19. இந்திரனின் காதலி

0
1278
Indranin Kadhali

அத்தியாயம் 19

இந்திரன் எழிலரசி சயனித்து இருந்த உள்ளறையின் கதவு திறந்திருக்க, பின்பக்கம் வாசலையும் இந்திரன் திறந்து விட்டிருக்க, அதனால் அக்கம் பக்கம் மாடு, கோழி சப்தங்கள் எல்லாம் கேட்டு எழில் அரக்க பரக்க எழுந்தாள். படுக்கை அறை முழுக்கச் சிதறிக்கிடந்த பூக்கள், மொக்குகள், மனதின் ஓரம் தித்திப்பாய் மிகுந்திருந்த முன் இரவின் நிகழ்வுகள் என ஒவ்வொன்றாய் ஞாபகம் வரவும் கண்களைச் சுழற்றி கணவனைத் தேடினாள்.

அவனை அறைக்குள் காணவில்லை என்றதும், மிக நல்லதாகப் போயிற்றென்று எண்ணியவாறே மாற்றுடை எடுத்துக் கொண்டு படபடவெனப் பின் பக்கம் தண்ணீர் தொட்டி நோக்கி செல்ல, இந்திரன் அப்போதுதான் குளித்து முடித்து அங்குத் தன் உடலை துடைத்துக் கொண்டு நின்றிருந்தான்.

அவனைக் கண்டதும் கூச்சம் பிடுங்கி தின்ன, எப்படி அவனைக் கடந்து செல்வது? என்கின்ற சிந்தனையில் அவள் நிற்க எதிரில் வந்தவனோ தனது கையிலிருந்த துவாலையை அவள் தோளில் போட்டு விட்டு,

’ வெந்நீர் கலந்து வைத்திருக்கிறேன் போய்க் குளி’

என்று குளியலறையைக் கைகாட்டினான்.

குளித்து வந்தவள் படுக்கையறை சுத்தம் செய்யச் சென்றால் அங்கே ஏற்கனவே சுத்தமாக இருந்தது அழுக்குத் துணிகள் தனியாக எடுத்து வைக்கப்பட்டிருந்தன. வீட்டையும் அதற்குள்ளாகத் துப்புரவு செய்து விட்டிருந்தான்.

தினமும் அவள் சாதாரணமாகச் செய்கின்ற வேலைகள் தான் ஆனால் இன்று அவன் தனக்குக் காட்டிய தனிப்பட்ட அனுசரணையில் மனம் நெகிழ்ந்தவள் சமையலறையில் நின்று கொண்டிருந்தவன் முதுகில் சாய்ந்து அவனை இடுப்போடு கட்டிக்கொண்டாள்.

தன் வேலையில் ஆழ்ந்து இருந்தவனோ திரும்பி,

‘இப்ப நீ ஒன்னும் சமைக்க வேண்டாம் .இந்தக் கடுங்காப்பிக் குடித்துவிட்டு உங்க அம்மா வீட்டுக்கு போவோம் சரியா?’ என்று சொல்லவும் ஒன்றும் புரியாதவளாய்…

‘எதுக்கு அத்தான்?’ என்றாள்.

காலையில் நிகழ்ந்ததைச் சொல்லவும் அவளுக்குத் தன் அண்ணனை கணவன் சீண்டியது குறித்துக் கோபம் வந்துவிட்டது.

‘அவங்க உங்களை விடப் பெரிய வாங்க ஞாபகம் இருக்கட்டும், இந்தச் சும்மா சும்மா சீண்டுற வேலையெல்லாம் எங்க அண்ணன் கிட்டே வெச்சுக்கக் கூடாது’ மிரட்டினாள்.

‘அடி போடி வயசு எல்லாம் பார்க்காதே அவன் இன்னும் சிங்கிள் நான் குடும்பஸ்தன், அப்படிப் பார்த்தா நான்தான் பெரியவன்’ என்று என்று சொன்னான்.

முறைத்து நின்றவளை கண்டுகொள்ளாமல்

’ 90 கிட்ஸ்னு உன் அண்ணா அடிக்கடி நிரூபிக்கிறான் ரொம்ப அப்பிராணியா இல்ல் இருக்கிறான்’

என்று அவனைக் கிண்டல் அடித்தவனாக

‘வா வா உங்க அம்மா சமைச்சு வச்சு இருப்பாங்க போய்ச் சாப்பிட்டு வரலாம்’ என்றவாறு முன் வாசலை திறந்தவன் திகைத்து நின்றான்.

‘ஏன் அத்தான்? என்ன ஆச்சு?’

என்று அவன் பின்னே வந்தவளும் திகைத்து நின்றாள். ஏனென்றால் இந்திரன் விளையாட்டிற்குச் சொன்னதைச் சீரியஸாக எடுத்துக் கொண்டு ரமேஷ் அவர்கள் வீட்டு வாயிலில் செவ்வகமாகக் கோலப் பொடியில் வரைந்து ‘நல் வரவு’ என்று எழுதி விட்டே சென்றிருந்தான்.

எழிலரசி அதை எட்டி பார்த்து இவனை முறைக்கவும் இந்திரன் அடக்க முடியாமல் சிரிக்க ஆரம்பித்தான்.

‘என் மச்சான் மச்சான் தான்’ என்று வயிற்றைப் பிடித்துக்கொண்டு இன்னும் சிரிக்க,

‘உங்களுக்கு என் அண்ணனை பார்த்தா சிரிப்பு சிரிப்பாவா வருது?’

கடுப்பானவளிடம் திரும்பினான்.

‘அப்படி இல்லைடி, உங்க அண்ணன் இதையெல்லாம் எனக்காகச் செய்கிறான் என்று நினைக்கிறியா?

அவனுக்கு உன் மேல் பாசம் அதிகம் அதனால் தான் இத்தனையாய் பார்த்து பார்த்துச் செய்கிறான். இல்லேன்னா நாங்க எல்லாம் ஒரே போல விளையாடி வளர்ந்து வந்தவங்க தானே. இத்தனை மரியாதை கொடுக்கத் தேவை என்ன இருக்கு? சொல்லு’

சமாதானப்படுத்தியவாறே மனைவியோடு, தன் மாமியார் வீட்டில் சென்று, விருந்துண்டு அடுத்த வாரம் ரமேஷுக்குப் பெண் பார்க்கச் செல்ல வேண்டுமென்று இளம்பரிதியும், குமுதாவும் சொல்ல அதற்கான தயாரிப்புகளில் இறங்கினர்.

அங்கிருந்து திரும்பிய அவர்கள் தங்களுடைய நிலத்தைப் பார்வையிட சென்றார்கள். அங்கே தங்கியிருந்து விவசாயம் செய்துவரும் முதிய தம்பதியிடம் பேசி விபரங்களைக் கேட்டு அறிந்து கொண்டான்.

இப்போது ஆரம்பக் கட்டத்தில் மாதாந்திர சம்பளம் கொடுப்பது, மின்சாரம் மேலும் பல்வேறு செலவுகள் இழுத்துவிட்டு இருந்தாலும், கூடிய விரைவில் இலாபம் காணக்கூடிய அளவில் விளைச்சலுக்காக அவர்கள் காத்திருந்தனர். எழில் தன் வீட்டு வேலை, படிப்பு தவிர்த்த மற்ற நேரங்களில் அங்கேயே விவசாயத்தில் நேரம் கழித்து அவர்களுடனாக அத்தனையும் கவனித்து வந்துக் கொண்டிருந்தாள்.

திருமணத்திற்காக அவள் வைத்திருந்த வேண்டுதல், கணவன் பணியிட மாறுதலுக்காக வைத்திருந்த வேண்டுதல், படிப்பிற்காக வைத்திருந்த வேண்டுதல் என இந்திரனை பாடாய் படுத்தி ஒன்றையும் விடாமல் எழிலரசி நிறைவேற்றினாள்.

ரமேஷ் தன்னுடைய வெற்றிப் பாதையில் பாதம் பதிக்க துவங்கி இருந்தான் என்றே சொல்ல வேண்டும். இப்போது விளைச்சல் பொருட்களை ஏற்றிச்செல்ல சின்னதாக ஒரு வண்டியை வாங்கி இருந்தான். அதனால் அவ்வூரில் இருந்தவர்கள் முன் போல எப்போதும் ராசுவையே நாடிச் செல்ல தேவை இல்லாமல் ஆகிற்று.

ராசு குறைந்த விலையில் பொருட்களை வாங்கி அதிக விலையில் விற்றுக் கொண்டிருந்தான் என்றால், ரமேஷ் ஏனைய விவசாயிகள் பொருட்களைக் கொண்டு செல்வதற்கான பணத்தை மட்டுமே பெற்றுக் கொண்டு, அவர்கள் பொருட்களை உரிய இடத்தில் விற்பதற்கும் உதவி செய்து, அதில் குறிப்பிட்ட சதவிகிதம் மட்டும் லாபம் பெற்றுக்கொண்டதால் இப்போது அந்த ஊரில் உள்ள விவசாயிகள் வாழ்வில் சற்று முன்னேற்றம் காணப்பட்டது.

அவ்வூர் விவசாயிகள் மனதில் முன்பு போலத் தங்கள் பொருட்களை எங்கே விற்க? என்னும் குழப்பம் தயக்கம் எதுவும் இல்லை.

ரமேஷ் தன்னுடைய படிப்பறிவை உரிய விதத்தில் உபயோகித்து வந்தான். தன்னுடைய திட்டத்தில் சேர்ந்து இருந்த தன்னிடம் பதிவு செய்து வைத்திருக்கும் விவசாயிகளிடமிருந்து விவரத்தை பெற்றுக் கொண்டு எந்த விளைபொருள் எப்போது அறுவடை செய்யப்படும் என்கின்ற காலவரையைப் பெரு வியாபாரிகளுக்கு விபரத்தை அனுப்புவான்.

நல்ல பொருள் அதுவும் இடைத்தரகர் இல்லாமல் நேரடியாகக் கிடைக்கும் விதத்தில் அமையும் விளை பொருள் கிடைக்குமானால் வியாபாரிகள் எதற்காக வேண்டாம் என்று சொல்ல போகிறார்கள்? எனவே, ரமேஷின் ஏற்பாடுகளின் படி இப்படி இந்த விவசாயிகளின் விளை பொருள்கள் அறுவடை செய்யப்படும் முன்பாகவே முன்பதிவு செய்யப்பட்டு விடும். அறுவடைக்கு பின்பாக அதனை கொண்டு சேர்த்து பணத்தை வாங்கி வருவது மட்டும் தான் அவர்கள் வேலையாக இருக்கும்.

பல நேரங்களில் எதிர் பார்த்த அளவிற்கு காய்கள், விளை பொருட்கள் தரம் இல்லாது போனாலோ,வியாபாரிகள் சொன்ன விலையை தராது போனாலோ சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்படுவதும் உண்டு.ஆனால், அதனை ரமேஷ் நாசூக்காக சமாளித்து விடுவான். ஆக, தனக்கென்று ஒரு பெயரை குறுகிய காலத்தில் ஈட்டி விட்டிருந்தான் அவன்.

வருடங்கள் கடந்திருந்தன, எழிலரசி இப்போது உள்ளூரிலேயே ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தாள். அவர்கள் நிலத்தின் விவசாயமும் அவ்வப்போது சின்னச் சின்னச் செலவுகளை வைத்தாலும், நல்ல இலாபம் ஈட்டி, செவ்வனே நடந்து கொண்டு இருந்தது.

அன்று ஞாயிற்றுக் கிழமை லீவில் இந்திரனின் கார் எடுத்துக் கொண்டு பக்கத்துக் கிராமத்திற்கு வந்திருந்தார்கள்.

இளம்பரிதி முன்பைவிட வெகுவாய்த் தேறியிருந்தார், பெண் வீட்டு ஆண்களோடு அமர்ந்திருந்தார். குமுதா பட்டுச் சேலையில் மாமியார் களை துலங்க அமர்ந்திருக்க, கல்லூரி முடித்து வேலை தேடிக் கொண்டிருப்பதாகச் சொல்லப் பட்ட அந்தப் பெண் மிக மரியாதையாகச் சபைக்கு வந்து எல்லோரையும் வணங்கிச் சென்றாள்.

சிறிது நேரத்தில், ‘பொண்ணுக்கு மாப்பிள்ளை கூடப் பேசணுமாம்’ என அழைப்பு வர அன்றைய தினத்தின் நாயகன் ரமேஷ் எழுந்து நின்றான்.

‘இந்தப் பொண்ணாவது அமையணுமே ஆண்டவா…’ இந்திரன் எழிலரசியின் காதினுள் முணுமுணுத்துத் தொடையில் கிள்ளையும் பெற்றுக் கொண்டான்.

‘ஏண்டி என்னைக் கிள்ளுற? உங்க அண்ணன்காரன் தான் போகிற இடமெல்லாம் பேச தெரியாம பேசி சொதப்பி வைக்குறான். இதுவரை எத்தனை பொண்ணு பார்த்தாச்சு ஒன்னாவது அமைஞ்சதா? நைண்டீஸ் கிட்ஸ்னு மறுக்கா மறுக்கா ப்ரூவ் செய்றாண்டி’

‘எங்க அண்ணனை சீண்டாதீங்க’ குரல் எழுப்பாமல் முணுமுணுத்தாள் எழிலரசி….

‘ப்பா…’ குமுதா பாட்டியின் மடியில் இருந்து இறங்கி, தடுமாறி நடை பழகி வந்த அந்த ஃப்ராக் அணிந்த பூஞ்ச்சிட்டு கவிமலர் இந்திரனை நோக்கி வந்தாள்.

‘என் கருப்பு நிறமா? உன் பால் வெள்ளை நிறமா? நம் குழந்தை எப்படி இருக்கும் என்று அந்தரங்க நேரத்தில் அவன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்வதைப் போல இந்திரனின் தாயைப் போலவே பிறந்திருந்தாள் அவனது மகள்.

இருவர் நிறமும், உருவமும் இன்றி புது நிறத்தில் அந்த முத்துச் சிரிப்போடு அவனது உலகத்தை வண்ணமயமாக்கவே பிறந்திருந்தாள் போலும். மகள் பிறந்த அன்று அவளை கையில் ஏந்துகையில் இந்திரன் தன் தாயே திரும்ப வந்து விட்டதாக நெக்குருகி போய் விட்டிருந்தான்.முன்பும் மனைவியை கையில் வைத்து தாங்குவான் தான், தனக்கு மகளை பெற்றுத் தந்த பின்னர் இன்னுமாய் கொண்டாடினான். தனிமையில் இருக்கும்போது தன் மகளைக் கொஞ்சுவது, ‘என் அம்மாவா நீங்க?’ என்பதாகத்தான் இருக்கும்.

மகளுக்கும் தகப்பனுக்கும் மிகுந்த ஒட்டுதல் அவன் இருந்தால் அவள் தாயை தேடுவதே இல்லை. பசித்தால் மட்டும் தாயை நாடுவாள்.ஆயினும், எழிலரசிக்கு பள்ளி வேலை, வயல் வேலை என கவனித்துக் கொள்ள ஏராளமான வேலைகள் இருக்க தகப்பனும், மகளும் கொஞ்சுவதை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவாள். அவளது வேலை வேலைப்பளுவிற்கு எப்படியாவது மகள் சேட்டை செய்யாமல் இருந்தால் போதும் என்கின்ற நிலை தான் இப்பொழுது.

விலகியே இருந்த மகளிடம் அவள் கர்ப்பகாலத்தில் வந்து கவனித்து இணைந்துக் கொண்டார் குமுதா. தன்னுடைய தவறுகளை உணர்ந்து திருந்தி விட்டாரெனினும் அவ்வப்போது எதையாவது பேசி வைப்பார். நம் அம்மா தானே என எழிலும் இப்போது அவரது குணம் புரிந்து அதனை பெரிது படுத்துவதில்லை.

பேத்தியை கொஞ்சுவதிலும், கை கோர்த்து வலம் வருவதிலும் இளம் பரிதிக்கு மிகவும் பெருமை. பெண் குழந்தைகள் காட்டும் பாசம் யாரையும் உருக்க வல்லது. மழலையில் மிழற்றும் பேத்தியின் பேச்சில் அவரும் மயங்காது இருப்பாரோ?

மச்சானை பெண்பார்க்க சென்ற இடத்தில் கலாய்த்துக் கொண்டிருந்த இந்திரன் தன் மகள் வந்து ‘ப்பா’ என்றழைக்கவும் ‘என்னடா செல்லம்?’ என்று அவளை தூக்கி அணைத்து மடியில் இருத்தினான்.

மா மா… ரமேஷ் சென்ற திசையை காட்டினாள்.

அவளுக்கு தகப்பன் அளவிற்கு மாமாவும் மிக இஷ்டம். எங்கே வந்த இடத்தில் மாமா எங்கோ சென்று விட்டானோ? எனும் பயத்தில் தகப்பனிடம் சொல்ல வந்திருந்தாள். குழந்தைகளுக்கு அவர்கள் அப்பாக்கள் தானே நாயகர்கள். மாமாவிற்கு ஆபத்தென்றால் அப்பா அழைத்து விடுவார் எனும் நம்பிக்கைதான்.

‘ஆமா உன் மாமா இப்ப வந்திருவான் பாப்பா… பாஸாக ஆல் தி பெஸ்ட் சொல்லுடா குட்டிமா…’

தன் சகோதரனை கணவன் மறுபடி கிண்டலடிப்பதை பார்த்தவள் அவனுக்கு தொடையில் இன்னொரு கிள்ளை பரிசளித்தாள்.

‘வர வர ரொம்ப வன்முறையில இறங்குறடீ, உன்னைக் குடும்ப வன்முறை சட்டத்தில் பிடிச்சுக் கொடுத்தாதான் சரி வருவ’ மிரட்டினான்.

மாமா… என மறுபடியும் மகள் மிழற்றினாள்… அவளது குரல் கேட்டு நிமிர்ந்தவர்கள் முன்பு முகத்தில் இப்போது ஒளியோடு வந்து கொண்டிருந்தான் ரமேஷ்.

‘உண்மையிலேயே உங்க அண்ணன் பாஸாகிட்டான் போலிருக்கு, கைய கொடு…’

அவன் சொன்னதை போலவே ரமேஷீக்கு அந்த பெண் மகேஸ்வரியை மிகவும் பிடித்து இருந்தது. குமுதா எதையோ சொல்ல வந்தார், இந்திரன் சமார்த்தியமாக பேச்சை மாற்றினான். எளிமையான குடும்பம் போல இருந்தது. மிகுந்த பணம், நகை என்று மாமியார் வரதட்சணை பேசி தன் மச்சானுக்கு பிடித்த பெண் அமையாமல் போய் விடக் கூடாதென முன்னெச்சரிக்கையாக நடந்துக் கொண்டான்.

‘மாமா’தன்னிடம் பாய்ந்த மருமகளை அள்ளி அணைத்துக் கொண்டான் ரமேஷ்.

வீட்டிலிருந்து வந்த போதே மருமகளுக்காக வாங்கி வந்திருந்த சாக்லேட்டை எடுத்து கொடுக்க,

‘இப்போது கொடுக்காதே’என்று அண்ணனிடமும்

‘பாப்பா சாக்லேட் வேண்டாம்’ என்று மகளிடமும் எழிலரசி சொல்ல இருவருக்கும் காதே கேட்கவில்லை.

கவிமலர் முன்னெச்சரிக்கையாக அம்மா இருந்த பக்கமே செல்லாமல் தாத்தா இளம்பரிதியிடம் சென்று மடியில் அமர்ந்துக் கொள்ள, மற்றவர்கள் வீட்டில் வந்து எழிலரசியாலும் ஒன்றும் சொல்ல முடியாமல் போயிற்று.

பெரியவர்கள் அமர்ந்து பேசி அன்று நிச்சய தேதிக்கான நாளை குறித்தனர்.பேச்சு முடிந்து இந்திரன் மகளை தேடிய போது எழில் அவளில் சாக்லேட் தீற்றிய முகத்தை தனது கடுகட்வென கோபத்தோடு கழுவிக் கொண்டிருப்பது தெரிந்தது.

அருகே போய் நின்றான்.

‘உங்க மகளுக்கு பல்வலி, பல் சொத்தைன்னு வந்துச்சோ, வலிக்குதுன்னு அழுதாலோ நீங்களும் இவ மாமாவும் தான் பார்த்துக்கணும் சொல்லிட்டேன். எப்ப பாரு இனிப்பை கொடுக்கிறது.’

சேலை தலைப்பில் மகள் முகத்தை துடைத்துக் கொண்டிருந்தவளிடம் சின்னவள், ‘ம்மா’ என்றாள்.

‘போடீ பேசி மழுப்பாத, மத்த நேரம் ‘ப்பா’ ‘மாமா’ன்னு ஓடுவல்ல இப்ப என்ன?’

தாய் முகம் கோபத்தில் இருப்பதை தாங்க முடியாமல் சின்னச் சிட்டு தன் பிஞ்சு கரத்தால் கன்னம் தொட்டு குனிந்து முத்தமிட்டது.

சட்டென்று அவள் கட்டுப் பாட்டை மீறி எழில் புன்னகைத்து விட்டாள். மகளுக்கு முத்தங்கள் வைத்தாள்.

‘போ, அப்பாட்ட போ’ என்றவளாய் கணவன் முகம் பாராமல் மகளை அவனிடம் கொடுக்க,

ஏ எழில், இப்ப என் கிட்ட எதுக்கு மூஞ்ச தூக்குற? நான் என்ன செய்தேன்?

கணவனிடம் மகளை கொடுத்து விட்டு சென்று விட்டாள்.

தொடரும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here