20. இந்திரனின் காதலி

2
1752
Indranin Kadhali

அத்தியாயம் 20

அன்றிரவு:

மகன் திருமணம் முடிவான மகிழ்ச்சியில் குமுதா தங்கள் வீட்டிலேயே இரவு சாப்பாட்டிற்காக மகள் குடும்பத்தை அழைத்திருக்க, சாப்பிட்டு முடித்து அவர்கள் முன் திண்ணையில் அமர்ந்து இருந்தனர்.

அலைச்சலில் சோர்ந்த கவிமலரை அசதி தீர வெதுவெதுப்பான வெந்நீர் குளியல் ஊற்றி, நேரமே உணவையும் கொடுத்து சீக்கிரமே உறங்க வைத்திருந்தாள் எழில்.

‘பரவாயில்லையே மச்சான் ஒருவழியா உனக்குப் பொண்ணைப் பிடிச்சிடுச்சு…’

‘ஆமாம் மாப்பிள்ளை, அவளுக்கும் விவசாயம்னா ரொம்பப் பிடிக்குமாம். நம்ம ஊர்ல எனக்கு நல்ல பெயர்னு அவ கேட்டிருந்து இருப்பா போலிருக்கு. இப்ப தான் நம்ம நிலங்களில் இராசயனம் இல்லாமல் விளைவிக்கும் பொருள் நல்லா விற்பனையாகத் துவங்கிடுச்சே? இந்த விஷயமெல்லாம் நல்லா தெரிஞ்சு வச்சிருக்கிறா. எனக்கு எப்படி மனைவி வேணும்னு நினைச்சேனோ அப்படியே அமைஞ்சு இருக்கு’ ரமேஷின் குரலில் மகிழ்ச்சி.

தனது குறிக்கோளை நோக்கிச் செல்கின்ற அவன் தனக்கு ஏற்ற துணையை நாடுவதில் எந்தத் தவறும் இல்லையே?

‘நான் கூடப் பொண்ணு கொஞ்சம் வெளுப்பா இருந்தா நல்லாயிருக்கும்னு நினைச்சேன்’

என்ற குமுதாவை அங்கு யாரும் மறித்துப் பேசவுமில்லை, அவர் கூற்றைப் பெரிது படுத்தவுமில்லை.

அந்தக் குடும்பத்தை முழுமையாய் நிலவொளி போல மகிழ்ச்சி சூழ்ந்திருக்க, அனைவரும் தூக்கம் கண்களைச் சுழட்டும் வரையிலும் பேசிக் கொண்டிருந்த்னர்.

தங்கள் வீட்டிற்குப் புறப்படும் போது இந்திரன் குழந்தையைத் தூக்கம் கலையாமல் தூக்கிக் கொண்டான்.

அங்கிருந்து வீட்டு வாயிலை தாண்டவும் ‘ப்பா…’ எழுந்து தன்னை தூக்கி இருப்பது தந்தை தானாவென்று அவன் முகத்தைப் பார்த்து உறுதி செய்து, மறுபடியும் கழுத்தை கட்டிக் கொண்டு தோளில் படுத்துக் கொண்டாள் அவனின் இளவரசி.

இருளில் ஒளிரும் நிலவில் இந்திரன் தங்கள் வீட்டை நோக்கி நடக்க, அருகில் வந்த மனையாளை தோளோடு இணைத்து அணைத்துக் கொண்டான்.

வீட்டிற்கு வந்து மகளை தொட்டிலில் கிடத்தியவன்

‘என்னாச்சு எழில் எதுக்கு கோபம்?’ தலையை முட்டினான்.

‘எப்ப பாரு புள்ளையை ரெண்டு பேரும் செல்லம் கொடுத்து கெடுக்கிறீங்க, ஒருத்தராவது கண்டிப்பா இருக்க வேண்டாமா?’

‘ம்ம்…’

‘என்ன ம்ம்?’

‘என் புள்ள அழுதா மனசு தாங்காது டி…’

‘ஆமா, நான் ராட்சசி ஆச்சே, உங்க புள்ளையை அழ வைக்கிறதுதான் என் முழு நேர வேலையே. நீங்க ஒரு பக்கம்னா அவன் ஒரு பக்கம்…’

‘எவன்?’

‘அதான் சொல்வீங்களே நைண்டிஸ் கிட்னு அந்த எங்க அண்ணன் தான்.’

இந்திரனுக்கு பக்கென சிரிப்பு வந்து விட்டிருந்தது.

‘இனிப்பு கொடுக்காத, கொடுக்காதன்னு சொல்லுறேன் அப்படியும் கொடுக்கிறான். இதுவே நான் சும்மா இருந்தாலும் என்னை திட்டுறது. அவன் மருமக என்ன சேட்டை செஞ்சாலும் அவளை கொஞ்சுரது…. கடுப்பாகுது எனக்கு.’

‘உனக்கு ஏன் கோபம்னு எனக்கு காரணம் புரிஞ்ச்சிட்டு…’

‘என்ன காரணமாம்?’

‘கொஞ்ச நாளா எம் புள்ளைய கொஞ்சுரதால உன்னை கொஞ்சாம விட்டுட்டேன் அதுதான் காரணம்…’

‘ஆ…அப்படியொன்னும் இல்லை’ அங்கிருந்து நகரப் பார்த்தாள்

‘உன் மனம் வாட நான் விடுவேனா?’

‘சும்மா சும்மா எதையாவது மாத்தி பேசாதீங்க…’

‘டீச்சரானதும் ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆகிட்டடி…’

அவன் வாயை அவள் தன் கையால் அடைக்க முயல,

மனைவியை திமிற திமிற தூக்கிக் கொண்டு படுக்கையறைகுள் நுழைந்தான் இந்திரன்.

இருவரும் எதிர்பாராத திருமணத்தில் இணைந்து, உணர்ச்சி பூர்வமாக சிந்திக்காத நல்ல கணவனாக இந்திரனும், உணர்வு பூர்வமாக சிந்தித்து கணவனது கொள்கைகளுக்கு கைகொடுக்கும் மனைவியாக எழிலரசியும் திகழ்ந்து, தங்கள் நிதானமான சிந்தனைகளால் வாழ்க்கையை செம்மைப் படுத்தி, உறவுகளையும் நன்மைகளாலேயே ஈர்த்து, வெறுமையான ஒன்றுமில்லாமையில் துவங்கிய அவர்கள் இல்வாழ்வு நட்சத்திரங்கள் பூக்கும் வான்வெளியாய் பரந்து விரிந்து, அவற்றில் நட்சத்திரங்களாய் மகிழ்ச்சியும், மன நிறைவும் பெற்றிருக்க குறைவுதான் ஏது?

மூன்று மாதங்கள் கழித்து ரமேஷ் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது.…

அந்த திருமண மண்டபம் களைக் கட்டியது, நாதஸ்வர இசை, சரசரக்கும் பட்டுச் சேலைகள், தகதகக்கும் நகைகள்.

பட்டுப் பாவாடை சரசரக்க மாமாவின் திருமணத்தில் தத்தி தத்தி வந்த கவிமலரை இந்திரன் தூக்கிக் கொள்ள அந்நேரம் கெட்டி மேளம், கெட்டி மேளம் என மேளச் சத்தம் எழும்ப ரமேஷ் மகேஸ்வரியின் கழுத்தில் இரண்டு முடிச்சுகள் இட தொடர்ந்த மூன்றாவது முடிச்சை எழிலரசி அண்ணன் மனைவிக்கு இட்டு நிறைவு செய்ய, சிறப்பாக நிகழ்ந்தது அந்த திருமண வைபவம்.

கலக்கங்கள் கடந்த வாழ்க்கையை எழிலரசிக்கும்,
தனிமையை வென்ற வாழ்க்கையை இந்திரனுக்கும்,

நம்பிக்கையூட்டிய வாழ்க்கையை இரமேஷிக்கும்,
அவன் லட்சிய பாதையில் கை கோர்த்த மகேஸ்வரிக்கும்,

துன்பங்கள் தாண்டி வந்த வாழ்க்கையை இளம்பரிதிக்கும்,
குழப்பங்கள் தாண்டி வாழும் வாழ்க்கை குமுதாவிற்கும்

கொண்டாடப் படும் வாழ்க்கை கவிமலருக்கும்
என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாக தந்து

வசந்தங்கள் அவர்கள் வாழ்வில் நிலைபெற வாழ்த்தி
நாமும் விடை பெறுவோம்.

சுபம்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here