16. இந்திரனின் காதலி

0
882
Indranin Kadhali

அத்தியாயம் 16

இதோ விடுமுறையில் மீதமிருந்த இரெண்டு நாட்களும் முடிந்து இந்திரன் நாக்பூருக்கு பயணப்பட ஆயத்தமாகிக் கொண்டு இருக்கின்றான். ஊரிலுள்ள நண்பன் ஒருவன் வந்து பேருந்து நிலையம் வரை பைக்கில் அழைத்துச் சென்று விடுவதாகச் சொல்லி இருந்தான். அதன் பின்னர்ப் பேருந்து மூலம் அப்படியே இரயில் நிலையம் சென்று பயணப்படும் திட்டம் இருந்தது.

முன் தினம் இரவில் இருந்தே முகம் திருப்பிப் படுத்துக் கொண்டவளாய் சத்தம் வராமல் கண்ணீர் உகுக்கும் மனைவியை அவனும் காணாதது போலக் கண்டு கொண்டு தான் இருக்கிறான்.
தான் அழுவது இவனுக்குத் தெரியாதென்று அவள் நினைத்தாலும், அவன் முன்னால் போலியாய் விரிந்த புன்னகையைக் காட்டினாலும், அவளது வீங்கிய இமைகளும், சற்று சிவந்த கண்களும் அவளை அவனிடம் காட்டிக் கொடுக்க அது எப்படி அவனுக்குத் தெரியாமல் போகும்?

தன்னைப் போலவே மனைவிக்கும் தன் குறித்த பாதிப்புகள் இருக்கின்றன என்பது அவனுக்குப் புரிந்தது. விளையாட்டாய் பேசினாலும், இவன் ‘நீ இந்திரனின் காதலி மட்டும்’ என்று விதித்த வரைமுறைக்குள் முயன்று நின்றுக் கொண்டிருப்பவளுக்கு அந்த மெல்லிய கோடு மிகவாய் துன்பம் தந்து கொண்டிருக்கின்றது என்பதை அவன் உணராமல் இல்லை.

என் செல்லம்டி நீ?

மனதிற்குள் கொஞ்சிக் கொண்டவன் கடிகாரத்தைப் பார்த்தான். இன்னும் ஒரு மணி நேரம் இருக்கின்றது என்றது அது. முன் வீட்டின் கதவை இறுக்கப் பூட்டினான்.

அவனுக்கு என்னென்னவோ சமைத்து அடுக்கிக் கொண்டு சமையலறையில் நின்றவளுக்கு அந்தச் சப்தம் கேட்க சாத்தியம் இல்லை. இந்திரன் இப்போது முன்னறை கடந்து அவர்களது படுக்கையறை அதன் எதிரில் இருக்கும் ‘அரங்கு வீடு’ ( store room) கடந்து பின் வாயிலில் இருக்கும் சமையலறை நோக்கி நகர்ந்தான். அங்கே பெரிய பெரிய தாம்பு, பித்தளை குடங்களில் அவள் தண்ணீர் நிறைத்து வைத்திருந்தாள். அவளது வருகையின் பின்னர் அந்த வீட்டின் அத்தனை பாத்திரங்களும் பளீரென மின்னின.

அந்த வீட்டை இந்திரன் தன் தாய் இருந்த போது உணர்ந்த நிறைவு எழும் விதமாகவே ஒவ்வொரு நொடியும் உணர வைத்துக் கொண்டிருந்தாள். அவள் அங்கும் இங்கும் நடமாடும் போது எழும் மெல்லிய கொலுசொலியை அவன் அரை உறக்கத்தின் போதும் மிக இரசிப்பான்.

தங்களுக்குள் எத்தனையோ பேசினாலும், அவளைக் குறித்த தன் எண்ணங்களை இதுவரை அவன் அவளிடம் மனம் விட்டு ஒருபோதும் பேசியதில்லை. தன் மனதில் தன் மனைவிக்காக முட்டி மோதும் நேசத்தையும் அதிகமாய் வெளிப்படுத்தியது இல்லை.
இத்தனை நாட்களாய் தன்னைக் கட்டுப் படுத்தி வைத்துக் கொண்டிருந்தவனது மனதை மனைவியின் தடுமாற்றமும், பரிதவிப்பும் இளக்கி விட்டிருந்தன.

எழிலரசி அத்தனை வேலைகளும் முடித்துச் சமையல் கட்டில் எங்கோ வெறித்தவாறு நின்றுக் கொண்டிருந்தாள். மீண்டும் கணவனில்லாத தனிமையான நாட்களைக் கடத்துவது குறித்து மனதை ஆயத்தப் படுத்திக் கொண்டிருந்தாள் போலும்.

பின்னிருந்து இரு கரங்கள் அவள் தோள்களைத் தழுவி, அவள் கழுத்தோடு கழுத்தை இழைந்து அணைத்துக் கொண்டன.தோள்களினின்று நழுவி அவளது இடுப்பை நோக்கி நகர்ந்த கரங்கள் அவள் இடையில் தங்கி இறுக்கிக் கொண்டன.

சட்டென்று அவளைத் தன் பால் திருப்பியவன் அவளது கலங்கிய கண்களையும், துடித்துக் கொண்டிருந்த இதழ்களையும் கவனித்தான். கண்ணீர் துளிகள் திரண்டு இப்போது விழவா? இன்னும் சிறிது நேரத்திலா? எனக் கேட்பது போல இருந்தது. அவளது கலக்கத்தைக் கண்ட அவனுக்கே தன் கண்கள் கசிந்து விடுமோ? எனத் தோன்றலாயிற்று.

தன் விரல்களால் மனைவியின் கலைந்த தலைமுடியை வருடி, நீவி அவளது காதுக்குப் பின்னே தள்ளியவன் இப்போது அவள் நாடியை தாங்கி இருந்தான். குனிந்து அவள் நெற்றியில் முட்டி முத்தமிடவும் தேங்கி நின்ற கண்ணிர் அவள் கண்களினின்று பொலபொலவென்று வடிந்தது.

இந்தக் கண்ணீர் எந்தன் பிரிவிற்கானது, நான் அவள் அருகே வராமல் இருந்தால் நான் விடைப் பெற்றுச் செல்லும் மட்டும் இதைக் கட்டுப் படுத்தி அதன் பின்னர்த் தனிமையில் உகுக்கச் சேமிப்பில் வைத்திருந்த கண்ணீர். அவளது துன்பத்தைக் கண்டவனது மனம் இப்போதே அவளைத் தன்னுடன் அழைத்துச் சென்று விடச் சொல்லி கூக்குரலிட்டது.

நாடோடியாகச் செல்லும் இடமெல்லாம் மனைவியை அழைத்துக் கொண்டே திரிவாயா? முன் பின் தெரியாத இடத்தில் அவளை விட்டு வேலைக்குச் சென்றால் அவளுக்கு என்ன பாதுகாப்பு? சொந்த ஊரில் இருப்பது போல வருமா? ஆயிரம் கேள்விகள் மனதில் எழ வழக்கம் போலத் தன் மனதிற்குக் கடிவாளமிட்டான்.

என்னாச்சாம் இந்திரனின் காதலிக்கு? வழக்கம் போல மனைவியைச் சீண்டினான்.

‘இந்திரனின் காதலிக்கு மனைவியா பிரமோஷன் வேணுமாம். படிப்பெல்லாம் தூக்கிப் போட்டுட்டு புருசன் கூடவே இருக்கணுமாம்’
மனதில் உருட்டிக் கொண்டிருந்தவைகளை மனம் விட்டே சொல்லி விட்டிருந்தாள்.

அவளது உதடுகள் அழுகையில் பிதுங்கின.

ச்சீ எப்ப பாரு அழுது கிட்டு…

அவன் சீண்டல் வேலை செய்தது.
அழுகையின் காரணமாய் ஏங்கி ஏங்கி பேசிக் கொண்டிருந்தவள் அவன் சீண்டல் சரியாக வேலை செய்ய, வீம்பாகத் தன் முகம் கழுவி துடைத்து திரும்ப வந்தாள்.

சமையலறையில் நின்று கொண்டிருக்கும் கணவனைக் கண்டு கொள்ளாமல் அங்கு எடுத்து வைத்திருந்த சாப்பாட்டு டிஃபன்களை அவன் பைகளில் அடுக்கியவள் தன்னிச்சையாய் சாமி அறையில் சென்று நின்றுக் கொண்டாள். கண்கள் சந்தனமாலை சூடிய மாமனார் மாமியார் படத்தில் நிலைக்குத்தி இருந்தது.

பின்னோடு வந்தவன்,

‘என்ன உன் மாமனார் மாமியார் கிட்டே என்னைப் பற்றிப் போட்டுக் கொடுக்கிறியா?’

அதான் தினம் சொல்றேனே, எங்கே கேட்கிறாங்க? மருமகன்னா எல்லோருக்கும் இளப்பம் தானே?

கோபம், பரிதவிப்பு என மாறி மாறி வந்த அவள் உணர்வுகளைக் கவனித்துக் கொண்டிருந்தான்.

சட்டென்று அவளைத் தன்னோடு அணைத்து இறுக்கிக் கொண்டான்.

ஐயோ என்ன செய்யறீங்க? இது சாமி ரூம் ?

சாமி ரூம்ல சண்டை தான் போட கூடாது, அன்பு காட்டலாம். அன்பே சிவம் என்றான் குறும்பாக…

விழிகளை மலர்த்தி அவனை முறைத்தவளாய் விடுபடப் போராடினாள்.

‘ஏ எழில் கொஞ்சம் பொறு, எங்க அம்மா அப்பா கிட்ட நானும் பேச வேண்டாமா? அவங்க இங்க தானே இருக்காங்க. அவங்க மருமக என்னை பற்றி வீணா கம்ப்ளெயிண்ட் கொடுக்கிறா… எனக்கு அவளை ரொம்பப் பிடிக்கும்னு அவங்க முன்னாடியே சொல்லறதுக்குத்தான் ….

அவன் மேலும் தொடரும் முன்னதாக

அப்படியே இருந்தாலும் அம்மா அப்பா முன்னால இப்படியா செய்வாங்க? விடுங்கங்கிறேன்’

முறைத்தவளாய் இடையில் வெட்டிப் பேசினாள்.

விடுபட்டுத் தனக்குக் குங்குமம் வைத்துக் கொண்டவள் அவனுக்கு விபூதி தீற்றினாள். மூச் எனச் சேட்டை செய்யும் குழந்தைக்குப் பத்திரம் காட்டுவது போலக் காட்டியவளாய் மறுபடி அவன் பெட்டிகளை வைக்கும் இடத்திற்கு வந்து நின்றாள்.

கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டாள். இந்திரன் தன்னை விட்டு விலகி விலகிச் செல்பவளைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான் .

அச்சோ முன் கதவை இந்நேரம் எதுக்குச் சாத்தி வச்சிருக்கு? யாராச்சும் உங்களைப் பார்க்க வருவாங்க இல்ல?

தனக்குள் பேசியவளாய் தாழ் நீக்க சென்றவளிடம் விரைந்து முன் சென்று நின்றான்.

புரியாதவளாக அவனைப் பார்த்தவளை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு உள்ளறைக்கு விரைந்தான்.

‘அடியே அலறாத கொன்னு புடுவேன்’

என்றவனின் கடுமையில் பயத்தில் வீரிட்டவள் டப்பெனத் தன் சத்தத்தை நிறுத்தி விட்டிருந்தாள்.

‘வேற எந்த அறைக்குத் தூக்கிட்டு போனாலும் நீ கத்துற கத்தல்ல ஊரை கூட்டிருவ, இந்த அறையில நீ கத்துனா சத்தம் கேட்காது அதனால் தான் இங்க தூக்கிட்டு வந்தேன்’

என்றவன் அவளை முறைத்தான்.

எனக்கு ஆசையிருந்தாலும் இப்ப ஒன்னும் செய்ய முடியாது நேரம் இல்ல சரியா? அதனால இந்த வில்லன மாதிரி என்னைப் பார்க்குறதை நிறுத்து… மூச்

அவனது வழக்கத்திற்கு மாறான கடுமையில் முதலில் பயந்தாலும், அவனிடம் அவளுக்கு எதற்கு அச்சம்? எனச் சிந்திக்கவும் உடனே தெளிந்து விட்டிருந்தாள்.

எதையோ எண்ணி அவன் பால் தன் கரத்தை நீட்ட அவன் வாகாய் அவளை இழுத்து தனக்குள் இறுக்க அணைத்துக் கொண்டான்.

எனக்கு மட்டும் உன் மேல ஆசையில்லையாடி? கரிச்சட்டி மாதிரி இருக்கேன் என் மேல நீ உருகி உருகி நிக்கிறப்ப….

சொன்னவன் வாயிலேயே இரெண்டு அடிகள் விழுந்தன. அடித்த கைகளைத் தன் ஆளுகைக்குள் கொண்டு வந்தவன் தொடர்ந்தான்.

ஐஸ்வர்யா ராய் சித்திப் பொண்ணு மாதிரி இருக்க உன் மேல எனக்கு ஆசையில்லாம இருக்குமா?

கணவனின் உவமையில் அத்தனை உணர்வுகளையும் தாண்டி கிளுக்கெனச் சிரித்து விட்டிருந்தாள்.

மனுசன் விளையாட்டா பேசினா சீரியஸா பேசுறது, சீரியஸா பேசினா சிரிச்சு வைக்கிறது என் பொண்டாட்டிய என்னால புரிஞ்சுக்க முடியலையே முருகா…

அவன் புலம்பலைக் கண்டவள் இன்னுமாய்ச் சிரித்து வைக்க எப்போது அவள் உதடுகளை முற்றுகையிட்டான் எனத் தெரியவில்லை.

ஜென்ம ஜென்மமாய்த் தாகத்தில் தவித்தவனைப் போல அவளைப் பருகிக் கொண்டு இருந்தான். அவளது உதடுகளை அவன் விடுவித்த போது அவை விரகத்தில் துடித்துக் கொண்டிருந்தன. அவனது உதடுகளோ இப்போது அவள் முகத்தை ஒவ்வொரு இணுக்கும் விடாமல் முற்றுகையிட்டுக் கொண்டு இருந்தன.

அவனது இறுகிய அணைப்பில் அவளுமாய் அவன் தோள் பற்றி ஈடு கொடுக்க, அலைபேசியின் சப்தத்தில் கலைந்தான்.

இன்னும் பத்து நிமிசத்திலயா? இதோ புறப்பட்டுட்டேன் நீ வா’

நண்பனுக்குப் பதில் கொடுத்து நிமிர்ந்தவனின் குரல் கரகரப்புற்றிருந்தது, கண்கள் சற்றே செவ்வரியோடி இருந்தன.

சற்று விலகி இருந்தவளை தனக்குள் மறுபடியும் இழுத்து இறுக்கி அணைத்தான்.

எனக்கு உன் மேல ஆசை இல்லையாடி? நீ மத்த பொண்ணுங்க மாதிரியா? மனசுல உள்ளதை பகிர்ந்துக்கிற மாதிரி அம்மா வீடு கூட உனக்கு இல்ல. எல்லாத்தையும் உள்ளுக்குள்ள வச்சே மறுகுவ. வெளியில சிரிச்சு சிரிச்சு வேடம் போடுவ. உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதாடி. என் ஆசைக்காக உன் மனசை இன்னும் அலைபாய விட்டுறக் கூடாதுன்னு என்னை நானே கட்டுப்படுத்திக் கிட்டு இருந்தா என் மேலயே உனக்குச் சந்தேகமா? கொன்னே போட்டுருவேன் பார்த்துக்க… உறுமினான்.

‘நான் எப்ப சந்தேகம்னு சொன்னேன்’ மிரண்டாள். நான் சும்மா தானே இருந்தேன் நீங்களே வந்து வம்பு இழுத்தீங்க இப்ப திட்டுறீங்க, என்னென்னவோ சொல்லுறீங்க?

நான் வம்பிழுக்காட்டு வழக்கம் போல நான் போனதும் ஓரமா உட்கார்ந்து அழுவ, அதைத்தானே செய்யப் போற?

‘அழுகை வந்தா அழத்தான் செய்வாங்க… தனியா இருந்து பாருங்க உங்களுக்குத் தெரியும்’ முணுமுணுத்தாள்.

இனி அழுகைன்னு ஒன்னு வரக் கூடாது விரலை நீட்டி மிரட்டினான்.

என் கிட்டேயேவா? முறைத்தவள் அவன் கரத்தை கைப்பற்றி விரலை மடக்கினாள்.

ரொம்பச் சீன் போடாதீங்க, இந்த ஆக்டிங் உங்களுக்கு வர மாட்டேங்குது, வந்தாலும் செட் ஆக மாட்டேங்குது.

டேய் பேச்ச மாத்தாத இதோ அஞ்சு நிமிசத்துல புறப்படணும். இங்க வா மறுபடி அவளை தன் அருகில் இழுத்தவன் அவள் கைகளைப் பற்றிக் கொண்டான்.

நீ தான் என் தைரியம்… நீயே கலங்குனா எனக்கு எப்படி இருக்கும் சொல்லு?

சற்று அமைதியாய் இருந்தவள் பதிலளித்தாள்

‘நான் கலங்க மாட்டேன்… இந்திரனின் காதலி ஃபார்ம்கு வந்தாச்சு சர்…’

தன் கண்கள் கலங்கி இருந்த போதும் விளையாட்டாய் சல்யூட் அடித்தாள்.

மறுபடி இதமாய் அவளை அணைத்துக் கொண்டவன் பிரிவிற்கான ஈடாக முத்தங்களை அவள் தலையில் பதித்துக் கொண்டிருந்தான். அதுதான் வட்டி குட்டி போடும் மிக அதிகமாய்ப் பெருகும் ஈடாயிற்றே? எப்போதும் நிறைவுற இயலாத ஒன்று.

தாழிட்ட கதவை திறந்தவன் வாசலில் பைகளை எடுத்து வைத்து மனைவியோடு நின்றவன் மாமியார் மாமனாரிடம் விடைப் பெற்று, அங்கு வருவோர் போவோர் என அக்கம் பக்கத்தினர், உறவினர் அனைவரிடமும் விடைப் பெற்று மனைவியைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ள பெரியவர்களிடம் சொல்லி எனப் பரபரப்பாக விடைப் பெற்றுச் சென்றான்.

எத்தனையாய் மனதை தேற்றி வைத்து இருந்தாலும் கணவனின் பிரிவில் ஒவ்வொரு முறையும் பரிதவித்துப் போவதைக் குறித்து எழிலரசி சிந்தித்துக் கொண்டு இருந்தாள். அதுவும் இப்போது கணவனுக்கான தன் பரிதவிப்புகள் ஏக்கங்கள் ஏராளமாய்க் கூடிப் போய் இருப்பதை அவளால் உணர முடிந்தது.

தங்களுக்கு இடையில் சில மணித்துளிகளுக்கு முன்னதான இனிமையான தருணங்களை எண்ணியதும் மனநிலை மயக்க நிலைக்குச் சென்று கொண்டிருந்தது.

நீ கரிச்சட்டி மாதிரியா இருக்க? என் அழகன்டா… இனி ஒரு முறை இப்படிச் சொல்லு வாயிலயே சூடு போடுறேன்…

கணவனின் நினைவில் முகம் கனிந்தவள் முன்பு அவளது பாடப் புத்தகங்களும், இரெண்டு நாட்களாகச் சிந்தித்துக் கொண்டிருந்த திட்டங்களோடு மடிக்கணிணியும் காத்திருந்தது.

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here