3. இந்திரனின் காதலி

0
876
Indranin Kadhali

அத்தியாயம் 3

அடுத்த நாள் அதிகாலை நேரம் குமுதா எழுந்து அவர்கள் வயலில் விளைவித்த கத்தரிக்காய்களைப் பார்வையிட்டு, அவற்றை விற்பது குறித்துச் சிறிது நேரம் யோசித்துக் கொண்டு இருந்தார். என்னதான் மாதக்கணக்காக, வியர்வை சிந்தி விவசாயிகள் உழைத்து இருந்தாலும் அதற்கான முழுப் பலனும் விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை.

ராசு வேலைக்கு ஆட்கள் மட்டும் கொண்டு வருவதில்லை, அத்தோடு கூட அறுவடைக்குப் பின்னர்ப் பொருட்களைச் சந்தைக்குக் கொண்டு சென்று விற்கும் வேலையையும் செய்து கொண்டு வந்தான். அதனால் அவனுக்கு ஏராளமான வகையில் பணவரவுகள் இருந்தன.

அவன் அடிமாட்டு விலைக்கு விளை பொருட்களை வாங்கி நல்ல லாபம் பார்த்து வந்தான். குமுதாவை போன்ற பெண் விவசாயிகள், குறிப்பாக வீட்டில் எடுத்துச் செய்ய ஆண்கள் இல்லாத விவசாயிகள். அலைந்து திரிந்து, தாங்கள் விளைவித்த பொருட்களை விற்க இயலாத நிலையில் இருப்பவர்கள், குறைந்த விலையாயினும் கூட, தங்கள் பொருளுக்குக் கிடைத்தது லாபம் என்ற வகையில் ராசுவையே சார்ந்து இருந்தனர்.

ஏனென்றால், சில சமயங்களில் விளைவித்தவை விற்பனை ஆகாமல் விவசாயிகள் கஷ்டப்படவும் நேர்ந்திருக்கின்றது, உடனே விற்கவில்லை என்றால், நாளை பார்த்துக் கொள்ளலாம் என எண்ணுவதற்கு அது கெட்டுப் போகாமலிருக்கும் பதார்த்தம் இல்லையே? விளைப் பொருட்கள் உரிய நேரத்தில் சந்தைப் படுத்துதல் என்பது இல்லாததால் அவ்வூர் மக்கள் பெருமளவில் சிரமப் பட்டுக் கொண்டு இருந்தனர்.

அதனால், ராசு என்ன விலைக்கு விளைப் பொருட்களைக் கேட்கிறானோ? அதே விலையில் உடனேயே கொடுத்து விடுவதோடு அவர்கள் வேலை முடிந்து விடுவதால், பெரும்பாலும் ராசு மூலமாகவே அக்கிராமத்தினர் பொருட்களை விற்று விடுவது வழமை.

வருகின்ற பணத்தில் கணவனுக்கு மருந்திற்காகச் செலவழிக்க வேண்டும்? வீட்டுச் செலவு என்னவெல்லாம் இருக்கின்றது? பயிர் நடவின் போது அடகு வைத்த நகையை இப்போதாவது மீட்க முடியுமா? என்று குமுதா மனக் கணக்கு போட்டார். அவருக்கு இவையெல்லாம் திடீரென்று பொறுப்பேற்றுக் கொண்டதால் விருப்பமில்லாத அந்தப் பொறுப்புக்கள் வெறுப்பையே கூட்டி இருந்தன.

அருகில் முன் தினத்தின் களைப்பில் தூக்கம் களையாமல் படுத்திருந்த எழிலை எட்டி உதைத்தார்,

‘பாவாடையை ஒழுங்கா போடுடி. எப்படிப் படுத்து இருக்கப் பாரு?’

என்று சினத்துடன் சொல்ல, அவள் தூக்கத்திலேயே தன் உடையைச் சரிபார்த்து விட்டு மறுபடி தூங்கினாள். தான் செய்த தவறு என்னவென்று அவளுக்குப் புரியவில்லை. எப்போதுமே ஏச்சுக்கள் கேட்டு, அடிகளும் வாங்கி அவள் மனம் மரத்துப் போய் இருந்தது. எதைக்கண்டாலும் அவள் மனதில் பயம் இருந்தது. சுதந்திரமான ஒரு வாழ்க்கை வாழ்வது கூட அவளுக்கு மறுக்கப்பட்டிருந்தது. குமுதாவின் அதீத பதட்டம் காரணமாக அவர் எப்போதுமே ஒரு பயத்துடனே மகளை அலைக்கழித்து வந்தாள்.

அந்த நாளும் வழக்கம் போலவே விடிந்தது. அம்மாவிடம் ஏச்சு பேச்சு வாங்காமல் அவசரமாகத் தன்மேல் தாவணியைச் சுற்றினாள் எழில். அவள் வழக்கம்போலவே எழிலாக ஜொலித்தாள். ஆனால், தன்னுடைய அழகு, தனக்கான திறமைகள், தன் வலிமைகள் எதுவுமே அவளுக்குப் புரியவில்லை. எருமை மாடு, அறிவு கெட்டவளே, என வருடங்கள் பலவாக வசைமாறி கேட்டு வளர்ந்தவளுக்குத் தன்னம்பிக்கையும் கிடையாது.

தன்னுடைய அழகு மற்றும் திறமை குறித்து எந்த ஒரு அபிப்பிராயமும் கிடையாது. வாழ்க்கையில் இருந்த ஒரே ஒரு நோக்கம் அம்மாவிடம் ஏச்சு வாங்காமல் நாளை கழிப்பது ஆனால் அதுதான் அவளுக்கு மிகவும் சிரமமான காரியமாக இருந்தது. குமுதாவுக்குக் கணவனுடைய துணையில்லாமல் வேலைகளைச் செய்வது மிகவும் கடினமாக இருந்தது. தான் மலைப் போல நம்பி இருந்த மகனும் பொறுப்பற்றுப் போயிருக்க, எல்லாச் சுமையும் தானே சுமந்து கொண்டு இருப்பவர் அன்பு என்பதையே மறந்தவராக இருந்தார்.

தன்னுடைய கோபத்திற்கு எல்லாம் வடிகாலாக எழிலை வைத்திருந்தார் அந்தத் தேவையில்லாத கோபத்தைக் கொட்ட காரணமாகும் தன்னுடைய மகளைச் சுயம் இழந்து தன்னம்பிக்கை இழந்து செய்ய வைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அவர் உணரவில்லை.

இப்படித்தான் பலரும் தன்னைக் குறித்துத் தன்னுடைய என்ற சூழ்நிலை குறித்து யோசிப்பார்கள் தவிர, தங்களுடைய செயல்களும், பேச்சுக்களும், பிறரை எப்படிப் பாதிக்கின்றன என்று யோசிப்பதே இல்லை. குமுதா தன் தவறுகளை என்றாவது உணருவாரா?

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here