17.இந்திரனின் காதலி

0
839
Indranin Kadhali

அத்தியாயம் 17

சில மாதங்கள் கடந்து இருந்தன… ரமேஷ் ஊருக்கு பெற்றோரோடு வந்து விட்டிருந்தான். அவர்கள் வீடு மகிழ்ச்சியாய் கலகலப்பாய் இருக்க ஆரம்பித்தது. தான் சேமித்து வைத்திருந்த பணம் கொண்டு வீட்டை கொஞ்சமாய் மராமத்து வேலைகள் பார்த்துப் பெயிண்ட் அடிக்க வீடும் தகதகத்தது.

ரமேஷ் நகரத்தில் வேலையில் இருப்பதாகவும், அதை விட்டு விட்டு வரப் போகின்றான் எனவும் ஏற்கெனவே ஊரில் சொல்லி இருக்க அவனும் வந்ததும் வராததுமாகக் கொஞ்சம் வீட்டிற்காகச் செலவழித்து இருக்க அவனது படிப்பு முடிவுறாதது குறித்து எவரும் கேள்விகள் கேட்கவில்லை.

‘நல்ல வேலையில் இருந்திருப்பான் போலிருக்கு, ஏதோ கெட்ட நேரம் பிரிஞ்சு இருந்திருக்கிறாங்க. கடவுள் கருணையால மறுபடி பையன் வீடு வந்து சேர்ந்துட்டான்.’ என்று பேசிக் கொண்டனர்.

தினம் தோறும் தகப்பனை கைத்தடி உதவியோடு நடப்பதற்கு உதவவும், அவர் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகளில் ஈடுபடுத்தவும் ஆரம்பித்தான். மகன் வருகையிலும், அவன் அக்கறையான கவனிப்பிலும் இளம்பரிதி மிகவும் தேறி விட்டிருந்தார்.

எழிலரசிக்கு அண்ணன் ஊருக்குத் திரும்பிய பின்னர்த் தாயின் வீட்டிற்கும் அடிக்கடி செல்வதில் எந்தச் சுணக்கமும் இல்லை.

பன்னிரெண்டாவது பரீட்சை எழுதி வந்தாள். தான் கேட்டதற்கு இணங்க கணவன் சம்மதித்த அந்தப் பெரிய வேலையைச் செய்வதற்கான விபரங்களை இணையத்தில் தேடி தேடி படித்துக் கொண்டு இருந்தாள். இப்போதெல்லாம் தகப்பன், அண்ணனுடன் அமர்ந்து பெரியவள் போலப் பல விஷயங்களை விவாதிப்பது உண்டு.

இளம் பரிதி தற்போது பேசுவது புரியும் வண்ணம் பேச்சு முன்னேறி இருந்தது.

குமுதாவும் அவ்வப்போது அவர்கள் பேச்சில் இணைந்துக் கொள்வார்.
ரமேஷீக்கு முன்பெல்லாம் நாம் வேலைக்குச் செல்லப் போகிறோம் விவசாயத்தையா பார்க்கப் போகிறோம்? என்கின்ற எண்ணம் மட்டுமே இருந்ததால் கவனிக்காமல் விட்ட சில விஷயங்கள் இப்போது புரிந்தது.

‘நமக்கு விவசாயத்தில் ரொம்பவே பிரச்சனையா இருக்கிற விஷயங்கள் இரெண்டுப்பா ஒன்னு வேலைக்கு ஆட்கள் அழைச்சுட்டு வருவது ரொம்பவே சிரமமா இருக்கு. இரெண்டாவது விளைவிச்ச காய்கறி, தானியங்களைப் பத்திரப்படுத்தி உரிய விலைக்கு விற்கிறது.’ படித்த மூளை எதை எதையோ கணக்கிட்டது.

‘அதனாலத்தான் நம்ம ஊர்ல அந்த ராசு வச்சதுதான் சட்டம் அண்ணா’

‘ம்ம்…ஏதாச்சும் செய்யலாம் பொறு…’

அன்றைய யோசனையின் பலன் ஓரிரு மாதங்களில் தெரிந்தது. ரமேஷ் தங்கியிருந்த அறையில் இருந்தவர்களின் வழிகாட்டுதலில் தன்னுடைய வருடாந்திர வரவுகளை அரசுக்கு சமர்ப்பித்து இருந்தான். வரி கட்டும் அளவிற்குச் சம்பாதிக்கவில்லை என்றாலும் அவனது கணக்குகள் வங்கியில் விவசாயத்திற்காகக் குறைந்த வட்டியில் கடன் வாங்கும் அளவிற்குப் பயன் தந்தது.

சிறு சிறு உபகரணங்களை வெளி நாட்டிலிருந்து வரவழைத்தான். அவற்றில் ஒன்று விதை விதைப்பதற்கானது. எத்தனை இடைவெளியில் விதைகளை விதைக்க வேண்டும் என்று அதில் செட் செய்து விட்டால் அது போலவே விதைக்கும். அந்தக் கருவியின் உதவியால் பலர் தேவைப்படாமல் ஒருவர் மட்டுமே சில மணி நேரங்களில் தங்கள் விளை நிலத்தில் விதை விதைத்து விடலாம்.

அந்தக் கருவியைத் தான் உபயோகிப்பதுமல்லாது மற்ற விவசாயிகளுக்கும் வாடகைக்கு விட ஆரம்பித்தான். அது மட்டுமல்லாது இன்னும் சில கருவிகளையும் வாங்கினான். அதனால், வேலைக்கு ஆட்கள் கிடைக்காத போதும் அவனது வயல் வேலைகள் தடையின்றி நடைப் பெற்றன. வேலைக்கு ஆட்கள் தேவை எனும் பட்சத்தில் கூடுதலாகச் சம்பளம் கொடுத்து முதலில் வெளியூரில் இருந்து ஆட்களை வரவழைத்தான். அதற்கேற்பவே வேலையும் வாங்கினான். பின்னர், அவன் கொடுக்கும் கூலியை அறிந்து உள்ளூர் ஆட்களும் அவனிடம் வேலைக்கு வர ஆரம்பித்தனர்.

மின்சாரத்திற்கான செலவை குறைக்கச் சூரிய ஒளியில் மின்சாரத்தை எடுப்பதற்கான தகடுகளை வல்லுனரின் அறிவுரைக்கேற்ப பதிக்கச் செய்தான். தமிழகத்தின் வெயிலை சொல்லவும் வேண்டுமோ? மின்சாரமாகி அவை அவனுக்குப் பயனளித்தன.

முதலில் அத்தனை கடன் வாங்கிய பணத்தையும் ஒவ்வொன்றாக விவசாயத்திற்கென ஈடுபடுத்தி இருக்க மாதா மாதம் கடன் அடைப்பதற்குச் சிரமமாக இருந்தாலும் கூட அவனது கருவிகளை வாடகைக்கு விடும் பணம் மூலமாக ஆசுவாசமாக உணர்ந்தான்.
வீட்டிற்கு இன்னும் சில மாடுகளையும் வாங்கி இருந்தான். வெளியூர் சந்தைகளுக்கு அடிக்கடி சென்று விற்பனை செய்யப்படும் விதங்களைக் கவனித்தான்.

ஓரிரு அங்காடிகளுக்குச் சென்று காய்கறிகள் மொத்த வியாபாரம் செய்வதற்கான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டான். இயற்கை வழியில் விளைவித்த பொருட்களுக்கான தேவை அதிகமாகி கொண்டிருக்கும் காலம் அல்லவா?

தன்னோடு ஊரின் மற்ற விவசாயிகளையும் இணைக்க முயன்றான். பொருட்களை ஏற்றிச் செல்ல வாகனத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய முற்பட்டான். படித்த அவனது பேச்சிற்கு மதிப்புக் கொடுக்கச் சிலர் இருந்தாலும், ‘படிச்சவன் பாட்டைக் கெடுத்தான், எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்’ நமக்குத் தெரியாததையா இவன் சொல்லப் போகிறான்? எனும் வீம்பில் இவனோடு உடன்படாதவர்களும் ஊரில் உண்டு.

இப்போதெல்லாம் அதிகமாகக் கவனம் ஈர்த்து வரும் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத்திற்குக் கொஞ்சம் கொஞ்சமாய் மாறுவதையே நோக்கமாகக் கொண்டிருந்தான். அதற்கான சில நாட்கள் பயிற்சி முகாமிலும் சென்று கற்று வந்தான். இளம் பரிதியின் உடல் நிலை சற்றுச் சரியாக ஆரம்பித்ததுமே அவனுக்குத் துணையாக வயலுக்குச் செல்ல ஆரம்பித்தார்.

வாழும் ஆசை மனிதனின் உடல் குறைகளை மாற்ற வல்லது, குணமாக்க வல்லது. இளம் பரிதியிடம் வாழும் ஆசை வந்து விட்டிருந்தது அவர் முழுமையாகக் குணமாக்கும் வரை அந்த ஆசை நில்லாது.

ரமேஷின் எண்ணங்கள் சரியான திசை நோக்கி பயணிக்கத் துவங்கி விட்டன. தற்போது தடுமாறினாலும், ஒரு சில வருடங்களில் தனது பாதையில் இன்னும் உறுதிப் பட்டு விடுவான். அறிவியலும், படிப்பறிவும் , வியாபார யுக்திகளும் சேர்ந்த விவசாயியை யாராலும் தோற்கடிக்க இயலாது. அவன் விவசாயியாக வெற்றி பெறட்டும், அவனைப் போல ஒவ்வொரு விவசாயியும் விவசாய நாடாகிய நம் நாட்டில் வெற்றிப் பெறட்டும் அதுவே நம் அவா.

அவர்கள் வீட்டில் இன்னொரு குட்டி விவசாயியும் உதயமாகிக் கொண்டிருந்தாள் அது வேறு யாருமல்ல நம் எழிலரசி தான். தன் கணவனிடம் அவள் கேட்டு அவன் அனுமதி பெற்றுக் கொண்ட விதமும் அதுவேதான்.

குத்தகைதாரர் வந்து சென்ற பின்னர்த் தான் இனி தங்கள் நிலத்தில் விவசாயத்தை முன்னெடுக்கப் போவதாகச் சொன்னவளை முதலில் இது சரிப்படுமா? என்று இந்திரன் பார்த்துக் கொண்டிருந்தான். அலுவலக வேலை போல இது ஒன்றும் ஒன்பது மணி நேர வேலை அல்ல, முடிவுறாத வேலை. தன்னுடைய இருபது வயது மெல்லிடையாளுக்கு அத்தனை பொறுப்பையும், வேலைப்பளுவையும் கொடுக்க முடியுமா? என அயர்ந்தான்.

ஆனால், அவளோ தனது முடிவில் உறுதியாக இருந்தாள். அவளுக்கு துணையாக தனது உறவில் இருந்த இரு பெரியவர்களுக்கு மாத சம்பளம் கொடுக்கும் வகையில் அமைத்து விட்டே பொறுப்பை அவளுக்கு கொடுக்க முன் வந்தான். நாக்பூ ர் செல்லும் முன்பே அத்தனையையும் பேசி ஏற்பாடுகள் செய்து விட்டே புறப்பட்டு இருந்தான்.

சில மாதங்களில் குத்தகை முடிந்த பின்னர்த் எழிலரசி தனது பொறுப்பில் வயலை எடுத்துக் கொண்டாள். பொன் விளையும் பூமியை கைவிட நேர்ந்ததில் குத்தகைதாரருக்கு எழிலரசி மேல் அதீத கோபம் தான். ஆனால், அவள் உரிமைப் பட்டவள் அவளிடம் போய்க் கோபித்துக் கொள்ள முடியுமா?

ஏற்கெனவே தங்கள் வயலின் வேலைகளில் ஈடுபடுகின்றவள் தானே, அதனால் அவளுக்கு அத்தனை வேலைகளும் அத்துப்படி. தாய் வீட்டு நிலத்தை விடவும் புகுந்த வீட்டு நிலத்தின் அளவு அதிகம். முதலில் திணறினாலும், அண்ணனின் உதவியோடு வேலைகளைக் கவனித்துக் கொண்டு இருந்தாள். அண்ணன் வழிக்காட்டுதலை பின் பற்றினாள்.

குழுவாகச் சேர்ந்து விளைப் பொருட்களை விளைவித்து, விற்பனை செய்வது குறித்த யோசனையில் தமையனோடு முதலில் கை கோர்த்துக் கொண்டவளும் அவளே.

ஒவ்வொரு விஷயமும் கணவனுக்குத் தினமும் பகிர்ந்த பின்னர்தான் அவளுக்கு நிம்மதியான தூக்கம் வரும்.

ம்ம்… கிளுக்கெனச் சிரித்தாள் அவள்… ‘அதென்ன தூங்க விடாம படுத்துறீங்க மிஸ்டர் இந்திரன்… கையை வச்சுக்கிட்டு…சும்மா சும்மா இருக்கணும் சொல்லிட்டேன்… ம்ம்…’ கைகளைக் கன்னத்திற்கு அணைவாய் கொடுத்துச் சுகமாய்த் தூங்க ஆரம்பிக்கவும் வீட்டின் கதவே பெயரும் வண்ணம் கதவை தட்டும் சப்தம் கேட்டது.

“ச்சே எவன்டா அவன்?” கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்து அமர்ந்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

முகத்திலோ வெயில் சுள்ளென்று அடித்துக் கொண்டிருக்க, பரபரவென்று எழுந்து நின்றாள் தன்னருகே இருந்த மொபைல் இந்திரனின் எண்ணிலிருந்து 58 மிஸ்ட் கால்ஸ் என்று காட்டி பளீரெனச் சிரித்துக் கொண்டு இருந்தது, கூடவே அண்ணன் ரமேஷின் மிஸ்ட் கால்களும்.

‘அச்சோ’… பதறியவளாகத் தொம் தொம் என இவளை எழுப்பும் பொருட்டுத் தட்டப் பட்டுக் கொண்டிருக்கும் தன் மாமனார் பொருத்திய கதவை காக்கும் பொருட்டு ‘இதோ வாரேன் வாரேன்’ என்றவாறே வாசலுக்கு விரைந்தாள்.

இவள் சப்தம் கேட்டதும் வெளியில் கதவை தட்டும் சப்தம் நின்றது.

பதட்டத்தோடு கதவின் தாழை நீக்கினாள்… எதிரில் அவளது கண்கவர் கள்வன் வெள்ளை சட்டையிலும், கருப்பு காற்சட்டையிலும் நன்கு திருத்திய தோற்றத்தோடு இன்னும் அழகனாக நின்று கொண்டிருந்தான்.

கதவை தட்டிய சப்தத்தில் அலமலந்து வந்த இவளோ வாய்க்கடையோரம் கோழை வடித்தவளாக, முடி கலைந்து தலைவிரிக் கோலமாகக் கசங்கிய அழுக்கியாக இருந்தாள்.
முதலில் கோபமாக இருந்தானோ என்னவோ ஆனால் மனைவியைக் கண்டதும் முகம் மலர்ந்தான் இந்திரன்.

என்ன பாப்பா? எவ்வளவு நேரமா கதவை தட்டுறது? ரமேஷ் குரலில் கோபம் இருந்ததோ?

உள்ளறையில் படுத்திருப்பாளா இருக்கும். அங்கே சட்டுன்னு வெளிச் சத்தமே கேட்காது. மனைவிக்குப் பரிந்தவனாகப் பேசியவன் தான் கொண்டு வந்த வழக்கத்திற்கு மாறான இரு பெரிய பெட்டிகளை உள்ளே கொண்டு வந்தான்.

‘வா அண்ணா’ என்றவள் அவசரமாகப் பின்கட்டிற்குச் சென்று முகம் கழுவி வாய்க் கொப்பளித்து வந்தவள் பாலை சூடாக்கி இருவருக்கும் காஃபி கலக்கி வந்தாள்.

நான் என்ன விருந்தாளியா என்ன? என முனகினாலும் தங்கை தந்ததை வாங்கி அருந்தினான்.

‘அத்தான் இதோ வரேன்’ சொன்னவள் தன் அண்ணனை கவனித்துக் கொள்ளும் படி கணவனிடம் கண்ணால் கேட்டவள் அண்ணனின் பேச்சிற்குப் பயந்து சொல்லாமல் தன் அறைக்குச் சென்று உடைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து பின் கட்டிற்குச் சென்றாள்.

குளித்து வந்தவள் கணவனுக்கும் அண்ணனுக்கும் தோசை வார்க்க தொடங்கினாள். அவளது தலையில் கட்டிய ஈரத்துண்டோடே இத்தனையும் செய்யவும் அண்ணனுக்கு மறுபடியும் கோபம்.

‘இவ மத்த நாள் எல்லாம் சீக்கிரமே முழிச்சு எல்லா வேலையும் செய்வா… இன்னிக்கு என்ன ஆச்சுன்னே தெரியலை?’ முனகினான்.

‘அட சும்மா இருங்க மச்சான் இப்ப எதுக்கு இவ்வளவு பதட்டம்? அவளை நான் இன்னிக்கு பொண்ணு பார்க்கவா வந்திருக்கேன். இன்னும் மூணு மாசம் கழிஞ்சா நாங்க கல்யாணம் ஆகி இரண்டு வருசம் கொண்டாடப் போறோம்.

வேலை செய்யுறப்ப அவ தானே வேலை செய்யுறா? ஓய்வெடுக்கத் தேவை இருக்கும் போதும் எடுக்கத்தான் வேணும். பொண்ணுங்க உடல் அமைப்புக்கும் நமக்கும் ஆயிரம் வித்தியாசம்… நாம அதைப் புரிஞ்சுதான் நடந்துக்கணும். உங்களுக்கும் கல்யாணத்துக்கு பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க இதெல்லாம் ஞாபகம் வச்சுக்கோங்க’ இதமாய்ச் சொன்னவன்…

‘நான் இன்னிக்கு வரேன்னு அவளுக்குச் சொல்லவே இல்லை. சொல்லி இருந்தா ஆளுக்கு முன்னாடி வந்து நின்னிருப்பா…’ பேச்சு பேச்சாய் எழிலரசி பரிமாறிய உளுந்தம்பொடியை ( இட்லி பொடி) எண்ணையில் குழைத்து, சுடச் சுட விழுந்த தோசைகளை இருவரும் சாப்பிட்டு விட்டிருந்தனர்.

தங்கையைத் திட்ட விடாத இந்திரனின் பேச்சில் இனி இவர்களுக்கு இடயே இருப்பது அதிகப் படி என உணர்ந்தவனாய் விடைப் பெற்றுக் கொண்டான் ரமேஷ்.

கதவை தாளிட்டவன் தோசை வார்த்துக் கொண்டிருந்தவளுக்காகக் கையோடு கொண்டு வந்திருந்த நாற்காலியை சமையலறையில் போட்டு அமரச் செய்தவன் அவள் தட்டில் தோசையைப் பரிமாறிய அடுத்தத் தோசைக்கு தோசைக் கல்லில் மாவை ஊற்றி தோய்த்தான்.

எழிலரசி படபடப்பில் ஏனோ தானோவெனச் சுற்றி இருந்த சேலையின் முந்தானை நகரும் வழி தேடிக் கொண்டு இருந்தது.

தோசை வேகும் நேரத்தில் மனைவின் பின்னால் வந்து நின்றவன் டவலில் அடைப்பட்டு இருந்த அவளது கார்குழலை விடுவித்து டவலால் அழுந்தி துடைத்தான். கணவனின் எதிர்பாரா தொடுகையில் அவள் கூசி சிலிர்த்தாள். கனவும் காரனமாக இருக்குமோ?

டவலை காயப் போட்டுக் கை கழுவி வந்தவன் தோசையைத் திருப்பிப் போட்டு சற்று எண்ணை விட்டு முறுகலாக எடுத்து வந்து அவளை சாப்பிட வைத்தான். கணவனின் கவனிப்பில் கூடுதலாக இரண்டு தோசைகள் உண்டவள் கை கழுவ எழுந்தாள்.

‘கோயிலுக்குப் போகலாமா?’ என மனைவியிடம் கேட்க… சற்று நேரத்தில் கணவனும் மனைவியுமாகப் புறப்பட்டுச் செல்லும் வழியில் கணவனிடம் சொல்ல எழிலரசிக்கு ஆயிரம் விஷயங்கள் இருந்தன.

தொடரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here