4. இந்திரனின் காதலி

0
878
Indranin Kadhali

அத்தியாயம் 4

அன்று அவர்களுடைய வயலின் விளைச்சலுக்கு விலை பேசி முடித்து, பணம் கொடுக்கும் நாள். அவர்கள் வீட்டின் வாயிலுக்குத் தரகர் ராசு வந்துவிட்டான்.

கையில் பணம் வரப்போகிறது என்ற மகிழ்ச்சியில் குமுதா அன்று எழிலை அதிகமாகத் திட்டாமல் இருந்தாள். எழில் வீட்டிற்குள் சமையல் வேலை பார்த்துக் கொண்டு இருந்தாள். அவ்வப்போது தகப்பனுக்குத் தேவையானவற்றைச் செய்து கொண்டும் இருந்தாள். நடு வீட்டில் வந்து அமர்ந்து ராசு விஷமமாக அவள் மீது ஒரு கண் வைத்துக் கொண்டு, மிக அலட்டலாக, வாய்ச் சவடாலாகக் குமுதாவிடம் பேசிக்கொண்டிருந்தான்.

குமுதாவிற்குக் கையில் நான்கு மோதிரங்களணிந்து, எல்லோரும் பார்க்க தன் பர்ஸை அவன் வெளியில் எடுக்கும் போதெல்லாம் திணிக்கப் பட்டிருக்கும் கத்தை கத்தையான பணங்களோடு திரியும் ராசுவைப் பார்த்து எப்போதும் வியப்புத்தான். நன்கு பணம் சம்பாதிக்கத் தெரிந்தவனே நல்ல ஆண்மகன் எனும் திடமான எண்ணம் அவளுக்கு உண்டு.

எழிலின் தகப்பனுக்கு மகள் மீது அசிங்கமாய்ப் படியும் ராசுவின் பார்வை புரிந்தது அதனால் உடனே உள்ளம் பதறியது. தன் மகளை அதிகம் படிக்க வைக்க அவர் எண்ணி இராவிட்டாலும் அவளுக்குப் பாதுகாப்பான ஒரு இடத்தில் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து விட வேண்டும் என்பதான சிந்தனைகள் அவருக்கு மிகவாக உண்டு.

மகன் ரமேஷ் தான் பொறுப்பற்றவனாகப் போய் விட்டான். அவனைக் குறித்து அறிய வந்த உடனேயே அவருக்கு உடல் நலமில்லாமல் ஆகிவிட்டது. அதன் பின்னர் அவர்கள் வீட்டில் இருப்பவர்கள் அவனுக்குத் தகவல் தெரிவிக்க வெகுவாக முயன்றார்கள். குடும்பத் தலைவனுக்கு மருத்துவம் பார்ப்பதா? மகனை தேடுவதா? வழக்கமான தங்கள் வயல்வேலையைப் பார்த்துக் கொள்வதா? எனத் திணறிய தருணம் அது.

இனி ரமேஷைத் தேடுவது தங்கள் சக்திக்கு மீறிய செயல் என அவனைத் தேட முடியாமல் இப்போது தண்ணீர் தெளித்து விட்டதாக ஆயிற்று. மனைவிக்கோ அதிகம் விவரங்கள் தெரிவதில்லை, அவள் வெளி உலகைப் பற்றி அவ்வளவாய் அறியாதவள்.கொஞ்சம் வெள்ளந்தி என்றால், மீதி தனக்குத் தெரியாதது ஒன்றுமே இல்லை எனும் அகங்காரம் கொண்டவள்.

அந்தக் கிராமமே அவளுடைய வாழ்க்கையாக இருக்கத் தன்னைச் சுற்றிலும் இருப்பவர்களைப் போலவே குறுகிய சிந்தனைக் கொண்டவளாகச் சிந்தித்து அவள் பழகி இருந்தாள். அவள் எந்த நேரத்தில் என்ன முடிவு எடுப்பாள்? என்று சொல்ல முடியாது. அப்படி இருக்க, அவளது அவசரத்திற்கு ஏற்ப தானும் நடந்து கொள்ளக் கூடாது என்று எண்ணிக்கொண்டார்.

அவர்கள் வீடு அந்தகாலத்து மச்சு வீடுகள் வகைச் சார்ந்தது. வீட்டிற்கு மேலே இன்னொரு அடுக்கு சில அறைகளோடு பெரியவர்கள் காலத்திலேயே கட்டப்பட்ட ஒன்றாகும். இளம்பரிதியின் தாத்தா பாட்டியின் காலத்திலேயே மிகவும் பெரிதாகக் கட்டப்பட்டிருந்த அந்த வீட்டைப் பார்த்தாலே அனைவரும் ‘வாழ்ந்து கெட்ட குடும்பம்’ என்று அறிந்துக் கொள்வர்.

அடுத்தடுத்த தலைமுறைகளின் சில பெரியவர்கள் செய்த பொறுப்பற்ற செயல்களால், ஏக்கராக் கணக்கில் இருந்த சொத்துக்களைச் சிதறடித்து விட்டு, தங்கள் நிலங்களைப் பெருமளவில் இழந்து, சிறிதளவில் நிலம் வைத்து விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஏனைய உறவினர்கள் குடும்பத்தினரும் வெளியூர்களில் போய்த் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு இருந்தனர். அதனால், இவர்களுக்கு ஆட்பலமும், பணபலமும் இல்லாது போயிற்று. நடு வீட்டில் வந்து அமர்ந்திருந்த ராசு ஒரு கண்ணை எழில் மீதும் மற்றொரு பெண்ணை வீட்டை சுற்றியும் வைத்திருந்தான்.

அவனைப் பொறுத்தவரையில் அந்த வீட்டின் ஆண்மகன் ரமேஷ், தன் ஊருக்கு வந்து சில வருடங்கள் ஆகி இருந்தது. அவன் திரும்பவும் வருவான் என்ற நம்பிக்கை அவனுடைய வீட்டினரோடு கூடச் சேர்ந்து ஊர் மக்களுக்கும் இல்லை அப்படியிருக்க இந்த வீட்டின் பெண்ணைக் கட்டுவதனால் அவனுக்கு ஏற்கனவே எண்ணிக் கொண்டிருந்த பல நன்மைகளோடு கூட, கூடுதல் லாபமாக இவ்வளவு பெரிய வீடும் கூடக் கிடைத்துவிடும். ஆகையால், எழில் அவனுக்குப் பொன் முட்டையிடும் வாத்தாகத் தோன்றினாள் இந்த அடிமைப் பெண்ணைச் சீக்கிரமாகத் தன்னுடைய ராஜாங்கத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்று அவன் எண்ணிக்கொண்டான்.

திருமணம் முடிந்த பின்னர் ஒருவேளை அவள் வீட்டினர் பிரச்சனை செய்தால், கைகால் முடமான அவள் அப்பனையும் ஆதரவற்ற அவள் தாயையும் அழித்தொழிக்க அவனுக்கு எத்தனை நிமிடங்கள் ஆகப்போகின்றது? என்கிற இறுமாப்புடன் இருந்தான்.

முதலில் விளை பொருள், அதுகுறித்த பண விவகாரங்கள் பேசப்பட்டது. அவனே ஒரு குறிப்பிட்ட தொகையை முடிவாகக் கூறி, அதனைக் குமுதாவிடம் கொடுத்தான். இளம்பரிதிக்கு அவர்கள் பேசிய விதத்திலேயே அது மூட்டை , மூட்டையாகக் கட்டிக் கொண்டு வரப்பட்டிருந்த காய்களுக்குக் கொடுக்கப் படும் மிகவும் குறைவான தொகை என்று உணர்ந்த போதிலும் அது குறித்து ஒன்றும் சொல்ல முடியவில்லை.

ஆண் துணை இல்லாத பட்சத்தில் குமுதாவும் எங்கே சென்று தன்னுடைய விலை பொருட்களை விற்க முடியும்? எல்லாம் நம்முடைய நேரம், அவன் சொன்ன விலைக்குக் கொடுக்க வேண்டியதாகி விட்டதே? என எண்ணிக் கொண்ட இளம்பரிதி அவன் மேல் ஒரு கண் வைத்து இருந்தார். அவருடைய சூட்சும புத்திக்கு இன்று ராசு ஏதோ ஒரு திட்டத்தோடு வந்திருப்பதாகவே தோன்றிற்று.

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here