தொழிற்சாலைலயா  . பார்த்தா ரொம்ப ரிச்சா தெரிஞ்சது நீ இப்படிச் சொல்லுறியே  .

இதுக்கே இப்படிச் சொல்லிட்ட அவன் சம்பளத்தைக் கேட்டா நீ அவனை எட்டிப் பார்க்கவும் மாட்ட நீ  

சம்பளம் வரை கேட்டுட்டியா நீ  ஹா ஹா  அந்தப் பொண்ணு உங்கிட்ட இதெல்லாம் சொல்லிச்சா 

அடப்போ அதுக்கிட்ட இதெல்லாம் அவ கிட்ட கேட்கல எங்க ரிலேடிவ் சொல்லி தெரிஞ்சுகிட்டது தான்  … ம்ஹீம்… அவன் நமக்கு லாயக்கு இல்லைப்பா  

அப்போ அந்தத் தனுஷ்?  .

போடி தனுஷாம் தனுஷ் அவன் நம்மை விடச் சின்னப் பையன் அவனையெல்லாம் வேற நீ பார்க்குறியா லூசுடி நீ  .

இல்லைனா நாம எப்படி டைம் பாஸ் செய்யுறது  அதான்…

அவன் பத்தியும் என்கிட்ட நியூஸ் இருக்கு…

என்ன அது சொல்லு சொல்லு 

அவனுக்கு ஏற்கெனவே பொண்ணு ரெடியா இருக்காமாம் 

அது யாருடி  .

நான் அனின்னு சொன்னேன் பாரு அது அவங்க அத்தைப் பொண்ணு , அந்தப் பொண்ணு வீட்டுல ரொம்ப வசதின்னு இவங்க வீட்டில வளைச்சுப் போடபார்க்கிறாங்க போல  .

இண்டிரெஸ்டிங்க் …அப்புறம் ……

போடி உனக்கென்ன நான் கதையா சொல்லிட்டு இருக்கேன்  .

ஏய் சும்மா கதையைப் பாதியில நிறுத்திறாத  . உனக்கு எப்படித் தெரியும் அதைச் சொல்ல…

அந்தப் பொண்ணு எப்ப பாரு இவங்க வீட்டிலயே தான் வந்து இருக்குமாம், அது கூடப் பரவாயில்ல எந்த நேரமும் அந்தப் பையன் கூடவே திரியும் போல…

அடப்பாவி  என்ன தைரியம் பார்த்தியா …………

அது மட்டுமில்ல இப்ப இந்த கல்யாணத்தில கூட அவளுக்கு அவங்க வீட்டில இருந்து தான் சேலை எடுத்துக் கொடுத்துருக்காங்க, சேகை எடுக்கப் போகும் போது இதை எங்க ரிலேடிவ் பார்த்திருக்காங்க. வருங்கால மருமகளாச்சே சும்மாவா…

கேட்டுக் கொண்டிருந்தவளுக்குத் தீச்சுட்ட உணர்வு…அதற்கு மேலும் அவர்களின் அபத்தத்தைக் கேட்க விரும்பாதவளாக அங்கிருந்து நகர்ந்து வந்திருந்தாள்.

இன்னும் அவளுக்கு மனம் ஆறவில்லை. அவளுக்கும் ஜீவனுக்கும் இடையேயான நட்பு ஆண் பெண் என்னும் எல்லைக்கு அப்பாற்பட்டது. ஒரு போதும் அவர்களுக்கிடையே அனாவசியமான எண்ணங்கள் தோன்றியதே இல்லையே? அதை இந்தப் பெண் இப்படிச் சொல்கிறாள் என்றால் மற்றவர்களும் இவர்களைப் பற்றி இப்படித்தான் யோசிப்பார்களோ?

அப்படியென்றால் ஜீவனுடன் இனி தாம் பழகலாமா? கூடாதா? என்னும் குழப்பம் வர தலையைப் பிடித்துக் கொண்டாள். அதிலும் அவள் அன்று மகிழ்ச்சியாக அணிந்து கொண்டிருந்த சேலைக்குக் கொடுத்திருந்த அர்த்தம் அவளை அருவருக்கச் செய்த்து. தீபனுக்கு ஜாக்குலினைப் போல அவளும் ஒரு சகோதரி என்ற முறையில் அல்லவா அத்தை அவளுக்கு அந்தச் சேலை எடுத்தது இது அவளுக்குத் தெரியுமே…

 ஜாக்குலினுக்கு எடுக்கிற மாதிரியே அனிக்கும் பார்க்கணும்ங்க  என்று ராஜிடம் சொன்ன இந்திராவின் முகம் இன்னும் மனதிற்குள் வந்து நின்றது. எப்படி இவர்களால் இப்படியெல்லாம் பேச முடிகின்றது?.

அவளால் அடுத்து என்ன செய்வது என்று முடிவெடுக்க முடியவில்லை. பெரியவர்களிடம் செல்வது சரியல்ல என்று உணர்ந்ததால் ஜீவனைப் பார்த்துப் பேசலாமா? எனத் தோன்ற எழும்பி புறப்பட்டுச் சென்றாள்.

ஜீவனுடன் முன்பு போலப் பேச வேண்டுமா? வேண்டாமா என்பதை அவனிடமே கேட்க வேண்டி வந்து விட்டதே? எனத் தன் மனதிற்குள் நொந்தவளாக வீட்டிலிருந்து புறப்பட்டாள். நடைத் தூரம் என்றாலும் அவளிருந்த மனநிலையில் நடக்கத் தோன்றாததால் ஸ்கூட்டியில் போய் ஜீவன் வீட்டு வாசலில் நிறுத்தினாள்.

ரூபனும் ஜீவனும் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தனர். மணமக்கள் வருகைக்காக அலங்கரிக்கப் பட்ட வீடு அமைதியாக இருந்தது. ஓரிரண்டு பெரியவர்கள் வீட்டில் முன் அறையில் நின்று கதைப் பேசிக் கொண்டு இருந்தனர். மிச்ச வேலைகளும் அமைதியாக நடந்து கொண்டிருந்தது.

தன்னுடைய அறைக்குள் நுழைந்த ரூபனை பின்தொடர்ந்து வந்து அவனை மறித்த வண்ணம் அவன் முன் வந்து நின்றான் ஜீவன்.

என்னடா…வா கொஞ்சம் ஃப்ரெஷ் ஆயிட்டு மீதி வேலை ஏதாவது இருக்கான்னு பார்க்கலாம் … என்றான் புன்னகையுடன்…

 அதெல்லாம் பார்க்கலாம் பார்க்கலாம்… முதல்ல உன் கேமராவ எடு  என்றான் இவன் முக இறுக்கத்தோடு…

பொறுடா, எடுத்த போட்டோவெல்லாம் முதலில் பேக் அப் எடுத்துட்டு தாரேன் 

அதெல்லாம் ஒண்ணும் தேவையில்ல  அதில் ஒண்ணு ரெண்டு போட்டோ டெலிட் செய்ய வேண்டியிருக்கு  .உடனே தர்றியா இல்லையா?  அண்ணனிடம் பேசுகிறோம் என்றில்லாமல் இப்போது அவன் குரல் வெகு கண்டிப்பாக மாறி விட்டிருந்தது.

அனியின் வால் பிடித்துக் கொண்டே தான் அலைவதால் ஜீவனுக்கு அவளைப் பாதுகாப்பதும் தன்னுடைய வேலைதான் என்றொரு மனோபாவம் வெகு நாளாய் வந்து விட்டிருந்தது. பெண்ணுக்கு நண்பனும் ஒரு காவலன் தானே? அந்தப் பொறுப்பை அவன் எப்போதுமே கை விட்டதில்லை. இன்றோ தன்னுடைய அண்ணனின் பார்வையைத் தொடர்ந்தவனுக்கு அப்பார்வை அனியிடம் நிலைத்திருந்தது அவ்வளவு உவப்பாக இல்லை.

அதிலும் அவன் எடுத்த அந்தப் போட்டோ அவனுடைய கோபத்தை இன்னுமாக அதிகரித்து விட்டிருந்தது.

 எந்த ஃபோட்டோ டா ஜீவா?” ரூபனோ இன்னும் பொறுமை இழக்கவில்லை 

“நீ அனி கூட ஜோடியா நிக்கிற மாதிரி எடுத்தியே அந்த ஃபோட்டோ தான், நாளைக்குப் பின்னே அதை எடிட் செஞ்சு எதையும் தப்பாச் செஞ்சு வச்சேன்னா என்ன செய்யிறது?  தமையனுக்கெதிராக கனல் கக்கின அவன் கண்கள். தன்னுடைய உண்மை வெளிப்பட்டுவிட்டதே என ஒரு நிமிடம் ரூபன் திகைத்தாலும் தம்பியின் குற்றச் சாட்டில் மனம் நொந்தவனாக,

 நான் அப்படி எதாவது செய்வேன்னு நீ நினைக்கிறியாடா?” இப்போது ரூபனின் குரல் மெலிந்திருந்தது.

 பின்னே வேற எதுக்கு உனக்கு அந்தப் போட்டோ 

 எனக்கு ……”

……… .

 எனக்கு அவளை ரொம்பப் பிடிக்கும் ஜீவா… அவ போட்டோ எதுவுமே எங்கிட்ட இல்ல அதான் எடுத்தேன்.

என்னது லவ்வா?… இன்னும் ஜீவனின் வார்த்தைகளிலிருந்து கடுமை மறையவில்லை.

 லவ் தான்  உறுதியான குரல் இவனிடமிருந்து…

 இந்த லவ் கிவ்னு சும்மா இருக்கிறவளை குழப்புறது அவக் கிட்ட போய் எதையாவது சொல்றதுனு நினைச்சேன்னு வை நான் பார்த்துட்டு இருக்க மாட்டேன் 

நான் என்னச் ……ரூபன் எதையோ சொல்ல வருமுன் இடை மறித்தான் இளையவன்.

இப்படி எதாவது பிரச்சினை வந்திடுமோன்னு பயந்து தான் அவளை அதிகமா வெளியே எங்கேயுமே விட மாட்டாங்க அது உனக்குத் தெரியுமா? இப்பவே அவ நம்ம வீட்டுக்கு மட்டும் தான் வந்துட்டு போயிட்டு இருக்கா. நீ செஞ்சுகிட்டு இருக்கிற காரியம் தெரிஞ்சா நம்ம வீட்டுக்கும் அவளை வர விட மாட்டாங்க… மற்ற எல்லாத்தையும் விடு அத்தையை யோசிச்சுப் பார்த்தியா நீ? சும்மாவே மாமாக்கு உன் மேல கோபம் இருக்கு. அவர் முன்னே இருந்த மாதிரி இப்போ இல்லை. அவர் பணத்துக்காகத்தான் அவர் பொண்ணு பின்னால நீ அலையிறேன்னு கூட அவர் நினைக்கலாம். அதுக்கப்புறம் சொந்தமே இல்லாம போயிடும்.

….

அத்தைக்கு நம்ம எல்லோர் மேலயும் எவ்வளவு பாசம், அவங்க தான் ரெண்டு பேருக்கும் நடுவில கஷ்டப் படப் போறது. நீ ஏன்னா இப்படி எல்லாம் செய்யிற?

ஏய் ஏன்டா, அவ மேல எனக்கு லவ் வந்தா நான் அதுக்கு என்னடாச் செய்யிறது? அது என்ன முன் கூட்டியே சொல்லிக் கிட்டா வருது? நான் என்ன சொல்ல வரேன்னு கேட்கவே மாட்டியா? நான் உன் அண்ணன்டா, உனக்கு என் மேல நம்பிக்கையே வராதா?

நீ என் அண்ணா தான் ஆனா, நீயா அவளான்னு கேட்டா நான் எப்பவுமே அவளுக்குச் சப்போர்ட்டா தான் இருப்பேன். ஏன்னா அவ என் ஃபிரண்ட்.

உன்னைய யாரு சப்போர்ட்டா இருக்க வேணாம்னு சொன்னது. கொஞ்ச நேரம் நான் என்ன சொல்ல வரேன்னு தான் கேளேன்… ப்ளீஸ்.

அவனின் ப்ளீஸ்ற்காக அமைதி காத்தான் ஜீவன்.

எனக்கு அவ மேல லவ் தான் ஆனால் அவகிட்ட போய் நான் இப்பவே எதையும் சொல்லப் போறது இல்லை. நீ யோசிக்கிற மாதிரி நானும் எல்லாம் யோசிக்க மாட்டேனாடா…

எனக்கு அவளை மேரேஜ் செஞ்சுக்கணும், அதுக்குத் தான் எல்லாம்  . அவன் சொல்லாமல் விட்ட வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொடர்ந்தான் ஜீவன்.

எல்லாம்னா … எது வேலைப் பார்த்துட்டு இருந்த நீ பிஸினஸ் செய்யணும்னு டிசைட் செஞ்சதா? தப்பா நினைச்சுக்காத ஏன்னா எனக்கு உங்கிட்ட பொய்யா ஆறுதலா பேசணும்னு எல்லாம் தோண மாட்டேங்குது. வீணா நீ எதையாவது கற்பனை செஞ்சு உன் லைஃபை அழிச்சுக்குவியோன்னு கூடப் பயமாயிருக்கு. அதனால தான் கேட்கிறேன்…

 என்னதான் இருந்தாலும் நீ மாமா அனிக்கு மாப்பிள்ளை தேடுற மாதிரியான லெவலுக்கு அந்த அந்தஸ்தோட வந்திட முடியும்னு நினைக்கிறியான்னா?”…

தம்பியின் சொற்கள் மனதைக் கூறு போட்டாலும், புன்னகை மாறாமலே சொன்னான்.

 நான் முயற்சியாவது செஞ்சி பார்க்கறேனேடா 

 நம்மள்ல ரிலேடிவ்ஸ்குள்ள மேரேஜ் செஞ்சுக்கக் கூடாது அதாவது ஞாபகமிருக்கா உனக்கு?”

 அப்படி இருக்கு உண்மைதான். ஆனா நம்ம சர்ச்லயே ரிலேஷன்ல மேரேஜ் செஞ்ச ஒன்றிரண்டு ஃபேமிலிஸ் இருக்கவும் செய்றாங்க, அவங்க வாழ்க்கையும் நல்லாதான் இருக்கு அது உனக்கே தெரியும், சர்ச்ல கூட விசாரிச்சுப் பார்த்தேன். வேற வழி இல்லை உறவில் திருமணம் செஞ்சே ஆகணும் என்கிறப்போ சர்ச்ல ஃபைன் கட்டிட்டு இப்படி மேரேஜ் செய்வாங்களாம்.”

 அதெல்லாம் நல்ல விபரமா தான் இருக்கான்.” கடுப்புடன் முணுமுணுத்தவன் ரூபன் கையிலிருந்த கேமராவை வாங்கி அதிலிருந்த அந்தப் புகைப் படத்தை டெலிட் செய்தான். ரூபனால் அதை வெறுமெனே பார்த்துக் கொண்டு இருக்கத்தான் முடிந்தது.

இதில இன்னொரு விஷயம் இருக்கு நீ யோசிச்சியா?

… சொல்லு…

ஒரு வேளை அனிக்கு வேற யாரையாவது பிடிச்சிருந்தா? இல்லைனா உனக்குப் பொண்ணு கொடுக்க மாட்டேன்னு சொல்லி மாமா அவளுக்கு வேற இடத்துல மாப்பிள்ளைப் பார்த்துட்டா என்ன செய்வ நீ?

ஜீவனுக்கு இந்தக் கேள்விக்கான பதில் மிக முக்கியமாகத் தேவைப் பட்டிருந்தது. வரும் காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அவனுக்கு இருவருமே முக்கியமானவர்கள். யாருக்குமே கெடுதல் நிகழ்ந்து விடக் கூடாதெனத் தவிக்கும் அவனுடைய உள்ளத்திற்கு ரூபனுடைய பதில் சஞ்சலமோ அமைதியோ தரப் போகிறது…

சற்று மௌனத்திற்குப் பிறகு ரூபன் பேச ஆரம்பித்தான்.

 நீ சொல்ற மாதிரி நடந்தா அங்கே நான் சொல்றதுக்கு என்ன இருக்கு ஜீவா…அவ ஒரு தேவதைடா… அவளுக்கு ஏத்தா மாதிரி நல்ல மாப்பிள்ளையா அமையணும்… ம்க்கும்… பேச மக்கர் செய்த குரலைச் சரி செய்து கொண்டான். அப்படி இல்லாம எதுவும் தப்பா தெரிஞ்சா மட்டும் தான் நான் அதில தலையிடுவேன். இல்லன்னா … எனக்கு அங்கே என்ன வேலை?”

வலுக்கட்டாயமாக ரூபன் முகத்தில் கொண்டு வந்த வறண்ட புன்னகையை ஆழமாகப் பார்த்தான் ஜீவன். ஒரு நொடியில் அவன் மனமும் அசைந்தே போய் விட்டிருந்தது.

அப்படின்னா அந்தச் சூழ்நிலை வந்தா நீ வேற யாரையும் மேரேஜ் செஞ்சுப்ப தானே?

தொடர்ந்து எதிர்மறையாகப் பேசிக் கொண்டிருக்கும் தம்பியிடம் எரிச்சல் படாமல் பேசுவது ரூபனுக்கு மிகவும் சிரமமாக இருந்தது.ஒரு நிமிடத்தில் “போடா போய் வேலையைப் பாரு  என்று பொரிந்து விடலாமா என்று தோன்றினாலும் இனிமேல் இங்கே நின்று பேச்சை வளர்ப்பது நல்லதற்கு இல்லை என்று உணர்ந்தவனாக அங்கிருந்து நகர்ந்தான்.

 அதைப் பற்றி எதுக்காகடா இப்ப கேட்டு கிட்டு, அதான் அந்தப் போட்டோ அழிச்சிட் இல்ல, அண்ணா மேரேஜ் வேலை செய்ய வேண்டியது நிறைய இருக்குச் சீக்கிரம் வர்றியா?” என்றவனாக நகர,

அவனைப் பார்த்தபடி நிற்கும் ஜீவனிடம்,

 ஸ்டோரி ஆரம்பிக்கும் முன்னாடி கிளைமேக்ஸ் கேக்கிறவன் நீயாதான்டா இருப்ப… நல்லவனே… எனக்கு அவளை ரொம்பப் பிடிக்கும், அவ அக்கறை, அன்பு, உரிமை எடுத்துக் கிட்டு செய்யுற ஒவ்வொரு விஷயமும் பிடிக்கும். நீ என்ன நினைச்ச அவ அப்பாக்கிட்ட இருக்கிற பணத்துக்காகன்னு நினைச்சியா? எனக்கு எதுக்கு அவரு பணம்? அவ மட்டும் போதும்டா… உனக்குத் தெரியாது நீ அம்மா நிழலில வளர்ந்தவன். ஹாஸ்டல்ல அன்பா பேச யாருமில்லாம, அனாதை மாதிரி நான் கடத்துன நாட்கள் எதுவும் உனக்குத் தெரியவே தெரியாது. தெரியவும் வேண்டாம். என்னைக் கேட்டா அந்த வெறுமையான நாட்கள் யாருக்குமே வேண்டாம்னு தான் சொல்லுவேன்.

காய்ச்சலோ தலைவலியோ கிட்ட இருந்து கவனிக்க யாரும் இருக்க மாட்டாங்க. மனசுக்கு கஷ்டம்னா அம்மா மடியில படுத்து அழ முடியாது. கிட்ட தட்ட ஒரு எந்திரம் போலப் படிப்பு படிப்புன்னு நான் மூழ்கி கிடந்தேன். என்னை மாதிரி பசங்க பலருக்கு அந்தத் தனிமை நிறையத் தப்புச் செய்யக் கத்துக் கொடுத்துருக்கு. ஏனோ எனக்கு அதில எல்லாம் மனசு போகவே இல்லடா. அம்மா அம்மானு மனசு தேடும், ஆனால் லீவுக்கு வீட்டுக்கு வர்றப்போ அம்மா மடியில சாஞ்சிக்க ஆசையா இருந்தாலும் ரொம்பக் கூச்சமா இருக்கும். ஏக்கத்தோடயே லீவு முடிஞ்சி போயிருவேன். பழையபடி அதே தனிமை, வெறுமை…

அனியை பார்த்த பிறகு, அவக் கிட்ட பேசின பிறகு, நீங்க ரெண்டு பேரும் போடுற சண்டை எல்லாம் பார்க்கிறபொழுது தான் நான் ஹாஸ்டல் போய் எதையெல்லாம் இழந்து இருக்கேன்னு எனக்கே புரிஞ்சது.அவ செய்யிறது எல்லாம் பார்த்து நீ கூட அடிக்கடி சலிச்சுக்குவ தெரியுமா? ஆனா அவ இப்படி நம்ம கூடவும் உரிமையா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்னு எனக்கு மனசு ஏங்கும். பிறகு தான் புரிஞ்சது நான் அவளை நேசிக்கிறேன்னு. நீ இத்தனை நேரம் கேட்டியே இப்படி நடந்தா அப்படி நடந்தான்னு ஏண்டா இத்தனை நெகட்டிவான விஷயங்கள் நடக்க வாய்ப்பிருக்குன்னா, நான் ஆசைப் படுற மாதிரி ஒரே ஒரு பாசிட்டிவான விஷயம் நடக்காதா? நான் முயற்சியாவது செஞ்சு பார்க்கிறேனேடா …… 

இப்போது ஜீவனின் கண்களில் நீர் கோர்த்து விட்டிருந்தது.

அப்படி நீ சொல்லுற மாதிரி நடந்தா என்னால வேற யாரையும் லைஃப் பார்ட்னரா எல்லாம் நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது. அதான் நமக்குத் தனியே இருக்கிற பழக்கம் ஏற்கெனவே இருக்கேன்னு சொல்லி அப்படியே இருந்திடுவேன். நீ கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லிட்டேன் இப்போ உனக்குத் திருப்தியா?..

சற்று நேரம் அந்த அறையில் அமைதி சூழ இருவருக்குமே இன்னும் எதுவும் பேச வேண்டும் என்று தோன்றாததால் அமைதியாக அங்கிருந்து நகர்ந்துச் சென்றனர்.

வீட்டிற்குள் வந்த அனிக்கா பெரியவர்கள் முன்னறையில் கதைப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து அளவளாவி விட்டு உள்ளுக்குள் நுழைந்தாள். மற்ற அறைகள் மூடியிருக்க ரூபனின் அறையில் பேச்சுச் சத்தம் கேட்க ஜீவன் அங்கே தான் இருக்கிறான் என அவனை அழைக்க எண்ணி அருகே செல்ல, சாற்றி வைத்திருந்த கதவுக்கு அருகே வந்ததும் உள்ளே நடந்து கொண்டிருக்கும் சம்பாஷனை சற்றுத் தெளிவாகக் கேட்க தொடங்கியது

 எந்த ஃபோட்டோ டா ஜீவா?” ரூபன் கேட்டுக் கொண்டிருந்தான் ஜீவனிடம்.அவள் இல்லாமல் நானாம்

கேட்கிறார்கள் என்னிடம் கேள்வி?

அவள் இல்லாமல் எப்படி

நான் நானாவேன்?

கலை இல்லாத கலைஞனோ?

கல் இல்லாத மண்ணகமோ?

சொல் இல்லாத மானிடமோ?- இல்லை

முள் இல்லாத மலரினமோ?

இல்லா நிலையில்

அவள் இல்லாமல் மட்டும்- எப்படி

நான் நானாவேன்?

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here