13. இந்திரனின் காதலி

0
1141
Indranin Kadhali

அத்தியாயம் 13

அந்த ஊரில் வந்த பெரிய வண்டியை எல்லோரும் வந்து எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தனர். சமீப காலத்தில் அவ்வளவு பெரிய வண்டியை அவர்கள் பார்த்ததில்லை.

குமுதா பரபரவெனப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். முன் தினம் ராசுவை தங்கள் வீட்டிற்கு அழைத்து, வாங்கிய ரூபாயை தன் கையாலேயே திரும்பக் கொடுக்க வைத்த இந்திரனை நினைத்துப் பார்த்தபோது அவருக்கு ஒரு ஓரத்தில் குற்ற உணர்ச்சியாக இருந்தாலும் கூடப் பெருமிதமாக இருந்தது. நான் இந்தப் பணத்தை அடுத்த அறுப்பில் திருப்பித் தந்திடுவேன் மாப்பிள்ளை என்றவருக்கு அலட்டாமல் தலையசைத்துப் புன்னகைத்திருந்தான் இந்திரன்.

இப்போது இளம் பரிதியின் சிகிட்சைக்காக இந்திரன் நகரத்திலுள்ள பெரிய மருத்துவமனையில் ஏற்பாடு செய்திருந்தான். அவரை அழைத்துச் செல்வதற்காகவே வசதியான வண்டி ஒன்றை வாடகைக்கு அமர்த்தி இருந்தான்.

இளம்பரிதிக்கு தன் வாழ்க்கை மீண்டும் மலரப் போகின்றதா? எனும் உணர்வே தன்னம்பிக்கை உண்டாயிற்று. அந்தக் குடும்பத்தின் சிறு ஒளிச் சுடரை இந்திரன் தூண்டி விட்டிருந்தான்.

கணவனின் செய்கையில் பூரிப்பில் அங்கும் இங்குமாய் எழிலரசி தேவையான பொருட்களை எடுத்து வைக்கச் சுழன்றுக் கொண்டிருந்தாள். வழக்கமான உடையென்று இல்லாமல் நல்லதொரு சேலை எடுத்து, அதனைத் திருத்தமாய் அணிந்து நின்றதில், கடந்த சில மாதங்களாக அவள் வாழ்ந்த பாதுகாப்பான, நிறைவான வாழ்வில் அவளது முகத்தின் தேஜஸீம் அழகும் கூடி விட்டிருந்ததைத் தெளிவாகக் காண முடிந்தது.

அத்தனை பரபரப்பிலும் அவ்வப்போது இந்திரனைப் பார்த்து முகமலர்ச்சியாய் அவள் புன்னகைப்பதையும் நிறுத்தவில்லை. முன் தினம் இரவு கூட விபரம் சொல்லி இராதவன், காலையில் தான் தன்னுடைய ஏற்பாடுகளை அவளிடம் கூறியிருந்தான்.

அவள் தன்னை அடிக்கடி பார்த்துப் புன்னகைப் பூத்து நிற்பதைக் கண்ட இந்திரனுக்கு எழிலின் மகிழ்ச்சிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்றிற்று.

மருத்துவமனை சென்றதும் முதலில் ஒரிரு நாட்கள் உள்ளிருப்பு நோயாளியாக இளம்பரிதியை கண்காணிப்பில் வைத்திருந்து சில சிகிச்சைகளை ஆரம்பித்து இருந்தார்கள். அங்கிருந்தே பிசியோ தெரபிஸ்ட் அவரது உடல் நிலைக்கேற்ப பயிற்சிகளையும், சில சிகிச்சைகளையும் ஆரம்பித்தார்.

அதன் பின்னர்த் தினமும் அவருக்குப் பிசியோ தெரபி சிகிச்சைகள் ஆரம்பித்தன. சில நாட்கள் தினம் தோறும் சிகிச்சைக்குச் செல்ல வேண்டி இருந்ததால், தினம் தினம் ஊருக்குப் போய்த் திரும்பி வருவது சாத்தியம் இல்லையென்று அங்கேயே தங்க இந்திரன் அவர்களுக்கு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொடுத்தான்.

தேவையான துணிமணிகளை, சமைக்கத் தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுப்பதற்காக எழிலை தன்னோடு ஊருக்கு அழைத்துச் சென்றான். அத்தனையும் சில நாட்களுக்குள்ளாக ஏற்பாடு செய்து விட்டு, எழிலையும் பெரியவர்களுக்குத் துணையாக விட்டு விட்டு, தன் விடுப்பு முடிந்ததென்று நாக்பூருக்கு விடைப் பெற்றுச் சென்றான்.

ஒவ்வொரு நாட்களாகக் கடந்து தற்போது மாதம் முடிந்து விட்டிருந்தது.

நடை பழகும் குழந்தைப் போல இளம்பரிதி ஊன்றுக் கோலின் உதவியால் தட்டுத் தடுமாறி நடைப் பயில ஆரம்பித்திருந்தார். அவருக்குப் பேச்சு சரிவருவதற்கான ஸ்பீச் தெரப்பியும் கொடுத்து இருந்ததால் குளறிக் கொண்டு பேசினாலும் இப்போது அவர் பேசுவது கொஞ்சம் புரிய ஆரம்பித்து இருந்தது.

ஊரில் உள்ள ஆடு, மாடுகளைக் கவனிக்க, வயல் வேலைகளைக் கவனிக்க இந்திரன் நம்பிக்கையான ஆட்களை நியமித்து இருந்தான்.

குமுதாவிற்கு அலைபேசி ஒன்று வாங்கிக் கொடுத்து இருக்கத் தினமும் அவர் ஊருக்குப் பேசி நிலவரத்தை அறிந்து கொண்டு இருந்தார். கணவன் உடல் நலம் கொஞ்சம் கொஞ்சமாகத் தேறத் தேற குமுதாவின் உள்ளம் அமைதி அடைந்தது. அவருடைய மனக்கலக்கங்கள், பாதுகாப்பின்மை சற்று தூர விலகி இருந்தது.

தான் மகளுக்காகச் செய்ய நினைத்தவை அந்நேரம் சரியாகத் தோன்றி இருந்தாலும் கூட அதன் பின்னர் ராசு செய்த பிரச்சனைகளைப் பார்த்த போது, அதுவும் அவனுடைய மறைந்திருந்த உண்மையான சுயரூபத்தைப் பார்த்திருந்த போது அதிர்ந்து விட்டிருந்தார்.

தப்பித்தது மகள் மட்டுமல்ல அவரது ஒட்டு மொத்த குடும்பமும் தான் எனப் புரிய வந்தது, சிலருக்கு பட்டால் தான் புரியும், இவருக்கு இப்போதாவது புரிந்ததே என ஆசுவாசப் பட்டுக் கொள்ள வேண்டியது தான்.

தற்போது மனம் வருந்தி, திருந்தியவராக மகளை நெருங்க எண்ணினார் குமுதா. ஆனால்,எழிலோ தன் அம்மாவை விட்டு இரெண்டு எட்டுகள் தூரம் நிற்கவே விரும்பினாள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவள் இந்திரனுடன் அலைபேசியில் பேசிக் கொண்டிருக்கக் குமுதா தானாகவே கணவன் மேல் கவனிப்பை செலுத்த ஆரம்பித்தார்.

‘போடீ எனக்கும் என் புருசன் இருக்கார், அவர் கிட்டேயும் நாங்க பேசுவோம், ரொம்பக் கெத்து காண்பிக்காதே’ என்பது போல அவரது செயல் இருக்கும்.

அவரை பார்த்தும் பாராதது போல எழில் இருந்து கொள்வாள். அம்மா அப்பாவை கவனிக்க, அவளுக்கோ வெளிவேலைகளைக் கவனிக்கவே சரியாக இருக்கும்.

பன்னிரெண்டாவது பரீட்சைகளுக்காகத் தினமும் படிப்பதையும் அவள் நிறுத்தி வைக்கவில்லை. அவளது படிப்பிற்கு உதவும் என்று மடிக்கணினியும் கூடவே இணையத் தொடர்புக்கான கருவியும் இந்திரன் வாங்கிக் கொடுத்து இருந்தான்.

ஒரு மாதமளவும் ட்யூசன் செல்லாவிட்டாலும் பாடப் புத்தகங்களைக் கையோடு கொண்டு வந்திருந்ததால் எழில் தனியாக அமர்ந்து படித்துக் கொண்டிருப்பாள்.

அவள் ஆர்வத்தோடு கற்பதைப் பார்க்கும் இளம்பரிதிக்கு மனதில் குற்ற உணர்ச்சி எழுந்தது. மகனுக்கும், மகளுக்கும் இடையே தான் காட்டிய வேறுபாடு தற்போது உறுத்தியது. மகளுக்குத் தேவையான கல்வி வழங்காதது தவறாகப் பட்டது.

அடுத்து மருமகன் இந்திரன் குறித்து யோசிக்கலானார். தனக்காக இந்திரன் செய்தவைகள், அதற்காக அவர் என்ன நன்றி சொன்னாலும் தகும். அவருக்காக அவர் குடும்பத்திற்காக அவன் செய்து வரும் பண உதவிகளை அவர் இன்று இல்லாவிட்டாலும் என்றேனும் ஒரு நாள் திரும்பி கொடுத்து விட முடியும். ஆனால், உரிய நேரத்தில் அவன் செய்த அக்கறையான செயல்கள். தாய் தகப்பனுக்கான உதவியைச் செய்ய வேண்டிய ரமேஷ் செய்ய வேண்டிய பொறுப்புக்களை அல்லவா அவன் செய்திருக்கிறான்? இந்த நன்றி கடனை எவ்வாறு அடைப்பது?

மகனை எண்ணிய போதே அவருக்கு நெஞ்சை அடைத்தது. எந்த மாதிரி பாசம் காட்டி வளர்த்திருந்த மகன் அவனை நினைக்கையிலேயே பெருமூச்செழுந்தது. ஆனால் பெற்றவர்கள் குழந்தைகளை ஒரு நாளும் மறப்பதுண்டோ?

இளம்பரிதிக்கான சிகிச்சை எதிர்பார்த்த ஒரு மாதம் கடந்து ஒன்றரை மாதங்களாகி இருந்தன. ஆனால், அவரது உடல் நலனில் பெரிதான மாற்றங்கள் இருந்தன. இப்போது தன் ஊன்று கோலின் உதவியோடு மெதுவாக என்றாலும் தானாகவே தன் தேவைகளைக் கவனிக்குமளவு இளம்பரிதி தேறி இருந்தார்.

படுக்கையிலும், இருக்கையிலும் தன் வாழ்நாளெல்லாம் கழிந்து விடுமோவென அஞ்சி இருந்தவருக்கு, அதிலிருந்து மீள வாய்ப்புக் கிடைத்தால் விடுவாரா? என்ன? இரெண்டு வருடங்களாக நோயின் தாக்கத்தில் இருந்தவர் தற்போது நலம் பெற காட்டிய முனைப்பு மருத்துவர்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டது.

இனி பிசியோ தெரப்பி மட்டும் வாரத்தின் இரு நாட்கள் எடுத்துக் கொண்டால் போதும், வீட்டிலேயே செய்யக் கூடிய சில உடற்பயிற்சிகளைச் செய்விக்குமாறு குமுதாவுக்குக் கற்றுக் கொடுத்து இருந்தனர்.

ஊர் திரும்பும் நாள் இன்று, இந்திரன் தான் வந்து அழைத்துச் செல்வதாகக் கூறி இருந்தான். அவனுக்காகக் குடும்பமே வழி மேல் விழி வைத்துக் காத்துக் கொண்டு இருந்தது.

வழக்கமாக அலைபேசியில் விபரங்கள் தெரிவிப்பவன் எழிலுக்கு இரண்டு நாட்களாகப் பேசவே இல்லை என்பது குழப்பமாக இருந்தது.

இந்திரனால் எதையும் மனைவியிடம் மறைக்க முடிவதில்லை. அதனால் மறைக்க வேண்டிய எதுவாகிலும் இருந்தால் அவளுக்கு அழைக்காமல் இருந்து விடுவான், அவள் அழைத்தாலும் அழைப்பை ஏற்காமல் தான் அப்புறம் அழைப்பதாக மெசேஜ் அனுப்பி விட்டு இருந்து விடுவான்.அவளது இருபதாவது பிறந்த நாளுக்கு முன்பும் இப்படித்தான் இரு நாட்கள் பேசாமல் இருந்து சட்டென்று வீட்டிற்கு வந்து வியப்பளித்து இருந்தான்.

ஏற்கெனவே சில முறைகள் கணவன் செய்கையைக் கண்டிருந்தவள் இப்போதும் அவன் செய்கையால் கோபம் கொண்டிருந்தாள். அவளது கோபம் மகிழ்ச்சியாக மாறப் போகின்றது என்பது அப்போது அவளுக்குப் புரிய வாய்ப்பில்லை.

வாசலில் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டது. ஆர்வமாய் வாயிலில் சென்று நின்றவள் அசையாது உறைந்து விட்டாள். அவளைப் பின்பற்றி வந்த குமுதாவோ கேவலோடு உள்ளே சென்று குமுறி அழ ஆரம்பித்து விட்டார்.

மனைவியின் அழுகையின் காரணம் புரியாமல் தன் கைத்தடியின் பலத்தில் மெதுவாக வாசல் வரைக்கும் வந்து நின்றவர் மகளைப் போலவே செயலறியாது நின்று விட்டார். அவரது கண்களுக்கெதிரே தயக்கமாய் வாயில் வரை வந்து நின்று கொண்டிருந்த மகன் ரமேஷ் தென்பட்டான்.

முன்னிலும் கருப்பாகி மெலிந்து விட்டிருந்தான். முகத்தில் சோர்வும், களைப்பும் அவமான உணர்வும் இருக்கத் தலை குனிந்து நின்றான்.

‘வா மச்சான் உள்ளே வா’

அவனை உள்ளறைக்கு அழைத்துச் சென்று இருத்தினான்.

குமுதாவோ மகனை ஏறிட்டும் பாராமல் எதை எதையோ சொல்லி அரற்றிக் கொண்டு இருந்தார், அவரைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

முள் மேல் அமர்ந்தாற் போல அமர்ந்திருந்த ரமேஷை விட்டு விட்டு, வெளியே வந்தவன் சிலை போல நின்ற மாமனாரை கட்டாயமாக உள்ளறைக்கு இழுத்து வந்து அமரச் செய்தான். வீட்டில் கனத்த அமைதி சூழ்ந்தது.

இன்னும் வாசலிலேயே நின்று கொண்டிருந்த தன் மனையாளைப் பார்த்தான்.அருகில் சென்றவன்,

‘வா எழில், உள்ளே வா’ என்றதும்

கணவனின் தோளிலேயே சாய்ந்து வெளியே சப்தம் கேட்கா வண்ணம் பொங்கிப் பெருகும் கண்ணீரை அடக்கவியலாதவளாக, வெளியில் சப்தம் கேட்காத வண்ணம் வாயைப் பொத்திக் கொண்டவளாகக் குமுறிக் குமுறி அழலானாள்.

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here