18. இந்திரனின் காதலி

0
840
Indranin Kadhali
  1. 18. அத்தியாயம்

அத்தான்… எனக்கு நம்பவே முடியலை… கோவிலுக்குச் சென்று திரும்பி வருகையில் மனைவியின் குதூகலத்தை இந்திரன் வெகுவாக இரசித்தான்.

நம்பு, நம்பு இனி தூரம் போக மாட்டேன். ஒன்றரை மணி நேர தூரம் தான் ஆஃபீஸ் வீட்டிலருந்து தினம் போயிட்டு வந்திர வேண்டியது தான்.

தனது வேண்டுதல் நிறைவேற்றிய கடவுளுக்குச் செய்ய வேண்டியவைகளைப் பட்டியலிட்டாள்.

செய்யலாம், ஒவ்வொன்னா சிறப்பா செய்யலாம்.

வேலைக்கு எப்படிப் போகிறதாக இருக்கிறீங்க அத்தான்? வண்டி எதுவும் வாங்கணுமா? போதுமான பணம் இருக்கா உங்க கிட்ட?

வயல் பகுதி கடந்து ஊருக்குள் வந்தும் கூட வளவளத்தவளிடம்,

‘மெதுவா வீட்டுக்குப் போய்ப் பேசலாம், சரியா?’ என்றதும் சுற்றம் உணர்ந்து அமைதியானாள்.

எனக்குக் கொஞ்சம் வெளி வேலை இருக்கு, முடிச்சிட்டு வரவா? நீ வீட்டுக்கு போ’ என்றதும் அவள் முகம் சுணங்கினாள்.

‘கோயிலுக்குப் போனா முதலில் வீட்டுக்கு வந்துட்டு தான் திரும்பப் போகணும்னு சொல்வாங்க, உங்களுக்குத் தெரியாதா?’
சரி கோச்சிக்காத வா முதல்ல வீட்டுக்கு போய் உன்னை விட்டுட்டு வெளியே போறேன்.

ம்ம்… வாடிய முகம் நொடியில் மலர்ந்தது.

‘அனிச்சம் பூவு போல என் பொண்டாட்டி’ மனசு மனதிற்குள்ளேயே எண்ணிக் கொண்டான்.

வீட்டிற்கு வந்ததும் உள்ளே ஓடியவளை இழுத்துக் கைப்பிடியில் வைத்துக் கொண்டவன்,

‘ இங்க பார் எழில், இனி நான் விருந்தாளி இல்லை, இங்க தான் இருக்கப் போறேன். சமையல் தடபுடல் செய்யாத.சாதாரணமா சமைச்சா போதும், உடம்பை நிறைய வருத்தாம, சமையல் முடிச்சு அமைதியா இரு. வயல் பார்க்க போகணும், அம்மா அப்பா எல்லாரையும் பார்க்க போகணும் தான் அதை நாளைக்குப் பார்த்துக்கலாம் சரியா?

ஆடிய தலையைப் பிடித்து நிறுத்தி முத்தம் வைத்தான்.

‘ஒரு வேலை செய்ய வேண்டியது இருக்கு, முடிச்சிட்டு வரேன்’ விடைப் பெற்று கிளம்பியவன் மதியம் சாப்பிட்டுவிட்டு மறுபடி சென்று விட்டான்.

இரவு அவன் திரும்ப வருகையில் எழில் சமையல்கட்டில் இருந்தாள். அங்கேயே இருந்து சாப்பிட்டு முடித்தனர். கைகழுவி பாத்திரங்களைக் கழுவி கமுத்தி (கவிழ்த்து போடுவது) போட்டு விட்டு, தானும் கை கால் கழுவி சுத்தம் ஆகி ஏற்கெனவே பின் வாசலில் அமர்ந்து இருந்தவன் அருகில் வந்து அமர்ந்தாள். அவளது தலையோ அனுமதி கேளாமல் அவன் தோளில் சாய்ந்தது.

‘ நீங்க வந்துட்டீங்க இல்லை, இன்னிக்கு நான் ஒரு கவலையும் இல்லாம அமைதியா படுத்து தூங்க போறேன்’.

என்றவள் கூறியதைக் கேட்டு இந்திரன் அதிர்ந்தான்.

‘என்னது அமைதியா தூங்க போறியா?’

‘ஆமாம், இத்தனை நாளு நீங்க இல்லாம இராத்திரி தூக்கம் இல்லாம பேய் மாதிரி உலாத்துவேன். காலையில தான் தூக்கம் வந்து தொலைக்கும்’.

‘ஏதேது இன்னிக்கு மாதிரியா?’

காலையில் நிகழ்ந்ததை எண்ணி அசடு வழிந்தாள்.

‘கனவில நீங்க வந்தீங்களா… அதில் ஃபோன் சத்தம் கேட்கலை போலிருக்கு’

சொல்லி விட்டு சொல்லக் கூடாததைச் சொன்னது போலத் தன் நாவை கடித்துக் கொண்டாள்.

அவனுக்குச் சுவாரஸ்யமாயிற்று,
‘என்னது கனவில நானா?’

‘…ம்ம்’ முனகினாள்.

‘என்ன கனவு?’

‘அது ஒன்னும் இல்லையே’சமாளித்துக் கண்ணை உருட்டினாள்.

‘சரி மதியம் எங்கேயும் போகாம தூங்குன்னு சொல்லிட்டுத் தானே போனேன். தூங்கினியா இல்லையா?’

‘தூங்கினேனே…’

‘அப்புறம் மறுபடி இப்பவும் தூங்க போறேன்னு சொல்லுற?’

‘என்ன அத்தான் நீங்க லூசா என்ன? இராத்திரி ஆகிடுச்சுல்ல பின்ன தூங்காம?’

அவனிடம் மட்டுமே வெளிவரும் துடுக்குத்தனத்தில் லூசா? என்று விட அவன் மறுபடி திகைத்தான்.

அவன் கோபத்தில் இருக்கிறான் போலும் என்று பயந்தவள், அவன் நாடியை பற்றிக் கொண்டாள்.

‘மன்னிச்சுக்கோங்க அத்தான் இனி மரியாதை குறைவா பேச மாட்டேன்’

கண்டு கொள்ளாதவன் போல எழுந்து உள்ளே அவன் நடந்து செல்ல,

அவளும் அவன் பின்னே ஓடினாள்.

அவன் சட்டென்று நிற்க அவன் மேல் மோதி நின்றாள். இப்போது சங்கடமாக மற்றொரு அசட்டுச் சிரிப்பு…

இன்னிக்கு நாளே நல்லா விடியலை போலிருக்கு மனதிற்குள் நொந்தவள்

‘இன்னொரு தரம் மன்னிச்சுக்கோங்க அத்தான் ப்ளீஸ்… நான் ஒன்னும் வேணும்னு மோதலை…’

அவளைத் தாண்டி சென்றவன் பின் கதவை தாளிட்டு வந்தான், கண்டு கொள்ளாமலே உள்ளறைக்குச் செல்ல அவன் வாலை பிடித்த வண்ணம் அவன் செல்லும் திசை நோக்கி செல்ல…

அவன் சாமி அறையில் நிற்பதை பார்த்து தயங்கி உள்ளே சென்றாள்.அவனோ அருகில் நின்றவளோடு கை கோர்த்தான்.

ஒரு கை அவன் கையில் மாட்டியிருக்க, மற்ற கையையும் இணைத்து அவனோடு வணங்கினாள்.

‘அம்மா, அப்பா எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்க, நாங்க உங்களை மாதிரியே வாழற நாள் எல்லாம் மனமொத்த தம்பதியா வாழணும், எங்க சந்ததி செழிக்கணும். எங்களுக்கு எல்லா இன்ப, துன்பத்திலயும் நீங்க தான் தெய்வமா இருந்து வழி நடத்தணும்’ பேசி முடிக்கவும் அவன் குரல் கரகரத்து விட்டிருந்தது.

அறையினின்று வெளி வந்தவன் எழிலை இழுத்து அணைத்துக் கொண்டான். அந்த அமைதி இருவருக்கும் தேவையான ஒன்றாக இருந்தது. சட்டென்று சுதாரித்துக் கொண்டவன் தான் கோபத்தில் இருப்பதாக எண்ணி தன் வாலை சுருட்டிக் கொண்டு இருப்பவளை சீண்ட ஆரம்பித்தான்.

‘அதென்னடி இந்திரன் மனைவியா ப்ரமோஷன் வாங்கறதுக்கு அன்னிக்கு அழுதவ, இன்னிக்கு தூங்கணும்னு சொல்லி என் ஆசையில பாறாங்கல்லா தூக்கி போட்டுட்டியே?’

இந்திரனின் காதலியாக அல்ல மனைவியாக வேண்டும் , கணவன் அருகாமையிலேயே இருக்க வேண்டும்’, என்று மனமார அவனிடமே வேண்டி இருந்தவள் இன்றைய தினம் போகும் திருப்பத்தை எதிர் கொள்ள முடியாமல் திகைத்தாள்.

‘அதான் ஒன்றரை வருசம் முன்னாடியே மனைவியாகியாச்சே இப்ப என்னவாம்?’குரலெழாமல் திக்கி திணறியது.

‘வில்லிடி நீ உன்னைப் பேசி சமாளிக்க முடியாது’, என்றவன் அவளைக் கையில் தூக்கிக் கொண்டான். இறுக்கச் சாத்தியிருந்த படுக்கை அறையின் கதவை திறந்ததும் மல்லியும், ஜாதி மல்லியும் சேர்ந்த மணம் ஆளை தூக்கியது.

‘நம்ம வீட்டு வாசமா இது? நான் வேற யார் வீடோன்னுல்ல நினைச்சேன்’வியப்பில் தன்னையறியாமல் பேசி முடித்தவள் அந்த ஏற்பாட்டின் காரணம் புரியவும் மறுபடியும் தடுமாறினாள்.

அவளை அவன் இறக்கி விட்டுப் படுக்கையறை கதவை அணைத்தார் போல வைத்தான், எழிலரசிக்கோ கணவனின் முகம் பார்க்கவே கூசியது.
விளையாட்டுப் பேச்சு எங்கோ விடைப் பெற்றுச் சென்றிருக்கத் தலை திருப்பி நின்றிருந்தாள்.

காரணம் புரியாவிட்டாலும் அவன் அவளிடம் சொன்னது போலவே திருத்தமாக நல்ல உடை அணிந்து, அவன் கொடுத்த நாலு முழம் மல்லிகைச் சரத்தையும் அணிந்திருந்தவள் அப்பூக்களைப் போலவே மலர்ச்சியாகத் தோற்றமளித்துக் கொண்டு இருந்தாள்.

வெள்ளை வேஷ்டியும், சட்டையுமாய் நின்றவனை இப்போது கீழ் பார்வையில் ஊன்றி கவனித்தாள்.

‘எழிலு நீ தான் ஒன்னும் தெரியாம இருந்திருக்க, இந்த மனுசன் பயங்கரமா திட்டம் போட்டு வந்திருப்பாங்க போலியே?’ மனதிற்குள் பேசிக் கொண்டாள்.

‘உனக்கு என்னை வேஷ்டில பார்க்க பிடிக்கும்ல அதான் இதையே உடுத்தினேன்’ அவன் பார்வையோ அவளிலேயே நிலைத்து இருந்தது. உன் அலங்காரங்கள் எல்லாம் எனக்காக என்பது போல எனது அலங்காரங்களும் உனக்கானவைகளே என்று சொல்வது போல நின்றிருந்தான்.

‘வயதிற்கேற்ற திண்மையோடு இருந்தான். மனைவிக்குப் பிடிக்குமென்று பெரிய மீசை, அவளுக்குப் பிடித்த வேஷ்டி, அவளுக்கே உரித்தான அவனது மயக்கும் கள்ளச் சிரிப்பு…’ அம்மாடியோ அவள் அசந்து போய் நின்றிருந்தாள்.

எனக்கு?

என்னாச்சு?

எனக்கு…

பயமாயிருக்கா?

ம்ம்… தலையசைத்தவளிடம்

என்னைப் பாரேன்…

தயங்கியவள் அவனது கண்ணோடு கண் பார்த்து நின்றாள்.

என்னைப் பார்த்தா பயமாயிருக்கா?

உலகம் அனைத்திடமிருந்தும் பயந்து போய் இருந்த போது அவளை மீட்டுக் கொண்டவன் அல்லவா அவன். வாடிப் போயிருந்த அவள் வாழ்வில் உயிரூட்டியவன் அல்லவா அவன்…இவனைப் பார்த்து பயமா? உள்ளத்தின் மொழியை நா பேச மறுக்க, தலையோ இல்லையென ஆடியது.

விரித்த அவன் கைகளுக்குள் சரண் புகுந்தாள், பழையவை நினைவிற்குள் வந்திருக்க, அவனைப் பிரிந்து வருந்திய நாட்களெல்லாம் ஞாபகத்தில் இடற, கணவனை இறுக்கக் கட்டிக் கொண்டாள், ஏதோ சிந்தனையில் நிமிர்ந்தவள் அவள் உயரத்திற்கு எட்டிய அவன் இடக் கன்னத்தில் முத்தமிட்டாள். முத்தமிட்ட வேகத்தில் தலை குனிந்து கொண்ட அவளிடம் மறுபடி கேட்டான்.

பயமாயிருக்கா உனக்கு?

‘இல்லை’ தடுமாறி ஒலித்தது அவள் குரல்.
தனது இரு கரங்களால் அவள் முகவாயை தாங்கி இருந்தவன் அவளது நெற்றியோடு நெற்றி முட்டினான், அழுந்த அங்கேயே முத்தமிட்டான்.இடக்கை அவளது முகவாய் விட்டு நகர்ந்து, அவள் இடுப்பை சுற்றி பற்றிக் கொள்ள, அவனது வலக்கை அவளின் முக வடிவை அளந்தது. அவனது நெருக்கத்தில் மூச்சுக் காற்றின் வெப்பமோ அவளைச் சுட்டது.

அவள் கழுத்தில் சட்டெனப் புதைந்தான்… ‘மணமா இருக்கேடி’ கணவனின் எதிர்பாரா செயலில் உடலெங்கும் உரோமக்கால்கள் சிலிர்த்து நிற்க, அவனது அணைப்பிலும், பேச்சிலும் மிகத் தடுமாறினாள்.

இந்திரனோ மனைவியின் கழுத்திலிருந்து நகர்ந்து காது மடல்களில் தேங்கி நின்றான் சில நேரம்.

மனதில் உள்ளவை சில சொன்னானோ? மொத்தமாய் உருகி விட்டிருந்தாள் அவள்.

அவனையே பற்றுக் கோடாய் பற்றிக் கொண்டு முழுவதும் அவன் நோக்கி குழைந்து சரிய, தோளோடு தாங்கிக் கொண்டவன் விடாமல் சொற்களாலும், முத்தங்களாலும் காதலெனும் மலர்க்கணைகள் தொடுத்தான்.

இப்போது முத்தங்கள் கன்னம் ஏறி, கண்கள் சூடி, புருவம் ஏகி வலம் வரவும், பால் வண்ணத்தவள் முகம் சூடாகி செம்மை நிறம் அடைந்தது.

ஏ எழிலு…

ம்ம்…

ஒரு சந்தேகம்டி…

ம்ம்… மயக்கத்தில் பேச்சே புரியவில்லை அவளுக்கு…

நீ நல்ல பால் நிறமா இருக்க…

அவன் சொல்வதை உணராது இருந்தவள் ம்ம்ம் கொட்டினாள்.

நான் கருப்பா இருக்கிறேன், அப்படின்னா நம்ம புள்ள என்ன நிறமா இருக்கும்டி?

சட்டென்று அவன் கேள்வி புரிய…

‘ஹய்யோ’ வெட்கத்தில் தன் கரங்களால் கண்கள் மூடிக் கொண்டாள் அவள்.

பதில் சொல்ல மாட்டியா? சீண்டியவன் தூக்கிக் கொண்டு மலர் மஞ்சம் நோக்கி நடந்தான்.

அடக்கி வைத்த ஆசைகள் அத்தனையும் அவசரமில்லாமல் தனக்கு உரியவளிடத்தில் நிறைவேற்றிக் கொண்டவன் தன் ஒவ்வொரு செயலிலும் தான் ஒரு சிறந்த காதலன் என்றே நிரூபித்தான்.

கணவனில்லாத தனிமையில் தூக்கமில்லாத பல இரவுகளைக் கழித்தவளுக்கு இந்தத் தூக்கமில்லா இரவு போலொரு இனிமையான இரவு அமையுமாவென்று இருந்தது.

காதல் மயக்கத்தில் இருவர் கைகளும், இதழ்களும் தத்தம் இணைகளை மறுபடி, மறுபடி நாட இரவும் கடந்து விடியலும் வந்தே விட்டிருந்தது.

மறுபடி அதே கதவை தட்டும் சப்தம் கேட்க தன் மொபைலை எடுத்துப் பார்த்தான். தவறிய அழைப்புகளைப் பார்த்தால் கதவை தட்டுவது ரமேஷாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணியவன் அவனுக்கு அழைத்தான்.

‘மாப்ள… எத்தனை மிஸ்ட் கால் ஃபோனே எடுக்கலை’ குறை படித்த மனைவியின் சகோதரனை எண்ணி மனதிற்குள் சிரிப்பு எழுந்தாலும்…

‘ஆமா மச்சான் கொஞ்சம் நேரம் கழிச்சு தான் வெளியில போகணும், மதியம் சாப்பிட்டுட்டு தான் வயலுக்குப் போக நினைச்சிருக்கிறேன். இன்றைக்குச் சீக்கிரம் எழும்புற ப்ளானே இல்லை… ’

வாசலில் நிற்பவனை விரட்டும் விதத்தில் பேசிப் பார்க்க அவனோ…

‘சரி நீங்க தூங்குங்க ஆனா, அவ என் தங்கச்சி கழுதை என்ன செய்யுறா? இன்னும் வாசல் தெளிச்சி கோலம் போடலை. கொஞ்ச நேரத்தில சூரிய உதயம் ஆகிடும், கொஞ்சம் கூடப் பொறுப்பேயில்லை. எப்படி வீட்டுல மஹா லக்ஷ்மி வருவாங்க’ பொரிந்தான்.

ஏன் மச்சான் அந்தக் கேட் பக்கத்தில உள்பக்கமா ஒரு ஸ்டாண்ட் இருக்கில்ல?

ஆமா…

அதில் தான் கோலப்பொடி இருக்கும், வந்ததுக்கு ஒரு வட்டமோ, சதுரமோ வரைஞ்சுட்டு போங்க…

ஆங்க்…

இன்னிக்கு மஹாலக்ஷ்மிக்கு பதிலா ஸ்ரீவிஷ்ணு நம்ம வீட்டுக்கு வரட்டுமே?

… எதிரில் கேட்டுக் கொண்டு அவர்கள் வீட்டு வாசலில் நின்றவனுக்குப் பேச்சே வரவில்லை.

போங்க வீட்டுக்கு போங்க காலை சாப்பாட்டுக்கு மாமி கிட்ட எதையாவது சமைச்சு வைக்கச் சொல்லுங்க, பத்து மணி போல நாங்க வரோம்’
அலைபேசியைத் துண்டித்தான். சப்தமெழுப்பாமல் அப்பாவி மச்சானை எண்ணி சிரித்து முடித்தான்.

விடிந்தது அறியாதவளாய் தூக்கத்தில் அமிழ்ந்திருந்தவளை பார்த்து, ஏண்டி உங்க வீட்ல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மார்க்கமா இருக்கிறீங்க?’ விளையாட்டாகக் கேட்டான். சீராக மூச்சு விட்டுக் கொண்டிருந்ததிலும் அழகு தெறிக்க, அருகில் சென்று கவனித்தான், கலைந்த தேவதையாகக் கிடந்தவள் மீதான மயக்கம் கூடியது. அவள் கன்னத்தை வருடிப் பார்க்கவும் அதன் மென்மை அவனை இழுத்தது.

வேண்டாம் அவள் தூங்கட்டும், எழுந்து சென்று அன்றைய நாளை மிகுந்த மன நிறைவோடு துவக்கினான்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here