11. இந்திரனின் காதலி

0
858
Indranin Kadhali

அத்தியாயம் 11

இந்திரன் ஊருக்குச் சென்றதும் குமுதா மறுபடியும் மகளை வீட்டிற்குள் அழைத்துக் கொள்ளப் பல முயற்சிகள் செய்தார். அவள் பக்கத்து வீட்டிலேயே இருப்பதை எப்படியாவது தனக்கு உபகாரமாய் மாற்றிக் கோள்ளும் யத்தனம் அவரிடம் இருந்தது. ஆனால், அவள் முன்பை விடத் தெளிவாக இருந்ததால், தன் தாயிடம் அதிகமாய் ஒட்டி உறவாடவில்லை.

பெற்றெடுத்த தாயாக இருந்து கொண்டு, தன்னை ஒரு குணக்கேடானவனுக்குக் கட்டிக் கொடுக்கப் பார்த்த அவளது சுயநலத்தை அவள் மன்னிக்கத் தயாரில்லை. வழக்கம் போலத் தந்தைக்குச் சாப்பாடு கொடுக்கப் போய் வருவாள், கவனித்துக் கொள்வாள்.

அவ்வப்போது தாயின் வீட்டில் சில கூச்சல்கள் கேட்பதுண்டு. வெகு நாட்களாக, ஏன் ராசு தன் வாயிலில் வந்து நிற்கும் வரையிலும் கூட அதன் காரணம் என்னவென்று புரியாதவளாகத்தான் இருந்தாள்.

அன்று மடமடவென்று அவர்கள் வீட்டுக் கேட் கதவை தட்டும் சப்தம் கேட்டது. தபால் வழியில் படிப்பை தொடர்ந்தாலும், தனியாகத் தானே இருக்கிறோம் என்று நேரப் போக்கிற்காக அவள் சில சேவல் மற்றும் கோழிகளை வளர்த்துக் கொண்டிருந்தாள். பின் வாசலில் பெரிய கூடை ஒன்றில் அவற்றை அடைத்துக் கொண்டு இருந்த போதுதான் அந்தச் சப்தம் கேட்டது.

என்னவோ? ஏதோவென அலைய குலைய ஓடி வந்தால், கதவை திறக்கும் முன்பே ராசு அவள் வாயிலில் நின்று கத்திக் கொண்டு இருந்ததைக் கேட்க நேர்ந்தது. கதவை திறக்கும் முன்பாக வீட்டினுள்ளே சென்று அவசரமாகச் செய்ய வேண்டிய சில வேலைகளைச் செய்து விட்டு வாயிலுக்குச் சென்று நிதானமாகக் கதவை திறந்தாள் ஆனால், கேட்டை இன்னும் திறக்கவில்லை. அந்தப் பக்கம் ராசு நின்றிருக்க, இவள் அங்குச் செல்ல அவசரம் காட்டவில்லை.

எளிமையாகச் சேலை அணிந்து, நெற்றி வகுட்டில் குங்குமம் தரித்து, சேலையின் முந்தியை இழுத்து முன்னால் சொருகிக் கொண்டு வந்தவள் முன்னிலும் அழகு மிகுந்தவளாக ஐந்தடி அப்சரஸ் போல வருவதைப் பார்த்த ராசுவுக்கு ஆத்திரம் தலைக்கேறியது.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே எனும் பல நாள் திட்டம் தோல்வி அடைந்ததன் அவன் ஏமாற்றம் கோபமாக வெளிப்பட்டது.

ஏ புள்ள, என்ன உன் ஆத்தா ரூபா கொடுக்காம டிமிக்கி கொடுக்கப் பார்க்குறவ, மரியாதையா என் கிட்ட வாங்கின பத்தாயிரம் ரூபாய எடுத்து வைக்கச் சொல்லு. என்னைப் பார்த்தா உங்களுக்கெல்லாம் கேனையனா தெரியுதா? இன்னும் ரெண்டு நாள் தரேன் வாங்கின ரூபா ஒன்னு விடாம தரலை அப்புறம் பொம்பளைங்க ரெண்டு பேரும் அசிங்கப் பட்டு போவீங்க… கத்திப் பேசினான்.

மானம் மருவாத கெட்டுப் போயிரும் பார்த்துக்க, ரெண்டு பேரையும் மானபங்கப் படுத்தித் தெரு தெருவா இழுத்துட்டு போகலை நான் ராசு இல்லை… அவனது மீசை துடித்தது.

நிதானமாகச் சற்றுத் தள்ளி தன் கைகளைப் பிசைந்து கொண்டு நிற்கும் தாயை பார்த்தாள். அவரோ அவமானத்தில் தலைக் குனிந்து நின்றிருந்தார்.

எழில் ஒன்றையும் பேசாமல் நிற்க, ஆத்திரம் தூண்டப்பட்டவனாய் அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் திட்டினான். வெட்டிவிடுவேன், கொன்று விடுவேன் என்றான். வீட்டில் எதிர்த்து நிற்க ஆண் துணை இல்லாதவர்கள் தானே, நிம்மதியாய் இந்த ஊரில் இருக்க உங்களை விடுவேனா என்ன? எனக் கொக்கரித்துக் கொண்டு இருக்கையிலேயே அவனைப் பின்னாலிருந்து ஒருவர் அழைக்கத் திரும்பினான்.

அங்கோ அவன் பின்னே மகளிர் போலீஸ் நின்றுக் கொண்டிருந்தார்.லத்தியால் அவனை என்னவென்று விசாரித்துக் கொண்டிருந்தார்.

மகளிர் காவல் நிலையம்

அதெல்லாம் ஒன்னுமில்ல மேடம், அவங்க எனக்கு நல்லா தெரிஞ்சவங்கதான் சும்மா ஒரு சின்னச் சண்டை… இதுக்கெல்லாம் எதுக்குப் போலீஸ்? அந்த எழில் பொண்ணு தெரியாம உங்களுக்குத் தகவல் சொல்லி விட்டிருக்கு போல… சிரித்துச் சமாளித்துப் பார்த்தான் ராசு.

அப்படித் தெரியலியே? தன் மொபைலில் இருந்த அந்த வீடியோவை மறுபடி ஓட்டிப் பார்த்தார். அவன் சொன்னது ஒவ்வொன்றும் அட்சர சுத்தமாக அதில் கேட்டுக் கொண்டிருந்தது.எவ்வளவு அசிங்கமா பேசியிருக்க நீ கர்ஜித்தார் அந்தப் பெண் போலீஸ்.

முன்னே எல்லாம் அப்பிராணி மாதிரி இருக்கும் அந்தப் பொண்ணு… அது என்னவெல்லாம் செஞ்சு வச்சிருக்கு? எப்ப வீடியோ எடுத்தான்னே தெரியலியே? இனி கொஞ்சம் ஜாக்கிரதையாதான் இருக்கணும் போலிருக்கு… ராசுவுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது.

ஒரு வழியாகக் காவல் நிலையத்தில் பேச்சு வார்த்தை ஆரம்பித்தது. எழிலுக்கும் அவனுக்கும் திருமணம் ஆக இருந்ததாக எல்லாம் அவர்கள் அங்கே சொல்லிக் கொள்ளவில்லை. வசந்தி சற்று நேரம் கழித்து ராசுவுக்குத் துணையாக ஓடோடி வந்திருந்தாள். குமுதாவையும் எழிலரசியையும் பார்த்துக் கோபத்தில் முணுமுணுக்கவும் தவறவில்லை. அவரவர்க்கு அவரவர் நியாயம்.

குமுதாவுக்கோ தன் மகளுடனான ராசுவின் திருமணம் தடைப்பட்டதே அவனால்தான் என்றிருக்க, திருமணச் செலவிற்காக வாங்கிய பணத்தை எதற்காகத் திருப்பிக் கொடுக்க வேண்டும்? எனும் இறுமாப்பு இருந்தது.

கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்கிறது தப்பா மேடம்? அதைக் கேட்டதுக்குப் போயி இந்த அம்மாவும் பொண்ணும் போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்காங்க. சுத்து வட்டாரத்துல என் வீட்டுக்காரர் மட்டும் இல்லைன்னா விவசாயம் செஞ்சதை செய்ய விக்க முடியாம எல்லாரும் பசியால சாக வேண்டியதுதான். நல்லது செய்யற மனுசனை மதிக்காம நடந்துக்கிறதைப் பாருங்களேன் … சட்டம் பொதுவானதுதானே. இவங்களுக்கு மட்டும் இல்ல எங்களுக்கும் தான் இந்தச் சட்டம். நானும் பிராது கொடுக்கிறேன் மேடம். என் ஊட்டுக்காரர் கொடுத்த பணத்தைத் தராம இந்தப் பொம்பளை அழும்பு பண்ணுது. என்னன்னு கேளுங்க…

அடைமழையாய் பொழிந்தாள் வசந்தா.

எதையோ சொல்ல குமுதா வாய் திறக்கும் முன்னதாக எழில் முந்திக் கொண்டாள்.

விவசாயம் செய்யறதுக்கு அம்மா கடன் வாங்கிருப்பாங்க போல மேடம். இனிமே அடுத்த அறுப்புக்குப் பிறகுதான் பணம் கையில வரும். அதுக்குள்ள பணம் வேணும்னா மாசம் மாசம் கொஞ்சம் கொஞ்சமா திருப்பித் தந்துடறோம். அதுக்குச் சம்மதமான்னு கேளுங்க. அதுவும் இந்த ஆள் எங்க வீட்டுப் பக்கம் வரவே கூடாது. இவங்க கையில தான் கொடுப்போம் சரிப்பட்டு வருமான்னு பாருங்க…

தன் முன் கதையை, அதாவது தனக்கும் ராசுவுக்கும் திருமணம் செய்ய உத்தேசித்து இருந்தது குறித்து மறுபடி யாரும் பேசுவதையும் எழிலரசி விருப்பப் படவில்லை. இந்திரனின் மனைவியாய், காதலியாய் வாழ்கின்றவளுக்கு இன்னொருவனோடு கூடத் தன் பெயர் இழுபடுவது இழுக்காகத் தோன்றிற்று. தாய் பணத்தைக் கொடுக்காவிட்டாலும் எப்படியாவது இந்திரன் தரும் பணத்தில் மிச்சம் பிடித்துக் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பணத்தைத் திருப்பிச் செலுத்தி விடலாம் என்று திட்டமிட்டாள்.

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here