14. இந்திரனின் காதலி

0
847
Indranin Kadhali

அத்தியாயம் 14

ஒருவாறாக அனைவரையும் அறைக்குள் சேர்த்து விட்ட இந்திரன் எல்லோரும் ஒவ்வொரு மூலையைப் பார்த்துக் கொண்டிருக்க, என்ன செய்வதெனப் புரியாதவனாக நின்றான்.

எழில் சத்தமின்றி அழுதுக் கொண்டிருந்தாளெறால், குமுதா அழுது முடித்து எங்கேயோ சுவரை வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார். இளம்பரிதி கல்லாய் இறுகி அமர்ந்திருக்க, ரமேஷ் தலைகுனிந்து அமர்ந்து இருந்தான்.

இது வேலைக்காகாது என எண்ணியவனாய் இந்திரன்,
எழில் வீட்டில சமைச்சிருக்கீங்களா? இல்லை சாப்பாடு வாங்கிட்டு வரட்டுமா? என்றான்.

மணி மூன்றாகி இருக்க, குமுதாவிற்கு மருமகன் குரல் கேட்டதும் விழிப்பு வந்து விட்டது.

அதெல்லாம் சமைச்சாச்சு இருங்க மாப்பிள்ளை சாப்பிடலாம் என்றவராக நடு வீட்டில் சோற்று சட்டி, குழம்புச் சட்டி, அப்பளம் ஒரு பாத்திரத்தில், ஆம்லேட் எனப் பரப்பினார். ஒவ்வொருவரையாக இழுத்து உட்கார வைத்து அவனும் தரையில் அமர்ந்தான்.

மாமனாருக்கும், மச்சானுக்கும் இடையில் அமர்ந்தவன் கொஞ்சம் கொஞ்சமாகப் பேச்சுக் கொடுத்தவனாக இருந்தான். கலகலப்பாக இல்லாவிடினும் பிரச்சனை இல்லாமல் சாப்பாட்டு வேளை கழிந்தது.
ஏராளமான சிந்தனைகள் தந்த அயர்வில் பெரியவர்கள் கட்டிலிலும், தரையில் பாயிலும் ஆளுக்கொரு மூலையாகப் படுத்துக் கொள்ள, அங்கு ஒன்ற முடியாமல் அமர்ந்து இருந்தான் ரமேஷ்.

கணவனைத் தனியே அழைத்துக் கொண்டு போனவள் ‘எப்போது புறப்படுவதாக இருக்கிறோம்? என விசாரித்தாள். சாயங்கால நேரம் வண்டி பதிவு செய்திருப்பதாகக் கூறினான். இளம்பரிதியின் உடல் நிலை இன்னும் முழுமையாகச் சரி ஆகாததால் அவரைச் சிரமப் படுத்த வேண்டாமென்று அவன் அரசாங்க பஸ்ஸில் செல்ல விரும்பவில்லை.

அவர்கள் பேசிக் கொண்டு இருக்கையிலேயே பின்னால் வந்து நின்ற ரமேஷ்.

‘நீயும் என் கூடப் பேச மாட்டியா பாப்பா? திட்டவாவது செய்’

என்றான்.

அண்ணன் தோளில் சாய்ந்து கண்ணீர் உகுத்தவள்,

‘உன்னை மறுபடி நேரில் பார்ப்பேனோ மாட்டேனோன்னு ரொம்ப நாள் நான் அழுதிருக்கேன். உன் மேல ரொம்பக் கோபம், கோபமா வரும். நீ மட்டும் பொறுப்பா இருந்திருந்தா நாங்க எல்லோரும் இவ்வளவு கஷ்டப் பட்டிருக்க மாட்டோம். வீட்டில எடுத்துச் செய்ய ஆளில்லாம நாங்க எவ்வளவு கஷ்டப் பட்டோம் தெரியுமா?
அப்பாக்கு முடியாம போச்சு, அம்மாவோட குணமே மாறிப் போச்சு, அவங்களும் என்ன செய்வாங்க? ஒத்தை ஆளா எத்தனை கவனிப்பாங்க? நீ எதுக்கு அப்படிச் செஞ்சே?’

என்றவளாகப் புலம்பத் தூக்கத்தில் இருந்து எழுந்து வந்த குமுதா தன் பிள்ளைகள் இருவரையும் அணைத்துக் கொண்டார். அவருக்கு மகனைக் கண்டதே போதும் என்று இருக்க, எந்த விளக்கமுமே தேவைப் படவில்லை.

அம்மா அழாதீங்கம்மா,

அவர் கண்ணீரை துடைத்தவன்

‘எல்லாமே முட்டாள் தனமா செஞ்சுட்டேன். திரும்ப வந்தா எங்கே எல்லோரும் என்னை ஏளனமா பேசுவாங்களோன்னு தாழ்வு மனப்பான்மை வந்திடுச்சு. எஞ்சினியரிங் படிக்கப் போறேன்னு ஊரெல்லாம் பெருமையா பேசிட்டுப் போய்ப் படிக்கப் போனா அங்கே எனக்கு ஒன்னுமே புரியலைம்மா.

அப்பா கேட்டப்ப எல்லாம் பணம் கொடுத்து விடவும், ஊரில் இருந்து வளர்ந்ததுக்கு இங்கே எல்லாமே புதுசா தெரிஞ்சதா? ஆர்வக் கோளாறுல எல்லாத்தையும் பார்த்து அனுபவிச்சிடணும்னு ஒரு அறிவுக்கெட்டத்தனம்.

அப்பா ஃபோனில் நீ காலேஜ் போகாம ஊர் சுத்துறியான்னு கேட்கவும், என்னை நம்பாம யாரோ சொல்லி என் கிட்ட கேள்வி கேட்கிறாங்கன்னு ஆத்திரம் அதனாலத்தான் திமிரா பதில் சொன்னேன்.

அடுத்து அப்பாக்கு உடம்புக்கு சரியில்லாம போனதெல்லாம் ரொம்ப நாள் கழிச்சு தான் எனக்குத் தெரிய வந்தது. பணம் முடியவும் என்ன செய்யன்னு தெரியாம திகைச்சேன்.

ஹாஸ்டல் வேண்டாம்னு சொல்லி ஒரு ஃப்ரெண்ட் கூடத் தங்கி இருந்தேன் அவன் ரெண்டு மாசமா பணம் வரவில்லை என்றதும் என்னை விரட்டாத குறையா வெளியேற்றிட்டான்.

தங்கறதுக்கு இடமும் இல்லாம, சாப்பிட காசு இல்லாம ரொம்பக் கஷ்டப் பட்டேன்.அப்பதான் நீங்க எனக்கு வாங்கித் தந்திருந்த மோதிரத்தை வித்தேன்.

தாய், மகனின் கண்களில் நீர் வெள்ளம். எழில் கணவன் தோளை தஞ்சமடைந்திருந்தாள்.

இப்ப மேக்டொனால்ட்ஸ்ல வேலை பார்க்கிறேன். ஓரளவு சம்பளம் தரான் எப்படியோ இத்தனை வருசத்தையும் ஓட்டிட்டேன். அத்தான் மட்டும் என்னைத் தேடி வரலைன்னா நான் உங்களை எல்லோரையும் பார்க்க வந்திருப்பேனோ? மாட்டேனோ?

அவர்கள் பேச்சிற்கு இடையூறாக இளம்பரிதியின் குளறலான குரல் எழுந்தது.

லமேஷ் ( ரமேஷ்)

அவர் அழைத்ததும் அவர் காலைப் பிடித்துக் கொண்டு ரமேஷ் கதறி விட்டிருந்தான். தன்னால் தன் தகப்பனுக்கு இந்த நிலை என்பதை அறிந்ததில் இருந்து அவனைக் குற்ற உணர்ச்சி தின்று கொண்டிருந்தது. என்னவொரு கம்பீரமான பேச்சு அவருடையது, இப்போது குழறி பேசியதை பார்த்ததும் அவன் மனம் தாங்கவில்லை.

மகன் தன் காலை பிடித்துக் கதறவும் தகப்பன் மனம் இளகி விட்டிருந்தது. தான் அவனை வைக்க எண்ணியிருந்த உயரம் என்ன? அவன் தனக்காகத் தேடிக் கொண்ட நிலை என்ன? எண்ணியதும் பெருமூச்செழுந்தது.

அவன் ஓரளவிற்கு நன்கு படிக்கும் மாணவன் என்று தான் பிறர் சொல்லைக் கேட்டு அவனை அப்படிப்பில் சேர்த்திருந்தார். சில நிலங்களை விற்று தான் அவனது அட்மிசனுக்கான கட்டணத்தைக் கட்டி இருந்தார்.

அன்று அவர் அவனிடம் உன்னைக் குறித்து இப்படிக் கேள்வி பட்டேன் என்று கேட்கத்தான் செய்தார். ஆனால், மகன் அவருக்குத் தந்த பதில், அந்தத் திமிரான பேச்சுக்கள் அவரது நம்பிக்கையை ஆட்டம் காண செய்து விட்டிருந்தன.

பொதுவாகவே சண்டை சச்சரவுகள் குறிப்பிட்ட நேரம் மட்டுமே மனதை வருத்துவன. ஆனால், நம்பிக்கை துரோகம் அதுவும் ஒருவர் தான் உயிராக எண்ணிக் கொண்டிருப்பவரிடமிருந்து எதிர்கொள்ளும் நம்பிக்கை துரோகம் அது புழுவாய் உள்ளத்தை அரித்துச் சாய்த்து விடும். இளம்பரிதிக்கு நேர்ந்ததும் அதுவே தான்.

பழைய விஷயங்களை எண்ணியவர் பெருமூச்செறிந்தார், தன் மகனை மறுபடியும் கண்டதே போதும் என்று அவருக்கு இருந்தது.

நம்ம ஊருக்கு வா… குளறலாக மகனை வீட்டுக்கு அழைத்தார்.
மகனோ தலை குனிந்து அமர்ந்திருந்தான்.

அவன் தலையை அவரது கரம் வருடியது, கையை வைத்து ஏதோ சைகை செய்தார். எதையோ ஆக்ரோஷமாகச் சொல்ல முயன்றார்.
படிப்புப் போனால் போகின்றது, நம் நிலம் இருக்கிறது. வா வந்து விவசாயத்தைக் கவனி என்று அவர் அழைப்பு விடுவது புரிந்தது.
மகன் யோசனையில் அமர்ந்திருப்பதைப் பார்த்து ‘அப்படியென்றால் நீ வர மாட்டியா’ என்பது போல அவர் ஏமாற்றமாகக் கேட்டதும் ரமேஷ் அவரது கையைப் பிடித்துக் கொண்டான்.

நான் வர்றேன்பா, யார் என்ன சொன்னாலும் பரவாயில்ல நான் நம்ம ஊருக்கு வர்றேன், எத்தனை நாள் கிண்டலடிப்பாங்க?, சொல்லிட்டு போகட்டும். உங்களை இனிமேல் தனியா விட்டுட்டு நானும் இங்கே தனியா இருந்து என்ன செய்யப் போகிறேன்?

தகப்பன் மற்றும் தாயின் முகத்தில் பெரும் ஆசுவாசம்.

ஆனால் இன்றைக்கு வரலை அப்பா…

ஏனென்று கேட்டவரையும் மற்றவர்களையும் பார்த்தவன், நான் இப்போ உடனே வந்திட்டேன் என்றால் பாதி மாச சம்பளம் விட்டுப் போகும் அப்பா. அவங்க கிட்ட பேசி வேலையை விட்டுட்டு மீதி நாள் சம்பளமும் வாங்கி விட்டு சில நாட்கள் கழித்து வருகிறேன்.

தகப்பன் முகத்தில் பெருமிதம்… காரணம் மகன் பணத்தின் அருமையை அறிந்து கொண்டான் என்பதால், காரணம் மகன் உழைப்பின் பெருமையைப் புரிந்து கொண்டான் என்பதால். எல்லாப் படிப்புகளும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கிடைப்பதில்லை. வெளி உலகம் கற்றுத் தரும் சான்றிதழ் தராத அனுபவம் படிப்பு அனைத்திலும் மேலானது அல்லவா?

அத்தான் வந்து அழைக்கவும், அவங்க தான் நம்ம எழிலோட மாப்பிள்ளைன்னு அப்ப தெரியாது. சொந்தக்காரங்க அழைக்கிறாங்கன்னு சொல்லி லீவு போட்டுட்டு வந்து விட்டேன்.

யாருக்குமே எதையும் வாங்கிட்டு வரவில்லை. நீங்க ஊருக்குப் புறப்படக் கொஞ்சம் நேரம் இருக்கு இல்லையா? நான் ஏதாவது வாங்கிட்டு வருகிறேன் பா என விரைந்தான்.

‘இப்ப அண்ணா எதுக்குப் போகிறான்? அதெல்லாம் வேண்டாம்னு சொல்ல வேண்டியதுதானே? என்ன அப்படியே நிற்கிறீங்க’

கணவனிடம் குசுகுசுவெனப் பேசினாள் எழில்.

‘அடியே மச்சான் ஏதாச்சும் வாங்கிட்டு வருவான் சாப்பிடலாம்னு இருந்தா விட மாட்டியே’

என்றவனை முறைத்தாள்.

தனியே மனைவியைச் சமையலறைக்கு இழுத்துச் சென்றவன் பச்சக்கென்று அவள் கன்னத்தில் முத்தம் வைத்தான். ஏனென்றால் அந்த அறையில் தனிமையாக இருந்தது அந்த ஒரு பகுதிதான்.
காஃபி போடவென்று அங்கு அப்போது வந்த குமுதா நெருக்கமாய் நின்றவர்களைப் பார்த்து வெட்கி வெளியே சென்று விட்டார்.

அவளுக்கோ அதெல்லாம் சிந்தையில் படவே இல்லை. அவன் முத்தமிட்ட தருணத்தில் அவள் உறைந்து விட்டிருந்தாளே?

மாமியாரை கண்ட போதும் இந்திரன் அலட்டிக் கொள்ளவில்லை.

மனைவியின் நாடியைப் பற்றி முகத்தை உயர்த்தினான்.

இப்ப உங்க அண்ணனை ஒன்னும் வாங்காதன்னு சொன்னா அது சரியா? நீயே சொல்லு. அவன் குற்ற உணர்ச்சியில் இருக்கிறான். தன்னோட அம்மா அப்பாவுக்குத் தன்னோட தங்கச்சிக்குன்னு எதையாவது வாங்கிட்டு வருவான். அதை நான் எதுக்குத் தடுக்கணும்?

என்ன இருந்தாலும் நீயும் நானும் எவ்வளவு கவனிச்சாலும், உங்க அம்மா அப்பா மனசு உரிமையா ஓரு உதவின்னு நம்ம கிட்ட கேட்கப் போகிறதில்லை.

இதுவே அவங்க மகனா இருந்தா அதிகாரமாக உரிமையாக அவங்களால் ஒவ்வொரு விஷயமும் கேட்க முடியும். அவனோட உரிமையை அவன் செய்யட்டும், நம்மளோட உரிமையை நம்ம செய்வோம் என்ன சரியா?

அவளது நாடியை வருடலோடு விட்டு விடவும் அவள் சற்று எக்கி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். கணவன் தன் குடும்பத்திற்காகச் செய்தவற்றில் அவள் மனம் நிறைந்து விட்டிருந்தது. இறுக்க அவனை அணைத்துக் கொண்டு அவனது மனஅடக்கத்தை வெகுவாகச் சோதித்தாள்.

ஏய் உங்க அம்மா கொஞ்சம் முன்னாடி உள்ளே வந்துட்டு போனாங்க, மறுபடி வருவதுக்குள்ள நாம வெளியே போயிடலாமா?

கணவன் பேச்சில் திக்கென அதிர்ந்தவள் உங்களை?

என்றவளாக பட்டென்று அங்கிருந்து விறுவிறுவென நகர்ந்து சென்று விட அவன் அங்கேயே நின்று அவள் அணைத்த போது இருந்த வெம்மையைத் தன் உடலை தானே வருடி மறுபடி உணர்ந்தான். தன்னுடைய கட்டுப் பாடுகள் தகர்ந்து விடுமோவென மனம் தளர்ந்தான். தனக்குத் தானே விதிகள் செய்து தன்னைத் தானே சோதிக்கின்றோமோ? என எண்ணி பெருமூச்செறிந்தான்.

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here