15. இந்திரனின் காதலி

0
961
Indranin Kadhali

அத்தியாயம் 15

கணவனின் சீண்டலில் சமையலறையில் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? என உணர்ந்து வெட்கித்து, அவனிடமிருந்து விடுபட்டு வீட்டின் முன்னறைக்கு வந்த எழிலரசி தன் அண்ணன் ரமேஷ் தன் பெற்றோருக்காகப் பார்த்து பார்த்து வாங்கியிருந்தவற்றை உள்ளம் உருக பார்த்தாள். அவனுக்கும் பிரிவுத்துயரம் உண்டு என்று அவனது செயல்கள் காட்டிக் கொண்டிருந்தன.

தன் குடும்பத்தை மறுபடியும் சேர்ந்ததில் ரமேஷ் சிறுகுழந்தைப் போன்ற குதூகலத்தில் ஆழ்ந்திருந்தான். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் வாங்கி இருந்த துணிகள். தற்போது உண்ண ஏதுவான எண்ணைப் பண்டங்கள், ஹார்லிக்ஸ் பழங்கள் எனக் குவித்து இருந்தான்.

கணவன் சொன்னது சரிதான் என்று எழிலுக்குத் தோன்றியது. தன்னிடம் தன் கணவனிடம் அவள் பெற்றோர்கள் எதையும் வாங்கிய போது அவர்கள் உள்ளத்தில் அதை எப்படியாவது திரும்பக் கொடுத்து விட வேண்டும் எனும் உத்வேகம் இருப்பதைக் கண்டாள். ஆனால், தன் அண்ணன் வாங்கிக் கொடுத்ததைப் பெற்றுக் கொண்டவர்கள் கண்களில் அந்தப் பரிதவிப்பு இல்லை. உரிமையான இடத்தில் உரிமையான பொருளை பெற்றுக் கொண்டார்கள் அல்லவா?

தாயின் மடியில் அந்த அழகான சேலையை விரித்து அவன் காண்பித்துக் கொண்டிருக்கக் குமுதாவின் முகத்தில் ஒளி வெள்ளம்.
எனக்கு இல்லையாண்ணா? என்று விளையாட்டாய் கேட்டவளாக அவனருகில் அமர்ந்தாள்.

உனக்கில்லாமலா? இதோ அவன் தந்த பையில் இருந்தது வெள்ளை வேஷ்டியும் ஒரு ரெடிமேட் சட்டையும்.
அண்ணா இது வேஷ்டி… சிணுங்கினாள்.

ஓ பை மாறிடுச்சோ, அது உன் வீட்டுக்காரருக்குப் பேண்ட் அளவு தெரியாது அதனால வேஷ்டி எடுத்துட்டேன். அடுத்த முறை… எனச் சொல்ல வந்தவனை இடைமறித்தாள்.

இல்ல இல்ல அவங்களுக்கு வேஷ்டி ரொம்ப நல்லா இருக்கும், இதுவே இருக்கட்டும் என்றாள்.

இவ நம்மளை வேஷ்டியில் எப்ப இரசிச்சான்னு தெரியலியே ம்ம் அவள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தவன் மகிழ்ச்சியாகச் சிந்தித்தான்.

இது உனக்குப் பாப்பா? அவன் தந்த சேலை எளிமையாக இருந்தாலும் அதில் அவனது அன்பு வெளிப்பட்டது. அண்ணனை கரம் பிடித்து அவன் கரத்தில் சாய்ந்து அணைத்துக் கொண்டவள்

‘ரொம்பச் சந்தோஷமா இருக்குண்ணா… நீ இன்றைக்கே இவ்வளவு செலவு செய்யணும்னு தேவை இல்லையே உன் பணத்தை எல்லாம் முடிச்சிடாத’ என்றாள் பொறுப்பாய்.

அதெல்லாம் பணம் முடியாது, நீ கவலைப் படாதே. ஊருக்கு வந்ததும் உனக்குக் கொஞ்சம் தங்கம் செஞ்சு போடுகிறேன் என்ன?

அதெல்லாம் எதுக்கு மச்சான்?, தங்கமெல்லாம் எதுக்கு? எனக்கு அவ மட்டும் போதும். நீங்க அதெல்லாம் நினைச்சு சிரமப்படாதீங்க.

ஆமா அண்ணா சும்மா சும்மா ஆசை காண்பிச்சுராத அப்புறம் வரதட்சணை கேட்டுட்டா உனக்குத்தான் கஷ்டம் என்றாள் விளையாட்டாக, அடுத்த நிமிடமே அவள் காதை இந்திரன் திருகி இருந்தான்.

அவன் கையினின்று விடுபட்ட காதை வருடி அவனை முறைத்து வைத்தாள்.

தங்கை மற்றும் அவள் கணவன் சண்டையில் இலயித்து இருந்த ரமேஷ் சிரித்து வைத்தான்.

இப்ப இல்லாவிட்டாலும் என் மருமகளோ மருமகனோ வந்ததும் போடுவேன். அப்ப என்னை யாரும் தடுக்க முடியாதே? அண்ணன் பேச்சில் தங்கைக்கு நாணம் வந்துவிட அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

காஃபி அருந்தி, ரமேஷ் கொண்டு வந்திருந்த பண்டங்கள் சுவைத்து, இந்திரன் ஏற்பாடு செய்த காருக்காகக் காத்திருக்கத் தொடங்கினர்.

குமுதாவும், இளம்பரிதியும் மகனின் வருகை தந்த மகிழ்ச்சியில் பத்து வயது குறைந்தாற் போலத் தோற்றமளித்தனர். குமுதாவுக்கோ அவ்வப்போது மகனை முகத்தை வருடுவதும், நெட்டி முறிப்பதும், அவன் கைகளைப் பற்றி முத்தமிடுவதுமாக இருந்தார்.

கார் வந்ததும் அதை நோக்கி தன் தாங்கு கட்டைகளால் விரைந்த இளம்பரிதியின் நடையில் உற்சாகம் இருந்தது. இனி அவர் விரைவாக உடல் நலம் அடைந்து விடுவார் எனும் நம்பிக்கை அவரை பார்க்கின்ற மற்றவர்களுக்கும் தோன்றும் வண்ணம் அவரது இருந்தார்.

கம்பீரமாக முன் நடந்தவர் வண்டியின் அருகே நின்ற மருமகனை ஒரு வார்த்தையும் சொல்லாமல் அன்பாய் அணைத்துக் கொண்டார். தன் குடும்பத்தின் சீரற்ற ஒவ்வொன்றாய் சீர் செய்யும் அவனைக் கொண்டாடாமல் எப்படி?

முன் சீட்டில் டிரைவருக்கு அடுத்த இடத்தில், மாமனாரை வசதியாக அமர செய்தவன் பின் சீட்டில் மாமியாருக்கு அடுத்து மனைவி அமர்ந்திருக்க வீட்டு உரிமையாளரிடம் சாவியைக் கொடுத்து அனைத்து சாமான்களையும் காரின் மேல் கட்டி வைத்துக் கொண்டிருந்த ரமேஷோடு சேர்ந்து அனைத்தையும் சரிப்படுத்தி விட்டு உள்ளே வந்து அமர்ந்தான்.

ரமேஷிடம் விடைப் பெற்றுக் கொண்டு அனைவரும் ஊருக்கு புறப்பட்டனர்.

‘ஊருக்குச் சீக்கிரம் வந்து விடப்பா’

எனத் தாயும் தகப்பனும் அடிக்கடி அழைத்ததில் ரமேஷ் நெகிழ்ந்துப் போய் இருந்தான்.

அவன் கையசைக்கக் கார் நகர்ந்து தூரமாய்ப் புள்ளியாகி மறைந்தது.

இங்கே காருக்குள் உடல் அசதி, அன்றைய உணர்வு தாக்கங்களால் ஏற்பட்ட மன அசதிகள் என ஆளாளுக்குச் சீக்கிரமே கண் அசந்துப் போய் விட்டிருக்க ஓட்டுனரோடு விழித்து இருந்தது இந்திரன் மட்டுமே.

முல்லைப் பூ சூடி, திருத்தமாய் உடை அணிந்து மணமானப் பெண்ணுக்கான அனைத்து அணிகலன்களை அணிந்து தினம் தோறும் அழகு மிளிர்கின்றவளாக இருக்கும் மனைவியின் மீதே அவன் கண் நிலைத்து இருந்தது. அவளோ அவன் சட்டையைப் பற்றியவளாகத் தோளில் சாய்ந்து சுகமாக உறங்கிக் கொண்டு இருந்தாள்.

தன்னுடைய சன்னியாசத்தை முடித்துக் கொள்ளலாமா?

என இந்திரன் யோசிக்க ஆரம்பித்தான். சிறுவயதில் இருந்தே எல்லாவற்றிலும் ஒழுங்கு முறையாக இருக்க வேண்டும் எனப் பெற்றோர்களிடம் பயின்றவன் அவன். அதனால் தான் தன்னுடைய கட்டுப்பாடுகளைத் தான் மீற அவனிடம் இத்தனை தயக்கம்.

என்ன அவசரம்? இந்தத் தவிப்பிற்கும் யோசித்துத் தீர்வு காணலாம் என முடிவு செய்து கொண்டான். தான் உறங்காமல் ஓட்டுனரோடு பேசிக் கொண்டு இருந்தான்.

வழியில் இயற்கை உபாதைகளுக்காக அவ்வப்போது வண்டியை நிறுத்தினர். இரவு சாப்பாட்டை வழியில் இருந்த ஒரு உணவகத்தில் ஓட்டுனரோடு இணைந்து சாப்பிட்டனர். இந்திரன் வெகு நேரம் முழித்திருந்தவன் அதிகாலையில் உறங்கி விட்டிருந்தான்.

மதிய நேரத்தில் அவர்கள் மேகனூர்மலை ஊருக்குத் தங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களுக்காகச் சுடச் சுட உணவு காத்திருந்தது. பக்கத்து வீட்டு பெரியம்மா அவர்களுக்காக உணவை அன்பாகச் சமைத்து வைத்து காத்து இருந்தார்.

பிரயாணம் செய்த களைப்பில் அனைவரும் குளித்து வந்து சாப்பிட்டு அயர்ந்து விட்டனர். வழி நெடுக இரவு நன்கு தூங்கி இருந்த எழில், இந்திரனின் தூக்கம் கெடாவண்ணம் அறையின் கதவை இழுத்து சாத்தி விட்டு வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.

வீட்டு வேலைகள் முடித்ததும் அப்போது வீட்டில் பால் இல்லாததால் வரக்காஃபியை தயாரித்தவள் தாய், தகப்பனுக்குச் சென்று கொடுத்து வந்தாள். தனக்கும் கணவனுக்கும் கிளாஸ்களில் காஃபியை ஊற்றவும் சோம்பல் முறித்தவாறே இந்திரன் அறையினின்று வெளி வரவும் சரியாக இருந்தது.

‘முகம் கழுவிட்டு வாங்க அத்தான் காஃபி குடிக்கலாம்’

தூக்கம் மாறா கண்களுடன் ‘ம்ம்’ எனத் தலையசைத்தவன் இன்னொரு கொட்டாவியை விட்டவாறு பின் கட்டிற்குச் சென்று அங்கிருந்த தொட்டியில் முகம் கழுவி சுத்தம் செய்து வந்தான்.

முன் அறையில் இருந்த டிவியில் ஏதோ கார்டூன் ஓடிக் கொண்டிருக்க அதை இரசித்துப் பார்த்தவாறு இருந்தவள் அருகில் வந்து அமர்ந்தான்.
காஃபியை அருந்தியவன்

‘நாம எங்கேயாவது வெளியே சுத்திட்டு வரலாமா எழில்? என்றான்.

உங்களுக்குக் களைப்பா இல்லையா அத்தான்?

இல்லையெனத் தலையாட்டியவனிடம் குடித்து முடித்த காஃபி கிளாசை வாங்கி அருகில் வைத்து விட்டு அவன் மடியில் படுத்துக் கொண்டாள். அவன் கை ஒன்றை எடுத்து தன் உள்ளங்கையோடு சேர்த்துக் கொண்டவளாய்,

இப்ப எத்தனை நாள் லீவு அத்தான்?

இன்னும் இரெண்டே நாள் தான்.

‘அடுத்த லீவு? கொஞ்சம் மாசமாகும்ல? ம்ம்ஹீம்’

அதிருப்தியாய் பிதுங்கிய அவளது உதடுகளை நீவினான், தலையை வருடினான். கணவனாய் அவளை ஆட்கொள்ள நினைத்தவை ஒரு பக்கம் தள்ளி நின்றுப் போக யோசிக்க ஆரம்பித்தான்.

ஏற்கெனவே தனது அண்மையை நாடுகின்றவளுக்குப் புதிதாய் ஒன்றை அறிமுகப் படுத்திவிட்டு ஏங்க வைக்க வேண்டுமா? அதுவும் அடுத்த மூன்று நான்கு மாதங்களுக்கு அவனால் ஊர் பக்கம் வர முடியாத நிலையில்? தன்னுடைய ஆசைக்காக அவள் படிப்பிலிருந்தும் கவனம் சிதற வைத்து அவளை ஏங்க விட வேண்டுமா என்ன? தமிழகத்திற்கு வேலைக்கு மாறுதல் பெற்ற பிறகே அத்தனை ஆசைகளையும் நிறைவேற்றுவது எனத் தாமதிக்க முடிவெடுத்தான்.

அடுத்த மாதத்தில் அவளது பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு இருக்க அப்போது அவனால் லீவு எடுக்க முடியாத சூழல் இருக்கப் போவது தெரியும். என்ன செய்வதென ஏற்கெனவே சிந்தனையில் இருந்தவன். எதிர்பாராத நிலையில் ரமேஷ் குறித்த தகவல் கிடைத்து இரெண்டு நாட்களாய் அவனைத் தேடி கண்டு பிடித்து அவன் தன் குடும்பத்தோடு சேர வழி வகுத்து என அலைந்ததின் பலனாக ரமேஷ் மனம் மாறி தங்கள் வீட்டிற்குத் திரும்ப வருவதாகக் கூறியது நிறைவளித்தது.

இனி ராசு போன்ற தீய எண்ணங்கள் கொண்ட மனிதர்கள் அவர்களது வீட்டின் புறம் திரும்பாமல் இருப்பர் என்பது உறுதி. மனைவியின் பாதுகாப்பு மற்றும் மனைவியின் பெற்றோர் குறித்த பாதுகாப்பு குறித்த கவலையும் அவனை விட்டு தூர விலகி இருந்தது. நிம்மதியாக அவனால் தன் வேலையிலும் உயர் பதவிக்கான தேர்விலும் பங்கு கொள்ள இயலும். அவனுடைய பரீட்சைகள் இருந்த வாரத்திலேயே மனைவியின் தேர்வுகளும் அமைந்திருக்க அவளது பரீட்சை நேரத்திற்குத் துணையாக அனுப்ப ரமேஷை கேட்டுக் கொள்ளலாம் எனும் தீர்வுக்கும் வந்திருந்தான்.

இப்ப நீங்க எனக்கு ஒரு பதில் சொல்லுங்க அத்தான்… மனையாள் அவனிடம் கடுமையாகப் பேச முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

ஒரு பதில் என்ன? ஒன்பது சொல்லுகிறேன். என்னன்னு கேளு முதலில் என்றான்.

இப்ப உங்க திட்டம் தான் என்ன? என்னையும் உங்க கூட வர விட மாட்டேங்கிறீங்க, உங்களுக்கும் அடிக்கடி லீவு கிடைக்க மாட்டேங்கிறது. என்னதான் யோசிச்சு வச்சுருக்கிறீங்க?

அம்மாடியோ… பயந்துட்டேன் பொண்டாட்டி, உங்களுக்கு இவ்வளவு கோபம் வருமா மேடம் கிண்டலாய் வாயை தன் கரங்களாள் மூடி பயந்தவனாய் நடித்தான்.

அவளுடைய முறைப்பை ஒதுக்கி தள்ளியவன்

அஞ்சும்மா நாடோடி மாதிரி நம்ம ஊர் ஊரா அலைஞ்சுட்டு இருந்தோம்னா நம்மளால் உருப்படியா எதையும் கவனிக்க முடியாதுன்னு எனக்குத் தோணுது. இது நம்மளோட போகாது, நம்ம குழந்தைகளையும் போகிற இடமெல்லாம் அழைச்சுட்டே திரிகிற மாதிரின்னா ரொம்பக் கஷ்டம்.

இப்ப என்னோட தேர்வு முடிந்ததுக்கு அப்புறம் மேல் பதவி போகிற மாதிரி இருந்ததுன்னா எனக்குத் தெரிந்த் ஆஃபீசர் ஒருத்தர் இருக்கிறார் அவர் கிட்ட ஏற்கெனவே கேட்டு வைத்திருக்கிறேன். அவர் தமிழ் நாடு பக்கமா போஸ்டிங்க் மாற்றித் தருகிறதா சொல்லி இருக்கிறார். இன்னும் ஒரு ஆறேழு மாசம் பொறுத்துக்கோம்மா?

தனக்கும் சேர்த்து ஆறுதல் சொன்னவாறு அவள் நாடியை பிடித்துக் கொஞ்சினான்.

அப்படின்னா… மாதங்களை எண்ண ஆரம்பித்தவள் இந்த மாசத்தில நம்ம ஊருக்கு வந்திடுவீங்களா?

இன்னும் கூட அவனது மடியிலிருந்து அவள் எழுந்திரிக்கவில்லை. அவளது கொஞ்சல், கோபம் எல்லாம் அவனிடம் மட்டும் தானே?

அதனால் அவன் வரும் போதெல்லாம் அவனோடு நேரத்தை கழித்த வண்ணமே அவள் இருப்பாள்.

ம்ம் அதுக்குள்ள ஆகிடும்னு நம்புறேன்டா

நாம ரெண்டு பேரும் பாஸாகவும், உங்களுக்கு உடனே மாறுதல் கிடைக்கவும் வேண்டி நான் நம்ம குலசாமிக்கு வேண்டுதல் வச்சிட்டேன். பாருங்க கட்டாயமா நம்ம வேண்டுதல் நிறைவேறும் எழுந்து அமர்ந்தவள் கண்கள் மூடி கைகள் கோர்த்து எதையோ மனதில் பிரார்த்தித்தாள். தன் கண்களை அவள் திறந்த போது பிரகாசமடைந்து இருந்தன.

கதவு தட்டும் சப்தம் கேட்க எழுந்து சென்று கதவை திறக்க அவர்கள் நிலத்து குத்தகைதாரர் வந்திருந்தார்.

வாங்க வாங்க மாமா

வரவேற்றவள் அவர் அமரவும் உள்ளே சென்று குடிக்கப் பெரிய சொம்பு ஒன்றில் தண்ணீரும், கைமுறுக்கும், வரகாஃபியும் கொண்டு வந்தாள்.

அவர் இந்திரனின் நிலத்தில் விளைந்த பயிர்களில் கொஞ்சம் மூட்டைகளில் கொண்டு வந்திருந்தார். அவனிடம் சற்று நேரம் பேசி விட்டு சில மாதங்களில் குத்தகை காலம் முடிவுறுவதை நினைவுப் படுத்திவிட்டு சென்றார்.

இந்திரனுடையது இரண்டு ஏக்கர் நிலம் அதுவும் நல்ல விளைச்சல் தரும் பூமி அருகில் தேன் போல இனித்துக் கிடக்கும் நன்னீர் தரும் கிணறு. அட்சய பாத்திரமாக விளங்கும் அந்த நிலத்தைக் கைவிட்டுப் போக விட யாருக்குத்தான் மனம் வரும்?

மறுபடியும் எனக்கே குத்தகைக்குத் தரவேண்டும் எனும் கோரிக்கைதான் இன்று அவர் வந்து சொல்லிச் சென்ற அவரது நினைவூட்டல் ஆகும்.

ஊரில் இல்லாமல் வெளியூரில் வேலை அமைந்திருக்க இந்திரனுக்குத் தங்கள் விளை நிலத்தைக் குத்தகைக்கு விடுவதைத் தவிர வேறு வழியில்லை. குத்தகைதாரர் ஒற்றை மனிதனுக்கு விளைச்சலில் என்ன பங்கு கொடுப்பது எனும் அலட்சியத்தில் இதுவரையிலும் அவனுக்கு ஒன்றும் கொடுத்த்தில்லை. அதை சட்டை செய்யும் நிலையிலும் அவன் இல்லை.

பயிர்வகைகளில் அவனது பங்கு கொடுத்தாலும் அவன் ஊரில் தங்கி சமைத்துச் சாப்பிடவா போய் விடுகிறான்? எனும் எண்ணத்தில் இதுவரை ஒன்றும் கொடுத்தது இல்லை. இப்போது அவனுக்கு மணமாகி இருக்க, மனைவி உள்ளூர்காரியாகப் போய்விட, குத்தகையை நீட்டிக்கும் வண்ணம் அன்பொழுக பேசிவிட்டு செல்ல வந்தவர் விளைச்சலில் கொஞ்சமாய்க் கொண்டு வந்தார்.

அவர் சென்றதும் எழிலரசி மறுபடி கணவனைக் கேள்வி மேல் கேள்வியாய் கேட்டு வைக்க முதலில் மனைவியின் யோசனையில் இது சரிவருமாவெனச் சிந்தித்தாலும் எழிலரசி கேட்டதையே மனமார செய்து அவளுக்கு ஆதரவளித்தான் இந்திரன்.

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here