2. இந்திரனின் காதலி

0
938
Indranin Kadhali

தன் முன்னே விரைந்துச் சென்று கொண்டிருக்கும் தாயை எட்டிப் பிடிக்க முயன்றவளாய் பெரிய எட்டுகள் வைத்து நடந்து கொண்டிருக்கும் எழில் எனும் எழிலரசி பெயருக்கேற்பவே எழில் தோற்றம் கொண்டவள்.

எழிலுக்குக் குட்டி குட்டியே வளர்க்கப் பட்டதால் வயது கூடியதே தவிர, சூட்டிகையான குணங்கள் இல்லை. தன் அம்மாவிடம் எப்பொழுதும் ஏச்சுகள், பேச்சுக்கள் கேட்டே வளர்ந்ததால், அவளுக்கு மனதில் அதிகமாகத் தைரியம் கிடையாது. குமுதாவும் தனக்குப் பயப்படும் மகளை எப்போதும் அதட்டி வளர்த்து வந்தார். அவரைப் பொறுத்தவரையில் பெண்கள் வீட்டிற்கு அடங்கி எல்லோருடைய விருப்பத்திற்கு ஏற்பவும் வாழ வேண்டும்.
எவரும் தன்னுடைய பெண்ணை ஒரு வார்த்தை குறைவாகப் பேசிவிடக்கூடாது என்பதற்கான ஒரு பதட்டமான சிந்தனையைக் கொண்டவராக இருந்தார்.

மகளும் மனைவியும் தமது வயலில் அறுப்பு வேலையைக் கவனிக்கச் செல்லவும், அதனை இளம்பரிதி கையாலாகாதவராகப் பார்த்துக்கொண்டிருந்தார். தான் மலைப் போல நம்பி படிக்க வைத்துக் கொண்டிருந்த மகன் ரமேஷ் தன்னை ஏமாற்றியதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வைராக்கியமும், ஆணவமும் மிக்கப் பழைய காலத்துச் சிந்தனைக் கொண்ட மனிதர் அவர்.

விஷயம் தெரிந்ததும் மகனுக்குப் போன் போட்டு கத்திய அன்றிரவே அவருக்கு ஒரு பக்கமாக இழுத்துக் கொண்டது. மகன் அதற்குப் பின் அவருக்குப் போன் பேசவும் இல்லை. அவனைக் குறித்த எந்தத் தகவல்களும் இல்லை. ஒரு இடத்தில் நின்று பழகியிராத அவருடைய கால்கள் அன்றிலிருந்து ஓய்வு எடுத்துக் கொண்டன. தான் செய்ய வேண்டிய வேலைகளையும் தன்னுடைய பொறுப்பையும் மனைவி மற்றும் மகள் தலையில் போட்டுக்கொண்டு தான் வீட்டில் இருப்பது அவருக்கு மிகவும் மன வருத்தமாக இருந்தது.

அங்கு வயலில் வேலை செய்ய ஆட்களைப் பார்த்து அமர்த்திக் கொண்டிருந்த குமுதா இடைத்தரகன் ராசுவிடம் மன்றாடி கொண்டிருந்தாள். பொதுவாகவே நிலத்தின் உரிமையாளர்களைவிட வேலை செய்ய ஆட்கள் அழைத்துவரும் இடைத்தரகர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் உண்டு. தற்பொழுது வேலைக்கு அதிகமாக ஆட்கள் கிடைக்காத நிலையில் பயிர்கள் அறுவடை செய்யும் காலம் தாண்டிச் சென்று விட்டால், அறுவடைச் செய்தாலும் பயன் இராது என்பதால், உரிய காலத்தில் உரிய வேலைகள் நடப்பதற்காக ராசு போன்ற செல்வாக்கான மனிதர்கள் உதவியும் அவர்களுக்குத் தேவையாக இருந்தது.

குமுதா இம்முறை தன் வயலில் கத்தரிக்காயை பயிரிட்டிருந்தார். ஆரம்பம் முதலே செய்ய வேண்டிய எல்லா வழிமுறைகளையும் செய்து, பயிரின் ஊட்டச்சத்துக்காக உரங்களிட்டு, சரியான விதத்தில் அதாவது ஏழு நாட்களுக்கொரு முறை தண்ணீர் பாய்ச்சி, வயலில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்படியும் கூடக் கத்தரிச் செடிகளில் இருமுறை பூச்சித்தாக்குதல் ஏற்பட்டு, சில செடிகள் மஞ்சள் நிறமாக மாறி, உருக்குலைந்து, காய்ந்து இறந்து விட்டிருந்தன ஆனால், நல்ல வேளையாகப் பெருமளவு செடிகள் பாதிக்கப் படவில்லை. பயிர் செய்வதும் கருவுற்ற குழந்தையைப் பெற்றெடுப்பதுவும் ஒன்றே. அறுவடை செய்யும் வரையிலும் மனம் திக் திக்கென அலைபாய்ந்துக் கொண்டுதான் இருக்கும். காலையில் மழை தூவிய போதும் அவள் மனதில் சிறிது அச்சம் எழுந்தாலும் கூடச் சட்டென மழை நின்றுப் போனதால் மனதில் மகிழ்ச்சியே.

‘அறுவடை முடிந்து காய்கள் சந்தைக்குப் போகும் வரைக்கும் ஒரு பிரச்சனையும் வராம காப்பாத்து ஆத்தா’ மனதிற்குள் வேண்டிக் கொண்டே தான் வயலுக்கு வந்திருந்தார் குமுதா.

இன்றே அறுவடையை முடித்து விட வேண்டும் என்று எண்ணிய வண்ணம் வந்து பார்த்தால் ராசு குறைவான ஆட்களை மட்டும் அறுவடைக்குக் கொண்டு வந்திருந்தான். அவனிடம் கெஞ்சி கூத்தாடி இன்னும் நான்கு பேரை வரவழைக்க வைத்து விட்டு தானும் வேலை செய்கின்றவர் கூடவே சென்று மேற்பார்வை பார்த்துக் கொண்டே அறுவடையில் ஈடுபடலானாள்.

ராசு விவசாயிகளுடைய தேவைகளை நிறைவேற்றி மிகுதியாக இலாபம் கண்டு கொண்டு இருப்பவன். அவனுக்கோ வயலின் ஓரம் இருந்து கொண்டு சின்னச் சின்ன வேலைகள் செய்து கொண்டு நிற்கும் மருண்ட பார்வை கொண்ட குமுதாவின் மகள் மீது இப்போது ஒரு கண் அல்ல இரண்டு கண்களும்தான்.

ராசுவை பொருத்தவரையில் அவன் மனைவியாக ஒரே தகுதி கணவன் என்ன செய்தாலும் எதிர்த்து கேள்வியே கேட்க கூடாது. வீட்டிற்கு அடங்கிய குணம் கொண்டவளாக, பயம் கொண்டவளாக இருக்க வேண்டும். எழில் அவன் எதிர்பார்த்த அத்தனை தகுதிகளோடு கூடவே மிகுதியான அழகு கொண்டவளாக இருந்தாள். எப்படியாவது அவளைத் திருமணம் செய்து கொண்டால் அதட்டி உருட்டி அவளிடம் குடும்பம் நடத்தி பிள்ளைகள் பெற்றுக் கொண்டு அதிகாரத்தோடு வாழலாம்.

அதுபோலத் தான் நினைக்கும் நேரமெல்லாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கின்ற சுகவாசியாக, மற்ற பெண்களோடு எந்நேரமும் கூத்தடிக்கலாம். இப்படிப்பட்ட பயந்த பொண்டாட்டி இருந்தால் தனக்கு எதிர் கேள்வி கேட்க வாய்ப்பு இல்லை. அதுபோல அவர்கள் வீட்டில் ஆண்களும் உருப்படியாக இல்லாதபட்சத்தில் இவன் என்ன செய்தாலும் யார் கேட்கப் போகிறார்கள்? அவன் குமுதாவைக் குறித்தும் அறிந்திருந்தானே?

குமுதா மிகவும் பழமையான சிந்தனை கொண்டவர். ‘ஆம்பளைன்னா தப்புதான் செய்வான் நாம அத கண்டுக்கக் கூடாது’ என்ற பழங்காலச் சித்தாந்தங்கள் கொண்டவர். ஒருவேளை ராசு திருமணத்திற்குப் பின் வாழும் வாழ்க்கையில், எழில் ராசுவின் தவறுகளைத் தன் அம்மாவிடம் விஷயத்தைக் கொண்டு சென்றாலும் கூட அவரால் என்ன செய்துவிட முடியும்? ஆம்பளைன்னா அப்படித்தான் இருப்பாங்கன்னு புரிஞ்சுக்க, சமாளிச்சுக்க என்றுதான் சொல்லி அவனிடம் திரும்ப அனுப்பி வைத்து விடுவார் எனும் நம்பிக்கை அவனுக்கு இருந்தது.

அடித்தோ, மிதித்தோ அவளை அடிமையாக வைத்துக் கொள்ளலாம் என்று பல நாட்களாக அவள் மேல் அவனுக்கு எண்ணம் இருந்து வந்தது. ஆனால், இதைக் குமுதாவும், எழிலும் அறியாமல் இருந்தார்கள். அடாவடியாகப் பேசிக்கொண்டிருந்த ராசுவிடம் கெஞ்சி, கூத்தாடி வேலைக்கு ஆட்களை வரவழைத்து, அன்றைய வேலைகளை எல்லாம் முடித்துச் செய்து முடிப்பதற்குள் அம்மாவும் பெண்ணும் களைத்துப் போனார்கள். அன்று மதியம் சாப்பிட கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.

வீட்டில் இருந்த இளம்பரிதிக்கு எழில் காலையில் பொங்கி வைத்திருந்த சாப்பாட்டை, மதியம் பக்கத்து வீட்டில் இருந்த பெரியம்மா ஒருவர் வந்து பரிமாறிச் சென்றிருந்தார். கிராமங்களில் ஒருவருக்கு ஒருவர் உதவும் செயல்கள் மிகவும் சாதாரணமான ஒன்றே. ஒருவழியாக வேலைகளை முடித்துவிட்டு, வீட்டிற்கு வந்து சேர்ந்த குமுதாவும் எழிலும், குளித்துச் சமைத்து சாப்பிட்டு உறங்கினர்.

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here