1. இந்திரனின் காதலி

0
1519
Indranin Kadhali

அத்தியாயம் 1

அதிகாலை சூரியனின் கிரகணங்கள் பூமியை வெப்பப்படுத்திக் கொண்டிருக்க, அவ்வெப்பத்தால் மேகங்கள் எல்லாம் கண்கள் கூசி, துயில் கலைந்து, தத்தம் பணிக்கு திரும்பிக் கொண்டிருந்தன. குளங்கள் சூழ்ந்த அந்தச் சிறிய கிராமத்தில் அம்மேகங்கள் தத்தமக்குக் குறிக்கப் பட்டிருந்த இடத்தினின்று, சூரிய வெப்பத்தின் உதவியால் குளத்தில் நீர்த்தன்மையை உறிஞ்சி சேகரம் செய்து கொண்டிருந்தன.

அவர்கள் சேகரம் செய்தவற்றை உரிய காலத்தில் அவ்வூர் மக்களுக்கு மழையாகப் பொழிவிப்பதற்கான முன்னேற்பாடாகக் கோடையில் நீர் நிலைகளினின்று நீர்த்தன்மையைச் சேகரிக்கும் கடமை அவர்களுக்குக் கொடுக்கப் பட்டுள்ளதல்லவா?

சட்டென்று வானிலை மாறியது. வானிலை மாறக் காரணமாகிய கருமேகத்தை ‘யாரடா நீ? எவ்வாறடா என்னைக் கேளாமல் பூமியில் மழைப் பொழிய சூல் கொண்டாய்?’ எனக் கோபத்தில் ஆதவன் முறைத்துப் பார்க்க, அவ்வூரின் மலையரசனோ சூல் கொண்ட மேகத்தைப் பொழியச் சொல்லி திடமளித்தது.

‘நான் இருக்கும் போது நீ சூரியனவனுக்குப் பயப்படாதே. நீயும் நானும் நாளும் பொழுதும் இவ்வூரில் நிலையாய் இருப்பவர்கள். சூரியனுக்கென்ன? நிலையற்ற புத்திக் கொண்டவன், மாலை மயங்கியதும், மதி மயங்கியவனாக இவ்விடம் விட்டு நீங்கி நாளை அல்லவா வருவான். சிறிதோ பெரிதோ உன் இஷ்டம் போல நீ மழை பொழிந்து விடு, யார் என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம்?’, எனத் துணை நின்றான்.

குட்டித் தூறலாய் மழைப் பொழிவித்து மக்களை மனமகிழச் செய்ததோடு தன் ஆசையைத் தீர்த்து விட்டு, சூரியனவன் வெம்மையைக் கண்டு பயந்து அடக்க ஒடுக்கமாய் ஓரமாய்ச் சென்று நின்று கொண்டான் அந்த மேகமானவன்.

மேகனூர்மலை எனும் அந்த ஊர் பெயரில் தங்கள் பெயர்கள் இருப்பதாலேயே இந்த மலைக்கும், மேகங்களுக்கும் அவ்வளவு பெருமை. என்னைச் சற்றும் மதிப்பதில்லை என்ற பொருமலோடு, மேகனூர்மலை கிராமத்தின் மேல் முழு வீச்சில் தன் வெப்பத்தோடு எழுந்தான் ஆதவன்.

மேகனூர்மலை இயற்கை சூழ் அழகிய கிராமம். டிஜிட்டல் இந்தியாவில் பல கண்ணாடிக் கட்டடங்கள் வான் தொட்டு நிற்க, இவர்கள் வீடுகளோ இன்னும் ஒரு பெருமழைக்கும் தாங்காத கூரைகளால் வேயப் பட்டிருந்தன. அவர்கள் தங்கள் எளிமையான வாழ்க்கையில் திருப்திக் கொண்ட மக்கள் ஆவர். தங்கள் உழைப்பை வியாபாரிகள் முதல், அரசாங்கம் வரை உரிய மதிப்புக் கொடுக்காமல் புறக்கணித்து, ஏமாற்றி, உறிஞ்சி எடுத்துத் தங்களை எப்போதும் ஏழைகளாக வைத்திருப்பதன் சூட்சுமம் அறியாதவர்கள்.

இலவச மிக்ஸி, கிரைண்டர் எனத் தங்களது வரிப்பணமே தங்களுக்குத் தரம் குறைந்த பொருட்களாகத் தரப்பட்ட போதிலும் அதை அறியாது, இலவசமாய்ப் பெற்றுக் கொண்ட பொருட்களுக்காக இன்னும் தலைவர்களைப் போற்றிப் பாடி புகழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

பல தலைமுறைகளாய் பாடுபட்டு உழைத்தும் இன்னும் கூரை வீடுகளில் தாம் இருக்க, தங்களுக்கான தலைவர்கள் அதுவும் தம் மொழி, இனம் காக்க உழைத்தவர்கள் எவ்வாறு அதே தலைமுறையில் கோடிகளில் புழங்குகிறார்கள் எனும் சூட்சுமம் அறியாதவர்கள்.

சுதந்திர இந்தியாவின் 70 ஆண்டுகளாகியும் தங்கள் வாழ்வில் மட்டும் ஏன் எந்த முன்னேற்றமும் இல்லை? எனும் கேள்விக்குப் பதில் அறியாதவர்கள்.
இந்த மாட்டை வாங்கு, இந்த உரத்தைப் போடு என்று மெத்த படிப்பாளிகளின் தோரணையிலும் பேச்சிலும், வழி நடத்துதலிலும் மயங்கிவிடுவதும், ‘படிச்சவன் பொய் பேச மாட்டான்’ ‘வெள்ளை தோலாய் இருப்பவன் நல்லவன்’, தன்னை விட எதிரில் இருப்பவனே அறிவாளி’ என எண்ணி எண்ணியே தங்கள் அப்பாவித்தனத்தில் நிலத்தைப் பாழாக்கி, வருமானத்தை இழந்து, இழந்தே பழக்கப்பட்ட எளிய உள்ளம் கொண்ட ஏழை மனிதர்கள்.

காலையில் சேவல் குரல் எழுப்பிக் கூவவும், அனைவரும் எழுந்து, காலைக் கடன்களை முடித்து, வயிற்றுக்கு எளிதான உணவு உண்டு, சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். விவசாயமே அவர்களது வாழ்வின் ஆதாரம், அதைத் தவிர்த்து அவர்கள் எதையும் அறியாதவர்கள்.

ஊரில் ஒரு சில படித்த குடும்பங்கள் இருந்தன. நாளா வட்டத்தில் அவர்களும் நகரத்தில் குடியேற பெரும்பாலான விவசாயக் குடிகள் மட்டுமே அங்கு இருந்தனர்.

அந்தக் காலை நேர தூறல் காலை வேலையை இதமாக்க, அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியைக் கொணர்ந்தது. அந்த ஊரிலேயே ஒரே ஒரு வீடு, மச்சு வீடாக இருந்தது. அவ்வீடு பல வருடங்களாகச் சுண்ணாம்பு பூச்சுக் காணாமல் இப்போது இப்போது சற்று களையிழந்து காணப் பட்டது. பின் கட்டில் இருந்த மாடுகளுக்குத் தீவனம் போட்டுவிட்டு, கழனித் தண்ணீரையும் வைத்து விட்டு அவசரமாய்ச் சேலையை இழுத்து செருகிக் கொண்டு வந்தார் குமுதா எனும் அவ்வீட்டின் தலைவி.

ஒரு காலத்தில், அவர்கள் வீடு சில வேலையாட்களோடு புழங்கிக் கொண்டு இருந்தது. அப்போதெல்லாம் குமுதாவிற்கு இத்தனை வேலைகள் இருந்ததில்லை. சமையலும், மாடுகளும் மட்டும் பார்த்துக் கோண்டிருந்த வரையிலும் கூடக் கொஞ்சம் எரிச்சலாகத்தான் அவர் நடந்து கொள்ளுவார்.

இப்போதோ நகரத்துக்குப் படிக்கப் போன மகனும் தகவல் இல்லை என்றாகி, கணவன் பக்கவாதத்தால் முடங்கிப் போய் விட இன்னுமாய்ச் சிடுசிடுப்பவளாக மாறி விட்டிருந்தார் அவர். வயல் வேலைகளைக் கவனிப்பதுவும், இன்னும் பல பலவாய் கணவன் செய்து வந்த கடமைகளை அதிகமாய் இப்போது சுமக்க வேண்டியதாகி விட்டதே?

‘என்ன மனுஷப் பொழைப்பு, ஈனப் பொழப்பு? புலம்பிக் கொண்டே கடுங்காபியை (பால் கலவாத காபி) கணவர் இளம் பரிதி இருந்த சாய்வு இருக்கையின் பக்கம் டக்கெனத் திண்டில் வைத்தார்.

வீட்டில் மாடு இருக்கு, கறக்கிற பாலை எல்லாம் விக்கிறா சரிதான், அதுக்கு வீட்டுல பால் காபி கூடவா போட முடியாது? தன் குரலும் சற்று குளறலாக வருகின்ற இந்தச் சூழ்நிலையில் தான் இந்தக் கேள்வியைக் கேட்டால், மனைவியிடம் இன்னும் பல வசவுகளைக் கேட்க நேரிடும் என்பதாலோ? இல்லை இந்தக் காபியாவது கிடைத்ததே எனும் திருப்தியாலோ நடு நடுங்கும் இடது கரத்தால் சுடும் அந்தக் காபி டம்ளரை எடுத்து வாயில் பொருத்தினார். வாய் கோணிப் போயிருக்க, இவர் காபியை விழுங்கும் முன் கடைவாயிலிருந்து ஒழுகி விட்டிருந்தது.

துணி பாழாகி விட்டதே என்று பதறிக் கொண்டிருந்தவர் கையினின்று காபி டம்ளர் வாங்கப் பட்டது. தண்ணீரால் ஈரமாக இருந்த சுத்தமான துண்டொன்று அவரது வாயை மட்டுமல்லாது முகத்தையும் சுத்தம் செய்தது. அவரின் உடையை மாற்ற உதவி செய்தது. அது வேறு யாருமல்ல இளம் பரிதியின் மகள் எழில் தான். சட்டென்று அங்கிருந்துச் சென்று தம்ளரில் பால் காஃபி கொண்டு வந்து தகப்பனுக்குத் தாயாக மாறி கொஞ்சம் கொஞ்சமாய்ப் புகட்டலானாள்.

ஒருக்காலத்தில் இந்த மகளைப் பொருட்டாய் மதிக்காதவர்தான் அவர் இப்போதுதான் மகளின் அருமை புரிகிறது.

நான் இன்னும் படிக்கணும்பா… கேட்டவளை…

அடச் சீ பொட்டப்புள்ளைக்கு என்ன படிப்பு வேண்டிக் கிடக்கு, நம்ம ஊர்ல பத்தாவது வரை பள்ளிக் கூடம் இருந்துச்சோ, நீ படிச்சியோ… இதுக்கு மேல உன்னை வெளியூருக்கெல்லாம் அனுப்பிப் படிக்க வைக்கிறதா எல்லாம் நான் இல்லை.

முகத்தில் அடித்தார் போலச் சொன்னவர் தானே? அதே நேரம் மகனின் போன் வரவும்,

என்ன ரமேஷ் கண்ணு, பணமா? எம்புட்டு வேணும் கண்ணு, உனக்கில்லாததாய்யா? இதோ இன்னிக்கே போஸ்டு ஆபீசு போயி அனுப்பி வைக்கிறேன்’ என்று கத்தை, கத்தையாய் ரூபாய் தாள்களைத் தன் கால்ச்சட்டைப் பையில் வைத்து, உடனே புறப்பட்டு, மொபெட்டில் கடந்து சென்றவரை அன்று எழில் பேச்சற்றவளாகப் பார்த்திருந்தாளே? …

குமுதாவிற்கு மகள் துணி துவைப்பது, பாத்திரம் துலக்குவது என வீட்டு வேலைகளை எல்லாம் செய்து விட்டு, படிக்கச் சென்றது வரை ஒன்றும் பிரச்சனையில்லை. இப்போது ,படிக்க அவள் பக்கத்து ஊர் சென்றால் வேலைகள் இவர் தலையில் அல்லவா விடியும்? எனவே, மகள் இனி படிக்கப் போவதில்லை எனும் கணவன் பேச்சில் திருப்தி கொண்டார்.

ஏற்கெனவே மிகுந்த அடக்குமுறைகளோடு வளர்ந்ததாலோ என்னவோ, எழிலுக்கு ஆசைப்பட மட்டுமே தனக்கு உரிமை உண்டு, அதை அடைந்து கொள்ள இல்லை என்பது புரிந்தே இருந்தது. அதனால் அவள் வழக்கம் போலத் தன் மனதின் வலியை மறைத்துக் கொண்டு வேலையில் ஆழ்ந்தாள்.

தான் காசு மேல் காசு அனுப்பிப் படிக்க வைத்துக் கொண்டிருந்த மகன் கல்லூரிக்கு செல்வதை நிறுத்தியே ஆண்டுகள் ஆகி விட்டிருந்தது என ஒருவர் மூலமாக அறிந்த பொழுது அதிர்ச்சியில் அவரது அவயங்கள் செயலிழந்திருக்க, இப்போது மனைவியிடம் இடிச்சோறு வாங்கிக் கொண்டு வீட்டில் உள்ள ஆட்டுரல், அம்மி போல அவரும் ஒரு பொருளாய் ஆகிப் போய் விட்டிருந்தார்.

தனக்குச் சேவை செய்யும் மகளைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்… வெளியிலிருந்து குமுதாவின் குரல் ஒலித்தது.
வயலுக்குப் போகணும், இன்னிக்கு அறுவடை இருக்கு, சீக்கிரம் வா எழிலு என்று முன் சென்று விட்டார்.

அப்பாவின் அழுக்குத் துணிகளைக் கிணற்றுப் பக்கமிருந்த கல்லில் போட்டு விட்டு அம்மாவை 19 வயது மகள் எழில் பின் தொடர்ந்தாள்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here