12. இந்திரனின் காதலி

0
862
Indranin Kadhali

அத்தியாயம் 12

எதிர்பாராத கணவன் வருகையில் பூரித்திருந்தாள் எழிலரசி.

அக்கம் பக்கம் இருந்த சின்னஞ்சிறார்கள் அவளிடம் பாடம் கற்க வருவதுண்டு. தனிமைக்குத் துணையுமாயிற்று, நேரப் போக்கு கூடவே இதற்கெனத் தனியாகக் கற்காமலேயே கூட, பாடம் கற்றுக் கொடுத்ததால் கிடைத்த டீச்சர் எனும் பெருமைக்குரிய அழைப்பு என அதில் அவளுக்குப் பல இலாபங்கள் இருந்தன.

சாயங்கால நேரம் தனது பாடப் புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தவள் வாசலில் நிழலாடவே, யாரோ குழந்தையை அழைத்துச் செல்ல வந்திருப்பார் போல என அசுவாரஸ்யமாய் எட்டிப் பார்க்க, அவளை அணு அணுவாய் இரசித்த வண்ணம் எதிரில் இந்திரன் நின்று கொண்டிருந்தான். அவன் முகத்தில் மந்தகாச புன்னகை வேறு.

டீச்சர் அக்கா, டீச்சர் அக்கா உங்க வீட்டு மாமா வந்திருக்காங்க…

வெள்ளந்தியாய் அவளுக்குத் தகவல் சொல்லின குழந்தைகள்.

அப்படின்னா நாங்க வீட்டுக்கு போகட்டுமா?

கிடைத்தது வாய்ப்பென்று பையை எடுத்துக் கொண்டு கிளம்பியது ஒரு வாண்டு, மெதுவாக ஒவ்வொருவராகப் புறப்படும் ஆயத்தத்தில் இருக்க,
சரி எல்லோரும் போயிட்டு நாளைக்கு வாங்க என்றாள் முறுவலோடு.

வாசலில் வேரோடியவனை ‘அத்தான் உள்ளே வாங்க’ அவனை இழுத்தாள்.

அவன் சிரிப்பை அடக்கிக் கொண்டு இருந்ததைப் பார்த்து முறைத்தாள்.

இப்ப என்ன உங்களுக்கு என்னைப் பார்த்தா ஜோக்காவா இருக்குது? கையில் இருந்த பையைப் பிடுங்கினாள்.

உனக்கு ஒன்னும் வாங்கிட்டு வரலை, எல்லாம் அழுக்குத்துணிதான் சீண்டினான்.

நீங்க வந்ததே போதும், வேறென்ன வேணும். பொறுங்க வெந்நீர் வைக்கிறேன். குளிச்சிட்டு சாப்பிடலாம்… சுறுசுறுப்பாய் செயல்பட்டாள்.

சமையலறையில் நின்றிருந்தவள் முதுகோடு சாய்ந்து, அவள் இடுப்பைக் கட்டிக் கொண்டு, அவள் கழுத்தோடு, தன் கழுத்தைச் சேர்த்து இறுகிக் கொண்டான்.

நம்ம வீடு இன்னிக்கு மாதிரி, அதாவது நான் வீட்டுக்கு வர்றப்ப நீ அந்தக் குட்டிக் குழந்தைங்க எல்லாம் இருந்தது. என்னை வான்னு கூப்பிடறதுக்கு ஒருத்தி இருக்கிறான்னு தோணினது… இப்படிலாம் உயிர்ப்பா இருந்து எவ்வளவு வருசமாச்சு தெரியுமா எழில்?

நின்றவண்ணமே அவள் கன்னத்தில் முத்தமிட்டான். வாகாக அவளும் அவன் மார்பில் அவளும் சாய்ந்து கொண்டான்.

உங்களுக்கு வேணும்னா இதெல்லாம் உயிர்ப்பா தெரியலாம் அத்தான். ஆனால், எனக்கென்னவே நீங்க என் பக்கத்தில இல்லாவிட்டால் வெறுமையா தான் இருக்குது.

ம்ம்… பதில் சொல்லாமல் ஆமோதித்தான்.

குளித்து வரும் முன் அவனுக்காக அவசரமாய்ச் சமைத்து முடித்திருந்தாள்.
அதுதான் சாயங்காலம் ஆச்சுதே எழில், எதுக்கு அவசரமாய்ச் சமைச்சுக்கிட்டு… நான் இராத்திரியே சாப்பிட்டிருப்பேன்.

அதெல்லாம் பரவாயில்லை, உங்களுக்குப் பசிக்கும்ல… இன்னிக்கு ஒரு நாள் நேரம் சீக்கிரம் சாப்பிட்டா ஒன்னும் தப்பில்ல… பறிமாறினாள்.

அவன் வந்தது இப்போது ஊருக்கே தெரிந்திருக்கும். சம்பிரதாயத்திற்காவது அக்கம் பக்கம் சொந்தங்களைச் சந்திக்கச் செல்ல வேண்டியது இருந்தது.

சாப்பிட்டதும் செல்ல வேண்டிய இடமெல்லாம் சென்று விட்டு, பக்கத்து வீட்டில் இருந்தாலும் மரியாதைக்காக எழிலின் தாயையும் தகப்பனையும் பார்த்து திரும்பினார்கள்.

மறுபடி இரவில் அவர்கள் இருவரின் தனிமை நேரம், பின் வாசல் திட்டில் அமர்ந்திருந்தனர். இருவரின் முடிகளும் சிலுசிலுவென்ற காற்றில் படபடத்தன. அவன் தலைமுடியை அவள் விரல்களால் கோதி விட்டாள்.

அவனோ அவள் கையில் தன் தலையைக் குனிந்து கொடுத்த வண்ணம் அமர்ந்திருந்தான்.

திடீரென அவன் முடியை பிடித்த பிடி இறுகியது. அப்படியே சற்று ஆட்டினாள்…

ஏய் என்னடி? என் குடுமி உன் கையிலன்னு சிம்பாலிக்கா சொல்லுறியா? சிரித்தான்.

அது எப்போவும் என் கையிலதான், அதைப் பத்தி புதுசா என்ன இருக்கு? எனக் கேள்வியெழுப்பினாள்.

சரிங்க மேடம், இப்ப என்னத்துக்கு என் தலையை உலுக்கி என்னோட மூளையை இடம் மாத்துறீங்கன்னு சொல்ல முடியுமா?

சொல்லுறேன் சொல்லுறேன், முடியை விட்டவள் மறுபடி கையால் சரி செய்து விட்டாள்.

அதென்ன வந்ததும் வராததுமா, வாசல்ல நின்னுக்கிட்டு என்னைப் பார்த்து நக்கல் சிரிப்பு…ம்ம்

வேறென்ன என் காதலியை ரசிச்சுப் பார்த்தேன்….

இங்க பாருங்க உங்க சேட்டை எல்லாம் எனக்குத் தெரியும், சும்மா பொய் சொல்லக் கூடாது… மிரட்டினாள்.

அதில்லடி இந்திரனோட காதலியா இருன்னு தானே சொல்லிட்டு வந்தோம். இவ என்னன்னா ஜான்சிராணி லட்சுமி பாயா மாறிட்டாளேன்னு நினைச்சேன் பகபகவெனச் சிரித்தான்.ஊரெல்லாம் நீ போலீஸ் அழைச்சுட்டு வந்த கதை கேட்டு அதிர்ந்துட்டாம்ல?

ராசுவை ஒருவழி பண்ணிட்ட போலிருக்கு…

ஓஓ அதுவா… பின்ன நம்ம வாசல்ல வந்து கத்தினா சும்மா விட முடியுமா?

நான் யார் வீட்டு மருமக? அத்தையும் மாமாவும் இருந்தப்ப என்ன மரியாதையா இருந்துச்சோ அந்த மரியாதைக்குக் களங்கம் வர வைக்க முடியாதில்ல அத்தான்.

தாய் தகப்பனை நினைவு கூர்ந்ததும் அவன் முகம் கனிந்தது.

அதனாலத்தான் முதல்ல தாத்தாக்கு போன் போட்டுப் போலீஸ் அழைச்சுட்டு வரச் சொல்லிட்டு, மொபைல் கேமரா ஆன் செஞ்சு வச்சேன். அந்த ஆளுக்கு ரொம்பத் திமிர் அத்தான் ….இப்பொழுது படபடவெனப் பேசியவளின் முடியை சீர் செய்வது அவன் வேலையாக இருந்தது. தொடர்ந்து கோபத்தில் பேசிக் கொண்டிருந்தவள்…

…ஆவேசத்தில் கணவன் முகம் முன்பாக விரலை நீட்டியவளாகக்

‘உங்களுக்கு நான் செஞ்சது தப்புன்னு தோணுதா?’

எனக் கேட்டாள்.விட்டால் தன் கண்ணைக் குத்தி விடுவாளோ? எனும் பயத்தில் அவள் விரலை எட்டிப் பிடித்துக் கைக்குள் பதுக்கிக் கொண்டான் இந்திரன்.

நீ செஞ்சது தப்புன்னு நான் சொன்னேனா? அதுக்கு ஏன்டி நீ என் கண்ணக் குத்த பார்க்கிற? சீண்டினான்.

ஹி ஹி அசடு வழிந்தவள். பின்ன என்ன? நீங்க தானே என்னைக் கிண்டல் செஞ்சீங்க அத்தான் சிணுங்கினாள்.

புள்ள பூச்சி மாதிரி இருந்திட்டு பெரிய புள்ள மாதிரி வேலை செஞ்சா ஆச்சரியமா இருக்காதா? அதான் சொன்னேன். உன்னைக் கிண்டல் செய்யலடி. ஆச்சரியப் பட்டேன்.

ம்ம்… அவன் அம்மாவையும் என்னையும் பார்த்து வீட்டில ஆண் துணை இல்லாத பொம்பளைதானே?ன்னு கேட்டான் அத்தான் அதான் எனக்கு ரொம்பக் கோபம் வந்திருச்சு.பொம்பளை என்ன செய்வான்னு அவனுக்குக் காட்டணுமில்ல…

பற்றிய விரலை முத்தமிட்டான் அவன்.

சரியாதான் செஞ்சிருக்க …முன்ன அடங்கி ஒடுங்கி தன்னம்பிக்கையே இல்லாம இருப்பியா. ஏதாச்சும் பிரச்சனை வந்ததுனா எப்படிச் சமாளிப்பியோன்னு எனக்குக் கொஞ்சம் பயம் தான். ஆனால், இப்ப தைரியமா இருக்கு. கொஞ்ச நாளைக்கு நம்ம ஊர் பக்கம் போஸ்டிங் கிடைக்கிறது கஷ்டம் தான் எழில்.சீக்கிரமே இந்தப் பக்கம் வர முயற்சி செய்யறேன் சரியா?

ம்ம்… கணவன் சொன்னதில் அவளுக்கு நிறைவு ஏற்படாவிடினும் முனகினாள்

அத்தான் ஒரு விஷயம் சொல்லணும்.

…சொல்லு

உங்களைக் கேட்காமலே கூட மாசம் மாசம் அம்மா கடன் வாங்கின பணத்தைக் கொஞ்சம் கொஞ்சமா கொடுத்திடலாம்னு சொல்லிட்டேன்.

…எப்படி கொடுக்கிறதா உத்தேசம்?

அத்தான் உங்களுக்குக் கோபமா?

இல்லடா சும்மா தெரிஞ்சுக்கக் கேட்டேன்…

நீங்க தர்ற ரூபாய்ல மிச்சப்படுத்தி மாசம் மாசம் கொடுத்திட நினைச்சிருக்கேன்.

ஓஓ…

நீ நான் கொடுக்கிற பணத்தில மிச்சம்லாம் படுத்த வேணாம்… கஞ்சத்தனம் இல்லாம நல்லா சாப்பிட்டு, உடுத்து இரு சரியா? நானே அந்த ரூபாயை ராசுவைப் பார்த்து கொடுத்திடறேன். இன்னொரு முறை என் வாசலுக்கு வரக் கூடாதுன்னு அந்த மனுசனுக்கு எச்சரிக்கை கொடுக்கவும் போக வேண்டி இருக்கே.

ம்ம்…

என்னாச்சு?

என்னால உங்களுக்கு வீண் செலவு…

ச்சேச்சே… அதெல்லாம் ஒண்ணுமில்ல…விடு

தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க இரவு இனிமையாகத் தேய்ந்து கொண்டிருந்தது.

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here