7. இந்திரனின் காதலி

0
1500
Indranin Kadhali

அத்தியாயம் 7

மாடியிலிருந்து இறங்கி வந்த மனைவியையும், அதன் பின் சற்று நேரத்தில் இறங்கி வந்த இந்திரனையும் இளம்பரிதிகவனித்துக் கொண்டுதான் இருந்தார் .

இவள் என்றைக்குத் திருந்துவாள்?

என மனைவி குறித்து மனம் சுணங்கியது. திருமணம் செய்து வைத்து விட்டால் போதுமா? வாழ விடமாட்டாள் போலிருக்கிறதே? பொசுக்கு பொசுக்கென்று எத்தனை முறை புதிதாகத் திருமணம் ஆனவர்கள் அறைக்குச் சென்று வந்து விட்டாள்.

அவர் அமர்ந்திருந்த அந்தச் சாய்வு நாற்காலிக்கு எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்தான் இந்திரன். அரைகுறை பேச்சாலும், கை அசைவினாலும் எதையோ கேட்டார் இளம்பரிதி.

முறுவலித்துப் பதிலளித்தவன் சற்று நேரத்தில் அங்கேயே தன்னையறியாமல் தலை சாய்ந்து உறங்கலானான். பார்த்துக் கொண்டிருந்தவருக்குத் தங்கள் உபசரிப்பின் மானக்கேட்டை நினைத்து அவமானத்தில் முகம் கருத்தது.

எதையோ எண்ணிக் கொண்டு மறுபடி மாடிக்குப் போகக் கால் எடுத்து வைத்தவளை இளம்பரிதியின் குழறலான குரல் அழைத்தது. ஒருபக்கம் மட்டும் வேலை செய்த போதும் இயங்கும் கையின் ஒற்றை விரலை நீட்டி , கண்களை ஏகத்திற்கும் கோபமாய் உறுத்து விழித்தவாறு அவளைப் பார்த்திருந்தார் அவர்.

பக்கத்து வீட்டு பெரியம்மா ஏதேச்சையாக வந்து அங்கே இந்திரன் முன் அறை சோபாவில் உறங்குவதைக் கண்டு,

ஏன் குமுதா, மகளைத் தான் விரட்டி விரட்டி அடிப்ப நிம்மதியா இருக்க விடமாட்டன்னு தெரியும். அதுக்காக வீட்டுக்கு வந்த மருமகனையும் ஒரு இடத்தில நிம்மதியா இருக்க விடமாட்டன்னு இன்னிக்குத்தான் தெரிஞ்சிக் கிட்டேன். என்னமோ போ, உன் கிட்ட அந்தப் புள்ள படுற பாடு, உண்மையிலயே நீ தான் அந்தப் பிள்ளையைப் பெத்தியா? இல்ல தத்தெடுத்த பிள்ளையா? நீ செய்யறது எல்லாம் பார்த்தா அப்படித்தான் சந்தேகமா இருக்கு. எனச் செருப்பால் அடித்தது போலச் சொல்லிச் சென்று விடச் சிலையாய் சமைந்தாள் குமுதா.

அவளுக்கு இன்று காலை முதலாகவே நடப்பதெல்லாம் தனக்கு மீறியதாகவே இருந்தன. அதிகாலை முகூர்த்தத்தில் மகளுக்குத் திருமணம் வைத்திருப்பதாக அவளே சென்று வெத்தலைப் பாக்கு வைத்து அனைவரையும் அழைத்திருந்தாள்.

ராசுவையா கட்டி வைக்கிற? ராசுவா எழிலுக்கு மாப்பிள்ளை? எனக் கேட்டவர்களின் கேள்வியெல்லாம் அவளுக்குப் பொறாமையின் நிமித்தம் எழுந்த கேள்வியாகவே தோன்றி இருந்தது.

ஆம்பளைத் துணையில்லாம நான் என் மகளுக்குக் கல்யாணம் கட்டி வைக்கிறது இந்த ஊர் மக்களுக்குப் பொறாமை. நான் எப்படி நடத்திக் காட்டுறேன்னு எல்லோரும் பாருங்க என்று காலையில் வீட்டினின்று கணவனையும், மகளையும் புறப்பட வைத்து சென்றவள்
திரும்பியதென்னவோ ஏமாற்றத்தோடு தான்.

அந்த ஏமாற்றத்தோடு கூடப் பக்கத்து வீட்டின் பெண்மணியும் திட்டிச் செல்ல திகைத்தாள்.

இப்போது அடுத்து என்ன செய்வது எனப் புரியாமல் குமுதா விழித்துக் கொண்டு இருக்கிறார். ஏனென்றால், காலைச் சாப்பாடு மட்டும் பெண்வீட்டு பொறுப்பாக இருக்கட்டும் , மதிய திருமணச் சாப்பாட்டுக்கான ஏற்பாட்டைத் தானே பார்த்துக் கொள்வதாக ராசு கூறி இருந்தான். இப்போது மணமகன் மாறி விடவே என்ன செய்வது எனப் புரியாமல் திகைத்துக் கொண்டிருந்தாள்.

தன்னைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருப்பது எதுவும் தெரியாமல் சில மணி நேரங்கள் உறங்கி எழுந்தான் இந்திரன். வீட்டில் எவர் முகத்திலும் அருளில்லை. அவன் எழுந்ததைக் கண்டதும் அவசரமாய்க் காபி கொண்டு வந்து நீட்டினாள் குமுதா. வாங்கி அருந்தியவன் எழிலுக்காகக் காபி கேட்க அவசரமாய்க் கொண்டு வந்து நீட்டினாள்.

மாடியேறிச் சென்றவன் அவளும் தன்னைப் போலக் கட்டிலின் ஓரம் அமர்ந்து தூங்குவதைக் கண்டு சிரித்தான். ஆக ரெண்டு பேருக்கும் நிம்மதியான தூக்கம் இல்லை. காஃபியை டேபிளில் வைத்து விட்டு, அருகே அமர்ந்தான் இந்திரன். அமர்ந்து இருந்தவளை தன் மடியில் கிடத்திக் கொண்டான். காற்றில் பறந்து கொண்டிருந்த முடிகளை ஒதுக்கி காதுக்குப் பின்னால் தள்ளினான்.

அவளது முகவடிவை தன் விரல்களால் அளக்கலானான், அவள் தூக்கத்தில் அவன் ஸ்பரிசத்தால் எழுந்த கூச்சம் மிகுந்ததாள் சிரித்தாள் சிறு குழந்தையின் சிரிப்பை ஒத்திருந்த புன்னகை அது. இந்திரனின் விரல்கள் தானாகவே அவளது உதடுகளுக்குப் பயணப்பட்டது.

எவ்வளவு மென்மையாக இருக்கின்றாள்? ஒரு மலரைப் போலவே என மனம் ஒப்பிட்டுக் கொண்டது அம்மென்மையை ரசித்தான். குனிந்து, அவள் தலையில் முத்தமிட்டான். கணவன் மடியில் படுத்திருப்பதை அறியாதவள் வாகாகப் படுக்கத் திரும்பிய போது அவள் கண்கள் விழித்தன. தன்னை மடியில் சாய்த்தவாறு தன்னைப் பார்த்துக் கொண்டு இருப்பவனின் முகத்தைக் கண்டு சட்டென்று எழும்பப் பார்த்தாள்.

அச்சோ அப்படியென்றால் இவ்வளவு நேரம் தான் உணர்ந்தது கனவில்லையா? அத்தனையும் நிஜமா? அவள் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்தன.

வா எழுந்திரு, காஃபி குடி. நம்ம வீட்டுக்குப் போகலாம்.

அவன் சொன்னதைக் கேட்டவள் விழி மலர்த்தினாள். நம்ம வீடு? இன்றைக்கே அவன் தன் வீட்டிற்கு அழைத்துச் செல்லப் போகிறானா என்ன?

முகத்தில் குழப்பம் துலங்க எழுந்து அமர்ந்தவள், முகம் கழுவி வந்தாள். அவனுக்கு எதிரில் அமர்ந்து காபியை மிடறு மிடறாக விழுங்கினாள்.

ஏன் என்னாச்சு அஞ்சுமா?

ஒன்றும் இல்லையெனத் தலையசைத்தாள்.

போன வாரமே வீட்டை சுத்தம் செஞ்சு வைக்கச் சொல்லி இருந்தேன். செஞ்சிருப்பாங்க. இன்னிக்கு இன்னும் கொஞ்சம் வேலை செய்ய வேண்டி இருந்ததா? அதனாலத்தான் இவ்வளவு நேரம் இங்கே இருந்தாச்சு. கல்யாணத்துக்கு அப்புறம் புருஷன் வீட்டுக்கு போகணுமா வேண்டாமா? அவள் கன்னங்களை அவன் கிள்ளிக் கேட்க,

ஆமென அவசரமாய்த் தலையசைத்தவளைப் பார்த்துப் புன்னகைத்தான் இந்திரன். இவன் புன்னகைக்கையில் தான் எத்தனை வசீகரமாய் இருக்கிறான் கணவனைக் குறித்து எழில் தன் மனதிற்குள் எண்ணிக் கொண்டாள். கருமை நிறம் என்றாலும் அவனுடைய சரும நிறம் பொலிவுடையது. மீசையை அளவாக வைத்திருந்தான். கண்களில் நேர்மையைப் பிரதிபலிக்கும் ஒளிர்வு இருந்தது. அவனைக் காணும் போதெல்லாம் ஒரே நாளில் நரகத்திலிருந்து சொர்க்கத்திற்குப் பயணப்பட்டு வந்ததாக அவள் உணர்ந்தாள்.

காலையில் அந்த ராசுவை திருமணம் செய்ய வீட்டிலிருந்து புறப்பட்டு வந்த போது இருந்த மரத்துப் போன மனநிலை என்ன? இப்போது மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருக்கும் மனதின் மலர்வு என்ன? சாமி தன் வேண்டுதலை கேட்டு விட்டது போலும் நன்றியாய் எண்ணிக் கொண்டாள்.

அவசரமாய் எழுந்தவள், ‘நான் என்னவெல்லாம் எடுத்து வைக்கணும் அத்தான்?’ கேட்டாள்.

உனக்கு நாளைக்கு உடுத்த துணி எடுத்து வச்சுக்க, மத்தது நாளைக்குப் பார்த்துக்கலாம். சரியென்று தலையசைத்தவளை பார்த்தவாறு கீழே இறங்கியவன்.

செய்ய வேண்டியவைகளை மனதிற்குள் பட்டியலிட்டான். அக்கம் பக்கம் தெரிந்தவர்களிடம் பேசினான். குமுதாவை இளம்பரிதி இருக்குமிடம் அழைத்து அவர்கள் இருவரிடமும் பேசி தான் இப்போதே தன் வீட்டிற்கு எழிலை அழைத்துச் செல்வதாகக் கூறவும் இருவர் முகத்திலும் ஈயாடவில்லை.

இன்னிக்கு பொண்ணு வீட்லதான் இருக்கணும் மாப்ள, என ஏதோ சாங்கியம் பேச வந்தவரை,

அதுக்கென்ன அத்தை எழில் எங்கே தூரமாகவா போறா? இதோ அடுத்த வீட்டுலதானே இருக்கப் போறா? உங்க சம்பிரதாயங்களை இங்க செஞ்சா என்ன? அங்க செஞ்சா என்ன? அப்படியே மதியம் மற்றும் ராத்திரி சாப்பாட்டை நம்ம வளவுக்குள்ளே (வீட்டின் முன் புறம்) ஏற்பாடு செஞ்சிட்டேன். எல்லோரையும் அங்கே வந்திடச் சொல்லுங்க. மத்த வேலையிலயும் கூடவே நின்னு பார்த்துக்கோங்க.

சொன்னதும் குமுதாவிற்கு முகத்தில் அடித்தாற்போல இருந்தது. எல்லாச் செலவையும் ராசுவின் தலையில் போட்டிருந்தவள் மதிய சாப்பாட்டிற்கே திகைத்துப் போய் இருந்திருக்க இரவு சாப்பாடு குறித்தோ அவள் சிந்தித்தே இருக்கவில்லை.

[center]தொடரும்[/center]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here