5. இந்திரனின் காதலி

0
925
Indranin Kadhali

அத்தியாயம் 5

குமுதாக்கா, கொஞ்சம் உட்காரேன், உன்கிட்ட இன்னொரு விஷயம் பேசணும் என்று சொன்னான் ராசு.

என்னடா இவன் அப்படி என்ன பேசப் போகிறான்? என்று எண்ணியவாறு எதிரில் அமர்ந்தாள் குமுதா. அன்று ராசு மிகவும் கம்பீரமாகப் புது வெள்ளை வேட்டி சட்டையில் வந்திருந்தான்.

‘எனக்குச் சொந்த பந்தம் யாரும் கிடையாது உனக்குத் தெரியும் தானே குமுதாக்கா, அப்படி இருக்கும் போது நானேதான் என்னுடைய கல்யாண விஷயம் பேசி ஆகணும் எனப் பேச ஆரம்பித்தான்.

அதுக்கு என்னப்பா? கூடப் பிறந்தால்தான் உறவா? நாங்கள் எல்லாம் இல்லை. என்னைக்கு, எங்கே பொண்ணு பாக்க வரணும்? சொல்லு நான் நம்ம பக்கத்து வீட்டு அக்கா எல்லாத்தையும் கூட்டிட்டு உன் கூட வாரேன். நாம போய்ப் பொண்ணு பார்த்து, உனக்கு ஜாம்ஜாம்னு திருமணம் முடித்து விடலாம்’

என்று சொன்னாள் குமுதா. யாராகிலும் அவளை உயர்த்தி வைத்து பேசி விட்டால் போதும் அந்த மகிழ்ச்சியிலேயே கூடுதலாக உரிமை எடுத்துக்கொண்டு வேலை செய்யும் பழக்கம் அவளில் உண்டு.

‘இதுதான் கூடப் பொறந்த பொறப்பு மாதிரி நீ பேசுறதனாலத்தான் எனக்கு உன்னை ரொம்பப் பிடிச்சிருக்கு குமுதாக்கா’ என ஐஸ் வைத்தான் ராசு. தனக்கு ஐஸ் வைத்து, அவன் அல்வா கொடுக்க நினைத்திருப்பது அவளுக்குத் தெரியவில்லை அவளோ மிகவும் குளிர்ந்து போய் விட்டாள்.

நீ சொல்லு தம்பி எங்க போகணும்? உனக்கு எங்க பொண்ணு பார்க்கணும் சொல்லு?

‘ஏன் அக்கா எனக்கு உங்க பொண்ணு தர மாட்டீங்களா என்ன? உங்க வீட்டில தான் நான் பொண்ணு எடுக்க ஆசைப்பட்டு இருக்கேன்’

என்று ஒரு மகாராஜா தோரணையில் அவன் கேட்டான். குமுதா உச்சி குளிர்ந்து போனாள். ஒரே ஊர் அதுவும் பணத்தில் புரளுகின்றவன். அவனுக்குத் தன் பெண்ணைக் கொடுக்கக் கசக்குமா என்ன?

அவனைக் குறித்து அவள் அறிந்தது ஒரே ஒரு குறைதான். வடக்குத்தெரு வசந்தா வீட்டில் அடிக்கடி அவனைப் பார்ப்பதாகச் சொல்லிக் கொள்ளுகிறார்கள். அதுபோலச் சந்தைக்குச் செல்லும் இடமெல்லாம் அவனுக்கு நிறையப் பெண்களுடன் தொடர்புகள் இருப்பதாகக் கேள்விப்பட்டு இருக்கிறாள். ஆனால், ஆம்பளையா இருந்தா, அதுவும் நல்லா சம்பாதிக்கிற ஆம்பளையா இருந்தா இதையெல்லாம் செய்யத்தானே செய்வான்.

எங்கே சென்று மாப்பிள்ளை தேடினாலும் இப்படி ஏதாவது ஒன்று குறை என்று இருக்கத்தான் செய்யும். தன் வீட்டில் எதையும் எடுத்துச் செய்ய ,உருப்படியாக ஆம்பளைகள் இல்லாத நேரத்தில், தான் கன்னி கழியாமல் பெண்ணை வைத்திருப்பது தனக்கு அவமானம் தானே. அதற்குப் பேசாமல் எந்த ராசுவை மணமகனாகத் தெரிந்துகொண்டால் எல்லா வேலையும் அவனைப் பார்த்துக் கொள்வான். எடுத்துச் சொன்னால் பணப் பிரச்சினையும் அவனே சமாளித்துக் கொள்வான். தனக்கு எந்த ஒரு பிரச்சனையுமே இராது என்று பலவிதமான கணக்குகளைப் போட்ட குமுதா அவசர அவசரமாகச் சிந்தித்துத் தானும் ஒரு கொக்கியை போட்டு வைத்தார்.

அவசரமாக அவர் கண்ணில் கண்ணீர் வந்து சேர்ந்தது.
‘என்னத்த சொல்றது? எங்க வீட்டு பெரியவனோ ஊரை விட்டுப் போய் மூணு வருஷம் ஆச்சு? என்னைக்காவது ஒரு நாளு போனாவது செய்யறானான்னா அதுவும் இல்ல. இவருக்கும் கை கால் விளங்காமல் போச்சு. இந்த வீட்டில கல்யாணத்தை முன்னெடுத்துச் செய்ய யாரு இருக்கா? நகையும் நட்டும் கூட இன்னும் சேர்த்து வைக்கலை.

….

உடனே கல்யாணம் என்று சொன்னாலும் ஊரை அழைச்சு விருந்து சாப்பாடு போடுறதுக்காகவாவது ரூபா வேண்டாமா? அதிகம் இல்லாட்டாலும் ஒரு பத்து பவுன் நகை போட்டு கெட்டி கொடுக்கணுமே? அதுகூட இல்லாமல்லா கிடைக்குது’ என்று புலம்பினாள்.

அவள் புலம்பியதும் ராசுவின் கேப்மாரி தனமான மூளைக்குள் சிலபல பல்புகள் எரிந்தன.

‘ ஓ நீ அப்படி வரியா குமுதாக்கா? அதாவது பொண்ணுக்கு இவனை நகை போட்டு கையோடு திருமணச் செலவுகளை ஏற்று எல்லாமே அவனைச் செய்துகொள்ள வேண்டும், என்று அடி போடுவது அவனுக்குப் புரிந்தது. அதனால் என்ன? அவனிடம் இல்லாத பணமா? மற்றபடி இப்போது செலவு செய்தால் எப்படியும் ஒரு சில வருடங்களில் இருவரும் மண்டையைப் போட்டப் பின்னர்ப் பல லட்சங்கள் பெரும் இந்தப் பெரிய வீடு இருக்கின்றது. சின்ன மீனை போட்டு தான் பெரிய மீனை எடுக்க வேண்டும் என்கின்ற சூட்சமம் தெரிந்தவனாக ராசு இருந்தான்.

மனைவியின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த இளம்பரிதி அதிர்ந்தார். குத்துக் கல்லாய் அமர்ந்திருக்கும் தன்னிடமும் கேளாமல் அவள் பேசிக் கொண்டிருப்பது தங்களுடைய மகளுக்கான திருமணப் பேச்சு, அது எப்படியாம்?

அதுவும் ராசு எப்படியாப்பட்ட ஒரு பொம்பளை பொறுக்கி? அவனுக்குத் தன்னுடைய மகளைக் கட்டிக் கொடுக்க ஏதுவாகப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்க பார்க்க மனம் பொறுமிக் கொண்டிருந்தது. அவள் தன்னிடம் விருப்பம் கேட்க போவதில்லை, என்பதும் தன்னிடம் மட்டுமல்ல மகளிடமே விருப்பத்தைக் கேட்கப் போவதில்லை என்பதும் அவருக்குப் புரிந்து விட்டிருந்தது. இனிமேல் நேரடியாகப் பேசியும் எந்தப் பிரயோஜனமும் இல்லை தன்னை ஒரு செல்லாக்காசாக மதிக்கும் மனைவியிடம் நேரடியாகப் பேசி காரியம் சாதிக்கும் அவருக்கு மனதில்லை.

என்று சுகமில்லாமல் விழுந்தாரோ? அன்று முதல் அவளின் கடுப்பையும் சிடுசிடுப்பையும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார். எப்போதும் ஒரே புலம்பல், எரிச்சல் என வலம் வரும் மனைவியிடமிருந்து அந்த மனைவியிடம் அகப்பட்டுக்கொண்டு அல்லல்படும் மகளைக் காப்பாற்ற முடியாதவராக அவர் இருந்தார்.

கண் முன்னால் தன்னுடைய திருமணத்தைப் பேசிக்கொண்டிருக்கும் அம்மாவை சுவரின் அந்தபுரத்தில் இருந்து வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் எழில். நடந்து கொண்டிருப்பவை அனைத்தும் அவளுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால், ராசுவுக்குக் குறையாமல் 40 அல்லது 42 வயது இருக்கும். அவன் செய்யும் மேலதிகமான ஒப்பனைகளால் மட்டுமே தன்னை வாலிபன் போலக் காட்டிக் கொள்வான்.

தன்னுடைய தந்தையை விடச் சில வயதுகளைக் குறைந்த ஒருவனுக்கு, தன்னை அம்மா கட்டிக்கொடுக்கப் பேசுகிறார் என்பதை அவளால் நம்ப முடியவில்லை. ஆனால், எப்போதுமே அம்மாவின் அதிகாரத்திற்கு அடிபணிந்து பழகியிருந்த அவளுக்கு வேறு வழியும் புரியவில்லை. மனதிற்குள்ளாக அழுதுகொண்டிருந்தாள்.

தன்னுடைய குலசாமிக்கு உடனே ஒரு வேண்டுதல் போட்டு வைத்தாள். தன்னுடைய இந்தத் திருமண ஏற்பாடுகள் நின்றுவிட்டதால் தான் வந்து வேண்டுதல்களை நிறைவேற்றுவதாகக் கேட்டுக் கொண்டாள்.

அவள் மனதில் அந்தத் திருமணம் நின்று விட வேண்டும் என்ற எண்ணமே தவிர வேறு எதுவும் இல்லை. யார் மீதும் அவளுக்குத் தனிப்பட்ட எண்ணங்களும் வயதிற்குரிய ஆசைகளும் கிடையாது. ஆனால் தான் சுதந்திரமாக வாழ வேண்டும். தன்னுடைய ஆசையைப் போல இருக்க வேண்டும் என்னும் எண்ணங்கள் மட்டும் அவளுக்கு உண்டு நேரம் கிடைக்கும்போது ஊரிலுள்ள வாசக சாலைக்குச் சென்று வாசித்து வருவாள் அந்த வாசிப்பு நேரம் மட்டுமெ அவளுக்கு உரித்தான இன்பம் தரும் நேரமாகும்.

எழிலின் வேண்டுதல் கேட்கப் படுமா?

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here